நல்வரவு

வணக்கம் !

Friday, 7 November 2014

‘எங்கெங்கும்.... எப்போதும்... என்னோடு!,’ சிறுகதை விமர்சனம்திரு. கோபு சார் நடத்திய விமர்சனப்போட்டி நிறைவுவிழாவின் ஆறாம் நாளான நேற்று, போட்டியில் வெற்றிபெற்றோர் பற்றிய புள்ளிவிபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.  இப்பட்டியலில் திருமதி கீதா மதிவாணன் 32 பரிசுகள் பெற்று முதலிடத்திலும், திருமதி இராஜேஸ்வரி மேடம் 28 பரிசுகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.  இருவருக்கும் என் பாராட்டுக்கள்!

மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் வெற்றியாளர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இணைப்பு:-

என் பெயரும் இப்பட்டியலில் இடம்பெறக் காரணமான திரு கோபு சார் அவர்களுக்கும் நடுவர் அவர்களுக்கும் என் நன்றி.
 
எங்கெங்கும்...எப்போதும்…. என்னோடு!’ கதைக்கான இணைப்பு:-
(ஆசிரியர்:- திரு வை.கோபாலகிருஷ்ணன்)

இனி என் விமர்சனம்:-
மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் எடையைக் குறைக்க எண்ணி நடை பயிலத்துவங்கும் மூத்தகுடிமகன் ஒருவரின் அனுபவங்கள் நகைச்சுவை இழையோடச் சொல்லப்பட்டு சட்டென்று இறுதியில் சோகத்தில் முடிந்த கதை.  துன்பத்தில் முடிந்தாலும் கைத்தடியைப் பயன்படுத்தி நேர்மறையாக முடித்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது!

நொறுக்குத்தீனிகளுடன் கரமுராவென்று உறவாடுவது, ‘வேகமாக நடக்க ஒட்டடை குச்சியோ ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா?’, ‘நடக்கச் சொல்கிறார், நடக்கற காரியமா அது?’ போன்றவை ஆசிரியரின் நகைச்சுவை உணர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்! 
 
வாழ்க்கைப் பயணத்தில் சிலரைப் பார்த்த மாத்திரத்தில் நமக்குப் பிடித்துவிடும்.  காலங்காலமாய்ப் பழகியது போன்ற அந்நியோன்யம் ஏற்படும்.  அது போல் வேறு சிலரைக் கண்டால், முதல் சந்திப்பிலேயே அவரை வெறுப்போம்.  “என்னன்னு தெரியலை; அவரைப் பார்த்தாலே எனக்குப் புடிக்கல,” என்போம்.  இதற்கு அறிவியல் ரீதியான காரணம் சொல்ல முடியாது. உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம்.

இக்கதையிலும் அப்படித்தான், முதல் சந்திப்பிலேயே 88 வயது முதியவருக்கும் 61 வயது நாயகனுக்கும் சிநேகம் ஏற்பட்டு இருவருமே நீண்ட நாட்கள் பழகியவர்கள் போல் உரையாடி மகிழ்கின்றனர்.   இரயில் சிநேகம் போலன்றி, தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்ற ஆவல், இருவருக்குள்ளும் ஏற்படுகின்றது.

மற்ற நாட்களில் நடைபயிற்சி செய்யாமல் நொண்டிக்காரணம் சொல்லிவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கும் கதாநாயகன், முதியவரின் இறுதி ஊர்வலம் நடக்கும் நாளில்,  சரியான நேரத்தில் எதிரே செல்ல என்ன காரணம்?  இது யதேச்சையாக நடந்ததா?  அல்லது அவரது உள்ளுணர்வு அவரைச்  சந்திக்க உந்திற்றா?  நிஜ வாழ்விலும் இது போன்ற உள்ளுணர்வு சம்பவங்கள், சில சமயம் எதிர்பாராமல் நிகழ்ந்து, நம்மை வியக்க வைப்பதுண்டு.

தள்ளாத வயதிலும் நாளிதழ்கள் வாசித்து நாட்டுநடப்பை விரல் நுனியில் வைத்திருக்கும் முதியவர், கதை நாயகனை மட்டுமல்ல, வாசகராகிய நம்மையும் கவர்ந்திழுப்பதில் வியப்பொன்றுமில்லை.  மரணத்தையும் அமைதியாக சிரித்த முகத்துடன் எதிர் கொள்கிறார்!

88 வயதிலும் தம் வாழ்வின் இறுதிநாள் பற்றி எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால், சாகப்போகும் தறுவாயில் வேலைப்பாடுள்ள அழகிய புது கைத்தடியை விலை கொடுத்து வாங்கியிருப்பார்? அவரின் அந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான், அவரது கைத்தடி மூலம் சோம்பேறியான நம் கதை நாயகனையும் நடக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அளித்து தொடர்ந்து நடக்க வைக்கிறது.   எங்கேயும், எப்போதும் அவருடன் தொடர்ந்து பயணம் செய்து புத்துணர்வு அளிக்கிறது.

எந்த வயதிலும் மனமிருந்தால் மார்க்கமுண்டு, தளர்ச்சி உடலுக்குத் தானே தவிர மனதுக்கில்லை, மனதை இளமையாக வைத்திருந்தால் முதுமையிலும் சுறுசுறுப்பாக இயங்கலாம் என்கிற உண்மையை இக்கதாபாத்திரத்தின் மூலம் வாசகர் மனதில் பதிய வைத்து, தன்னம்பிக்கையளித்துப் புத்துணர்வு ஊட்டுவதில் கதாசிரியர் வெற்றி பெறுகிறார்..  

அக்காலத்தில் திண்ணையில் வழிப்போக்கர்கள் அமர்ந்து ஓய்வெடுத்ததையும், சுமைதூக்குவோர் சுமையை இறக்கிவைத்து  இளைப்பாறியதையும், இக்காலத்தில் தெருவில் நடைபயிலுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோடு ஒப்பிடுவது மட்டுமின்றி ,  முதியவர்களின் உடல்+மனம் சார்ந்த பிரச்சினைகளையும் கோடிட்டுக் காட்டி வாசகர்களின் பாராட்டைப் பெறுகிறார் வை.கோபு சார்!

(நடுவர் ஜீ.வீ அவர்களால் இரண்டாம் பரிசுக்குத் தேர்வானது)


Wednesday, 5 November 2014

மறக்க மனம் கூடுதில்லையே - சிறுகதை விமர்சனம் - 4

திரு கோபு சார் அவர்கள் நடத்திய விமர்சனப்போட்டியின் நிறைவு விழாவில் நான்காவதாக ஸ்ரீராஜராஜேஸ்வரி விருது ஏற்படுத்தப்பட்டு, மிக அதிகளவில் ஹாட் டிரிக் பரிசு வென்று சாதனை படைத்த நால்வருக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.  இப்பரிசு வென்ற சாதனையாளர்க்குப் பாராட்டுக்கள்! 

மறக்க மனம் கூடுதில்லையே – (ஆசிரியர்:- வை.கோபாலகிருஷ்ணன்)
கதைக்கான இணைப்பு:-


இனி என் விமர்சனம்:-
வாழ்க்கை என்றுமே ஒரு புதிர் தான்.  அனுபவம் தான் நமக்குப் பாடம் கற்பிக்கும் ஆசான்.  ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்துத் தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  கிட்டத்தட்ட வாழ்நாளில் பாதிக்கு மேல் கழித்த பின்னரே, நமக்குக் கிடைத்த பட்டறிவின் மூலம் வாழ்க்கை ஓரளவு நமக்குப் புரிபடத் துவங்குகிறது.

இளமையில் நம்மைக் கவரும் முக்கிய அம்சம் அழகு தான்; ஆனால் முதுமையில் தான், அழகும் இளமையும் ஆரோக்கியமும் சாசுவதமில்லை என்ற உண்மை நமக்கு உறைக்கின்றது.

பெற்றோர் ஏற்கெனவே நம் வயதில் வாழ்ந்து பார்த்தவர்கள் என்பதால் அவர்கள் இந்த உண்மையை அனுபவம் மூலம் உணர்ந்திருக்கிறார்கள்.  அதனால் தான் அழகை விட, நம் குடும்பத்துக்கேற்ற குத்துவிளக்காக பெண் இருக்க வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.  பெண்ணின் பெற்றோர், சமூகத்தில் அவர்கள் குடும்பம் சம்பாதித்துள்ள நல்ல பெயர், பெண்ணின் ஒழுக்கம், வளர்ப்பு முறை இவற்றைப் பார்த்துத் தம் பிள்ளைகளுக்கு முடிவு செய்கின்றனர்.  இளமையில் உடலை மட்டும் அடிப்படையாக வைத்து எழுப்பப்படும் காதல் கோட்டைக்குப் பெரும்பாலான பெற்றோர் எதிரிகளாய் இருப்பது, இக்காரணத்தினால் தான். 

அழகு தேவதையின் அலங்கோல நிலைபற்றியறியும் போது மனம் மிக வருந்தவே செய்கிறது.  அவளது தற்போதைய நிலைமைக்குக் காரணம் என்ன?  ஏன் புத்தி பேதலித்தது என்பதை ஆசிரியர், நம் யூகத்துக்கு விட்டுவிட்டார்.  எல்லாவற்றையும் விலாவாரியாக விவரிக்காமல் சிலவற்றை, வாசகர் யூகத்துக்கு விடுவது தானே, தற்போதைய பாணி!

சாதாரண கார் புரோக்கர் பெண்ணை, அவளது அழகைப் பார்த்துத் தான் பணக்கார கணவன் திருமணம் செய்திருக்க வேண்டும்.  அவளது மனதைப் புரிந்து கொள்ளாமல், புற அழகைப் பார்த்துத் திருமணம் செய்தவன் மோகம் தீர்ந்த பின் அவளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினானோ? 

