நல்வரவு

வணக்கம் !

Sunday 2 November 2014

உடம்பெல்லாம் உப்புச்சீடை – சிறுகதை விமர்சனம் - 2

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பத்துமாதங்கள் வெற்றிகரமாக நடத்திய விமர்சனப் போட்டியின் நிறைவு விழாவின் இரண்டாம் நாளான இன்று புதிதாக ஜீவீ+வீஜீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:-


நான் செய்த மிக மிகச் சாதாரண உதவியை மிகப் பெரியதாகப் பாராட்டி எனக்கும் சிறப்பு விருது கொடுத்துக் கெளரவித்திருக்கும் கோபு சாரின் பெருந்தன்மைக்கும், தயாள குணத்திற்கும் இச்சமயத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

உடம்பெல்லாம் உப்புச்சீடை -(ஆசிரியர் வை.கோபாலகிருஷ்ணன்) - கதைக்கான இணைப்பு:-

என் விமர்சனம்:- 


கதையில் வரும் நீண்ட ரயில் பயணம் என்பது நம் வாழ்க்கைப் பயணத்தின் குறியீடு என்பது என் கருத்து.
இந்த விளம்பர யுகத்தில் தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவர், வேத வித்து, பெரிய மகான் போன்ற அடைமொழிகளுடன் கூடிய விளம்பரங்களை அடிக்கடிக் காண்பதாலோ என்னவோ, மகான் என்றால் காவியுடை தரித்திருப்பார், மழிக்கப்படாமல் நீண்டு தொங்கும் தாடியிருக்கும், கழுத்தில் உத்திராட்ச மாலை அணிந்திருப்பார் போன்ற அங்க அடையாளங்களை, நமக்கு நாமே கற்பித்துக்கொள்கிறோம்.
  . 
அதனால் தான் காவியுடையில் திரியும் பகற்கொள்ளைக்காரர்களை, வேடதாரிகளை ஞானிகள் என்று தேடிச் சென்று நீண்ட வரிசையில் பொறுமையாகக் காத்திருந்து பெரும் பொருளை இழப்பதுடன், சில சமயங்களில் நம் குடும்பப் பெண்களின் மானத்தையும் அடகு வைக்கிறோம்.
 
ஆனால் வாழ்க்கைப்பயணத்தில் நம் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்யும் சக பிரயாணியை, வெகு அருகாமையில் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி எளிமையாக நிறைகுடங்களாக இருக்கும் தத்துவ ஞானியை அடையாளம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்கிறோம்.

கண்ணுக்குத் தெரியும் புறத்தோற்றம் கண்டு எள்ளி நகையாடுகிறோம்;  வெறுத்து ஒதுக்குகிறோம்.  ஆனால் அக அழகைத் தரிசிக்கத் தெரியாமல், கண்ணிருந்தும் குருடராகிவிடுகிறோம்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள்.  அதனால் தான் தெய்வாம்ச குணங்கள் நிரம்பிய பெரியவரின் தூய்மையான அன்பைக் கள்ளங்கபட மில்லாத குழந்தை ரவி எளிதாக இனங்கண்டுகொள்கிறான். 

தமக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையைத் தாமே முன்வந்து பட்டாபி குடும்பத்துக்குக் கொடுத்து விட்டு, எண்பது வயதில் கஷ்டப்பட்டு மேலே ஏறும் முதியவரைக் கண்டு, அவர்களுக்குச் சற்றும் குற்ற வுணர்வோ, பச்சாத்தாபமோ ஏற்படவில்லை.

அவருக்கேற்பட்ட அவமானத்தை மறந்து, அவர்கள் தவறவிட்ட முக்கியமான பையை எடுத்துப் போய், அவர்களிடம் சேர்ப்பிக்கும் நேரத்திலும் கூட, நன்றியுணர்வுக்குப் பதிலாகப் ‘பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே,’ என்ற வருத்தம் தான் ஏற்படுகிறது பட்டாபிக்கு.

இக்காலத்துக் கடைந்தெடுத்த சுயநலவாதியின் பிரதிநிதியாக கதை முழுக்க வளைய வருகிறார் பட்டாபி.

அவர்களுக்கு உதவி செய்யுமுகமாகத் தமக்கு ஒதுக்கப்பட்ட கீழ் இருக்கையைத் தாமே முன் வந்து தாரை வார்த்து விட்டு, மேலே ஏறும் கணத்திலேயே அவர்களது உதாசீனம், அவமதிப்பு, நிந்தனை பற்றிய சிந்தனை சுமைகளைக் கீழே இறக்கி வைத்து விடுகிறார் பெரியவர். 

