நல்வரவு

வணக்கம் !

Sunday 9 August 2015

பறவை கூர்நோக்கல் -6 தையற்சிட்டு (Common Tailor Bird)



இப்பறவையைப் பலர் பார்த்திருக்காவிட்டாலும் டுவீட், டுவீட் என்ற இதன் வெண்கலக் குரலைப் பல சமயங்களில்  கேட்டிருக்க வாய்ப்புண்டு.  இதன் உருவத்துக்கும், விசிலை விழுங்கியது போன்ற கணீர் குரலுக்கும் சம்பந்தமே இல்லை.

சிட்டுக்குருவியை விடச் சின்னதாக இருக்கும் இதனை, இத்தனை காலம் தேன்சிட்டு என்றே நினைத்திருந்தேன்.  பார்ப்பதற்கு அது போலவே இருந்தாலும், இதன் அலகின் அமைப்பு மட்டும் மாறுபடுகிறது.  பூக்களில் தேனை உறிஞ்ச வசதியாக நீண்டு வளைந்த தேன்சிட்டுவின் அலகு போலன்றி, இதனுடையது கொஞ்சம் குட்டையாக உள்ளது.

முதுகுப்பகுதி மஞ்சள் கலந்த பச்சை; வயிறு வெண்மை. வாலை எப்போதும் தூக்கிபடியே இருக்கும்.  ஆணும் பெண்ணும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆணுக்கு மட்டும் இனப்பெருக்கக் காலத்தில் வாலின் நடுவில் இரு நீண்ட சிறகுகள் முளைக்குமாம்.  சரியான துறுதுறு.  ஒரு நிமிடம் ஓரிடத்தில் அமராமல், தத்தித் தாவிப் பறந்து கொண்டேயிருக்கும்.


   
பஞ்சு, நார், நூல் கொண்டு பெரிய இலைகளின் பின்பக்கத்தைச் சேர்த்துப் பின்னி சிறிய கூடைபோலாக்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.  ஒருமுறை இட்லிப்பூச்செடியின் இரண்டு இலைகளின் ஓரத்தைச் சேர்த்து மடக்கி, இது பின்னிய கூட்டைப் பார்த்து அசந்துவிட்டேன்.  நூலை உள்ளும் புறமும் கோர்த்து வாங்கித் தையல் பிரியாமல் பின்னும் கலையை யாரிடம் கற்றது இது?  இயற்கையிலேயே அமைந்த இதன் திறமையை என்ன சொல்லிப் புகழ?  தனிப்பட்ட இந்தத் திறமையே, இதற்குத் தையல்சிட்டு என்ற பெயர் வரக் காரணமாயிற்று.

புழுக்கள், பூச்சிகள், பூச்சிகளின் முட்டை, தேன் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். மரஞ்செடிகொடிகள் உள்ள பகுதிகளில் இவை அதிகமாகக் காணப்படும்.

தையற்சிட்டு வம்சத்தைச் சேர்ந்த நுண்ணிச்சிறை என்ற சிறுபறவையும் (Ashy Wren warbler) சிலசமயங்களில் இலை தைத்த பைக்கூடு கட்டுமாம்.                       
இனி உணவளிப்பான் (Bird Feeder)  பற்றி:-

இணையத்தில் இதனை  நாமே செய்வது பற்றிய செய்முறை விளக்கங்கள் பல இருக்கின்றன.  அவற்றுள் பயனற்றவை என நாம் தூக்கிப் போடும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து செய்யும் முறை மிகவும் பயனுள்ளதாயிருக்கிறது.

காம்பவுண்டு சுவரில் நான் செய்து மாட்டிய உணவளிப்பான்:-




 நான் பயன்படுத்திய பொருட்கள்:- மூடியுடன் மூன்று பிளாஸ்டி பாட்டில்கள்,  பிளாஸ்டிக் தட்டு, குருவி அமர மொத்தமான ஈர்க்குச்சிகள் இரண்டு ஆகியவை மட்டுமே.   கம்பு, கேழ்வரகு, அரிசி நொய் ஆகிய மூன்றும் கலந்து பாட்டிலில் கொட்டி வைத்திருக்கிறேன்.
                                                             







(முதலிரு படங்கள் மட்டும் – நன்றி இணையம்)




