நல்வரவு

வணக்கம் !

Friday, 27 February 2015

பறவை கூர்நோக்கல் (BIRD WATCHING) – 1 - கரிச்சான்


நான் ஒரு பறவை பிரியை.  சிறு வயது முதலே பறவைகளைக் கூர்ந்து கவனிப்பது (BIRD WATCHING) மிகவும் பிடித்தமான செயல். 

நம் மண்ணில் வாழும் பறவைகளைப் பற்றி, முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்ற வருத்தம், பல ஆண்டுகளாக இருந்தது.

அக்கம் பக்கத்தில் புதிதாகப் பார்க்கும் பறவையின் சரியான பெயர் கூடத் தெரியவில்லை; ஆளாளுக்கு ஒரு பெயர் சொல்வதால் எது சரி, எது தவறு? என்பதில் குழப்பம்.

தமிழில், ஆங்கிலத்தில் இருப்பதைப் போலப் பறவைகளைப் பற்றிய தரமான புத்தகங்களும் இல்லை.   
    
இச்சூழ்நிலையில் ப.ஜெகநாதன் & ஆசை எழுதி க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள 'பறவைகள் அறிமுகக் கையேடு,' என்ற புத்தகம், என் நீண்ட நாள் ஆசையைப் பூர்த்தி செய்து, என் சந்தேகங்களைத் தீர்த்து வைத்துள்ளது. 

நம்மூரில் பரவலாகக் காணப்படும் 88 பறவைகள் பற்றிய விளக்கத்தைப் புகைப்பட கலைஞர்கள் எடுத்த நேர்த்தியான 166  வண்ணப் படங்களுடனும், அவற்றைப் பற்றிய சிறு குறிப்புடனும் கொடுத்திருப்பது இக்கையேட்டின் சிறப்பு.

பறவை கவனிப்பின் (BIRD WATCHING) அவசியம் பற்றியும், அதில் ஈடுபடுவோர் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் இது எடுத்துரைக்கிறது. 
தமிழகப் பறவைகள் குறித்த ஆய்வுக்கு உதவக்கூடிய வகையில் பறவையின் பெயர், அடைப்புக்குறிக்குள் ஆங்கிலப் பெயர், அதன் குடும்பம், வாழ்விடம், அதன் சிறப்புக்கள் போன்ற விபரங்களும் இதில் உள்ளன. 

இதில் இருந்த படங்களைப் பார்த்த பின், நான் ஏற்கெனவே பார்த்திருந்த சில பறவைகளின் சரியான பெயர்களை அறிந்து கொண்டேன். 

நான் கவனித்த பறவைகள் பற்றிய விபரங்களை, இக்கையேட்டின் உதவியோடு சரியாக அடையாளங் கண்டு, இத்தொடரில் அவ்வப்போது பகிர எண்ணியுள்ளேன்.

இப்பதிவை வாசிப்பவர்கள், பறவைகளைச் சுலபமாக அடையாளங் காண படங்களை இணையத்திலிருந்து எடுத்து வெளியிட இருக்கிறேன்.  (நான் அலைபேசியில் எடுக்கும் படங்கள், அவ்வளவு தெளிவாக இருக்காது என்பதால்)  
  
பதிவை வாசிக்கும் நண்பர்கள், தங்கள் பகுதியில் இப்பறவைக்கு வேறு பெயர்கள் இருந்தாலோ, இதனைப் பற்றி வேறு விபரங்கள் தெரிந்தாலோ அவசியம் பின்னூட்டமிட்டு, அதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

பின்னாளில் நம் பறவைகள் குறித்த ஆய்வுக்கு, அது உதவி செய்யும் என்பதால் தான் இந்த வேண்டுகோள்!

முதலாவதாக அண்மையில் நான் பார்த்த கரிச்சான்.  (BLACK DRONGO)கரிச்சான் என்றவுடன் உங்களுக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் நினைவுக்கு வருகிறாரா?

ஆம்.  கு.ப.ரா.வின் புனைபெயர்களுள் ஒன்று ‘கரிச்சான்,’. 

கு.ப.ராவின் எழுத்தால் கவரப்பட்ட எழுத்தாளர் நாராயணசாமி, ‘கரிச்சான் குஞ்சு,’ என்ற புனைபெயரில் எழுதினார்.  இவர் எழுதிய ‘பசித்த மானுடம்,’ புதினம் மிகவும் புகழ் பெற்றது.

பறவையைப் பற்றிச் சொல்லாமல், எழுத்தாளரைப் பற்றிச் சொல்வதும்  ஒரு காரணமாகத் தான்.   

தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இருவர், இப்பறவையின் பெயரைப் புனைபெயராய்ச் சூடியிருப்பது, இப்புள்ளுக்கும் பெருமை தானே?

கரிச்சானை ஏற்கெனவே பல முறை பேருந்தில் பயணம் செய்யும் போது, பார்த்திருக்கிறேன்.  மின்சார கம்பிகளில் ஒய்யாரமாக அமர்ந்து ஊஞ்சல் ஆடியபடி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். 

இதற்கு இரட்டை வால்குருவி என்ற பெயரும் உண்டு.   வாலில் ஒரு பிளவு இருப்பதால், இப்பெயர் வந்திருக்கலாம். 

இது கடந்த வாரம் முதன் முறையாக, எங்கள் தோட்டத்தின் பின்பக்கம் ஒரு கம்பின் மேல் வந்து அமர்ந்தது.  சிறிது நேரத்துக்கொரு முறை பிரகாரம் சுற்றுவது போல், கம்பை வட்டமிட்டுப் பறப்பதும், பின் அதே இடத்தில் வந்து அமர்வதுமாக இருந்தது. குறைந்தது பத்து தடவை களாவது இவ்வாறு செய்திருக்கும்.  பின் மேலெழும்பி பறந்து மறைந்து விட்டது. 

இப்பறவை பற்றிக் கையேட்டிலும், இணையத்திலும் திரட்டிய சுவையான தகவல்கள்:-

இது சமயத்தில் வல்லூறு (SHIKRA) போலக் குரல் கொடுத்து,  மைனா போன்ற பறவைகளைப் பயமுறுத்தி ஓட்டி விட்டு, அதன் இரையைப் பிடுங்கித் தின்னும் இயல்புடையது. 

இது அடைகாக்கும் காலத்தில் தனக்கென்று ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, குஞ்சுகளை அபகரிக்கக் கூடிய காக்கா போன்ற பெரிய பறவைகளைத் தன் எல்லைக்குள் வராதவாறு விரட்டியடித்து விடுமாம்.  எனவே இதற்கு ராஜ காகம் என்ற பெயரும் உண்டு (KING CROW).

