நல்வரவு

வணக்கம் !

Saturday 1 August 2015

பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது



காகத்துக்கும், குருவிக்கும் மோர் சாதத்தில் உப்புப் போட்டுப் பிசைந்து வைக்கிற பழக்கம் எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை.  மனிதரைப் போல பறவைகளுக்கும், உணவில் உப்பிருந்தால் தான் சுவைக்கும் எனத் தவறாக நினைத்து விட்டேன்.

நேச்சர் பார் எவர் தளத்தில் ‘பறவைகளும் உப்பும்,’ (Birds & Salt) என்று தலைப்பிட்ட கட்டுரையை வாசித்தவுடன் தூக்கிவாரிப் போட்டது. இது நாள் வரை நல்லது செய்வதாக நினைத்து, என் அறியாமையால், இவற்றுக்குக் கெடுதல் பண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன்.  ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவிக்கும், உப்புப் போட்ட சாதத்தைக் கொடுத்துவிட்டோமே என மனம் பதைத்தது.    

கட்டுரையின் முடிவில் சிட்டுக்குருவியும் புறாவும் ஓரளவு உப்பைத் தாங்கக்கூடியவை என்று படித்த பிறகு, கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.   இனி என் வாழ்நாளில், கண்டிப்பாக உப்பு சேர்த்த உணவைப் பறவைகளுக்குக் கொடுக்கவே மாட்டேன். 

இக்கட்டுரையின் மூலம், நான் தெரிந்து கொண்ட முக்கிய விபரங்கள்:-

பெரும்பாலான தரைப் பறவைகளுக்கு உப்பு மிகவும் கெடுதல் செய்யும்.
ஊர்வனவற்றிக்கு இருப்பது போலப் பறவைகளுக்குச் சிறுநீரகம் உண்டு; ஆனால் இவை உப்பை அதிகளவு வெளியேற்றும் திறன் கொண்டவை அல்ல. 

உப்பை வெளியேற்றும் திறன், பறவைகளின்  வாழும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது.  கடல் மற்றும் வறட்சியான பகுதிகளில் வாழும் பறவைகளின் சிறுநீரகம்,  மற்ற பகுதிகளில் வாழ்பனவற்றின் சிறுநீரகத்தை விட, இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகளவு உப்பை வெளியேற்றும் திறன் கொண்டது.  அதனால் தான் கடற்பறவை, மீனையும், கடல் நீரையும் உட்கொண்டு உயிர் வாழ்கின்றது.

சிறுநீரகத்துக்கு அடுத்தபடியாக உப்பை வெளியேற்ற பறவைகளின் மண்டை ஓட்டுக்குள் நெற்றிப்பக்கம், உப்பு சுரப்பி (Salt gland) அமைந்துள்ளது.  எல்லாவற்றுக்கும் இது உண்டென்றாலும், உப்பு சேர்ந்த உணவை அடிக்கடி உண்ணும் பறவைகளுக்கு மட்டுமே, இது வேலை செய்யும்.    

உப்புநீரையும், உப்பு அதிகமுள்ள உணவையும் அடிக்கடி உட்கொள்ளும் பறவைக்கு, அதிகளவில் உப்பை வெளியேற்ற இச்சுரப்பி பெரியதாக இருக்கும். இது அடர்த்தி அதிகமான உப்பை (concentrated salt) வெளியேற்ற மிகக் குறைந்த நீரையே எடுத்துக்கொள்ளும்.  அதே சமயம் சிறுநீரகத்துக்கு ஒரு பங்கு உப்பை வெளியேற்ற, மூன்று மடங்கு தண்ணீர் தேவைப்படும்.

நம் தோட்டத்துப்பறவைகளுக்கு அதிகளவு உப்பை வெளியேற்றும் சக்தி கிடையாது என்பதால் உப்புப் போட்ட உணவைக் கண்டிப்பாகக் கொடுக்கவே கூடாது.  உப்பு போட்ட மோர் மற்றும் குழம்பு சாதம், உப்பு போட்டுப் பொரித்த கடலை, சிப்ஸ் வகையறாக்கள் கூடவே கூடாது.   சுத்தமான குடிதண்ணீர் அவசியம் வைக்க வேண்டும்.

