நல்வரவு

வணக்கம் !

Sunday 8 May 2016

'அன்னையர் தினம்' - சிறுகதை



"அம்மா! நான் தாம்மா கெளரி பேசறேன்."

"என்னம்மா? காலங் கார்த்தால போன்?  மாப்பிள்ளை, குழந்தை எல்லாரும் செளக்கியம் தானே?

எல்லாரும் நல்லாத்தான்மா இருக்காங்க.  அது சரி.  ஒங்கக் குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு.  உடம்பு, கிடம்பு சரியில்லையா?  பிரஷர் நார்மலாத் தானே இருக்கு?

அதல்லாம் ஒன்னுமில்லை.  மணி எட்டாகுது.  இப்பத்தான் படுக்கையிலேர்ந்து எழுந்திருச்சேன்.  அதான் குரல் கொஞ்சம் கம்மியிருக்குது.  விடியற்காலையில எழுந்து நான் யாருக்குச் சாப்பாடு கட்டப் போறேன்?  நீங்கள்லாம் போன பிறகு எனக்குச் சமைக்கப் புடிக்கலே.  சாப்பிடப் புடிக்கலே.  வர வர வாழ்க்கையே ரொம்ப போரடிச்சிப் போயிடுச்சு!

ஏம்மா சலிச்சிருக்கிறீங்க?  இவ்ளோ நாள் ஓடியாடி நீங்க வேலை செஞ்ச வரைக்கும் போதும். இனிமே நீங்க ஓய்வெடுக்கிற வயசு.  நல்லாத் தூங்கி நல்லாச் சாப்பிட்டு சந்தோஷமா இருங்க.  சரி. சொல்ல வேண்டிய விஷயத்தை மறந்துட்டு என்னென்னமோ பேசிக்கிட்டிருக்கேன்.  இன்னிக்கு மதர்ஸ்டே மா.  ஒங்களுக்கு வாழ்த்துச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.

ஓ இன்னிக்கு  மே எட்டாம் தேதியா?  வர வர நாள், கிழமை எதுவும் ஞாபகம் இருக்க மாட்டேங்குது.  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிம்மா.

சரிம்மா.  அவசரமா  ஆபீசுக்குக் கிளம்பிக்கிட்டுருக்கேன். அப்பாவைக் கேட்டதாச் சொல்லுங்க   அப்புறமா போன் பண்றேன்.

அடுத்தநிமிடம் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

யாரு போன்ல?  கெளரியா?  என்ன காலங் கார்த்தால?   கதிரவன் கேட்டார்.    

இன்னிக்கு அம்மாக்கள்  தினமாம்.  அதுக்கு வாழ்த்துச் சொல்லத்தான் கூப்பிட்டா.

அது சரி.  வெள்ளைக்காரனுங்க தான் ஒவ்வொன்னுக்கும் ஒரு நாளை ஒதுக்கி வைச்சிக் கொண்டாடுறாங்கன்னா  நம்ப புள்ளைகளும் அதை அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டுதுங்களே.  இந்த மாதிரி பெத்த அம்மாவுக்கும் வருஷத்துக்கு ஒரு நாளை ஒதுக்கி வைச்சு அன்னிக்கு அவசர அவசரமா ஒரு போன் பண்ணி வாழ்த்து சொல்றதோட, தங்களோட கடமை முடிஞ்சிட்டுதுன்னு நினைக்குதுங்க போலேயிருக்கு?

சரி வுடுங்க.  இந்த மாதிரி ஒரு நாளை ஒதுக்கி வைச்சிருக்கிறதினாலே யாவது பசங்களுக்கு நம்ம ஞாபகம் வருதில்லே.  அதை நினைச்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

சரி. அவ்ளோ வேலையிலேயும், எம்பொண்ணு எவ்வளவு ஞாபகமா போன் பண்ணுது பாரு. ஒம் பையனும் இருக்கானே. அவன் போன் பண்ணினானா? அவனுக்கெங்கே இதெல்லாம் ஞாபாகம் இருக்கப்  போகுது?

சும்மா இருக்கிற என்னைத் தூண்டிவிட்டுப் பார்க்கிறதில அப்பிடி என்ன சந்தோஷம் ஒங்களுக்கு?  அவனுக்கு என்ன அவசர வேலையோ?   அவனுக்கு நான்னா உசிரு.  காலையில பண்ணாட்டியும், எப்படியும் சாயங்காலத்துக்குள்ளாற பண்ணுவான் பாருங்க.

