நல்வரவு

வணக்கம் !

Friday 15 December 2017

தப்புக்கணக்கு - சிறுகதை



எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டியின் முடிவில் வெளியிடப்பட்ட ‘வசீரும் லீலாவதியும்,’ என்ற தொகுப்பு நூலில், இடம் பெற்ற என் கதை:-

தப்புக்கணக்கு

அப்பாவின் இதயத் துடிப்பு சீராக இல்லை என்பதைத் தொடர்ந்து பீப் ஒலி மூலம் அறிவித்துக்கொண்டிருந்தது,  ஒரு கருவி.  செயற்கை சுவாசம், இரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க, அவரைச் சுற்றிலும் எண்ணற்ற கருவிகள்.  அவற்றின் உதவியால் அப்பாவின் உயிரைப் போக விடாமல், இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது, இம்மருத்துவமனை. 

சிவராமனுக்கு ஆயாசமாக இருந்தது.  ஒருமாதத்துக்கு மேலாக, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைவது பெரும்பாடாயிருக்கவே, மனைவியிடம் வாய்விட்டே சொல்லிவிட்டான் சீக்கிரம் செத்துத் தொலைத்தால் தேவலை,” என்று.

அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நாளைக்கு நம்ம கதி என்னாகும்னு தெரியாது.  பெத்தவங்களுக்குச் செய்யறது புண்ணியம் அப்பத்தான் நமக்கு நல்ல கதி கெடைக்கும் புடிக்கலேன்னாலும், பெத்த அப்பாவுக்குப் புள்ளை செய்யற கடமைன்னு, ஒன்னு இருக்கு; அத மறக்கக் கூடாது; ஒங்க வெறுப்பைக் காட்டறதுக்கு, இது நேரமில்லே,” என்றாள் அமுதா.

ஆமா பெத்த அப்பா.  அவருக்கு என்மேல கொஞ்சங்கூட பாசம் கிடையாதுதம்பியைத் தான் அவருக்கு ரொம்பப் புடிக்கும். எங்கிட்ட அன்பா இருந்தது, அம்மா மட்டும் தான் அவங்களுக்குச் செஞ்சாலும் புண்ணியம் உண்டு.  ஆனா அதுக்கு வாய்ப்பே கொடுக்காம, பொசுக்குன்னு போயிட்டாங்க அம்மா இருந்திருந்தா, அவங்களை அங்க விட்டுட்டு, நான் கம்பி நீட்டியிருப்பேன்.  வேற வழியில்லாம, என் தலைவிதியை நொந்துக்கிட்டு, அந்த ஆஸ்பத்திரி மருந்து நாத்தத்துல, ஒக்கார்ந்து கிடக்க வேண்டியிருக்கு.  சரி டிபனை கொடு நான் கெளம்பறேன்.  மணி ஆறாயிடுச்சி ஏன் கண்ணன் இன்னும் வீட்டுக்கு வரலை?”.


இந்த ஒரு மாசமா, அவன் அட்டகாசம் தாங்கலே.  எனக்கு அடங்கவே மாட்டேங்கிறான்.  ஒழுங்காப் படிக்கிறதில்ல.  வீட்டுப்பாடமும் செய்றதில்லை.  ஒங்கக் கிட்ட தான் அவனுக்குப் பயம் ஜாஸ்தி.  நீங்க வீட்டுல இல்லாம, அவனுக்கு ரொம்பத் துளிர் விட்டுப்போச்சு.

சரி சரி.  அவனை நான் பார்த்துக்கறேன்.  இந்த ஆளுக்கு சீக்கிரம் ஏதாவது முடிவு வந்து, காரியம் பண்ணிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கலாம்னா, அதுவும் வர மாட்டேங்குது.  இன்னும் ஒரு நாள் பார்ப்பேன்.  டிஸ்சார்ஜ் பண்ணுங்க; நான் வீட்டுல போய் வச்சுக்கிறேன்னு, கேக்கப் போறேன்.  எல்லாக் கருவியையும் புடுங்கினாலே, அந்த ஆளு பொசுக்குன்னு போயிடுவாரு”.

நல்ல புள்ளை.  சீக்கிரம் கெளம்புங்க”.

மருத்துவமனைக்குத் திரும்பிய போது, அப்பாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.  கண் மூடியே இருந்தது.  சீக்கிரமே படுத்துக்கொண்டதாலோ என்னவோ, அவனுக்கு உறக்கம் வரவில்லை.   சிறுவயதில் அப்பாவிடம் மிகவும் பாசமாக இருந்து, பிறகு மெல்ல மெல்ல அவரிடமிருந்து விலகிய நிகழ்வுகள், ஒன்றன்பின் ஒன்றாக அவன் நினைவில் வலம் வரத் துவங்கின.

