நல்வரவு

வணக்கம் !

Saturday 16 June 2012

புதைக்கப்படும் உண்மைகள் - சிறுகதை

 
அருண் பத்திரிக்கையில் எழுதிய அந்தச்செய்தி, சட்டசபை யிலிருந்து நாடாளுமன்றம் வரை ஒரு கலக்குக் கலக்கியது.

இரண்டு வருடங்களாகப் 'புலன் விசாரணை' என்ற அந்தப் பத்திரிக்கையில் நிருபராகப் பணிபுரிந்தும், பெயர் சொல்லிக் கொள்ளும் படியாக ஒரு செய்தியும், அவனுக்குக் கிடைக்க வில்லை

அந்தச் சமயத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று ஒரு காலத்தில்(!) போற்றப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு விரைந்தான் அருண்.  அதைப் பற்றிச் சம்பந்தப்பட்டவர்கள் முதலில் சொல்லத் தயங்கினாலும்,  பின் வேறு வழியின்றி உண்மையை ஒத்துக் கொண்டனர்.

தேர்தல் நெருங்கும் நேரமாகையால், வெறும் வாயை மென்று கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு அவல் கிடைத்து விட்டது.  தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்தச் செய்தியை நிமிடத்திற்கொருமுறை கொட்டை எழுத்துக்களில் போட்டு, உலகளவில் பிரபலமான பொருளாதார நிபுணர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்களது கருத்துக்களைக் கேட்டும், உள்ளூர் அளவில் வாக்குவாதம் நடத்தியும் தமக்குப் பெரிய
அளவில் விளம்பரம் தேடிக் கொண்டன.  

'வறுமையின் காரணமாக தன் குழந்தைகளைக் காப்பாற்ற வழியின்றிக் குடியானவன் ஒருவன் தன் குழந்தை ஒன்றைப் பணத்துக்கு விற்றுவிட்டான்,' என்பதே அந்தச் செய்தி.  பட்டினிச்சாவு எப்படி ஒரு நாட்டிற்கு அவமானமோ அதைப் போலவே குழந்தையை விற்கும் இந்த நிகழ்வும், நாட்டிற்கு உலகளவில் பெருத்த அவமானத்தைத் தேடிக் கொடுத்து விட்டது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். 

"காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் அரசு உரிய கவனத்தைச் செலுத்தவில்லை; நடுவர் குழுமம் பரிந்துரைத்ததண்ணீரின் அளவைக் கூட கர்நாடகத்திடமிருந்து பெறுவதில் அரசு அக்கறை காட்டவில்லை; வழக்கம் போல் வானமும் பொய்த்து விட்டது; 'வான் பொய்ப்பினும், தான் பொய்யா மலைத்தனைய கடல் காவிரி'  என்பதெல்லாம் இலக்கியத்தில் படித்த சங்கதியாகிவிட்டது.

அரும்பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லுக்கும் உரிய விலையை அரசு நிர்ணயம் செய்யத் தவறிவிட்டது; தாராளமயமாக்கலின் விளைவுகள் கண்முன்னே தெரியத் துவங்கிவிட்டன; பன்னாட்டு வியாபாரம் காரணமாக உள்ளூர் குடிசைத் தொழில்கள் நசிந்து விட்டன. வேளாண் மக்களின் பிரச்சினைகளை அரசு புறக்கணித்ததன் விளைவு தான் இது; கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர அரசு தவறிவிட்டது.

இத்தகைய காரணங்களால் தம் குழந்தைகளை விற்றுச் சாப்பிடும் நிலைக்குக் குடியான மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.  எனவே இதற்கான பொறுப்பை ஏற்று தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும். தமிழக அரசின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் மத்திய அரசும் பதவி விலக வேண்டும்," என்று சொல்லி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.. 

இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி உடனே தீர்க்கும் படியும், இல்லாவிடில் மத்திய அரசுக்குத் தேர்தல் சமயத்தில் தர்ம சங்கடமான நிலைமை ஏற்படும் எனவும் பிரதம மந்திரி முதன் மந்திரிக்குத் தம் அலைபேசி மூலம் தெரிவித்தார் 

ஏற்கெனவே ஒரு முறை ஒரிசாவில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்ததையும், அதைச் சமயோசிதமாக காலரா போன்ற புது வகை தொற்று நோய்(!) ஒன்றினால் இறந்ததாக அந்த மாநில அரசு செய்தியை மாற்றி வெளியிட்டு நாட்டின் மானத்தைக் காப்பாற்றியதையும், தம் பேச்சினிடையே நினைவுகூர்ந்து அம் மாநில முதல்வருக்குப் புகழாரம் சூட்டினார் பிரதமர்.