"என்னமோ போ. பையனை விட்டுக் கொடுக்க மாட்டியே.  மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்துட்டுப் போனவன் தான்.  அவன் குழந்தைக்கு ரெண்டு வயசு முடிஞ்சிட்டுது.  பேரக்குழந்தையை இன்னும் நம்ம கையால தூக்கிக் கொஞ்சமுடியல.  போட்டோவிலேயும், கம்ப்யூட்டரிலேயும் பார்க்கிறதோட சரி.  ஒரு தடவை வந்து கண்ணுல காட்டிட்டுப் போடான்னு சொன்னா, விமான டிக்கெட்டுக்குச் செலவுபண்ண கணக்குப் பார்க்கிறான்.  அதுக்குப் பயந்துட்டு தான் பயணத்தை ஒத்திப் போட்டுக்கிட்டே போறான். எப்பத்தான் வரான்னு பார்ப்போம்.'

"சரி சரி..  அவனைக் குத்தம் சொல்லலேன்னா, உங்களுக்குப் பொழுது போகாது."  

கணவரிடம் மகனுக்காகப் பரிந்து பேசினாலும், பையன் இப்போது மிகவும் மாறித்தான் போய்விட்டான் என்று அவள் உள்மனம் கூறியது.  வெளிநாடு போன புதிதில்,  இரண்டு நாட்களுக்கொருமுறை போன் பண்ணி
அவளிடம் பேசவில்லையாயின், அவன் தலை வெடித்துவிடும்.

சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறான், எல்லாரையும் பிரிந்து தனிமையில் வாடுகிறானே என்று காவேரி தான்,  அவனை வற்புறுத்தி 26 வயதாகும் போதே பெண்பார்த்துத் திருமணம் செய்து வைத்தாள்.  திருமணத்திற்குப் பிறகு, இரண்டு நாட்களுக்கொருமுறை இருந்த தொலைபேசி அழைப்பு, வாரத்திற்கொருமுறை என்றாகி, பின் மாதத்திற்கொருமுறை என்றாகி இப்போது மிகவும் அரிதான விஷயமாகிவிட்டது.

வேலை, குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு போன் செய்ய, அவனுக்கு நேரமில்லையாம்.  "நான் பேசணும்னு நெனைக்கிறப்ப, உங்களுக்குப் பாதி ராத்திரி ஆயிடுது. சரி காலையில பண்ணிக்கலாம்னு நெனைப்பேன்.  வேலைப் பளுவில மறந்துடுதும்மா" என்பான் சமயத்தில்.

மதியம் சாப்பாடு முடிந்து படுத்திருந்த போது, வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.  எழுந்து சென்று கதவைத் திறந்தவளுக்கு ஆச்சரியத்தில் தலை கால் புரியவில்லை.  ஆம்.  அவளது அன்பு மகன் தன் மகளுடன் வாசலில் நின்றிருந்தான்.

'என்னப்பா திடுதிப்பென்று சொல்லாமல் கொள்ளாமல்?'

"அன்னையர் தினத்திற்கு, உங்களுக்கு நேரிலேயே வாழ்த்துச் சொல்லத்தான்மா"

அப்பாவின் கால்களைக் கட்டிக் கொண்ட நின்ற குழந்தையைக் கண்டவள்,
"இது தான் நம்ம வீட்டுக் குட்டி தேவதையா? வாடா செல்லம்" என்று ஓடிப் போய் குழந்தையை வாரியெடுத்து உச்சி மோந்து கன்னங்களில் முத்தத்தைப் பதித்தாள்.  இப்போதாவது வந்து அம்மாவைப் பார்க்கணும்னு தோணிச்சே" என்று செல்லமாகப் பையனைக் கடிந்து கொண்டாள்.

மறுபடியும் மணி அடித்து விழிப்பு வந்த போதுதான், தான் கண்டது கனவென்று உணர்ந்தாள் காவேரி.

கணநேரம் மகிழ்ச்சியில் ஆழ்ந்த மனதில், மறுபடியும் வெறுமை வந்து குடி கொண்டது.  ஒரு வேளை கனவில் கண்டது போலவே, மகன் வந்து நின்றிருந்தால்?  அவசர அவசரமாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

வாசலில் பால்காரன் நின்றிருந்தான்.

"என்ன வேணும்? பாக்கெட்டைப் போட்டுட்டு போக வேண்டியது தானே? எதுக்கு மணி அடிச்சே?'

"எக்ஸ்டிரா பால் பாக்கெட் வேணுமான்னு கேட்கத்தான்மா.''

