நல்வரவு

வணக்கம் !

Thursday, 24 September 2015

துதிக்கவும் வேண்டாம்; மிதிக்கவும் வேண்டாம்அடுப்பெரிக்கும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்று கேட்ட காலம் மலையேறிவிட்டது.  ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்த கல்வி இன்று எல்லா வகுப்புப் பெண்டிருக்கும் கிடைக்கிறது.  உயர்கல்வி கற்கிறார்கள்; வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதிக்கிறார்கள்;

நான்கு சுவர்களுக்குள் அடுப்பங்கரையே கதி என்று முடங்கிக் கிடந்தவர்களுக்கு, வெளியுலகச் சாளரம் திறக்கப்பட்டுவிட்டது; சைக்கிள் ஓட்டக்கூடப் பயந்தவர்கள், இன்று விண்வெளியில் ராக்கெட்டில் பறக்கிறார்கள்.  செவ்வாய்க் கிரகத்துக்குப் போகும் பட்டியலில் கூடப் பெண்ணின் பெயர் இருக்கின்றது.  எனவே பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறிவிட்டார்கள்; ஆண்களை மிஞ்சி விட்டார்கள் என்ற பொய்யான வாதம், பலரால் முன் வைக்கப் படுகின்றது.

இவர்கள் சுட்டிக்காட்டும் சாதனைப் பெண்டிரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், மொத்த பெண்கள் தொகையில், ஐந்து சதவீதம் கூடத் தேறாது.  இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்கள் சிலரை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பெண்கள் தினமான மார்ச் எட்டாம் நாளன்று ஒட்டு மொத்த பெண்கள் சமுதாயமே, விழிப்புணர்வு பெற்று எல்லாத் துறைகளிலும் முன்னுக்கு வந்து விட்டது போல, நாளிதழ்களும், ஊடகங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பரப்புரை செய்கின்றன.    

உண்மையில் பெரும்பாலான பெண்களின் நிலை, இன்றளவும் படுகேவலமாக  இருக்கின்ற காரணத்தால் தான், பெண்சிசுக்கொலையை, இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும், நம்மால் முழுவதுமாகத் தடுத்த நிறுத்த முடியவில்லை..  நம் சமூகத்திற்கு, இது எவ்வளவு பெரிய தலைகுனிவு?

இக்காலத்தில் ஆண் பெண் விகிதம் 10 க்கு 7 என்கிற விகிதத்தில் இருப்பதால், பையனுக்குப் பெண் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று ஆணின் பெற்றோர், அடிக்கடிப் புலம்பக் கேட்கிறோம். 
இவர்கள் கூறுவதை உண்மையெனக் கொண்டால், இப்படிப் பெண்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு யார் காரணம்? 

“உன் பெண்ணை என் மகனுக்கு மணமுடிக்க வேண்டுமென்றால், இத்தனை பவுன் நகை, வெள்ளி சாமான் வேண்டும், ஸ்கூட்டர் வாங்கிக் கொடு, வரதட்சிணை தா, சீர்செனத்தி செய்!” என்றெல்லாம் பெண் வீட்டாரைக் கொடுமைப்படுத்தியதன் விளைவாகப்  பெண் குழந்தைகளே வேண்டாம் என்று கருவிலேயே கொன்றுவிடத் துணிந்து விட்டனர் நம் தாய்மார்கள்.

பெண்ணாய்ப் பிறந்து தான் படும் துயரங்களைத் தன் பெண் அனுபவிக்கக் கூடாது; அவள் பிறந்து வளர்ந்து இந்த ஆணாதிக்கச் சமூகத்தில், கொஞ்சங் கொஞ்சமாகச் சித்ரவதை பட்டுச்சாவதை விட, ஒரேயடியாகக் கொன்றுவிடுவது மேல் என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு கருவைக் கலைக்கிறாள் அன்னை.  அது முடியாதபோது குழந்தை பிறந்தவுடன் கள்ளிப்பாலோ, நெல் மணியோ கொடுத்துக், கொல்கிறாள். 

மூன்று வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத போது, வாழ்நாள் முழுக்க பட்டினி கிடந்து உழைத்தாலும், சேர்க்க முடியாத இந்த வரதட்சிணைக்கு அவள் எங்கே போவாள்?  தன் பெண்ணுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்ற துளிநம்பிக்கை இருந்தால் கூட, எந்தத் தாயாவது பத்துமாதம் சுமந்துபெற்ற தன்னருமை குழந்தையைக் கொல்லத் துணிவாளா?  தாயைக் கொலைகாரியாக்கியது யார் குற்றம்?