"ஒரிசா மாநில முதல்வருக்கு நானும் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல; இந்தப் பிரச்சினையில் உங்களுக்குத் தலைகுனிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு," என்று தம் பங்குக்கு உறுதி கூறினார் தமிழக முதன்மந்திரி.

"இதுபற்றி நேரில் விசாரித்து உண்மையைச் சட்டசபையில் வெளியிடும் வரை எதிர்க்கட்சிகள் அமைதி காக்க வேண்டும்," என்ற முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 

மந்திரிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,  பத்திரிக்கையாளர் கொண்ட குழுவொன்றைத் தாம் அமைத்திருப்பதாகவும், அந்தக் குழுவை அக்கிராமத்துக்கு நேரில் சென்று உண்மையை விசாரித்து வருமாறு பணித்திருப்பதாயும் அவர் சொன்னதை ஏற்றுப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. 

அச்செய்தியைப் பற்றி விசாரிக்க முதல்வர் அனுப்பிய குழுவில், அதனை வெளியிட்ட பத்திரிக்கையின் சார்பில் அருணும் இருந்தான். 

அன்று காலை வரிசை வரிசையாக கார்கள் அணிவகுத்து அக்குக்கிராமத்தை நோக்கிப் படையெடுத்தன. புழுதியைக் கிளப்பிக் கொண்டும், ஆம்புலன்ஸ் சைரன் அடித்துக்கொண்டும் வந்த வாகனங்களைப் பார்த்து அக்கிராம மக்கள் பயந்து விட்டனர்.  தேர்தல் சமயத்தில் மட்டுமே வாக்கு கேட்க வரும் கார்கள், இப்போது வருவதன் காரணம் புரியாது மக்கள் குழம்பினர். 

நாலாப்பக்கமும் சாக்கடைகள், அதில் புரண்டு விளையாடும் பன்றிகள், பக்கத்தில் குப்பைமேடு, குடலைப் புரட்டியெடுக்கும் நாற்றம், குண்டுங் குழியுமான மண் சாலைகள்.. ஒரு கட்டத்துக்கு மேல் கார் போக சாலை வசதியின்றி, எல்லோரும் இறங்கி நடக்க வேண்டியதாயிற்று. 

சாக்கடை நீர் தூய வெண்ணிற வேட்டியில் பட்டுவிடுமோ எனப் பயந்தவர்கள், அதனை மடித்து மேலே தூக்கிக் கட்டிக்கொண்டு, சாக்கடையைத் தாண்டித் தாண்டி குதித்தவாறு பயணம் மேற்கொண்டனர். பார்ப்பவர்களுக்கு நீளம் தாண்டுதல் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார் களோ என நினைக்கத் தக்கவாறு இருந்தது அந்தக் காட்சி.   
  
ஏற்கெனவே குழந்தை விற்கப்பட்ட சம்பவம் குறித்து, அக்கிராம மக்கள் அறிந்திருந்தமையால், அக்குடிசையைக் கண்டுபிடிப்பதில் மந்திரி குழுவினர்க்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை.

"அவங்க எல்லோரும் ஒங்க வூட்டைத் தேடித்தான் வராங்கக்கா" என்று பக்கத்துத் தெரு மாரியம்மா அவசரமாக ஓடி வந்து சொன்னதிலிருந்து அஞ்சலைக்குப் படபடப்பு அதிகரித்தது. ஏற்கெனவே நோயால் அவதிப் பட்டுக்கொண்டிருந்த அவள் கணவன் முனியாண்டிக்கோ, பயம் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

ஒருவழியாக படாத கஷ்டங்கள் பட்டுக் குடிசையை அடைந்த  மந்திரி குழுவினர் வந்ததும் வராததுமாக அஞ்சலையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்:-

"நீ தான் அந்தக் குழந்தையைப் பெத்தவளா?  நீயெல்லாம் ஒரு அம்மாவா?  குழந்தைக்குச் சாப்பாடு போட முடியாத நீ,  ஏன் குழந்தை பெத்துக்கிட்டே?  பெறதுக்கு முன்னால அந்த அறிவு இருந்திருக்கணும். ஏன் உன் புருஷன் குத்துக்கல்லாட்டம் தானே இருக்கான்?  அவன் போய் உழைச்சுச் சம்பாதிக்கிறதுக்கென்ன?

