நல்வரவு

வணக்கம் !

Friday 30 September 2016

போர் வீரரின் நினைவுச்சின்னமான பாப்பி மலர்


 
பாப்பி மலர்கள்
அண்மையில் மூன்று மாதங்கள் இங்கிலாந்தில் வசிக்கும் மகன் வீட்டுக்குச் சென்று வர வாய்ப்புக் கிடைத்தது.

ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து கேம்பிரிட்ஜ் வரை வழி நெடுக சாலையோரத்தில், இரத்த சிவப்பு நிறத்தில் நூற்றுக்கணக்கில் மலர்ந்திருந்த பாப்பி மலர்கள் (Poppy) என்னைப் பெரிதும் கவர்ந்தன. 

Papaver குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் Papaver rhoeas.  நாம் சமையலில் பயன்படுத்தும் கசகசாவும் (Papaver  somniferum)  பாப்பி செடியின் விதைதான்.  இதிலிருந்து தான், அபின் (Opium) என்ற போதை மருந்து பெறப்படுகின்றது. 
 
நித்ய கல்யாணி மலர்

நம்மூர் இடுகாடுகளில் தன்னிச்சையாக முளைத்துப் பரவும் நித்ய கல்யாணி (Catharanthus roseus) போல, இந்தப் பாப்பி கல்லறைத் தோட்டங்களிலும், பாழ்வெளிகளிலும் அபரிமிதமாக வளருமாம்.  வயல்வெளிகளில் இது  களையாகக் கருதப்படுகின்றது.        
தனியொரு மலராகப் பார்க்கும்போது இது அத்தனை அழகு என்று சொல்லமுடியாவிட்டாலும், கூட்டமாகப் பார்க்கும் போது சிவப்புக்கம்பளம் விரித்தாற் போல், கொள்ளை அழகுடன் காட்சியளிக்கின்றது! 

இங்கிலாந்து மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும், இது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ,மலர் என்று தெரிந்தபோது, மிகவும் வியப்பாயிருந்தது.பல நாடுகளின் கரன்சி நோட்டுகளிலும், ஸ்டாம்புகளிலும் இது இடம் பெற்றிருக்கின்றது.
 
பாப்பி  இடம்பெற்ற கரன்சி 

சாதாரண ஒரு பூவுக்கு இப்படியொரு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கக் காரணம், ‘IN FLANDERS FIELDS THE POPPIES BLOW’  என்ற உலகப்புகழ் பெற்ற ஒரு போர்க் கவிதையே! 

முதல் உலகப் போரின் போது (1914-18), இதனை எழுதியவர், கனடாவைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஜான் மெக்ரே (John McCray) என்பவர்.  இவர் ஒரு போர் வீரர் மட்டுமல்ல, டாக்டரும், கவிஞருமாவார்.  

 
லெப்.கர்னல் டாக்டர் ஜான் மெக்ரே


ஜெர்மனிக்கெதிரான போரில் நண்பனும், சக வீரனுமாகிய அலெக்சிஸ் ஹெல்மெர் (Alexis Helmer) கொல்லப்பட்டுத் தம் தலைமையில் அடக்கம் செய்த  மறுநாள் (03/05/1915) அந்தப் பாதிப்பிலிருந்து மீளாமல், அவர் இதனை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது.  

முதல் உலகப்போரில் உயிரிழந்த போர்வீரர்களின் நினைவையும், தியாகத்தையும் போற்றும் விதத்தில் அமைந்திருந்ததாலும், இறந்தவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்ததாலும், இக்கவிதை வெளியான சில நாட்களிலேயே, உலகளவில்  மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும்  பெற்றது.

போர்வீரர்களுக்குத் தளர்வை நீக்கி, உற்சாக மூட்டுவதாய் அமைந்திருந்ததால் இது, பலமொழிகளில் மாற்றம் செய்யப்பட்டது.  இங்கிலாந்தில் ஜெர்மனிக்கு எதிரான போரில் ஈடுபட்ட வீரர்களை உற்சாகமூட்ட இது பெரிதும் பயன்பட்டது.

மொய்னா மைக்கேல்

இக்கவிதையால் கவரப்பட்ட அமெரிக்க புரொபஸர் மொய்னா மைக்கேல் (Moina Michael) என்பவர் 1918 ஆம் ஆண்டில் முதல் உலகப்போரில் உயிர்நீத்த படைவீரர்களின் நினைவாக சிவப்பு பாப்பி மலரை அணிந்து கொள்ள வேண்டும் என்று பரப்புரை செய்தார்.  பட்டுத்துணியாலான செயற்கை பாப்பி மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. 

 
செயற்கை பாப்பி மலர்கள்
பின்னர் போர்வீரர்களின் நினைவு தினத்தில், பாப்பி மலர்களை அணியும் பழக்கம் புழக்கத்துக்கு வந்தது.  மெல்ல மெல்ல அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து, பின் காமன்வெல்த் நாடுகளுக்கும் பரவியது.