எனவே இது அடைகாக்கும் காலத்தில் கொண்டைக்குருவி (RED VENTED BUL BUL) போன்ற சிறு பறவைகள், கரிச்சானைக் காவல் தெய்வமாகக் கொண்டு, இதன் எல்லைக்குள் தைரியமாகக் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்குமாம்.    

பிற பறவைகளைப் போலவே ஒலியெழுப்புவதற்கு ஒப்புப்போலி ஒலியெழுப்புதல் (MIMICRY) என்று பெயர். 

இதனைக் கருவாட்டு வாலி என்றும் சிலர் சொல்கின்றனர். மேலே குறிப்பிட்ட கையேட்டில், இந்தப் பெயர் கொடுக்கப்படவில்லை யென்பதால், இதனை இப்படியும் அழைக்கலாமா எனச் சரியாகத் தெரியவில்லை.  

வாசிக்கும் அன்பர்களுக்குத் தெரிந்தால் அவசியம் சொல்லுங்கள்.                                
 (கரிச்சான் படம் - இணையத்திற்கு நன்றி)

Wednesday, 25 February 2015

என் பார்வையில் – ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்,’ – கவிதைகள்

       என் பார்வையில் – ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்,’ –                ஆசிரியர்:-  உமா மோகன்
       வெளியீடு:அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம்.                          முதல் பதிப்பு:- டிசம்பர் 2014
       இவரது பிற நூல்கள்:- டார்வின் படிக்காத குருவி – கவிதை              வெயில் புராணம் -  பயண அனுபவத்தொகுப்பு

இந்நூலில் நான் ரசித்த, என்னைப் பாதித்த கவிதைகள் பற்றி, உங்களோடு பகிர்ந்து கொள்ளவே, இப்பதிவு.

உமா மோகன் கவிதைகளில் பாரதி, பாவேந்தர் மூச்சுக் காற்று படிந்துள்ளது; கால்களில் இந்த மகாகவிகள் மிதித்த புழுதி மண்.  கணிணி யுகச் சூறாவளிக்கு நடுவேயும், அடக்கமான இனிய வாழ்க்கை உண்டு என்பதைக் காட்சிப்படுத்தும் கவிதைகள் இவருடையவை,” என்கிறார் வாழ்த்துரை வழங்கியிருக்கும் கவிஞர் புவியரசு அவர்கள்.

இத்தொகுப்பில் பெண்ணியம் பேசும் கவிதைகளில் என்னை வெகுவாகக் கவர்ந்தது, ‘சக்தி தரிசனம்’ எனும் கவிதை:.

“எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்,” என்று பாரதி அன்றே பொட்டில் அறைந்தாற் போல் முழங்கிய பின்னரும், பெண்ணைப் போகப் பொருளாக, அழகுப் பதுமையாக மட்டுமே பார்க்கும் ஆணின் பார்வை, இன்னும் முழுமையாக மாறவில்லையென்பது தான், இக்கவிதை உணர்த்தும் கசப்பான உண்மை:-

நிறங்களால் கொண்டாடப் பெறுபவள்
அணிகளால் அழகு சேர்ப்பவள்
பூச்சுகளால் பிரகாசிப்பவள்
இவ்வளவு தான் நான் உனக்கு.”

தலைமுறைகள் பல கடந்த போதும், பெண்ணென்பவள், ஆணின் கோலுக்கு ஏற்றபடி ஆடும் குரங்காகத் தான் இன்னும்:--
தலைமுறை தாண்டிய பின்னும்
“குரங்கு போல்
உணர்வதைத் தடுக்க முடியவில்லை
உன் குச்சியின்
அசைவுக்குத் தக
குந்தியிருக்கும் போதும்
குதித்தாடும் போதும்….”

பெண்ணுக்கு எந்த வயதில், எந்த இடத்தில், ‘நலம் அழிக்க மாட்டோம்',என்ற பத்திரம் கிடைக்கும்?' என்று தவிப்புடன் கேட்கிறார் கவிஞர்!  (தவிப்பின் குரல்)

பெண்ணின் உடல் மொழி சம்பந்தப்பட்ட கருத்துக்கள் தாம், இன்றைய பெண்ணியத்தில் முக்கியமாகப் பேசப்படுகின்றன என்பதை உறுதிப் படுத்தும் விதமாக, ‘அவளுக்கும் அப்படித்தான்,’ என்ற கவிதை, இரத்தக்  கசிவு, நாப்கின் தாண்டிவிடக்கூடாதே,’ எனப் பெண்களுக்கே உரித்தான பதைப்புடன் காத்திருக்கும், நடிகையைப் பற்றிப் பேசுகிறது. 

எல்லாவற்றிற்கும் மேலாகப் பெண்குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்யும் சமுதாயக் கொடுமையினைச் சாடும் ‘நெஞ்சு இரண்டாக,’ எனும் கவிதை, புண்பட்ட நம் நெஞ்சை, வாளைக் கொண்டறுத்து இரணகள மாக்குகிறது.
தாம் அழுது கொண்டே இதனை எழுதியதாக உமாமோகன் இந்நூல் வெளியீட்டின் போது தெரிவித்தார்:-
குழந்தைப் பருவத்திலேயே
குறுவாள் கொடுத்திடவா
தவழும் போதே
தற்காப்புக் கலை சொல்லவா?”

 ‘பொழுது விடிகிறது,’ என்ற கவிதையில், அதிகாலையில், இயற்கையில் மனமொன்றி ரசிக்கும் கவிஞரின் கவனத்தை, வலுக்கட்டாயமாகத் திசை திருப்பி, விசில் கொடுத்து அடுப்பங்கரைக்கு அழைக்கிறது குக்கர்! 

தான் ஆசைப்படுவதைச் செய்யவிடாமல், விரும்பியபடி பொழுதைக் கழிக்க முடியாமல்,  படைப்பாளிப் பெண்ணொருத்தியின் பெரும் பான்மையான பொழுதுகளை அநியாயமாகக் களவாடும், சமையலறையின் குறியீடாக குக்கரைப் பயன்படுத்திச் சோகத்தை வெளிப்படுத்தியிருக்கும் இக்கவிதையை, நான் மிகவும் ரசித்தேன்.
அதனை நீங்களும் சுவைக்கக் கொஞ்சம்:-
பட்டாம்பூச்சியைப் போல
வெயில் காய முடிந்தால்
……….
அதோ ஒடிந்து தொங்கும் கிளையில்
அச்சமின்றி ஊஞ்சலாடும்
காக்கைக்கு ஜோடியாக முடிந்தால்….
ம்ம்ம்.
குக்கர் ஐந்து விசில் கொடுத்தாச்சு.”