எதுக்கு வித்தே? குழந்தையை வித்தாவது அப்படி உயிர் வாழணுமா என்ன? அப்படியென்ன உயிர் மேல ஒனக்கு ஆசை?" 
இந்தக் கேள்விகளில் இருந்த நக்கல் புரிந்து சிலர் ஏளனமாகச் சிரித்தனர்.

"கும்பிடறேனுங்க சாமி,  நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க சாமி.  நான் மட்டும் அன்னிக்குக் குழந்தையை விக்காம இருந்திருந்தா, என் புருஷன் இன்னிக்கு உயிரோடயே இருந்திருக்க மாட்டாரு.  கொளுத்து வேலை பாத்துக்கிட்டிருந்த அவரு ஒரு நாளு நெஞ்சு வலி அதிகமாகி மயக்கம் போட்டுக் கீழே வுழுந்துட்டாருங்க. அரசாங்க ஆஸ்பத்திரியில மாசக்கணக்கா வைச்சுப் பாத்தேனுங்க. அங்க அவருக்கு ஒரு வைத்தியமும் பண்ணலேங்க..

டாக்டரய்யாவைக் கேட்டேன்.  ஏற்கெனவே இவருக்கு முன்னாடி வந்தவங்க,  நூத்துக்கணக்கான பேர் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் முடிஞ்ச பொறகு தான் இவருக்கு ஆப்ரேஷன் பண்ணுவோம். சீக்கிரம் பண்ணனும்னா, தனியார் ஆஸ்பத்திரிக்குப் போ,'ன்னு சொல்லி சத்தம் போட்டாருங்க பெரிய டாக்டர்.

மாசக்கணக்கா இவரு வேலைக்குப் போகாததால வருமானம் சுத்தமா நின்னு போச்சு.  நான் தான் நடவு வேலைக்குப் போய்க்கிட்டிருந்தேன்.  தண்ணியில்லாததால நிலத்தையெல்லாம் வித்துட்டுக் கிராமத்து ஜனங்க டவுனுக்குப் பொழைப்புத் தேடி போக ஆரம்பிச்சிட்டாங்க. அதனால எனக்கு நடவு வேலையும் தொடர்ந்து கிடைக்கலேங்கய்யா.

தனியார் ஆஸ்பத்திரின்னா, ஆயிரக்கணக்கா செலவாகுமே பணத்துக்கு என்னா பண்றதுன்னு யோசிச்சேன்.  என்னோட ஒன்னு விட்ட அண்ணன் வேலு கொஞ்சம் வசதியாயிருந்தாரு.  அவருக்கிட்ட கடன் வாங்கித் தான் இவருக்கு வைத்தியம் பண்ணினேனுங்க. அவருக்கிட்ட வாங்கின கடனை நாம எப்படி அடைக்கப் போறோம்னு கவலைப்பட்டுக் கிட்டிருந்தப்பத் தான், ஒருநாளு அண்ணன் அந்த ரோசனையைச் சொன்னாரு.

"உனக்கு ஏற்கெனவே ரெண்டு பசங்க இருக்கானுங்க.  மூணாவதா பொட்டைப்புள்ளையை வேற பெத்து வைச்சிருக்கே. அதை வளர்த்து ஆளாக்கிப் பவுன் போட்டு வரதட்சிணை கொடுத்து எப்படிக் கல்யாணம் பன்ணுவே?  பசங்களுக்கு வயிறாறக் கஞ்சி ஊத்தவே உனக்கு வருமானம் இல்லே.  மச்சானுக்கும் உடம்பு சொகமில்லே.  பேசாம அந்தக் குழந்தையை என்கிட்ட கொடுத்திடு.  எனக்கும் கொழந்தையில்லே.  என்
பொண்ணாட்டம் அருமை பெருமையா அதை வளர்ப்பேன்.  அதுக்குப் பதிலா நீ கொடுக்க வேண்டிய பணத்தை நான் தள்ளுபடி செஞ்சுடறேன்" னு சொன்னாரு அவரு. 

