நல்வரவு

வணக்கம் !

Friday, 21 August 2015

நூல் அறிமுகம் - பல்லுயிரியம்


ஆசிரியர் :- ச.முகமது அலி
வெளியீடு:-  வாசல்,
40D/3, முதல் தெரு , வசந்த நகர், மதுரை – 625003.
முதற்பதிப்பு:- மே 2010 இரண்டாவது பதிப்பு:- ஏப்ரல் 2013
விலை ரூ.140/-.

இயற்கையின் மீது அளவிலா நேசமும், அக்கறையும் கொண்ட திரு ச.முகமது அலி அவர்கள், காட்டுயிர் துறையில் தமிழகத்தின்  முதன்மையான எழுத்தாளரும், முக்கிய ஆளுமையும் ஆவார்.  22 ஆண்டுகளாகத் தமிழில் வெளிவரும், ஒரே மாத இதழான ‘காட்டுயிர்’ இதழின் ஆசிரியரும் கூட. 
 
மொத்தம் 504 கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்பு நூல் இது. காட்டுயிர் துறையில் கள ஆய்வு, 30 ஆண்டுகளாகத் தொடர்ந்த தேடல்,  நேரடி அனுபவம், பகுத்தறிவு  ஆகியவற்றின் உதவி கொண்டு ஆசிரியர் அளித்திருக்கும் விடைகள்,  நம் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாக அகற்றி, இயற்கையைச் சரியான கோணத்தில், நம்பகத்தன்மையுடன் புரிந்து கொள்ள உதவுகின்றன.  

இவரின் பிற நூல்கள்:-
1.   நெருப்புக்குழியில் குருவி
2.   பாம்பு என்றால்
3.   பறவையியல் அறிஞர் சலீம் அலி
4.   யானைகள்:- அழியும் பேருயிர்
5.   இயற்கை:செய்திகள், சிந்தனைகள்
6.   வட்டமிடும் கழுகு


கேள்வி:-  பல்லுயிரியம் (BIO DIVERSITY) என்றால் என்ன?
பதில்:_ இன்றுவரை பூமியில் கண்டறியப்பட்டு, பெயரிடப்பட்ட சுமார் 8 லட்சம் உயிரினங்களும், பயிரினங்களும் நம்முடன் வாழும் வளர்ப்பு மற்றும் செல்லப்பிராணிகளோடு, மனிதரும் சேர்ந்த பெரும் உயிர்ச் சூழலமைப்பே பல்லுயிரியம் ஆகும்.
இது போல் வினா விடை பாணியில் அமைந்துள்ள இந்நூலில், வாசகர்களும், நேயர்களும் பல சமயங்களில் கேட்ட கேள்விகளுக்கு மெல்லிய நகைச்சுவை இழையோட, பொட்டில் அடித்தாற் போல் இவர் கூறியிருக்கும் பதில்கள், ரசிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கின்றன.  இயற்கையைப் பாதுகாக்க ஒருவர் விரும்புகிறார் என்றால், அவர் செய்ய வேண்டிய முதல் வேலை, எல்லாவகையான மூடநம்பிக்கையையும் விட்டொழிக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.    

காட்டுகள்:-
1.   கேள்வி:- புலியின் மாமிசத்தைச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்கிறார்களே?
பதில்:- புலியின் மாமிசம் மட்டுமல்ல, எதனுடையை மாமிசமும் ஆண்மையைப் பெருக்காது.  கொலஸ்ட்ராலைத் தான் பெருக்கும்.  உலகிலேயே மக்கள் தொகையில் விஞ்சி நிற்கும், இந்தியாவுக்கு இன்னுமெதற்கு ஆண்மை?
2.   கேள்வி:- மயில் ஒருவரது கண்ணைக் கொத்திவிட்டால், மயில் ரத்தத்தை எடுத்துத் தேய்ந்தால் சரியாகிவிடுமாமே!
பதில்:- ஆபத்தான பொய்.  உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.  மருத்துவ மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். 
3.   பாம்புக்கடிக்கு மருந்துண்டா?  நாட்டு வைத்தியத்தில் குணமாகுமா?
ஊசி மருந்து நிச்சயமுண்டு.  ஆனால் நாட்டு வைத்திய முறைகள் ‘பேரின்பலோகப் பயணத்திற்கே’ சீட்டு வழங்கும்…………...”.

பாமர மக்களைப் போலவே, ‘மெத்தப்’ படித்த இலக்கியவாதிகளும் இயற்கையைப் பற்றிய சரியான புரிதலின்றி, மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் என்கிற போது, அத்தகைய கேள்விகளுக்குச் சற்று காட்டமாகவே பதிலிறுக்கிறார் ஆசிரியர்.  
காட்டு:-
சிங்கத்தின் முகத்தை ஈக்கள் மொய்க்காது என வைரமுத்து ஒரு கவிதையில் குறிப்பிடுகிறாரே, உண்மையா?”
“சிங்கத்தின் முகமாகட்டும், புலியின் பொச்சாகட்டும், ஈக்கள், கொசுக்கள் மொய்த்துப் பிடுங்குவது சர்வ சாதாரணம்.  நமது ஆக்கங்கெட்ட கவிஞர்களை நினைத்தால், எரிச்சல் தான் ஏற்படுகின்றது.  முதலில் இவர்கள் நமது 1000 ஆண்டுகட்கு முந்தைய தமிழ் இலக்கியத்தைக் கூர்ந்து கவனித்து, எதார்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.”

