நல்வரவு

வணக்கம் !

Monday 3 November 2014

அஞ்சலை – சிறுகதை விமர்சனம் - 3


வை.கோபு சாரின் விமர்சனப்போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.  விழாவின் மூன்றாம் நாளான இன்று, இரண்டு புதிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 



இப்போட்டித் தொடரில் தொடர்ச்சியாக பரிசுகள் பல வென்று சாதனை படைத்த பதிவர்களான சேஷாத்ரி மற்றும் கீதாமதிவாணன் ஆகியோரின் பெயர்களில் விருதுகள் அறிவிக்கப்பட்டுப் பலருக்கும் பரிசுகளை வாரி வழங்கியிருக்கிறார் வை.கோபு சார்..  
இப்பரிசு மழையில் நானும் நனைந்திருக்கிறேன்:- 

நாற்பதில் எட்டுப்பரிசுகள் மட்டுமே பெற்ற எனக்கும், விமர்சனவித்தகி கீதா பெயரில் ஏற்படுத்தப்பட்ட விருதையளித்துப் பெருமைபடுத்தியிருக்கிறார்.  அவருக்கு மீண்டும் என் நன்றி.

‘அஞ்சலை’ கதையின் இணைப்பு:-  (ஆசிரியர் வை.கோபாலகிருஷ்ணன்)

இனி என் விமர்சனம்:- 

நீதிமன்ற வளாகத்தில் மிகவும் சென்சிட்டிவான கேஸ் அன்று விவாதிக்கப்பட இருந்ததால், கூட்டம் நிரம்பி வழிந்தது.  பணத்திற்காக குழந்தையை விற்றமைக்காக அஞ்சலையும், வாங்கியதற்காக சிவகுருவும் குற்றவாளிக் கூண்டில்:-

“சிவகுரு… சிவகுரு …. சிவகுரு”

“அஞ்சலையின் ஏழைமையை உமக்குச் சாதகமாக்கிக் கொண்டு மூன்று லட்சம் பணம் கொடுத்துக் குழந்தையை வாங்கியதாக உம் மேல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.  அதற்கு நீர் என்ன பதில் சொல்கிறீர்?”

சிவகுரு:- 
“அஞ்சலைக்கு மூன்று லட்சம் பணம் கொடுத்தது உண்மைதான்.  ஆனால் அது குழந்தைக்கான விலையல்ல.  கணவனை இழந்து நிராதரவாக நிற்கும் இளம்பெண் இந்தச் சமூகத்தில் மானத்துடன் வாழ வேண்டுமானால், அதற்குக் கண்டிப்பாக பணம் வேண்டும்  நிரந்தரமான வருவாய் அவளுக்கு வேண்டும் என்பதற்காகவே உதவி செய்தேன்.” 

“அஞ்சலை மேல் யாருக்குமில்லாத கரிசனம், அப்படியென்ன உமக்கு மட்டும்?” 

“ஓராண்டு காலமாக எங்கள் வீட்டில் அவள் வேலை செய்தாள்.  நாணயத்தின் மறுபெயர் அஞ்சலை.  ஒருமுறை வீட்டைச் சுத்தம் செய்யும் போது கீழே  கிடந்த பதினைந்து பவுன் இரட்டைவடச் சங்கிலியை எடுத்துக் கொடுத்தவள்.   இன்றைக்குத் தங்கம் விற்கும் விலைக்கு அதனை அவள் திருடியிருந்தால், மூன்று லட்சத்துக்கு மேல் அவளுக்குப் பணம் கிடைத்திருக்கும். 

அவள் கணவன் தீவிரச் சிகிச்சை பிரிவில் இருந்தபோது, நான்காயிரம் கொடுத்து உதவியவன் நான்.  இதற்கு முன்னரும் பல தடவை அவளுக்கு நான் பண உதவி செய்திருக்கிறேன்.  கணவனை இழந்து குழந்தையை வைத்துக் கொண்டு தவித்த அவளுக்கு உதவி செய்வதற்காகவும், நல்ல வளமானதொரு எதிர்காலத்தை அவள் குழந்தைக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் அவனை நான் தத்தெடுத்தேன். 

