நல்வரவு

வணக்கம் !

Sunday, 16 October 2016

பாதை மாறிய பயணங்கள்
(01/07/2011 அன்று நிலாச்சாரலுக்காக எழுதியது)

பயணம் - 1

ஐந்தாம் வகுப்பிலிருந்து நெருங்கியத் தோழியாயிருந்த ராஜிக்கும், எனக்கும் ஏழாம் வகுப்பில் சண்டை வந்து பிரிந்து விட்டோம்.  சண்டை வந்ததற்கான காரணம் என்ன வென்று நினைவில்லை.  அப்போது பிரிந்த நாங்கள், பள்ளியிறுதி வகுப்பு வரையில் பேசிக்கொள்ளவேயில்லை.  என் நட்பு வட்டம், படிக்கும் கோஷ்டி என்றும் அவளுடையது அரட்டை கோஷ்டி என்றும் அமைந்து,  அவளைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டமே.
 

இன்னும் சில நாட்களில், பிரியப் போகிறோம் என்பதாலும், இனிமேலும் பேசாதிருக்கக் கூடாது என்று சக நண்பிகள் அறிவுறுத்தியதாலும், பள்ளி முடியும் தருவாயில், பேசத் துவங்கினோம்.  ஆனால் நாலைந்து வருடங்களில், எங்களுக்குள் பெரிய இடைவெளி ஏற்பட்டு பழைய நட்பு முற்றிலும் காணாமல் போய் விட, பேருக்குத்தான் பேசிக் கொண்டோம்.  கீழ் வகுப்பில் நன்றாய்ப் படித்துக் கொண்டிருந்த ராஜிக்கு, மேலே செல்லச் செல்ல படிப்பில் நாட்டம் குறைந்ததின் காரணமாய், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் அவள் வெற்றி பெறவில்லை.

நான் பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன், என் தந்தைக்குப் பக்கத்து ஊருக்கு மாற்றல் வரவே,  கிராமத்திலிருந்து அவ்வூருக்குச் சென்று விட்டேன்.

அதே ஊரில் இருந்த டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து, அவள் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஓரிரு முறை அவளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த்து.  தினமும் கிராமத்திலிருந்து நான் இருந்த ஊருக்குப் பேருந்தில் வந்து போய்க் கொண்டிருந்தாள்.  பார்க்கும் போது பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வோம்.

டுடோரியலில் கூடப் படிப்பவன் ஒருவனை அவள் விரும்புவதாகவும், அவனையே அவள் மணமுடிக்கப் போவதாகவும் வேறொருத்தி மூலமாகக் கேள்விப்பட்டேன். 

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் மதியம் எங்கள் வீட்டு வாசலில் நின்றிருந்த போது, பிணவண்டி ஒன்று, ஒரு சடலத்தை ஏற்றிக் கொண்டு செல்வதைப் பார்த்தேன்.  அதற்குப் பின்னால் நடந்து போனவரைப் பார்த்த போது பகீரென்றது.  ராஜியின் அண்ணன் (அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர்) அந்த வண்டிக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தார்.

அவளது காதல் பெரிய பிரச்சினையாகி, கடைசியில் அவள் தற்கொலை செய்து கொண்ட விபரமும், பிணப்பரிசோதனை முடிந்து மருத்துவமனையிலிருந்து அவளது உடலை எடுத்துச் சென்ற விபரமும் பின்னர் எனக்குத் தெரிய வந்தது.
       
என் தலைமுறையின் முதல் சாவு என்பதாலும், அது தற்கொலை என்பதாலும் அவள் மரணம் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. எனக்கும் அவளுக்கும் பிரிவு வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை அவளது வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமோ? என்று அடிக்கடி நான்  நினைத்துப் பார்ப்பதுண்டு.  இளம் வயதில் மனதை அலை பாய விடாமல் படிப்பில் கவனம் செலுத்தி யிருந்தால், அவளுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காது என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.