இக்காலத்தில் இயற்கையைப் பாதுகாத்தல், இயற்கையோடியைந்து வாழ்தல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவை குறித்து எல்லோரும் வாய்கிழியப் பேசினாலும், இயற்கைவளம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அறிந்தவர்கள், நூற்றுக்கு இரண்டு பேர் மட்டுமே என்கிறார் ஆசிரியர்,
இதற்கு இவர் கூறும் காரணங்கள்:-
1.   ரசனையற்ற மூட நம்பிக்கை நிறைந்த மக்கள்
2.   இயற்கை பற்றிய புரிதல் சிறிதுமின்றி, சுயமேதாவிலாசத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும், ‘மெத்த’ படித்த இலக்கியவாதிகள்
3.   எந்தத் தொலைநோக்கு திட்டமும் இல்லாத அரசுகள்.
“நம் நாட்டின் பெரிய அளவிலான இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதி மலைச்சாரலிலிருந்து மழை நீரால் ஆற்றில் வரும் வளமான வண்டல் மண்!; அடுத்தது மணல்! வருங்காலம் கொடுமையானது!” என்று இவர் சொல்லியிருப்பதைப் படிக்கும் போது, அதிர்ச்சியாக இருக்கின்றது.
ஒரு நாட்டின் மண்வளம் அழிகிறதென்றால், அந்நாடே அழிகிறதென்று பொருள் என்கிறார், பிரான்கிலின் ரூஸ்வெல்ட்.   
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

மரம் வெட்டிய குற்றச்சாட்டுக்காக 1985-86 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 25114 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.  இதில் 397 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர், என்ற இன்னொரு தகவல், அதிர்ச்சியை அதிகப்படுத்தி வேதனையளிப்பதாக உள்ளது. 

இந்நூலில் அதிசய உயிரினங்கள் பற்றிய பல வினோதமான, சுவையான தகவல்களுக்கும் பஞ்சமில்லை
காட்டுகள்:-
1.   பீவர் (Beaver) எனும் பெருச்சாளி முதல்தரமான அணைக்கட்டி. மண்வெட்டி போன்ற வெட்டுப்பற்களால் மரங்களை வெட்டி காட்டாறு ஓடை குறுக்கே நட்டு நீரைத் தேக்குகின்றது. இதன் ஓரத்தில் தரையில் வளைதோண்டி கூடமைக்கும்.  நீண்ட பொந்துகளில் பல அறைகள் இருப்பதால் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது மேலும் நீர்நிலைகள் பனியால் மூடப்படும் போதும், உள்ளே இதமாக இருக்கும். 
2.   பார்பாய்ஸ் (Porpoise) என்பது பெருங்கடல்வாழ் சிறு திமிங்கலம். ஏதாவது ஒன்றுக்குக் காயம்பட்டு நீந்த முடியவில்லையெனில் வேறு இரு தோழர்கள் இரு துடுப்புத் தாங்கலாக தூக்கிவந்து கடல்மட்டத்தின் மேலே காற்றைச் சுவாசிக்கச் செய்து உயிர் பிழைக்க வைக்கின்றன.  சிலசமயம் யானை & எறும்பு தங்களுக்குள் உதவி செய்து கொள்கின்றன.

ரீங்காரச் சிட்டு பற்றியும் (கேள்வி எண் 147, 326, 436) சீட்டா & சிவிங்கிப் புலி பற்றியும்   (274, 482) கூறியது கூறலைத் தவிர்த்திருக்க வேண்டும்.

“டிஸ்கவரி சேனலை ரசிப்பவர்களை, நம் கண்ணெதிரே உள்ள இயற்கையையும், நம்மைச் சுற்றியுள்ள காட்டுயிர்களையும் நேசிக்க அழைக்கும் புத்தகமிது; இயற்கையியலாளர் முகமது அலி அவர்களின்  உணர்வு பூர்வமான அக்கறையிலிருந்து உருவான நூல்,” என்று இதன் முன்னுரையில் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மையே.

(08/07/2015 நான்கு பெண்கள் தளத்தில் வெளியான என் கட்டுரை)  

24 comments:

 1. நல்ல நூல் அறிமுகம்....
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. முதல் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி குமார்!

   Delete
 2. Replies
  1. தங்கள் வருகைக்கும் பிடித்திருக்கிறது என்ற கருத்துரைக்கும் மிகவும் நன்றி!