என்னிடமிருக்கும் சொத்துக்கு ஒரு சேரிக் குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.   எங்கள் உறவுக்காரர்களில் பலர் தங்கள் குழந்தைகளை எனக்குத் தத்துக் கொடுக்க மாட்டோமா எனத் தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கிறார்கள்.  சேரிக்குழந்தை என்று தெரிந்தால் என் மனைவி அவனைத் தன் குழந்தையாக ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவாளோ என்ற பயத்தினால் தான் என் மனைவி மல்லிகாவிடம் உண்மையைச் சொல்லக் கூடாது என அஞ்சலையிடம் சத்தியம் வாங்கினேன்.  

இக்காலத்தில் அஞ்சலையைப் போல் நம்பிக்கையான, நாணயமான வேலைக்காரி கிடைப்பது மிகவும் அபூர்வம்; அதுவுமில்லாமல் அவள் எங்கள் வீட்டில் வேலை செய்வதால் தன் குழந்தையைப் பிரிய வேண்டிய அவசியமிருக்காது;   அவனது வளர்ச்சியைக் கூட இருந்தே பார்த்து மகிழ முடியும்.  அவன் விருப்பப்படும் துறையில் படிக்க வைத்து வளமான எதிர்காலத்தை அவனுக்கு என்னால் அளிக்க முடியும். 

மேலும் அக்குழந்தையின் வரவு எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பன்மடங்கு பெருக்கியிருக்கிறது.  என்னுடைய சொத்துக்கு ஒரே வாரிசு அவன் தான்.  அவன் மீது நானும் என் மனைவியும் உயிரையே வைத்திருக்கிறோம்.  குழந்தையைக் கொடுக்கச் சொல்லி அஞ்சலையை நான் கட்டாயப்படுத்தவில்லை.   முழு சம்மதத்துடன் தான் அவள் குழந்தையை என்னிடம் கொடுத்தாள்.  எனவே அவளை ஏமாற்றிக் குழந்தையை வாங்கினேன் என்றெல்லாம் கூறித் தயவு செய்து அவனை எங்களிடமிருந்து பிரித்து விடாதீர்கள் நீதிபதி அவர்களே!”

“சரி நீங்கள் போகலாம்.”

“அஞ்சலை….   அஞ்சலை….  அஞ்சலை…”

“பணத்துக்காக  குழந்தையை விற்றதாய் உம் மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  அதற்கு உம்முடைய பதில்?”

“கும்பிடறேனுங்க சாமி!  சிவகுரு ஐயா எனக்குத் தெய்வம் மாதிரிங்க.  நான் கஷ்டப்பட்ட சமயத்திலெல்லாம், அவருதாங்க அப்பப்ப பணம் கொடுத்து உதவினாருங்க.  எம் புருஷன் ஆஸ்பத்திரியில உயிருக்குப் போராடிக்கிட்டிருந்தப்ப, அவரு தாங்க பெரிய மனசு பண்ணி நாலாயிரம் ரூபாய் கொடுத்தாரு.  எம் புருஷனும் போனபொறவு இந்தக் கொழந்தையை வைச்சிக்கிட்டு என்னச் செய்யபோறோம்னு நான் கதிகலங்கி நின்னப்ப, இந்த ஐயா தான் தெய்வம் மாதிரி வந்து அந்த ரோசனையைச் சொன்னாருங்க.   நானும் ஒரு மணி நேரம் நல்லா ரோசிச்சிப் பார்த்தேனுங்க.  அது தான் நல்லதுன்னு  மனசுக்குப் பட்டதால சரின்னு ஒத்துக்கிட்டேங்க..”

“எது நல்ல யோசனை?  பணத்துக்காகப்  பெத்த கொழந்தையை விக்கிறதா?  நீயெல்லாம் ஒரு தாயா?  ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு, தாய்மையையே கேவலப்படுத்திட்டியே?”

“சாமி!  என்னென்னமோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க?  நீ ஒரு தாயான்னு கேட்கிறீங்க?  மொதல்ல நான் ஒரு பொண்ணு.  அப்புறம் தான்  ஒரு தாயி.  என் கற்பைக் காப்பாத்திக்கிட்டு மானத்தோடு நான் வாழனும்னா எனக்குப் பணம் வேணும்.  புருஷனை இழந்துட்டுத் தனிமரமா நிக்கிற எனக்கு உதவி செய்ய வந்தவங்க, எல்லாருமே என் மானத்தைத்  தான் விலையாக் கேட்டாங்க. 