நினைவு தெரிந்த நாள் முதலாய், எதற்கெடுத்தாலும் அப்பா தான், அவனுக்கு வேண்டும்!.  அவருடன் வண்டியில் ஏறிச் சுற்றாத இடமில்லை..  அவர் தான் அவன் ஹீரோ! பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அவன் ஆசைப்பட்டதை யெல்லாம் வாங்கிக் கொடுப்பார்.

ஆனால் தம்பி மணி பிறந்த பிறகு, அவருடைய பாசம் முழுவதையும், அவன் அபகரித்துக் கொண்டான் இவனைக் கவனிப்பதை விட்டு, அவனிடமே முழுநேரத்தையும் செலவிட்டார்.  எதற்கெடுத்தாலும், அவன் சின்னப்பையன்; நீதான் விட்டுக்கொடுக்கணும் என்று சொல்லி, அவனுக்காக வக்காலத்து வாங்கினார்.

அவரின் ஒட்டு மொத்த பாசமும், மணியை நோக்கித் திரும்பிய போது, இவனால் அதை ஜீரணித்துக் கொள்ள   இயலவில்லை.  அவரிடமிருந்து மெல்ல விலகி, அம்மாவிடம் ஒட்டிக்கொள்ளத் துவங்கினான் தம்பிக்காக அவர் பரிந்து பேசும் போது, அம்மா இவனுக்காகப் பரிந்து பேசினாள். தன் மீது பிரியம் காட்டாத அப்பாவிடம், அவனையுமறியாமல், கொஞ்சங் கொஞ்சமாக வெறுப்பு வளரத் துவங்கியது.

தம்பி தான், அப்பாவை நம்மிடமிருந்து பிரித்தவன் என்ற பொறாமைத்தீ கொழுந்து விட்டெறிய, மணியை எதிரியாகக் கருதலானான்.   யாரும் பார்க்காத சமயங்களில், அவனை அடிப்பது, கிள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அழ வைத்தான்அடி வாங்கிக்கொண்டு, அவன் அழும் போது, இவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.   ஒரு நாள் இவன் அறைந்ததில், மணியின் கன்னம் பெரிதாக வீங்கிவிட்டது. அப்பா வந்தவுடன் அவன் அழுது கொண்டே, கன்னத்தைக் காட்ட, அவருக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது       

கம்பை எடுத்து இவனை விளாசித் தள்ளிவிட்டார். குறுக்கே வந்து தடுத்த அம்மாவுக்கும் செமத்தியாக அடி விழுந்தது. அதுவரை அப்பாவிடம் ஓர் அடி கூட வாங்கியிராதவனுக்கு, அச்சம்பவம் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தம்பிக்காக தன்னை அடித்து அழவைத்த, அப்பாவைப் பழிவாங்கி அழவைக்க வேண்டும் என்ற குரூர எண்ணம், அவனையுமறியாமல் துளிர்விட்டது அப்பாவைப் பழிவாங்கும் தருணத்தை, எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

ஒரு நாள் காலை வெளியூரில் நடக்கும் உறவினர் திருமணத்துக்காக அப்பாவும், அம்மாவும் போகவேண்டிய சூழ்நிலை அன்றிரவு ஊர் திரும்புவதாகச் சொல்லி, பாட்டியைத் துணைக்கு வைத்துச் சென்றனர்.

அப்பாவைப் பழிவாங்குவதற்கு இதைவிடச் சிறந்த தருணம் வாய்க்குமா என இவன் மூளை சுறுசுறுப்படைந்தது. அன்று மாலை மிட்டாய் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி, வாசலில் விளையாடிக் கொண்டிருந்த தம்பியைத் தெருக்கோடியில் இருந்த கடைக்கு, அழைத்துச் சென்றான்.

மிட்டாயும், பிஸ்கட்டும் வாங்கிக் கொடுத்து, உற்சாகமாக பேசியபடியே
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த வயல்வெளிக்குக் கூட்டிச் சென்றான்..  சுண்ணுக்கெட்டிய தூரம், சுற்றுவட்டாரத்தில் ஈ காக்கா இல்லை என்பதை, ஒரு தடவைக்கு இரு தடவை உறுதிப்படுத்திக்கொண்டான்.