மிகவும் அழகான மனைவி வாய்க்கப்பெற்ற கணவன்மார்களில் பெரும்பாலோருக்குச் சந்தேகம் கூடப் பிறந்த வியாதியாக இருக்கும்.  பெற்றோர் வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு கார் என்று சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த செல்லக்கிளியைக் காசு கொடுத்து வாங்கி வெளியே யார் கண்ணிலும் படவிடாமல் கூட்டுக்குள் அடைத்தது தான், அவளது புத்தி பேதலிக்கக் காரணமோ?  இப்படியெல்லாம் கதை வாசிப்பவரைச் சிந்திக்க வைப்பதில் வெற்றி பெறுகிறார் ஆசிரியர்.

அவளை இந்த நிலைமையில் பார்த்த பிறகு, நம் மனைவி நல்ல ஆரோக்கியமாக அழகாக இருக்கிறாள்; நம் பெற்றோர் நமக்கு நல்லது தான் செய்திருக்கிறார்கள்; அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்; நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும் எண்ணமே, இக்கதைசொல்லிக்கும் ஏற்படுவதாகக் காட்டியிருப்பது மிகவும் யதார்த்தம்.
தான் விரும்பியவனை மணந்திருந்தால், வறுமையில் உழலாமல் செல்வச்செழிப்பில் மிதந்திருக்கலாம் என்று எண்ணாமல், நல்லவேளை  தன்னைத் திருமணம் செய்திருந்தால் தன் துரதிஷ்டம், இவனைச் சுகப்பட வைக்காமல் கஷ்டப்பட வைத்திருக்கும்; இவன் நன்றாக வாழ வேண்டும்  என்று எண்ணும் ஈரோட்டுக்காரியின் பாத்திரப்படைப்பு தான் எல்லாவற்றையும் விட மிகவும் உன்னதமானது. 
அம்மாவின் மனநிலையைக் காரணம் காட்டிப் பெண்ணை நிராகரிக்காமல் மகனுக்கு மணம் முடிக்க நினைப்பவனாக கதைசொல்லியைப் படைத்திருப்பதில் ஆசிரியரின் மனித நேயம் வெளிப்படுகிறது.   

சிகிச்சையில் அவள் நிச்சயம் குணமடைவாள் என்று நம்பிக்கையுடன் நேர்மறையாக சொல்லிக் கதையை முடித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. 

ஈரோட்டுக்காரி கதை சொல்லியையும்,  மதராஸ்காரியைக் கதாநாயகனும்,  அவளது மகளை இவன் மகனும்,  இவர்களது வாழ்க்கை அனுபவங்களை உணர்வு பூர்வமாக விவரிக்கும் இக்கதையை நாமும், மறக்க மனம் கூடுதில்லை!. 

(வை.கோபு சார் அவர்கள் நடத்திய விமர்சனப்போட்டியில் நடுவர் ஜீ.வீ. அவர்களால் மூன்றாம் பரிசுக்குத் தகுதி பெற்றது)


Monday, 3 November 2014

அஞ்சலை – சிறுகதை விமர்சனம் - 3


வை.கோபு சாரின் விமர்சனப்போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.  விழாவின் மூன்றாம் நாளான இன்று, இரண்டு புதிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


இப்போட்டித் தொடரில் தொடர்ச்சியாக பரிசுகள் பல வென்று சாதனை படைத்த பதிவர்களான சேஷாத்ரி மற்றும் கீதாமதிவாணன் ஆகியோரின் பெயர்களில் விருதுகள் அறிவிக்கப்பட்டுப் பலருக்கும் பரிசுகளை வாரி வழங்கியிருக்கிறார் வை.கோபு சார்..  
இப்பரிசு மழையில் நானும் நனைந்திருக்கிறேன்:- 

நாற்பதில் எட்டுப்பரிசுகள் மட்டுமே பெற்ற எனக்கும், விமர்சனவித்தகி கீதா பெயரில் ஏற்படுத்தப்பட்ட விருதையளித்துப் பெருமைபடுத்தியிருக்கிறார்.  அவருக்கு மீண்டும் என் நன்றி.

‘அஞ்சலை’ கதையின் இணைப்பு:-  (ஆசிரியர் வை.கோபாலகிருஷ்ணன்)

இனி என் விமர்சனம்:- 

நீதிமன்ற வளாகத்தில் மிகவும் சென்சிட்டிவான கேஸ் அன்று விவாதிக்கப்பட இருந்ததால், கூட்டம் நிரம்பி வழிந்தது.  பணத்திற்காக குழந்தையை விற்றமைக்காக அஞ்சலையும், வாங்கியதற்காக சிவகுருவும் குற்றவாளிக் கூண்டில்:-

“சிவகுரு… சிவகுரு …. சிவகுரு”

“அஞ்சலையின் ஏழைமையை உமக்குச் சாதகமாக்கிக் கொண்டு மூன்று லட்சம் பணம் கொடுத்துக் குழந்தையை வாங்கியதாக உம் மேல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.  அதற்கு நீர் என்ன பதில் சொல்கிறீர்?”

சிவகுரு:- 
“அஞ்சலைக்கு மூன்று லட்சம் பணம் கொடுத்தது உண்மைதான்.  ஆனால் அது குழந்தைக்கான விலையல்ல.  கணவனை இழந்து நிராதரவாக நிற்கும் இளம்பெண் இந்தச் சமூகத்தில் மானத்துடன் வாழ வேண்டுமானால், அதற்குக் கண்டிப்பாக பணம் வேண்டும்  நிரந்தரமான வருவாய் அவளுக்கு வேண்டும் என்பதற்காகவே உதவி செய்தேன்.” 

“அஞ்சலை மேல் யாருக்குமில்லாத கரிசனம், அப்படியென்ன உமக்கு மட்டும்?” 

“ஓராண்டு காலமாக எங்கள் வீட்டில் அவள் வேலை செய்தாள்.  நாணயத்தின் மறுபெயர் அஞ்சலை.  ஒருமுறை வீட்டைச் சுத்தம் செய்யும் போது கீழே  கிடந்த பதினைந்து பவுன் இரட்டைவடச் சங்கிலியை எடுத்துக் கொடுத்தவள்.   இன்றைக்குத் தங்கம் விற்கும் விலைக்கு அதனை அவள் திருடியிருந்தால், மூன்று லட்சத்துக்கு மேல் அவளுக்குப் பணம் கிடைத்திருக்கும். 

அவள் கணவன் தீவிரச் சிகிச்சை பிரிவில் இருந்தபோது, நான்காயிரம் கொடுத்து உதவியவன் நான்.  இதற்கு முன்னரும் பல தடவை அவளுக்கு நான் பண உதவி செய்திருக்கிறேன்.  கணவனை இழந்து குழந்தையை வைத்துக் கொண்டு தவித்த அவளுக்கு உதவி செய்வதற்காகவும், நல்ல வளமானதொரு எதிர்காலத்தை அவள் குழந்தைக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் அவனை நான் தத்தெடுத்தேன். 

என்னிடமிருக்கும் சொத்துக்கு ஒரு சேரிக் குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.   எங்கள் உறவுக்காரர்களில் பலர் தங்கள் குழந்தைகளை எனக்குத் தத்துக் கொடுக்க மாட்டோமா எனத் தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கிறார்கள்.  சேரிக்குழந்தை என்று தெரிந்தால் என் மனைவி அவனைத் தன் குழந்தையாக ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவாளோ என்ற பயத்தினால் தான் என் மனைவி மல்லிகாவிடம் உண்மையைச் சொல்லக் கூடாது என அஞ்சலையிடம் சத்தியம் வாங்கினேன்.  

இக்காலத்தில் அஞ்சலையைப் போல் நம்பிக்கையான, நாணயமான வேலைக்காரி கிடைப்பது மிகவும் அபூர்வம்; அதுவுமில்லாமல் அவள் எங்கள் வீட்டில் வேலை செய்வதால் தன் குழந்தையைப் பிரிய வேண்டிய அவசியமிருக்காது;   அவனது வளர்ச்சியைக் கூட இருந்தே பார்த்து மகிழ முடியும்.  அவன் விருப்பப்படும் துறையில் படிக்க வைத்து வளமான எதிர்காலத்தை அவனுக்கு என்னால் அளிக்க முடியும். 

மேலும் அக்குழந்தையின் வரவு எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பன்மடங்கு பெருக்கியிருக்கிறது.  என்னுடைய சொத்துக்கு ஒரே வாரிசு அவன் தான்.  அவன் மீது நானும் என் மனைவியும் உயிரையே வைத்திருக்கிறோம்.  குழந்தையைக் கொடுக்கச் சொல்லி அஞ்சலையை நான் கட்டாயப்படுத்தவில்லை.   முழு சம்மதத்துடன் தான் அவள் குழந்தையை என்னிடம் கொடுத்தாள்.  எனவே அவளை ஏமாற்றிக் குழந்தையை வாங்கினேன் என்றெல்லாம் கூறித் தயவு செய்து அவனை எங்களிடமிருந்து பிரித்து விடாதீர்கள் நீதிபதி அவர்களே!”

“சரி நீங்கள் போகலாம்.”

“அஞ்சலை….   அஞ்சலை….  அஞ்சலை…”

“பணத்துக்காக  குழந்தையை விற்றதாய் உம் மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  அதற்கு உம்முடைய பதில்?”