குழந்தை பெண்ணாய்ப் பிறப்பதற்கும், ஆணாய்ப் பிறப்பதற்கும் ஆணின் குரோமோசோம் தான் காரணம் என்றறியாத மூடர்கள்,  பெண்குழந்தை பிறந்து விட்டால், பெற்றவளை அடித்தும், உதைத்தும், பிறந்த வீட்டுக்குத் துரத்தியும் சித்ரவதை செய்யும் கொடுமை, இன்றைக்கும் தொடர்கிறதே!

குழந்தை பிறந்தவுடன் என்ன குழந்தை என்று கேட்கும் சுற்றமும், ஆணாயிருந்தால் லாட்டரி குலுக்கலில் பரிசு கிடைத்தது போல் அகமகிழ்வதும், பெண்ணென்றால் இழவு செய்தியைக் கேட்டது போல் முகத்தைச் சோகமாக்கி உச் கொட்டுவதும் இன்றும் பெரும்பாலான வீடுகளில் நடக்கத் தானே செய்கிறது?  இல்லையென்று யாரும் மறுக்க முடியுமா?  எனவே குடும்பத்தில் பெண்குழந்தையைச் சுமையாகக் கருதும் நிலைதான் இன்னமும் நீடிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

பழங்காலத்தில் ‘உத்தியோகம் புருஷலெட்சணம்’ என்றார்கள்.   குடும்பத்திற்குப் பொருள் தேடுவது, ஆண்மகனின் கடமையாகவும் சமையல், குழந்தைவளர்ப்பு உள்ளிட்ட வீட்டுப் பொறுப்புக்களைக் கவனிப்பது பெண்ணின் வேலையாகவும் பிரிக்கப்பட்டது.     
ஆனால் இப்போது பெண்களும் வேலைக்குப் போகிறார்கள்.  ஆண்களுக்கு நிகராகச் சம்பாதிக்கிறார்கள்.  என்றாலும் சமூகம் இன்னும் தம்பழைய கொள்கையை மாற்றிக்கொள்ளத் தயாராக  இல்லை. வசதியான மறதி! (SELECTIVE AMNESIA!)

வேலைக்குப் போய் சம்பாதித்துக் குடும்பப் பொருளாதார நிலையை உயர்த்தினாலும், வீட்டில் அவள் ஆற்ற வேண்டிய கடமைகளையும் சேர்த்தே நிறைவேற்றவேண்டும்.  ஊருக்கே அவள் கலெக்டர் என்றாலும், வீட்டில் அவள் சம்பளமில்லா வேலைக்காரிதான்!

பணிக்கும் சென்று கொண்டு, கூடுதலாக வீட்டுப்பொறுப்புக்களையும் கவனிக்கும் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபக்குரியது.  அவள் உழைப்பு ஈவுஇரக்கமின்றிச் சுரண்டப்படுகின்றது.  கணவனின் கடமையென சொல்லப்பட்ட பொருள்தேடுதலில், மனைவி பங்கெடுத்துக் கொண்டு உழைக்கும்போது, அவள் கடமையெனச் சொல்லப்பட்ட வீட்டு வேலைகளில் ஆண் பங்குகொள்வதே தானே நியாயம்?  ஆனால் வீட்டு வேலைகளை ஆண்கள் செய்தால் கேவலம் என்று கருதும், பழைய நிலைமை தான் இன்னும் நீடிக்கிறது. 

வாட்ஸ் ஆப் மற்றும் இணையத்தில் பெரும்பாலான துணுக்குகள் இதை அடிப்படையாக வைத்துத்தான் புழங்குகின்றன. காட்டுக்கு ஒன்று:-
தோளில் துண்டு போட்டுக்கொண்டு கணவன் அடுப்படியில் அமர்ந்து அரிவாள்மனையில் காய்கறிநறுக்க, மனைவி அவன் போட்டுக்குடித்த காபியை ரசித்துப்பருகியபடி ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாளாம்! இது  நகைச்சுவையாம்!  

வாழ்நாள் முழுக்க  காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கைக்குப்போகும் வரை கணவன், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துப் பூர்த்தி செய்யும் மனைவிக்கு, கணவன் ஒருநாள் சமைத்துக் கொடுத்தால் அதுகேவலமா?  ஒருவேளை காபி போட்டுக் கொடுப்பது நகைச்சுவையா?  அது மனிதாபிமானமில்லையா?  ஆண்கள்  ஹோட்டல்களில், கல்யாணவீடுகளில் சமைத்துச் சம்பாதிக்கலாம்; சொந்தவீட்டில் சமைத்தால்மட்டும் கேவலமா?