அங்கே கட்டைச்சுவர் இல்லாமல், தரையோடு தரையாக இருந்த கேணியில், பாம்பு மிதப்பதாகச் சொல்லவே, ஆர்வத்துடன் எட்டிப் பார்த்த தம்பியைப்  பின்னாலிருந்து உள்ளே தள்ளிவிட்டான்.

ஆ ஐயோ!” என்ற அலறலுடன், மணி கிணற்றுக்குள் விழவும், அங்கிருந்து ஒரே ஓட்டமாக, இவன் வீட்டுக்கு ஓடிவரவும் சரியாக இருந்த்து கொஞ்ச நேரம் படபடப்பு அடங்கும் வரை, குளியலறைக்குள் இருந்துவிட்டு வெளியில் வந்தான்.

விளக்கு வைத்து வெகுநேரமாகியும், தம்பி வரவில்லையே எனப் புலம்பிய   பாட்டி, தம்பி எங்கேன்னு போய்ப் பாரேன்டா என்று இவனைத் தொளைத்தெடுத்தாள்.   படிப்பது போல் புத்தகத்தை வைத்துக் கொண்டு, பாசாங்கு செய்தவன், வெளியில் சென்று, சிறிது நேரம் நின்று விட்டு வீடு திரும்பி, எங்குத் தேடியும் காணவில்லை என்று பாட்டியிடம் சொன்னான்.  .

ஊரிலிருந்து திரும்பிய அம்மா, இருட்டிய பிறகும் சின்னவன் வரவில்லை என்ற விபரமறிந்து, வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டு அழுதாள் அவனுடைய நண்பர்கள் வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் விசாரித்தார்கள்  வண்டியை எடுத்துக்கொண்டு, கிராமம் முழுக்கச் சுற்றியலைந்தார் அப்பா..  யாருக்கும் அவன் எங்கே சென்றான் என்ற விபரம் தெரியவில்லை

தம்பி எங்கே?” என்று இவனை, அம்மா கேட்டதற்கு, வெளியில விளையாடப்போனான். நான் படிச்சிக்கிட்டிருந்தேன் எனக்கொன்றும் தெரியாது என்று சொல்லித் தப்பித்துக் கொண்டான்ஆமாம் இவன் படிச்சிக்கிட்டிருந்தான்; நான் தான் அவனைத் தேடச் சொல்லி, வெளியில் அனுப்பினேன் என்று இவன் வாதத்துக்கு வலு சேர்த்தாள் பாட்டி.

ஊர் முழுக்கச் செய்தி பரவி, மறுநாட்காலை, கிணற்றில் அவன் உடல் கண்டெடுக்கப்பட்டு, கொண்டுவரப்பட்டது  அப்பா அதிர்ச்சியில் உறைந்திருந்தார்

வீட்டுக்குக் காவல்துறையினர் வந்து விசாரித்தார்கள் விளையாடும் போது அவனாகத் தான் விழுந்திருக்க வேண்டும்; எனக்கு யார் மேலேயும் சந்தேகம் இல்லை என அப்பா சொல்லவே, அவர்கள் பேருக்கு விசாரணை நடத்தி, கோப்பை மூடிவிட்டனர்அப்பாவுக்கு அந்த ஊரில் நல்ல பெயர் இருந்ததும், ஒரு காரணமாக இருக்கலாம்.

அச்சம்பவத்துக்குப் பிறகு அப்பாவைப் பார்க்கவே, அவனுக்குப் பயமாயிருந்தது வாயைத் திறந்தால் ஏதாவது உளறிவிடுவோமோ எனக் கலக்கமாயிருந்தது ஆனால் அப்பா அவனிடம் எதுவும் கேட்கவேவில்லை.   காதுகளில் எந்நேரமும் ஐயோ என்ற தம்பியின் அலறல் கேட்டுக் கொண்டேயிருந்தது

இரவில் கண்களை மூடினால், தம்பியின் ஆவி வந்து பயமுறுத்தியதுதம்பியை நினைத்து, அம்மா அடிக்கடி அழும்போது, குற்றவுணர்வு அவனைப் பாடாய்ப்படுத்தியது நான் ஒரு கொலைகாரன் என்று நினைப்பு தோன்றும்போதெல்லாம், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், மனதிற்குள்ளேயே மருகினான்.  

அடிக்கடி காய்ச்சலில் படுத்தவனுக்கு, யார் யாரிடமோ வைத்தியம் பார்த்தார்கள்.   சாமியார்கள் வீட்டுக்கு வந்து அவனைப் பிடித்திருக்கும் தம்பி ஆவியை விரட்ட பூஜைகள் செய்து, மந்திரித்துத் தாயத்து கட்டினார்கள் அப்பாவுக்கு இதில் நம்பிக்கை இல்லாவிடினும், அம்மாவின் திருப்திக்காக ஒத்துக்கொண்டார்.

