நல்வரவு

வணக்கம் !

Saturday, 19 September 2015

நீர்நிலைகளை நஞ்சாக்கும் செயற்கை வண்ணச் சிலைகள்!இயற்கையைத் தெய்வமாக வழிபட்டு, அதனோடியைந்த வாழ்வு வாழ்ந்த நம் முன்னோரின் பாதையிலிருந்து விலகி, நாளுக்கு நாள் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கு, நாம் வெகு விமரிசையாகக் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியே ஒரு சாட்சி. 

இவ்விழா வந்தாலே கண்ணைப் பறிக்கும் பலவிதமான வண்ணங்களில் பிரும்மாண்டமான விநாயகர் சிலைகளைச் சாலையோரங்களில் திடீர்ப்பந்தல் போட்டு அமர்த்தி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன்,  காதுகளைச் செவிடாக்கும் ஒலிப்பான்கள் மூலம் பாடல்கள் ஒலிபரப்பிச் சில நாட்கள் பரவசத்துடன் வழிபடுவதும்   பின்னர் பக்தர்கள் புடைசூழ ஆரவாரத்துடன் ஊர்வலமாகச் சென்று  நீர்நிலைகளில் கரைப்பதும், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் அதிகமாகிவிட்டது. 


பிள்ளையார் தமிழ்க்கடவுள் இல்லை; வாதாபியிலிருந்து கொண்டு வரப்பட்டவர் (வாதாபி கணபதிம்) என்ற வாதத்திற்குள், நாம் போக வேண்டாம்.  போராட்டங்கள் நிறைந்த நடைமுறை வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு விடாதபடி, அவ்வப்போது உற்சாகத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியை உண்டாக்க, இது போன்ற விழாக்கள் தேவை தான். 

ஆனால் ஏற்கெனவே மோசமாக மாசுபட்டு, நம் வளரும் தலைமுறையின் வளமான வாழ்வுக்கு  அச்சுறுத்தலாக விளங்கும் சுற்றுச்சூழல் இம்மாதிரியான விழாக்கள் மூலம், மென்மேலும் சீர்கெட, நாம் அனுமதிக்கலாமா?   சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாப்பாக நம் முன்னோர் ஒப்படைத்த இப்புவியை, நம் குழந்தைகளிடம் அதே நிலையில் ஒப்படைப்பது நம் கடமையல்லவா?     

சுற்றுச்சூழலைப் பற்றி நாம் விழிப்புணர்வு பெறுவது  எப்போது?   நாகரிகம் என்ற பெயரில் மொழி, உடை போன்ற விஷயங்களில் கண்ணை மூடிக்கொண்டு மேல்நாடுகளைக் காப்பியடிக்கும் நாம், இந்த அவசியமான விஷயத்தில் மட்டும், அவர்களை விட மிகவும் பின் தங்கியிருப்பது ஏன்?  எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்!  ஆபத்து வந்த பின் புலம்புவதை விட, வருமுன் காப்பது விவேகமல்லவா?

பசுமைப்புரட்சி என்ற பெயரில் எண்டோசல்பான் உள்ளிட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை வண்டி வண்டியாகக் கொட்டி நிலத்தை முழுவதுமாக பாழ்படுத்திய பிறகு, இயற்கை வேளாண்மை பற்றி இன்று வாய் கிழியப் பேசுகிறோம்;  காற்று மாசுபட்டதால் ஏற்கெனவே ஓசோனில் ஓட்டை விழுந்து, புவியின் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்கிறது.  சூடு அதிகரிப்பதால், வருங்காலத்தில் உறைபனியென்பதே இருக்காது.  வற்றாத ஜீவநதிகள் கூட வறண்டுவிடும்; இன்னும் ஐம்பதாண்டுகளில் உலகமுழுக்கக் குடிதண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் என அறிவியல் அறிஞர்கள் பயமுறுத்துகிறார்கள். 

