நல்வரவு

வணக்கம் !

Sunday 20 March 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 1 - தொடர் பதிவு




வளரும் கவிதை அண்ணன் முத்துநிலவன் அவர்கள், தொடரும் தொடர் பதிவர்கள்  என்ற தொடரைத் துவங்கிச் சிலரைத் தொடருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதில் நானும் ஒருத்தி.  என்னை அழைத்ததற்கு, அண்ணனுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணையத் தமிழை வளர்ப்பதையும், இளைய தலைமுறைக்கு, அதைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, அண்ணன் துவங்கியுள்ள இப்பதிவைக் கண்டிப்பாகச் சிறப்பான முறையில் தொடர வேண்டும் என விரும்பினேன்.  ஏதோ என்னாலான சிறு உதவி.

எனவே ஏனோ தானோ என, ஏற்கெனவே பிறர் தளங்களில் வாசித்திருந்த ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும், அறிமுகம் செய்ய விரும்பவில்லை.  எனக்குத் தெரிந்த, நன்கு எழுதக்கூடிய பதிவர்களின் தவறவிட்ட பதிவுகளைத் தேடியெடுத்து வாசித்த பிறகே, இதனை எழுத முற்படுகின்றேன்.

எனக்குப் பிடித்த எல்லாமும், எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல; ஆனால் நான் அறிமுகம் செய்யும் பதிவுகள் எல்லாமே, ஓரளவுக்குத் தரம் வாய்ந்தவை; தரமான எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் எழுதியவை என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

நேரப்பற்றாக்குறை காரணமாக இளையவர்களின் வலைப்பூக்கள் எதற்குமே நான் சென்றதில்லை;   நேரங்கிடைக்கும் போது, இத்தொடர்பதிவில் பிறரால் அறிமுகமாகும், எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களின் பதிவுகளை கண்டிப்பாக வாசிப்பேன்.

பிரபலங்களின் வரிசையில் நான் அடிக்கடி உலவுவது,  எஸ்.ரா எனப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலைப்பக்கம் என்றாலும், ஏற்கெனவே அண்ணன் முத்துநிலவன் அவரை அறிமுகப்படுத்திவிட்டதால், நான் தவிர்த்துவிட்டேன்.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டணம் என்ற ஊரில் பிறந்த தோப்பில் முகமது மீரான் என்பவரின் வலைத்தளம்,வேர்களின் பேச்சு.

இவரின் புகழ் பெற்ற புதினம், கடலோரக் கிராமத்தின் கதை.  1997 ஆம் ஆண்டு ‘சாய்வு நாற்காலி,’ என்ற புதினத்துக்காக, இவருக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

‘ஒரு வட்டார மக்களைப் பற்றி எழுதப்பட்ட இவை, உலகின் எல்லா வட்டார மக்களுக்கும் உரியவை,’ என்று இவர் வலைத்தள முகப்பில் சொல்லியிருப்பது மிகவும் உண்மை. 

எல்லா இடங்களிலும் மனிதர்கள் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்; என்ன தான் இனம், மொழி, கலாச்சாரம் மாறினாலும், இவர்களின் அடிப்படை குணங்கள் மாறுவதில்லை என்பதை இவர் கதைகளை வாசிக்கும் போது, உணர்வு பூர்வமாக நாம் அறிந்து கொள்ளலாம். 

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் என்ற கதையில் வரும் நிகழ்வு போலவே, எனக்கும் நடந்ததால் என்னால் அக்கதையை மிகவும் ரசிக்க முடிந்தது.  நீங்களும் படித்துப் பாருங்களேன்!    


என் மனதை மிகவும் பாதித்த இவருடைய இன்னொரு சிறுகதை தங்க வயல்‘. வாசித்து முடித்து ஒரு சில மணித்துளிகள், கதையின் பாதிப்பிலிருந்து, என்னால் மீள முடியவில்லை:-