“கும்பிடறேனுங்க சாமி!  சிவகுரு ஐயா எனக்குத் தெய்வம் மாதிரிங்க.  நான் கஷ்டப்பட்ட சமயத்திலெல்லாம், அவருதாங்க அப்பப்ப பணம் கொடுத்து உதவினாருங்க.  எம் புருஷன் ஆஸ்பத்திரியில உயிருக்குப் போராடிக்கிட்டிருந்தப்ப, அவரு தாங்க பெரிய மனசு பண்ணி நாலாயிரம் ரூபாய் கொடுத்தாரு.  எம் புருஷனும் போனபொறவு இந்தக் கொழந்தையை வைச்சிக்கிட்டு என்னச் செய்யபோறோம்னு நான் கதிகலங்கி நின்னப்ப, இந்த ஐயா தான் தெய்வம் மாதிரி வந்து அந்த ரோசனையைச் சொன்னாருங்க.   நானும் ஒரு மணி நேரம் நல்லா ரோசிச்சிப் பார்த்தேனுங்க.  அது தான் நல்லதுன்னு  மனசுக்குப் பட்டதால சரின்னு ஒத்துக்கிட்டேங்க..”

“எது நல்ல யோசனை?  பணத்துக்காகப்  பெத்த கொழந்தையை விக்கிறதா?  நீயெல்லாம் ஒரு தாயா?  ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு, தாய்மையையே கேவலப்படுத்திட்டியே?”

“சாமி!  என்னென்னமோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க?  நீ ஒரு தாயான்னு கேட்கிறீங்க?  மொதல்ல நான் ஒரு பொண்ணு.  அப்புறம் தான்  ஒரு தாயி.  என் கற்பைக் காப்பாத்திக்கிட்டு மானத்தோடு நான் வாழனும்னா எனக்குப் பணம் வேணும்.  புருஷனை இழந்துட்டுத் தனிமரமா நிக்கிற எனக்கு உதவி செய்ய வந்தவங்க, எல்லாருமே என் மானத்தைத்  தான் விலையாக் கேட்டாங்க. 

ஒரு பொண்ணுக்கு உயிரை விடவும் மானம் தாங்க பெரிசு.  மானத்தை இழந்துட்டுக் குழந்தையோடு வாழறதை விட, மானத்துக்காக குழந்தையை இழக்கிறதுல தப்பு இல்லேன்னு நான் முடிவு செஞ்சேங்க.  என் மனசுக்குச் சரின்னு பட்டதை நான் செஞ்சேனுங்க.  பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க நெறையா பணம் வேணும்.  அது எங்கிட்ட இல்லீங்களே!  என்கிட்ட ஒரு தற்குறியா வளர்றதை விட அங்க இருந்தா என் புள்ளை, நாளைக்கு ஒரு டாக்டராவோ இஞ்சீனியராவோ ஆவான்.  அது எனக்கும் பெருமை தானுங்களே சாமி? 

எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க சாமி.  சந்தோஷமா  ஏத்துக்கிறேன்.  ஆனா நான் கஷ்டப்பட்ட நேரத்திலெல்லாம்  தெய்வம் மாதிரி உதவி பண்ணுன சிவகுரு ஐயாவை விட்டுடுங்க சாமி.”          

“சரி.  நீர் போகலாம்.”

இருவாரங்களுக்குப் பிறகு:-

நீதிபதி:-- மக்களுக்காகத் தான் சட்டங்களே ஒழிய சட்டங்களுக்காக மக்கள் இல்லை.  பணத்துக்காக குழந்தை கைமாறிய இந்த வழக்கில் இருவருமே பரஸ்பரம் நன்மையடைந்திருக்கின்றனர், எந்த விதக் கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லாமல், தம் குழந்தையைத் தத்துக் கொடுக்க இப்பெண் முன் வந்திருக்கிறார்.  குழந்தையின் மீது சிவகுரு குடும்பத்தினர் அன்பைப் பொழிகிறார்கள்.  மேலும் ஒரு தாழ்த்தப்பட்ட குழந்தையின் வளமான எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இருவருமே குற்றமற்றவர்கள் என்றும் சிவகுருவிடம் குழந்தை வளர்வதில் ஆட்சேபணை ஏதுமில்லை என்றும் தீர்ப்பளித்து இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன். 

மிகவும் சென்சிட்டிவான இவ்வழக்கை இம்மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து தீர்ப்பு சொல்ல இதற்குமுன் இல்லாத அளவுக்கு என்னைச் சிந்திக்க வைத்த வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டுகிறேன்!.  

(இது நடுவர் ஜீ.வீ அவர்களால் மூன்றாம் பரிசுக்குத் தகுதி பெற்றது)


Sunday, 2 November 2014

உடம்பெல்லாம் உப்புச்சீடை – சிறுகதை விமர்சனம் - 2

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பத்துமாதங்கள் வெற்றிகரமாக நடத்திய விமர்சனப் போட்டியின் நிறைவு விழாவின் இரண்டாம் நாளான இன்று புதிதாக ஜீவீ+வீஜீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:-

நான் செய்த மிக மிகச் சாதாரண உதவியை மிகப் பெரியதாகப் பாராட்டி எனக்கும் சிறப்பு விருது கொடுத்துக் கெளரவித்திருக்கும் கோபு சாரின் பெருந்தன்மைக்கும், தயாள குணத்திற்கும் இச்சமயத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

உடம்பெல்லாம் உப்புச்சீடை -(ஆசிரியர் வை.கோபாலகிருஷ்ணன்) - கதைக்கான இணைப்பு:-

என் விமர்சனம்:- 


கதையில் வரும் நீண்ட ரயில் பயணம் என்பது நம் வாழ்க்கைப் பயணத்தின் குறியீடு என்பது என் கருத்து.
இந்த விளம்பர யுகத்தில் தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவர், வேத வித்து, பெரிய மகான் போன்ற அடைமொழிகளுடன் கூடிய விளம்பரங்களை அடிக்கடிக் காண்பதாலோ என்னவோ, மகான் என்றால் காவியுடை தரித்திருப்பார், மழிக்கப்படாமல் நீண்டு தொங்கும் தாடியிருக்கும், கழுத்தில் உத்திராட்ச மாலை அணிந்திருப்பார் போன்ற அங்க அடையாளங்களை, நமக்கு நாமே கற்பித்துக்கொள்கிறோம்.
  . 
அதனால் தான் காவியுடையில் திரியும் பகற்கொள்ளைக்காரர்களை, வேடதாரிகளை ஞானிகள் என்று தேடிச் சென்று நீண்ட வரிசையில் பொறுமையாகக் காத்திருந்து பெரும் பொருளை இழப்பதுடன், சில சமயங்களில் நம் குடும்பப் பெண்களின் மானத்தையும் அடகு வைக்கிறோம்.
 
ஆனால் வாழ்க்கைப்பயணத்தில் நம் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்யும் சக பிரயாணியை, வெகு அருகாமையில் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி எளிமையாக நிறைகுடங்களாக இருக்கும் தத்துவ ஞானியை அடையாளம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்கிறோம்.

கண்ணுக்குத் தெரியும் புறத்தோற்றம் கண்டு எள்ளி நகையாடுகிறோம்;  வெறுத்து ஒதுக்குகிறோம்.  ஆனால் அக அழகைத் தரிசிக்கத் தெரியாமல், கண்ணிருந்தும் குருடராகிவிடுகிறோம்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள்.  அதனால் தான் தெய்வாம்ச குணங்கள் நிரம்பிய பெரியவரின் தூய்மையான அன்பைக் கள்ளங்கபட மில்லாத குழந்தை ரவி எளிதாக இனங்கண்டுகொள்கிறான். 

தமக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையைத் தாமே முன்வந்து பட்டாபி குடும்பத்துக்குக் கொடுத்து விட்டு, எண்பது வயதில் கஷ்டப்பட்டு மேலே ஏறும் முதியவரைக் கண்டு, அவர்களுக்குச் சற்றும் குற்ற வுணர்வோ, பச்சாத்தாபமோ ஏற்படவில்லை.

அவருக்கேற்பட்ட அவமானத்தை மறந்து, அவர்கள் தவறவிட்ட முக்கியமான பையை எடுத்துப் போய், அவர்களிடம் சேர்ப்பிக்கும் நேரத்திலும் கூட, நன்றியுணர்வுக்குப் பதிலாகப் ‘பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே,’ என்ற வருத்தம் தான் ஏற்படுகிறது பட்டாபிக்கு.

இக்காலத்துக் கடைந்தெடுத்த சுயநலவாதியின் பிரதிநிதியாக கதை முழுக்க வளைய வருகிறார் பட்டாபி.

அவர்களுக்கு உதவி செய்யுமுகமாகத் தமக்கு ஒதுக்கப்பட்ட கீழ் இருக்கையைத் தாமே முன் வந்து தாரை வார்த்து விட்டு, மேலே ஏறும் கணத்திலேயே அவர்களது உதாசீனம், அவமதிப்பு, நிந்தனை பற்றிய சிந்தனை சுமைகளைக் கீழே இறக்கி வைத்து விடுகிறார் பெரியவர். 

எனவே தான் பட்டாபி மன்னிப்புக் கேட்கும் போது, “நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவேயில்லை,” என்று அவரால் முழுமனதுடன் உண்மையாகச் சொல்ல முடிகிறது.  பெரிய மகான்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.
உள்ளே தேனினும் இனிய சுளைகள் கொண்ட, வெளியே கரடுமுரடாகத் தெரிகிற பலாப்பழத்தை அருவருத்து ஒதுக்குவதால், யாருக்கு நஷ்டம்?

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்’

‘தவறு செய்வது மனித இயல்பு,  மன்னிப்பது தெய்வீக குணம்’
‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’,

போன்ற நீதிகள் பலவற்றை வாசிப்பவர் மனதில் அலையலையாக ஏற்படுத்திச் சிந்திக்கத் தூண்டும் அருமையான கதை. 