"ஒன்னும் வேணாம் போ"

சும்மா போனா, எப்பவும் மணியடிச்சி கேட்டுட்டுப் போன்னு சொல்ற இந்தம்மாவுக்கு, இன்னிக்கு என்ன வந்துச்சி?
குழப்பத்துடன் யோசித்தவாறே சென்றான், அவன்.

திரும்பி வந்து படுத்த போது, தூக்கம் முற்றிலுமாக அவளிடமிருந்து விடைபெற்றிருந்தது.

மற்ற நாட்களில் தொலைபேசி ஒலிக்கும் போது "இந்த போன் வேற அப்பப்ப அலறுது.  கால் முட்டி வலிக்குது. நீங்கப் போய் எடுங்க" என்று அலுத்துக் கொள்பவள், அன்று முழுக்க மகனிடமிருந்து போன் வரும் என்ற எதிர்பார்ப்பில், ஒவ்வொரு முறை மணியடிக்கும் போதும் ஓடி ஓடிப் போய் தானே எடுத்து ஏமாந்தாள்.

'ஏங்க!  மணி எட்டரையாயிட்டுது.  தோசை ஊத்திட்டேன்.  சீக்கிரம் சாப்பிட வாங்க.  உடம்பு ரொம்ப அசதியாயிருக்கு. படுத்தாப் போதும்னு இருக்கு."

"என்ன? கல்லை இறக்கிட்டே? ஒனக்குத் தோசை ஊத்திக்கலையா?"

"எனக்கு வேணாம்.  பசியில்ல."

"இராப்பட்டினி கூடாது காவேரி. அதுவுமில்லாம வெறும் வயித்துல மாத்திரை போடக் கூடாது.  ஒரு தோசையாவது சாப்பிடு."

"ஒன்னும் வேணாம். நீங்க கம்முனு சாப்பிட்டுட்டுப் படுங்க.  இது வல்லமையான கட்டை. ஒரு நாளைக்கு மாத்திரை போடலேன்னா, உசிரு போயிடாது."

மணி பதினொன்றிருக்கும்.  தொலைபேசி தொடர்ந்து அலறியது.

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள்,

"ஏங்க ஏங்க.  போன் அடிக்குது.  கொஞ்சம் ஏந்திரிச்சி போயி யாருன்னு பாருங்களேன்."

கணவரைத் தொட்டு எழுப்பினாள்.  ஆனால் அவரிடம் எந்த அசைவையும் காணோம்.

"அதுக்குள்ளே தூங்கிட்டீங்களா?  படுக்கறதுக்குள்ளே எப்படித்தான் உங்களுக்குத் தூக்கம் வருதோ?'

"இன்னிக்குன்னு பார்த்து இந்த சனியன் பிடிச்ச போன் சதா அடிச்சிக்கிட்டே இருக்குது.  கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கவிட மாட்டேங்குது."

சலித்துக் கொண்டே எழுந்து சென்று ரிசீவரை எடுத்தவளின் முகம்
மலர்ந்தது.

"எப்படிப்பா இருக்கே?  உமா எப்படியிருக்கா?  கொழந்தை நல்லாயிருக்காளா? "

''ரொம்ப சந்தோசம்பா. காலையில கெளரி கூட போன் பண்ணி வாழ்த்து சொன்னா.  இன்னிக்குக் கண்டிப்பா நீ போன் பண்ணி வாழ்த்து சொல்வேன்னு அப்பாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்.  எப்பப் பார்த்தாலும் வேலை வேலைன்னு சரியாச் சாப்பிடாம, உடம்பைக் கெடுத்துக்காதப்பா. ஒடம்பைப் பார்த்துக்கோ. சரிப்பா.  எல்லாரையும் கேட்டதாச் சொல்லு.''

"ஏங்க உங்களைத்தானே.  தம்பி போன் பண்ணி வாழ்த்துச் சொன்னான். காலையிலேர்ந்து கடுமையான  வேலையாம். நேரமே கிடைக்கலையாம். இருந்தாலும் இன்னிக்கு எனக்கு வாழ்த்து சொல்றதுக்காகவே போன் பண்ணினானாம். இப்பவாவது ஒத்துக்கிறீங்களா, அவனுக்கு என்மேல உசிருன்னு"

"சரி. சரி.  ஒத்துக்கறேன். மனுஷனை நிம்மதியாத் தூங்க விடு. இனிமேலேயாவது நிம்மதியாப் படுத்துத் தூங்கு.  எங்க எழுந்திருச்சிப் போறே?