அடுத்து என்னைக் கவர்ந்தது, நம் காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான நாஞ்சில் நாடன் அவர்களின் வலைத்தளம்.
எழுத்தாளன் என்பவன் யார்?
எழுதுகின்ற நாம் அனைவரும் எழுத்தாளர்கள் என்றால், நாம் தவற விடக்கூடாத பதிவு என நான் நினைப்பது அவர் எழுதிய
‘எழுத்தாளன் என்பவன்,’ என்ற கட்டுரை.  அதிலிருந்து சிறுபகுதி:-
“ஐந்தாண்டுகளுக்கு முன்பு, மேற்சட்டை இன்றி, வெகுளிப் பார்வையுடன் பிஸ்கெட் தின்று கொண்டிருந்தான் ஒரு சிறுவன். விடுதலைப் புலிகளின் தலைவன், தமிழின மாவீரன் பிரபாகரனின் மகன். அது முதல் காட்சி எனில், நெஞ்சில் குண்டடிபட்டு, கருஞ்சிவப்பு ரத்தம் படர்ந்து கொலையுண்டு கிடந்தது, அடுத்த காட்சி. அறம் பேசிய நமது அரசும், இத்தகு பாதகங்களுக்குக் கூட்டாகவும், சாட்சியாகவும் நின்றது.
மராத்திய, வங்காள, கன்னட, மலையாள தேசத்தினருக்கு இது நடந்திருந்தால், அவர்களின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும்? இங்கேன் சில காகங்கள்கூடக் கரையவில்லை? எழுத்தாளனைப் பொருட்படுத்தாத சமூகம் இது. ஒரு மொழியை, மொழி பேசும் சமூகத்தின் பண்பாட்டை, வரலாற்றை, கலையை, மரபுகளை அடுத்த நூற்றாண்டுக்கு எனத் தொடர்ந்து கடத்துபவன் எழுத்தாளன்.
அவன் குரல் நசுக்கப்படுமானால், அலட்சியப்படுத்தப்படுமானால், இளக்காரம் செய்யப்படுமானால், அது அந்தச் சமூகத்தின் இழிவு. அறிவுஜீவிகள் என்று கொண்டாடப்படுவோரே இதனை அறிந்திருக்கவில்லை என்பது எத்தனை அவலம்?”
அடுத்து  நான் தவறாமல் தொடரும் வலைப்பூ சொ.ஞானசம்பந்தன் அவர்களின் இலக்கியச்சாரல். இவர் என் தந்தை என்பதும் ஒரு காரணம்.
சிறுவயதில் இரவுச் சாப்பாட்டின் போது, தங்கை, தம்பிகளுடன் வட்டமாக அமர்ந்து கொண்டு, அப்பா சொல்லும் கதைகளை, அவர்தம் பழைய  நினைவுகளை, பாரீஸ் நகர அனுபவங்களை, பார்த்த உலகத் திரைப்படங்களை, படித்த பிரெஞ்சு இலக்கியங்களைத் திறந்த வாய் மூடாமல், சாப்பிட்ட கைகாயும் வரை கேட்பது எங்கள் வழக்கம்.
“கை காய்ஞ்சு போயிட்டுது; ஏந்திரிச்சி கையைக் கழுவிட்டாவது பேசுங்களேன்,” என்று அம்மா இடைஇடையே குரல் கொடுப்பார்.  நாங்கள் சட்டை செய்தால் தானே? பேச்சில் அத்தனை சுவாரசியம்! 
மு.வ, நா.பா, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என நூலகத்திலிருந்து அவர் தேர்ந்தெடுத்து வந்து கொடுத்தவற்றை வாசித்ததன் மூலம், ரசனையை ஓரளவு மேம்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது.
இப்போது அது போல் கலந்துரையாட முடியவில்லை என்ற குறையை, அவர் எழுதுபவற்றை வாசிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கிறேன். 
பிரெஞ்சு மொழிவழிக் கல்வி அவர் பெற்றதினால், பிரெஞ்சுக் கதைகள் சிலவற்றை அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  மொழியாக்கம் செய்ய இரு மொழிகளிலும் தேர்ந்த புலமை இருக்க வேண்டும் என்று சொல்வார்.  பிரெஞ்சு வழிக்கல்வி பெற்றவர் என்றாலும், பின்னாளில் சொந்த முயற்சியால், தமிழிலும் வித்வான் பட்டம் பெற்றதினால், அவருடைய ஆக்கங்களை வாசிக்கும் போது, மொழி பெயர்ப்பு என்ற எண்ணம் நமக்கு ஏற்படாது.
அவர் மொழி பெயர்த்த பிரெஞ்சு கதைகளில் இரண்டினை, உங்களுக்குச் சிபாரிசு செய்கிறென்.  வாசித்துப் பாருங்கள்.
முதலாவது அல்போன்ஸ் தொதே (Alphonse Daudet) எழுதிய அந்த வகுப்பு.  எனக்கு மிகவும் பிடித்த கதை இது.
இரண்டாவது பிரெஞ்சு சிறுகதை மன்னர் கீத மொப்பசான் (Guy de Mauppasant) எழுதிய அவன்.   