இந்நிலையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச நீர்நிலைகளையும், விழாக்கள் என்ற பெயரில் பாழ்படுத்துவது அறிவுடைமை ஆகுமா?  சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதற்கு,  இதைவிடப் பொருத்தமான  எடுத்துக்காட்டு உண்டா?

என் சிறுவயதில் இவ்விழாவன்று, அம்மா பசுஞ்சாணத்தை எடுத்துவந்து உருண்டையாகப் பிடித்து, அதன் தலையில் அருகம்புல் செருகி, மஞ்சள், பூ, குங்குமம் வைத்து பிள்ளையாராக வழிபட்டது நினைவிலிருக்கிறது.  விழாவுக்குப் பின்னர் இப்படிப் பிடித்து வைக்கப்பட்ட செலவில்லாப் பிள்ளையார், நல்ல பிள்ளையாகச் சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல், தோட்டத்துக்கு உரமாகிவிடுவார்!

அக்காலத்திலும் சாணப் பிள்ளையாருக்குப் பதிலாக பிள்ளையார் பொம்மைகளை வாங்கி வந்து கும்பிடும் பழக்கமிருந்தது.  ஆனால் அச்சிலைகளனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எவ்விதக் கேடும் விளைவிக்காத களிமண்ணால் செய்யப்பட்டவை; வேதிவண்ணங்கள் பூசப்படாதவை;  இவற்றை ஆற்றிலோ, குளத்திலோ கரைக்கும் போது நீர் மாசுபடாது என்பதோடு.  நீர்வாழ் உயிரினங்களுக்கும் எவ்வித ஆபத்துமில்லை.  ஆனால் இப்போதோ?

சிலை தயாரிப்பில் மக்காத குப்பைகளான பாரிஸ் சாந்து (pop) அக்ரிலிக் மற்றும் எண்ணெய் வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தி நீர்நிலைகளில் கரைப்பதால் ஐநூறு டன்னுக்கு மேலான மாசு கலந்து, நச்சுத்தன்மை அதிகரிப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வர்ணம் பூசப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஒரு சாமி பொம்மை எட்டிலிருந்து பத்து கிராம் காரீயத்தை நீரில் கலக்கிறது என்கிறார் செயின்ட் ஜான் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவர்.  அப்படியானால் ஒவ்வோர்  ஊரிலும்,  நீரில்  கரைக்கப்படும்  ஆயிரக்கணக்கான சிலைகளால் காரீயத்தின் அளவு எவ்வளவு கூடுமென்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்! 

சுடப்படாத களிமண், கிழங்கு மாவு, மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் ஆகிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே  நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்; ரசாயன வண்ணப் பூச்சுடன் கூடிய  சிலைகளைக் கரைக்கக் கூடாது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இவ்வாண்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆனால் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல வண்ணச் சிலைகளைப் பார்க்கும் போது, இந்த எச்சரிக்கையை சிலை தயாரிப்பாளர்களோ, பொதுமக்களோ சட்டை செய்ததாக தெரியவில்லை.  

இவ்விதியை மீறுபவர்களுக்குச் சட்டங்கள் மூலம் கடுமையான தண்டனை அளித்தால் மட்டுமே, இப்பிரச்சினைக்கு உடனடியாகத்  தீர்வு காணமுடியும்.  ஆனால் மக்கள் நலனில் உண்மையான அக்கறையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத இந்நாளைய அரசியல் தலைவர்களுக்கு, இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. 

மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டால், அடுத்த தடவை பதவிக்கு வரமுடியாமல் போய்விடுமே என்ற கவலை மட்டுமே இவர்களுக்கு! எனவே மக்கள் நல்வாழ்வில் அக்கறை சிறிதுமின்றி வாக்கு வங்கியில் மட்டுமே கவனமுள்ள எந்த அரசுமே, இவ்விஷயத்தில் தீவிரமான நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகமே. 
குறைந்த பட்சம் பள்ளிகளில் இதுபற்றிய கட்டுரைகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.  தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வழியாக விளம்பரங்கள் செய்து பொது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க அரசு முயல வேண்டும்.       

