நல்வரவு

வணக்கம் !

Friday, 24 July 2015

மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கின்றதா?
பிரபல நெஸ்லே தயாரிப்பான மாகி நூடுல்ஸில் காரீயம் (Lead) உட்பட வேதிப்பொருட்கள் பல அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவின் பல மாநிலங்களில், இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.  

நூடுல்ஸில் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்கள் வெளியிடும் காரீயம் கலந்த பெட்ரோல் புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுப்புகை, எனாமல் சுவர் வண்ணங்கள், வர்ணம் பூசப்பட்ட குழந்தை பொம்மைகள், சில நாட்டு மருந்துப் பொருட்கள்  ஆகியவற்றில் காரீயம் அதிகளவில் கலந்திருக்கிறது.      

இந்தியாவில் வர்ணம் தயாரிக்கும் கம்பெனிகள் தடையேதுமின்றிக் காலங்காலமாக இந்தக் காரீயத்தை அதிகளவில் தங்கள் பொருட்களில் கலக்கின்றன. சீதோஷ்ண நிலையைத் தாக்குப் பிடித்து நீண்ட காலம் மங்காமல் நிலைத்திருக்கவும், வர்ணம் அடித்தவுடன் உடனே காயவும், உற்பத்தி செலவைக்குறைத்து  லாபத்தை இரட்டிப்பாக்கவும், அதிகளவு காரீயம் வர்ணங்களில் சேர்க்கப்படுகின்றன. 

வீட்டுச் சுவரைத் தொட்டுவிட்டு வாயில் விரலை வைத்துச் சப்பும்  குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை.  வெளிநாடுகளில் வீட்டு வர்ணங்களில் காரீயம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கலப்பதற்குக் கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன.  இந்தியாவில் இது பற்றிய விழிப்புணர்வு சிறிதும் இல்லை.  காரீயம் அதிகளவில் கலந்து எனாமல் வர்ணம் தயாரிப்பதைத் தடை செய்ய கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு, முறையாக செயல்படுத்தப் பட வேண்டும்.      

ஆண்டுதோறும் வர்ணம் பூசப்பட்ட சாமி சிலைகளை, ஏரிகளிலும், ஆறுகளிலும் மூழ்கடிப்பதாலும், காரீயம் கலந்து தண்ணீர் நஞ்சாகிறது.   வர்ணம் பூசப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஒரு சாமி பொம்மை எட்டிலிருந்து பத்து கிராம் காரீயத்தை நீரில் கலக்கிறது என்கிறார் செயின்ட் ஜான் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் என்பவர்.  எனவே வர்ணம் பூசப்பட்ட பொம்மைகளை, ஆற்றில் மூழ்கடிப்பதை அரசு உடனடியாகத் தடை செய்யவேண்டும்.  .    

பூமியின் மேல் இயற்கையாகவே படிந்துள்ள காரீயமானது, எத்தனை காலமானாலும் மக்காத பொருள்,  காற்றில் கலந்துள்ள இது, சுவாசிக்கும் போது நுண்ணிய துகள் வடிவில்  உள்ளே சென்றாலோ, உணவு மற்றும் நீர் வழியே உடலுக்குள் சென்றாலோ, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்;   குறிப்பாக குழந்தைகளுக்கு மூளை மற்றும் உடல் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படும் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். 

உள்ளே செல்லும் காரீயத்தின் சிறு பகுதி மட்டுமே கழிவு மூலம் வெளி யேறும்; பெரும் பகுதி கல்லீரல், மூளை, சிறுநீரகம், எலும்பு போன்ற உறுப்புக்களுக்குப் பரவி படிந்துவிடுமாம்.  இதன் அளவு அதிகமாகும் போது கோமா, வலிப்பு நோய் உண்டாகி இறுதியில் மரணம் ஏற்படும்.

கருவுற்ற தாய்மார்களின் உடலில் சேரும் காரீயம், தொப்புள் கொடி வழியாக குழந்தைக்குச் சென்றுவிடுமாம்.  இதன் அளவு அதிகமாகும் போது வயிற்றுக் குள்ளேயே குழந்தை இறந்துவிடும் அபாயமுண்டு.    

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தக் காரீயத்தைப் பயன்படுத்துவதற்குக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.  ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இத்தகைய சட்டங்களோ, விழிப்புணர்வோ இல்லாததால், சுற்றுச்சூழல் நஞ்சாவதோடு, மக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.  நம் நாட்டில் தான் உயிரின் விலை மிக மிக மலிவாயிற்றே!  வளரும் நாடுகளில் 15 முதல் 18 மில்லியன் குழந்தைகள் காரீயத்தால் மூளை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை, உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

1998-99 ல் பெங்களூரில் செயல்படும் ஜார்ஜ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில், இரத்தத்தில் உள்ள காரீயத்தின் அளவைப் பரிசோதிக்க 22000 பேரிடம் சோதனை நடத்தியது.  12 வயதுக்குட் பட்ட குழந்தைகள்,  51 சதவீதத்துக்கும் அதிகமானோர்க்கு இரத்தத்தில் அதிகளவு காரீயம் இருந்தது இச்சோதனையில் கண்டுபிடிக்கப் பட்டது.  அதிர்ச்சி தரும் இச்செய்தியை 1999 பிப்ரவரியில் பெங்களூரில் நடந்த அகில உலக மாநாட்டில், இவ்வமைப்பு வெளியிட்டு இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்த பின்னரே, நம் நாட்டின் மூன்று முக்கிய பெட்ரோல் சுத்திகரிப்பு கம்பெனிகள், 2000 ஆண்டு முதல் காரீயம் கலக்காத பெட்ரோலை உற்பத்தி செய்ய முடிவெடுத்தன.

இனிப்புப் பண்டங்களின் மேல் ஒட்டப்படும் வெள்ளி ஜிகினா தாளில் கூட காரீயம் இருக்கிறதாம்.  எனவே இம்மாதிரியான அலங்கார பண்டங்களைத் தவிர்க்கவேண்டும்.  கடையில் வாங்கும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போன்றவற்றிலும் கலப்படம் இருக்கும் ஆபத்து அதிகம். எனவே அலுப்பு பார்க்காமல் பழைய காலம் போல், மிளகாய், மஞ்சள் வாங்கி காயவைத்து அரவை இயந்திரத்தில் தூள் செய்து கொள்ளுங்கள். 

மாகி நூடுல்ஸைத் தடை செய்வதால் மட்டுமே நமக்குப் பாதுகாப்பு கிடைத்து விட்டதாக அகம் மகிழக்கூடாது.  சூழலுக்கும் உடல்நலனுக்கும் மிகுந்த கேடு விளைவிக்கும் காரீயம் கலந்த அனைத்துப்     பொருட்களையும் ஒழித்துக் கட்டினாலொழிய நமக்குப் பாதுகாப்பில்லை; நம் வருங்காலச்சந்ததியின் சுகாதாரத்தைப் பாதுகாக்க, காரீயம் குறித்த விழிப்புணர்வு நமக்கு மிகவும் அவசியம். 

 கட்டுரை எழுத உதவிய இவ்விணைப்புக்களுக்கு நன்றி:- 
1)  அறிவியல்புரம் - http://www.ariviyal.in/2015/06/blog-post.html

(நான்கு பெண்கள் தளத்தில் 07/07/2015 அன்று வெளியான என் கட்டுரை)

(படம் – நன்றி இணையம்) 

Monday, 20 July 2015

பெருகி வரும் ஏ.டி.எம். கார்டு மோசடிகள் – உஷார்!
முன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது ஏ.டி.எம் கார்டு மோசடிகள் அதிகரித்து விட்டன.  இதில் வேடிக்கை என்னவென்றால்,  காவல் துறை உயர் அதிகாரிகள் கூட இம்மோசடிப் பேர்வழிகளிடம் ஏமாந்து, பணத்தைப் பறி கொடுத்திருப்பது தான்.

கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகா டி.ஜி.பி,  ஓம் பிரகாஷ்  அவருக்கு வந்த கைபேசி அழைப்பு, வங்கியிலிருந்து வந்ததாக நம்பி, ஏ.டி.எம். கார்டு  மற்றும்  அதன் ‘பின்’ (PIN – PERSONAL IDENTIFICATION NUMBER) எண்களைச் சொல்லி, ரூபாய் பன்னிரண்டாயிரத்தை இழந்தார்.  அதே போல் திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளரும், பதினான்காயிரம் ரூபாயைப் பறிகொடுத்தார். 

Friday, 17 July 2015

மரங்களைக் காப்பாற்றுங்கள்இன்றைய காலக்கட்டத்தில்  மரக்கன்றுகளை நடுங்கள் என்று குரலெழுப்புவதற்குப் பதிலாக, இருக்கின்ற மரங்களையாவது காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடுவது அவசியத் தேவையாயிருக்கிறது; அவசரமும் கூட.
 .
காலநிலை மாற்றத்திற்கும், மரங்களுக்கும் உள்ள பிணைப்புப் பற்றியும், சுற்றுச்சூழலுக்கும், மரங்களுக்கும் இடையேயான நெருங்கிய உறவு பற்றியும், வாய்கிழிய பேசுகின்றோம்; மரமின்றி மழையில்லை, மழையின்றி  நீரில்லை;  சுட்டெரிக்கும் கத்திரி வெயிலால் இவ்வாண்டு அதிகளவில் மரணம் என்றெல்லாம் புலம்புகின்றோம்.
     
ஆனாலும் ஆண்டுதோறும் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களுக்குப் பலியானது போக, எஞ்சி நிற்கின்ற மரங்கள் சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், தூசி விழுதல், கடத்தல் போன்ற காரணங்களுக்காகத் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
       
தமிழகத்தில் போராட்டம் என்ற பெயரில் ஒரு கட்சி, தெருவோரங்களில் இருந்த தொன்மையான மரங்களை எல்லாம் வரலாறு காணாத வகையில், ஒரே இரவில் வெட்டிச் சாய்த்துப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்திப் புதிய சாதனை படைத்தது!

இன்னொரு கட்சி தமிழுக்குச் செம்மொழி மாநாடு நடத்துகிறேன் என்று சொல்லிக் கோவையிலிருந்த பல நூறு மரங்களை வெட்டி, ஊரைப் பொட்டல் திடலாக ஆக்கியது.    

பிரும்மாண்ட தட்டிகளை வைத்து விளம்பரங்கள் செய்தல், அரசியல் வாதிகளுக்குக் கண்ட கண்ட இடங்களில் வரவேற்பு நுழைவாயில்கள் அமைத்தல், தோரணங்கள்  மாட்டுதல் போன்ற பல காரணங்களுக்காகப் பெரிய பெரிய கிளைகளைத் துண்டாடி மரத்தை மொட்டையடித்து மூளியாக்குகின்றனர்.  இதனால் மரம் பட்டுப் போய்விடுகின்றது. 

போதாக்குறைக்கு அவ்வப்போது நடத்தப்படும் மரம் நடு விழாக்களும், எஞ்சியிருக்கின்ற மரங்களுக்குச் சாவு மணி அடிக்கின்றன என்பது தான் வேதனையான உண்மை. 

எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன் எழுதியது இது.  மந்திரி தலைமையில்  மரம் நடு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நூறு மரக்கன்றுகள் நடப்பட்டதாம்.  சில மாதங்கள் கழித்து, நட்டவற்றில் எத்தனை பிழைத்திருக்கின்றன என்று கேட்டதற்கு  

'நட்டது நூறு,  செத்தது  நூத்தியொன்னு,' என்றாராம் உதவியாளர்.  'அதெப்படி?'  என்று விழித்தவருக்கு, கன்றுகள் நடுவதற்கு நூறு
போத்துகள்  வெட்டியதில், இருந்த ஒரு மரமும் செத்து விட்டது என்றாராம்.  எனவே அரசியல்வாதிகள் நடத்தும் மரம் நடு விழாக்கள், இப்படித்தான் இருக்கின்ற மரத்தையும்  சாகடிக்கும் கேலிக்கூத்தாகயிருக்கின்றன. 


மரங்களை வளர்த்து இயற்கையைப் பேணுவதில் இவர்களுக்கு உண்மையான அக்கறையிருக்குமானால், கோலாகலமாக விழா நடத்தி மரக்கன்று நடுவதுடன்,  அது வேர் பிடிக்கும் வரைத் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.   அல்லது மழைக்காலம் துவங்குவதற்கு முந்தைய மாதத்தில், இவ்விழாவை நடத்த வேண்டும்.  செய்வார்களா? 

ஒரு நாள் கூத்தாக கடுங்கோடையில் மரம் நடுவிழா நடத்திக் கன்றுகளை நடுவது போல் ‘போஸ்’ கொடுத்து பத்திரிக்கையில் பெரிய படம் போட்டு விளம்பரம் தேடிக்கொள்வதே அரசியல்வாதிகளின் உண்மையான நோக்கம்.

சுற்றுச்சூழல் பற்றியும் இயற்கையைப் பேணுதல் குறித்தும் நம்  எழுத்தாளர்களும் அவ்வப்போது குரலெழுப்பித் தம் பங்களிப்பைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  காலச்சுவடு இதழின் நிறுவனர் மறைந்த எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற நாவல் ‘ஒரு புளிய மரத்தின் கதை.’  இக்கதையின் கரு பற்றி ஆசிரியர் முதல் அத்தியாயத்தில் என்ன கூறுகிறார் கேளுங்கள்:-

மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டு தானே? அதில் ஒன்று தான் புளியமரத்தின் கதையும்.

சொல்லப்போனால் புளியமரம் என்ன செய்தது? சும்மா நின்று கொண்டு தானே இருந்தது? மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மெளன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதா? பட்டுக்கொண்டதா? மனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமை தான் என்ன? யாரைப் பார்த்துக் கை நீட்டிற்று? யாரை நோக்கிப் பல்லிளித்தது? யாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும் குழி பறித்ததா?
 

ஆனால் நாட்டையும், பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும், புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன், புளியமரத்தை மட்டும் விட்டு வைக்கிறேன் என்கிறானா? அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்து விட்டான். புளியமரம் அழிக்கப்பட்டது.”
 

இதே கதையில் காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு நவீன பூங்கா அமைக்கும் பணி விவரிக்கப்படுகிறது. தோப்பு மரம் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு வீழ்வதைக் காணச் சகிக்காமல், முதியவர் ஒருவர், இளைஞனிடம் கேட்கிறார்:-

”தம்பி, எதுக்குடேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?”

”செடி வைக்கப் போறாங்க” 

”எதுக்கு டேய், செடி வைக்கப் போறாங்க?”
”காத்துக்கு”

”மரத்தெக் காட்டிலும், செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்?”

”அளகுக்கு”

”செடிதான் அளகாட்டு இருக்குமோ?”

”உம்”

”செடி மரமாயுடாதோவ்?”

”மரமாட்டு வளராத செடி தான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க”

”வெட்டி வெட்டி விடுவாங்களா?”

”ஆமா”

”அட, பயித்தாரப் பசங்களா!” 

நவீனமயம் என்ற பெயரில் தோப்பை அழிக்கும் மனிதனின் பைத்தியக் காரத்தனத்தை இவ்வுரையாடல் மூலம், ஆசிரியர் எப்படிக் கிண்டல் செய்கிறார் பாருங்கள்!

எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும், இன்னும் நம் மக்களுக்கு
சுற்றுச்சூழலைப் பேணுவது குறித்தோ, மரங்களின் அருமை பற்றியோ போதிய விழிப்புணர்வு வந்தபாடில்லை.  புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை இவர்கள் உணரும் வரை, நாமும் திரும்பத் திரும்ப இது பற்றிப் பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ  இருக்க வேண்டியது தான்; வேறு வழியில்லை.

முடிவாக கவிஞர் தேனம்மை லெக்ஷ்மணன் எழுதிய ‘காயின் ருசி’ என்ற கவிதையிலிருந்து, என்னைக் கவர்ந்த சில வரிகள்:-

தூசி விழுகிறது, முகத்தில் கிளை இடிக்கிறது, பூச்சி வருகிறது  என்று    ஏதேதோ காரணம் சொல்லி மரமொன்றை வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள். நடு இரவில் கிளை தழைகளோடு, ஜன்னல் வழி வந்து   கன்னந் தழுவிய  நிலா, இப்போது மொட்டையாக….….
“காக்கைகளும், குருவிகளும்
வண்டுகளும் இல்லாமல்
கண்கள் காயும் வெளிச்சத்தில்
வறண்டு கிடந்தது சிமெண்ட் தரை.
இலையிழந்து, அழகிழந்து, களையிழந்து
மொட்டையடித்தது போல் நிலவு
நடுநிசி விழிப்பில், ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து துக்கமாய்…. …..”


(நான்கு பெண்கள் இணைய இதழில் 17/06/2015 அன்று வெளியானது)

(படம் நன்றி இணையம்)

Monday, 6 July 2015

நூல் அறிமுகம்:- வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு


நூல் அறிமுகம்:- வண்ணத்துப்பூச்சிகள்
அறிமுகக் கையேடு
ஆசிரியர்:- டாக்டர் ஆர்.பானுமதி
க்ரியா வெளியீடு
முதற் பதிப்பு – ஜனவரி 2015 
விலை ரூ.295.

வண்ணத்துப்பூச்சியைப் பற்றித் தமிழில் வெளியாகும் முதல் கையேடு என்ற சிறப்பைப் பெறும் நூலிது.

ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கண்டவுடன்,, அதன் இனம், குடும்பம், பண்பு, ஆங்கிலப்பெயர் ஆகியவற்றை அறிந்து கொள்ள, இந்நூல் பெரிதும் உதவுகிறது.  களத்திற்கு எடுத்துச் செல்ல வசதியாக, இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில் 90 இனங்களைப் பற்றிய விபரங்கள், நிழற்பட வல்லுநர்கள் எடுத்த 230 தெளிவான அழகான படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. 

பக்கத்திற்கொன்றாக வண்ணத்துப்பூச்சியின் படம் வெளியிட்டு அதைப் பற்றிய குறிப்புகள், புழுக்களுக்கு உணவாகும் தாவரங்கள் போன்ற விபரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.  என்றென்றும் குறிப்புப் பெட்டகமாகத் (reference book) நம்முடனே இருக்க வேண்டிய நூல் இது. 

இது நாள் வரையிலும், இப்பூச்சியினத்தின் அனைத்து வகைகளையும் வண்ணத்துப்பூச்சி என்ற ஒற்றை சொல்லிலேயே அழைத்து வந்திருக்கிறோம்.  ஒவ்வொன்றையும் சரியான முறையில் அடையாளங் காண தனித்தனிப் பெயர் இல்லை என்பது பெரிய குறை. 

இக்குறையைப் போக்கும் வண்ணம், பூச்சியின் இறக்கை நிறம், அதன் புழுக்களுக்கு உணவாகும் தாவரம், போன்றவற்றின் அடிப்படையில், கள ஆய்வாளர்களின் உதவி கொண்டு, ஒவ்வொன்றுக்கும் அழகிய தமிழில்  பெயர் சூட்டுவிழா நடத்தியிருக்கிறார் ஆசிரியர்!

வண்ணத்துப்பூச்சியைப் போலவே பெயர்களும் அழகாக இருக்கின்றன!
காட்டுக்குச் சில:-

நாமத்தாவி
வெளிர்சிவப்பு வெள்ளையன்
செஞ்சிறகன்
சாம்பல் வசீகரன்
பொன்னழகி
கத்திவால் அழகி
பறவைகளைக் கூர்ந்து கவனிப்பது போலவே, வண்ணத்துப்பூச்சிகளையும் கவனிப்பது பயனுள்ள பொழுது போக்கு.  இந்நூலில் நான் அறிந்து கொண்ட சுவாரசியமான சில தகவல்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்:-


 •   வண்ணத்துப்பூச்சி லிபிடோப்டெரா (Lepidoptera) என்ற வரிசையைச்     சேர்ந்த பூச்சியினம்;  இவ்வரிசையைச் சேர்ந்த இன்னொன்று அந்திப்பூச்சி (Moth).
 •  பருவகால மாற்றங்கள் காரணமாக, சில இனங்களின் இறக்கையில் உள்ள குறிகளில் மாற்றம் ஏற்படும்.
 • குளிர் இரத்த இனத்தைச் (cold blooded) சேர்ந்தது என்பதால், வெயிலில் குளிர் காயும்.
 • சுற்றுப்புற தட்ப வெப்ப நிலைக்கேற்ப, பறவைகள் போல் வலசை (migration) போகும்.
 • ஆயுட்காலம்: சிறிய பூச்சி:- ஒரு வாரம்.  பெரியது:-எட்டு மாதங்கள். 
 • ஆண்பூச்சிக்கு இனப்பெருக்கக் காலத்துக்குத் தேவையான உப்பு, புரதம்,  தாது பொருட்கள் ஆகியவற்றுக்காக பறவைகளின் எச்சம், விலங்குகளின் சிறுநீர், சாணம் ஆகியவற்றிலிருந்து நீர் உறிஞ்சும்.
 • உலகில் சுமார் 18000 இனங்கள் இருக்கின்றன.  இந்தியாவில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 1800 இனங்கள் உள்ளன.

மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவி செய்யும் வண்ணத்துப்பூச்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள், இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் விளைவால் அழிந்துவிட்டன;  பல அழியுந்தருவாயில் உள்ளன..

மண்புழு போல விவசாயியின் நண்பனான இப்பூச்சியினத்தைப் பாதுகாக்க இந்நூல் சொல்லும் சில வழிமுறைகள்:-

 • வண்ணத்துப்பூச்சியைப் பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவரிடையே
  விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
 • புழுக்களுக்கு  உணவாகும் தாவரங்களைத் தோட்டம், வயல்வெளிகள், பூங்காக்களில் பயிரிடுதல்.
 • இவற்றுக்கான பூங்காக்கள் அமைத்தல்
 • இதன் வாழ்க்கை சுழற்சியை (life cycle) கள ஆய்வாக, மாணவர்க்கு அறிமுகப்படுத்துதல்.


பள்ளிப் போட்டிகளில் மாணவர்க்குப் பரிசளிக்க உகந்த நூல் இது.  குழந்தைகளின் பிறந்த நாளின் போது, பொம்மைக்குப் பதிலாக இதனைப் பரிசளித்து, இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்.

(நான்கு பெண்கள் தளத்தில் 17/06/2015 வெளியானது)