(விமர்சனப்போட்டியில் நடுவர் ஜீ.வீ அவர்களால், இரண்டாம் பரிசுக்குத் தகுதி பெற்றது)
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-02-03-second-prize-winners.html

Saturday, 1 November 2014

'காதலாவது கத்திரிக்காயாவது' - சிறுகதை விமர்சனம் - 1திரு வை.கோபு சார் அவர்கள் பத்து மாதங்களாக வெற்றிகரமாக நடத்திய விமர்சனப்போட்டி முடிந்து இப்போது நிறைவு விழா துவங்கியிருக்கிறது.  விழாவின் முதல் கட்டமாக, ஹாட் டிரிக் வெற்றியாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது:-

இப்பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 

இவ்விழாவின் தொடர்ச்சியாக இப்போட்டித்தொடரில் நான் எழுதியவைகளில் பரிசுக்குரியவையாக நடுவர் ஜீ.வி. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு விமர்சனங்களை, என் தளத்தில தினமொன்றாக வெளியிட முடிவு செய்துள்ளேன்:-

காதலாவது கத்திரிக்காயாவது’ - (ஆசிரியர் திரு.வை.கோபாலகிருஷ்ணன்)  கதைக்கான இணைப்பு:-
என் விமர்சனம்:-
காதல் ஒன்று மட்டுமே வாழ்வின் முக்கிய பிரச்சினை என்பது போன்ற ஒரு மாயையை இளைஞர்களிடம் உருவாக்கி, காதலில் எத்தனை வகைகள் உண்டோ, அத்தனையையும் அலுப்பில்லாமல் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கும்,  நம் தமிழ்ச்சினிமாக்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்தும், வெறுத்தும் போயிருக்கும் இச்சமயத்தில், இன்னும் ஒரு காதல் கதை!

மேல்நாட்டுக் கலாச்சாரத்தை அப்படியே இறக்குமதி செய்து காதலர் தினம் கொண்டாடி பொது இடத்தில் கொஞ்சங்கூட கூச்சமின்றி அநாகரிகமாக நடந்து கொண்டு நம்மை முகம் சுளிக்க வைக்கும் இத்தினத்தில், மீண்டும் ஒரு காதல் கதை!

தலைப்பைப் பார்த்து விட்டுக் காதலர் தினத்தன்று காதலுக்கு எதிர்மறையான கருத்தைச் சொல்லும் கதை போலிருக்கிறது என்ற எண்ணத்தில் வாசித்துப் பார்த்தால், திரும்பவும் ஒரு காதல் கதை!

இம்மாதிரியான ஒரு தலைப்பைத் தேர்வு செய்து,  காதலைக் கருவாகக் கொண்ட கதையை வாசிக்க விரும்பாதவரையும், இதனை வாசிக்க வைத்த ஆசிரியரின் உத்திக்கு முதல் பாராட்டு.  தலைப்புக்கு மட்டுமல்ல, இக்கதை நாயகர்களின் காதலுக்கும் கத்திரிக்காய் உதவுகிறது!

பரமுவுக்கும், காமாட்சிக்கும் பருவ வயதில் ஏற்படுகிற காதலைச் சொல்கிற இக்கதையில்,  துவக்கத்தில் காமாட்சியின் அழகு தான் பரமுவைச் சுண்டியிழுக்கிறது.  அவளுக்கு உதவி செய்வதற்கு அவளது அழகு தான் காரணமோ என்ற சந்தேகம் நமக்கு எழாமலில்லை. ஆனால் வங்கி வேலை கிடைத்தபிறகு, அவள் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி, அதற்கீடாக ஒரு சன்மானத்தைக் கொடுத்து விட்டு அவன் பறந்திருக்கலாம்.  ஆனால் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்புகிறான் என்றறியும்போது, அவன் அவள் உடலை மட்டும்  நேசிக்கவில்லை,  உள்ளத்தையும் நேசிக்கிறான் என்ற உண்மை நமக்குப் புலப்படுகிறது.

சிறுவயதிலிருந்து நிறைவேறாத பட்டுப்பாவாடைக்காக அரும்பாடுபட்டுச் சேர்த்து வைத்த பணத்தைப் பரமுவுக்காக எடுத்துச் செலவு செய்யும் போது காமாட்சிக்கு வருத்தம் துளியுமில்லை.  இத்தனைக்கும் அவன் தன் காதலை இதுவரை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை. எதையும் எதிர்பார்த்து அவள் அவனுக்கு உதவவில்லை. 
எல்லாவற்றுக்கும் லாப நஷ்டக் கணக்குப் போட்டுச் செலவு செய்யும் மேல்தட்டு,வர்க்கத்தினர், அடுத்த வேளை கஞ்சிக்கில்லாத இந்த எளிய மக்களிடம் இருந்து, மனித நேயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்!

கதையை மேலோட்டமாக வாசிக்கையில், ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவொன்று,’ என்று தான் சொல்லத் தோன்றும்.  ஆனால் ஆழமாக வாசிக்கும் போது தான், இக்கதை மூலம் ஆசிரியர் இன்றைய இளைய சமுதாயத்துக்குக் காதலைப் பற்றி ஒரு முக்கியமான உண்மையைச் சொல்லியிருக்கிறார் என்பது  புரியும்.

இன்றைக்குத் திருமண முறிவுகள் அதிகளவில் ஏற்படுவது கவலைக்குரிய விஷயம்.  நாளிதழில் மணமக்கள் தேவை என்ற விளம்பரத்தில் பாதிக்குப் பாதி விவாகரத்து பெற்றோரின் விபரங்கள் தாம் இடம் பெற்றிருக்கின்றன.   
விவாகரத்து பெற்றவர்களுக்கென்றே,  இன்று தனி திருமண சேவை மையங்கள் செயல்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
பிள்ளைகளின் சம்மதம் கேட்காமல், பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்கள் மட்டுமல்ல; பெற்றோரை எதிர்த்துக் ‘காதல், காதல், காதல்; காதல் போயிற் சாதல்,’ என்று சபதமெடுத்து, நட்சத்திர உணவகங்களில்  ஐஸ்கிரீம் சாப்பிட்டு, மணிக்கணக்காக அரட்டையடித்து, இரவு முழுதும் கண்விழித்துக் குறுஞ்செய்தியனுப்பி, கைபேசி நிறுவனங்களுக்கு ஆயிரக் கணக்கில் மொய் எழுதி, சக்திக்கு மீறிச் செலவழித்து விலையுயர்ந்த பொருட்கள் வாங்கிப் பரிசளித்து, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டோம் என்று சூளுரைத்து, அவசர அவசரமாகச் செய்து கொள்கிற காதல் திருமணங்களும் அல்லவா, அதே வேகத்தில் முறிந்து போகின்றன?

பருவ வயதில் எதிர்பாலாரிடம் ஏற்படும் ஈர்ப்பைக் காதல் என்று எண்ணுவது தான் பெரும்பாலோர் செய்யும் தவறு.  காதலிக்கும் போது நிறைகளை மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்குத் திருமணத்துக்குப் பிறகு  மற்றவரின் குறைகள் தெரியத் துவங்க, விரிசல் விழத் துவங்குகிறது.  மோகம் குறையக் குறைய, ‘ஃபூ இதற்குத் தானா இவ்வளவு ஆசைப்பட்டோம்,’ என்ற விரக்தி தோன்ற, விரிசல் அதிகமாகி மணமுறிவில் முடிகிறது.

இன்பத்தில் மட்டுமின்றித்  துன்பத்திலும் பங்கெடுத்துக் கொண்டு, புரிந்துணர்வுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து, உண்மையான அன்புடன்  உடலை நேசிக்காமல் உள்ளத்தை நேசிக்கும் காதல் என்றென்றும் நிலைத்து நிற்கும்! அன்பை அஸ்திவாரமாகக் கொண்டு  எழுப்பப்படும் குடும்பம் எனும் கோயில், எத்தகைய இடர்ப்பாடுகளையும் சமாளித்து, நல்லதொரு பல்கலைக்கழகமாகத் திகழும்! என்ற கருத்தை  இக்கால இளைய சமுதாயத்துக்கு வலியுறுத்தும் விதமாக  பரமு & காமாட்சி காதல் கதையைக் காதலர் தினத்தில் வெளியிட்டமை சிறப்பு!

பரமு இரண்டாவது கவரைப் பிரிக்குமுன்பே, அதில் என்ன இருக்கும்  என்பதை நம்மால் யூகிக்க முடிவது ஒரு குறை.  மார்க்கெட் போன்ற பிறமொழிச் சொற்கள், பலவிடங்களில் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

(போட்டியில் முதல் தடவையாகப் பங்கேற்று, அதற்கு முதல் பரிசும் கிடைத்தது என்பதில், எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி!) அதற்கான இணைப்பு:-


Tuesday, 7 October 2014

சாதனையாளர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!வலையுலகில் முதன் முறையாக விமர்சனப் போட்டியை ஜனவரி 2014 துவங்கி பத்து மாதங்கள்(!!!!) சிறிது கூடத் தொய்வின்றி வெற்றிகரமாக நடத்தி வரும் (பதிவர்களால் வை.கோபு சார் என்று அன்புடன் அழைக்கப்படும்) திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்!


