நல்வரவு

வணக்கம் !

Sunday 29 July 2012

புது மனைவி


கையில் கலக்கிக் கொடுத்த பானம்
இன்னதென்று யூகிக்க இயலாவிடினும்
ஏதோ ஓர் அனுமானத்தில்
புது மனைவியைக் குளிர்விக்க எண்ணி
தேநீர் மிகப் பிரமாதம், என்றேன்;.
அது புரூ காபிப்பா, என்றாள் அவள்,
இது கூடத் தெரியவில்லையே என்ற
ஏளனத்தை முகத்தில் தேக்கியபடி!

உப்பும், மிளகாய்த் தூளும்
வஞ்சனையின்றி வாரி வழங்கி
அம்மணி சமைத்த சாப்பாட்டை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் நான் தவிக்க,
சிரமப்பட்டு நான் செஞ்ச சமையலை
வாயைத் தொறந்து,  ரெண்டு வார்த்தை
பாராட்டினா  முத்தா விழுந்துடும்?
பாராட்டவும் ஒரு மனசு வேணும்,
அது ஒங்கக்கிட்ட இல்லை, என்றாள்
முகத்தை ஒன்றரை முழம்
தூக்கி வைத்துக் கொண்டு!

வேறொரு நாள்... 
சமையலில் கை தேர்ந்து விட்டாய்;
இன்று உன் சமையல் அருமை என்றேன்;
சமைத்தது உங்க ளம்மா;
தெரிந்து கொண்டே, வேண்டுமென்று
என்னைக் வெறுப்பேற்றுகிறீர்என்றாள்,
கடுகு வெடிக்கும் முகத்துடன்!

மனைவியின் பிறந்த நாளை
அரும்பாடுபட்டு நினைவில் நிறுத்தி
பத்துக் கடை ஏறி இறங்கி
ஆசையாய் வாங்கிப் பரிசளித்த
பச்சை வண்ணப் புடவையைத்
தூக்கி ஓரத்தில் வைத்தாள்,
ஒங்களுக்குத் தேர்வு செய்யவே
தெரியலை, என்ற விமர்சனத்துடன்!
இங்கிலீஷ் கலர்(!?) தான் பிடிக்குமாம் அவளுக்கு!

சினிமா ஆசைப்பட்டாள் என்பதற்காக
வரிசையில் நின்று அடிபட்டு, மிதிபட்டு
புதுப்படத்தின் முதல் நாள் காட்சிக்கு
டிக்கெட் வாங்கி வந்தால்,
பாழாய்ப்போன இப்படத்துக்கு வந்ததுக்குக்
கடற்கரைக்காவது போயிருக்கலாம்;
படுமட்டம் ஒங்க ரசனை,என்றாள்
படம் பார்த்து முடித்த பிறகு!

இவளைத் திருப்திப்படுத்த முடியாது
என்றவுண்மை எனக்கு உறைத்த போது,
வெட்ட வெளியில் நின்ற வண்ணம்
என்னைப் பிடிக்காதவளாக
இருந்துவிட்டுப் போடி! என்று
வாய் விட்டுக் கத்தினேன்,
அவள் பக்கத்தில் இல்லையென்பதை
உறுதி செய்து கொண்டு!

(தமிழ் மன்றத்தில் எழுதியது)

10 comments:

  1. சிரிச்சு வயிறு வலிச்சுப்போச்சு. மனைவியிடம் நல்லபெயர் வாங்கவே முடியாதோ!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்து சிரித்தமைக்கும் மிக்க நன்றி விச்சு சார்!

      Delete
  2. ஓஹோ... அங்கேயும் இதே நிலை தானா... ஹா... ஹா...
    அழகாக எழுதி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.. நன்றி.

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)


    சின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் (more than 10 minutes) ஆகிறது.....
    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
    Replies
    1. என் பிளாக்கைத் திற்ப்பதில் சமீப காலமாகப் பிரச்சினை இருந்தது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. உங்கள் ஆலோசனையின் படி உலவு பட்டையை நீக்கியதும் இப்போது உடனே திறக்கிறது. மிக்க நன்றி தனபாலன் சார்!

      வாழ்த்துக்கு மீண்டும் நன்றி.

      Delete
  3. நல்ல நகைச்சுவை. அதை எழுதியிருக்கும் விதமும் ரசிக்கவைத்தது. பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி கீதா!

      Delete
  4. ''...வெட்ட வெளியில் நின்ற வண்ணம்
    ”என்னைப் பிடிக்காதவளாக
    இருந்துவிட்டுப் போடி!” என்று
    வாய் விட்டுக் கத்தினேன்,
    அவள் பக்கத்தில் இல்லையென்பதை
    உறுதி செய்து கொண்டு!....''
    ha...ha..!!!I am laughing....!!!
    Thank you Best wishes..
    Vetha.Elangathialkam.
    (From anthimaalai web)

    ReplyDelete
  5. அருமை அக்கா! மிகுந்த நகைச்சுவை ஊஞ்சலாடுகிறது!

    ReplyDelete
  6. போடி என்று கணவனால் கூறப் படாதபடி எப்படி வாழ்வது என்ற கலையைச்சொல்லித் தந்த கலையரசிக்கு பாராட்டுக்கள் !
    த.ம 1

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்!

      Delete