நல்வரவு

வணக்கம் !

Tuesday 5 June 2012

செயல் வீரன் - ஒரு நிமிடக் கதை

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் உலகளவில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்று எந்த நேரத்தில் படித்தேனோ தெரியவில்லை.  அந்தக்கணம் முதல் நீரைச் சேமிக்க வேண்டும், துளிக்கூட விரயம் செய்யக் கூடாது என்ற எண்ணம் என்னுள் ஆழமாகப் பதிந்து விட்டது. 

அளவுக்கதிகமாய்த் தண்ணீரைப் புழங்கும் மனைவியிடம் சிக்கனத்தின் அவசியத்தை வற்புறுத்தினேன். 

"ஏ அப்பா! அம்பது வருஷத்துக்கப்புறம் தானே?  அதுக்குள்ளே நாமெல்லாம் போய்ச் சேர்ந்துடுவோம்.  இப்ப எதுக்கு அனாவசியமா அதப்பத்திக் கவலைப் படறீங்க?  பேசாமப் போயி ஆக வேண்டிய வேலையைப் பாருங்க"
அவளது பதிலில் அலட்சியம் தெரிந்தது.

குளிக்கிறேன் என்ற பெயரில் மணிக்கணக்காக 'ஷவரில்' நின்று கொண்டு அட்டகாசம் செய்யும் எட்டாம் வகுப்பு படிக்கும் பையனைக் கடிந்து கொண்டேன்.

"நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கப்பா.  நாம அனுப்பின சந்திராயன், நிலாவில தண்ணியிருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காம்.  நாங்கள்லாம் நிலாவில போய்க் குடியேறிடுவோம்"  என்றான் பையன், என் கோபத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல்.

ஒரு வாளித்தண்ணீரில் கையை விட்டுக் கழுவிய மகளை,"குவளையில மொண்டு கழுவினா என்ன? ஒரு வாளித் தண்ணியையும் வீணாக்கிட்டியே" என்று சொல்லி லேசாக ஒரு தட்டுத் தட்டினேன்.  அவ்வளவு தான்.   அது தான் சாக்கு என்று பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அழுது கொண்டு அடம் பிடித்தாள் அவள்.

"உதவி செய்ய வாணாம்; உபத்திரவமாவது பண்ணாம இருக்கலாம்ல?" என்ற முணுமுணுப்புடன் என்னைப் பார்த்து முறைத்துவிட்டு பெண்ணைச் சமாதானம் செய்து பள்ளிக்கனுப்பும் வேலையில் ஈடுபட்டாள் மனைவி.

வீட்டில் தான் இப்படியென்றால் அலுவலகத்திலோ கேட்கவே வேண்டாம்.  கழிப்பறை பைப்பைச் சரியாக மூடாமல் வருவதால் தண்ணீர் வீணாக வழிந்து கொண்டிருப்பதைப் பற்றி சக ஊழியரிடம் பேசத் துவங்கினால் போதும். 

"அய்யய்யோ! இன்னிக்கு நான் மாட்டிக்கிட்டேனா? ஒனக்குப் புண்ணியமாப் போகும்.  என்னை விட்டுடுப்பா" என்று என்னைப் பார்த்து பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். அவசரத் தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாகச் சொல்லி நழுவுவர் சிலர்.

"சரியான தண்ணி கிறுக்கு!" என்று என் முதுகுக்குப் பின்னால் அவர்கள் பேசிச் சிரிப்பதையறிந்த போது மனது வலித்தது.

என்ன மனிதர்கள் இவர்கள்?  வாழ்வாதாரமாகிய நீரை நம் சந்ததிக்குச் சேமிக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறா? ஏன் ஒருவர் கூட என் கருத்துக்குச் செவிமடுக்க மறுக்கிறார்கள்? யாருடைய உதவியும் இன்றி என்னால் மட்டும் நீரை எப்படிச் சேமிக்க முடியும்? 

இதே சிந்தனையால் பல நாட்கள் தூக்கம் வராமல் அவதிப்பட்டேன், கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் வரை.

அது ஓர் அழகிய கிராமம். அக்கிராமம் முழுக்க வெண்மை நிறத்தில் சிறு சிறு பூக்களைக் கொண்ட செடிகள் ஏராளமாக வளர்ந்து கிடந்தன.  நான் போகும் வழியில் முதியவர் ஒருவர் அச்செடிகளை மண்வெட்டி மூலம் வேரோடு பிடுங்குவதும், பின் அவற்றைச் சேகரித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பதுமாகயிருந்தார்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அவரை அணுகி அவர் செய்கையைப் பற்றி வினவினேன்.

"தாத்தா! நானும் ரொம்ப நேரமாக் கவனிச்சிக்கிட்டிருக்கேன். கொளுத்துற வெயிலில கால்ல செருப்பு கூடப் போடாம என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? புல் பூண்டு புடுங்க இதுவா நேரம்?" 