எனவே தான் பட்டாபி மன்னிப்புக் கேட்கும் போது, “நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவேயில்லை,” என்று அவரால் முழுமனதுடன் உண்மையாகச் சொல்ல முடிகிறது.  பெரிய மகான்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.
உள்ளே தேனினும் இனிய சுளைகள் கொண்ட, வெளியே கரடுமுரடாகத் தெரிகிற பலாப்பழத்தை அருவருத்து ஒதுக்குவதால், யாருக்கு நஷ்டம்?

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்’

‘தவறு செய்வது மனித இயல்பு,  மன்னிப்பது தெய்வீக குணம்’
‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’,

போன்ற நீதிகள் பலவற்றை வாசிப்பவர் மனதில் அலையலையாக ஏற்படுத்திச் சிந்திக்கத் தூண்டும் அருமையான கதை. 


(விமர்சனப்போட்டியில் நடுவர் ஜீ.வீ அவர்களால், இரண்டாம் பரிசுக்குத் தகுதி பெற்றது)
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-02-03-second-prize-winners.html

8 comments:

  1. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க மிகவும் சுவையாகவும் உள்ளது.

    இந்தத்தங்களின் இன்றைய பதிவு, தங்களின் வலைத்தள வாசகர்களையும், அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    நன்றியுடன் கோபு [VGK]

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு இருக்கும் நேர நெருக்கடியிலும் என் வலைப்பக்கம் வந்து கருத்து தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றி கோபு சார்!

      Delete
  2. தங்களின் விமர்சனத்தில் மிக அருமையான வரிகளாக நான் ரஸித்தவை:

    //அவர்களுக்கு உதவி செய்யுமுகமாகத் தமக்கு ஒதுக்கப்பட்ட கீழ் இருக்கையைத் தாமே முன் வந்து தாரை வார்த்து விட்டு, மேலே ஏறும் கணத்திலேயே அவர்களது உதாசீனம், அவமதிப்பு, நிந்தனை பற்றிய சிந்தனை சுமைகளைக் கீழே இறக்கி வைத்து விடுகிறார் பெரியவர். //

    //உள்ளே தேனினும் இனிய சுளைகள் கொண்ட, வெளியே கரடுமுரடாகத் தெரிகிற பலாப்பழத்தை அருவருத்து ஒதுக்குவதால், யாருக்கு நஷ்டம்?//

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    - கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. ரசித்த வரிகளை எடுத்துக்காட்டிப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  3. //திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பத்துமாதங்கள் வெற்றிகரமாக நடத்திய விமர்சனப் போட்டியின் நிறைவு விழாவின் இரண்டாம் நாளான இன்று புதிதாக ஜீவீ+வீஜீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:- http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html//

    தகவல் விளம்பரத்திற்கு மிக்க நன்றி.

    //நான் செய்த மிக மிகச் சாதாரண உதவியை மிகப் பெரியதாகப் பாராட்டி எனக்கும் சிறப்பு விருது கொடுத்துக் கெளரவித்திருக்கும் கோபு சாரின் பெருந்தன்மைக்கும், தயாள குணத்திற்கும் இச்சமயத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். //

    YOU ARE VERY WELL DESERVED FOR THIS AWARD, Madam.

    IT IS A GREAT & TIMELY HELP FOR ME.

    THANKS A LOT FOR ACCEPTING THE AWARD. ALL THE BEST !

    - GOPU [VGK]

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு விருது கொடுத்துக் கெளரவித்திருக்கும் உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சார்!

      Delete
  4. \\வாழ்க்கைப்பயணத்தில் நம் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்யும் சக பிரயாணியை, வெகு அருகாமையில் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி எளிமையாக நிறைகுடங்களாக இருக்கும் தத்துவ ஞானியை அடையாளம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்கிறோம்.\\ ஆடம்பரம் விளம்பரம் போன்ற படாடோபங்களுக்கு மத்தியில் எளிமை எடுபடாமல் போய்விடுகிறது. இன்றைய உலகின் அவசரப்போக்கையும் புறத்தோற்றத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடும் கீழான குணத்தையும் அருமையானதொரு விமர்சனத்தின் மூலம் எடுத்துரைத்தமை நன்று. இரண்டாம் பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இனிய பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை உள்வாங்கி ஆழமான பின்னூட்டம் அளித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கீதா! விமர்சன வித்தகியிடமிருந்து பாராட்டு என்பதால் மிகவும் மகிழ்ச்சி!

      Delete