‘படைப்பாளி,’ என்ற கவிதையிலும், காய்கறி, கீரை ஆகியவற்றை ஆய்ந்து அடுக்கிய பின், கவிதை படைக்கவியலாமல், ஏடு மூடும் வேதனையைப் பகிர்கிறார்.     

பெண்ணியக் கவிதைகளுக்கு அடுத்தபடியாக சமூக நலனில் அக்கறை கொண்ட கவிஞரின் பாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன;

போன தலைமுறையில்
வைத்த பலாக்கன்றாக
ப்ரியம்
வளர்ந்து கொண்டிருக்கிறது
வன்மமோ
கருவைக்காடு  (வளர்ச்சி)

விஷமிக்க வேலிகாத்தான் என்று சொல்லப்படும் கருவை மரம் காடாகப்  பல்கிப் பெருகி நாட்டை ஆக்ரமித்தது போல், வன்மமும் குரோதமும் வளர்கின்றன;  ஆனால் அன்பும், மனித நேயமும், தலைமுறை தாண்டியும்  இன்னும் வளராத பலாக் கன்றாகவே…..

உணவு மேசையில் அமர்ந்து சாப்பிட்டவாறே, தொலைக்காட்சியில் ரத்தம் தெறிக்கும் விபத்து, வக்கிரம், ஆபாசம், வன்புணர்வு கொடூரம் நிறைந்த காட்சிகளை எவ்வித அதிர்வுமின்றி மெளனமாகக் காணும் மனிதர்களைப் பார்க்கும் போது,  உணர்வு ‘மரத்’துப் போன இவர்களும், நானும் ஒன்றே என்று நினைக்குமாம் மேசை;

ஆனால் என்றாவது உணவில் ஒரு கல் உப்பு குறைந்து விட்டால் விழும் வசவையும் , கண்ணீரையும் பார்க்க நேரும் போது தான்,  “அடடா! இவர்களும் நானும் ஒன்றல்ல; இவர்கள் உயர்திணையைச் சேர்ந்தவர்கள்,” என்ற ‘உண்மை’யை உணருமாம்:-  (உயர்திணைப்பிறப்பு)
“உணவில் குறையும்
ஒரு கல் உப்பைச் சகியாப் பொழுதுகளில்
விழும் வசவும், கண்ணீரும்
மீண்டும் திணை காட்டும்”

நான் யார் என்கிற தேடல் தான், தேடலில் தலையாய தேடல் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, இத்தொகுப்பில் இரண்டு கவிதைகள் உள்ளன:-
நான் என் பெயரிலும் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
(‘இல்லாமல் இருப்பதுவும் இருப்பே,’) 
எனக்குத் தெரியாத நான்
எங்கோ இருக்கிறேன்
எங்கிருக்கிறேன்
இருக்கிறேனா? (‘எனக்குத் தெரியாத நான்’) 

யாரிடமும் சொல்லாமல், வேப்பமரத்தை வெட்டி விட்டார்கள் என்ற  சோகச் செய்தியைச் சொன்ன போதிலும், அநித்தியம் கவிதையின்
கீழ்வரிகளில் இழையோடும் நகைச்சுவையைப் பெரிதும் ரசித்தேன்:-

ஜன்னல் திறந்து
மூச்சுப் பயிற்சியில்
முழு மரத்தையும்
இழுக்கப் பார்க்கும்
மாடி வீட்டுப் பாஸ்கரிடம்

தோழி மஞ்சள்கறுப்பி பட்டாம்பூச்சியுடன் கழித்த இனிய நாட்களை நினைவு கூர்ந்து, இடையில் மறந்தமைக்காக, அவளிடம் மன்னிப்பு கேட்கத் துடிக்கும் என் தோழி பாடல் வெகு அருமை!

எல்லாருக்காகவும் வேண்டுதல் செய்ய மனமின்றி, தன் வீடு, தன் குடும்பம், தன் பிள்ளைகள் எனக் குறுகிய மனப்பான்மை பெருகி விட்டாலும், வன்மம் பெருகி மனித நேயம் அருகி விட்டாலும், ஒற்றை வயலின் இழுப்பில் உயிர் துளிர்க்க வைப்பவன், பெயரறியாத் தெய்வத்துக்காக சம்பங்கி பூக்கள் தொடுப்பவன் என நம்பிக்கையுடன் வாழ இன்னும்  இருக்கிறது உலகம்  (பிட்சாந்தேஹி) என்று நேர்மறை எண்ணத்தை, வாசகர் மனதில் விதைக்கும் கவிஞர் பாராட்டுக்குரியவர்!

இது போல் இன்னும் சிறந்த ஆக்கங்களைத் தமிழுக்கு இவர் அளிக்க வேண்டும் என்று உமா மோகனை வாழ்த்துகிறேன்!

பாராட்டுக்கள் தோழி! 

Thursday, 19 February 2015

என் பார்வையில் - 'அன்னபட்சி' - கவிதைகள்

‘அன்ன பட்சி’ - கவிதைகள்
ஆசிரியர்:- தேனம்மை லெஷ்மணன்
இவரது வலைப்பூ:- சும்மா
முதல் பதிப்பு:- ஜனவரி 2014
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம் கைபேசி:- 9994541010
இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.  ஏற்கெனவே ‘ங்கா’ என்ற தொகுப்பு வெளிவந்துள்ளது. 

சக்தியின் சூலத்தையும் பெண்ணின் சூல்பையையும் ஒருங்கிணைத்த சூலும் சூலமும்,’ என்ற இவர் கவிதை, பெண்ணிய எழுத்தில் ஒரு மைல்கல்; சக்தி வடிவமான பெண், சூலத்தை ஏந்திவிட்டால் வீச்சை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான், அவளைச் சிலையாக்கிக் கையில் சூலம் தந்து, கருவறைக்குள் நிறுத்தியிருக்கிறோம் என்கிறார் திருமதி எம். ஏ.சுசீலா, தம் அணிந்துரையில்:-

“கருவறையில் சக்தி பீடமாய் நிலை நிறுத்தப்பட்டு
ஒரு நாள் மட்டும் தேரோடும்
அவளுக்குப் புரிகிறது
பேரெழில் சக்தியை ஒரு நாள் கூட
யாராலும் தாங்க முடியவில்லை என்று.”

இத்தொகுப்பில் கடவுளை நேசித்தல், புத்தகங்கள், பொம்மைகள் உட்பட பாடுபொருட்கள் பலவற்றில் கவிதைகள் இருந்தாலும், தற்காலப் பிரச்சினைகளான சுற்றுச்சூழல் மாசுபடுதல், இயற்கையைப் பேணுதல், இலங்கை பிரச்சினை, பெண்ணியம் ஆகியவை குறித்துப் பேசும் கவிதைகள், என்னை வெகுவாகக் கவர்ந்தன.