அவருக்கு வெளியூருக்கு மாற்றல் கிடைக்கவே, அவன் நிலைமையில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது ஆனால் அதற்குப் பிறகும், அப்பாவிடம் பேசும் துணிச்சல் அவனுக்கு வரவில்லை இருவருக்குமிடையே நிரந்தரப் பிரிவு ஏற்பட்டு விட்டதன் காரணமாக, தனக்கு வேண்டிய  அனைத்தையும் அம்மா மூலமாகவே கேட்டுப் பெற்றான். 

மனைவியிடமிருந்து மீண்டும் அலைபேசி அழைப்பு வரவே, அவன் நினைவோட்டம் தடைபட்டது.

என்னங்க! நீங்க மருத்துவமனைக்குக் கிளம்பின பெறகு, கண்ணனோட டீச்சர் போன் பண்ணினாங்க சில பசங்களோட சேர்ந்துக்கிட்டு இவனும் தண்ணியடிச்சிருக்கான் நாளைக்குக் காலையில, நம்ம ரெண்டு பேரையும், தலைமை ஆசிரியர் பார்க்கணும்னு சொல்லி யிருக்காராம்.   டி.சி. கொடுத்துடுவாரோன்னு ரொம்ப்ப் பயமாயிருக்குங்க.”

அப்பிடியா செஞ்சான் எவ்ளோ கொழுப்பு இருந்தா, இந்த மாதிரி பண்ணியிருப்பான்நாயை  அடிக்கற அடியில, இனிமே அந்தப் பசங்க கூட சேர விடாம் பண்ணிடறேன்”. 
.
மருத்துவமனை என்பதை மறந்து, கோபத்தில் கத்திவிட்டான். அப்பாவிடம் அசைவு தெரிந்தது.  சைகை செய்து அவனைக் கூப்பிட்டார். இவரு எங்கிட்ட என்ன பேசப் போறாரு?’  என்ற யோசனையுடன், வேண்டா வெறுப்பாக அருகில் சென்றான்.

தம்பி! இந்தக் காலத்துப் பசங்க ரொம்ப சென்சிட்டிவ்.  எக்குத் தப்பா ஏதாவது செஞ்சிடுவாங்க.  நல்லத்தனமாக் கூப்பிட்டுக் கண்டிச்சுச் சொல்லு. அடிக்க வேணாம்.  நான் செஞ்ச அதே தப்பைநீயும் செஞ்சுடாத.  எங்கிட்டேயிருந்து நீ விலகினமாதிரிஅவனும் ஒங்கிட்டேர்ந்து மொத்தமா விலகிப் போயிடுவான்.  நான் தாங்கிக்கிட்டேன்.  ஒன்னால தாங்க முடியாது.

மணி  பொறந்தவுடனே, அவன் மேல பாசத்தைப் பொழிஞ்சேன். அதனால ஒன்மேல பாசம் இல்லேன்னு, அர்த்தமில்லே. ஒன்மேலேயும், எனக்கு  அன்பு இருக்குங்கிற உண்மையை, நான் அப்பப்ப வெளிப்படுத்தியிருக்கணும். அது நான் செஞ்ச இன்னொரு பெரிய தப்பு. ஒனக்கு அவன் மேல இருந்த பொறாமை, நாளாக நாளாகத் தானாச் சரியாயிடும்னு, தப்புக் கணக்குப் போட்டுட்டேன் ஆனா நீ என்னைப் பழிவாங்கணுங்கிற வெறியில, அவனைப் புடிச்சிக் கெணத்துல தள்ளுவேன்னு, கொஞ்சமும் எதிர்பார்க்கல”.   எதிர்பாரா இத்தாக்குதலால், அதிர்ச்சியில் நிலைகுலைந்து நின்றான்

நா..ன்….நா..ன்…. ஒன்..னும் தம்பியைத் தள்ளிவிடலை அவனாத் தான் கால்தவறி விழுந்துட்டான்”.  நாக்குழறியது; வேர்த்து வேர்த்துக் கொட்டியது.

எனக்கு எல்லாம் தெரியும்பா பாவம் ஒங்கம்மாவுக்குத் தான், சாகற வரைக்கும், இந்த உண்மை தெரியாது”.

வேணும்னே, என் மேல பழி போடறீங்க; நான் எதுவும் செய்யல அவனாத் தான்….”