“வண்டியோட சக்கரங்கள் இரண்டுமட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால், எந்த வண்டி ஓடும்?”
என்றார் கவியரசர். 

குடும்பமென்ற வண்டியில், கணவன் மனைவி என்ற இரண்டு சக்கரங்களில் எதுபெரியது? எதுசிறியது?  திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தமானால்,  இருவரும் சமபங்காளர்கள் தாமே?  அப்படியின்றிக் கணவனை எஜமானனாகவும், மனைவியை அடிமையாகவும் சமூகம் இன்னும் கருதுவதுஏன்?  திருமணத்தின்போது வாழ்நாள்முழுக்க கொத்தடிமையாயிருக்கிறேன் என்று மனைவி அடிமைசாசனமா எழுதிக் கொடுக்கிறாள்?  

மதுரையா, சிதம்பரமா என்று நண்பர்கள் கிண்டலாகக் கேட்கும் கேள்விக்குச் சிதம்பரம் என்று பதில் சொன்னால் தான் அவன் ஆண்மகன்!  அதாவது ‘பொட்டச்சியை’ அடக்கிஒடுக்கி வைத்திருப்பதில்தான், அவன் ‘ஆண்மை’ அடங்கியிருக்கிறது! வாழ்க்கைத்துணையின் மீது பரிவு காட்டுவதிலும், அவள்அன்புக்கு அடிமையாவதிலும் என்ன கேவலம்?   இப்புவியே அன்பு என்கிற அச்சாணியில்தானே சுழல்கிறது!  அன்பே சிவமல்லவா?

கணவனை விட அதிகம் படித்த மனைவி மற்றவரை விட 1.4 மடங்கும்,  பெண் மட்டுமே சம்பாதிக்கும் குடும்பத்தில் 2.44 மடங்கும் அதிகமாக வன்முறையை அனுபவிப்பதாக ஆய்வு முடிவொன்று தெரிவிக்கின்றது.  மனைவி அதிகமாக படித்திருந்தாலோ, சம்பாதித்தாலோ வன்முறையால் மட்டுமே அவளை அடக்க முடியும் என்று கணவன் நினைப்பதே இதற்குக் காரணமாம்.

ஒரு காலத்தில் பெண்ணைப் போகப்பொருளாக மட்டுமேஎண்ணிய  நம் சமுதாயக் கண்ணோட்டம் மாறியிருக்கிறதா? என்ற கேள்விக்குக் கொஞ்சங்கூட மாறவில்லை என்பதுதான் என் பதில்.

பெண்ணிற்குத் தன் மேல் விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதை யோசிக்காமல், தனக்குப் பிடித்தால் அவளுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, அவள் மறுத்தால் அமிலம் வீசுவது என்பது தொடர்கதையாகியிருக்கின்றது.  அவளும் உயிருள்ள ஒரு பெண்; நம்மைப் போல அவளுக்கும் விருப்பு வெறுப்புகள் உண்டு என்று ஏனோ நம்ப மறுக்கின்றனர் நம் இளைஞர்கள்.

உலகின் தைரியமானபெண் என்றவிருதை 2014 ஆம்ஆண்டு மைக்கேல் ஒபாவிடம் பெற்ற நிகழ்வில், லஷ்மி கூறியசொற்கள், நம்நெஞ்சில் முள்ளாகக் குத்திக் குருதிவடியச் செய்கின்றன:-

என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்தது என் முகம் மட்டுமல்ல;  என் கனவுகளும் தாம். இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் இதயத்தை அன்பால் நிரப்பப் பாருங்கள்; ஆசிட்டால் அல்ல!”

நம் இளைஞர்கள் திசை மாறிப் போவதற்குத் தரங்கெட்ட நம் தமிழ்த் திரைப்படங்களும் 99% பெண்ணைப் போகப்பொருளாகக் காட்டும் ஊடக விளம்பரங்களும் தான் முக்கிய காரணம்   நம் தமிழ்ப்படக் கதாநாயகிகள் பெரும்பாலும் அரை லூசுகளாகத் தான் படைக்கப்படுகின்றனர்.  நடைமுறை வாழ்வுக்குச் சற்றும் பொருந்தாத மழலையில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதும், அரைகுறை ஆடையில் மழையில் நனைந்தவாறு ஆடிப்பாடிக் காதலிப்பதும் மட்டுமே இவர்கள் வேலை.

பணியிடங்களில் சக ஊழியர்களிடமும், மேலதிரிகாரிகளிடமும் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்,  மகளிரின் அந்தரங்க கதைகளைக் கேட்டால் இரத்தக் கண்ணீர் வடிக்க நேரும்.  குடும்பச் சூழ்நிலையால் வேலைக்குப் போயே ஆக வேண்டும் என்ற நிலையிலுள்ள பெண்கள், தங்கள் கஷ்டத்தை வீட்டிலோ, வெளியிலோ சொல்ல முடியாமல், மன அழுத்தத்துக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள். 

பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வை நியாயப்படுத்த அவர்களின் உடையைக் காரணம் காட்டும் ஆண்கள், குழந்தைகளை வன்புணர்வு செய்யும் கொடுமைக்கு என்ன காரணம் சொல்வார்கள்?

பச்சிளங்குழந்தைகள் கூட அடுத்தடுத்துப் பாலியல் வன்முறைக்குள்ளாகும் இந்த ஆபத்தான சூழ்நிலையில், ஒட்டு மொத்த சமுதாயத்தையே தலைகுனியச் செய்யும் இந்த இழிசெய்கையின் காரணத்தை ஆய்ந்து, அதை வேரறுக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், 

பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்ப்பதை விட்டு விட்டு ஆண்குழந்தைகளின் வளர்ப்பில் போதிய கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது!.  சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை; அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது போன்ற பழைய நடைமுறைக்கொவ்வாத வாதங்களைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டுப் பெண்களின் உணர்வுகளை மதிக்கவும் மரியாதை கொடுக்கவும் இளம்பருவத்திலேயே ஆண்பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.  இது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் துவங்க வேண்டும். 

எனவே முடிவாக நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இது தான்:-

பெண்ணைச் சக்தியின் அவதாரமாகத் துதிக்கவும் வேண்டாம்; காலில் போட்டு மிதிக்கவும் வேண்டாம். அவள் உணர்வுகளை மதித்து, எண்ணங்களுக்கு மரியாதை கொடுத்துச் சக மனுஷியாக நடத்தினால் அதுவே போதும்; முன்னேற்றத்தை அவளே தேடிக்கொள்வாள்!

 (வலைப்பதிவர் திருவிழா 2015 – புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப்போட்டிக்காக எழுதப்பட்டது.)   (பிரிவு வகை 3 - பெண்கள் முன்னேற்றம் கட்டுரைப்போட்டி) இக்கட்டுரை என் சொந்தப்படைப்பென்றும், இதற்கு முன் வெளியானதல்ல என்றும் போட்டி முடிவு வெளியாகும் வரை வெறெங்கும் பிரசுரத்துக்கு அனுப்பமாட்டேன் என்றும் சான்றளிக்கிறேன்.


(படம் -  நன்றி - இணையம்)

37 comments:

 1. சிறப்பாக இருக்கின்றது தங்களின் ஆக்கம்..

  வெற்றிக்கு நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. முதல் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி துரை சார்!

   Delete
 2. ஆம் அம்மா, அருமையாக சொன்னீர்கள்,
  ஆண்பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கனும் இப்போதே,,,,,
  அருமை, வெற்றிப் பெற வாழ்த்துக்கள்,

  ReplyDelete
  Replies
  1. அருமை எனப்பாராட்டியமைக்கு நன்றி மகி. வாழ்த்துக்கு மீண்டும் என் நன்றி!

   Delete
 3. மதிக்கவும் வேண்டாம் துதிக்கவும் வேண்டாமென
  மனதிற் பதிந்த தங்களின் ஆக்கம்
  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!

  த ம 1

  ReplyDelete
  Replies
  1. வெற்றி பெற வாழ்த்தியதற்கும் த ம வாக்குக்கும் நன்றி இளமதி!

   Delete
 4. சிறப்பாக வந்திருக்கிறது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சிறப்பாக வந்திருக்கிறது என்று பாராட்டியதற்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ் சார்!

   Delete
 5. "பெண்ணைச் சக்தியின் அவதாரமாகத் துதிக்கவும் வேண்டாம்; காலில் போட்டு மிதிக்கவும் வேண்டாம். அவள் உணர்வுகளை மதித்து, எண்ணங்களுக்கு மரியாதை கொடுத்துச் சக மனுஷியாக நடத்துங்கள் அதுவே போதும்; முன்னேற்றத்தை அவளே தேடிக்கொள்வாள்!" என்ற கருத்தை வரவேற்கிறேன்.
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மனந்திறந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

   Delete
 6. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி தனபாலன் சார்!

   Delete
 7. தலைப்பே மிகவும் பொருத்தமாகவும் யோசிக்கவும் வைத்துவிட்டது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி முனைவர் ஐயா!