''சாப்பிடப் போறேன்."

''பசியே இல்லேன்னு சொன்னே?''

"அப்ப இல்ல.  இப்ப ரொம்பப் பசிக்குது.''

மனைவியின் உற்சாகத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது அவருக்கு.

காலையிலிருந்து மனைவி தவித்த தவிப்பைக் கண்டு வேதனைப் பட்டவர், 'அம்மாவுக்கு போன் பண்ணி அன்னையர் தினம் வாழ்த்துச் சொல்,' என்று மகனுடைய அலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பியது தாம் தான் என்று கடைசி வரை  சொல்லவேயில்லை.
   



(10/12/2012 வல்லமையில் எழுதியது)

படம் - நன்றி இணையம்

35 comments:

  1. கதை மிகவும் அருமை.

    அவர் என்னைப்போன்ற ஒரு அப்பா என அந்தக் கடைசி பாராவைப் படித்ததும் நினைத்துக்கொண்டேன். :)

    மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு சார்! பதிவு வெளியிட்டவுடன் தங்கள் முதல் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் பணிச்சுமை காரணமாக என்னால் உடனே தங்களுக்கு நன்றி சொல்ல முடியவில்லை. இந்தக் கதையில் வரும் அப்பாவைப் போலவே பல அப்பாக்கள் இருக்கிறார்கள் என்பது இக்கதைக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும் போது தெரிகிறது. தன் அன்பை எதிர்பார்த்து ஒரு ஜீவன் இருக்கிறது என்ற உண்மையைப் பிள்ளைகள் புரிந்து கொள்ளும் காலம் வரும் என நம்புவோம். அதுவரை தம் துணையைத் தேற்றி அவர்தம் மனநலனைக் காக்க, அப்பாக்கள் பொய் சொல்லத் தான் வேண்டும். வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்! கதை அருமை என்ற பாராட்டுக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  2. வல்லமையாளரான தங்களின் எழுத்துக்கள் வல்லமையில் வெளிவந்துள்ளதில் வியப்பேதும் இல்லைதான் என்றாலும் அதற்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கு மீண்டும் என் நன்றி சார்!

      Delete
  3. இன்று பெரும்பாலானவர்களின் வீடுகளில் நிகழும் இவ்வாறான நிகழ்ச்சிகளை, கோர்வையாகவும், அழகாகவும், மிகவும் யதார்த்தமாகவும் எழுதியுள்ளதில் எனக்கு ஓர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. :) மீண்டும் என் பாராட்டுகள், மேடம்.

    ReplyDelete
    Replies
    1. கதை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது என்ற தங்கள் பாராட்டு என்னை மிகவும் மகிழ்விக்கிறது. மிகவும் நன்றி சார்!

      Delete
  4. அதான் அப்பா,
    அதான் அம்மா.


    அது எப்பூடி எங்க ஊடு மாதிரியே கீது !!

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுப்பு தாத்தா. தங்கள் வருகைக்கு என் முதல் நன்றி. கதை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது என்பது உங்கள் பின்னூட்டம் வாயிலாக அறிகிறேன். கருத்துக்கு மிகவும் நன்றி சுப்பு தாத்தா.

      Delete
  5. அன்னையர் தின வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  6. என்ன மகன்களோ....

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! வேதனை நிறைந்த தங்கள் கருத்துக்கு என் நன்றி!

      Delete
  7. கதை படிக்கற உணர்வே இல்லை. அப்படி ஒரு யதார்த்தம். கதைன்னா இப்படித் தான் இருக்கணும்.. நிகழ் உலகச் சலனங்களிலிருந்து நம்மை விடுவிக்கற அல்லது கத்தரிக்கிற வல்லமை பெற்றிருக்க வேண்டும்.

    'இது வல்லமையான கட்டை'.. ரொம்ப இயல்பாக நுழைத்திருக்கிறீர்கள்

    அடுத்துச் சொன்ன 'உசுறு போயிடாது' வேறு ஒரு பக்கம் உறுத்தலாக இருந்தது. 'மணி பதினொன்று இருக்கும்..' என்ற ஆரம்பத்திலிருந்து 'ஏங்க உங்களைத் தானே!' என்று அந்தத் தாய் தன் கணவனை எழுப்புகையில் பதட்டமானது.

    முடித்து வைத்த சாமர்த்தியம் ஒரு 'அட!' போட வைத்து கதைக்கு களையைக் கொடுக்கிறது.

    வாழ்த்துக்கள்.