இக்கதையில் மொப்பசானின் மனநோய் பாதிப்பை, நாம் நன்கு உணர முடியும்.  ஒரு நாள் நடுஇரவில் படித்துவிட்டு, என் நிழலையே பார்த்துப் பயந்த அனுபவம் எனக்குண்டு!    
அடுத்து இயல்பாகவே எனக்குள்ள தமிழிலக்கிய, இலக்கண ஆர்வத்துக்குத் தீனி போடும் தளம் ஊமைக்கனவுகள்‘.

இவருடைய பதிவுகளின் சிறப்புகள் ஒன்றா இரண்டா, எடுத்துச் சொல்ல?  மரபுக்கவிதையில் வெளுத்து வாங்குபவர்! யாப்பு சூட்சுமத்தை எளிய கணக்கு மூலம் கற்றுக்கொடுத்தவர்.  கலித்தொகையைத் தொடராக எழுதப் போகிறேன் என்று சொல்லி, உற்சாகமாக முதல் பதிவை எழுதியவர், ஏனோ அதற்குப் பிறகு தொடரவில்லை.     

"வலையுலகமே காத்திருக்கிறது அய்யா," என்று அண்ணன் முத்துநிலவன் அவர்கள் கூறியிருப்பதை, நானும் வழிமொழிந்து மெளனத்தை உடனடியாகக் கலைக்குமாறு சகோதரர் ஜோசப் விஜூ அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவருடைய பதிவுகள் அனைத்தும் தேனாமிர்தம்.  எடுத்துக்காட்டுக்கு நான் கொடுத்திருக்கும் ஒன்றிரண்டை மட்டும் படித்துப் பாருங்களேன்.  பின் இவருடைய பதிவு, எதையும் தவற விட மாட்டீர்கள்!


'சாமான்யனின் கிறுக்கல்கள்' என்ற வலைப்பூவில் எழுதும் இவரின் பதிவுகள் சுவையானவை; ஆணித்தரமாக கருத்துக்களை முன் வைப்பவை; பல புதிய செய்திகளை அறிந்து கொள்ள துணை செய்பவை.  இவர் எங்களூரைச் சேர்ந்தவர் என்பதில் எனக்குப் பெருமை!   

ஆனால் இவரிடம் ஒரேயொரு குறை!  தொடர்ச்சியாக எழுத மாட்டார்.  ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்குமிடையில் நீ…ண்…ட இடைவெளியிருக்கும்!
இவரின் க்ளிஷே பற்றிய பதிவைப் படித்துப் பாருங்களேன்!   

காலம் திருடிய கடுதாசிகள் என்ற பதிவு, கடிதம் பற்றிய அக்கால சுகமான நினைவலைகளை மீட்டெடுத்து மனதை வருடிய பதிவு.

மேலும் என்னைக் கவர்ந்த பதிவுகள் பற்றி அடுத்த பதிவில்….
தொடரும்..
நன்றியுடன்
கலையரசி.ஞா.                               (படம் நன்றி இணையம்)

28 comments:

  1. தங்களைக் கவர்ந்துள்ள பதிவர்கள் அனைவருமே மிகச்சிறந்த எழுத்தாளர்கள். அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள்.

    இவர்களில் சிலரை எங்களுக்கும் இந்தப்பதிவின் மூலம் அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளதற்கு தங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு சார்! தங்களின் வருகைக்கும் முதல் கருத்துக்கும் என் நன்றி! வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மீண்டும் என் நன்றி!

      Delete
  2. திரு. நாஞ்சில் நாடன் பற்றிய தளத்தில் பின்னூட்டங்கள் இட முடிவதில்லை என்பது ஒரு தகவலுக்காக.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நான் பின்னூட்டமிட முயன்றதில்லை. வருகைக்கும், தகவலுக்கும் நன்றி ஜீவி சார்!

      Delete
    2. முயற்சித்துத் தான் பாருங்களேன். அந்தத் தளம் எஸ்.ஜே.சுல்தான் என்பவர் நாஞ்சில் நாடன் பற்றி தனக்குத் தெரிய வரும் கட்டுரைகளையெல்லாம் அந்தத் தளத்தில் தொகுத்து வருவதாகத் தெரிகிறது. அவ்வளவு தான்.

      அப்புறம் அதே தளத்தில் 'பசி வீற்றிருக்கும் நடுமுற்றம்' என்னும் நாஞ்சில் நாடனைப் பற்றிய ஜெமோவின் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். அப்புறம் நாஞ்சில் நாடனைப் பற்றிய என் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். இரண்டையும் வித்தியாசப்படுத்த உங்களால் முடிந்தால் நாஞ்சில் நாடன் பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதலாம். முயற்சித்துத் தான் பாருங்களேன், கலையர்சி. உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று அதுவும் திரு. சுலதான் பார்வையில் பட்டால் உங்கள் கட்டுரையையும் எடுத்து நாஞ்சில் நாடன் தளத்தில் போட்டு விடுவார். அவ்பளவு தான் விஷயம்.

      Delete
    3. நீங்கள் சொன்ன கட்டுரைகளைப் படிக்கிறேன். நாஞ்சில் நாடன் பற்றி நான் கட்டுரை எழுதுவதற்கு முன்பு அவருடைய எல்லாப் புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். அவருடையது ஒன்றிரண்டு மட்டுமே படித்திருக்கிறேன். தகவலுக்கு நன்றி சார்!

      Delete
  3. அருமையாக -என் எதிர்பார்ப்பையும் தாண்டி - எழுதியமைக்கு முதலில் பாராட்டுகள். நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் அனைவருமே தமிழின் முத்துகள்.
    குறிப்பாக அய்யா மீரான் அவர்களின் “சாய்வு நாற்காலி” நாவலுக்கு, அகாதெமி விருது தருவதற்கு முன்னரே விருதுகொடுத்துப் பாராட்டியது தமுஎகச. அதிலும் குறிப்பாக, அந்த விருதை அய்யாவுக்கு நான் தர, அதற்கு அவர் சொன்ன ஏற்புரையில் “ஒரு தமிழாசிரியர் கையால் நான் பரிசுபெற்றதைப் பெருமையாக நினைக்கிறேன்!” என்ற திருப்பரங்குன்றம் நிகழ்ச்சி எனக்கு நினைவிலாடுகிறது!
    அடுத்த பகுதிக்காகக் காக்க வைத்த அருமையான பதிவுக்கு த.ம.வா.2

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா! தங்கள் எதிர்பார்ப்பைத் தாண்டி எழுதியிருக்கிறேன் என்றறியும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது. இன்னும் சிறப்பாக அடுத்த பதிவை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகமாக்குகிறது உங்கள் பாராட்டு. முகமது மீரானுக்குத் தாங்கள் பரிசினைக் கொடுத்தீர்களா? மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி. த.ம வாக்குக்கு மீண்டும் என் நன்றி.

      Delete
  4. சிறந்த அறிமுகங்கள்.ஊமைக் கனவுகள் மற்றும் சாமானியன் பக்கங்களுக்குச் சென்றிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! சிறந்த அறிமுகங்கள் என்ற பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  5. சீரிய அறிமுகங்கள் சகோதரியாரே
    அருமை
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஜெயக்குமார் அவர்களுக்கு என் நன்றி!

      Delete
  6. இங்கு தாங்கள் குறிப்பிட்டுள்ள தளங்களில் தோப்பில் முகமது மீரான் அவர்களுடைய தளம் மட்டுமே எனக்குப் புதியது. அவருடைய படைப்புகள் சிலவற்றை வாசித்திருந்தாலும் அவருக்கென்று வலைத்தளமிருப்பது இப்போதுதான் தெரியவந்தது. சிறந்த படைப்பாளிகளையும் அவர்தம் தளங்களையும் அறிமுகப்படுத்தல் இன்னும் தொடரவிருப்பது அறிந்து மகிழ்ச்சி. சொ.ஞானசம்பந்தன் ஐயா மொழிபெயர்ப்பு செய்த பிரெஞ்சு படைப்புகள் அனைத்துமே அற்புதம். என்னைக் கவர்ந்தவற்றுள் இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றோடு ழானின் கடிதத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். சாமானியன் பக்கங்கள் தொடர்ந்து சென்றதில்லை. இனி தொடர்வேன். பகிர்வுக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. இத்தொடரைத் தொடருமாறு உன்னை அழைக்கவிருக்கிறேன் கீதா! எனவே விடுபட்ட நல்ல பதிவுகளை நீ உன் தொடரில் அறிமுகம் செய். கருத்துக்கு மிகவும் நன்றி கீதா!

      Delete
  7. சிறப்பான அறிமுகங்கள்..

    ஆக்கங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது
    - தங்களின் கை வண்ணம்..

    தொடரட்டும்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார்! இத்தொடரைத் தொடருமாறு உங்களை அழைகக் நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கெனவே சகோ கரந்தை ஜெயக்குமார் உங்களை அழைத்துவிட்டார். உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி துரை சார்!

