நல்வரவு

வணக்கம் !

Saturday 12 March 2016

ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை – நூல் அறிமுகம்

ஆசிரியர்:- ஜீவி
வெளியீடு:- சந்தியா பதிப்பகம், சென்னை-83
தொலைபேசி:-044-24896979
பக்கம்:- 264  விலை – ரூ 225/-

பூவனம் ஜீவி அவர்கள் எழுதி வெளியாகியிருக்கும் மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்,  'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை,' என்ற புத்தகத்தை அண்மையில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

திரு ஜீவி அவர்களைப் பதிவுலகம் நன்கறியும்.  இதுவரை நான்கு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.  

திரு வை.கோபு சார், பத்து மாதம் பதிவுலகில் வெகு விமரிசையாக நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டியில் நடுவராக இருந்து கடமையுணர்வோடும், பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.

மறக்க முடியாத தமிழ் எழுத்துலகில், மணிக்கொடி காலத்தில் கோலோச்சியவர்கள் முதல், இன்றைய எஸ்.ரா வரை 37 எழுத்தாளுமைகளைப் பற்றியும், தமிழிலக்கியத்துக்கு அவர்தம் கொடை பற்றியும் பேசும் நூல் இது.

இப்பட்டியலில் கல்கி, நீல பத்மநாபன், கி.ரா., பிரபஞ்சன் போன்றோர் விடுபட்டது ஏமாற்றமளிக்கிறது என்றாலும், எழுத்தாளர்களின் எண்ணிக்கையை 37 ஆகக் குறைத்ததன் காரணம், நூலின் பக்க எண்ணிக்கை நெருக்கடியே என ஆசிரியர், தம் முன்னுரையில் குறிப்பிடுவது, ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிருக்கிறது.    

இதுநாள்வரை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி, இது போன்றதொரு  தொகுப்பு நூல் வெளியாகியிருப்பதாகத் தெரியவில்லை.  என் ஐயம் உண்மையாக இருக்குமானால், இவ்வரிசையில் முதல் நூல் என்ற பெருமையை இது பெறுகிறது.

வேருக்கு நீர் ஊற்றிச் செழிக்கச் செய்தவர்கள் பிறந்த மண், அவர்தம் இயற்பெயர், வாழ்க்கைச்சூழல், இலக்கியத்துக்கு அவராற்றிய அரும்பணி ஆகியவை குறித்து, நம் இளைய தலைமுறையினர் அறியும்வண்ணம் ஆவணப்படுத்துவது, நம் தலையாய கடமையல்லவா?  இப்பணியை இந்நூல் திறம்படவே செய்கிறது.  முக்கியமாகத் தமிழிலக்கிய வரலாறு எழுத, இது பெரிதும் துணைபுரியும். 

    வாசித்து முடித்ததும், என் மனதில் பட்டவை:-

தமிழில் நிறைய வாசித்திருக்கிறோம் என்று இறுமாந்திருந்த எனக்கு, இன்னும் நான் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்ற உண்மை முகத்தில் அறைகிறது.

ஆசிரியரின் பரந்து பட்ட வாசிப்பும், இந்நூலை எழுத எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தைகளும், என்னைப் பிரமிக்க வைத்தன. இளவயதில் வாசித்த பலவற்றை, மீள் வாசிப்பும் செய்திருப்பதால், பாத்திரங்களின் பெயர்களை ஒன்றுவிடாமல் பட்டியலிடமுடிகிறது.

மேம்பட்ட வாசிப்புத் திறனின் பயனாய், எழுத்தாளரின் மிகச்சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து, நமக்கு அறிமுகம் செய்வதோடு, முக்கியமான பகுதிகளை ஆங்காங்கே கொடுத்து, நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று, தாம் ரசித்து மகிழ்ந்தவற்றை, நமக்கு அடையாளம் காட்டவும் ஆசிரியர் தவறவில்லை. ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!’

இலக்கிய கர்த்தாக்களின் ஆக்கங்களைப் பேசும் நூல் என்பதால் ஆசிரியரும், இலக்கியத்தரமான நடையைக் கையாண்டிருக்கிறார்.  தொடர்ந்த வாசிப்பு காரணமாக பெற்ற மேம்பட்ட ரசனையோடு, எழுத்தாளராயுமிருப்பதால், இது சாத்தியமாயிருக்கிறது.  என்னைப் பெரிதும் கவர்ந்த விஷயம் இது.

எழுத்தாளர் ஒவ்வொருவரின் அறிமுகமும், ஒவ்வொரு விதம்;  ஒன்று போல் இன்னொன்றில்லை என்பதால், அடுத்தடுத்து வாசிக்கும்போது நமக்குச் சலிப்பு ஏற்படவில்லை.  சொல்லப்போனால், இவர் அறிமுகம் செய்யும் விதம், மிக சுவாரசியமாயிருக்கிறது. 