இரு பக்கங்களிலும் ஏராளமான மனித உயிர்கள் கொல்லப்பட்டுப் பேரழிவை ஏற்படுத்தும் போரைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட விழைபவர்கள், இக்கவிதையையும், சிவப்பு பாப்பி மலர் அணிவதையும் குறை கூறவே செய்கின்றனர்; அமைதியின் சின்னமாக வெள்ளை பாப்பி மலர் அணிவதைச் சிலர் ஆதரிக்கின்றனர். 

எது எப்படியோ ஒரு சாகா வரம் பெற்ற கவிதையின் மூலமாக, இன்றும் இறந்த போர்வீர்ர்களின் நினைவுச் சின்னமாக போற்றப்படுகின்றது இம்மலர்!

இனி  In Flanders fields the poppies blow’ என்ற கவிதையின் சாரம் எனக்குப் புரிந்த அளவில்…..

(இறந்த வீரர்களின் உடல்களை அடக்கம் செய்து), வரிசையாக நடப்பட்டுள்ள சிலுவைகளின் மேல் காற்றில் அசைந்து மோதியாடுகின்றன பாப்பி மலர்கள்.  இடைவிடாது மண்ணில் வெடிக்கும் துப்பாக்கிச் சத்தத்துக்கிடையேயும், விண்ணில்  தைரியமாக பண்ணிசைக்கின்றன வானம்பாடிகள்.  இது தான் ஃபிலாண்டர் போர்க்களப் பகுதி. 

போரில் உயிர்நீத்தவர் யாம்.  சில நாட்கள் முன்பு நாங்கள் வாழ்ந்திருந்தோம்.  விடியலை உணர்ந்திருந்தோம்; அஸ்தமன சூரியனின் தகதக ஜொலிப்பைக் கண்ணுற்றுக் களித்திருந்தோம்.. உறவுகளை நேசித்திருந்தோம்; அவர்களின் அன்புக்கும், பாசத்துக்கும் உரியவராயிருந்தோம். இப்போது இப்போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்றோம்.

எதிரியினுடனான இப்போரைத் தொடர்ந்து நடத்திடுக; வீழ்ந்த எங்கள் கைகள் உங்களிடம் ஒப்படைந்த அணையாத்தீபத்தை, உயரத் தூக்கி முன்னெடுத்துச் செல்க; (தாய் நாட்டுக்காக இரத்தம் சிந்தி நாங்கள் செய்த உயிர்த்தியாகத்தின் மகத்துவத்தை உணராமல்) இறந்து வீழ்ந்த எங்கள் மேல் நம்பிக்கை இழப்பீராயின், இப்போர்க்களத்தில் பாப்பி மலர்கள் பூத்துக் குலுங்கினாலும், நாங்கள் ஒருநாளும் உறங்கமாட்டோம். (எந்நாளும் எங்கள் ஆன்மாவுக்கு உறக்கமில்லை). 

தூக்கத்தை வரவழைக்கும் போதை மருந்து அடங்கிய பாப்பி மலர்கள் ஏராளமாகப் பூத்திருந்த போதிலும், எங்களுக்கு உறக்கம் வராது என்று இறந்த வீரர்கள் சொல்கிறார்களாம்!. 

இனி ஒரிஜினல் கவிதையைச் சுவைக்க விரும்புவோர்க்கு…


In Flanders fields the poppies blow
Between the crosses, row on row,
That mark our place; and in the sky
The larks, still bravely singing, fly
Scarce heard amid the guns below.

We are the Dead. Short days ago
We lived, felt dawn, saw sunset glow,
Loved and were loved, and now we lie
In Flanders fields.

Take up our quarrel with the foe:
To you from failing hands we throw
The torch; be yours to hold it high.
If ye break faith with us who die
We shall not sleep, though poppies grow
In Flanders fields.


என்ன தான் நாம் போரை வெறுத்தாலும், தவிர்க்க நினைத்தாலும் இன்றும் நம் நாட்டின் எல்லையைக் காக்க,  தினந்தினம் சண்டையும், துப்பாக்கிச்சூடும் நடந்து கொண்டு தானே இருக்கின்றன?

உறவுகளை விட்டு வெகுதூரம் பிரிந்து, சியாச்சின் போன்று உறைய வைக்கும் பனியிலும், கொட்டும் மழையிலும் உயிரைப் பணயம் வைத்து, இமைப் பொழுதும் சோராது, நம் எல்லையைக் காக்கும் படைவீரர்களுக்கு, இப்பதிவைக் காணிக்கையாக்குகிறேன்.                                                                                                                                                                                                                         ( (தகவல்கள் மற்றும் படங்களுக்கு நன்றி இணையம் & விக்கிப்பீடியா)                                                  

49 comments:

  1. ஒரேயொரு பதிவுக்குள் எத்தனை எத்தனை விஷயங்களை மிக அழகாகத் தங்களின் தனிப்பாணியில் சொல்லி அசத்தியுள்ளீர்கள். படிக்கப் படிக்க வியந்து போனேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு சார்! வணக்கம். ஊக்கமூட்டும் முதல் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி! அசத்தியுள்ளீர்கள் என்ற பாராட்டுக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  2. //அண்மையில் மூன்று மாதங்கள் இங்கிலாந்தில் வசிக்கும் மகன் வீட்டுக்குச் சென்று வர வாய்ப்புக் கிடைத்தது.//

    இதனைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    //ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து கேம்பிரிட்ஜ் வரை வழி நெடுக சாலையோரங்களில் இரத்த சிவப்பு நிறத்தில், நூற்றுக்கணக்கில் மலர்ந்திருந்த பாப்பி மலர்கள் (Poppy)) என்னைப் பெரிதும் கவர்ந்தன.//

    உங்களை மட்டுமா ! முதல் படத்தில் பார்த்த என்னையும் பெரிதும் கவர்ந்து விட்டன. சிகப்பு நிறமே தனியோர் அழகுதான்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பாப்பி மலர்கள் உங்களையும் கவர்ந்ததறிந்து மகிழ்ச்சி! தொடர்ச்சியான பின்னூட்டம் கொடுத்து மகிழ்விப்பதற்கு நெஞ்சார்ந்த நன்றி!

      Delete
  3. //Papaver குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் Papaver rhoeas. நாம் சமையலில் பயன்படுத்தும் கசகசாவும் (Papaver somniferum) பாப்பி செடியின் விதைதான். இதிலிருந்து தான், அபின் (Opium) என்ற போதை மருந்து பெறப்படுகின்றது. //

    முற்றிலும் புதியதோர் செய்தி. படித்ததுமே ‘கிக்’ ஏற்படுத்துகிறது. :)

    ReplyDelete
    Replies
    1. ஆம் சார்! கசகசா செடியிலிருந்து தான் ஓபியம் தயாரிக்கிறார்கள். எனவே இதை எடுத்து வருவதற்குத் தடை இருக்கிறது. இது தெரியாமல் வெளிநாட்டுக்குச் செல்லும் தமிழர்கள் சமையலுக்குக் கசகசாவை எடுத்துச்சென்று சோதனையின் போது மாட்டித் துன்பத்துக்கு ஆளாவது உண்டு.

      Delete
  4. //தனியொரு மலராகப் பார்க்கும்போது இது அத்தனை அழகு என்று சொல்லமுடியாவிட்டாலும், கூட்டமாகப் பார்க்கும் போது சிவப்புக்கம்பளம் விரித்தாற் போல், கொள்ளை அழகுடன் காட்சியளிக்கின்றது! //

    ஆமாம். பச்சை பேக்-க்ரெளண்டில் சிவப்பு நிறமாக அதுவும் கூட்டம் கூட்டமாக மிகவும் அடர்த்தியாக காணும்போது, சிவப்புக் கம்பளம் விரித்தாற் போல மிகவும் ஜோராகத்தான் இருக்கும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பாப்பி மலர் பற்றிய வர்ணனையைப் படித்து ரசித்தமைக்கு நன்றி சார்!

      Delete
  5. //இனி ‘In Flanders fields the poppies blow’ என்ற கவிதையின் சாரம் எனக்குப் புரிந்த அளவில்…..//

    மிக அழகாக எங்களுக்கும் புரியும் படியாக அதன் சாரத்தைச் சாறு பிழிந்து கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    //தூக்கத்தை வரவழைக்கும் போதை மருந்து அடங்கிய பாப்பி மலர்கள் ஏராளமாகப் பூத்திருந்த போதிலும், எங்களுக்கு உறக்கம் வராது என்று இறந்த வீரர்கள் சொல்கிறார்களாம்!.//

    ஆஹா, எவ்வளவு அருமையாக .... அதுவும் இறந்த ராணுவ வீரர்கள் சொல்லுவது போல .... சூப்பர் !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அருமை, சூப்பர் என்ற பாராட்டுக்கு அகமார்ந்த நன்றி சார்!

      Delete
  6. //என்ன தான் நாம் போரை வெறுத்தாலும், தவிர்க்க நினைத்தாலும் இன்றும் நம் நாட்டின் எல்லையைக் காக்க, தினந்தினம் சண்டையும், துப்பாக்கிச்சூடும் நடந்து கொண்டு தானே இருக்கின்றன?//

    உண்மை. 100% உண்மை. கடந்த ஒரு வாரச் செய்திகளையும், இன்று வந்துள்ள லேடஸ்ட் செய்திகளையும் படித்ததில் .... மிகப்பெரியதோர் மூண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கே இல்லை என நினைத்து வருந்த வேண்டியதாகத்தான் உள்ளது.