(மேலதிக விபரங்களுக்கு -  http://www.natureforever.org/birds-and-salt.html)

(நான்கு பெண்கள் தளத்தில் 17/06/2015 அன்று வெளியான என் கட்டுரை)


(படம்:- நன்றி இணையம்)

24 comments:

  1. பயனுள்ள தகவல்..

    ஆனால் - வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு குழம்பு சோறு வைத்தால் கொள்ளைப் பிரியத்துடன் உண்கின்றன..

    உப்பை வெளியேற்றும் திறன், பறவைகளின் வாழும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது - என்று சொல்லியிருப்பது சிந்தனைக்குரியது..

    அது நாம் வளர்த்து விட்ட விதத்தினால் இருக்கும் போலிருக்கின்றது..

    அந்தப் பக்கம் சந்தையில் கருவாடு கழிவுகளை - காக்கைகள் நொடியில் காலி செய்து விடுகின்றன..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார்! முதல் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி! கோழி, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் நாம் கொடுப்பதைச் சாப்பிட்டு அதற்கேற்ப மாறிவிடுகின்றன என்பது உண்மை தான். உப்பு (wild) கானுயிர் பறவைகளுக்குத் தான் மிகவும் கெடுதல் செய்யுமாம். காகம் பலதரப்பட்ட உணவு வகைகளைக் காலங்காலமாகத் தின்று வருகின்றது. மேலும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நாம் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. கருத்துரைக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  2. நாமே அதிகம் எடுத்துக் கொள்ள கூடாது...

    பயனுள்ள தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார்! நாமே உப்பைக் குறைவாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். கருத்துக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  3. வணக்கம்,
    பயனுள்ள குறிப்பு,
    ஆனால் பாருங்கள் விரதம் என்ற பெயரில் நாம் உண்ணும் உணவினை காகத்திற்கு வைப்பதில் எவ்வளவு உப்பு இருக்கும்,
    சரி
    சிறு வயதில் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு உப்பு சர்க்கரை இல்லாமல் பால் வைக்க சொல்வார்கள் பெரியவர்கள்,
    நல்ல பகிர்வு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பிற உயிர்களுக்கு உணவு கொடுக்கவே யோசிக்கும் நம்மவர்கள் மத்தியில் உணவிட்டு, அதில் உப்பு இட்டதிற்காக வருந்தும் உங்கள் மனம்,,,,,,
      வாழ்த்துக்கள்.

      Delete
    2. ஆம் மகி! நல்லது செய்வதாகக் கெடுதல் செய்திருக்கிறேன் என்றறிந்த போது மனம் மிகவும் பதைத்தது. என்னைப் போல் எத்தனை பேர் இவ்வாறு செய்கிறார்களோ என்ற நினைப்பில் தான் இப்பதிவை எழுதினேன். உங்கள் கருத்துக்கும் மீள்வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி மகி!

      Delete
  4. வணக்கம் சகோ!

    ஒரு சிறிய செய்திதான் என்றபோதும் இதுவரை அறியாத ஒரு தகவலை அறிந்த போது ஏற்பட்ட ஆனந்தம் இந்தப் பதிவினால் கிடைத்தது.

    நன்றி.

    த ம 3

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! தங்கள் கருத்துக்கும் வாக்குக்கும் மிகவும் நன்றி!

      Delete
  5. பயனுள்ள தகவல் சகோதரி...
    பறவைகளுக்கு உப்பு இட வேண்டாம் என்பதை உங்கள் பதிவின் மூலமாகத்தான் அறிகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நல்லது குமார்! இந்தச் செய்தி சிலரையாவது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எழுதினேன். என் நோக்கம் நிறைவேறியதறிந்து மகிழ்ச்சி!