இப்போட்டியின் 38 வது கதையான மலரே.குறிஞ்சி மலரே! என்ற கதைக்கு விமர்சனம் எழுதியனுப்பக் கடைசி நாள்:- 09/10/2014.  இதனுடன் சேர்த்து இன்னும் மூன்று கதைகளே களத்தில் உள்ளன.  இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது விமர்சனத்திறமையைச் சோதித்துக் கொள்ள விரும்புவோர்க்கான இணைப்பு:-


திட்டமிடல், குறித்த காலத்தில் செயல்படுதல், காரியத்தில் சோர்வின்றித் தொடர்ந்து ஈடுபடுதல், குன்றாத ஆர்வம், விடாமுயற்சி போன்ற தலை சிறந்த பண்புகளை வை.கோபு சார் அவர்களிடத்தில் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

  
கதையை வெளியிட்ட மாத்திரத்தில் அனைவருக்கும் அது பற்றிய தகவல்களை அளித்தல், திரும்பத் திரும்ப நினைவூட்டல், விமர்சனத்தை நடுவருக்கு நகல் எடுத்து அனுப்புதல், பரிசு விபரங்களைக் குறித்த நேரத்தில் வெளியிடுதல், பரிசு தொகையைச் சுடச்சுட விநியோகித்தல் என இந்தப் பத்து மாதங்களாகத் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்திருக்கிறார்.  கரும்புத் தின்னக் கூலியாக தொகை+ போனஸ்+ ஹாட் டிரிக் எனப் பரிசும் கொடுத்தும் ஊக்குவிக்கிறார்.

என்னால் ஒரு சில போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது.  எல்லாவற்றிலும் கலந்து கொள்ள முடியவில்லையே என வருத்தம் தான்.  ஆனால் விமர்சனம் எழுதுவது எப்படி என்று இந்தப் போட்டியின் மூலமாகவே நான் தெரிந்து கொண்டேன்.  பரிசு பெறுபவர்களின் விமர்சனங்களை வாசிப்பது மூலமாகவும், அவ்வப்போது நடுவரும் வை.கோபு சார் அவர்களும் கொடுத்த குறிப்புகள் மூலமாகவும் ஒரு சிறந்த விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இப்போட்டியில் நடுவராயிருந்து சிறப்பான விமர்சனங்களைப் பரிசுக்குரியவையாய்த் தேர்வு செய்து கொடுத்தவர் திரு ஜீ.வி. அவர்கள்.


தமிழில் விமர்சனக் கலையை வளர்த்த சான்றோர்களில் வை.கோபு சார் அவர்களுக்கும் நிச்சயம் இடமுண்டு.  சிறந்த விமர்சன வித்தகர்களையும், சக்ரவர்த்திகளையும்  உருவாக்கியிருக்கிறார்.  வெட்டி அரட்டையைத் தவிர்த்து இணையத்தை நல்லதொரு காரியத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார். 

வலைப்பூவில் எழுதும் பலர் இன்னும் அதிகளவில் பங்கெடுத்திருந்தால் இப்போட்டியை இவர் நடத்தியதன் அடிப்படை நோக்கம் முழுவதுமாக நிறைவேறியிருந்திருக்கும் என்பது மட்டுமே சிறிய குறை.


மொத்தத்தில் பத்து மாதங்கள் ஒரு போட்டியை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய சாதனையாளர்!  தொடர்ந்த ஊக்கத்துக்கும் ஆக்கத்துக்கும் ஒரு முன் மாதிரி!  எதிர்காலத்தில் இணையத்தில் இது போன்ற பயனுள்ள போட்டியைத் துவங்க  நினைக்கும் எவருக்கும், நல்லதொரு வழிகாட்டி!


நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும் பெற்று இவர் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்!
Friday, 26 September 2014

என் பார்வையில் கண்ணதாசன்’ –கட்டுரை(கவியரசு கண்ணதாசன் அவர்களின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கமும் வல்லமையும் இணைந்து நடத்திய கட்டுரைப்போட்டிக்காக 24/05/2014 ல் எழுதியது)

கவிஞர், திரைப்படப்பாடலாசிரியர், அரசியல்வாதி, இலக்கியவாதி, சிந்தனாவாதி என்ற பன்முகத்திறமைகளைப் பெற்றவர் கண்ணதாசன் என்றாலும், என்னைப் பெருமளவு பாதித்தவர் திரைப்படப்பாடலாசிரியர் கண்ணதாசனே. 

சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தது, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,’ என்ற பாடல். 

“உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது – என்
உள்ளம் எனும் சூரியனைக் கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது”

என்று தகிக்கும் உச்சி வெயில் சூரியனை, கடுங்கோபத்தால் டென்ஷன் அதிகமாகி சிடுசிடுக்கும்  உள்ளத்துக்கு ஒப்பிட்டு எழுதிய இவ்வரிகள் அப்போதே என்னை ஈர்த்துச் சிந்திக்க வைத்தன.

ஒருவித லயிப்புடன் இப்பாடலை நான் பாடியதாலோ என்னவோ, பள்ளித் தோழிகள் அடிக்கடி இதனைப் பாடச்சொல்லிக் கேட்பது வழக்கம்.  ஐந்தாம் வகுப்பின் முடிவில் என் தந்தையின் பணி மாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் சென்று விட்டோம்.  ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியிறுதி யாண்டு வரை வேறு ஒரு பள்ளியில் படித்தேன்.  பழைய பள்ளித் தோழிகளின் பெயர்கள் ஒன்றிரண்டு நினைவில் இருந்ததே தவிர, அவர்களின் முகங்கள் நினைவில் இல்லை. 

கல்லூரியில் சேரத் திரும்பவும் பழைய ஊருக்கு வர வேண்டியதாயிற்று.  கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள், ஒருத்தி என்னைப் பார்த்து
ஏய் “குழந்தையும் தெய்வமும் பாட்டு பாடுவியே, அந்தக் கலையரசி தானே நீ?” என்றாள்.     
அப்போது தான் லேசாக அவள் முகம் நினைவுக்கு வந்தது.  
அவள் என் ஐந்தாம் வகுப்புத் தோழி அனுசுயா.  என் அடையாளத்தை மீட்டெடுத்துப்  என் நட்பைப் புதுப்பிக்க உதவிய இப்பாடலை எழுதியவர், கவிஞர் கண்ணதாசன்! 

ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் இனிமையானது என்று போற்றப்படும் கல்லூரி வாழ்வின் இறுதி நாளில், பாட வேண்டும் என நாங்கள் தேர்ந்தெடுத்த பாடல், கண்ணதாசனின், ‘பசுமை நிறைந்த நினைவுகளே!’

அன்றிலிருந்து இன்று வரை, அத்தினத்தில் அனைவராலும் பாடப்படும் பாடல் இது தானே?

“பசுமை நிறைந்த நினைவுகளே
பாடிப் பறந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்,”

என்பதில் ‘பறந்து’ என்பதற்குப் பதிலாகப் ‘பிரிந்து’ என்று பாடுவதாக ஏற்பாடு. 

அந்த நாளும் வந்தது.  கல்லூரி முதல்வர் உட்பட பேராசிரியைகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.  விருந்து முடிந்து இறுதியில் தோழிகள் அனைவருடனும் இப்பாடலைப் பாடத் துவங்கினேன்.
குரங்குகள் போல, மரங்களின் மீதே தாவித் திரிந்தோமே
குயில்களைப் போலே, இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல், செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம், அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே.”

என்று பாடுவதற்குள்ளாகவே, பெரும்பாலோர் பாடமுடியாமல் தேம்பித் தேம்பி அழத் துவங்க, கஷ்டப்பட்டுத் தொடர்ந்து பாடி முடித்தவர்கள் ஓரிருவர் மட்டுமே. 
இப்பாடலைக் கேட்ட எங்கள் முதல்வர், “நீங்களே சொந்தமாக எழுதிப்பாடியதா?” என வினவினார்.  திரைப்படப்பாடல்களைப் பற்றி மிக மோசமான எண்ணம் கொண்டிருந்த  அவர், இப்பாடலைக் கேட்ட பிறகு தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்! 

ஏற்கெனவே இதே வரிகளைப் பலமுறை  பாடிப் பார்த்திருந்தும் கூட அச்சமயத்தில் முழுவதும் பாடமுடியாத அளவுக்கு, தொண்டையை அடைக்க வைத்த அவ்வளவு பொருத்தமான வரிகளைக் கொண்ட பாடல்! 
கல்லூரியில் காலடி வைக்காத கவிஞர், மாணவப் பருவத்தின் அனைத்து அம்சங்களையும் அழகாகச் சொல்லிப் பிரிவின் வேதனையைத் துல்லியமாக உணர்த்தி எங்களை அழ வைத்த நிகழ்வு, என்றுமே மறக்க முடியாதது.   
  
தொலைக்காட்சியில் இன்று இப்பாடலைக் கேட்டால் கூட, அந்த நாள் நினைவுகள், நேற்று நடந்தது போல, நெஞ்சிலே வலம் வருகின்றன!  அந்தளவுக்கு என் மலரும் நினைவுகளில், முக்கிய இடம் பெற்ற  சாகா வரம் பெற்ற பாடல் இது!  

என் கல்லூரி வாழ்வின் முதல் நாள், பழைய தோழியை அடையாளம் காணவும், இறுதி நாளை வாழ்நாள் முழுக்க நினைவில் நிறுத்தவும் உதவியவை கண்ணதாசனின் இந்த அருமையான திரையிசைப்பாடல்களே!

பள்ளி நாட்களில் தினமும் இரவில் தந்தை, தங்கை, தம்பிகளுடன் ஒன்றாக வட்டமாக அமர்ந்து, அன்றைய தின நிகழ்வுகளையும் செய்திகளையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே சாப்பிடுவது வழக்கம்.  அச்சமயத்தில் என் தந்தை, அரசியல், இலக்கியம், சினிமா, நாட்டு நடப்பு பற்றிய பலசெய்திகளை எங்களுக்குச் சொல்வார்.
  
ஒருநாள் தமிழலக்கியத்தை ஆழமாகக் கற்ற கவிஞர் கண்ணதாசன் திரைப்படப்பாடல்களில் இலக்கிய நயத்தை எடுத்தாண்டிருப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.   

“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் இருந்தார், என்ற பாரி மகளிரின் பாட்டின் கருத்தை மையமாக வைத்து, "அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே” என்ற பாடலைக் கவிஞர்  இயற்றியிருப்பது பற்றிச் சொன்னார். 