    //உறவுகளை விட்டு வெகுதூரம் பிரிந்து, சியாச்சின் போன்று உறைய வைக்கும் பனியிலும், கொட்டும் மழையிலும் உயிரைப் பணயம் வைத்து, இமைப் பொழுதும் சோராது, நம் எல்லையைக் காக்கும் படைவீரர்களுக்கு, இப்பதிவைக் காணிக்கையாக்குகிறேன்.//

    வெரி குட். அவர்களுக்கு நம் வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மிகப்பெரியதோர் மூண்டாலும் = மிகப்பெரியதோர் போர் மூண்டாலும்

      Delete
    2. உண்மை தான் சார்! நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது போர் மூளுமோ என்று கவலையாகத் தான் இருக்கிறது. கருத்துப்பகிர்வுக்கு நன்றி சார்!

      Delete
  7. நீண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பின் தங்களின் வலைத்தளத்தினில் ஓர் மிக அருமையான பதிவினைப்படித்து, பல்வேறு அரிய பெரிய விஷயங்களைப் புதிதாக அறிந்துகொள்ள முடிந்ததில் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்களின் இந்தப் பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் எழுதிய பதிவுக்கு உடனே வருகை தந்து தொடர்ச்சியான பின்னூட்டங்கள் கொடுத்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி கோபு சார்! பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்!

      Delete
  8. அனைத்து தகவல்களும் புகைப்படங்களும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ மேடம்! தங்களைப் பார்த்து வெகு நாளாயிற்று! நலமா? வருகைக்கும், அருமை என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்!

      Delete
  9. Replies
    1. வாங்க குமார்! நலந்தானே? வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும் மிக்க நன்றி குமார்!

      Delete
  10. பதிவு மனதை தொட்டது
    த.ம 2

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி சார்! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி! த.ம வாக்குக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  11. கண்ணில் பட்ட மலரை வைத்து அழகிய ஒரு பதிவு உண்டாக்கி விட்டர்கள். நல்ல தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! நலமா? நல்ல தகவல்கள் என்ற கருத்துக்கு மிகவும் நன்றி!

      Delete
  12. வெளிநாட்டு பயணம் பற்றிய பதிவு இனிமையான மலர்களுடன் தொடங்கியுள்ளது அருமை. தொடருங்கள்.
    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நலமா செந்தில்? அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி. தொடர்வதற்கு நன்றி!

      Delete
  13. அரிய தகவலை அறியும்படிச் செய்தீர்கள்..

    >>> இப்போர்க்களத்தில் பாப்பி மலர்கள் பூத்துக் குலுங்கினாலும், நாங்கள் ஒருநாளும் உறங்கமாட்டோம்.எந்நாளும் எங்கள் ஆன்மாவுக்கு உறக்கமில்லை.<<<

    உண்மைதான்.. வீரர்களின் ஆன்மாக்களுக்கும் உறக்கமில்லை!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார்! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  14. பாப்பி மலர்கள் குறித்த தகவல்கள், கவிதை என பதிவு வெகு ஜோர்....

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வெங்கட்! தரமான, சுவையான எழுத்துக்குச் சொந்தக்காரரான உங்களிடமிருந்து பதிவு வெகு ஜோர் என்ற பாராட்டுக் கிடைத்ததை நினைத்து மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன். மிக்க நன்றி வெங்கட்!

      Delete
  15. வணக்கம் சகோ.

    சற்றுத் தாமதம்தான். ஊரில் இல்லை. இன்றே வந்தேன்.

    பயணங்கள் எத்தனை எத்தனையோ செய்திகளையும் அனுபவங்களையும் நமக்குத் தந்துபோவன.

    உங்களின் பயணத்தால் எங்களுக்கு ஒரு புதிய செய்தி கிடைத்திருக்கிறது.

    பாப்பி மலர் பற்றிய செய்தியும் இந்த நறுங்கவிதையும் உங்கள் மூலமாகவே அறிகிறேன்.

    அதற்கு நன்றி.

    கவிதைக்கு உங்களின் மொழிபெயர்ப்பினை ரசித்தேன். மூலத்தினோடு பெரிதும் ஒட்டி மொழிபெயர்ப்பினை செய்திருக்கிறீர்கள்.

    ////தூக்கத்தை வரவழைக்கும் போதை மருந்து அடங்கிய பாப்பி மலர்கள் ஏராளமாகப் பூத்திருந்த போதிலும், எங்களுக்கு உறக்கம் வராது என்று இறந்த வீரர்கள் சொல்கிறார்களாம்/////

    இதுதான் இந்தக் கவிதையின் நுட்பம்.

    கவிதை சொற்கள் கடந்த பொருளுடையது.

    அதையும் காட்டி இருக்கிறீர்கள்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    போர் தேவையற்றது என்று சொன்ன அசோகனும் கூடத் தன் படைகளைக் கலைக்காமல் உரிய பயிற்சியைத் தொடரச்செய்தான் என்று படித்திருக்கிறேன்.

    பூக்களைப் பரிசாகக் கொடுக்க விரும்பும் நம்முன் துப்பாக்கிகள் நீட்டப்படுமாயின் நாம் என்ன செய்வது?

    நிற்க, தங்களின் மொழிபெயர்ப்பின் வழி மூலப்பாடலை ஒட்டி ஒரு மொழியாக்கம்....!

    சிறுபிள்ளை முயற்சிதான்...!