நான் ரசித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே, இப்பதிவின் நோக்கம்:-  

ஒன்று:-  ‘விவ ‘சாயம்’  

நம் பாரம்பரிய வேளாண் முறையைக் கைவிட்டு,  கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கும் ஆசையில்,  இயற்கை உரங்களுக்குப் பதிலாகச் செயற்கை உரங்களைக் கொட்டியதன்  விளைவாக, இயற்கையன்னையின் முலைகள் பாளம் பாளமாக வெடித்துப் பால் சுரப்புத் தட்டிப் போய்விட்டன என்று ஆதங்கப்படுகிறார் கவிஞர்:-   

“குடிச்சிக் குடல் அழிஞ்சி
புண்ணாகிக் கிடக்கு
சுரப்புத் தட்டிப்போய்
வெடிச்ச முலைக் காம்பாட்டம்
எனக்குப் பாலூட்டிய பூமி”.

இரண்டு:-
சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பாலீதீன் பைகள், காடு அழிப்பு, கதிர் வீச்சு ஆபத்துள்ள அணு உலை போன்றவற்றால் உலகுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, இவரது கரிசனத்தை வெளிப்படுத்தும் ‘ரசாயன(வ)னம்’ கவிதையிலிருந்து கொஞ்சம்:-

“பாலீதின் தின்னும் யானை
கண்ணாடி பைகள் சீசாக்கள்
பூத்திருக்கும் மலை
அணுவைப் பிளக்க
ஆழ்துளையிட்டு ரசாயனக்கூடம்
வனம் பாதுகாக்கும் ரசாயனம்.”

மூன்று:-
தூசி விழுகிறது, முகத்தில் கிளை இடிக்கிறது, பூச்சி வருகிறது என்று ஏதேதோ காரணம் சொல்லி மரமொன்றை வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள்
நடு இரவில் கிளை தழைகளோடு ஜன்னல் வழி வந்து கன்னந் தழுவிய நிலா, இப்போது மொட்டையாக….

“காக்கைகளும், குருவிகளும்
வண்டுகளும் இல்லாமல்
கண்கள் காயும் வெளிச்சத்தில்
வறண்டு கிடந்தது சிமெண்ட் தரை.
இலையிழந்து, அழகிழந்து, களையிழந்து
மொட்டையடித்தது போல் நிலவு
நடுநிசி விழிப்பில், ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து துக்கமாய்…. 

‘காயின் ருசி’ என்ற இக்கவிதையை வாசித்த போது, என்னுள்ளும் வெறுமையுணர்வு படர்ந்து துக்கம்.  தாம் அனுபவித்ததை, வாசகருக்கும் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் கவிஞர்!

நான்கு:-
இலங்கை இனப்படுகொலையில், நம் மக்கள் கொத்து கொத்தாகக் கொலையுண்ட சோக வரலாற்றைப் பதிவு செய்யும் ‘இனம் புதைத்த காடு’ என்ற கவிதை, மனதை மிகவும் பாதித்தது. இதிலிருந்து சில வரிகள்:-

“இனத்தைப் புதைக்கும்
இடுகாடானது இலங்கை…..
பற்களைப் பேழையில்
பாதுகாக்கும் தேசம்
பால் சிசுக்களை மென்று தின்னும்
பாவிகளால் நிறைந்திருக்கிறது”

ஐந்து:-
சிறு வயதில் நண்பர்களுடன் கூட்டமாக சேர்ந்து விளையாடிய, உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தந்த, நாம் மறந்து போன விளையாட்டுக்கள் பற்றிய கவிதையை மிகவும் ரசித்தேன்.  அதிலிருந்து கொஞ்சம்  உங்கள் பார்வைக்கு:-

‘விளையாட்டு’

“கிச்சுக் கிச்சுத் தாம்பூலம் 
விளையாடத்துவங்கி
கிளியாந்தட்டில் சுற்றி
குலை குலையாய்
முந்திரிக்காயைப் பறித்து
கொள்ளையடித்தவன்
ஒளிந்து பிடித்து விளையாட
பல்லாங்குழிகளாய்ச்
சிதறிக் கிடந்தது பரவசம்.”

('கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்' என்று நாங்கள் சொல்வோம்)

ஓடியாடி விளையாடாமல், கைகால்களை மடக்கி, உடலைக் குறுக்கிக் கணிணி முன் எந்நேரமும் சரண் அடைந்திருக்கும், நம் இளைய சமுதாயம், இது போல் இழந்த பரவசம் எவ்வளவோ!

ஆறு:-
“நான் பார்த்துப் பார்த்து வளர்க்கும் செடி, அன்று கண்ட முகமாக இருக்கிறது; எந்த உரமும் போடாமல். புழு பூச்சி அண்டாமல் முட்செடி எவ்வளவு செழிப்பாக வளர்கிறது?” என்று நான் அடிக்கடிப் புலம்புவது வழக்கம். 

தேனம்மையின் ‘பராமரிப்பு,’ என்ற கவிதையைப் படித்தபோது எனக்கு வியப்பு தாங்கவில்லை.  இருக்காதா பின்னே?  என் புலம்பலைக் கேட்டது போல், ஒரு கவிதையை வடித்திருக்கிறார் இத்தொகுப்பில்!   

“தேவையற்றதெல்லாம்
செழித்து வளருகிறது
தண்ணீர் பூச்சி மருந்து
உரம் எதுவும் இல்லாமல்…
பாத்திகட்டி மண் அடித்து
இயற்கை உரம் போட்டாலும்
இளைத்துக் கிடக்கிறது சவலையாய்
பார்த்துப் பார்த்துப் பராமரிக்கும் செடி”

நம் சமூகத்திலும் இதே கதைதான்.  நல்லவர்களை விட தீய சக்திகள் தாம், எந்தவிதப் பராமரிப்போ, போஷாக்கோ இல்லாமல், படு விரைவாகவும், அபரிமிதமாகவும் வளர்கிறார்கள்!  இக்கவிதை சொல்லும் உட்கருத்து இதுவாக இருக்குமோ?

ஏழு:-

“உடல் பெண்ணாய்
உணர்வை ஆணாய்ப்
படைத்தவனுக்கும் இருக்கிறது சரிவு,”
என்றும், சிகண்டியாய் இருப்பது எளிதல்ல என்றும், திருநங்கைகளுக்கு ஆதரவாகப் படைத்தவனை  நிந்திக்கிறது, ‘சிகண்டியும் அமிர்தமும்,’ என்கிற கவிதை.