தொடர்ந்து ‘அத்திக்காய்,’….என்ற பாடல் பற்றிப் பேச்சு வந்தது.     
அதுவரை அத்திக்காய் என்றால் அத்திமரத்தின் காய் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.  ஒவ்வொரு வரியாக தந்தை விளக்கம் சொன்னபோது, எங்களுக்கு வியப்புத் தாங்கவில்லை.

ஆர்வக்கோளாறு அதிகமாகி “உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?” என்றால் என்ன அர்த்தம் அப்பா?” என்று அவர் சொல்லாமல் விட்ட வரிக்குத் தம்பிகளுக்கு முன்னால் அசட்டுத்தனமாய் நான் கேட்டதும், அது காதில் விழாதது போல் அவர் எழுந்து கையலம்பச் சென்றதும், இதைப்போய்க் கேட்கிறாயே என்று என் தங்கை, யாருக்கும் தெரியாமல் என் காலைக் கிள்ளியதும் என் நினைவுக்கு வந்து, இப்போதும் என்னை நாணச் செய்கின்றது.  

பள்ளிப்பருவத்தில், நோட்டுகளின் கடைசிப் பக்கங்களில் திரைப்படப் பாடல்களை எழுதிவைக்கும் பழக்கம் எங்களிடமிருந்தது.  தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட தப்பில்லாமல் சொல்லுமளவிற்கு அவை மனப்பாடமாயிருந்தன.  மனப்பாடச்செய்யுள் பகுதியில் கண்ணதாசன் பாடல்களிலிருந்திருந்தால், வகுப்பில் எல்லோருமே முழுமதிப்பெண் பெற்றிருந்திருப்போம்!  
  
அக்காலத்தில் இரவு பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரை வானொலியில், ‘நெஞ்சில் நிறைந்தவை,’ என்ற தலைப்பில் திரைப்படப்பாடல்கள் ஒலிபரப்பாகும்.  அவற்றில் பெரும்பாலானவை கவிஞர் கண்ணதாசனுடையவை தாம். விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக்கொண்டே அவற்றைக் கேட்பது மனதுக்கு இதமான தாலாட்டாக இருக்கும்.                                                          “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே”

“உள்ளத்தின் கதவுகள் கண்களடா –
இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா,”
போன்ற பாடல்களைக் கேட்டுவிட்டு நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே தூங்கிவிடுவது வழக்கம்.  வானொலியை நிறுத்தாமல் தூங்கிவிட்டமைக்கு அடுத்த நாள் காலையில், அம்மாவிடம் திட்டு வாங்குவது சகஜமாய் நடக்கும் நிகழ்வு.    

கவலைகளால் மனம் சோர்ந்து போயிருக்கும் சமயங்களில், கவிஞரின்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது,”

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக,
மலர்கள் மலர்ந்தது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக”

“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்,
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்”

“வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்?
ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்திவா”

போன்ற பாடல்களைக் கேட்கும் போது சோர்வு நீங்கி, மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். 

நெருங்கிய உறவுகளை இழந்து விரக்தியின் எல்லையில் நின்ற போது   

போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?” 
என்ற பாடலை நமக்காகவே கவிஞர் எழுதியிருக்கிறாரோ என்று தோன்றும்.           

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே”

நிம்மதியிழந்து தூக்கத்தைத் தொலைத்த காலத்தில், இவ்வரிகள் சொல்லும் நிதர்சனம் உறைத்தது!

முதன்முதலில் தாய்மைப்பேறை எதிர்நோக்கியிருந்த காலத்தில்,
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்,”

என்ற வரிகள் மனதை மயிலிறகால் வருடி பேருவகை அளித்தன! .
 
“உள்ளாடும் உயிரொன்று கண்டேன், அதன்
உருவத்தை நான் என்று காண்பேன்?,”
என்று முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் தாயொருத்தியின் கனவையும் ஏக்கத்தையும் அத்துணை நுணுக்கமாக தாம் அனுபவித்தது போல் சொல்லில் வடித்த கவிஞரை, என்ன சொல்லிப் புகழ?

“அமைதியான நதியினிலே ஓடும்- ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் நதியினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்,”

“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்”

“கருணை பொங்கும் உள்ளம்- அது
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றான்
கடவுளைத் தேடி அலைகின்றான்,”

போன்ற வாழ்வியலுக்குத் தேவையான உயரிய தத்துவங்களை எளிய மொழியில் பாமரருக்கும் புரிகின்ற மாதிரி, பொட்டில் அடித்தாற் போல் படைத்துச் சென்ற மக்கள் கவிஞரின் கவிதைகள் காலத்தை வென்று நிற்கும் சக்தி படைத்தவை!   

என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவிஞரின் பல்வேறு பாடல்கள் பொழுதுபோக்கு என்ற அம்சத்தைத் தாண்டி என் ஊனோடும் உணர்வோடும் கலந்து விட்ட காரணத்தினால், ‘அந்த நாள் முதல், இந்த நாள் வரை’  அவை என் மீது தாக்கத்தைச் செலுத்தி என்னை உயிர்ப்புடன் இயங்க வைப்பது, முழுக்க முழுக்க உண்மை!


‘காலங்களில் அவள் வசந்தம்,’ பாடல் எழுதிய கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த காலம், தமிழ்த்திரையிசைப் பாடல்களின் வசந்த காலம் என்றால் அது மிகையில்லை!


(கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் திரு காவிரிமைந்தன் அவர்கள் எழுதிய பின்னூட்டம் கீழே):- 

அன்புடை ஞா.கலையரசி அவர்களுக்கு..

வல்லமை வாயிலாக கேட்டிருந்தபடி தாங்கள் அனுப்பிய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரை பற்றிய பின்னூட்டமிது.  பல்வேறு பணிகளுக்கிடையே இப்பணி காலதாமதமானது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

எண்ணியவற்றைமட்டும் எடுத்தியம்பாமல் இதயம் வழியவழிய வைத்திருந்ததை ஏட்டில்பதித்திருந்தீர்கள்!  குழந்தையும் தெய்வமும் திரைப்பாடல் உச்சிவெயில் சூரியனை மேகம் மூடுது.. நம் உள்ளமெனும் சூரியனைக் கோபம் மூடுது!” என்னும் வரிகளைத் தந்து கட்டுரையின் தொடக்கம் தந்தது அருமை!  குழந்தையும்தெய்வமும் குணத்தால் ஒன்று .. குற்றம்தனை மறந்துவிடும் மனத்தால் ஒன்று!” என்னும் பல்லவியின் அழகு.. பவித்ரமானது!  அதற்கடுத்த இரண்டு வரிகளில் வாழ்க்கைக்குத் தேவையான மற்றுமொரு ரகசியத்தைப் பதிவுசெய்திருக்கிறார் பாருங்கள்!.. “நடந்ததையே நினைப்பதுதான் துயரமென்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று!” இதுதான் கவியரசர்!

இந்தப் பாடல் உங்களின் தோழியை.. உங்கள் நட்பை மீட்டெடுத்துத் தந்தக் காட்சிகளை தத்ரூபமாக தந்தீர்கள்.. அழகு!!

ஆம்..உங்கள் நினைவுகளில் அந்தப் பசுமை நிறைந்த நினைவுகளே..  கல்லூரியின் இறுதிநாளில் பாடிட அதுபோல் மற்றுமொரு பாடல் வரவில்லையே.. நீங்கள் குறிப்பிட்டதைப் போல.. நம்மைப்போல் கல்லூரியில் படித்திராத கவிஞர்.. படித்த நம்மால்கூட எழுதிக்காட்ட முடியாத வரிகளை..உணர்வுகளை எப்படி படைத்துக் காட்டினார் என்கிற கேள்விக்கு .. “படைப்பதனால் என் பெயர் இறைவன்” என்கிற அவரது வரியே பதிலாகும்!!  எங்கோ பிறக்கின்றோம்..எங்கோ வாழ்கின்றோம்..எங்கோ இணைகின்றோம்..எங்கோ பிரிகின்றோம்.. இதில் மனம் உணர்வுகளால் அல்லவா பின்னிக்கிடக்கிறது!  அன்பால் ஒன்றுபட்ட உள்ளங்களின் பிரிவு அது நட்பாக இருந்தாலும்.. வலி அதிகம்தான் என்பதைத்தான் கல்லூரியின் இறுதிநாள் சொல்கிறது. இதனை இவ்வளவு அழகாக.. எளிமையாக.. இனிமையாக எடுத்துச் சொல்ல கவியரசரால்தான் முடிந்திருக்கிறது .. இப்பூவுலகில்!!  “பறந்து என்பதற்கு பதிலாக பிரிந்து என்கிற சொல் பயன்படுத்த ஏற்பாடு என்று படித்த போது..இந்தப் பாடலை நீங்கள் எந்த அளவு உள்வாங்கியிருக்கிறீர்கள் என்று உணரமுடிந்தது.  காலவெள்ளம் அடித்துச் செல்லமுடியாதப் பெட்டகமாய் கண்ணதாசன் பாடல்கள் என்றுமிருக்கும் என்பதற்கு இந்த ஒரு பாடலே சத்திய சான்று!

அத்திக்காய் பாடலுக்கு உங்கள் அப்பாவிடம் பொருள் கேட்ட விஷயங்கள் அருமை!  இனிமை!!  இப்படியெல்லாம் அப்பா எனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்க வைக்கிறீர்கள்! 