    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார்! பிச்சமூர்த்தி முதல் எஸ்.ரா வரை விமர்சனம் செய்த தங்களிடமிருந்து க்தைன்னா இப்படித்தான் இருக்கணும் என்ற விமர்சனம் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. கதை மிகவும் யதார்த்தமாயிருக்கிறது என்றறிய மகிழ்ச்சி. கதையை விரிவாக விமர்சனம் செய்து வாழ்த்தியமைக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி சார்!

      Delete
  8. அருகில் இருந்து பார்ப்பது போல - அழகான நடை..

    அருமை.. வாழ்க வளமுடன்!..

    (நேரம் இருந்தால் - நமது தளத்தில் மழைச்சாரல் 1 மற்றும் 2 எனும் பதிவுகளைப் படித்துப் பார்க்கவும்..)

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார்! நடையைப் பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு என் நன்றி. பணிச்சுமை காரணமாக அண்மையில் எந்தப் பதிவையும் நான் வாசிக்கவில்லை. விரைவில் மழைச்சாரலைப் படித்துக் கருத்திடுவேன். மீண்டும் நன்றி!

      Delete
  9. நல்ல கதை. அப்பா மகனை அழைத்து பேசியிருப்பாரோ என நினைத்தேன்... குறுஞ்செய்தியாக அனுப்பி இருக்கிறார்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் முதல் நன்றி! கதையின் முடிவைச் சரியாக யூகித்தமைக்குப் பாராட்டுக்கள்!

      Delete
  10. அருமை அருமை உண்மை நிகழ்வுகள்,,, வாழ்த்துக்கள் சகோ,,

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி! வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மகி!

      Delete
  11. அருமையாக இருந்தது! தம்பதியரின் அந்நியோன்னியமான சம்பாஷனைகள் ரசிக்க வைத்தது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ்! கதையை ரசித்துப் பாராட்டியமைக்கும், வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

      Delete
  12. Replies
    1. வாங்க முனைவர் ஐயா! அருமையான கதை என்று பாராட்டியமைக்கு என் அகமார்ந்த நன்றி!

      Delete
  13. அருமையான கதை
    அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! அருமையான கதை என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  14. அன்னையர் தினம் அன்றாவது மகன் தனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கி வாழ்த்து சொல்லும் சாக்கிலாவது தன்னுடன் பேசமாட்டானா என்று பரிதவிக்கும் தாயின் உள்ளம்... வெளியூரிலும் வெளிநாட்டிலும் பிள்ளைகள் வாழும் சூழலில் இங்கே நிராதரவாய்த் தவித்துக்கொண்டிருக்கும் பெற்றமனங்களுக்கு ஒரு சான்று. சீரான கதையோட்டம்... மனைவியின் மனவேதனை அறிந்து மாற்று கண்டறிந்த கணவனின் அன்பு மனந்தொட்டது. அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அருமையான கதைக்குப் பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. கதையின் விரிவான விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன். அருமையான கதை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா!

      Delete
  15. Replies
    1. வாங்க ஸ்ரீராம்! தங்கள் முதல் வருகைக்கும் அருமை எனப் பாராட்டியமைக்கும் என் நன்றி!

      Delete

  16. அருமையான கதைப் பின்னல்

    ReplyDelete
    Replies
    1. ருமையான கதைப்பின்னல் என்ற பாராட்டுக்கு மிக்க நன்றி யாழ்பாவாணன்!

      Delete
  17. சுவையான , எதார்த்தமான கதை . பொதுவாக மகனைக் காட்டிலும் மகள்தான் பெற்றோர்மீது அதிகப் பாசம் கொண்டவள். கதை முடிவில் எதிர்பாராத திருப்பம் . பாராட்டுகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. சுவையாகவும் யதார்த்தமாகவும் இருப்பதறிந்து மகிழ்ச்சி. தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி!

      Delete
  18. அருமை. மனதைத் தொட்ட சிறுகதை. ஆங்காங்கே சிறு சிறு எழுத்துப் பிழைகள் உள்ளன. கவனிக்கவும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும், அருமை என்று பாராட்டியதற்கும் மிகவும் நன்றி சிகரம் பாரதி அவர்களே! வலி மிகும் மிகா இடங்களில் எனக்குத் தேர்ச்சியில்லை. எழுத்து பிழைகளைச் சுட்டினால் திருத்திக்கொள்வேன்.உங்கள் வருகைக்கு மீண்டும் நன்றி!

      Delete