எட்டு:-
பெண்ணியத்தைக் குறித்த கவிதைகள் பல;  அவற்றில் இரண்டு மட்டும்:-
முதலாவது ‘இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை,’ என்பதிலிருந்து கொஞ்சம்:-

“இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை
அடுத்தடுத்து வெட்டுப் பட்டப்போதும்
நீர் மறுக்கப்பட்ட போதும்
நிழலை சுருக்கிக் கொண்டதில்லை”

இரண்டாவது ‘நீர்க்குமிழிகள்,’ என்ற கவிதையின் சில வரிகள்:-
கட்டிய மாடாய்
கயிற்றோடு சுற்றி
கட்டவிழ்க்க முடியாத
கட்டுக்களோடு”

ஒன்பது:-
எல்லோருக்கும் புரியக் கூடிய, அன்றாடம் புழங்கக் கூடிய பேச்சுவழக்கு சொல்லாடல் இவரது பலம்:-
“தொட்டித் தண்ணீர் கசிந்து
ஊறிக்கிடக்கும் புல்தரையாய்
மொதும்பி இருந்தது அவளது தலையணை;”

சமையல் மேடையின் தாளிதத் தெறிப்புக்களாய்த்
தரையெங்கும் சிதறிப் பொறிந்து கிடந்தன
அவளது கண்ணீர்ப் பூக்களின் உப்பு இதழ்கள்,”  (சூலும் சூலமும்)

‘மொதும்பி,’ இதுவரை நான் கேள்விப்படாத சொல்.  தமிழுக்குப் புது வரவு?

பத்து:-

நீ கீறியது ஒரு முறை
நான் கிளறிக் கொண்டது பல முறை…..”  (வெறுத்தலின் முடிவில்)

கீறியதால் ஏற்பட்ட காயத்தைத் திரும்பத் திரும்பக் கிளறி, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும் நம் பேதைமையை, எவ்வளவு அழகாகச் சுருக்கமாகச் சுட்டுகிறார், இரண்டே வரிகளில்!  

பதினொன்று:-
மனநோயின் தாக்குதலால் தற்கொலை எண்ணம் தோன்றி வளர்ந்து இறுதியில் உத்தரத்தில் தூக்கில் தொங்கிவிட்ட ஒருவரின் கதை மனதை மிகவும் நெகிழச் செய்தது:-   

ஒரு அமாவாசை இரவில்
ஓடுகள் நெகிழ்ந்த உத்தரத்தில்
ஓய்ந்த கேள்வியோடும், சுவாசத்தோடும்
ஒற்றைக் கயிற்றில் ஆடிக்கொண்டு……
(வற்றின கேள்விகள்)

பனிரெண்டு:-

கனம் அதிகரித்து விட்டதாக
சங்கப்பலகையாய் மிரட்டுகிறது எடைகாட்டி,”
(வயதின் கம்பீரம்) என்பதில் நகைச்சுவை இழையோடுகிறது. 


சுவையான வாசிப்பின்பம் அளிப்பதோடு, சிந்திக்கவும் தூண்டும்  அருமையான கவிதை தொகுதிக்குப் பாராட்டுக்கள்!  இது போல் இன்னும் பல சிறப்பான ஆக்கங்கள் மூலம், தமிழன்னைக்கு வளம் சேர்க்க தேனம்மையை வாழ்த்துகிறேன்!

 ,

Thursday, 12 February 2015

என் பார்வையில் - என்றாவது ஒரு நாள் - ஆஸ்திரேலிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்ஹென்றி லாசன் (HENRY LAWSON - 1867- 1922) எழுதிய ஆஸ்திரேலிய காடுறை மாந்தர் கதைகளின் மொழியாக்கம் கீதா மதிவாணன்.
இவரது வலைப்பூ:-  கீதமஞ்சரி
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம். கைபேசி:- 9994541010
முதற்பதிப்பு:- டிசம்பர் 2014
விலை:- ரூ 150/-

கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றி லாசனின் பரிதாபமான வாழ்க்கை குறித்தும், அவர்தம் எழுத்து குறித்தும் புத்தக முன்னுரை விவரிக்கிறது.    அவரது படைப்புகள் பல ஆஸ்திரேலிய பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன; அவர் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல்தலையும், காகிதபணமும் அந்நாட்டு அரசால் வெளியிடப்பட்டுள்ளன; உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்து கெளரவிக்கப்பட்டது போன்ற விபரங்கள் மூலம், இவர்  ஆஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க படைப்பாளி என்பதை அறிந்து கொள்கிறோம்.

இவரது கதைகளுக்குள் புகுமுன், அவை விவரிக்கும் மக்களின் வாழ்க்கை பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியம்.

இங்கிலாந்து சிறைகளில் போதுமான இடமில்லாத காரணத்தால் கைதிகளை நாடுகடத்த திட்டமிட்ட அந்நாட்டு அரசு, தேர்ந்தெடுத்த தீவுக்கண்டம் தான் ஆஸ்திரேலியா. 

இங்கிலாந்திலிருந்து 1788 ல் முதல் கப்பல் 1500 தண்டனைக் கைதிகளுடன் சிட்னி துறைமுகம் வந்து சேர்ந்தது.  அதன் பின் தொடர்ச்சியாக கைதிகள் இங்கு அனுப்பப் பட்டனர்.

தண்டனைக் காலம் முடிந்த பின்னர் இக்கைதிகள், காடுகளில்  குடியேறினர், வயிற்றுப்பாட்டுக்கு ஆட்டு ரோமம் கத்தரித்தல், மந்தையோட்டுதல் ஆடுமாடு மேய்த்தல், குதிரைகளைப் பழக்குதல்  போன்ற வேலைகளில் ஈடுபட்டனர். 

இக்கைதிகளும், அடிமட்டத் தொழிலாளர்களும், சுரங்கங்களில் தங்கம் தேடி வந்த குடியேறிகளும் தாம், ஹென்றி லாசனின் கதை மாந்தர்கள். 

இவர் வாழ்ந்த சூழலும் இதுவே என்பதாலும், அம்மண்ணின் வாழ்வியல் பிரச்சினைகளின் ஆழத்தைத் தொட்டு, அவற்றுடன் தம் சொந்த அனுபவத்தையும் தோய்த்துக் கொடுப்பதாலும், நம்மை மறந்து அக்கால ஆஸ்திரேலியாவிற்குப் பயணிக்கத் துவங்குகிறோம்!  கீதா மதிவாணனின் மொழிநடை நம் பயணத்தை எளிதாகவும், சுவை மிக்கதாகவும் ஆக்குகிறது.