நானும் எங்க வூட்டுக்காரரும் ரோசிச்சுப் பாத்தப்ப, இது சரியான ரோசனையாப் பட்டுது,  அந்தக் குழந்தை என்கிட்ட இருக்கிறதை விட அவருக்கிட்ட இருந்தா நல்லா வளரும்னு தோணிச் சிங்கய்யா.  நானும் கடன்லேந்து வெளியே வந்துடுவேன்.  அதுக்காகத் தான் அவருக்கிட்ட என் கொழந்தையைக் கொடுத்தேனுங்க. தப்பாயிருந்தா இந்தச் சிறுக்கியை மன்னிச்சிடுங்கய்யா.  எனக்கு வேற வழி தெரியலீங்க"  சொல்லிக் கொண்டே அங்கு நின்றிருந்தவர்கள் முன்பாக நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து கதறினாள் அஞ்சலை.

"என்ன தான் கஷ்டம் இருந்தாலும், அதுக்காகப் பெத்த குழந்தையை வித்தது பெரிய தப்பு.  நீ பண்ணுனகாரியத்தால எங்க அரசாங்கத்துக்கு எவ்ளோ கெட்ட பேர் தெரியுமா? சரி சரி. நடந்தது நடந்துட்டுது. குழந்தையைத் திரும்பக் கொண்டாந்து கொடுக்கச் சொல்றேன்.  மறுபடி யார்கிட்டயாவது வித்தேன்னு தெரிஞ்சுதுன்னா, ஒன் புருஷனைப் புடிச்சு வெளியிலே வர முடியாதபடி உள்ளாற போடச் சொல்லிடுவேன்," என்று மிரட்டினார் மந்திரி.

அவர் சொன்னதைக் கேட்ட அஞ்சலைக்குப் பயத்தில் மயக்கமே வந்துவிட்டது.

"அந்த ஆள் யாருன்னு விசாரிச்சு குழந்தையை வாங்கினதுக்குத் தண்டனையா 15 நாள் புடிச்சி உள்ளாற வை.  அந்தக் குழந்தையைத் திருப்பி இந்தம்மாக்கிட்ட கொடுக்கிறதுக்கு உடனே ஏற்பாடு பண்ணு,"

பக்கத்தில் நின்ற இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு மந்திரி கிளம்ப, பரிவாரங்களும் அவரைப் பின் தொடர்ந்தன.  

மறுநாள்...

"அய்யா!  நான் தப்பு ஏதும் பண்ணலைய்யா.  என்னை விட்டுடுங்கய்யா.  அந்தக் கொழந்தையை என் பெத்த குழந்தையா நினைச்சி வளர்க்கிறேங்க.  அது மேல என் உசிரையே வைச்சிருக்கேனுங்க.  அதை என்கிட்டே யிருந்து பிரிச்சிடாதீங்கய்யா"  அந்தச் சிறைக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு கதறிக்கொண்டிருந்தான் வேலு.

அஞ்சலை கொடுத்த விளக்கம் அருணைத் தவிர வேறு யாரையும் பாதித்ததாகத் தெரியவில்லை. வளர்க்க வழியின்றித் தான் அந்தத்தாய் குழந்தையை விற்கும் நிலைக்குப் போயிருக்கிறாள்.  இப்போது திரும்பவும் குழந்தையை அவளிடமே கொடுத்து அவளை மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? அக்குடும்பத்துக்கு அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டாமா என்பன போன்ற எண்ணங்கள் அவனை அலைக்கழித்தன.  இந்தச் செய்தியை அவசரப்பட்டு வெளியிட்டு அக்குடும்பத்துக்குத் துன்பத்தை மேலும் அதிகரித்து விட்டோம் என்ற குற்றவுணர்வு அவனைத் தூங்க விடாமல் செய்தது.


அடுத்த வாரம், குழந்தை விற்கப்படவில்லையென்றும், வேலு என்பவன் பெற்றோரிடமிருந்து திருட்டுத் தனமாகக் கடத்திப் போய் விட்டான் என்றும் அரசு நேரிடையாக களத்தில் இறங்கிக் குழந்தையை அவனிடமிருந்து மீட்டுப் பெற்றோரிடமே திரும்பவும் ஒப்படைத்துப் பிரச்சினையைத் தீர்த்து விட்டது என்றும் சட்டசபையில் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தம் அறிக்கையை வாசித்தார் முதன் மந்திரி.

இச்செய்தி அருணுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.  முதல்வரின் அறிக்கையை மறுத்து அஞ்சலை சொன்ன உண்மைக் கதையை வெளியிட வேண்டும் என்றான் பத்திரிக்கை ஆசிரியரிடம். 

