நல்வரவு

வணக்கம் !

Monday 28 May 2012

’முல்லைக் கொடியும் நானும்’


அணைக்கப்பட்டு விட்டன விளக்குகள்...
டுத்தவுடன் குறட்டை விடும் மனைவியைப்
படு ஏக்கத்தோடு பார்க்கிறேன்.
நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்,
விடியுமட்டும் கொட்ட கொட்ட
விழித்துக் கொண்டு புலம்புவதற்கு?

பகலில் நல்ல பிள்ளையாகத்
தூங்கும் என் மனக்குரங்கு
இரவு வந்தவுடன் கும்மாளத்துடன்
துவங்கிவிடுகிறது தன் சேட்டையை!.

துன்பம் வந்த வேளையில்
சொல்லிக் கொள்ளாமல்
ஓடி விட்ட உறவுகள்.....
கண்ணோடு கண் மூட வழியின்றிப்
என்னைப் பாடாய்ப் படுத்தும் நோய்..
இனி நான் உயிர் வாழ்வதால்
யாருக்கு என்ன லாபம்?.
உயிரோடு இருக்கக் கூடாது இனி நான்....
உடனே முடித்துக் கொள்ள வேண்டும்
என் வாழ்வை!

இவ்வெண்ணம் என்னுள்
கருக்கொண்ட அடுத்த கணம்
சுழலும் மின்விசிறியை
வெறித்து நோக்குகிறேன்
மல்லாக்கப் படுத்தபடி.
எழுந்து உடனே வாஎன ன்னை
அழைப்பது போல் ஒரு பிரமை!

மெல்ல எழுந்து, சத்தமின்றித்
திறந்திருக்கும் சாளரங்களை
மூட முயல்கையில்,
கண்ணில் பட்டது
அந்த முல்லைக் கொடி!

அட! 
சில மாதங்களாய்
தண்ணீரே இல்லாமல்
கருகிக் கிடந்த வேரிலிருந்து
பச்சைப் பசேலென்று
புத்தம் புது துளிர்!

ஜன்னலுக்குள் தலையை நீட்டி
மின்விசிறியின் காற்றில்
அலைபாய்ந்த அக்கொடி,
பாரி போல் எனக்கு நீ
தேரெல்லாம் தர வேண்டாம்;
சுற்றிப் படர சிறுகுச்சி கூடவா
கொடுக்கக் கூடாது?” என்று கேட்கிறது!

அக்கணம்....
நான் புதிதாய்ப் பிறந்தது போல்
ஓர் உணர்வு!

அழிந்து போனதாக நமக்குத் தோன்றுபவை
முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை......
பூண்டோடு வேரறுத்து விட்டதாகத்
தலையிலடித்துச் சத்தியம் செய்தாலும்
சாம்பலிலிருந்து உயிர் பெற்றெழுந்து
சரித்திரம் படைப்பான், நம் காவிய நாயகன்!

நம் துன்பங்களனைத்தும் ஒருநாள் நீங்கும்.
கடும் பனிக்காலம் கடந்த பின்
வசந்த காலம் வந்தே தீரும்,
அதுவே இயற்கையின் நியதி!
அதுவரை நானும் காத்திருப்பேன்
நம்பிக்கையோடு,
வான் மழைக்குக் காத்திருந்து
தன்னை உயிர்ப்பித்துக் கொண்ட
இந்த முல்லைக் கொடியைப் போல!


நட்ட நடு இரவில்
நடுங்கும் குளிரில்
முல்லைக் கொடிக்குக்
கொழுக்கொம்பு நடும் என்னை
விழி மலர்த்தி அதிசயமாகப்
பார்க்கிறாள் என் மனைவி!

6 comments:

  1. வான் மழைக்குக் காத்திருந்து
    தன்னை உயிர்ப்பித்துக் கொண்ட
    இந்த முல்லைக் கொடியைப் போல!// அருப்புதமான வரிகள் அருமை அருமை ரசித்துப் படித்தேன் .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி சசி!

      Delete
  2. ////நம் துன்பங்களனைத்தும் ஒருநாள் நீங்கும்.
    கடும் பனிக்காலம் கடந்த பின்
    வசந்த காலம் வந்தே தீரும்,////


    நம் எல்லோர் மனதிலும்
    நீங்காத ஏக்கமாய் திகழும்
    அழகிய நம்பிக்கை கொடுக்கும்
    சொற்கள்...

    முல்லைக்கொடி கொண்டு
    வாழ்வியல் தத்துவத்தை
    அதன் நிதர்சனத்தை
    அழகாய் புனைந்திருக்கிறீர்கள் சகோதரி..

    அருமை அருமை..

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் நிறைந்த தஙக்ள் பாராட்டுக்கு மிக்க நன்றி மகேந்திரன் சார்!

      Delete
  3. கொழுகொம்பற்று அலைந்த முல்லைக்கொடியையே கொழுகொம்பாய்ப் பற்றிக்கொண்டு படர்கிறது ஒரு நோயாளிக்கு வாழ்வின் மீதான பிடிப்பு. மனத்தை நெகிழ்த்தும் கொடுமையான நிலையின் வேதனை சொல்லி, நம்பிக்கையோடு முடித்தக் கவிதையில் மனம் இலகுவாகிறது. மனந்தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன் கீதா! மிக்க நன்றி!

    ReplyDelete