      Delete
  8. பல பதிவர்களை தங்கள் மூலம் அறிய முடிந்தது. நேரம் கிடைக்கும் போது அவர்களின் வெளிப்பக்கம் சென்று கட்டாயம் படிப்பேன். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. வாங்க செந்தில்! உங்கள் நேர்காணலை வளரும் கவிதையில் படித்தேன். அருமையான பதில்கள். நேரங்கிடைக்கும் போது வாசியுங்கள். த ம வாக்குக்கு என் நன்றி!

      Delete
  9. வணக்கம்
    பல பதிவர்களை அறியத்தந்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. நல்ல பகிர்வு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார்! வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  11. வலைச்சரம் தொடர்ந்து இல்லையே என்ற குறையைப் போக்கி விட்டீர்கள். கோபு சார் என்று அன்புடன் அழைக்கப்படும் வை.கோபாலகிருஷ்ணன், ஆசிரியர் முத்துநிலவன், உங்களது தந்தை சொ.ஞானசம்பந்தன், ஜோசப் விஜூ - இவர்களது வாசகர்களில் நானும் ஒருவன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளங்கோ சார்! நான் சொல்லியுள்ள அனைவரின் வாசகர் நீங்கள் என்றறிய மிகவும் மகிழ்ச்சி. கருத்துக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  12. இவர்களில் நான் தொடராதவர்களும் உள்ளனர். விரைவில் தொடர்வேன். தற்போதுதான் இப்பதிவைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல முயற்சி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா! நல்ல முயற்சி என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி!

      Delete
  13. வணக்கம் சகோதரி...

    வழக்கம் போலவே தாமதம் ! மன்னிக்கவும்.

    தோப்பில் முகம்மது மீரான்...

    தமிழின் நவீன இலக்கிய உலகம் சரியாக அங்கீகரிக்காமல் விட்டுவிட்ட அருமையான ஒரு எழுத்தாளர் ! ( இன்னும் பலரை போல !!! )

    இவரது கடலோர கிராமத்தின் கதை முஸ்லிம் முரசு இதழில் வெளிவந்த தொடர். சாய்வு நாற்காலியும் அதே இதழில் வெளிவந்ததுதான். இஸ்லாமிய சமூகத்தினருக்காகவே வெளிவந்த இதழ் என்றாலும் இலக்கியத்தரமிக்க படைப்புகள் பல உருவாக காரணமான, முற்போக்கு சிந்தையுடைய பத்திரிக்கை.

    முஸ்லிம் முரசுக்கு பிறகு இந்தியா டுடே தமிழ் பதிப்பில் ஒன்றிரண்டு கதைகளும் கட்டுரைகளும் எழுதிய இவருக்கு ஆதரவான ஊடக பலம் கிடைக்கவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு !

    இவரது கூனன் தோப்பு புதினமும் சிறந்த படைப்புகளில் ஒன்று...

    உங்கள் தந்தை ஒரு தமிழ் அறிஞர் என்பதையும் அவரது படைப்புகளை பற்றியும் இந்த பதிவின் மூலம் அறிந்து வியந்தேன்.

    தோப்பில் முகம்மது மீரான் தொடங்கி, நாஞ்சில் நாடன், தமிழ்த் தொண்டாற்றும் தங்கள் தந்தை, சகோதர் ஊமைக்கனவுகள் ஜோசப் விஜி போன்றவர்களுடன் என் பெயருமா ?..

    என் வலைப்பூவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளீர்கள் சகோதரி...

    முத்து நிலவன் அய்யா மற்றும் உங்களை போன்றவர்களின் முயற்சிகளால் இணையத் தமிழ் செழிக்கும்.

    தொடருவோம்...

    மீன்டும் நன்றிகள் பல.

    சாமானியன்



    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சாம்! தோப்பில் முகமது மீரானின் படைப்புகள் முஸ்லீம் முரசு இதழில் வெளிவந்தவை என்பது நான் அறியாதது. நீங்கள் சொல்லியிருப்பது போல் அவருக்குக் கிடைத்த ஊடக ஆதரவு மிகவும் குறைவு தான். என் தந்தை காரையில் அலியான்ஸ் பிரான்சேவில் பிரெஞ்சு சொல்லிக்கொடுத்தார். உங்கள் தந்தையும் நாகூர் என்றறிந்தேன். நாணயக்காரத் தெருவில் என் சின்ன மாமாவும் பெருமாள் வடக்கு வீதியில் என் பெரிய மாமாவும் வசித்தார்கள். சிறுவயதில் என் பள்ளி விடுமுறை முழுதும் நாகூரில் கழிந்ததால், மலரும் நினைவுகளில் நாகூருக்குச் சிறப்பான இடம் உண்டு. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என் அவா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாம்!

      Delete