பயணம் - 2

கல்லூரியில் என்னுடன் படித்த சாருவும், நானும் ஒரே தெருவில் வசித்தமையால் கல்லூரிக்குச் சேர்ந்தே போவோம், சேர்ந்தே வருவோம். 
நாங்கள் போகும் வழியில் பரட்டைத் தலையன் ஒருவன் தினமும் நின்று கொண்டு ஏதாவது காமெண்ட் அடிப்பான்.  அவனைப் பார்த்தாலே எனக்குப் பற்றிக் கொண்டு வரும்.  அவனைப் பற்றி கன்னா பின்னாவென்று சாருவிடம் திட்டித் தீர்ப்பேன்.

வழக்கமாக போகும் தெருவை விடுத்து, அடுத்த நாள் வேறு ஒரு வழியில் சென்றால், அங்கும் அவன் நிற்பான்.  நாம் பாதை மாற்றும் விஷ்யம் இவனுக்கெப்படி தெரிகிறது என்று எனக்கு ஒரே ஆச்சரியம். என்னோடு சேர்ந்து சாருவும் வியப்புத் தெரிவிப்பாள்.  நீண்ட நாட்கள் கழித்துத் தான் தெரிந்தது, சாரு அவனை விரும்பிய விஷயம். 

அந்தத் தடியன்,  முன்னாள் மந்திரியின் மகன் என்றும் ஆண்கள் கல்லூரியில் ஏதோ டிகிரி படித்தான் என்றும் பிற்பாடு தெரிந்து கொண்டேன். 

அவனை நான் திட்டுவது பற்றியும், பாதை மாற்றுவது பற்றியும்  சாருவே அவனிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ஒன்றும் தெரியாதவள் போல் நடித்திருக்கிறாள் என்றறிந்தபோது எனக்கு ஆத்திரம் தாங்கவில்லை. 

படிப்பு முடியும் வரை அவளாகச் சொல்வாள் என எதிர்பார்த்தேன்.  ஆனால் அவள் கடைசி வரை என்னிடம் உண்மையைச் சொல்லவேயில்லை. என்னிடம் அவள் சொல்லியிருந்தால்,   பணக்காரப் பசங்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு; ஒழுங்காப் படிச்சி முன்னேறும் வழியைப் பாரு, என்று அவளை அறிவுறுத்தியிருப்பேன். 

அவள் என்னிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தில் நானாக போய் மூக்கை நுழைத்துக் கடிந்துரைப்பது எனக்குப் பிடிக்கவில்லை.  என்னை அவள் ஏமாற்றியது நெஞ்சில் ஒரு முள்ளாக நெருடிக் கொண்டிருந்ததால், படிப்பு முடிந்த பிறகு அவளுடன் தொடர்பை நீட்டிக்க நான் விரும்பவில்லை.


கடந்த ஆண்டு ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது,  என்னையே உற்றுப் பார்த்தபடி ஒருத்தி அருகில் வந்து,  நீ கலை தானே? என்றாள்..

ஆமாம், நீங்கள்? என்று கேட்க வாயெடுத்த நான், ‘சாரு, நீயா என்று கூவி விட்டேன் மகிழ்ச்சி பொங்க.. இத்தனை ஆண்டுகளாக அவள் மேல் எனக்கிருந்த கோபம், வருத்தம் எல்லாம் அந்தக் கணத்தில் மாயமாய் மறைந்து விட்டது.  பல வருடங்கள் கழித்து நண்பியைச் சந்திக்கும் பேருவகை, மன முழுக்க நிறைந்திருந்தது. 

கண்களில் குழி விழுந்து, கழுத்து நீண்டு ஆள் மிகவும் இளைத்துத் துரும்பாக மாறிவிட்டிருந்தாள்.  கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள்.  நான் பார்த்த அந்தத் துரு துரு சாரு எங்கே?

இந்த ஊரில் தான் நீயும் இருக்குறியா? என்றாள்.

ஆமாம். நீ?

நானும் இங்கத் தான் இருக்கேன்.

எங்க வேலை பார்க்குறே?

என் வேலை பற்றியும், என் குடும்ப விபரங்களையும் அவளிடம் பகிர்ந்து கொண்டேன்.

நீ?