  ReplyDelete
 9. சமுதாயத்தில் பெண்களின் இன்றைய மோசமான நிலையை மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள் அக்கா.. குடும்ப வன்முறைக்கானக் காரணங்கள் கலக்கமடையச் செய்கின்றன. இனிவரும் தலைமுறைகளிலாவது ஆண்பிள்ளைகள் விழிப்படைந்து பெண்ணை தமக்கு நிகராகப் பார்க்கும் நிலை வரவேண்டும். கட்டுரைக்கான தலைப்பு மிகப்பொருத்தம். பாராட்டுகள். வெற்றிபெற என் இனிய வாழ்த்துகள் அக்கா.

  ReplyDelete
  Replies
  1. விரிவான பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி கீதா! வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி!

   Delete
 10. அருமை அருமை நிதானமாக அனைத்தையும் எடுத்து வைத்துள்ளீர்கள் நன்றி ! வெற்றி பெற வாழ்த்துக்கள்மா ..! இவற்றை தான் நான் எழுத இருந்தேன். சரி இனி என்ன செய்வது வேறு பார்க்கலாம். ஹா ஹா ...

  ReplyDelete
  Replies
  1. பெண்கள் பிரச்சினை என்றால் எல்லோரும் திரும்பத் திரும்ப இதையே தான் எழுதுவார்கள் இனியா! நான் எழுதினால் என்ன? நீங்கள் உங்கள் பாணியில் உங்கள் கோணத்தில் எழுதி அசத்துங்கள். வாழ்த்துக்கு நன்றி இனியா!

   Delete
 11. அருமை. செவ்வாய் கிரகத்துக்குக் கூட பெண்கள் போகும் காலம் வந்து விட்டது என்று சொல்லி இருக்கிறீர்கள். உண்மைதான், ஆனால் இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் செவ்வாய் கிரகம் செல்ல இந்தியாவிலிருந்து, அதுவும் தமிழகத்திலிருந்து ஒரே ஒரு பெண் மட்டுமே பெயர் தந்திருக்கிறார். அதுவும் திருமணமாகாத பெண்.

  வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம்! செவ்வாய்கிரகம் போகும் பெண் பற்றி நீங்கள் குறிப்பிடுவது மிகவும்சரி. அதுவும் ஒரு வழிப்பாதை என்று தெரிந்தும் அந்தப்பெண் போக முடிவு செய்திருப்பது வியப்பாக இருக்கிறது. நல்ல தைரியசாலி தான். வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம்!

   Delete
 12. Replies
  1. த ம வாக்குக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!

   Delete
 13. நேர்த்தியான எழுத்து...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும் நேர்த்தியான எழுத்து என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி சதீஷ்!

   Delete
 14. நல்லதொரு ஆக்கம் சொல்லிச்சென்ற விதம் அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் எனது போட்டிக் கவிதையை காண வாரீர் தலைப்பு - மனிதம் மறக்காதே மனிதா,,,
  தமிழ் மணம் 6

  ReplyDelete
  Replies
  1. இரண்டு நாட்கள் வெளியூர் சென்றிருந்தேன் கில்லர்ஜி சார்! விரைவில் உங்கள் கவிதையை வாசிப்பேன். வாழ்த்துக்கும் வாக்குக்கும் என் மனமார்ந்த நன்றி!

   Delete
 15. உண்மைதான் மா துதிப்பது போல் அவளுக்கு செய்யப்படும் கேடுகள்...தொடர்கதை தான்...நல்ல கட்டுரைக்கு வாழ்த்துகள் வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துகள்மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா! கடுமையான வேலைகளுக்கிடையில் நேரமொதுக்கி வாசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கீதா!

   Delete
 16. அருமையான படைப்பு! போட்டியில் வெற்றிபெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மைதிலி! உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 17. சின்னத்திரை, வண்ணத்திரை போன்ற காட்சி ஊடகங்களிலும் விளம்பரங்களிலும் பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக்கி மிதித்துச் சிதைக்கும் வணிகத் தனத்திற்கு எதிரான குரலாக இதுபோன்ற கட்டுரைகள் வரவேண்டும். வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. வாருங்கள் ஐயா! சரியாய்ச் சொன்னீர்கள். கருத்துக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

  ReplyDelete
 19. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

  இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

  நன்றி...

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
 20. மிகத் தெளிவாகத் தீர்க்கமாகப் பெண்களின் பிரச்சினைகளை ஆராய்கிறது உங்களின் கட்டுரை.!..வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சகோதரரே!

   Delete
 21. வாய்ப்பிருந்தால் என் கட்டுரை, கவிதைகளைப் பாருங்கள் சகோதரி..!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக வாசித்துக் கருத்திடுவேன். நன்றி!

   Delete