இரவு நேரங்களில் 10 மணி முதல் 11 மணி வரை.. நெஞ்சில் நிறைந்தவை என்னும் தலைப்பில்.. இரவின் மடியில் என்னும் தலைப்பில் வானொலி நிலையம் வழங்கிய பாடல்கள் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்!  உறங்கிடும் முன்பாக உள்ளத்தின்மீது யாரோ மயிலிறகால் வருடிவிடுவதைப்போல.. அடுத்தடுத்து வானொலி நிலையத்தார் சுழலவிடும் பாடல்கள் சுகந்தம் தருபவை!  அவற்றில் பெரும்பாலும் கண்ணதாசன் அதிக வாக்குகள் பெற்று நம் நெஞ்சில் நிறைந்திடுவார்!  அற்புதமான அனுபவங்களாய் ஒவ்வொரு இரவும் நம் உள்ளங்கள் நிறையும்!!  (உள்ளத்தின் கதவுகள் கண்களடா பாடல் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதியது என்பதை அறியவும்). 

தாய்மைப் பேறு அடைந்தபோதும் கவிஞரின் பாட்டுவரிகள் உங்களைத் தாலாட்டியது பூப்போல  பூப்போல சிரிக்கும்.. பாடல் என்கிற ஒப்புவிப்பு உன்னதமானது!  வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நம்மோடு கைகோர்த்து வருகிறார் கண்ணதாசன் பாடல்கள் வாயிலாக என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்!


மீண்டும் நன்றிகளுடன்..
என்றென்றும் கண்ணதாசன்புகழ்பாடும்..
காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
பம்மல் -  சென்னை 600 075.
தற்போது அபுதாபி  (அமீரகம்)
00971 50 2519693
Website: thamizhnadhi.com

Friday, 21 February 2014

“தற்காலத் தமிழின் போக்கும், அதன் எதிர்கால நிலையும்”


தற்காலத் தமிழின் போக்கு சிறப்பாய் இருக்கிறது என்றோ, திருப்திகரமாக இருக்கிறது என்றோ யாரேனும் சொன்னால், அது சிற்றோடையில், திமிங்கலத்தை மறைப்பதற்குச் சமம். 

இன்றைய தமிழின் நிலை, தாய்மொழிப் பற்றாளர்களுக்கு மிகவும் கவலை யளிப்பதாகவே உள்ளது. 

பாரதியார் இன்று இருந்திருந்தால்,
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்”
என்பதற்குப் பதில்

தேமதுரத் தமிழோசை தமிழகத்திலாவது  
பரவும் வகை செய்தல் வேண்டும்,”
என்று நெக்குருகிப் பாடியிருப்பார்.

இன்றைய தமிழகத்தில், எங்கும், எதிலும் ஆட்சி செய்வது ஆங்கிலமே.

தற்காலத் தமிழின் போக்கை நாம் தெளிவாய்ப் புரிந்து கொள்ளப் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என  இரண்டாகப் பிரித்துக் கொள்வோம்.

பேச்சுத் தமிழில், மக்கள் அன்றாடம் புழங்கும் மொழியும், வானொலி தொலைக் காட்சி, திரைப்படம் போன்ற ஊடகங்கள் பயன்படுத்தும் மொழியும் அடக்கம்..

எழுத்துத் தமிழில்  நாள், வார மாத இதழ்கள், இணையம் போன்ற ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழி, கவிதை, கட்டுரை, சிறுகதை நாவல் என தமிழ் எழுத்தாளர்களால் கையாளப்படும் மொழி என இருவகைப்படுத்தலாம்.

பேச்சுத்தமிழ்:-

இன்று பேச்சுத்தமிழில் ஏராளமான ஆங்கிலச் சொற்கள், வேற்றுமொழி என்று தெரியாத அளவுக்கு இரண்டறக் கலந்து விட்டன.  படித்தவர்கள் மட்டுமின்றிப் பாமரர்கள் கூட ஆங்கிலச் சொற்கள் பலவற்றைத் தினந்தினம் தம் உரையாடலில் பயன்படுத்துகிறார்கள். 

பிற மொழிச் சொற்களைக் கலப்பின்றி ஒரு நிமிடம் தமிழில் பேச வேண்டும் என்று தொலைக்காட்சியில் போட்டி வைக்கிறார்கள்.  அதில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலோர், அரைநிமிடம் கூட ஆங்கிலம் தவிர்த்துப் பேச இயலாமல் போட்டியிலிருந்து வெளியேறுகிறார்கள் என்றால், பேச்சு வழக்கில் அம்மொழி எவ்வளவு தூரம் ஊடுருவியிருக்கிறது என்பது தெளிவாகிறதன்றோ?

பேச்சு மொழியில் இவ்வளவு தூரம் ஆங்கிலம் கலக்க, நம் மக்களின் ஆங்கில மோகமே முக்கிய காரணமாக இருக்கிறது.  அம்மா என்று குழந்தை அழைப்பதை விட மம்மி (பிணம்!) என்று தம்மை அழைப்பதைத் தானே, நம் தாய்மார்கள் விரும்புகின்றனர்?  குழந்தைகளுக்கு அழகு தமிழில் கவின், கயல் போன்ற பெயர்களைச் சூட்டாமல், ஆஷிக், அக்ஷ்யா என வாயில் நுழையாத வடமொழிப் பெயர்களைப் பெருமைக்குச் சூட்டிவிட்டுத் தினந்தினம் அப்பெயர்களைக் கடித்து மென்று துப்புபவர்கள் ஏராளம்!

தமிழர் திருநாளான பொங்கல் நாளன்று வாசலை அலங்கரிக்கும் கோலங்களில் கூட, நம் பெண்கள் ‘பொங்கல் வாழ்த்து!’ என எழுதுவதை விடுத்து, ‘ஹாப்பி பொங்கல்,’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதைக் கண்டு மனம் மிக வேதனைப்படுகிறது. 

ஆங்கிலம் படித்தோருக்கு மென்பொருள் துறைகளில் வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்ல அம்மொழி தெரிந்திருக்க வேண்டும் போன்ற காரணங்களைச் சொல்லி, பிள்ளைகளுக்குத் தாய்மொழிக் கல்வி மறுக்கப்பட்டு, ஆங்கிலவழிக்கல்வியே பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திணிக்கப்படுகிறது.  
 
பள்ளிகளில் மதிப்பெண் அதிகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டாம் மொழியாகக் கூடத் தமிழைப் படிக்க விரும்பாமல்,  ஹிந்தி, சம்ஸ்கிருதம், பிரெஞ்சு எடுத்துப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.  ஆங்கிலம் படிக்க வேண்டாம் என நான் கூறவில்லை.  தாய்மொழியோடு மற்ற மொழிகளிலும் புலமை பெறுவது மிகவும் நல்லது தான்.  ஆனால் ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிவிட்டு, நம் மொழியைக் கேவலமாகக் கருதித் தரையில் போட்டு மிதிப்பதைத் தான் தவறு என்கிறேன்.

என் பிள்ளைக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்பதை ஒரு சாதனையாகச் சொல்லும் பெற்றோரைக் கண்டால் எனக்கு அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.  தாய்மொழியைப் படிக்கத்  தெரியவில்லை என்பதற்காக வெட்கப்படாமல், வேதனைப்படாமல், பெருமையாகக் கூறும் இனம், உலகத்திலேயே தமிழினம் மட்டுமே.

கடைத்தெருவில் பெயர்ப் பலகைகளிலாவது தமிழ் இருக்கிறதா எனப் பார்த்தால்
அங்கும் ஆங்கிலமே கோலோச்சுகிறது:-

பத்மா ஹாஸ்பிடல், உமா நர்சிங் ஹோம், கிரவுன் மெடிக்கல்ஸ், லஷ்மி ஸ்டோர், பாலாஜி காஸ்ட் பிரைஸ் ஷாப், கணபதி புரொவிஷன் ஸ்டோர், எனப் பட்டியல் நீளுகிறது.

வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலாவது, பேச்சு வடிவம் சிறப்பாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

பிரபலங்களின் பேட்டியாகட்டும், கலந்துரையாடலாகட்டும், பங்கு பெறுபவர்களில் பெரும்பாலோர், லண்டனிலிருந்து நேரே குதித்து வந்தவர்கள் போல், தமிழில் பேசத்  திக்கித் திணறி, இடையிடையே ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி தம் ஆங்கிலப் புலமையைப் பறைசாற்றிக் கொள்வது தான் வழக்கமாக இருக்கிறது.  செய்தி வாசிப்பாளர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.  கடித்துக் குதறி இவர்கள் வாசிக்கும் தமிழ், நாராசமாக ஒலித்து நம் செவிகளைப் புண்ணாக்கி இரத்தம் சிந்த வைக்கிறது!

அடுத்துத் திரைப்படபாடல்கள் பக்கம் நம் பார்வையைத் திருப்பினால், அங்கும் நமக்குக் காத்திருப்பது ஏமாற்றமே:-

“பார்த்தேன் சிரித்தேன்
பக்கம் வரத் துடித்தேன்
அந்த மலைத்தேன்
இவரென மலைத்தேன்

“அத்திக்காய், அத்திக்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ”

போன்ற இலக்கிய நயமிக்கத்  திரைப்படப்பாடல்களைக் கேட்டு ரசித்த தமிழர்கள் இப்போது கேட்டுப் புல்லரிப்பது:-

வொய் திஸ் கொல வெறி, கொல வெறிடி
டிஸ்டன்ஸில மூணு மூணு   
மூணு கலரு வொயிட்         
வொயிட் பக்கிரவுண்டு நைட்
நைட் கலரு பிளாக்
வொயிட் ஸ்கின் கேர்ளு, கேர்ளு
கேர்ளு ஹார்ட் பிளாக்
ஐஸ் மீட்டு மீட்டு
மை ஃபியூச்சர் டார்க்”

இது போன்ற உலகத்தரம் வாய்ந்த தமிழ்ப்பாடல்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால், தமிழ்த் திரைப்படப் பாடல்களின் எதிர்காலம் மட்டுமல்ல, தமிழின் எதிர்காலமும் இருட்டாகவே இருக்கும்..

தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க, வரிச்சலுகை அளிக்கப்படுகிறது என்றால், எங்குப் போய் நாம் முட்டிக் கொள்வது?

எழுத்துத் தமிழ்:-
மக்களிடம் அதிகச் செல்வாக்கு பெற்ற எழுத்து ஊடகங்களிலோ, தமிழ் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.
விகடன் போன்ற ஒரு பாரம்பரியமிக்க வார இதழில் இடம்பெற்றிருக்கும் திரைப்பட விமர்சனத்தில் நம் தமிழ், எவ்வளவு அழகாய்க் கொஞ்சி விளையாடுகிறது பாருங்கள்!:-

“உதய்-சந்தானம் காமெடி, காதலி சேஸிங், டீஸிங், வெளிநாட்டுப்பாடல்கள், குடும்ப செண்ட்டிமெண்டுகள், என, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி,’யின் ஜெராக்ஸாகவே கதிர்வேலனைக் காதலிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.  காதல், காமெடி, செண்டிமெண்டு மசாலா பேக்கேஜில் மிக்ஸிங் சறுக்கியதில் இது கதிர்வேலனுக்கு மட்டுமே காதல்!”

குமுதம் வார இதழில், நடிகையின் பேட்டி:-

“டெக்னாலஜி ரொம்ப வளர்ந்து போச்சு.  நாம டெக்னாலஜியை ஒழுங்கா யூஸ் பண்ணிக்கணும்.  கதையோட ‘சோல்’ நமக்கு இம்ப்ரஸ் ஆகணும்.  ‘டமால், டுமீல்,’ கதையை என்கிட்ட  சொன்னப்ப, ரொம்ப எனர்ஜிடிக்கா இருந்தது.  உடனே எஸ் சொன்னேன்.  தட்ஸ் ஆல்”

நண்பர்களே! இன்றைய தமிழின் சீர் கெட்ட நிலைமைக்கு எடுத்துக்காட்டுகள் போதுமா? இன்னுங் கொஞ்சம் வேண்டுமா?

இதே குமுதம் இதழில் வெளியாகியிருக்கும் இரண்டு நகைச்சுவை துணுக்குகள்:-

1.  “நர்ஸூக்கு லவ் லெட்டர் கொடுக்கறப்போ, மிஸ்டேக் பண்ணிட்டேன்”
   
    என்னாச்சு?
   
    ஐ லவ் யூ சிஸ்டர்னு எழுதிட்டேன்பா

2.  “நைட்ல பைக்ல லைட் போடாம வர்றியே, திமிரா?
    
  “இல்ல சார். டெய்லி இரண்டு மணி நேரம், பைக்ல பவர் கட் சார்”

இணையத்தில் முகநூலில், டிவிட்டரில் நம் இளைய தலைமுறையினர் எழுதும் தமிழ் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை:- 

“ஐஸ்கிரீம் பார்லர்ல ஃப்ரெண்ட்ஸோட போறவங்கள்ள… எனக்கு வெனிலா போதும்னு சொல்றவன் தான், அநேகமா பில் கொடுப்பான்”

இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வணிக நாளிதழ், வார இதழ்களைத் தவிர சிறு பத்திரிக்கைகளில் தமிழ் ஓரளவு தரமாக இருக்கின்றது.
முன்னெப்போதையும் விட இப்போது தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை கூடுதலாயிருக்கிறது.   இவர்கள் சொல்ல விரும்பியதை, பகிர நினைப்பதை மேடையேற்ற, இணையம் இன்று களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.  எழுதுவோரில் பெரும்பாலோர் கூடுமானவரை பிறமொழிக் கலப்பின்றித் தரமாக எழுதுவதை வாசிக்கையில், சிறிது ஆறுதலாயிருக்கிறது. 
 
எனவே பேச்சுத்தமிழை விட எழுத்துத் தமிழின் நிலைமை நன்றாகவே இருக்கிறதுஇணையத்தில் தமிழ் இந்தளவுக்குச் சிறப்பாக இருப்பதற்கு, உலகமெங்கும் பரவியிருக்கும் ஈழத்தமிழர்களின் முயற்சியும் தமிழ்ப்பற்றும் முக்கிய காரணங்கள் என்றால் அது மிகையில்லை. 

தமிழின் எதிர்கால நிலை:-

ஒரு மொழி எவ்வளவு தான் இலக்கியச்செல்வம் பெற்றிருந்தாலும், பொது மக்களின் பேச்சுமொழியாக இருக்கும் வரை தான் அதற்கு உயிர் இருக்கும். ஒரு காலத்தில் ஐரோப்பா முழுதும் ஆட்சி செலுத்திய இலத்தீன், இன்று என்னவாயிற்று?  அது போல் சாமான்ய மக்களின் பேச்சு மொழியாக இல்லாமல் மெத்த படித்த மேல்தட்டு மக்களின் மொழியாக இருந்த சம்ஸ்கிருதமும்  வழக்கொழிந்து போயிற்று.
எனவே எழுத்தை விட,  பொது மக்கள் தினந்தினம் பயன்படுத்தும்  பேச்சு மொழிக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.  ஏனென்றால் பேச்சுவடிவமே ஒரு மொழியின் உயிர் மூச்சு.

பேச்சுத்தமிழின் இன்றைய நிலை தொடர்ந்து நீடிக்குமானால், தமிழின் எதிர்காலம் கேள்விக்குரியதே.

மெல்ல தமிழ் இனிச் சாகும்,’ என்ற பாரதியின் பயம் ஒரு வேளை உண்மையாகிவிடுமோ என நாம் அச்சம் கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
   
இரண்டாயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த செவ்வியல் மொழி என்று  பழம் பெருமை பேசிப் பேசியே காலத்தைக் கடத்தி விட்டோம்.  இனியும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் செயலில் இறங்க வேண்டிய தருணமிது.  
         
தமிழின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க முக்கியமாக நாம் என்ன செய்ய வேண்டும்? 
·         குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்.
·         ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், இரண்டு தமிழர்கள் சந்திக்கும் போது தமிழிலேயே பேச வேண்டும்.  தமிழில் பேசினால் கேவலம் என்ற நினைப்பை விட்டொழிக்க வேண்டும்.
·         பள்ளியிறுதி வகுப்பு வரையிலுமாவது குழந்தைகளுக்குத் தமிழ் கட்டாயமாகப் போதிக்க வேண்டும்.
·         கூடுமானவரை பேச்சில், எழுத்தில் ஆங்கிலச் சொற்களைக் களைந்து தமிழ்ச் சொற்களைக் கையாள வேண்டும்.
·         ஏற்கெனவே தமிழில் இருக்கும் சொற்களுக்குப் பதிலாக, மொழியாக்கம் செய்யப்பட்ட சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.  எ,கா.:-
அருவிக்குப் பதில் நீர்வீழ்ச்சி  (WATERFALL என்பதின் தமிழாக்கம்)
·         தமிழில் திறனாய்வு இல்லை.  ஆக்கப்பூர்வ விமர்சனங்கள் நம் படைப்புக்களைக் கூர் தீட்டிக்கொள்ள உதவும்,  எனவே நடுநிலையோடு விமர்சனம் செய்பவர்களிடம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குச் சென்று அவர்கள் மீது சேற்றை வாரி வீசக்கூடாது. 
·         நூல் வாசிக்கும் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கு வலியுறுத்த வேண்டும்.  பிறந்த நாள் போன்ற விசேட நாட்களில் புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்க வேண்டும்.
·         தரமான தமிழ்ப்புத்தகங்களை வாங்கித் தமிழ்ப் பதிப்பாளர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
·         பிரெஞ்சு மொழி இன்று அடைந்துள்ள உன்னத நிலைக்குக் காரணமான பிரெஞ்சுக்கழகம் போல் அரசியல் தலையீடு இல்லாத தமிழ்க்கழகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
·         தமிழ்த் தெரிந்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.  (விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன்.)


கா கா என்று கரையும் பறவையைக் காக்கா என்றோம்.  அதன் இயல்பை மாற்றிக் கூ கூ எனக் கூவ வைத்து விட்டால், அது குயில் ஆகிவிடுமா?
நகல் என்றுமே அசல் ஆக முடியாது.  இது தான் இயற்கை நமக்குச் சொல்லும் பாடம்.  கூ கூ என்று கூவும் காக்கை, காக்காவாகவும் இல்லாமல்,  குயிலாகவும் மாறமுடியாமல், முடிவில் இரண்டுங்கெட்டான் ஆகிவிடும். 

அது போலத் தமிழ் தான் நம் அடையாளம்.  தமிழ் பேசுவதால் தான் நாம் தமிழர்.  இதனைத் துறந்து ஆங்கிலேயருக்கு நிகராக அவரது தாய்மொழியைப் பேசுவதால், நாம் எந்நாளும் ஆங்கிலேயர் ஆகமுடியாது.  நமக்கு முகவரியைக் கொடுத்த, இரண்டாயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த வரலாற்றைக் கொடுத்த தமிழை மறந்தோம்  என்றால், நம் சொந்த அடையாளத்தை இழந்து இரண்டுங் கெட்டான் காக்கையைப் போல நாடோடிகளாகத் திரிய வேண்டிய நிலை ஏற்படும்.      

நம் மொழியை உருக்குலைக்காது, அதன் சிறப்பியல்புகளைச் சீரழிக்காமல் பாதுகாத்து, நம் குழந்தைகளின் கைகளில் ஒப்படைக்க வேண்டியது நம் கடமை.  இல்லையேல் நம் வருங்காலச் சந்ததியினர் நம்மை ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.


(பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபனின் எழுத்துப்படைப்புகள் தளத்தில் நடத்தப்படும் மாபெரும் கட்டுரைப்போட்டியில் பங்கேற்பதற்கான கட்டுரை)