ஒரு பெண்கள் விடுதியில் காப்பாளராக இருப்பதாகவும் அங்கேயே அவளும் அவள் பெண்ணும் தங்கியிருப்பதாயும்  தெரிவித்தாள். சாப்பாடும் தங்குமிடமும் இலவசம் என்றும் மாதம் ஆயிரத்து ஐநூறு சம்பளம் பெறுவதாகவும் தெரிவித்தாள்.  

சொந்தத்தில் தனக்குத் திருமணம் ஆனது பற்றியும், தன் மீது சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக, கணவன் தன்னை விவாகரத்து செய்து விட்டது பற்றியும் சொன்னாள். 

(அவள் விரும்பிய மந்திரி மகன்,  இவளைக் கைவிட்டு பெரிய பணக்காரர் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட விபரத்தை நான் அறிந்திருந்தும்,  அது பற்றி எதுவும் அவளிடம் கேட்கவில்லை.) 

வீட்டுக்கு வருமாறு அழைத்தேன்.  என் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, வேறு ஒரு சமயம் வருவதாகத் தெரிவித்தாள். 

அவளிடம் பேசிக்கொண்டிருந்த சமயம், நான் ஏற வேண்டிய பேருந்து வந்தது. ஓடிப் போய்ப் படிகளில் ஏறிக் கொண்டே, உன்னோட பஸ் எப்ப வரும் சாரு?  என்றேன்.

என் பஸ்ஸை எப்பவோ நான் தவற விட்டுட்டேன், என்றாள் சாரு, எங்கோ தொலைதூரத்தில் தன் பார்வையைப் பதித்தபடி.


(படம் - நன்றி -  இணையம்) 

Thursday, 13 October 2016

தீபாவளி உடை –தலைமுறை இடைவெளி - சிறுகதை

மனைவி:-
என்னங்க!  ஒங்கப் பையனுக்குச் சட்டை பேண்ட் எடுக்க ஆயிரம் ரூபா போதாதாம். என்னமோ  புது பிராண்ட் ஜீன்ஸ் பேண்டாமே, அதுமட்டுமே ரெண்டாயிரம் ரூபா வுமாம்அதனா மேற்கொண்டு,  ரெண்டாயிரம் கேட்கிறான்.

போன வருஷம் இவன் வாங்கிட்டு வந்த ஜீன்ஸெல்லாம் கிழிஞ்சிருந்திச்சு. தீபாவளிக்கு வைச்சுப் படைக்கிற துணியாச்சே, இப்பிடிக் கிழிஞ்சதைப் போயி வாங்கிட்டு வந்திருக்கியேன்னு அப்பா திட்டறார்னு சொன்னேன்அப்பாவுக்கெல்லாம் ஜீன்ஸைப் பத்தி என்ன தெரியும்னு திருப்பிக் கேட்கிறான்நெறைய கிழிஞ்சிருந்தாத் தான் அதிக விலையாம்!  அது தான் இப்ப பேஷனாம்! 

என்ன பேஷனோ, என்ன கர்மமோ?


அப்பா:-
இவரு ரெண்டாயிரம் ரூபாய்ல தான் ஜீன்ஸ் எடுப்பாரோஇருநூறு ரூபாயிலேர்ந்து ஜீன்ஸ் கிடைக்குதுஎன்னை என்ன ஒன்னும் தெரியாத மடையன்னு நினைச்சிக்கிட்டானா ஒம் மவன்எல்லாம் அவரு வேலைக்குப் போயி சம்பாதிக்கிற காலத்துல வாங்கிப் போட்டுக்கச் சொல்லுகஷ்டப்பட்டு சம்பாதிச்சாத் தான் காசோட அருமை புரியும்

அந்தக் காலத்துல, எங்கப்பா என்ன எடுத்தாந்து கொடுப்பாரோ,  அது தான் தீபாவளித் துணிகடை கண்ணிக்கு அவரு போயி தான், எல்லாருக்கும் வாங்கிட்டு வருவாரு  என்னையெல்லாம் ஒரு நாள் கூட அழைச்சிட்டுப் போய் சட்டை எடுத்துக் கொடுத்ததில்லேஎதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருப்னா?  

நீலக்கலர் பேண்ட்டுக்கு, ரோஸ் கலர் சட்டை வாங்கியாந்து கொடுத்து, த்தான் போட்டுக்கணும்னு சொல்வாருமறு வார்த்தை பேசாம, போட்டுக்கிட்டுப் போவேன்

அப்ப பெல்பாட்டம் பேண்ட் தான் பேஷன்அந்த மாதிரி தைச்சுக்கலாம்னு ஆசைப்பட்டு, தையல்காரன்கிட்டச் சொல்லிட்டு வந்து, அது தைச்சப்புறம் பார்த்தா, இறுக்கமா மேலே தூக்கிக்கிட்டு, முக்கா பேண்ட்டா இருக்கும்.    

என்னய்யா இப்பிடி தைச்சிருக்கியேன்னு கேட்டா, ஒங்கம்மா தான் தொள தொளன்னு  ரொம்ப இறக்கமா இருந்தா, தெருவெல்லாம் கூட்டிக்கிட்டு வரும்நுனியெல்லாம் தண்ணி, மண்ணு பட்டு ரொம்ப சீக்கிரம் இத்துப்போயிடும்அதனா கொஞ்சம் தூக்கியே தையுன்னு சொன்னாங்கஅதனால தான் இப்பிடித் தைச்சேன்னு சொல்வாரு தையக்காரரு.   

அதைப் போட முடியாதுன்னு, அம்மாக்கிட்ட சண்டை போட்டு, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, அதுக்கப்புறம் வேற வழியில்லாம அதைப் பிரிச்சித் தைச்சிக் கொஞ்சம் இறக்கிப் போட்டுக்கிட்டுப் போனேன்.    

ஒனக்கு மட்டும் எங்கேர்ந்துடா, இவ்ளோ சூப்பரான கலரெல்லாம் கிடைக்குது?”ன்னு என் நண்பனுங்க கிண்டல் பண்ணுவானுங்க

நம்மளை மாதிரி இவன் கஷ்டப்படக் கூடாது; தானாப் போயி புடிச்சதை எடுத்துக்கட்டும்னு பணம் கொடுத்தா, இவ்ளோ பணத்தைக் கொட்டிக் கிழிஞ்சி நார் நாராத் தொங்கறதைப் போயி வாங்கிட்டு வந்துருக்கான்.. 

இப்பக் காலம் எவ்ளோ மாறிப்போயிடுச்சி!!!!!!?

தாத்தா:-
எங்க காலத்துல தீபாவளியோட தீபாவளியாத் தான் புதுத் துணி கிடைக்கும்அதனால பண்டிகை எப்ப வரும்னு ஆவலாக் காத்திருப்போம்.

அப்பா மட்டும் தான் கடைக்குப் போய் துணிமணி வாங்கிட்டு வருவாருஒரு வயசு வரைக்கும் கால்சட்டைநல்லா வளர்ந்துட்டா வேட்டி தான்.

பேண்ட் பத்தியெல்லாம் மூச்சு விடமுடியாதுஇந்தக் காலம் மாதிரி, அம்மால்லாம் கடை கண்ணிக்குப் போக மாட்டாங்கஅப்பாருக்கிட்ட போயி, நம்ம விருப்பம் எதையும் சொல்லப் பயமாயிருக்கும்.
அப்பாரு வந்த பெறவு, ஆசையா ஓடிப்போய் பார்த்தா, கால்சட்டையும், சட்டையும் காக்கி கலர்ல இருக்கும்.

அது தான் அழுக்குப் பட்டாத் தெரியாதாம்!  அடுத்த வருஷத்துக்கும் அதே கலர்தான்அதைப் போட மாட்டோம்னு, அம்மாக்கிட்ட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாலும், வேற வழியில்லைகடைசியில அதைத் தான் உடுத்தணும்.

இப்போக் காலம் எவ்ளோ மாறிப் போயிடுச்சி!!!!!!!!?
  
   

(படம் – நன்றி இணையம்)