      Delete
  6. காகதிற்கும் நாய்க்கும் எம் முணவையே வைப்பது வழக்கம் இல்லையா. இப்போ புரிகிறது எவ்வளவு அபத்தம் என்று இல்லையா? ஆனாலும் நான் பார்த்திருக்கிறேன் புறாக்களுக்கு பொதுவாக சிப்ஸ் எல்லாம் போடுவார்கள். தவறு என்பதை உணர்த்தட்டும் இப் பதிவு அறியாத விடயம்தெரிந்து கொண்டேன் . நன்றி ! வாழ்த்துக்கள் ...!
    எங்கே என் பக்கம் காணவில்லையே முடிந்தால் ஒரு முறை எட்டிப் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் இனியா! சிப்ஸ் எல்லாம் போடவே கூடாது. அது பறவைகளை மிகவும் பாதிக்குமாம். வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி இனியா! கண்டிப்பாக உங்கள் பக்கம் வருவேன் இனியா!

      Delete
  7. சாதம் வடித்தவுடன் மற்றும் பிறகும் காகங்களுக்கு சாதம் அப்படியே வைத்துவிடுவார் என் பாஸ்! நான் மொட்டைமாடியில் படிக்கும்போது காகங்களுக்கு சீடை, முறுக்கு போன்றவை போடுவேன்.

    நீங்கள் சொல்லி இருப்பது தெரியாத செய்தி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! சாதத்தை அப்படியே வைப்பது தான் நல்லது. பல வீடுகளில் இப்போது காகத்துக்கு நொறுக்குத் தீனிகளைப் போடுகிறார்கள். காக்கையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நாம் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உப்பு போட்டது, போடாதது எனப் பலதரப்பட்ட உணவு வகைகளை உண்டு காகம் சமாளித்துக் கொண்டு விட்டது. மற்ற பறவைகளைப் பற்றித் தான் நாம் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!

      Delete
  8. பயனுள்ள பதிவு
    உப்புப் புளி காரம்
    நமக்கென்றால்
    பறைவைகளுக்குமா?
    தொடருங்கள்

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் பயனுள்ள பதிவு என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா! உங்கள் புதிய முகவரியைக் குறித்துக்கொண்டேன். தொடர்வதற்கு மிகவும் நன்றி ஐயா!

      Delete
  9. புதிய அறிவியல் செய்தியைத் தெரிந்துகொண்டேன் தங்களின் இப்பதிவு மூலமாக. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா! கருத்துக்கும் தெரிந்து கொண்டமைக்கும் மிகவும் நன்றி!

      Delete
  10. மிகப் பயனுள்ள தகவல். எங்கள் வீட்டு மொட்டைமாடியில் நிறைய பறவைகளுக்கு உணவு தினமும் வைக்கிறோம். இவ்வளவு நாட்கள் அதில் உப்பை சேர்த்தே கொடுத்து வந்தோம். இனி உப்பில்லாமல் சமைக்கப் போகிறோம்.
    அருமையான பதிவு!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. வாங்க செந்தில்! உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் நான் இப்பதிவை எழுதியதின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக உணர்ந்தேன். என்னைப் போல் எத்தனை பேர் செய்கிறார்களோ, அவர்களில் ஓரிருவருக்காவது இது போய்ச் சேர வேண்டும் என நினைத்தேன். பாராட்டுக்கும் த ம வாக்குக்கும் மிகவும் நன்றி செந்தில்!

      Delete
  11. பறவைகளுக்கு உப்பு கூடாது என்ற புதிய தகவலை அறிந்தேன். நம்மைப் போலவே மற்ற பறவைகளையும் விலங்குகளையும் எண்ணிவிடுகிறோம். அது எவ்வளவு தவறு. ஆஸியின் கடற்கரையை ஒட்டியுள்ள ஊர்களில் சீகல் எனப்படும் கடற்பறவைகள் இப்போதெல்லாம் மெக்டோனால்ட்ஸின் உருளைக்கிழங்கு சிப்ஸை உண்டே உயிர்வாழ ஆரம்பித்துவிட்டன. மீன் தேடி கடல் பக்கம் போவதே இல்லையாம். இயற்கைவாழ்வைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம் நாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கீதா! பறவைகளின் உணவுப் பழக்கத்தை மாற்றுவது மிகவும் தீயச்செயல்! அது இயற்கையை மிகவும் பாதிக்கும். ஆழமான கருத்துரைக்கு மிகவும் நன்றி கீதா!

      Delete
  12. வாவ் ... அருமையான தகவல் ஒன்றை இன்று அறிந்துகொண்டேன் ...நன்றி!!!

    ReplyDelete