போதும்பா. ,இனி மேலேயும் உண்மையை மறைக்காதே கடைசியா அவனை யாரு பார்த்தான்னு விசாரிச்சப்ப கடைகாரர், உன்னோட பார்த்ததாச் சொன்னார் நீயும் அவனும் வந்து பிஸ்கட்டும், மிட்டாயும் வாங்கிட்டுப் போனீங்களாம் அரை மணிநேரங்கழிச்சி, நீ மட்டும் தலைதெறிக்க கடையைத் தாண்டி, நம்ம வீட்டுப்பக்கம், ஓடி வந்ததைப் பார்த்ததாச் சொன்னார் என்ன நடந்திருக்கும்னு என்னால சுலபமா யூகிக்க முடிஞ்சிது எங்கிட்ட சொன்னதை, யார்க்கிட்டேயும் சொல்லிடாதீங்கன்னு, அவருக்கிட்ட கெஞ்சி சத்தியம் வாங்கிக்கிட்டேன்

அதனால தான் போலீசு வந்து விசாரிச்சப்பக் கூட, எனக்கு யார் மேலேயும் சந்தேகம் இல்லை அவனாத் தான் விளையாட்டா கால் தவறி விழுந்திருக்கணும்னு, பொய் சொன்னேன். அவனையும் பறிகொடுத்திட்டு ஒன்னையும் போலீசு புடிச்சிட்டுப் போயிட்டா, என்ன செய்யிறதுங்கற பயத்துல தான், எதுவுமே தெரியாத மாதிரி நடந்துக்கிட்டேன்

ஆனாக் குற்றவுணர்வு காரணமா, நீ எங்கிட்டேர்ந்து முழுசா விலகி, அம்மாக்கிட்ட ஒட்டிக்கிட்டே. உள்ளூர்ல இருந்தா, இந்த விஷயம் மெல்ல வெளியில வந்துடும்; ஒன் வாழ்க்கை பாழாயிடுமேன்னு பயந்து தான், உடனே மாற்றல் வாங்கிட்டு, குடும்பத்தோட வெளியூருக்கு வந்தேன்”.
தொடர்ந்து பேச முடியாமல், அவருக்கு மூச்சு வாங்கியது.

அவன் காலுக்கடியில் பூமி நழுவியது தம் செல்ல மகனைக் கொன்றவன் நான் தான் என்று தெரிந்தும், அம்மாவிடம் கூட உண்மையைச் சொல்லாமல், இத்தனை ஆண்டுகள் ரகசியம் காத்து…?  எவ்வளவு உயர்வானவர் அப்பா!

என் நல்வாழ்வின் மேல் எவ்வளவு அக்கறை இருந்திருந்தால், காவல்துறையிடமிருந்து என்னைக் காப்பாற்றி, இன்று சமூகத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு ஆளாக்கியிருப்பார்! இல்லாவிடில் ஒரு கொலைகாரன் என்றல்லவா, இச்சமூகம் என்னைக் காறித் துப்பி ஒதுக்கி வைத்திருக்கும்யாருக்கும் தெரியாது என்று இத்தனை காலம் நினைத்திருந்த சம்பவம், இன்று விஸ்வரூபமெடுத்துக் கண்ணெதிரே…..   

ஐயோ அப்பா, உங்களைப்  புரிஞ்சுக்காம இருந்துட்டேனே.   உங்களைப் பழிவாங்கிறதா நினைச்சித் தம்பியைக் கொன்னுட்டேனே; தம்பி ரொம்பப் பாவம்; நான் ஏன் அப்பிடி நடந்துக்கிட்டேன்னு,  எனக்கே தெரியலை.  அந்தச் சம்பவத்தைத் தெனமும் நெனைச்சி, நெனைச்சி இப்பக்கூட சரியான தூக்கம் இல்லாமத் தவிக்கிறேன்,” என்று சொல்லி மன்னிப்புக் கேட்கும் பாவனையில், கண்களில் நீர் வடிய,  கைகூப்பி வணங்கினான்.

அத நெனைச்சி, இனிமேலேயும் வருத்தப்படாதேஅது நடக்கலைன்னாலும், ஆறு மாசத்திலேயோ, ஒரு வருஷத்திலேயோ, அவன் தானாவே செத்திருப்பான்”.

என்ன சொல்றீங்கதானாவே செத்திருப்பானா?”