"இதைக் கண்டுக்காதே.  அப்படியே இருந்துட்டுப் போகட்டும், இதோட அந்தக் கொழந்தை விஷயத்தை மறந்திடு" என்றார் அவர் கண்டிப்புடன்.

தன்னுடன் பயணம் செய்த எதிர்க்கட்சி உறுப்பினரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

"என்னய்யா? கடைசியில இப்படிச் சொல்லிட்டாங்க, ஆசிரியரை எதிர்த்துக்கிட்டு என்னால உண்மையை வெளியிட முடியலே.  உங்களுக்குத் தான் உண்மை தெரியும்ல.  நீங்க மறுப்பு அறிக்கை வெளியிடறதுக்கென்ன?"

என்னப்பா? புரியாத ஆளாயிருக்கியே.  நம்மளோட எல்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தான் வந்தாங்க.  எல்லாரும் சட்டசபையில அறிக்கை வாசிக்கிறப்ப அமைதியா இருக்கிறத வைச்சே உன்னால் விஷயத்தைப் புரிஞ்சுக்க முடியலேன்னா, நீயெல்லாம் பத்திரிக்கை ஆபீசில இருந்து எப்படித்தான் குப்பை கொட்டப் போறியோ," என்று நக்கலடித்தார் அவர்.  

அவனால் இச்செய்தியை ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை.  மேலும் வேறு எங்காவது வேலை தேடிக்கொள்ளுமாறு மறுநாளே பத்திரிக்கை ஆசிரியர் அவனிடம் சொல்ல, வேலையை விட்டு அவனது சொந்த ஊருக்கு வந்து,  மனதுக்குப் பிடித்த ஆசிரியர் பணியை மேற்கொண்டு ஓராண்டிற்கு மேலாகிவிட்டது.

அஞ்சலையின் குடும்பம் தற்போது எத்தகைய நிலையில் இருக்கிறது.  அந்தக் குழந்தை எப்படியிருக்கிறதுஎன்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட, அக்குழந்தைக்கு ஏதாவது உதவி செய்யும் நோக்கத்தோடு அக்கிராமத்தை நோக்கித் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டான் அருண்.

ஒன்றரை ஆண்டுகளில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது அக்கிராமம்.  எனவே யாரிடமும் விசாரிக்காமல் எளிதாக அக்குடிசையைக் கண்டுபிடித்துவிட்டான்.

"அம்மா! அம்மா!"

ஐந்து நிமிடங்கள் கூப்பிட்டும் உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை.  வாசல் படல் ஒருக்களித்துச் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.  குடிசையின் மேலிருந்த கீற்று,  பல ஆண்டுகளுக்கு முன் வேயப்பட்டிருக்க வேண்டும் என்பது, வெயிலிலும் மழையிலும் அவை மடித்துப் போய் ஆங்காங்கே உளுத்துக் கொட்டியிருப்பதிலிருந்து அனுமானிக்க முடிந்தது.

ஒருக்களித்திருந்த படல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தான்.  மூலையில் ஓர் உருவம் முடங்கிக் கிடப்பது தெரிந்தது.  அது யார் அஞ்சலையா? அல்லது அவளது கணவனா?

மீண்டும் உரத்துக் கூப்பிட்டான்.  உருவம் கொஞ்சம் அசைந்து கொடுத்தது.

"ஆரு?  கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் இருந்தது அந்தக் குரல்.

"நான் தான்."

"நாந்தான்னா ஆரு"

இருமிக் கொண்டே மெல்ல எழுந்து வந்தது அவ்வுருவம்.  அஞ்சலை தான்.  கண்கள் குழி விழுந்து எலும்புக் கூடாயிருந்தாள். 

 ‘என்னை அடையாளம் தெரியலீங்களா? உங்கக் கொழந்தை விஷயமா, ஒங்க வீட்டுக்கு வந்து விசாரிச்சி... 

அருண் முடிக்கவில்லை. 

"வாங்கய்யா.  இப்ப எதுக்கு வந்தீங்க? மறுபடியும் ஏதாவது எழுதி என்னை உள்ளாறப் புடிச்சிப் போடவா? குழந்தையை வித்தேன்னு தெரிஞ்சவுடனே, கார் மேலே கார் போட்டுக்கிட்டு வந்து ஆளாளுக்கு என்னையும் என் வூட்டுக்காரரையும் மிரட்டினீங்க. 