"இதுவா? . இது சாதாரண புல் பூண்டில்லை தம்பி.  பார்த்தீனியம்னு பேர் கொண்ட விஷச் செடி.  வெளியூர்லேயிருந்து யார் மூலமாவோ இது இங்க வந்து கிராம முழுக்கப்  பரவ ஆரம்பிச்சிட்டுது.  ஒரு காத்து அடிச்சாப் போதும். இந்தப் பூவில இருக்கிற இழையெல்லாம் பறந்து போயி எல்லா இடத்திலேயும் விழுந்து மொளைக்க ஆரம்பிச்சிடும். இது மனுஷாளு மேல பட்டா தோல் வியாதி, அலர்ஜியெல்லாம் வருமாம்.  ஆடு மாடுங்க இதைத் தின்னா மலட்டுத் தன்மை வந்திடுமாம்.  இதை வெட்டிக் குழி தோண்டி புதைச்சா மொளைக்க ஆரம்பிச்சிடும்னு தான் மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிக்கிட்டிருக்கேன்."

"சரி தாத்தா! இந்தக் கிராமம் பூரா இந்தச் செடி பரவிக் கிடக்குது. இதைப் பத்தி இங்குள்ள ஜனங்க எல்லாருக்கும் தெரியும் தானே? மத்தவங்க யாருக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன்? யாருமே உதவிக்கு வராம, இந்தத் தள்ளாத வயசில உங்களால மட்டும் எத்தனை செடியைப் புடுங்கிட முடியும்?" 
       
"மத்தவங்க செய்றாங்க, செய்யலை. அதப்பத்தி எனக்குக் கவலையில்லை தம்பி.  வெறும் பார்வையாளனா இருக்க நான் விரும்பலை.  செயல் வீரனா இருக்கணும்னு ஆசைப்படறேன்.  என் ஆயுசு முடியறதுக்குள்ளே என்னால முடிஞ்ச மட்டும் இந்த விஷச் செடிகளை ஒழிச்சி இந்த மண்ணைக் காப்பாத்துவேன் தம்பி" உற்சாகம் ததும்ப பதிலிறுத்தார் கிழவர்.

அம்முதியவரின் பதில் எனக்குப் புது தெம்பையும் உற்சாகத்தையும் அளித்தது.  அன்று முதல் வெறும் பார்வையாளனாய் இல்லாமல் என்னால் முடிந்த வரை நீரைச் சேமிக்கும் செயல்களில் இறங்கத் தீர்மானித்து விட்டேன்.

உபதேசம்? -  போயே போச்சு!

19 comments:

  1. தண்ணீரின் அருமை தெரியாமல் அலட்சியம் செய்பவர்களுக்கும் தனக்கென்ன வந்தது என அலட்சியமாக செல்பவர்களுக்கும் குட்டு..

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி உமா!

      Delete
  2. பிரயோசனமான பதிவு தொடருங்கள் உங்கள் செயல்களை எங்களால் முடிந்த உதவிகளை இந்த பகுதியினூடாக உங்களுக்குத்தருகிறோம்..

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. ஆனாலும் இது ஒரு நிமிடக் கதை மாதிரி எனக்குத் தோன்றவில்லை

    ReplyDelete
    Replies
    1. ஒரு சில நிமிடங்களில் படித்து முடிக்கக் கூடிய கதை என்பதால் ஒரு நிமிடக் கதை என்றேன். படிப்பதற்கு ஓரிரு நிமிடங்கள் கூடுதலாக ஆகி விட்டதோ?

      Delete
  4. தண்ணீரின் மதிப்புணர்த்தும் அதேவேளையில் சுற்றுச்சூழல் பற்றிய எச்சரிக்கை உணர்வையும் கதையினூடே சொல்லி விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு மிகவும் நன்றி. சிறிய கதையானாலும் உண்டாக்கும் தாக்கம் பெரிது. பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!

      Delete
  5. //"மத்தவங்க செய்றாங்க, செய்யலை. அதப்பத்தி எனக்குக் கவலையில்லை தம்பி. வெறும் பார்வையாளனா இருக்க நான் விரும்பலை. //

    எனக்கு மிகவும் உற்சாகமளித்த வரிகள். அருமை

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு உற்சாகம் அளித்தது என்றறிந்து மகிழ்ச்சி. பாராட்டுக்கு மிக்க நன்றி சீனு!!

      Delete
  6. வரப்போகும் அபாயத்தையும் அதை தடுக்கும் வழியையும் சொன்ன விதம் அருமை .

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த உங்களது ஆதரவும் பாராட்டும் இன்னும் எழுத என்னை உற்சாகப்படுத்துகின்றன. மிகவும் நன்றி சசி!

      Delete
  7. உங்கள் பதிவு பற்றி வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.
    நேரமிருப்பின் பார்த்து கருத்தளிக்கவும்
    http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்தில் என்னிரு பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி முரளிதரன்!

      Delete
  8. ஒரு துளி நீரெனினும்
    தாழியில் அடைத்து வை!
    நாளை அத்துளி
    கிடைக்காது போகையில்
    உன் நா வறண்டு போகாது
    தாகம் தணிக்க உதவும்...

    அருமையான கதை சகோதரி..
    கதையின் மூலம் நல்லதொரு
    விழிப்புணர்வு..

    ReplyDelete
    Replies
    1. அருமையான கவிதை மூலம் கருத்தளித்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

      Delete
  9. தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அருள்!

    ReplyDelete
  10. தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள எனது வலைப்பூவிற்கு தங்களை அழைக்கிறேன்!
    http://dewdropsofdreams.blogspot.in

    ReplyDelete
  11. விருது கொடுத்து என்னெழுத்தைக் கெளரவப்படுத்தியதற்கு மிகவும் நன்றி யுவராணி! உங்களது இந்த விருது மேலும் எழுத என்னை ஊக்குவிக்கிறது.

    ReplyDelete