ஆமாம்பா பொறக்கும் போதே, அவனுக்கு மோசமான இருதயக் கோளாறு இருந்துச்சி. ஆப்ரேஷன்லாம் பண்ணமுடியாது; அஞ்சு வயசு வரைக்கும், அவன் உயிரோட இருந்தாலே, அதிசயம் தான்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க சாகப் போற கடைசி நிமிஷம் வரைக்கும், அவன் மகிழ்ச்சியா இருக்கணும்; அதனால அவனோட வியாதி  யாருக்கும் தெரியக்கூடாதுன்னு தான்,  அம்மாக்கிட்டக் கூட சொல்லாம மறைச்சிட்டேன்”. 

அய்யோ இது எனக்குத் தெரியாமப் போயிடுச்சேஎன்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமேஅவன் மேல நீங்க ஏன் அவ்ளோ பாசம் வைச்சிருந்தீங்கன்னு, இப்பத்தான் எனக்குப் புரியுது.  அவனை என் எதிரியா நெனைச்சி, எப்படியெல்லாம் அடிச்சி அழவிட்டு, வேடிக்கைப் பார்த்தேன்! இன்னுங் கொஞ்சநாள் தான், அவன் இருப்பான்னு தெரிஞ்சிருந்தா, நானும் அவன்கிட்ட உயிரா இருந்திருப்பேன் என்னை மன்னிச்சிடுங்கப்பா! மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா,”

அவர் முகம் பார்த்து, தலையிலடித்துக் கொண்டு கதறினான்..

அவர் கண்கள் இமைப்பதை நிறுத்தியிருந்தன.

**************************** 






35 comments:

  1. உணர்ச்சிபூர்வமான கதை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! உங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  2. Replies
    1. வாங்க வெங்கட்ஜி! நலமாயிருக்கிறீர்களா? நல்ல கதை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி ஜி!

      Delete
  3. எத்தனை உயர்வான அப்பா!..
    நெஞ்சம் நெகிழ்ந்து விட்டதம்மா..

    அப்பாவுக்குத் தண்டனை கொடுப்பதாக நினைத்துக் கொண்டு
    தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்டான்..

    விதி வலியது..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார்! கதையைப் படித்து நெஞ்சம் நெகிழ்ந்தது என்றறிய மகிழ்ச்சி. உங்கள் கருத்து என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றது. மிகவும் நன்றி சார்!

      Delete
  4. உணர்வுப் பூர்வ கதை
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ!

      Delete
  5. கதையை வாசித்ததிலிருந்து மனம் ஒரு நிலையில் இல்லை. ஒரு தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் விழுந்த இடைவெளி தந்தையின் அன்பால்.. மனம் விட்டுப் பேசும் பேச்சால் ஒருவழியாக இறுதியில் நிரப்பப்படுகிறது. ஆனால் சிவராமனின் பால்யகால நிகழ்வின் குற்றவுணர்வைப் போக்கடித்து புதியதொரு குற்றவுணர்வில் தள்ளிவிடுகிறது தந்தையின் ஆழ்மன அன்பு. மனம் தொட்ட கதை. எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்று சிறுகதைத் தொகுப்பில் தங்கள் கதை இடம்பிடித்தமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. கதை மனதை நெகிழச்செய்தது என்றறிய மகிழ்ச்சி கீதா! விரிவான விமர்சனம் கண்டு மகிழ்கின்றேன் மிகவும் நன்றி கீதா!

      Delete
  6. @ GOBALAKRISHNAN.VAI

    எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டியின் முடிவில் வெளியிடப்பட்ட ‘வசீரும் லீலாவதியும்,’ என்ற தொகுப்பு நூலில், இடம் பெற்ற ‘தப்புக்கணக்கு’ - சிறுகதைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    - கோபு

    ReplyDelete
    Replies
    1. கோபு சாரின் பின்னூட்டம் இல்லாமல், வருத்தத்துடன் இருந்தேன். அந்தக் குறையை நிவர்த்திக்கும் விதமாக, என் மின்னஞ்சலுக்குப் பின்னூட்ட மழை பொழிந்துவிட்டார் கோபு சார்! அவருடைய வாழ்த்தையும், பாராட்டையும் காப்பி+ பேஸ்ட் பண்ணி இங்குக் கொடுத்துவிட்ட பிறகு தான், என் மனக்குறை நீங்கியது. கோபு சாருக்கு என் பணிவான வணக்கமும், நன்றியும்.

      Delete
  7. @ GOBALAKRISHNAN.VAI

    இளைய குழந்தை பிறந்ததும், அதன் மேல் எல்லோருடைய கவனமும் செல்லும்போது, மூத்த குழந்தைக்கு ஏற்படும் இந்த மாபெரும் சோகத்துடன் கூடிய ஏக்கம் பெரும்பாலும் எல்லாக் குடும்பங்களிலும் ஏற்பட்டுத்தான் வருகிறது. அது சவலைக்குழந்தையாகி மனதளவில் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகித்தான் வருகிறது என்பது மறுப்பதற்கு இல்லை.