மொழியாக்கம் என்று தெரியாதவாறு தேர்ந்த நடையில் அருமையான கதை தொகுப்பையளித்துத் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கும் கீதா மதிவாணனுக்குப் பாராட்டும் நன்றியும்! 

எங்கும் புதர் சூழ்ந்த குறுங்காடு, அச்சமூட்டும் தனிமையில் வாழும் மனிதர்கள், எலும்புக்கூடுகளாய்ப் பசுக்கள், வயிறு ஒட்டிய கன்றுகள், ‘குதிரை என்றால் கேட்பவர் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு விலங்கு,’ கோவான்னா, போஸம் போன்ற புதிய உயிரினங்கள், எப்போதுமே புழுதி படிந்த அழுக்கு உடை, தங்கம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் பெரும்பாலும் தங்கச் சுரங்கங்களைப் பற்றியே உரையாடும் அடிமட்டச் சுரங்கத் தொழிலாளர்கள், என நமக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத, புதுமையான களத்தை அறிமுகம் செய்கிறார் கீதா மதிவாணன், அருமையான இம்மொழியாக்கத்தின் மூலம். 

இத்தொகுதியில் மொத்தம் 22 சிறுகதைகள் உள்ளன. 
இவற்றுள் என்னை மிகவும் பாதித்தவை மூன்று:-

முதலாவது:- மந்தையோட்டியின் மனைவி

கணவன் மந்தையோட்டியாக போக வேண்டிய சூழ்நிலை ஏற்படவே, மனைவி, காட்டில் ஆண்துணையின்றி தனிமையில் வாழ்கிறாள். 

அவ்வப்போது வழிப்போக்கர் மூலம் தன் பெண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அசாத்திய துணிவாலும், நாயின் துணையாலும் முறியடிக்கிறாள்.  வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களையும் மனத்திண்மையுடன் எதிர்கொள்கிறாள்.        

ஒரு நாள் இரவு, அவள் வீட்டு விறகுக் குவியலுக்குள் பாம்பொன்று  புகுந்து விடுகிறது.  அடுக்களை மேசைமீது குழந்தைகளைத் தூங்க வைத்து, அருகில் அமர்ந்தபடி எந்நேரத்திலும் வெளிப்படும் பாம்புக்காக விடிய விடிய கண் அயராது விழிப்புடன் காத்திருக்கும் சமயத்தில், அவள் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகள்,  மனவோட்டமாக வெளிப்படுகின்றன. 

ஒரு வழியாக மறு நாள் காலை, தன் நாயின் துணையுடன் பாம்பைப் போராடிக் கொன்று, தீயில் எறியும் சமயம், அவள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்தோடுகிறது. 
பாம்பிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டோம் என்ற தாய்மையின் ஆனந்தக் கண்ணீரா அது?  கணவன் துணையின்றி இது போல் இன்னும் எத்தகைய போராட்டங்களைத் தனியாளாகத் தான் சந்திக்க வேண்டுமோ என்ற சுய பச்சாதாபம் கண்ணீரை வரவழைத்ததா?  என்று என்னால் யூகிக்க முடியவில்லையென்றாலும்,

அவள் அழுகையைப் பார்த்து மூத்த மகன் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள், என் கண்களிலும் நீரை வரவழைத்தது உண்மை.   

இரண்டாவது:-ஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம்

மழைநாள் ஒன்றில் நேரம் தெரியாமல், காலை ஆறு மணிக்கு வேலைக்குப் போக வேண்டிய பதினொன்று வயதே ஆன சிறுவன், நாலு மணிக்கெல்லாம் கிளம்பிப் போய், அலுவலகப் படிக்கட்டில் படுத்துறங்கிய செய்தி கல் மனதையும் கரையச் செய்யும்.  முதலாளி மனமிரங்கி அவனுக்கு ஒரு கடிகாரத்தை இலவசமாகக் கொடுத்து, அதற்கு விளம்பரமும் தேடிக் கொள்கிறார்.  .   

உடல்நிலை மிகவும் சரியில்லாத போதும், அலாரம் வைத்து எழ நினைக்கும் மகனைத் தாய் மறுநாள் வேலைக்குப் போகக்கூடாது எனக் கண்டிக்கிறாள்.

வேலைக்குப் போகாவிட்டால், வேறு யாரையாவது வேலைக்கு வைத்து விடுவார்கள்; நம்மால் பட்டினி கிடக்க முடியாது அம்மா’ அதனால் போயே தீருவேன் என்று மகன் சொல்லுமிடத்தில், அப்பிஞ்சின் பசிக்கொடுமை நம்மை வாட்டுகிறது.  .      

மறுநாள் அகால நேரத்தில் அலாரம் அலறுகிறது.  ஆனால் தூக்கத்தில் சட்டென்று விழிக்கக் கூடிய ஆர்வி எழவில்லை.  சத்தம் கேட்டு அவன் ஏன் எழவில்லை? என்ற தாயின் பதற்றம், நம்மையும் தொற்றிக் கொள்கிறது. 

ஆர்வீ!”
தாய் அழைத்தாள்.
அவள் குரல் பயத்தால் நடுக்கமுற்று விநோதமாய் ஒலித்தது.” 

கதை முடிந்த பின்னரும், சில நிமிடங்கள் ஒன்றுஞ் செய்யத் தோன்றாமல், வெறுமையுணர்வைத் தோற்றுவித்த கதை.

மூன்றாவது:- என்றாவது ஒரு நாள்

எல்லைப்பகுதியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்துக் கிளம்பும் சமயம் அழுது கொண்டே கைகளை இறுக்கமாகப் பிடித்து வழியனுப்பிய காதலியின் நினைவுகளை நண்பனிடம் பகிர்ந்து கொள்கிறான் மிச்செல். 

“என்றாவது ஒரு நாள் நீ போய் அவளைத் திருமணம் செய்து கொள்வாயல்லவா?” என்ற நண்பனின் கேள்விக்கு, மிச்செல் சொல்லும்  பதில் மனதை நெகிழச் செய்கிறது.  அவற்றை வார்த்தை பிசகாமல் அப்படியே இங்குக் கொடுத்திருக்கிறேன்:-

“என்றாவது ஒரு நாள், அந்த நாள் என்று?ஒரு நாள் உணவுக்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.வயதாகும் வரை. நம்மைப் பற்றிய சிரத்தை குறையும் வரை, இந்த ஓட்டம் தொடரும். இன்னும் வயதாகும். இன்னும் சிரத்தை குறையும். இன்னும் அழுக்கடை வோம். இப்படியே இந்த மண்ணுக்கும், புழுதிக்கும், வெக்கைக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பழகிப்போவோம்.

இலக்கைத் தொலைத்து நம்பிக்கையைக் கைவிட்டு ஒரு மாடு மாதிரி கால்நடை வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொள்கிறோம். ஒரு மனிதனின் இதயமிருக்கும் இடத்தில் ஒரு எருதின் ஆன்மா இருக்கும் வரை வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டிருக்கும் நமக்கென்று கவலைப்பட யார் இருக்கிறார்கள்?”

“கொடிது கொடிது வறுமை கொடிது
இளமையில் வறுமை, அதை விடக் கொடிது,” என்ற உண்மையைப் பறைசாற்றும் இக்கதை மனதை மிகவும் தைத்தது. 

இத்தொகுதியில் திகிலூட்டும் கதைகள் இரண்டுள்ளன.        
முதலாவது:- சீனத்தவனின் ஆவி:-

கொலைகார ஓடை, செத்தவனின் சந்து எனப்படும் மலையிடைவெளி,  ஆளரவமற்ற சமவெளி. தனிமையும் திகிலுமூட்டும் சீனாக்காரனின் கல்லறை, பட்டை உரிக்கப்பட்டு வெண்மை நிறத்தில் நிர்வாணமாக நின்று நிலவொளியில் பூதாகரமாக காட்சியளிக்கும் யூகலிப்டஸ் காடுகள், நடக்க நடக்க யாரோ விட்டு விட்டுத் தொடர்வது போன்ற ஓசை, சீனனின் ஆவி துரத்தும் என்ற வதந்தி என காட்டு வழியே பயணிக்கும் ஒருவனின் பய உணர்வை வெளிப்படுத்தும் இக்கதையைத் திகிலூட்டக்கூடிய தோதான  சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி நம்மை நன்றாகவே பயமுறுத்துகிறார் கீதா!. 

திகில் கதைக்கு இன்னொரு உதாரணம்:- பிரம்மி என்றொரு நண்பன்

காட்டில் இறந்து கிடந்த தன் நண்பனின் உடலை அடையாளம் கண்டுபிடித்து வீட்டுக்கு எடுத்து வருகிறார் கிழவர் ஒருவர்.

இனி கீதாவின் எழுத்தை வாசித்து நீங்களும் பயந்து நடுங்க கொஞ்சம்……

உடலைத் திருப்பி நேராக்கி புகைப்போக்கியில் சாய்த்து அதன் காலிலேயே நிற்கச் செய்து விட்டு, அன்றிரவு அவரது நண்பரை எங்குக் கிடத்தலாம் என்று யோசனை செய்தார்.
நேராக நிற்கவைத்த சடலத்தின் முன்பாதியை மறைத்திருந்த மரப்பட்டை நழுவி கீழிறங்கிவிட்டதை, அவர் கவனிக்கவில்லை.
உன்னை இன்றிரவு இந்தப் புகைப்போக்கிக் குழாயினுள் வைக்கலாம் என நினைக்கிறேன் பிரம்மி…..
திரும்பியவர் கத்தினார்.  மறைப்பற்ற முகத்தின் கூரிய பார்வையைச் சந்திக்க அப்போது அவர் தயாராயிருக்கவில்லை.  அவர் நரம்புகளில் அதிர்வு பரவியது.  மீண்டும் சுயநிலைக்கு வந்து பேசக் கொஞ்ச நேரம் அவகாசம் தேவைப்பட்டது……
ஃபைவ் பாப் (நாய்) ஊளையிட்டது.  தனிமையில் வசிக்கும் அவர் காட்டின் விபரீதத்தையும், விநோதத்தையும் எதிர் கொள்ளப் பழகியிருந்தபோதும்,  அந்த முதிய ஆட்டிடையரின் இதயம் பயத்தால் சில்லிட்டுப் போனது.”

இத்தொகுதியில் கிண்டல், கேலி நகைச்சுவை ஆகியவற்றுக்கும் பஞ்சமில்லை. 
எ:கா:-   புதர்க்காடுறை பூனைகள் 
ஜேக் என்றொரு பூனை  இரவு முழுதும் வேலை செய்து ஏராள முயல்களைக் கொன்று வீட்டுக்கு இழுத்து வந்து முதலாளிக்குக் கொடுக்கும். 
எந்த இரவிலாவது கூடுதலாக வேலை செய்து விட்டோம் என்று அதற்குத் தோன்றினால், அடுத்த நாளிரவு தானே விடுப்பெடுத்துக் கொண்டு மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் காதலியைக் காணச் சென்றுவிடுமாம்.

A CHILD IN THE DARK AND FOREIGN FATHER என்ற கதைக்குக் கீதா வைத்த தலைப்பு:- ஒற்றை சக்கர வண்டி

குடும்பம் எனும் வண்டியோட இரண்டு சக்கரம் வேண்டும்; ‘அந்த  இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?”  என்ற உண்மையை விளக்கும் அருமையான கதைக்கு இப்பெயர் நன்றாகவே பொருந்துகிறது.  

குடும்பப் பொறுப்பின்றி ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் செய்யும் மனைவியைச் சமாளித்து, வேலைக்கும் போய்க்கொண்டு உடல்நலமில்லாத மகனையும் பரிவுடன் கவனித்து ஒற்றை சக்கரமாக ஓயாமல் சுழலும் தந்தையின் கதையிது..
தலைப்பை அப்படியே மூலத்திலிருந்து பெயர்க்காமல் கதைக்கு ஏற்றாற்போல் பெயரிட்டிருக்கும் கீதாவைப் பாராட்டுகிறேன்!
அவன் ஏன் அப்படிச் செய்தான்?  என்ற கதையில்
எவ்வளவு விலை கொடுத்தாலும் இழக்க விரும்பாத தன் குதிரையை ஜாப் ஏன் சுட்டுக்கொன்றான்? என்பது நல்ல சஸ்பென்ஸ்.  இதில் வரும் வைத்தியர் டெட் டிங்கோ மர்ம மனிதராகவே காட்சி தருகிறார்.  கதையின் முடிவில் அவர் ஜாபிடம் சொல்லிச் செல்லும் விஷயம் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. 