எடுத்துக்காட்டுக்கு நான் ரசித்தவற்றில் சில:-

(வாழ்க்கையின் தரிசனத்தில் நுட்பமாக நெஞ்சில் மின்னலென மின்னிவிட்டுப் போகும் உணர்வைப் பறிகொடுத்துவிடாமல் பொத்திக் காப்பாற்றி, அவற்றிற்குச் சிறுகதை சட்டையிட்டு உலாவவிட்டிருக்கிறார்.) கு.ப. ரா – பக் 18

(ஆலாபனை, மேல்கீழ் சஞ்சாரம் என்று விஸ்தாரமாக பாடத்தொடங்கிய பாடகர், சரணத்துக்கு வரும் போது அவசர அவசரமாக முடித்துக்கொண்டது மாதிரியான உணர்வு.  ஆனால் அவர் தரும் அந்த முடிவும், பளீரென்று மின்னல் வெட்டாய் நிகழ்ந்து, இதற்கு மேல் விவரிக்க என்ன இருக்கிறது என்கிற உணர்வையும் தோற்றுவிக்கும்) புதுமைபித்தன் பக் 30 

(தரிசித்த தரிசன தத்ரூபத்தின் விகசிப்பு, அப்படியே அதே வழிசலுடன்…சிந்தாமல், சிதறாமல், சிந்தா நதியாய்… அதே துள்ளலுடன், அதே துவளலுடன், அதே நெகிழ்தல், குழைதலுடன், அதே பரவசத்துடன், அதே சூட்டோடு பரிமாறியிருக்கிறார்.  தன் நெஞ்சிலிருந்து பிறர் நெஞ்சுக்குக் கூடு விட்டுக் கூடு பாயச் செய்திருக்கிறார்) லா.ச.ரா (பக் 55).

'புதுப்பாதை வகுத்த புதுமை பித்தன்', 'நினைவு நதியில் வண்ணதாசன்', 'கொஞ்சு தமிழ் நாஞ்சில் நாடன்,' 'எண்ண ஓவியன் வண்ணநிலவன்,' 'எழுத்துப்பயணி எஸ்.ரா.' என அழகிய கவிதையாய்த் தலைப்புகள்!.

புதிதாக நான் தெரிந்து கொண்ட செய்திகள் ஏராளம்; அவற்றுள்

இளவயதிலேயே கணவனை இழந்த சகோதரிக்கு, அந்நாளிலேயே மறுமணம் செய்து வைத்த புரட்சியாளர் கு.ப.ரா.  சகோதரியும் புகழ் பெற்ற எழுத்தாளர்;

புரட்சிக்கவிஞரின் புகழ் பெற்ற, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்,’ என்ற கவிதையை, முதன்முதலில் அச்சுக்கோர்த்தவர் எழுத்தாளர் விந்தன்,

எனக்குத் தெரியப்படுத்தாமல், என் கதையில் எந்தப் பகுதியையும் நீக்கக்கூடாது என்று ஜெயகாந்தன் போட்ட நிபந்தனைக்கு,  ஒப்புக்கொண்ட விகடன்!

வண்ணதாசனின் இன்னொரு பெயர் கல்யாண்ஜி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளினூடேயான ஒரு கழுகு பார்வையே, இதன் பக்கங்களாகி இருப்பதாக ஆசிரியர் முன்னுரையில் கூறியிருப்பது மிகச் சரி. 

நமக்குத் தெரியாத, நாம் தவற விட்ட நல்ல பல ஆக்கங்களை,  அறிமுகம் செய்து, அவற்றை எப்படியாவது ஒரு முறை வாசித்துவிட வேண்டும் என்ற உணர்வை, நமக்கு ஏற்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். 

தமிழில் இது போன்ற தரமான நூல்கள், அடுத்தடுத்து வெளிவர நாம் வரவேற்பு நல்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

வாசிப்பு சுகானுபவத்தை வாரி வழங்கிய ஆசிரியருக்கு நன்றி!

நன்றியுடன்,

ஞா. கலையரசி

28 comments:

  1. //ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை – நூல் அறிமுகம்//

    ஆஹா, இதுபோன்று ஒரு நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளதா ! கேட்கவே மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது இது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்!

      Delete
  2. //இதுநாள்வரை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி, இது போன்றதொரு தொகுப்பு நூல் வெளியாகியிருப்பதாகத் தெரியவில்லை.//

    எனக்கும் தெரியவில்லை. ஆனால் எனக்கு எவ்வளவோ விஷயங்கள் தெரிவதே இல்லை என்பது தான் உண்மை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.