    என் பேரன் பேத்தியிடமும் இதே ஃபீலீங்க்ஸ் அதிகமாக இருந்து வந்தன. தாத்தா பாட்டியான நாங்கள் பெரிய குழந்தை இருக்கும் போது அதைத்தான் கொஞ்சி மகிழ்வோம். சின்னக்குழந்தையை பெரிய குழந்தை எதிரில் தூக்கவோ கொஞ்சவோ மாட்டோம். இதன் அடிப்படையில் இந்தக்கதையின் கரு எடுத்துக்கொண்டு எழுதப்பட்டுள்ளது உயிரோட்டம் உள்ளதாக அமைந்துள்ளது.

    - கோபு

    ReplyDelete
    Replies
    1. கதையை உள்வாங்கி ஊன்றிப்படித்து அதைச் சொந்த வாழ்வியல் அனுபவத்தோடு சொல்லிய விதம் அருமை கோபு சார்! கதையில் உயிரோட்டம் உள்ளது என்பதை உங்கள் வாயால் அறிய மிக்க சந்தோஷம்! நன்றி கோபு சார்!

      Delete
  8. அதே போல, இளஞ்சிறுவர்களுக்கு, ஏதோவொரு காரணத்திற்காக அப்பாவிடம் வெறுப்பு + அம்மாவிடம் பாசம் என்பதும் பெரும்பாலும் எல்லாக் குடும்பங்களிலும் இயல்பாக உள்ளது மட்டுமே. அதையும் இந்தக்கதையில் மிகவும் நன்றாகக் கையாண்டுள்ளீர்கள். சபாஷ்!

    - கோபு

    ReplyDelete
    Replies
    1. உங்களிடமிருந்து சபாஷ் என்ற பாராட்டைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தைத் தரும் விதத்தில் அமைந்த, உங்கள் வார்த்தைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கோபு சார்!

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. 4) இதில் வரும் அப்பா கதாபாத்திரம் எல்லோரையும் கவரக்கூடியவராக அமைந்துள்ளது. முடிவு இப்படித்தான் இருக்கக்கூடும் என ஓரளவுக்கு எதிர்பார்க்க முடிந்தாலும், அதற்காகக் கொடுத்துள்ள ஜஸ்டிஃபிகேஷன்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது.
    @ GOBALAKRISHNAN.VAI
    மூத்த குழந்தையால், அந்தக்கிணற்றில் தள்ளிவிடப்பட்டு, அதனால் இறந்து போன அந்த இரண்டாம் குழந்தை எப்படியும் ஐந்து வயதுக்கு மேல் வாழப்போவது இல்லை என்பது கதையில் ஆறுதல் அளிக்கும் ஓர் விஷயமாக அமைந்து போய் உள்ளது ..... இந்தக்கதையிலேயே அதுதான் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது. மனதைக் கலங்கடித்த மிக அருமையான கதை. இந்த உருக்கமான கதையை எழுதியுள்ள தங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    - கோபு

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கதையின் முடிவைச் சரியாக யூகித்துவிடுவீர்கள் என்பது தெரிந்த விஷயம் தான். அதற்கான ஜஸ்டிபிகேஷன்ஸ் பொருத்தமாயுள்ளது என்றறைந்து மகிழ்ச்சி. பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி கோபு சார்!

      Delete
    2. என்றறிந்து என்பதை என்றறைந்து என்று தவறாகத் தட்டச்சு செய்துவிட்டேன்.

      Delete

  11. @ GOBALAKRISHNAN.VAI
    5) நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின், மிகச்சிறப்பான, அதுவும் உணர்வு பூர்வமான சிறுகதையொன்றை வாசிக்க வாய்ப்பளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    - கோபு

    ReplyDelete
    Replies
    1. வலைப்பக்கமே வராமல் தாங்களும் ஒதுங்கியிருக்கும் விஷய்ம், மீண்டும் நான் எழுத வந்த போது தான் தெரிந்தது. இருந்தாலும் கதையை உடனே படித்து என் மெயிலுக்கு விளக்கமாகப் பின்னூட்டம் எழுதியமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கோபு சார்! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! புத்தாண்டு உங்களை மீண்டும் வலைப்பக்கம் கொண்டுவரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. உங்களின் இந்தப் பின்னூட்ட மழை என்னை மேலும் எழுதத்தூண்டுகிறது. அதற்காக மீண்டும் உங்களுக்கு என் வணக்கமும், நன்றியும் கோபு சார்!