23 comments:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். மூடிய பாட்டிலிலிருந்து அவை எப்படி உணவை எடுத்து உண்ணும்? காணொளி காணவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! பாட்டிலில் நடுவில் பதிக்கும் இரு மூடிகளிலும் ஓட்டை போடுகிறோம் அல்லவா? பாட்டிலில் தீனியைக் கொட்டியவுடன் அந்த ஓட்டை வழியாக சிறிதளவு வெளியேறிப் பள்ளத்தில் தங்கும். கொஞ்சம் தட்டிலும் கொட்டும். அந்த ஓட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் குச்சியில் குருவி அமர்ந்து தீனியைத் தின்னும். தீனி குறைய குறைய ஓட்டையிலிருந்து தீனி கீழே இறங்கும். அந்தக் காலத்தில் நெல் சேமிக்கும் பத்தாயம் அல்லது குதிர் பார்த்திருக்கிறீர்களா? அதே டெக்னிக் தான். கீழ் ஓட்டையில் நெல் கொஞ்சம் இறங்கியவுடன் ஓட்டை அடைந்துவிடும். நாம் கீழே இறங்கிய நெல்லை அள்ள அள்ள உள்ளிருந்து நெல் மேலும் கீழே இறங்கும். ஒரே சமயத்தில் தீனி அதிகளவில் வெளியேறி வீணாகப் போகாமலிருக்க இந்த ஏற்பாடு. பாட்டிலை மேலே மூடியிருப்பதால் மழைத்தண்ணீர் இறங்கி வீணாகாது. பாட்டில் மூடியில் ஓட்டை போடுவது தான் சிரமமாக இருக்கிறது. நான் வீட்டில் வேலை செய்த பிளம்பரிடம் கொடுத்து டிரில்லிங் மெஷின் மூலம் ஓட்டை போட்டேன். நீங்களும் செய்து பாருங்கள்.

      Delete
  2. காணொளியும் பார்த்து விட்டேன். அவற்றிலிருந்து பறவை எப்படி எடுத்து உண்ணும்!

    ReplyDelete
    Replies
    1. குச்சிகளுக்கு மேல் இருபக்கமும் ஓட்டைகள் உண்டே...

      Delete
    2. வாங்க தனபாலன் சார்! ஆம் அந்த ஓட்டை வழியாகத் தான் தீனி வெளியே கொஞ்சங்கொஞ்சமாக கீழே கொட்டும். கருத்துக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  3. இயற்கையின் அதிசயங்களுள் இதுவும் ஒன்று!..

    அப்போது இதன் பெயர் தெரியாது.. அந்தக் காலத்தில் புகைப்படம் எடுக்கவும் வாய்ப்புகள் கிடையாது.. வீட்டின் பின்புறம் அவரைப் பந்தலில் கூடு கட்டின..

    இரண்டு கூடுகள்.. வைக்கோல், உலர்ந்த புல், தேங்காய் நார் - இவையெல்லாம் அவற்றுக்குத் தங்குதடையின்றி கிடைத்த காலம்..

    அவரைப் பந்தலின் குச்சிகளுடன் அவரைக் கொடியையும் பின்னிப் பிணைத்து - குருவிகள் செய்த ஜாலத்தினால் தான் - பறவைகளின் மீது அதீதப் பிரியம் வந்தது..

    அதன் பின் சிறிய அட்டைப் பெட்டிகளை வைத்தோம்..

    அதை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியும் - இலைகளைக் கோர்த்து அடைத்துக் கொண்டுதான் பெட்டிக்குள் குடித்தனம் நடத்தின குருவிகள்..

    அடுத்து வந்த மழை நாளின் இரவில் அவரைப் பந்தல் சரிந்தது.. அதன் பிறகு குருவிகளைக் காண இயலவில்லை..

    பழைய நினைவுகளைக் கொணர்ந்தது - பதிவு!..

    ReplyDelete
    Replies
    1. பழைய நினைவலைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி துரை சார்! சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத அக்காலத்திலேயே பறவைகளுக்கு அட்டை பெட்டிகள் வழங்கி உதவியிருப்பதை நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. இயற்கையை நேசித்த விபரமறிந்து மகிழ்கிறேன். கருத்துப்பகிர்வுக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  4. வணக்கம் சகோ.

    தையல் சிட்டினைப் பற்றிய சுருக்கமான அறிமுகம்.

    அதற்கு உணவளிக்கும் முறை பற்றிய குறிப்புகள்.

    நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய உயிரினங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதற்கான பயனுள்ள பதிவு.

    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ, வணக்கம். பயனுள்ள பதிவு என்ற கருத்துக்கு மிகவும் நன்றி. உணவளிக்கும் முறை பற்றிப் பல பதிவுகள் இணையத்தில் இருந்தாலும் என் அனுபவத்தில் பயனுள்ளவை என்று நான் அறிந்தவற்றை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது என் எண்ணம். தொடர்வதற்கு நன்றி.