மலாக்கி என்னைக் கவர்ந்த  இன்னொரு கதை:-

தன் உணவு மற்றும் இருப்பிடத்துக்காக வாரம் ஒரு பவுண்டு மட்டுமே செலவழித்துச் சிக்கனமாக இருக்கும் மலாக்கியைக் கிண்டலும் கேலியும் செய்து வெறுப்பேற்றுகிறார்கள் நண்பர்கள்.  என்னிடம் வம்பு வளர்க்காதீங்க என்று மட்டுமே சொல்லி விலகிப் போகும் மலாக்கியை  அவர்கள் ஒரு கோமாளியாகவே எண்ணி அவன் துன்பத்தில் இன்பம் காண்கிறார்கள். 
அவன் தூங்கும் போது அவன் கால்சட்டையின் இருகுழாய்களையும் தைத்து விடுவது, புகைபிடிக்கும் குழாயில் வெடிமருந்து நிரப்புவது இறுதியாக அவன் மண்டையோட்டைக் கோருவது போன்ற விளையாட்டுக்கள் மூலம் வேதனைப்படுத்துகிறார்கள்.  ஆனால் இறுதியில் மலாக்கியின் தியாகம் காரணமாக அவனுக்கு ஏற்படும் முடிவு நம்மை கலங்கச் செய்கிறது. 
அவனுக்கு வேதனை ஏற்படுத்தியவர்கள், ஒவ்வொருவரும் குற்றவுணர்வுடன் அவரவர் பங்கை அழிக்க விரும்பும் போது காலங்கடந்துவிடுகிறது……   

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் இக்கதைகளைப் பற்றி….

.விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன். 

மொத்தத்தில் களமும் கருவும் தமிழுக்குப் புதிது.  மொழியாக்கம் என்பது தெரியாத அருமையான சிறுகதை தொகுதி.

கீதா மதிவாணனுக்குப் பாராட்டுக்கள்!  மேலும் மேலும் இது போன்ற தரமான மொழியாக்கம் மூலம் தமிழை வளப்படுத்த வாழ்த்துகிறேன்!    
           

Sunday, 1 February 2015

வலைச்சரம் - ஏழாம் நாள் - பதிவர் புத்தகங்கள் - சிறு அறிமுகம்

இப்புத்தாண்டில் என் நூலகக் காட்டில் அடைமழை!

அன்பளிப்பாக பெற்ற நூல்கள் சில!  புத்தகக் காட்சியில் வாங்கியவை பல.

என் அலமாரியில் புதிதாக இடம் பெற்றவைகளுள், பதிவர்களின் நூல்களை மட்டும் சிறு அறிமுகம் செய்வதே, இன்றைய பதிவின் நோக்கம்.

முழுமையாக வாசித்த பின்னர், இவை பற்றிய பார்வையை, என் வலைப்பூவான ஊஞ்சலில் வெளியிட எண்ணியிருக்கிறேன்.

தம் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும் என்ற எழுத்தாளருக்கேயுரிய தணியாத வேட்கையால், தம் சொந்தப் பணத்தைச் செலவழித்தாவது, பல சிரமங்களுக்கிடையில், புத்தக வெளியீடு செய்யும் பதிவர்களை ஊக்குவிக்க வேண்டியே இப்பதிவு.

புத்தகம் வாங்குவதில் மட்டும் கடுமையான கஞ்சத்தனத்தைச் கடைபிடிக்கும்  நம்மவர்கள்,  இப்பதிவைப் பார்த்த பிறகு,  ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கினால் கூட என் நோக்கம் நிறைவேறும்.தொடர்ந்து வாசிக்க...

வலைச்சரம் - ஆறாம் நாள் - பல்சுவை விருந்து

வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்ற இரண்டாம் நாள் முதல் நேற்று வரை,  நான் தேர்வு செய்த தலைப்புக்களில் அமைந்த பதிவுகளாகத் தேடிப் பிடித்துத் தொகுத்த நான், எனக்குப் பிடித்த பல்சுவை பதிவுகளை இன்று குறிப்பிட விரும்புகின்றேன்:- 

1  எம்.ஏ.சுசீலாவின் தப்பவிடக்கூடாத சிறுகதைகள் தொகுப்பிலிருந்து மிகவும் பிடித்த ஒன்று:-
கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார்

2.  வீட்டின் மூலையில் ஒரு சமையலறை-  அம்பை அழியாச்சுடர்கள் தொகுப்பிலிருந்து.


3.  பெண்மை வாழ்கவென்று - சிறுகதை -  ஜீ.ஜீ  -  பூவனம்
 தன்னில் தன்னைக் காண்பது- தமக்குள் பார்வையைச் செலுத்திக் கறாராகத் தம்மைச்  சுயவிமர்சனம் செய்து மேம்படுத்திக்கொள்ள விழைவோருக்கான சுய தேடல் பதிவுகள்.  

4.  சிவப்பி  -  சிறுகதை கீதா மதிவாணன் - கீதமஞ்சரி 
(இவர் கதைகளுள் எனக்கு மிகவும் பிடித்தது)

5. மரணத்துள் வாழ்பவர்கள் – கவிதை - ஹேமா- வானம் வெளித்த பின்னும் (மனதைத் தொட்ட பதிவு)

6.  வன்மம் தவிர்-  கவிதை - நிலாமகள் – பறத்தல்- பறத்தல் நிமித்தம்


7. வில்விசை வித்தையிலே-  மகேந்திரன் -  வசந்த மண்டபம் (அழிந்து வரும் தமிழர் கலையைப் பற்றிய அருமையான பதிவு)

8. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் -  வை.கோபாலகிருஷ்ணன்
சுவையான பள்ளி நினைவலைகள் (பள்ளிக்கூடம் பற்றிய வரலாற்றுக்குதவும் பதிவு) 

9.  பேந்தா, கொந்தம், முக்குழி -  சிறுவயது விளையாட்டுக்கள் பற்றிய பதிவு – இலக்கியச்சாரல் – சொ.ஞானசம்பந்தன் (தமிழர் விளையாட்டு பற்றிய வரலாற்றுக்குதவும் பதிவு)

10. தஞ்சை பெரிய கோவில் சோழர் கால ஓவியங்கள் –முனைவர் ஜம்புலிங்கம் (சோழர் ஓவியம் குறித்த புரிதலுக்குப் பயன்படும் கட்டுரை )


10.  எஸ் ராமகிருஷ்ணன் - இன்னொரு பயணம்  -  போலிஷ் திரைப்படம் இடாவின் விமர்சனம். 

11.  ஜெர்மன் ஓவியர் காஸ்பர் டேவிட் பிரெடரிக் வரைந்த ஓவியம் நிலாபார்ப்பவர்கள் பற்றிய பதிவு. 

12.  முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே -  தந்தை மகளுக்கு எழுதிய கடிதம் (என்னை மிகவும் கவர்ந்த ஒன்று)  நா.முத்துநிலவன்.- வளரும் கவிதை (கல்வியாளர்களும், பெற்றோர்களும், இளந்தலைமுறையினரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கடித இலக்கியம்)  தொடர்ந்து வாசிக்க...