அந்தக் கொழந்தையையும் சேர்த்து வைச்சிக்கிட்டுச் சோறு, தண்ணியில்லாம பரிதவிச்சேனே, அப்ப எங்க போனீங்க
எல்லாரும்? யாருக்கு நாங்க என்னா கெடுதல் செஞ்சோம்?  ஏழையாப் பொறந்தது எங்கக் குத்தமா?  ஏன் எங்களை வாழவும் வுடாம, சாகவும் வுடாம இந்தப் பாடு படுத்தறீங்க?"

கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக அவன் நெஞ்சில் விழுந்தன.  இந்தக் குடும்பத்தின் இன்றைய நிலைமைக்குத் தெரிந்தோ தெரியாமலோ தானும் ஒரு காரணம் என்ற எண்ணம் அவனை வதைத்தது.

"அம்மா, நான் இப்ப ஒரு பத்திரிக்கைக்காரனா வரலை.  ஒங்க நிலைமையப் பத்தி எழுதினப்போ, அதனால ஒங்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும்னு நினைச்சித் தான் எழுதினேன். இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, ஒங்கக் கொழந்தையைப் பத்தி எழுதியிருக்கவே மாட்டேன்.

சரி. அதை விடுங்க.  ஒங்க வூட்டுக்காரர் எங்க?  அந்தக் கொழந்தை எப்படி இருக்குது? அத வளர்க்கிறதுக்கு நான் ஏதாவது உதவி செய்யலாம்கிற நல்ல எண்ணத்தோடத் தான் இப்ப வந்திருக்கேன். என்னை நம்புங்க"

கனிவான வார்த்தைகள் அவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் துவங்கினாள்:-

"என் வூட்டுக்காரர் வேலைக்குப் போயிருக்காரு.  அளவுக்கு மீறி உழைச்சதிலே எனக்குக் காசநோய் வந்திடுச்சி. இருமல் கொட்டிக் கொலைக்குது.  அதனால யார் வூட்டுக்கும் போயி பத்துப் பாத்திரம் கூட என்னாலத் தேய்க்க முடியலே. பசங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா படிப்பு வரலை.  'மாடு மேய்க்கிற பயலுங்க, ஏன் இங்க வந்து எங்க உயிரை வாங்குறீங்க,'ன்னு வாத்தியார் ஒரு நாள் பிரம்பால நல்லா அடிச்சிட்டாராம். மறுநாள் இஸ்கூலுக்குப் போகவே மாட்டோம்னு புடிவாதம் புடிச்சானுங்க ரெண்டு பயல்களும்.  அங்கப் போனா மத்தியானம் சோறு கிடைக்குமேன்னு  நான் தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைச்சேன்.

அன்னிக்குப் போனவனுங்க தான்.  எங்க போனானுங்கன்னே தெரியலே.  பக்கத்து ஊரில ஒரு சினிமாக் கொட்டாயில பெரியவனைப் பார்த்ததா ஒருத்தர் சொன்னாரு. என்னால அங்கப் போய்த் தேடிப் பார்க்கக் கூட முடியலே. சரி.  எங்கயாவது போயி நல்லா இருந்தாச் சரின்னு மனசைத் தேத்திக்கிட்டேன்"    

"சரி.  அந்தக் கொழந்தை? அது எப்படி இருக்கு இப்போ?"

"அதுவா?  வேலு அண்ணன்கிட்டேயிர்ந்து அதைப் புடிவாதமாப் பிரிச்சு என்கிட்ட கொண்டு வந்து போலீசுகாரங்க கொடுத்தாங்க.  அங்கேயிருந்திருந்தா என் புள்ளை நல்லாயிருந்திருக்கும்.  கொழு கொழுன்னு வந்த புள்ளைக்குக் கால் வயித்துக்குக் கூட என்னால கஞ்சி ஊத்த முடியலே.  கொழந்தை எலும்பு தோலுமா
ஆயி, கண்ணுல உயிரைத் தேக்கி வைச்சிக்கிட்டு நடமாடிக்கிட்டிருந்தது. அதுக்கப்புறம்....  

அருணுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அதுக்கப்புறம்...? அவசரமாகக் கேட்டான்.