    நீங்கள் தவறாக நினைத்தால்தான் என்ன என்ற உரிமையில் எழுதிப்போகிறேன்...!

             பாப்பி பூக்கும் ஃபிளாண்டர்ஸ் போர்க்களம்.

    பாப்பி மலர்அலை ஃபிளாண்டர்ஸ் போர்க்களம்!
    சாப்புதை சிலுவை களினிடை போய்வரும்!
    மண்ணில் புதைந்த மாசறு வீரம்
    விண்ணில் வானம் பாடிகள் பாடித்
    துப்பாக் கிகளின் துணிச்சல் அடக்கும்!.

    அன்றங் கிருந்தோம்! இன்றிங் கிறந்தோம்!
    என்றெம் விடியல்? மடிந்தும் ஒளிர்ந்தோம்!
    அன்பு செய்தோறும் செயப்பட் டவரும்
    இன்று ஃபிளாண்டர்ஸ் போர்சவக் குழிகளில்….!

    வெம்பகை அழிக்க வீரர்காள் வருக!
    எம்கை தீபம் ஏந்துக நும்கை!
    உமக்கே இனியது! உயர்கநும் கரங்கள்!

    அன்றி,

    இறந்தவர் சொல்லிதென் றிகழ்வீ ராயின்
    பறக்குமிப் பாப்பிதன் பூநிறைந் திருப்பினும்
    உறங்கா விழிபெறும் ஃபிளாண்டர் போர்க்களம்!


    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. "தங்களின் மொழிபெயர்ப்பின் வழி மூலப்பாடலை ஒட்டி ஒரு மொழியாக்கம்....! சிறுபிள்ளை முயற்சிதான்...!"
      வாங்க சகோ! வணக்கம். தங்கள் வரவு கண்டு மகிழ்ச்சி! கவித்துவமான பின்னூட்டம் கண்டு, அதைவிட மகிழ்ச்சி! சிறுபிள்ளை முயற்சி என்று சொல்லியிருப்பது, உங்கள் தன்னடக்கத்தின் மிகை!
      நிற்க. இனி உங்கள் மொழியாக்கம் பற்றி…
      மலர்அலை
      என்ன அழகான சொல்லாட்சி! காற்றில் பாப்பி மலர்கள் அலைகின்றனவா? அலைஅலையாய் மலர்கள் அணிவகுக்கின்றனவா? தமிழுக்குப் புது வரவு?
      பாப்பிச் செடியின் தண்டு மிகவும் மெல்லியது; சாதாரண காற்றுக்குக்கூட உறுதியாக நில்லாமல், ஆடக்கூடியது என்பதால், இது தான் எவ்வளவு பொருத்தம்!
      காற்றில் பாப்பி மலர்கள், அங்குமிங்கும் அலைந்து ஆடி, அலையலையாய், சிலுவைகளினிடை போய்வரும் காட்சி, உங்களின் இந்தப் பொருத்தமான சொல்லாட்சியால், உயிர்பெற்று எழுந்து விட்டது!
      இக்கவிதையை எழுதிய போது கவிஞர் Grow என்று முதலில் எழுதியதாகவும், பின்னர் தான் blow என்று மாற்றியதாகவும் இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
      “அன்றங்கிருந்தோம்! இன்றிங் கிறந்தோம்!
      என்றெம் விடியல்? மடிந்தும் ஒளிர்ந்தோம்”
      என்ற வரிகள், எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மூலக்கவிதையின் உணர்ச்சியை இம்மி பிசகாமல், வாசகருக்குக் கடத்தும் திறன் பெற்ற உன்னத வரிகள் இவை!
      முதல் வரியை வாசித்த போது, ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்,’ என்ற பாடலின் நினைவு வந்து போனது.
      பறக்குமிப் பாப்பிதன் பூநிறைந் திருப்பினும்
      உறங்கா விழிபெறும் ஃபிளாண்டர் போர்க்களம்!
      பறக்கும் இப்பாப்பி என்பதும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது. போதையில் மேலெழுந்து பறப்பது போன்ற அனுபவம் கிட்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
      மொத்தத்தில் ஒரு புதிதாய் ஒரு கவிதையைச் சுவைத்தது போன்ற அனுபவம் கிட்டியது.
      உறங்கா விழிபெறும் பிளாண்டர் போர்க்களம் என்ற அற்புதமான தலைப்பில் இக்கவிதையை உங்கள் தளத்தில் வெளியிட வேண்டுகிறேன்.
      யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! இன்னும் பலருக்கு இது சென்று சேர வேண்டும் என்பது என் ஆசை!
      என் பதிவின் மூலம் தமிழுக்கு அருமையான மொழியாக்கம் ஒன்று கிடைத்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
      மிகவும் நன்றி.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

    3. உங்கள் கவிதை தந்த இன்ஸ்பிரேஷன் காரணமாக, நான் சொல்ல நினைத்ததைக் கவிதையில் சொல்ல வேண்டும் என்ற ஆவலில் எழுதியது இது. எதுகை மோனையோ, இலக்கண விதிமுறைகளோ எதுவும் இதற்கில்லை.
      உண்மையில் இதைத் தான் சிறுபிள்ளைத் தனமான முயற்சியென்று சொல்லவேண்டும்!