ஒரு பொண்ணுக்கு உயிரை விடவும் மானம் தாங்க பெரிசு.  மானத்தை இழந்துட்டுக் குழந்தையோடு வாழறதை விட, மானத்துக்காக குழந்தையை இழக்கிறதுல தப்பு இல்லேன்னு நான் முடிவு செஞ்சேங்க.  என் மனசுக்குச் சரின்னு பட்டதை நான் செஞ்சேனுங்க.  பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க நெறையா பணம் வேணும்.  அது எங்கிட்ட இல்லீங்களே!  என்கிட்ட ஒரு தற்குறியா வளர்றதை விட அங்க இருந்தா என் புள்ளை, நாளைக்கு ஒரு டாக்டராவோ இஞ்சீனியராவோ ஆவான்.  அது எனக்கும் பெருமை தானுங்களே சாமி? 

எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க சாமி.  சந்தோஷமா  ஏத்துக்கிறேன்.  ஆனா நான் கஷ்டப்பட்ட நேரத்திலெல்லாம்  தெய்வம் மாதிரி உதவி பண்ணுன சிவகுரு ஐயாவை விட்டுடுங்க சாமி.”          

“சரி.  நீர் போகலாம்.”

இருவாரங்களுக்குப் பிறகு:-

நீதிபதி:-- மக்களுக்காகத் தான் சட்டங்களே ஒழிய சட்டங்களுக்காக மக்கள் இல்லை.  பணத்துக்காக குழந்தை கைமாறிய இந்த வழக்கில் இருவருமே பரஸ்பரம் நன்மையடைந்திருக்கின்றனர், எந்த விதக் கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லாமல், தம் குழந்தையைத் தத்துக் கொடுக்க இப்பெண் முன் வந்திருக்கிறார்.  குழந்தையின் மீது சிவகுரு குடும்பத்தினர் அன்பைப் பொழிகிறார்கள்.  மேலும் ஒரு தாழ்த்தப்பட்ட குழந்தையின் வளமான எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இருவருமே குற்றமற்றவர்கள் என்றும் சிவகுருவிடம் குழந்தை வளர்வதில் ஆட்சேபணை ஏதுமில்லை என்றும் தீர்ப்பளித்து இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன். 

மிகவும் சென்சிட்டிவான இவ்வழக்கை இம்மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து தீர்ப்பு சொல்ல இதற்குமுன் இல்லாத அளவுக்கு என்னைச் சிந்திக்க வைத்த வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டுகிறேன்!.  

(இது நடுவர் ஜீ.வீ அவர்களால் மூன்றாம் பரிசுக்குத் தகுதி பெற்றது)


10 comments:

  1. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க மிகவும் சுவையாகவும் உள்ளது.

    இந்தத்தங்களின் இன்றைய பதிவு தங்களின் வலைத்தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    நன்றியுடன் கோபு [VGK]

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு சார்!

      Delete
  2. கதையின் சம்பவங்களை கோர்ட் சீனாக மாற்றி மிகவும் வித்யாசமான முறையில் விமர்சனம் எழுதியிருப்பது ரஸிக்கத்தக்கதாக உள்ளது.

    //நீதிபதி:-- மக்களுக்காகத் தான் சட்டங்களே ஒழிய சட்டங்களுக்காக மக்கள் இல்லை. பணத்துக்காக குழந்தை கைமாறிய இந்த வழக்கில் இருவருமே பரஸ்பரம் நன்மையடைந்திருக்கின்றனர், எந்த விதக் கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லாமல், தம் குழந்தையைத் தத்துக் கொடுக்க இப்பெண் முன் வந்திருக்கிறார். குழந்தையின் மீது சிவகுரு குடும்பத்தினர் அன்பைப் பொழிகிறார்கள். மேலும் ஒரு தாழ்த்தப்பட்ட குழந்தையின் வளமான எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இருவருமே குற்றமற்றவர்கள் என்றும் சிவகுருவிடம் குழந்தை வளர்வதில் ஆட்சேபணை ஏதுமில்லை என்றும் தீர்ப்பளித்து இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்.

    மிகவும் சென்சிட்டிவான இவ்வழக்கை இம்மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து தீர்ப்பு சொல்ல இதற்குமுன் இல்லாத அளவுக்கு என்னைச் சிந்திக்க வைத்த வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டுகிறேன்!. //

    இறுதியில் தங்களால் எழுதப்பட்டுள்ள நீதிபதியின் தீர்ப்பு வரிகள் முத்திரை பதிப்பதாக உள்ளன. நியாயமான தீர்ப்பாகவும் உள்ளது. மிகவும் ரஸித்து மகிழ்ந்தேன்.

    பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. "இறுதியில் தங்களால் எழுதப்பட்டுள்ள நீதிபதியின் தீர்ப்பு வரிகள் முத்திரை பதிப்பதாக உள்ளன. நியாயமான தீர்ப்பாகவும் உள்ளது. மிகவும் ரஸித்து மகிழ்ந்தேன்."
      பிடித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கு நன்றி சார்!

      Delete
  3. //வை.கோபு சாரின் விமர்சனப்போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. விழாவின் மூன்றாம் நாளான இன்று, இரண்டு புதிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    http://gopu1949.blogspot.in/2014/11/part-2-of-4.html
    http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html//

    அவ்விடம் நடைபெற்றுவரும் அன்றாட விழா நிகழ்ச்சிகளைப்பற்றி, ரன்னிங் கமெண்டரி போல இவ்விடம் குறிப்பிட்டுச் சொல்லிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.

    என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள், மேடம்.

    >>>>>

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. விமர்சனப்போட்டியின் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, என் பங்குக்கு இந்தப் பதிவுகளைத் துவக்கினேன். எனவே விழா பற்றிய அறிவிப்புகளைத் தினமும் வெளியிட்டு விட்டு என் விமர்சனத்தைத் தொடர்கிறேன். நன்றி சார்!

      Delete
  4. //இப்போட்டித் தொடரில் தொடர்ச்சியாக பரிசுகள் பல வென்று சாதனை படைத்த பதிவர்களான சேஷாத்ரி மற்றும் கீதாமதிவாணன் ஆகியோரின் பெயர்களில் விருதுகள் அறிவிக்கப்பட்டுப் பலருக்கும் பரிசுகளை வாரி வழங்கியிருக்கிறார் வை.கோபு சார்..
    இப்பரிசு மழையில் நானும் நனைந்திருக்கிறேன்:-

    http://gopu1949.blogspot.in/2014/11/part-2-of-4.html

    நாற்பதில் எட்டுப்பரிசுகள் மட்டுமே பெற்ற எனக்கும், விமர்சனவித்தகி கீதா பெயரில் ஏற்படுத்தப்பட்ட விருதையளித்துப் பெருமைபடுத்தியிருக்கிறார். அவருக்கு மீண்டும் என் நன்றி.//

    தாங்கள் எட்டை எட்டிப்பிடித்ததும்தான் எனக்கு இதுபோல ஒரு NORMS FIX செய்யவே தோன்றியது.

    அதற்குமுன் 10 என வைக்கலாமா என என் மனதில் யோசித்துக்கொண்டே இருந்தேன். அதனால் தான் 9 வெற்றிகளை எட்டிப்பிடித்திருந்த ஒருவரை 10 ஆக ஆக்குங்கோ என தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தேன்.

    மேலும் எட்டு என்பது எனக்கு மிகவும் ராசியான எண் - என் ஆங்கிலப்பிறந்த தேதியும் எட்டுதான். அதனாலும் எட்டு அல்லது எட்டுக்கு மேற்பட்ட வெற்றி பெற்றவர்கள் என அதனை அப்படியே மாற்றிவிட்டேன். 8/40 = 20% எனவும் ஆகிறது. :)))))

    மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    நன்றியுடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. என் வெற்றி மிகச் சாதாரணமாக இருந்தும், எனக்கு இரு விருதுகளைக் கொடுத்து மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். உங்கள் பரந்த மனப்பான்மைக்கும் தயாள குணத்திற்கும் மீண்டும் என் நன்றி!

      Delete
  5. அஞ்சலை சிறுகதையின் விமர்சனத்தை ஒரு வழக்காடுமன்ற வாதங்களாய் முன்வைத்து வித்தியாசமாக எழுதியது சிறப்பு. உண்மையிலேயே ஒரு வழக்காடுமன்றத்தில் இருப்பது போன்ற உணர்வை உண்டாக்கிய எழுத்து. சிந்திக்கவைத்த பல அம்சங்களைக் குறிப்பிட்டு நல்லதொரு விமர்சனமெழுதி பரிசுக்குத் தேர்வானமைக்கும் கீதா விருதினைப் பெற்றமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. போட்டியில் அதிகப்படியான வெற்றிகளைக் குவித்த உன் பெயரில் எனக்கு விருது கிடைத்திருப்பதில் அளவிட முடியா ஆனந்தம் கீதா! பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!

      Delete