      Delete
  12. கதை என்னை மிகவும் கவர்ந்தது. கோபு சார் சொல்லித்தான் இந்தக் கதையைப் படிக்கவந்தேன்.

    கடைசி மூன்று சம்பவங்களும் (அப்பா உண்மையைச் சொல்வது, மகன் வருத்தப்படுவது/அப்பா இரண்டாவது மகன் 5 வருடங்களுக்கு மேல் இருந்திருக்கமாட்டான் என்று சொல்வது, கடைசியில் அப்பா கண்ணை மூடுவது) மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தன.

    பொதுவா தன் பெற்றோரைப் பிடிக்காதவர்களுக்கு அவர்களைப் பிடிக்கும் மனைவி அமைவது இயற்கைதான்.

    ஒரு குழந்தைக்கு மேல் இருக்கும் வீடுகளில் நடப்படதை நிதர்சனமாகச் சொல்லியுள்ளீர்கள். அதுவும், ஆண், பெண் குழந்தைகள் இருக்கும்போது சில வீடுகளில் ஆணுக்கு மிக அதிக உரிமை கொடுப்பதும் சகஜம்தான். பெண்ணுக்கு அதிக உரிமையும் பாசமும் பொழிவது, அவள் பதின்ம வயது வரும்போதுதான். அப்போதுதான் ஆணுக்கும் தகப்பனுக்கும் கொஞ்சம் விரிசல் வரும் நேரம்.

    கதையை மிகவும் ரசித்தேன். கோபு சார் நல்ல கதையை பரிந்துரை செய்திருக்கிறார். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி நெல்லைத் தமிழன்! கோபு சார் சொல்லித் தான் படிக்க வந்தீர்கள் என்றறிந்து மிகவும் மகிழ்ச்சி. கோபு சார் பரிந்துரை செய்திருப்பதற்கு அவருக்கு என் முதல் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கதை மிகவும் கவர்ந்தது என்றறிய மிகவும் மகிழ்ச்சி. கதையைப் பற்றி விரிவாக விமர்சித்து நீங்கள் எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். இதைவிட எழுதுபவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் வேறில்லை. கதையை ரசித்துப் பாராட்டியமைக்கு உங்களுக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
    2. கதை நெகிழ்ச்சியாய் இருந்தது. மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்

      Delete
  13. உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஷக்திபிரபா. கோபு சார் பரிந்துரையின் பேரில் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! பரிந்துரை செய்த திரு கோபு சாருக்கு என் முதல் நன்றி!

    ReplyDelete
  14. உணர்வுப்பூர்வமான கதை...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப உருக்கமான கதை. தந்தை மகனுக்குள்ள மிஸண்டர்ஸ்டாண்டிங்கு் தம்பிபி மேல வெறுப்பாக வளர்ந்து அவனை கொலை பண்ணும் அளவுக்கு போனது கொடுமை..

      Delete
    2. @ பரிவை சே.குமார்

      உணர்வு பூர்வமான கதை என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி குமார்!

      Delete
    3. @ Shamaine Bosco

      கோபு சார் பரிந்துரையின் பேரில் என் தளத்துக்கு வருகை தந்து கதையை வாசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி! உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

      Delete
  15. அருமையான கதை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி ஜீவலிங்கம் சார்! தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. அருமையான கதை... பூரணமாக வெளிப்படுத்தப்படாத அன்பு அதன் விளைவு பல வருடங்களாக மனநிறைவையும் சந்தோஷத்தையும் அல்லவா அப்பா மகன் இருவரிடமும் இருந்து திருடிக்கொண்டது காலம்..
    ரசித்து படித்த உணர்ச்சிபூர்வமான பதிவு..

    ReplyDelete
    Replies
    1. வாங்க யுவராணி! நலமா? என் வலைப்பூவுக்கு முதல் விருது நீங்கள் கொடுத்தது தான். இத்தனை நாட்கள் கழித்து உங்கள் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது. கதையை வாசித்து அருமையான கதை என்று பாராட்டியமைக்கு மிகவும் நன்றி யுவராணி! உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete
  17. பல குடும்பங்களில் ஏற்படுகின்ற ப்ரச்னையை மையமாய் வைத்துக் கற்பனை கலந்து எழுதிய நல்ல கதை . பாராட்டு .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டு கண்டு மகிழ்கின்றேன். மிகவும் நன்றி!

      Delete