    //என் ஐயம் உண்மையாக இருக்குமானால், இவ்வரிசையில் முதல் நூல் என்ற பெருமையை இது பெறுகிறது.//

    இதை இப்போது தங்கள் வாயிலாகக் கேட்கவே எனக்கும் மிகவும் பெருமையாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆம் சார்! அநேகமாக எழுத்தாளர்களைப் பற்றிய முதல் தொகுப்பு நூல் இது என்பதால் தமிழுக்குப் புதுவரவு! நன்றி சார்!

      Delete
  3. //எழுத்தாளர் ஒவ்வொருவரின் அறிமுகமும், ஒவ்வொரு விதம்; ஒன்று போல் இன்னொன்றில்லை என்பதால், அடுத்தடுத்து வாசிக்கும்போது நமக்குச் சலிப்பு ஏற்படவில்லை. சொல்லப்போனால், இவர் அறிமுகம் செய்யும் விதம், மிக சுவாரசியமாயிருக்கிறது.//

    நூலாசிரியர் நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜீவி சார் அவர்கள் அல்லவா ! அதனால் அது நிச்சயமாக சுவாரஸ்யமாக மட்டுமே இருக்கக்கூடும் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார்! இவரும் எழுத்தாளர் என்பதால் நடை மிகவும் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் உள்ளது. கருத்துக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  4. ’வாசித்து முடித்ததும், தங்கள் மனதில் பட்டவை’ என்ற தலைப்பின் கீழ் தாங்கள் எழுதியுள்ள ஒவ்வொன்றும் மிக மிக அருமையாக உள்ளன.

    அதைவிட,

    ‘எடுத்துக்காட்டுக்கு நான் ரசித்தவற்றில் சில’ என்ற வரிக்குக்கீழே எழுதியுள்ளவை அதைவிட அருமையாகவும் அழகாகவும் ‘ஜூஸ்’ போலவும் உள்ளன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  5. இவ்வளவு அருமை, பெருமைகள் வாய்ந்த ஒரு நூலினை வெளியிட்டுள்ள நம் திரு. ஜீவி சார் அவர்களுக்கும், அதை என்னைப் போன்ற அனைவரின் கவனத்திற்கும் இந்தப்பதிவின் மூலம் கொண்டு வந்துள்ள தங்களுக்கும், என் மனமார்ந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    நன்றியுடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்! பதிவை வெளியிட்டவுடனே வந்து கருத்திட்டு என்னைப் பெருமைப்படுத்தியதற்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  6. அன்புச் சகோதரி!

    தாங்கள் வாசித்து மகிழ்ந்ததை வாசித்துக் களித்தப் பாங்கோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி. எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று அழகான விமரிசனம். தங்கள் நுண்ணிய விமர்சனப் பார்வை நெகிழ்ச்சியாக இருந்தது. பதிவுலகில் இந்த நூல் பற்றி முதல் முதலாக வரும் விமரிசனம் தங்களது தான். படித்த சூட்டோடு தங்களைச் சூழ்ந்திருக்கும் சொந்த வேலைகளூக்கிடையேயும் எடுத்துப் பரிமாறியிருக்கிறீர்கள். நம் அருமை நண்பர் வை.கோ. சார் இந்த நூல் பற்றி ஒரு தொடராக அறிமுகம் எழுதப் போவதாகச் சொல்லியிருந்தார். வை.கோ.சாரின் ப்ரோஜெக்ட் பெரிசு போலிருக்கு. இருந்தும் நீங்கள் அவரையும் முந்திக் கொண்டு விட்டீர்கள். வை.கோ. சாரோ என்னையும் முந்திக் கொண்டு வரிசையாக பின்னூட்டமிட்டிருக்கிறார்!

    தங்களுக்கு ஏமாற்றமளித்தது எனக்கும் ஒருவகையில் குறையாகத் தான் இருந்தது. இவர்கள் மட்டுமல்ல, தேவன், வசுமதி ராமசாமி, கொத்தமங்கலம் சுப்பு, ரா.கி. ரங்கராஜன், வாஸந்தி, இந்துமதி, உஷா சுப்பிரமணியன், வையவன் என்று இப்போதைக்கு நினைவுக்கு வருகிற உள்ளம் கவர்ந்த நிறையப் பேர். விடுபட்டவர்கள் மனசில் உறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுத முயற்சி செய்கிறேன்.

    கி.ரா.வைப் பற்றி எழுதவில்லையே என்கிற குறையை அவரின் அரிய நண்பர் கு.அழகிரிசாமியின் கட்டுரையில் லேசாகக் கோடி காட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். தங்கள் அன்பான விமரிசனத்திற்கு நன்றி. சகோதரி!
    இது மேலும் மேலும் என் எழுத்துப்பணிக்கு ஊக்க டானிக்காக நிச்சயம் இருக்கும். மீண்டும நன்றி.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
    Replies
    1. நாம் வாழும் காலத்தின் எழுத்தாளர்களைப் பற்றிய அற்புதமானதொரு ஆவணப்பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுகள் ஜீவி சார். இங்கு கலையரசி அக்காவும் தாங்களும் குறிப்பிட்டிருக்கும் விடுபட்ட எழுத்தாளர்களோடு மற்றுமொரு தொகுப்பு வெளிவந்து இம்முயற்சி முழுமைபெறவேண்டும் என்ற என் விருப்பத்தையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். நூலை வாசிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

      Delete
    2. ஜீவி சார் அவர்களுக்கு நமஸ்காரங்கள்.....