"என்கிட்ட வந்த அஞ்சாம் மாசமே மஞ்சக்காமாலை வந்து அது செத்துப்போச்சு.  யாரைக் குத்தம் சொல்லி என்னா பண்றது? விதி முடிஞ்சிடுச்சி.  அதுக்கு ஆயுசு அம்புட்டுதான் தம்பி,"  என்றாள் அஞ்சலை விரக்தியுடன், எங்கோ தொலைதூரத்தை வெறித்தபடி.

"உண்மையாலுமே மஞ்சக்காமாலை வந்து தான் செத்துச்சா?  இல்ல......."

"ஏதேது. நீங்க கேட்கறதாப் பார்த்தா மறுபடியும் துப்பறிஞ்சு பத்திரிக்கையிலே எழுதப் போறீங்களோன்னு பயமாயிருக்கு".

"சே! சே! என்னை நம்பினாச் சொல்லுங்கம்மா.  இல்லாட்டி வேணாம்".

"ஒங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன தம்பி? ஒங்களை நான் நம்பறேன். திங்கறதுக்குச் சோறு, தண்ணியில்லாம கொழந்தை துரும்பா இளைச்சுக்கிட்டே வந்து ஒரு நாள் செத்துப்போச்சி.  இறந்த சேதி கேள்விப்பட்டவுடனே ரெண்டு போலிசுக்காரங்க வந்தாங்க.  என் மவளை வாழ விடாம, இப்படி அநியாயமாச் சாகடிச்சிட்டீங்களேன்னு என் மாரிலேயேயும் தலையிலேயும் அடிச்சிக்கிட்டு அழுதேன்.

என்னைத் தனியா அழைச்சிட்டுப் போயி ஒம்மக பசி பட்டினியால இறந்ததுன்னு யாருக்கிட்டேயும் மூச்சுவிடக் கூடாது.  யாராவது கேட்டா,  மஞ்சக்காமாலை வந்து செத்துப் போச்சுன்னு சொல்லணும்னு என்னை மிரட்டிட்டுப் போனாங்க. அதனால எல்லார்க்கிட்டேயும் இப்பிடித்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். தயவு செஞ்சு யார்க்கிட்டேயும் இதப்பத்திச் சொல்லிடாதீங்க. ஒங்களுக்குப் புண்ணியமாப் போவும்."

கடுமையான இருமலுக்கிடையே மிரட்சியுடன் சுற்றுமுற்றும் ஒரு பார்வை பார்த்து விட்டு,  அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள் அஞ்சலை:-

என் கொழந்தையைக் குழியில போடும் போதே, அது எப்பிடிச் செத்துச்சிங்கிற உண்மையையும் சேர்த்துப் போட்டுப் புதைச்சிட்டேன் தம்பி”. 

(அக்டோபர் 2011 உயிரோசையில் வெளிவந்தது)

11 comments:

  1. //”என் கொழந்தையைக் குழியில போடும் போதே, அது எப்பிடிச் செத்துச்சிங்கிற உண்மையையும் சேர்த்துப் போட்டுப் புதைச்சிட்டேன் தம்பி”. //

    படிக்கும்போதே மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  2. மனம் கலங்க்கித்தான் போனது
    யதார்த்தமாகஸ் கதை சொல்லிப் போனவிதம்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்!

      Delete
  3. படித்த போதே மனதை கலகடிகச் செய்த கதை. நீர் ஆதாரம், விவசாயம் பட்னிச் சாவு என்று பல தளங்களில் செல்லும் கதை அனைத்தையும் விவரிப்பது அருமை. அருமையான கதை படைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்


    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கை கொடுத்தவன் கதையைப் படித்தேன். கற்பனை கதை போலல்லாமல் உண்மை சம்பவம் போலவே இருந்தது மிகச் சிறப்பு! பாராட்டுக்கள்!

      தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சீனு!

      Delete
  4. ரொம்ப அருமையா இருக்குங்க! படிக்கும்போதே இது மாதிரி எங்கேயும் நடந்திருக்க கூடாதுன்னு தோனுது! ஆனால் ஏதோ ஒரு மூலையில நடந்தேரிக்கொண்டே இருக்கும் இப்படிப்பட்ட கொடுமைகள்!

    ReplyDelete
    Replies
    1. ஹிந்து நாளிதழில் வெளியான ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே இக்கதையை எழுதினேன். எனவே இது போன்ற கொடுமைகள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன!
      உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி!

      Delete
  5. Replies
    1. தங்களது முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!
      தொடர்ந்து வாருங்கள்!

      Delete