      வரிசையில் அணிவகுக்கும் சிலுவைகள் மேல்
      மோதியாடிடும் பாப்பி மலர்க் கூட்டம்!
      விண்ணதிர துப்பாக்கி வெடித்தும், பயமின்றிப்
      பண்ணிசைத்திடும் வானம்பாடி பறவைகள்!
      இதுதான் பிளாண்டர்ஸ் போர்க்களம்!

      வீழ்ந்துபட்டோம், மண்ணில் இன்று;
      வாழ்ந்திருந்தோம் சிலநாள் முன்பு.
      விடியலில் உயிர்த்து, மடிதலில் ஜொலித்தோம்
      நேசித்தும், நேசிக்கப்பட்டும் வாழ்ந்த யாம்
      நசிந்து கிடக்கிறோம், இப்போர்க்களத்தில்!

      விட்ட இடத்திலிருந்து போரைத் தொடர்க
      உம் கைகளில் ஒப்படைத்த தீபத்தை
      உயரத் தூக்கி முன்னெடுத்துச் செல்க
      எம் சொற்களை நினைவில் நிறுத்திடுக
      இறந்துவீழ்ந்த எம்சொல்லில் நம்பிக்கை இழப்பீராயின்
      கிறக்கம்தரும் பாப்பிமலர் பூப்பினும்
      உறக்கமில்லை என்றும் எமக்கு!


      Delete
    4. ஆகா.
      என்னவொரு அழகிய கவிதை. பொறாமையாய் இருக்கிறது.இப்படி ஒரு கவிதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்று.(அதற்கு நான் ஆங்கிலேயர் நாட்டுக்கல்லவா போயிருக்க வேண்டும் .ஆப்பிரிக்காவுக்கல்லவே)
      தங்களின் மொழிபெயர்ப்பும் ஊமைக்கனவின் கவிதையும் வெகு அருமை.
      நன்றி

      Delete
    5. உங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி சிவக்குமார்! நீங்கள் சிறந்த கவிஞர் என்றறிகிறேன்! நானே எழுதும் போது நீங்கள் தாராளமாக முயலலாம்! என் மொழிபெயர்ப்பு நன்றாயிருக்கிறது என்ற உங்கள் பின்னூட்டம் கண்டு உவப்பு! ஊமைக்கனவுகள் தளம் வழி வந்ததற்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  16. நினைவாற்றல், ரசனை, நாட்டுப்பற்று, மொழியார்வம், மொழியாக்கம் என்ற அனைத்தையும் உள்ளடக்கி பல செய்திகளைத் தந்துள்ள பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  17. மிகவும் அருமையான பதிவு. ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய பல தகவல்களை இப்பதிவில் அள்ளித்தந்துள்ளீர்கள்.. போர்வீரர்களின் நினைவுச்சின்னம் பாப்பி மலர் என்று அறிந்திருந்தாலும் அதற்கான மூலம் எதுவாக இருக்குமென்று அறியத் தோன்றவில்லை. இங்கே அற்புதமான கவிதை வாயிலாய் போர்வீரர்களின் மன உணர்வினை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். கவிதையின் சாரத்தை கவிதையாகவே தந்திருக்கலாமே என்று நினைத்தேன். அந்தக் குறையையும் பின்னூட்டத்தில் போக்கிவிட்டீர்கள். ஊமைக்கனவுகள் அவர்கள் எழுதிய கவிதை ஒரு அழகியல் என்றால் தாங்கள் எழுதியது இன்னொருவகையான அழகியலைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் மூலக்கவிதையின் சாரம் அப்படியே கடத்தப்பட்டுள்ளது. அதுதானே முக்கியம். புதியதொரு தகவலை அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா! ஊமைக்கனவுகள் கவிதையை வாசித்தவுடன் நாமும் எழுதிப் பார்க்கலாம் என்று முயன்றதன் விளைவு இது. அவருடைய கவிதையுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமேயில்லை. இதுவும் அழகாய் இருக்கிறது என்று நீ சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. மிகவும் நன்றி கீதா!

      Delete
    2. சகோதரி கீதமஞ்சரி அவர்களின் வலைப்பக்கம் என்னவாயிற்று?
      அவரின் கவிதைகளின் ரசிகன் நான்

      Delete
    3. சொந்த வீட்டுக்குக் குடிபோனதன் காரணமாக கீதமஞ்சரி இரு மாதங்கள் இணையம் வரவில்லை. இப்போது இயங்க ஆரம்பித்துவிட்டார். நீங்கள் கீதா கவிதைகளின் ரசிகர் என்றறிந்து மகிழ்ச்சி! நீங்களும் சிறந்த கவிஞர் என்றறிகிறேன். வாழ்த்துக்கள்!