      நன்றிகள் உங்களுக்கு பல ...

      Delete
    3. இது தான் தங்கள் நூல் பற்றிய முதல் விமர்சனம் என்று தெரிந்து மகிழ்ச்சி சார்! இந்நூலில் நான் ரசித்த பகுதியை அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தால் மிக நீளும் என்பதால் தான் சுருக்கிவிட்டேன்.பல இடங்கள் ரசிக்கும்படி இருந்தன. இலக்கியத் தரமான நூலை வாசித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. விடுபட்ட எழுத்தாளர்களைப் பற்றி அடுத்த பகுதியையும் எழுதிவிட்டால் அந்தச் சின்னக்குறையும் நீங்கிவிடும். பரந்துபட்ட வாசிப்பு கொண்டவர்களால் மட்டுமே இது போன்ற தலைப்பை எடுத்துக்கொண்டு புத்தகம் எழுதமுடியும். எழுத்தாளர் ஒவ்வொருவரின் மாஸ்டர் பீஸ் பற்றி நீங்கள் எழுதியிருப்பது என்னைப் போன்றோர்க்கு மிகவும் பயன் தரக்கூடியது. நான் முற்றிலும் அறிந்திராத சிலரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
    4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  7. இதுபோல் ஒரு நூல் வெளியாவது முதல் நூல் என்றால் மிக்க மகிழ்ச்சி...
    எழுத்தாளர் ஜீவி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான நூல் விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார்! தங்கள் வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  8. முந்திக் கொண்டீர்கள். நல்ல பகிர்வு. இது முதல் பாகம்தானே.. இன்னும் தொடரும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நான் முந்திக்கொண்டேனா? விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன், கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்!

      Delete
  9. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜெயக்குமார் சார்! அவசியம் படியுங்கள், மிக நல்ல புத்தகம். கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி!

      Delete
  10. அற்புதமான ஒரு நூலைப்பற்றி இங்கு அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி அக்கா. இன்றைய தலைமுறையில் பலருக்கும் பரிச்சயமில்லாத அருமையான எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைப்பதோடு நாம் வாழும் காலத்தின் ஆவணப்பதிவாகவும் இந்நூல் அமைந்திருப்பது சிறப்பு. வாசிக்கத் தூண்டும் அறிமுகவரிகள். ஒரு எழுத்தாளனுக்கு நூலின் பக்கங்கள், நூலின் விலை போன்றவற்றோடு சமரசம் செய்துகொண்டு எழுதவேண்டிய சூழல் மிகவும் வருந்தத்தக்கது. வாய்ப்பு அமைந்தால் அவசியம் வாசிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. வாசிக்கத் தூண்டும் வகையில் என் அறிமுகம் அமைந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி கீதா! உனக்கும் கண்டிப்பாக ஒரு பிரதி வாங்கி வைப்பேன்.

      Delete
  11. நல்லதொரு நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி . நம் எழுத்தாளர்கள் , கலைஞர்கள் குறித்து , அவர்களின் சாதனை குறித்து , ஆவணப்படுத்தல் அவசியம் .இதற்குமுன் யார் ? எவர் ? என்னும் தலைப்பில் எழுத்தாளர் பற்றி நூல் வந்தது .அது என் கைக்குக் கிடைக்கவில்லை .

    ReplyDelete
    Replies
    1. இது வரைக் கேள்விப்படாத புதிய தகவல். ஆவணப்படுத்துதலின் அவசியத்தை வலியுறுத்தும் தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

      Delete
  12. ஜீவி சாரின் ஒரு நல்ல நூல் பற்றிய ஒரு நல்ல விமர்சனம் உங்களது இந்த பதிவு. சென்ற வாரம்தான் இந்த நூலை வாங்கினேன். படித்துக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளங்கோ சார்! நலமா? தாங்களும் இப்புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பதை அறிந்தேன். உங்கள் பதிவை வாசிக்க ஆவலாய் இருக்கிறேன். மிகவும் நன்றி சார்!

      Delete
  13. சகோதரி அவர்களே, இன்று வெளியான, இந்த நூலைப் பற்றிய எனது பதிவினில், உங்களது இந்த பதிவினைச் சுட்டி ( Link ) செய்துள்ளேன். நன்றி.

    ReplyDelete