சில ஆண்டுகளுக்கு முன் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பெங்களூரில் நடத்திய ஆய்வில், சிலைகளைக் கரைத்த பின் காரீயம், (Lead) இரும்பு தாமிரம் ஆகியவை நீரில் கலந்திருந்ததை  உறுதிசெய்தது.  காகிதக்கூழுடன் கச்சா எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படுவதாலும், மிகவும் ஆபத்தான வேதிப்பொருட்கள் நீரில் கலந்திருந்தது தெரியவந்தது.    

கடலில் கலக்கும் இம்மாதிரியான வேதிப் பொருட்களின் நச்சுத்தன்மை காரணமாக ஏராளமான மீன்கள் செத்து மடிகின்றன.  உயிர்பிழைக்கும் கடல்வாழ் உயிரினங்களை,   உண்ணும் மனிதனின் உடல் உறுப்புகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. 

மாகி நூடுல்ஸில் மட்டுமே காரீய நச்சு (Lead) இருக்கிறது என்று எண்ணுவது பேதைமை.  நாள்தோறும் பயன்படுத்தும் குடிநீரிலும், நாம் உண்ணும் நீர்வாழ் உயிரினங்களின் உடலிலும் கலக்கும் காரீய நச்சின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  .    

மனித உடலின் உள்ளே  செல்லும்  காரீயத்தின்  (Lead) சிறு பகுதி மட்டுமே கழிவு வழியாக வெளி யேறும்; பெரும் பகுதி கல்லீரல், மூளை, சிறுநீரகம், எலும்பு போன்ற உறுப்புக்களுக்குப் பரவி படிவதால்  கோமா, வலிப்பு நோய் உண்டாகி இறுதியில் மரணம் ஏற்படும். 
கருவுற்ற தாய்மார்களின் உடலில் சேரும் காரீயம், தொப்புள் கொடி வழியாக குழந்தைக்குச் சென்று வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறந்துவிடும் அபாயமுண்டு.    

எட்டு ஆண்டுகளாக மக்களுக்கு இந்தச் சிலை விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நீர்நிலைகளின் தூய்மையைக் காப்பாற்றப் போராடி வரும் ஈகோ எக்சிஸ்ட் http://e-coexist.com/ என்ற அமைப்பு, களிமண், மஞ்சள் தூள், முல்தானிமெட்டி போன்ற இயற்கையான பொருட்களாலான சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறது.  விழா முடிந்த பின்னர் ஒரு வாளி தண்ணீரில் சிலையைக் கரைத்துத் தோட்டத்துச் செடிகளுக்கு ஊற்றச் சொல்லி வலியுறுத்துகின்றது  விழாவுமாயிற்று; தோட்டத்துக்கு உரமுமாயிற்று!   http://www.ecoganeshidol.com/ 

எனவே அடுத்த ஆண்டிலிருந்தாவது, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில், விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் என நாமனைவரும் சபதமேற்போம்!  நம் பிள்ளைகளுக்கும், அண்டை அயலார்க்கும் இதுபற்றி எடுத்துச் சொல்லி, நீர்நிலைகளின் மாசினைத் தடுக்க நம்மாலான முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோம்!. 

நம் வருங்காலச் சந்ததிகளின் நல்வாழ்வுக்காக, இதைச் செய்வது மிகவும் அவசியம்; அவசரமும் கூட.

(வலைப்பதிவர் திருவிழா 2015 – புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப்போட்டிக்காக எழுதப்பட்டது.)   (பிரிவு - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி) இக்கட்டுரை என் சொந்தப்படைப்பென்றும், இதற்கு முன் வெளியானதல்ல என்றும் போட்டி முடிவு வெளியாகும் வரை வெறெங்கும் பிரசுரத்துக்கு அனுப்பமாட்டேன் என்றும் சான்றளிக்கிறேன்.