   Delete
 3. “சிங்கத்தின் முகத்தை ஈக்கள் மொய்க்காது என வைரமுத்து ஒரு கவிதையில் குறிப்பிடுகிறாரே, உண்மையா?”//இதைப் படித்த போது " சிங்கம் சிங்கிளாக வரும், பன்றி கூட்டமாக வரும் " என்ற அதிமேதாவித்தன அலட்டல்கள் நினைவில் வந்தன.
  தமிழில் இப்படியான நூல்கள் மிகக் குறைவு. இதை வரவேற்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. திரைப்படத்தில் இடம்பெற்ற சிங்கம் சிங்கிளா வருமா என்ற கேள்வியும் இந்நூலில் உண்டு. சிங்கம் எப்போதுமே கூட்டமாகத்தான் இருக்கும் என்று ஆசிரியர் பதில் சொல்லியிருக்கிறார். மேலும் இயற்கையின் படைப்பில் சிங்கம் என உயர்த்திப் பேசுவதையும் பன்றி எனத் தாழ்த்திப் பேசுவதையும் ஆசிரியர் தவறு எனச் சொல்கிறார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி யோகன்! நீங்கள் சொல்வது போல இயற்கையைப் பற்றிய புத்தகங்கள் இப்போது தான் தமிழில் வரத்துவங்கியுள்ளன. அதனைக் கண்டிப்பாக நாம் வரவேற்கவேண்டும்.

   Delete
 4. சுவாரஸ்யமான புத்தகம் என்று தெரிகிறது. மூன்றாவது கேள்வியும் பதிலும் ஒரே நிறத்தில் அமைந்து விட்டது!

  இயற்கையைக் காத்து, சிங்கராஜாவைக் காக்கும் மக்கள் (கிராமம்) பற்றி இன்றைய எங்கள் பாஸிட்டிவ் செய்திகளில் ஒரு செய்தி உண்டு!


  சுவாரஸ்ய அறிமுகம்.

  ReplyDelete
  Replies
  1. ஒரே நிறத்தில் இருந்த கேள்வி பதிலைச் சரிசெய்து விட்டேன். சுட்டியமைக்கு நன்றி. இந்த வார பாசிட்டிவ் செய்தியை இன்னும் நான் வாசிக்கவில்லை. சுவாரசியம் என்றறிய மகிழ்ச்சி ஸ்ரீராம்!

   Delete
 5. நல்லதொரு புத்தகத்தை நயம்பட அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. நூல் அறிமுகம் நயம்பட இருப்பதறிந்து மகிழ்ச்சி துரை சார்! கருத்துக்கு மிகவும் நன்றி!

   Delete
 6. நல்ல, பயனுள்ள நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு மிகவும் நன்றி முனைவர் ஐயா!

   Delete
 7. நல்ல நூல் தங்களின் அறிமுகத்தில் தெரிந்துக் கொண்டோம்.
  அது உண்மைதான், இவர்களின் வரிகள் உண்மைதானோ என்று நினைக்கும் விதத்தில் பேசப்படும்.
  அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நல்ல நூல் அறிமுகம் என்ற பாராட்டுக்கு நன்றி மகி!

   Delete
 8. பயனுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த நூலை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! மதுரையில் கிடைத்தால் வாங்கி விடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி செந்தில்!

   Delete
 9. சிறந்த பகிர்வு


  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. சிறந்த பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி. உங்கள் புதிய வலைப்பூ பற்றி தெரிவித்தமைக்கு நன்றி!

   Delete
 10. பலருடைய மூட எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் உடைக்கும் அற்புதமான புத்தகம் என்பது உங்கள் அறிமுக வரிகளிலிருந்தே மிகவும் நன்றாகத் தெரிகிறது. காட்டாகக் காட்டப்பட்டிருக்கும் கேள்விகளில் நகைச்சுவையும் நம் மக்களின் அறியாமை குறித்த ஆதங்கமும் ஒருங்கே தென்படுகின்றன. அருமையானதொரு நூல் அறிமுகத்துக்கு நன்றி அக்கா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா! பல்லுயிரியம் பற்றி விளக்குவதுடன் இயற்கையைப் பற்றி நம்மிடையே இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு அறிவியல் பூர்வமாகப் பதில் சொல்லியிருப்பது சிறப்பு. வாய்ப்புக்கிடைத்தால் அவசியம் வாசி. கருத்துரைக்கு மிகவும் நன்றி கீதா!

   Delete
 11. இத்தகைய நூல்கள் தமிழில் குறைவு . ஒரு நல்ல நூலை அறிமுகப்படுத்தியமை பாராட்டுக்கு உரியது ; இயற்கையைப் பேணாவிடினும் அழிக்காமலாவ்து இருப்போம் .

  ReplyDelete
 12. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!

  ReplyDelete
 13. நல்ல புத்தகம் நானும் படித்துள்ளேன்...வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்...நன்றி

  ReplyDelete
 14. வாங்க கீதா! விழா பொறுப்பேற்று உழைக்கும் சமயத்திலும் என் தளத்துக்கு வருகை தந்து கருத்தளித்தமைக்கு மிகவும் நன்றி. உங்கள் அழைப்புக்கு மிகவும் நன்றி. தங்களைச் சந்திக்க ஆவலாயிருக்கிறேன்.

  ReplyDelete