      Delete
  18. மிக அரிய பதிவு . கவிதையின் இரண்டாம் பத்தி நெஞ்சைத் தொடுகிறது . நம் எல்லையைக் காக்கும் வீரர்களுக்கு சமர்ப்பணம் பொருத்தமோ பொருத்தம் .

    ReplyDelete
    Replies
    1. மிக அரிய பதிவு என்ற பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. கவிதையை அனுபவித்துப் படித்தமைக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  19. வணக்கம் சகோ.

    மன்னிக்க …..! தொடர மறந்தேன்.

    முதலில் உங்கள் மொழியாக்கத்திற்குப் பாராட்டுக்கள்.
    நான் எழுதியதைவிட உங்கள் ஆக்கமே சிறந்தது.
    அதற்கு முக்கிய காரணம் பாடுபொருளின் எளிமை.

    உங்கள் பதிவில் இருந்த மொழிபெயர்ப்பினை நான் இந்த நடையில் எழுதிப்போனதற்குக் காரணம், இந்தப் பாடல் ஓசையால் உயிர்பெறும் பாடல்.
    மூலப்பாடலில் இருக்கும் தாளக்கட்டுகளும், தாளச்சொற்களும் சொல்லின் ஓடும் லயமும் அம்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியன் என்ற வகையில் அறிந்வேன் எனினும் போர்க்களங்களில் உணர்ச்சியூட்டும் வகையில் இந்தப் பாடல் பாடப்பட்டிருக்கிறது என்ற உங்கள் தகவலால் மூலமொழியில் இப்பாடலின் சந்தமே முதன்மையாய் என்னுள் ஓடிற்று.

    ஆயிரமாயிரம் வீரர்களின் அணிவகுப்பில் நம் மரபில் உள்ளது போல போர்ப்பரணிப்பாட்டு!

    களமாட ஊட்டும் வெறி.

    ஓசை ஒழுங்கிற்கு இப்பாடலைக் கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணம் இதுவே. சற்று அதிகப்பிரசிங்கித்தனமாய் இருப்பினும் நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று அறிவேன்.

    அதற்கான உரிய முயற்சியோ, போதுமான நேரமோ நான் எடுத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

    நான் எழுதிய வடிவம் செம்மைப்படுத்தப்பட வேண்டிய பகுதிகள் அதிகம்.
    இதோ இப்பொழுது உங்களின் மொழியாக்கத்தின் ஒப்பீட்டிற்காக நான் செய்ததைப் பார்க்க எனக்கே அது புலப்படுகிறது.

    எனவே மீண்டும் நான் கூறுவது உங்களின் மொழியாக்கமே சிறந்தது.

    ஏன்…..?

    உணர்வெழுச்சியூட்டும் இதுபோன்ற பாடல்களின் நிலைபேறு பாடுபொருளும் சந்தமும் மட்டும் கொண்டு வாழ்வதல்ல.
    அது தன்னுள் எளிமையும் சார்ந்து இயங்குவது.

    “ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ” என்ற சுதந்திரப்போராட்ட எழுச்சிப்பாடலைக் கற்பனை செய்து பாருங்கள்.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
    என்ற பாரதிபாட்டும் இவ்வகைதான்.

    சந்தமும் பாடுபொருள் எளிமையும் ஒரு பாடலை எவ்வளவு உணர்வெழுச்சி உள்ளதாகச் செய்துவிடுகின்றன.

    இன்னும் சில நயங்களும் என் வாசிப்பில் பட்டன.
    வானம்பாடிகள் சுதந்திரத்தின் குறியீடு.
    சூரிய உதயமும் மறைவும் வாழ்தல் இறத்தலின் குறியீடுகள்.
    அஸ்தமனம் ஒளிமங்கி இருக்க, வீரரின் மறைவு ஒளிதந்து நிற்றல் இதன் முரண்.

    உங்கள் பாடல் எளிமையும் இனிமையும் பொருளாழமும் நிறைந்துள்ளது.
    சகோ. கீதமஞ்சரி அவர்கள் உங்கள் பாடல்பற்றித் தம்பின்னூட்டத்தில் குறித்த அழகியல் இதுதானென நினைக்கிறேன்.

    என் முயற்சியும் அதற்குக் காரணமாயிற்று என்றறிய மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்.

    உங்கள் ஆர்வமும் வாசிப்பும் மென்மேலும் உங்களை மெருகேற்றும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

    பாடலையும் தங்களின் இந்த மொழியாக்கத்தையும் தனிப்பதிவாக்கினால் என்போல் பின்னூட்டத்தைத் தொடராதோர் பயன்பெறக்கூடும்.