(படங்கள் நன்றி - இணையம்)32 comments:

 1. அதிக ஒலி சூழலை மாசுபடுத்தும்
  நச்சுப் பூச்சுக் கலவைப் பொருள்கள் கொண்ட எதனையும் நீரில் கலக்க விடுவதால் நீரை மாசுபடுத்தும்.
  பிள்ளையாரை நீரில் கரைப்பது நல்லதல்ல
  பிள்ளையாருக்குத் தெரிந்தால் என்னவாகும்?
  கண்ணகி மதுரையை எரித்தால்
  பிள்ளையார் தமிழ் நாட்டையே எரிப்பாரே!
  மார்கழி முப்பத்தொரு நாளும்
  முற்றத்தில் கோலம் போட்டு
  மாட்டுச்சாணம், அறுகம்புல் எடுத்து
  பிள்ளையார் பிடித்து வைத்து
  வழிபட்டவர்கள் தைப்பொங்கலன்று - அத்தனை
  பிள்ளையாரையும் தென்னம் பாளையிலே வைத்து
  கடலில் மிதந்து செல்ல (ஓடம் போல) விடுவது வழக்கம் - ஆனால்
  நச்சுப் பூச்சுக் கலவைப் பொருள்களான
  பிள்ளையாரை நீரில் கரைப்பது
  குற்றம் குற்றமே!

  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்! நீங்கள் சொல்வது மிகவும் சரி! இது போல் நச்சுப்பொருட்கள் கலந்த சிலைகளை நீரில் விடும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளில் தோன்றியது தான். உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி! பின்னேறும் தமிழர் பண்பாடு கவிதை படித்துக் கருத்திட்டேன்! முதல் கருத்துரைக்கு மீண்டும் என் நன்றி!

   Delete
 2. //பள்ளிகளில் இதுபற்றிய கட்டுரைகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.//

  இது நல்ல யோசனை.

  ReplyDelete
  Replies
  1. இது நல்ல யோசனை என்று கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!

   Delete
 3. சிந்தனைக்கு விருந்து..
  ஆனால் - திருந்தாத ஜன்மங்கள் என்றைக்கும் நாட்டில் உண்டல்லவா!..
  அவை - கேட்டுத் திருந்துமா என்பது தான் புரியவில்லை..

  வெற்றிக்கு நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்! நாம் ஊதுகிற சங்கை ஊதிவைப்போம்! நம்மால் செய்யக்கூடியது அது ஒன்று தான். வாழ்த்துக்கு மிகவும் நன்றி துரை சார்!

   Delete
 4. நல்ல விழிப்புணர்வு, பதிவு வெற்றி பெற வாழ்த்துக்கள். பக்தி என்ற பெயரில் செய்யும் பல தவறுகளில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி முனைவர் ஐயா!

   Delete
 5. உண்மையை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறது உங்கள் கட்டுரை பாராட்டுக்கள் . கடந்த வருடம் விடுமுறையில் இந்தியாவிற்கு சென்றோம் "காதுகளைச் செவிடாக்கும் ஒலிப்பான்கள் மூலம் பாடல்கள் ஒலிபரப்பி"பக்தி மான்கள் உயிரை எடுத்து விட்டார்கள் ஒலிபெருக்கி இருக்குமிடதுக்கும் எனது வீட்டுக்கும் குறைந்த பட்சம் 200 மீட்டர் தொலைவிருக்கும் கதவு ஜன்னல் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலும் சப்தம் காதுகளை துளை போடுமளவிற்கு தாக்கியது படிக்கும் குழந்தைகளின் மன நிலையை உணர்ந்தாவது இவர்கள் திருந்துவார்களா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்

  ReplyDelete
  Replies
  1. பக்தி என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் பண்ணுவது இப்போது மிகவும் அதிகரித்திருக்கிறது விமல்! படிக்கும் குழந்தைகள் , வயதானவர்கள் ஆகியோர் இருந்தால் மிகவும் கஷ்டம் தான். நாம் என்ன சொன்னாலும் சத்தத்தைக் குறைக்க ,மாட்டார்கள். உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி விமல்!