      Delete
  5. தற்சமயம் வேலை செய்கிறது...
    +1
    நன்றி..

    ReplyDelete
  6. நீங்கள் கொடுத்த இணைப்பைக் குறித்துக் கொண்டேன். மிகவும் நன்றி சார்!

    ReplyDelete
  7. தையற்பறவையை தேன்சிட்டின் ஒருவகை என்றே நானும் நினைத்திருந்தேன். உங்கள் பதிவால் தெளிந்தேன். நான் சிறுமியாயிருக்கையில் எங்கள் வீட்டு நந்தியாவட்டை செடியில் இலைகளைத் தைத்துக் கூடு கட்டிக் குஞ்சு பொரித்திருந்தது. உணவளிப்பான் ஒரு நல்ல முயற்சி. காணொளி மிகவும் எளிதாக விளக்குகிறது. பகிர்வுக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கீதா. இதுவும் தையல்சிட்டு அளவிலேயே இருக்கிறது. அலகு மட்டும் தான் வித்தியாசம். எலுமிச்சை, இட்லிப்பூ ஆகியவற்றில் கூடு கட்டித் தான் பார்த்திருக்கிறேன். நந்தியாவட்டையிலும் கூடு கட்டும் எனத் தெரிந்து கொண்டேன். கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா.

      Delete
  8. பறவைகளைப் பற்றி அறிய இந்தப் பதிவு மிக உதவுகிறது ; மிக்க நன்றி . நான் பிறந்து வளர்ந்த வீட்டில் உள்ளங்கை அளவுகூட மண்ணில்லை ; ஆகவே மரஞ் செடி கொடி குறித்தும் அவற்றை நாடி வரக்கூடிய பறவைகள் குறித்தும் எந்தச் சிறு அனுபவமும் பெறவில்லை ; கொல்லைக் கதவைத் திறந்தால் அங்கேயும் தெரு !

    ReplyDelete
    Replies
    1. பறவைகளின் செய்கைகளைப் பார்ப்பது மனதுக்கு ஆனந்தம் தரும் நிகழ்வு. தோட்டம் இல்லாவிட்டால் பறவைகளைப் பார்ப்பதற்கு வழியேயில்லை. சிறுவயது அனுபவம் ஏதும் இல்லாதது வருத்தம் தரும் செய்தி தான். பகிர்வுக்கு மிகவும் நன்றி!

      Delete
  9. வணக்கம் சகோ நானும் இந்தவகை குருவியின் சப்தம் கேட்டு இருக்கிறேன் சுவாரஸ்யமாக இருந்தது பதிவு வாழ்த்துகள்.
    எனது தளத்திற்க்கு வராவிட்டாலும் கில்லர்ஜியும் எனக்கு நன்கு தெரிந்தவர் என்று வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கு நன்றி
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. நான் வலைச்சர ஆசிரியராக இருந்த போது தினமும் வருகை தந்து எனக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சொன்னீர்கள். எனவே உங்களை எனக்கு நன்கு தெரியும். வீடு+ அலுவலகப் பணி இரண்டையும் கவனிக்க வேண்டியிருப்பதால், இணையத்தில் செலவழிக்கக் கிடைக்கும் நேரம் மிகக்குறைவு. அதனால் தான் உங்கள் தளம் உட்பட பலர் தளங்களுக்குச் செல்ல முடிவதில்லை. நேரங்கிடைக்கும் போது அவசியம் உங்கள் தளத்துக்கு வருவேன் சகோ! உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
    2. Your effort to detail this episode is very much comendable

      Delete
  10. சுவராஸ்யமான தகவல்கள்... அழகான படங்களுடன்... இந்த வகைக் குருவிகளை நான் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குருவியைப் பார்த்திருக்கிறீர்கள் என்றறிந்து மகிழ்ச்சி குமார்! கருத்துக்கு மிகவும் நன்றி!

      Delete
  11. அழகான குருவி நானும் பார்த்திருக்கேன் தாங்கள் சொல்வது போல இதன் குரல் இனிமையாக இருக்கும். பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றிப்பா.

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குருவியைத் தாங்கள் பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி சசிகலா! தொடர் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  12. தையல் சிட்டு எங்கள் இடங்களில் அபூர்வமாக காணப்படும் பறவை ....கூடு கட்டும் அழகை நேரில் பார்த்ததுண்டு. பஞ்சு போன்ற ஒருவித நூலால் இவைகள் கூடுகட்டுவது பிரமிப்பான ஒன்று... நன்றி ! பறவை பற்றிய தகவல் அருமை ...!!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete