நல்வரவு

வணக்கம் !

Friday, 20 April 2012

பெண் பார்க்கும் படலம் - சிறுகதை

இரண்டு வருடங்களாகத் தேடியும், அவன் மனதிற்குப் பிடித்த மாதிரி பெண் அமையாததில் வெறுப்புற்றிருந்தான் குமார். அதற்கு முக்கிய காரணகர்த்தா, அவன் அப்பாவின் நம்பிக்கைக்குரிய குடும்ப சோதிடர்.

'ஜாதகப் பொருத்தமில்லை' என்று காரணம் சொல்லியே பெரும்பாலான பெண் ஜாதகங்களைத் தள்ளுபடி செய்வதில் குறியாக இருந்தார் அவர்.

ஒரு காலத்தில் நல்ல வருமானம் ஈட்டித் தந்த அவரது தொழில், தற்காலத்தில் பெருகி வரும் காதல் திருமணங்களால் சுத்தமாகப் படுத்துவிட்டது. மேலும் கணிணியில் 'சாப்ட்வேர்' போட்டு ஜாதகம் கணிக்கும்(!) இக்காலத்தில், தம்மிடம் வரும் ஒன்றிரண்டு நபர்களின் திருமணம் விரைவில் முடிந்து விடக்கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாயிருந்தார்.

"7க்குடைய புதன் ராகுவுடன் சம்பந்தப்பட்டு, 2ம் இடத்தில் இருப்பதால் களத்திர தோஷம் உள்ளது. 4ல் செவ்வாய் அமர்ந்து தோஷம் அடைந்துள்ளது" என்று ஏதேதோ சொல்லி குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார்.

"மாமா, இந்தச் செவ்வாய், புதன் எல்லாம் அவங்களுக்குப் புடிச்ச இடத்துல சஞ்சரிச்சிட்டுப் போகட்டும். அவங்களைத் தொந்தரவு பண்ணாதீங்க. எனக்குக் கொஞ்சம் கருணை காட்டுங்க" என்று அவ்வப்போது அப்பாவிற்குத் தெரியாமல் தனியே சந்தித்து குமார் அளித்த 'சன்மான'த்தினால், போனால் போகிறது என்று பெரிய மனது பண்ணி, ஜாதகங்கள் ஒன்றிரண்டு பொருந்துவதாக எடுத்துக் கொடுப்பார்.

அறிவுமதி என்ற பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தபோது, தனது கற்பனை கதாநாயகி கிடைத்துவிட்டாள் என்று அகமகிழ்ந்தான் குமார். பெயருக் கேற்றாற்போல் அறிவும் அழகும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற வளாகவே அவள் இருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.

பெண் பார்க்கப் போன இடத்தில், காரில் துவங்கி கைக்கடிகாரம் வரை, அவன் அம்மா கேட்ட வரதட்சிணைப் பட்டியலைக் கேட்டு மலைத்துப் போன அப்பெண், " கார் கேட்டீங்க சரி. உங்க மகனுக்குச் சொந்தமா ஒரு கைக்கடிகாரம் வாங்கிக்கக் கூடவா துப்பில்லை?" என்று கேட்டு விட்டாள். முகத்தில் காறித் துப்பாத குறைதான்!.

'நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டு விட்டாளே!', என்று புலம்பியவன், "அம்மா, இனிமே வரதட்சிணை அது இதுன்னு கேட்டு நீங்க வாயே திறக்கக்கூடாது" என்று உத்தரவு போட்டுவிட்டான். இப்போதெல்லாம் அம்மா, பெண் வீட்டில் சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறப்பதோடு சரி.

அதற்குப் பிறகு வந்த ஏழெட்டு வரன்களும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மாலதி என்ற பெண்ணைப் பார்த்தபோது ஓரளவுக்குத் திருப்தியேற்பட்டது. இந்த வரன் முடிந்து விடும் என்ற நம்பிக்கையேற்பட்ட நிலையில், அவன் அப்பா சும்மாயில்லாமல், "உங்கப் பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா?" என்று வழக்கமாகத் தாம் கேட்கும் கேள்வியைக் கேட்டுவிட்டார்.

அதைக் கேட்டதும், அவள் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

"எங்கப் பொண்ணை வைச்சுக் கூத்துப் பட்டறையா நடத்தப் போறீங்க? அவளுக்கு எது முக்கியமாத் தெரியணுமோ, அதை நான் கத்துக் கொடுத்திட்டேன்" என்றார், அவன் அம்மாவைப் பார்த்து முறைத்தபடி.

வாயைத் திறந்து அவரை ஏதோ கேட்க நினைத்தாள் அம்மா. ஆனால் 'அசோகா' என்ற பெயரில், கோதுமை மாவில் அவர்கள் செய்து வைத்திருந்த இனிப்பு, பிசினி போல் மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள, வாயைத் திறக்க முடியாமல் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.

மனைவியின் அவஸ்தையைப் புரிந்து கொண்ட அவன் தந்தை, அவளுக்கு உதவும் விதத்தில், அவள் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டார்.

"என்னது? சமையல் சொல்லிக் கொடுத்திருக்கீங்களா?"

"சமையலா? அதை விட இந்தக் காலத்துப் பொண்ணுங்க, தங்களைக் காப்பாத்திக்க கராத்தே கத்துக்கிறது ரொம்ப அவசியம். அதனால எம் பொண்ணுக்கு கராத்தே கத்துக் கொடுத்திட்டேன். என்ன நான் சொல்றது?"

"சரிதான், சரிதான்" என்று தலையாட்டினாள் அம்மா.

" கராத்தேல, எம் பொண்ணு பிளாக் பெல்ட் வாங்கியிருக்கா" என்றார் பெருமிதத்துடன்.

அவ்வளவுதான். "போய்த் தகவல் அனுப்புகிறோம்" என்று சொல்லி வந்துவிட்டார்கள் . இப்போது அப்பெண் இருந்த திசையில் குமார் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, கண்மணி என்ற பெண்ணின் புகைப்படம் அவனுக்குப் பிடித்திருந்தது. பெண் நல்ல கலராகவும் முகக்களையாயும் இருப்பது போல் தோன்றியது. பெண் பார்க்கப் போனபோது, மின்னல் வேகத்தில் வெளியே வந்து போன அவளைச் சரியாகப் பார்க்கவிடாமல், அவனது வேலை, சம்பளம் முதலிய விவரங்களைக் கேட்டுத் தொண தொணத்துக் கொண்டிருந்தான் அவளின் சகோதரன்.

அவள் தந்தையிடம் அனுமதி பெற்று, தனியே அவளைச் சந்தித்த போது அவனுக்குப் பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது. அவன் எதிர்பார்த்தது போல் அல்லாமல், நிறம் ரொம்பக் கம்மியாயும், புகைப்படத்தில் இருந்ததை விட அதிக குண்டாகவும் இருந்தாள்.

“ஃபோகஸ் லைட் வைச்சு போட்டோ எடுத்து அனுப்பிட்டாரா உங்கப்பா? போட்டோவிலே ரொம்பக் கலராயிருந்தது மாதிரி தெரிஞ்சுச்சு" என்றான் கிண்டலாக.

"ஐஸ்வர்யாராய் மாதிரி பொண்ணு தேடறீங்க போலேயிருக்கு. அதுக்கு நீங்க அபிஷேக் பச்சனாயிருக்கணும். மண்டையில நாலே நாலு முடியோட, ஓமக்குச்சி மாதிரி இருந்துக்கிட்டு, ஐஸ்வர்யா ரேஞ்சுக்குப் பொண்ணு தேடறது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?" என்றாள் அவள் படு நக்கலாக.

இதைக் கேட்ட நம் கதாநாயகனின் முகம் எப்படியிருந்தது என்பதை 
வாசிப்பவரின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். 

(நிலாச்சாரலில் 06/07/2009 ல் எழுதியது)

Wednesday, 11 April 2012

ரசித்த நகைச்சுவை துணுக்குகள்


’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்ற உயரிய எண்ணத்தில்
ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளை,  மொழியாக்கம் செய்து இங்கே தந்துள்ளேன்:-


 துணுக்கு 1:-

கலைக்கூடமொன்றில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தாள் ஓவியர் ஒருவர்.

அந்தக் கலைக்கூடத்தின் உரிமையாளரிடம்,
"இன்று யாராவது என் ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினார்களா?" என்று கேட்டார் ஓவியர்.
.

"உங்களிடம் தெரிவிப்பதற்கு நல்ல சேதி ஒன்றும், கெட்ட சேதி ஒன்றும் உள்ளது."

அப்படியா? முதலில் நல்ல சேதியைச் சொல்லுங்கள்"

"உங்களது ஓவியங்களைப் பார்வையிட்ட ஒருவர், நீங்கள் இறந்த பிறகு இந்த ஓவியங்களுக்கு மதிப்பு கூடுமா எனக் கேட்டார்.  ஆம். கூடும் என்று  நான் சொன்னவுடன், 15 ஓவியங்களையும் அவரே வாங்கி விட்டார்."

"அப்படியா? மிகவும் நல்லது.  சரி. அந்த கெட்ட சேதி?"

"அந்த ஆள் வேறு யாருமில்லை.  உங்கள் குடும்ப டாக்டர் தாம்."


துணுக்கு 2 :-


குருவைச் சந்தித்து ஞானோதயம் பெறுவது எப்படி என்ற தம் சந்தேகத்தைக் கேட்டார் அறிஞர் ஒருவர்.

"மழை பெய்யும் போது இரு கைகளையும் உயரத் தூக்கியவாறு நில்லுங்கள்; ஞானோதயம் கிடைக்கும்," என்றார் குரு.

"குருஜி! நீங்கள் சொன்னவாறே நேற்று மழையில் நின்றேன்.  தண்ணீர் என் கழுத்து வழியாக கீழே இறங்கி ஓடிய போது, நான் ஒரு முட்டாளைப் போல உணர்ந்தேன்" என்றார் அந்த நபர்.

"முதல் நாள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஞானோதயம் அது தான்," என்றார் குரு. 


துணுக்கு 3:-.


அழகான இளம்பெண் ஒருத்திக்குத்  தினந்தினம் போன் செய்து கொண்டிருந்த வாலிபன் ஒருவன் ஒரு நாள் அவளிடம்,

"அன்பே!, உனக்காக எதை வேண்டுமானாலும், நான் விடத் தயாராயிருக்கிறேன்" என்றான்.

"அப்படியா? உன் நம்பிக்கையை விட்டு விடு" என்றாள் அவள்.


துணுக்கு - 4


ஜிம்மியும் ஜானியும் சொர்க்க வாசல் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள்.

ஜிம்மி:-  "நீ எப்படி இங்கு வந்தே?"

ஜானி:-  "அளவுக்கதிகமான குளிர் தாக்கி இறந்துட்டேன்.    நீ?"

ஜிம்மி:-  "என் மனைவி எனக்குத் துரோகம் செஞ்சான்னு எனக்கு நிச்சயமாய்த் தெரியும்.  அவளோட கள்ளக்காதலனைப் பிடிக்க, ஒரு நாள் வழக்கத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தேன்.   அவளைக் கண்டபடி திட்டிட்டு அவனை வீடு பூராத் தேடினேன்.  ஆனால் எங்குத் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால  ஆத்திரம் அதிகமாகி எனக்கு மாரடைப்பு வந்துட்டுது".

ஜானி:-  "அடடா!  நீ அந்தப் பெரிய பிரீஸருக்குள் தேடியிருந்தேன்னா,  நாம ரெண்டு பேருமே  இன்னிக்கு  உயிரோடு இருந்திருக்கலாம்".


துணுக்கு - 5

கணவனும் மனைவியும் பல் டாக்டரிடம் சென்றார்கள். 

"டாக்டர், அவசரமாக நான் போக வேண்டியிருப்பதால், மயக்க மருந்தெல்லாம் கொடுத்துப் பல்லைப் பிடுங்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு சீக்கிரம் பிடுங்குகிறீர்களோ, அவ்வளவுக்கு நல்லது," என்றாள் அந்தப் பெண்.

அவள் சொன்னதைக் கேட்டு மிகவும் வியந்த டாக்டர்,

"நீங்க உண்மையிலேயே மிகவும் தைரியசாலி தான்.  எந்தப் பல்?" என்றார்.

"அன்பே, உங்கப் பல்லைக் காட்டுங்க," என்றாள் அவள், தன் கணவர் பக்கம் திரும்பி.


துணுக்கு - 6


தன் கணவனின் குடிப்பழக்கத்தால் வெறுப்புற்றிருந்த பெண்ணொருத்தி, அவனுக்கு ஒரு பாடம் புகட்ட முடிவு செய்தாள்.  பேய் போல வேடம் பூண்டு,  சோபாவின்  பின்புறம் காத்திருந்தவள், கணவன் வீட்டுக்குள் நுழைந்த போது திடீரென்று அவன் முன்னால் வந்து குதித்துப் பயமுறுத்தினாள்.

"நீ என்னைப் பயமுறுத்த முடியாது.  நான் உன் அக்காவைத் திருமணம் செய்துள்ளேன்," என்றான் அவன்  மிகவும் அமைதியாக.


.(ரீடர்ஸ் டைஜஸ்ட்)


துணுக்கு - 7


டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது.  நீங்கதான் எனக்கு உதவணும்"

"என்ன மாதிரியான கனவு ?"

"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"

"தினமுமா?"

"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன்.  சில சமயம் நான் ஜெயிக்கிறேன்.  சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."

டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,

"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க.  இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.

"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"

"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"

"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு" 


(ஹிந்து யங் வேர்ல்டு)Thursday, 5 April 2012

நம்பிக்கை


நீ என்ன சொன்னாலும் சரி இனிமே நான் அந்த வேலைக்குப் போகமாட்டேன், என்றான் முரளி.

கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல இதோட எத்தினி வேலைக்கு மாறிட்டீங்க?  ஒரு இடத்துலயாவது தொடர்ச்சியா ஆறு மாசம் இருந்திருக்கீங்களா? 

நான் என்ன பண்றது?  இந்த மேனேஜர் சரியான முசுடு.  எதுக்கெடுத்தாலும் என்மேல எரிஞ்சு எரிஞ்சு விழறான்.  எல்லார்க்கும் முன்னால என்னக் கன்னாபின்னான்னு திட்டறான். எனக்குத் தன்மானம் தான் பெரிசு.  நீயுமாச்சு ஒன் வேலையுமாச்சின்னு ராஜினாமாக் கடிதத்தை அவன் மூஞ்சுல விட்டெறிஞ்சுட்டு வந்துட்டேன். 

இப்படி முணுக்குன்னா ராஜினாமாக் கடிதத்தை விட்டெரிஞ்சிட்டு வந்தா அதனால யாருக்கு நஷ்டம்நாம சரியா வேலைச் செய்யலேன்னா மேனேஜரா இருக்குறவங்க, கொஞ்சம் சத்தம் போடத் தான் செய்வாங்கநாம தான் நம்ம முன் கோபத்தை கொஞ்சம் அடக்கிட்டு, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகணும்.    நாளைக்கே ஒங்க இடத்துல வேற யாராவது வேலையில சேர்ந்துடப் போறாங்க.  நாம தான் சாப்பாட்டுக்கு வழியில்லாமத் திண்டாடப் போறோம்அது ஏன் ஒங்களுக்குப் புரிய மாட்டேங்குது?” 

தோ பாரு.  தொண தொணன்னு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காத.  என்கிட்ட இருக்கிற திறமைக்கு ஒருத்தன் கிட்டப் போயி கையைக் கட்டி வாயைப் பொத்தி வேலை பார்க்கிறது எனக்குப் புடிக்கலே. அது என்னோட மெண்டாலிட்டிக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சுப் போச்சு.  அதனால நானே சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

அது சரி.  இது எப்ப எடுத்த முடிவு?  கம்பெனின்னா மொதல் வேணாமா?  அவ்ளோ பணத்துக்கு நாம எங்கப் போறது?

அதைப் பத்தி நீயொன்னும் கவலைப்பட வேணாம்.  நானும் என்னோட நண்பனும் சேர்ந்து தான் ஆரம்பிக்கப் போறோம். பண விஷயத்தை அவன் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான்.  மத்ததையெல்லாம் நான் பார்த்துக்குவேன்.

உருப்படியா எதையாவது செஞ்சாச் சரி.

ஒரு மாதம் கழிந்திருக்கும்.

அம்மா கற்பகம், என்னமோ மளிகை சாமான் இல்லேன்னு சொன்னியே.  என்ன வேணும்னு எழுதிக் கொடு.  போய் வாங்கிட்டு வரேன்.

ஏற்கெனவே எழுதி வைச்சிருக்கேன் மாமா.  தோ தர்றேன்..

என்னங்க, சும்மாத் தானே இருக்கீங்க.  நீங்களும் மாமா கூட போயிட்டு வாங்களேன். தனியாளாத் தூக்கிட்டு நடக்க, ரொம்பச் சிரமப்படுவாரு.

இருங்கப்பா, நானும் வரேன்.

என்னப்பா முரளி, கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லி ஒரு மாசம் ஓடிப் போயிடுச்சி.  உருப்படியா இன்னும் ஒன்னும் பண்ணக் காணோம்.  ஒங்கப் பையனுக்கு நீங்களாவது புத்திமதி சொல்லி, ஏதாவது வேலைக்கு அனுப்பக் கூடாதான்னு, தினந் தினம் மருமகப் பொண்ணு புலம்பறதைப் பார்த்தா ரொம்பக் கஷ்டமாயிருக்கு.  சம்பாதிக்கிற வயசுல நாள் முழுக்க ஒரு ஆம்பிளை, இப்டி வீட்டுல வெட்டியா ஒட்கார்ந்திருந்தா யாருக்கும் மனசு சங்கடமாத் தானே இருக்கும்?

எனக்கு வர்ற சொற்ப பென்ஷன் பணத்துல, எவ்வளவு நாளைக்குத் தான் குடும்பத்தை நடத்த முடியும்?  முடிவா என்ன தான் செய்யறதா உத்தேசம்?  பணம் கொடுக்கறதாச் சொன்ன ஒன் நண்பன், கடைசி நிமிஷத்துல தர மாட்டேன்னு சொல்லிக் கையை விரிச்சிட்டானா?

அதல்லாம் இல்லப்பா.  என்னோட திறமையிலேயும் உழைப்பிலேயும் என்னை விட அவனுக்கு நம்பிக்கை அதிகமா இருக்குப்பா.

அப்புறம் என்ன? ஆரம்பிச்சிட வேண்டியது தானே?

என்னோட கவலையெல்லாம் மார்க்கெட்டிங் பத்தித் தான்.   முன்ன மாதிரி இப்ப இல்லப்பா.  நான் இறங்க நினைக்கிற துறையில, போட்டி இப்ப ரொம்ப அதிகமாயிடுச்சி.  பெரிய பெரிய வெளிநாட்டுக் கம்பெனி யெல்லாம், இந்தியாவுக்குள்ள வந்து விற்பனையை ஆரம்பிச்சிட்டாங்க.  அந்தப் பெரிய முதலைகளோட போட்டிப் போட்டு இந்தச் சின்ன மீன் குஞ்சால ஜெயிக்க முடியுமான்னு, ரொம்பப் பயமாயிருக்குப்பா.  அதனால தான் ஆரம்பிக்கிறதா, வேண்டாமான்னு ஒரே குழப்பத்துல இருக்கேன்.

ஒரு நிமிஷம்,  இந்தப் பையைப் புடி.  போயி கொய்யாப் பழம் வாங்கிட்டு வந்துடறேன்.

அடுத்த நிமிடம் அவன் தந்தை, ஷோரூம் வாசலுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.

முரளி அந்தக் கிழவியைப் பார்த்தான்.  மெழுகுவர்த்தியொன்றை ஏற்றி வைத்துக் கொண்டு, பத்துப் பனிரெண்டு பழங்களை மூன்று நான்கு கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு கூறு பத்து ரூபா,என்று கூவிக் கொண்டு அமர்ந்திருந்தாள். 

வாப்பா. நல்லாயிருக்கிறீயா?  எங்க ஒன்னைக் காணோமேன்னு ரெண்டு நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன்.  ஒனக்குன்னு நல்ல பழமாப் பொறுக்கித் தனியா எடுத்து வைச்சிருக்கேன்.  இந்தா எடுத்துட்டுப் போ

பேரம் எதுவும் பேசாமல், தன் கைப்பையிலிருந்து கிழவி சொன்ன காசை எடுத்து நீட்டிப் பழம் வாங்கி வந்த தந்தையைக் கோபமாக முறைத்தான் முரளி.

இதைப் போயி ஏன் வாங்கினீங்க? ரொம்பச் சின்ன சின்னதா இருக்குது.  காசு கொஞ்சம் அதிகம்னாலும், பக்கத்து ஷோ ரூம்ல பெரிசு பெரிசாப் பாலீதின் பையிலப் போட்டுப் பிரஷ்ஷா வைச்சிருக்கான்.  அதை வாங்கியிருக்கலாம்ல?

ஒரு பெரிய ஷாப்பிங் மால் பக்கத்துல, இந்த ராத்திரி நேரத்துல முணுக் முணுக்குன்னு ஒரு மெழுகுவர்த்தியை ஏத்தி வைச்சிக்கிட்டு, நாட்டுக் கொய்யாப் பழத்தைத் தன்னால விக்க முடியுங்கிற, அசைக்க முடியாத நம்பிக்கையோட கூவிக் கூவி வித்துக்கிட்டுயிருக்கிற,  இந்தக் கிழவிக் கிட்ட நாம கத்துக்க வேண்டிய பாடம் நிறைய இருக்குப்பா

தண்ணி தெளிச்சி பாலீதின் பையில போட்டு வைச்சு யானை விலை, குதிரை விலை சொன்னாலும், மறு பேச்சு பேசாம வாங்கிட்டுப் போற நாம, இந்தக் கிழவிக்கிட்ட ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்க்குப் பேரம் பேசிக்கிட்டு நிப்போம்.  இந்தச் சின்ன நாட்டுக் கொய்யாவில இருக்குற ருசி, அவங்கிட்ட இருக்கிற பெரிய பழத்துல கிடைக்குமா சொல்லு?.

எத்தனை பெரிய வெளிநாட்டுக் கடைகள் வந்தா என்ன? புதுசு புதுசா வியாபார உத்தியைப் பயன்படுத்தினா என்ன? மக்களோட  மனசறிஞ்சி வியாபாரம் பண்ணி, தனக்குன்னு வாடிக்கையாளர் சிலரைச் சேர்த்து வைச்சிருக்கிற, இந்தக் கிழவிக்கு முன்னால, அதெல்லாம் ஒன்னும் எடுபடாது.

இந்த வயசிலேயும் புள்ளைங்களை நம்பாம, உழைச்சிச் சாப்பிடணும்னு நினைக்கிறாளே, அதை நான் மதிக்கிறேன் முரளி. அதனால என்னிக்குமே நான் இந்தக் கிழவிக்கிட்ட தான் கொய்யாப்பழம் வாங்குவேன்.

முரளிக்கு ஏதோ புரிவது போலிருந்தது.