   Delete
 6. மிக சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை! வெற்றிபெறவாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சுரேஷ் சார்!

   Delete
 7. சிறந்த கருத்துக்கள். கோயிலையும் சரியாகப் பராமரிக்க மாட்டார்கள். கழிவறையையும் சரியாகப் பராமரிக்க இயலாத நம்மாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழா ஒரு கேடு. நீர் நிலைகள் மாசுபடும் என்று சொன்னால் இதை விட்டுவிடப்போகிறார்களா ?இந்த வகை வழிபாட்டினால் பக்தர்களுக்கு என்ன நன்மை விளைந்தது ? இல்லை பிள்ளையார் மகிழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா ? இந்த மாதிரி காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டு சாலையையும் குப்பையாக்கும் இழிசெயலுக்குப் பெயர் விழாவாம், பக்தியாம் கேவலம்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும் மிகச்சரியான கருத்துப் பகிர்வுக்கும் மிகவும் நன்றி தமிழ்! சிறந்த கருத்து என்று பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!

   Delete
 8. ஆஹா எம்புட்டு செய்திகள்,,,,,,,,,
  அத்துனையும் உண்மைதான் சகோ, சிறுவயதில் பிள்ளையார் பிடிக்க சானி மஞ்சள் தூள் இவைகள் தான்,,,,
  ஆனால் இன்றோ மிரட்டும் இக்கலர்கள்,,,,,,,,
  வேடிக்கையாகத் தான் இருக்கு, அருமைம்மா,,,
  வெற்றிபெற வாழ்த்துக்கள்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி! வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மகி!

   Delete
 9. வணக்கம் சகோ நான் வெகுநாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த ஒரு விடயம் அருமையாக அலசி இருக்கின்றீர்கள் இந்தப்பதிவு கண்டிப்பாக பரிசு பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நானும் போட்டிக்கு ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் நேரமிருப்பின் பாருங்கள் இன்னும் பதிவைப்பற்றி விமர்சிக்க ஆசை நான் அரையிருட்டில் தட்டச்சு செய்வதால் போதும் என்று நிறுத்துகிறேன்...
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி சார்! நீங்கள் நினைத்திருந்ததை நான் எழுதிவிட்டேனா? பக்தி என்ற பெயரில் இவர்கள் பண்ணும் கூத்தைச் சகிக்க முடியவில்லை. எழுத வேண்டும் என்று நினைத்த நேரத்தில் இவர்கள் போட்டி அறிவித்தார்கள். உடனே எழுதிவிட்டேன். பரிசு கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி கில்லர்ஜி சார்! பரிசை விடவும் உங்கள் வாழ்த்தும் பாராட்டும் கிடைத்திருப்பது தான் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்! மீண்டும் என் நன்றி சார்!

   Delete
 10. கொண்டாட்டங்களின் பெயரால் மத நல்லிணக்கம் படும் திண்டாட்டங்கள் அரங்கேறும் அவலங்களை என்னவென்பது

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்! உங்கள் முதல் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி!

   Delete
 11. வணக்கம் நண்பரே!!! ஒரு நாள் பக்திக்கு இந்தியா முழுவதும் வியநாயகருக்கு செலவிடும் தொகை சுமார் 20000கோடி! அதனால் ஏற்படும் மாசு எவ்வளவு டன் என்று புள்ளி விவரம் தந்தால் பராவாயில்லை.நன்றி!!!

  நேரமிருப்பின் என்னுடை கவிதைகளுக்கும் தங்கள் கருத்தை தாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி! நிச்சயம் விரைவில் உங்கள் கவிதைகளை வாசித்துக் கருத்திடுவேன்! மீண்டும் நன்றி!

   Delete
 12. அற்புதமான விழிப்புணர்வு கட்டுரை. இந்த பிரச்சனயை வைத்துதான் போட்டிக்கான கட்டுரையை எழுதலாம் என்றிருந்தேன். தாங்கள் மிக அருமையாக வழங்கிவிட்டீர்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நான் முந்திக்கொண்டேனா செந்தில்? விநாயகர் சதுர்த்தி வந்தவுடன் இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தைக் கண்டவுடன் எழுதாமலிருக்கமுடியவில்லை. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி!

   Delete
 13. தக்க நேரத்தில் தகுந்த விழிப்புணர்வுக்கட்டுரை எதை எதை எந்த எந்த நேரத்தில் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொன்னால் தான் கேட்பாங்க மக்கள் .
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாவலர் சசிகலா! வாழ்த்துக்கு மிகவும் நன்றி! புதுக்கவிதைகளை வாசித்தேன். மிகவும் அருமை. நான் மிகவும் எதிர்பார்க்கும் மரபுக்கவிதையில் எப்போது கலக்கப் போகிறீர்கள்?

   Delete
 14. கடவுளின் பெயரால் இயற்கையை சீரழிக்கும் எந்தச்செயலும் மிகவும் கண்டிக்கத்தக்கது. விழிப்புணர்வு தானே வரவில்லை எனில் விதிமுறைகள் மூலம் இயற்கைச்சீரழிவைக் கட்டுப்படுத்துவதொன்றே வழி. ஆனால் நீங்கள் இங்கு குறிப்பிடுவது போல் தங்களுடைய சுயலாபத்துக்காக எந்த அரசும் இதற்கான முயற்சிகளை எடுக்கப்போவதில்லை. மக்கள் தாமாகவே உணர்ந்து திருந்தவேண்டும்.

  இன்றைய சூழலில் நாட்டுக்கு மிகவும் முக்கியமானதொரு விஷயத்தைக் கையிலெடுத்து அதன் விபரீதங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுகள் அக்கா. போட்டியில் வெற்றிபெற என் இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. சரியான கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்து மற்றும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கீதா!

   Delete
 15. //இதுபற்றிய கட்டுரைகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வழியாக விளம்பரங்கள் செய்து பொது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க அரசு முயல வேண்டும். // இரண்டுமே மிகவும் நல்ல யோசனைகள். ஏதாவது சொன்னால் மத ரீதியில் எடுத்துக்கொண்டு கோபம் கொள்ளாமல் மக்கள் சிந்திக்க வேண்டும். காரியத்தின் கேடுகள், ecocoxist, சுற்றுச்சூழல் காக்க யோசனைகள் என்று எல்லாம் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். வெற்றி பெற வாழ்த்துகள் தோழி

  ReplyDelete
  Replies
  1. அருமை எனப்பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கிரேஸ்!

   Delete
 16. வணக்கம்.

  மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்ட பதிவு.

  எண்டோ சல்பானும் குளோரோபைரிபாசும் எல்லாம்வயல்களில் இருந்து மழை வழியாக ஆறுகளுக்கு ஊடுருவி போகும் இடங்களைப் பாழாக்கி கடலையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது என்கிறது அறிவியல்.

  மண்ணின் கருவறைகள் தூர்க்கும் பல செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் மேலைநாடுகள் தடைவிதித்துவிட்டன. வழக்கம்போலவே அவை இந்தியச் சந்தைகளின் சிவப்புக்கம்பள வரவேற்பில் உச்சி குளிர்ந்து தம் கடைகளை இங்குத் திறக்க ஆரம்பித்தன.

  மனித உடலில் காரீயத்தின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவு மடங்குகளில் அதிகமாகி இருப்பதை மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  தாய்ப்பால் வரை நஞ்சு கலக்கக் காரணமான உணவுப்பயிர்களின் இடுபொருட்களுடன் நீரையும் அசுத்தப்படுத்தினால்............


  சிந்திக்க வேண்டும்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ. வணக்கம். மண்ணின் கருவறைகள் தூர்க்கும் செயற்கை உரங்கள் என்ற கவித்துவமான சொல்லாடலை மிகவும் ரசித்தேன். ஆழமான கருத்துரைக்கு மிகவும் நன்றி!

   Delete