    மீண்டும் தங்கட்கென் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீள்வருகைக்கு என் முதல் நன்றி சகோ. நான் எழுதியதை ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்யச்சொன்னால், உங்களுடையதை விட என்னுடையது சிறந்தது என்று சொல்லிவிட்டீர்கள். நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல இது போர் எழுச்சிப் பாடல். சந்தம் மிகவும் முக்கியம். ஆனால் என் பாடலில் சந்தமோ எழுச்சியோ சுத்தமாக இல்லை. என்னை மென்மேலும் எழுத ஊக்குவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நீங்கள் பாராட்டினாலும், உங்களுடையதை விட என் கவிதை மேம்பட்டது என்று ஒருநாளும் ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் இதை எழுதுவதற்கு இரண்டு மணிகளுக்கு மேல் எடுத்துக்கொண்டேன். ஆனால் நீங்கள் எழுதத் துவங்கினால் கவிதை மழையாகப் பொழிகிறது. உங்கள் ஆக்கத்தைத் தனிப்பதிவாக வெளியிடுங்கள் என்ற என் வேண்டுகோளை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். தனிப்பதிவாகப் போடுமளவுக்கு என்னுடையது அவ்வளவு சிறந்த ஆக்கமில்லை என்பதால் உங்கள் ஆலோசனையை ஏற்க முடியாதவளாய் இருக்கிறேன். உங்கள் வாழ்த்தும், பாராட்டும் கண்டிப்பாக என்னை மெருகேற்றும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மிகவும் நன்றி சகோ!

      Delete
  20. வணக்கம் சகோ.

    உங்கள் மேற்குறித்த மொழியாக்கத்திற்கான என் பின்னூட்டம் உயர்வு நவிற்சியன்று.
    இயல்பு கூறியதே!

    உங்கள் பாடலையும் ஆசிரியப்பாவின் இனங்களொன்றனுள் உட்படுத்த முடியும்.
    ஓசையுட் பட்டு அதுவும் மரபினுட்பட்டதே ஆகும்.

    ஒரு படைப்பு/ஆக்கம் ஒரு நிமிடத்தில் எழுதப்பட்டாலும் வருடங்களின் நீட்சியில் முடிக்கப்பட்டிருந்தாலும் அதன் தன்மை சார்ந்துதான் மதிப்பீடமையும்.

    நானெழுதியது குறித்த என் மதிப்பீடு இன்னும் இன்னும் அவ்வடிவம் செம்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதே!

    மூலபாடலை ஒருவடிவத்துள் அடைத்தேனேயன்றி அன்றைய தொடர்பயண அயர்ச்சியும் மனநிலையும் அதில் நான் காணும் குறைகளுக்குப் பெருங்காரணம்.

    மீள்வாசிப்பில் எனக்குப் புலப்பட்டதாகக் கூடியது அவற்றைத்தான்.

    நிற்க,

    நீங்கள் ஏற்பினும் மறுப்பினும் என்னுடையதைவிட உங்கள் ஆக்கம் எளிமையும் வடிவமும் கொண்டு இருக்கிறது என்ற என் முந்தைய கருத்தை மறுப்பதற்கில்லை.

    இருப்பினும் உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன்.

    பதிவிடுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  21. வாங்க சகோ. வணக்கம். மீள்வருகைக்கு நன்றி. என் வேண்டுகோளை ஏற்றுப் பதிவிட ஒத்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சி. கவிதையை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு திருத்தி வெளியிடுங்கள். என் ஆக்கம் எளிமையும், வடிவமும் கொண்டு இருக்கிறது என்ற உங்கள் மதிப்புரை கண்டு மகிழ்கின்றேன். சாதாரணமாக நான் கவிதை என்ற வடிவத்தைக் கையாள்வதில்லை. அதில் எனக்குத் தேர்ச்சியில்லை; அதிக நேரம் பிடிக்கும் என்பது முக்கியக் காரணம். உரைநடை எழுத இலகுவாய் இருக்கிறது என்பதும் இன்னொரு காரணம். எப்போதாவது தான் கவிதை எழுதத்தோன்றும். இதை எழுதியதற்கு உங்கள் கவிதை உந்துசக்தியாக இருந்தது. வெறுமனே அருமை, நன்று என்று பின்னூட்டம் எழுதிச் சென்றிருந்தீர்கள் என்றால் இதை எழுதியிருக்க மாட்டேன். எனவே என் பதிவுக்கு நேரமொதுக்கி வாசித்ததுமின்றி கவிதையுடன் பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏற்கெனவே யாப்பிலக்கணத்தை எளிய முறையில் போதித்ததற்குக் குரு தட்சிணை பாக்கியிருக்கிறது. நன்றிக் கடனை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை. மீண்டும் நன்றி, நன்றி, நன்றி!

    ReplyDelete
  22. பாப்பி செடிகளை பற்றியும் (Poppy), நாம் சமையலில் பயன்படுத்தும் கசகசாவும் (Papaver somniferum) பாப்பி செடியின் விதைதான் என்பதுவும். இதன் காய்களை கீறும்போது வடியும் பால்போன்ற திரவம்தான் அபின் (Opium) என்பதும் நான் ஏற்கனவே அறிந்த விஷயம்தான் என்றாலும் ... இப்போதுதான் அதன் மலர்களை பார்க்கிறேன் ...வாவ் .. பியூட்டி ... நன்றி சகோதரி !!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete