நல்வரவு

வணக்கம் !

Friday, 21 August 2015

நூல் அறிமுகம் - பல்லுயிரியம்


ஆசிரியர் :- ச.முகமது அலி
வெளியீடு:-  வாசல்,
40D/3, முதல் தெரு , வசந்த நகர், மதுரை – 625003.
முதற்பதிப்பு:- மே 2010 இரண்டாவது பதிப்பு:- ஏப்ரல் 2013
விலை ரூ.140/-.

இயற்கையின் மீது அளவிலா நேசமும், அக்கறையும் கொண்ட திரு ச.முகமது அலி அவர்கள், காட்டுயிர் துறையில் தமிழகத்தின்  முதன்மையான எழுத்தாளரும், முக்கிய ஆளுமையும் ஆவார்.  22 ஆண்டுகளாகத் தமிழில் வெளிவரும், ஒரே மாத இதழான ‘காட்டுயிர்’ இதழின் ஆசிரியரும் கூட. 
 
மொத்தம் 504 கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்பு நூல் இது. காட்டுயிர் துறையில் கள ஆய்வு, 30 ஆண்டுகளாகத் தொடர்ந்த தேடல்,  நேரடி அனுபவம், பகுத்தறிவு  ஆகியவற்றின் உதவி கொண்டு ஆசிரியர் அளித்திருக்கும் விடைகள்,  நம் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாக அகற்றி, இயற்கையைச் சரியான கோணத்தில், நம்பகத்தன்மையுடன் புரிந்து கொள்ள உதவுகின்றன.  

இவரின் பிற நூல்கள்:-
1.   நெருப்புக்குழியில் குருவி
2.   பாம்பு என்றால்
3.   பறவையியல் அறிஞர் சலீம் அலி
4.   யானைகள்:- அழியும் பேருயிர்
5.   இயற்கை:செய்திகள், சிந்தனைகள்
6.   வட்டமிடும் கழுகு


கேள்வி:-  பல்லுயிரியம் (BIO DIVERSITY) என்றால் என்ன?
பதில்:_ இன்றுவரை பூமியில் கண்டறியப்பட்டு, பெயரிடப்பட்ட சுமார் 8 லட்சம் உயிரினங்களும், பயிரினங்களும் நம்முடன் வாழும் வளர்ப்பு மற்றும் செல்லப்பிராணிகளோடு, மனிதரும் சேர்ந்த பெரும் உயிர்ச் சூழலமைப்பே பல்லுயிரியம் ஆகும்.
இது போல் வினா விடை பாணியில் அமைந்துள்ள இந்நூலில், வாசகர்களும், நேயர்களும் பல சமயங்களில் கேட்ட கேள்விகளுக்கு மெல்லிய நகைச்சுவை இழையோட, பொட்டில் அடித்தாற் போல் இவர் கூறியிருக்கும் பதில்கள், ரசிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கின்றன.  இயற்கையைப் பாதுகாக்க ஒருவர் விரும்புகிறார் என்றால், அவர் செய்ய வேண்டிய முதல் வேலை, எல்லாவகையான மூடநம்பிக்கையையும் விட்டொழிக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.    

காட்டுகள்:-
1.   கேள்வி:- புலியின் மாமிசத்தைச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்கிறார்களே?
பதில்:- புலியின் மாமிசம் மட்டுமல்ல, எதனுடையை மாமிசமும் ஆண்மையைப் பெருக்காது.  கொலஸ்ட்ராலைத் தான் பெருக்கும்.  உலகிலேயே மக்கள் தொகையில் விஞ்சி நிற்கும், இந்தியாவுக்கு இன்னுமெதற்கு ஆண்மை?
2.   கேள்வி:- மயில் ஒருவரது கண்ணைக் கொத்திவிட்டால், மயில் ரத்தத்தை எடுத்துத் தேய்ந்தால் சரியாகிவிடுமாமே!
பதில்:- ஆபத்தான பொய்.  உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.  மருத்துவ மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். 
3.   பாம்புக்கடிக்கு மருந்துண்டா?  நாட்டு வைத்தியத்தில் குணமாகுமா?
ஊசி மருந்து நிச்சயமுண்டு.  ஆனால் நாட்டு வைத்திய முறைகள் ‘பேரின்பலோகப் பயணத்திற்கே’ சீட்டு வழங்கும்…………...”.

பாமர மக்களைப் போலவே, ‘மெத்தப்’ படித்த இலக்கியவாதிகளும் இயற்கையைப் பற்றிய சரியான புரிதலின்றி, மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் என்கிற போது, அத்தகைய கேள்விகளுக்குச் சற்று காட்டமாகவே பதிலிறுக்கிறார் ஆசிரியர்.  
காட்டு:-
சிங்கத்தின் முகத்தை ஈக்கள் மொய்க்காது என வைரமுத்து ஒரு கவிதையில் குறிப்பிடுகிறாரே, உண்மையா?”
“சிங்கத்தின் முகமாகட்டும், புலியின் பொச்சாகட்டும், ஈக்கள், கொசுக்கள் மொய்த்துப் பிடுங்குவது சர்வ சாதாரணம்.  நமது ஆக்கங்கெட்ட கவிஞர்களை நினைத்தால், எரிச்சல் தான் ஏற்படுகின்றது.  முதலில் இவர்கள் நமது 1000 ஆண்டுகட்கு முந்தைய தமிழ் இலக்கியத்தைக் கூர்ந்து கவனித்து, எதார்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.”

இக்காலத்தில் இயற்கையைப் பாதுகாத்தல், இயற்கையோடியைந்து வாழ்தல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவை குறித்து எல்லோரும் வாய்கிழியப் பேசினாலும், இயற்கைவளம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அறிந்தவர்கள், நூற்றுக்கு இரண்டு பேர் மட்டுமே என்கிறார் ஆசிரியர்,
இதற்கு இவர் கூறும் காரணங்கள்:-
1.   ரசனையற்ற மூட நம்பிக்கை நிறைந்த மக்கள்
2.   இயற்கை பற்றிய புரிதல் சிறிதுமின்றி, சுயமேதாவிலாசத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும், ‘மெத்த’ படித்த இலக்கியவாதிகள்
3.   எந்தத் தொலைநோக்கு திட்டமும் இல்லாத அரசுகள்.
“நம் நாட்டின் பெரிய அளவிலான இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதி மலைச்சாரலிலிருந்து மழை நீரால் ஆற்றில் வரும் வளமான வண்டல் மண்!; அடுத்தது மணல்! வருங்காலம் கொடுமையானது!” என்று இவர் சொல்லியிருப்பதைப் படிக்கும் போது, அதிர்ச்சியாக இருக்கின்றது.
ஒரு நாட்டின் மண்வளம் அழிகிறதென்றால், அந்நாடே அழிகிறதென்று பொருள் என்கிறார், பிரான்கிலின் ரூஸ்வெல்ட்.   
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

மரம் வெட்டிய குற்றச்சாட்டுக்காக 1985-86 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 25114 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.  இதில் 397 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர், என்ற இன்னொரு தகவல், அதிர்ச்சியை அதிகப்படுத்தி வேதனையளிப்பதாக உள்ளது. 

இந்நூலில் அதிசய உயிரினங்கள் பற்றிய பல வினோதமான, சுவையான தகவல்களுக்கும் பஞ்சமில்லை
காட்டுகள்:-
1.   பீவர் (Beaver) எனும் பெருச்சாளி முதல்தரமான அணைக்கட்டி. மண்வெட்டி போன்ற வெட்டுப்பற்களால் மரங்களை வெட்டி காட்டாறு ஓடை குறுக்கே நட்டு நீரைத் தேக்குகின்றது. இதன் ஓரத்தில் தரையில் வளைதோண்டி கூடமைக்கும்.  நீண்ட பொந்துகளில் பல அறைகள் இருப்பதால் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது மேலும் நீர்நிலைகள் பனியால் மூடப்படும் போதும், உள்ளே இதமாக இருக்கும். 
2.   பார்பாய்ஸ் (Porpoise) என்பது பெருங்கடல்வாழ் சிறு திமிங்கலம். ஏதாவது ஒன்றுக்குக் காயம்பட்டு நீந்த முடியவில்லையெனில் வேறு இரு தோழர்கள் இரு துடுப்புத் தாங்கலாக தூக்கிவந்து கடல்மட்டத்தின் மேலே காற்றைச் சுவாசிக்கச் செய்து உயிர் பிழைக்க வைக்கின்றன.  சிலசமயம் யானை & எறும்பு தங்களுக்குள் உதவி செய்து கொள்கின்றன.

ரீங்காரச் சிட்டு பற்றியும் (கேள்வி எண் 147, 326, 436) சீட்டா & சிவிங்கிப் புலி பற்றியும்   (274, 482) கூறியது கூறலைத் தவிர்த்திருக்க வேண்டும்.

“டிஸ்கவரி சேனலை ரசிப்பவர்களை, நம் கண்ணெதிரே உள்ள இயற்கையையும், நம்மைச் சுற்றியுள்ள காட்டுயிர்களையும் நேசிக்க அழைக்கும் புத்தகமிது; இயற்கையியலாளர் முகமது அலி அவர்களின்  உணர்வு பூர்வமான அக்கறையிலிருந்து உருவான நூல்,” என்று இதன் முன்னுரையில் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மையே.

(08/07/2015 நான்கு பெண்கள் தளத்தில் வெளியான என் கட்டுரை)  

Friday, 14 August 2015

நுணா எனும் மஞ்சணத்தி

முல்லையையொத்த மலர்
தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria.  இதன் தாவரக்குடும்பம்   Rubiaceae.   

இதன் தாயகம் தெற்காசியாவென்பதால், நம்நாட்டு வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி, கவனிப்பு தேவையின்றித் தானாகவே செழித்து வளரும் மரம். 
நுணா மரம்

முற்றிய இதன் தண்டுப்பகுதி மஞ்சளாக இருப்பதால், இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு.  மஞ்சள் நீராட்டி என்றும் அழைப்பார்களாம். 
உறுதியான அதேசமயம் மிகவும் லேசான மரமென்பதால் ஏர், வில்வண்டி, பாரவண்டி போன்றவற்றில் மாடுகளைப் பூட்டும் நுகத்தடி செய்ய இம்மரம் பயன்பட்டிருக்கிறது என்பது இதன் சிறப்புவண்டியிழுக்கும் மாடுகளின்  கழுத்து பாரத்தைக் குறைக்க நம் முன்னோர் தேர்ந்தெடுத்த மரமிது!  காவி வேட்டிக்கு இதன் முற்றிய  மரப்பட்டைகளைக் கொதிக்க வைத்து, அதில் வெள்ளைத் துணியை முக்கி எடுப்பார்களாம்.        

இதன் மலர்கள் தோற்றத்தில் வெண்மையாக அப்படியே முல்லையை ஒத்திருந்தாலும், இதழ்கள் அதனை விடத் தடிப்பாக உள்ளன.   நறுமணமும் உண்டு.  முடிச்சு முடிச்சாகத் தோன்றும், இதன் காய்களைக் கொண்டு இம்மரத்தை எளிதில் அடையாளங் காணலாம்.  முற்றிய பிறகு பழம் கறுப்பாக மாறும்.  விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
சங்க இலக்கியத்தில் நுணவம் என்ற பெயரில் இது குறிக்கப்படுகின்றது.

எ,கா:-
“அவரோ வாரார் தான் வந்தன்றே
சுரும்புகளித் தாலும் இருஞ்சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே,”
(ஐங்குறுநூறு 342 ஓதலாந்தையார்);

(கரிய அடிப்பகுதியையும், பெரிய கிளைகளையும் உடைய நுணா மரம் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றது; அம்மலர்களிலுள்ள தேனைக் குடித்து விட்டு வண்டினங்கள் மகிழ்வுடன் பாடும் இளவேனில் வந்துவிட்டது; ஆனால் அவர் இன்னும் வரவில்லை என்று வருந்திக் கூறுகிறாள் தலைவி)

இலையும் காயும்

முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தமிழரும் தாவரமும்.’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ள ‘சங்கக்காலத் தாவரங்கள்,’ பட்டியலில் இதன் பெயர் இருப்பதிலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் மண்ணில் நிலை பெற்றிருக்கும் மரமிது என்றறியலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தொன்மையான மரங்களின் சிறப்புக்களைத் தெரிந்து கொள்வதுடன், வளரும் தலைமுறைக்கு இவற்றை அடையாளம் காட்டுவதும் நம் கடமை!     

 (நான்கு பெண்கள்  இணைய இதழில் 08/08/2015 அன்று வெளியான என் கட்டுரை)

Sunday, 9 August 2015

பறவை கூர்நோக்கல் -6 தையற்சிட்டு (Common Tailor Bird)இப்பறவையைப் பலர் பார்த்திருக்காவிட்டாலும் டுவீட், டுவீட் என்ற இதன் வெண்கலக் குரலைப் பல சமயங்களில்  கேட்டிருக்க வாய்ப்புண்டு.  இதன் உருவத்துக்கும், விசிலை விழுங்கியது போன்ற கணீர் குரலுக்கும் சம்பந்தமே இல்லை.

சிட்டுக்குருவியை விடச் சின்னதாக இருக்கும் இதனை, இத்தனை காலம் தேன்சிட்டு என்றே நினைத்திருந்தேன்.  பார்ப்பதற்கு அது போலவே இருந்தாலும், இதன் அலகின் அமைப்பு மட்டும் மாறுபடுகிறது.  பூக்களில் தேனை உறிஞ்ச வசதியாக நீண்டு வளைந்த தேன்சிட்டுவின் அலகு போலன்றி, இதனுடையது கொஞ்சம் குட்டையாக உள்ளது.

முதுகுப்பகுதி மஞ்சள் கலந்த பச்சை; வயிறு வெண்மை. வாலை எப்போதும் தூக்கிபடியே இருக்கும்.  ஆணும் பெண்ணும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆணுக்கு மட்டும் இனப்பெருக்கக் காலத்தில் வாலின் நடுவில் இரு நீண்ட சிறகுகள் முளைக்குமாம்.  சரியான துறுதுறு.  ஒரு நிமிடம் ஓரிடத்தில் அமராமல், தத்தித் தாவிப் பறந்து கொண்டேயிருக்கும்.


   
பஞ்சு, நார், நூல் கொண்டு பெரிய இலைகளின் பின்பக்கத்தைச் சேர்த்துப் பின்னி சிறிய கூடைபோலாக்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.  ஒருமுறை இட்லிப்பூச்செடியின் இரண்டு இலைகளின் ஓரத்தைச் சேர்த்து மடக்கி, இது பின்னிய கூட்டைப் பார்த்து அசந்துவிட்டேன்.  நூலை உள்ளும் புறமும் கோர்த்து வாங்கித் தையல் பிரியாமல் பின்னும் கலையை யாரிடம் கற்றது இது?  இயற்கையிலேயே அமைந்த இதன் திறமையை என்ன சொல்லிப் புகழ?  தனிப்பட்ட இந்தத் திறமையே, இதற்குத் தையல்சிட்டு என்ற பெயர் வரக் காரணமாயிற்று.

புழுக்கள், பூச்சிகள், பூச்சிகளின் முட்டை, தேன் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். மரஞ்செடிகொடிகள் உள்ள பகுதிகளில் இவை அதிகமாகக் காணப்படும்.

தையற்சிட்டு வம்சத்தைச் சேர்ந்த நுண்ணிச்சிறை என்ற சிறுபறவையும் (Ashy Wren warbler) சிலசமயங்களில் இலை தைத்த பைக்கூடு கட்டுமாம்.                       
இனி உணவளிப்பான் (Bird Feeder)  பற்றி:-

இணையத்தில் இதனை  நாமே செய்வது பற்றிய செய்முறை விளக்கங்கள் பல இருக்கின்றன.  அவற்றுள் பயனற்றவை என நாம் தூக்கிப் போடும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து செய்யும் முறை மிகவும் பயனுள்ளதாயிருக்கிறது.

காம்பவுண்டு சுவரில் நான் செய்து மாட்டிய உணவளிப்பான்:-
 நான் பயன்படுத்திய பொருட்கள்:- மூடியுடன் மூன்று பிளாஸ்டி பாட்டில்கள்,  பிளாஸ்டிக் தட்டு, குருவி அமர மொத்தமான ஈர்க்குச்சிகள் இரண்டு ஆகியவை மட்டுமே.   கம்பு, கேழ்வரகு, அரிசி நொய் ஆகிய மூன்றும் கலந்து பாட்டிலில் கொட்டி வைத்திருக்கிறேன்.
                                                             (முதலிரு படங்கள் மட்டும் – நன்றி இணையம்)
Monday, 3 August 2015

ஒரு பல்லின் கதை

(30/09/2009 அன்று இணைய இதழான நிலாச்சாரலில் எழுதியது)


சிறு வயதில் விளையாடும்போது வாசல்படியில் தடுக்கி விழுந்ததால், என் முன் பல்லின் கீழ்புறம் சிறிது உடைந்துவிட்டது. நல்லவேளையாக, கன்னா பின்னாவென்று உடையாமல் சிறு செதிலாக உடைந்திருப்பதால், முகத்திற்கு விகாரமாயில்லை என அம்மாவிற்குத் திருப்தி.

ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல, அப்பல்லின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாகக் கறுப்பாகிக் கொண்டே வந்ததறிந்து, அம்மாவுக்குக் கவலை. ஏற்கெனவே அரியலூர் ரயில் விபத்தில் அடிபட்டது மாதிரி, மூக்கில்லாமல் நாக்கில்லாமல் பிறந்திருக்கும் பெண்ணின் முன்பல்லுக்கும் கேடு வந்ததென்றால், எந்த அம்மாவால் கவலைப்படாமல் இருக்கமுடியும்?

"ஏங்க! இவளுக்கு முன் பல் வர வரக் கறுப்பாவுது. அதனால அந்த மாங்கொட்டைத் தலையன்கிட்ட ஒரு முறை அழைச்சிட்டுப் போயிட்டு வாங்களேன்".

எங்கள் ஊர் பல் டாக்டருக்கு அம்மா வைத்த பெயர்தான் மாங்கொட்டைத் தலையன். முன் மண்டை முழுக்க வழுக்கையாயும், பின் மண்டையின் ஓரம், கொஞ்சம் சிலுப்பி விடப்பட்ட முடியோடும் இருந்த அவரைப் பார்த்த போது அம்மா வைத்த பெயர் மிகவும் பொருத்தமாகவே இருப்பதாகப் பட்டது!

‘ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பார்களே, அது போல எங்களூருக்கு இவர்தாம் ஒரே பல் டாக்டர். பல்லில் எந்தக் கோளாறு என்றாலும் இவரிடமே போக வேண்டிய கட்டாயம்.

அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, அப்பா அவரிடம் என்னை அழைத்துப் போனார். அரை மணி நேரம் என் பல்லைப் பல கோணங்களில் ஆராய்ந்தவர், முடிவில் அந்தத் துயரந் தரும் அறிவிப்பினை வெளியிட்டார்.

"உங்கள் பல் செத்துவிட்டது; அதனால் தான் அது கறுப்பாகி வருகிறது," என்பதுதான் அந்த அறிவிப்பு.

என் பல்லின் சாவுச் செய்தி கேட்டு நான் அதிர்ந்து போய் நிற்க, "உடனே சிகிச்சை செய்யாவிட்டால், பக்கத்துப் பற்களும் விரைவில் ஒவ்வொன்றாக உயிரை விட்டு, இப்பல்லைப் போல் கறுப்பாகி விடும்," என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

இச்செய்தி கேட்டு அப்பாவும் கலக்கமடைய, "பயப்படத் தேவையில்லை. தொடர்ச்சியா ஒருமாசம் என்கிட்ட சிகிச்சை எடுத்துக்கிட்டா, ஒங்க பெண்ணோட மத்தப் பற்களைச் சாவிலிருந்து என்னால காப்பாத்திட முடியும்; இந்தக் கறுப்புப் பல் மேலேயும் வெள்ளையா ஒரு கேப் போட்டுட்டா, பார்க்கிறவங்களுக்கு வித்தியாசமாத் தெரியாது " என்று உறுதியளித்தார்.

அத்தருணத்தில், என் பற்களை இரட்சிக்க வந்த தேவ தூதனாக, என் கண்களுக்கு அவர் காட்சியளித்தார்.

அன்று முதல் தினமும் அப்பாவுடன் அவரிடம் போய்ப் பல்லைக் காட்டிவிட்டு (சிகிச்சைக்குத்தாங்க!) மொய் அழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

ஈறுகளில் அவர் செய்த அறுவை சிகிச்சை காரணமாக, முகம் வீங்கி, கண், மூக்கு எல்லாம் வெளியில் தெரியாமல் ஒரு வாரம் புதையுண்டு போயின. ஒரு வாரங் கழித்து வீக்கம் முழுவதுமாக குறைந்த பிறகு, என் கறுப்புப் பல் வெள்ளையாவதற்கான சிகிச்சை துவக்கப்பட்டது.

அன்று என் பல்லை உடைக்க(!) அவர் எடுத்து வந்த சுத்தியல் வடிவ ஆயுதத்தைப் பார்த்துப் பயந்து விட்டேன்.

"பயப்படாதீங்க! உங்க ஒரிஜினல் பல்லை முழுசும் எடுத்துட்டு, வேற பல்லை வைச்சா அவ்வளவு உறுதியாயிருக்காது. அதனால அதைப் பாதியா ஒடச்சிட்டு, அது மேல ஒரு கேப் போட்டுடுவேன். அது உங்க ஒரிஜினல் பல் மாதிரியே ஸ்டிராங்காயிருக்கும்".

பல்லில் சுத்தியலை வைத்துத் தட்ட, விண் விண்ணென்று வலி உயிர் போனது.

"வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்தா பேசுற, பல்லை உடைச்சிடுவேன்," என்று அம்மா அடிக்கடி திட்டுவது ஞாபகத்துக்கு வந்தது!

பழங்காலத்தில் பல்லை உடைப்பது ஒரு தண்டனையாக இருந்திருக்குமோ?

ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் டாக்டரின் கையைப் பிடித்துத் தள்ளிவிட்டேன்.

"அது உயிரில்லாத பல்தானே? வலிக்காதே!" என்றார் டாக்டர் ஐயத்துடன்.

பக்கத்திலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பல்லைப் பார்த்தேன். 
கறுப்புப் பல்லின் பக்கத்துப் பல்லில் லேசாக கீறல் விழுந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

இவ்வளவு நேரம் உடைக்க வேண்டிய பல்லை விட்டுவிட்டுப் பக்கத்துப் பல்லை உடைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையறிந்து கோபமாக முறைத்தேன்.

"சாரி, கை தவறிப் பக்கத்துப் பல்லுல பட்டுடுச்சு போலேயிருக்கு" என்று நெளிந்தார் டாக்டர்.

ஒரு வழியாகப் பல்லைப் பாதியாகக் குறைத்தவர், பல் செட் ஒன்றை என் பல்லில் பொறுத்தி அளவெடுத்தார்.

"இன்னும் ஒரு வாரத்தில் கேப் ரெடியாயிடும். வந்து பொருத்திக்கலாம்"

எனக்கோ அளவிட முடியா மகிழ்ச்சி. இனிமேல் என் முக அழகை(?) இந்தக் கறுப்புப் பல் கெடுக்காது.

ஒரு வாரங் கழித்துப் பல்லைப் பொருத்தியவர், கண்ணாடியை என்னிடம் கொடுத்து, "இது எப்படி இருக்கு?" என்றார் ரஜினி ஸ்டைலில்.

கண்ணாடியில் பார்த்த போது, என் கறுப்புப் பல், இளஞ் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

"என்ன டாக்டர்? பல் வெள்ளையாயில்லாம, சிவப்பு கலர்ல இருக்கு?" என்றேன் ஏமாற்றம் கலந்த கோபத்துடன்.

"அதுவா? பல் ரொம்பவும் வெள்ளையாயிருந்தா பாக்கிறவங்களுக்கு 'ஆர்டிபிஷியல்'னு உடனே தெரிஞ்சிடும். 'நேச்சுரலா' தெரியணும்னா, கலர் இப்படித்தான் இருக்கணும்" என்று பல்லின் நிறத்துக்குப் புது விளக்கம் கொடுத்தார் டாக்டர். அந்த விளக்கத்தைக் கேட்டவுடன், அவரது வழுக்கை மண்டையில் ஒரே போடாகப் போடலாமா என ஆத்திரம் வந்தது.

இப்போது என்னைப் பார்ப்பவர்கள், "உங்கப் பல்லுல இரத்தம் வருது" என்று சொல்கிறார்கள்.

எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை, பொய்ப் பல், அதைப் பொருத்தக் கட்டணம் என்று ஆயிரக்கணக்கில் தண்டச் செலவு செய்து நொந்து போயிருந்த என்னை நினைத்து, என் கறுப்புப் பல் இரத்தக் கண்ணீர் சிந்துகிறதோ?

(படம் – நன்றி இணையம்)


Saturday, 1 August 2015

பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாதுகாகத்துக்கும், குருவிக்கும் மோர் சாதத்தில் உப்புப் போட்டுப் பிசைந்து வைக்கிற பழக்கம் எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை.  மனிதரைப் போல பறவைகளுக்கும், உணவில் உப்பிருந்தால் தான் சுவைக்கும் எனத் தவறாக நினைத்து விட்டேன்.

நேச்சர் பார் எவர் தளத்தில் ‘பறவைகளும் உப்பும்,’ (Birds & Salt) என்று தலைப்பிட்ட கட்டுரையை வாசித்தவுடன் தூக்கிவாரிப் போட்டது. இது நாள் வரை நல்லது செய்வதாக நினைத்து, என் அறியாமையால், இவற்றுக்குக் கெடுதல் பண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன்.  ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவிக்கும், உப்புப் போட்ட சாதத்தைக் கொடுத்துவிட்டோமே என மனம் பதைத்தது.    

கட்டுரையின் முடிவில் சிட்டுக்குருவியும் புறாவும் ஓரளவு உப்பைத் தாங்கக்கூடியவை என்று படித்த பிறகு, கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.   இனி என் வாழ்நாளில், கண்டிப்பாக உப்பு சேர்த்த உணவைப் பறவைகளுக்குக் கொடுக்கவே மாட்டேன். 

இக்கட்டுரையின் மூலம், நான் தெரிந்து கொண்ட முக்கிய விபரங்கள்:-

பெரும்பாலான தரைப் பறவைகளுக்கு உப்பு மிகவும் கெடுதல் செய்யும்.
ஊர்வனவற்றிக்கு இருப்பது போலப் பறவைகளுக்குச் சிறுநீரகம் உண்டு; ஆனால் இவை உப்பை அதிகளவு வெளியேற்றும் திறன் கொண்டவை அல்ல. 

உப்பை வெளியேற்றும் திறன், பறவைகளின்  வாழும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது.  கடல் மற்றும் வறட்சியான பகுதிகளில் வாழும் பறவைகளின் சிறுநீரகம்,  மற்ற பகுதிகளில் வாழ்பனவற்றின் சிறுநீரகத்தை விட, இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகளவு உப்பை வெளியேற்றும் திறன் கொண்டது.  அதனால் தான் கடற்பறவை, மீனையும், கடல் நீரையும் உட்கொண்டு உயிர் வாழ்கின்றது.

சிறுநீரகத்துக்கு அடுத்தபடியாக உப்பை வெளியேற்ற பறவைகளின் மண்டை ஓட்டுக்குள் நெற்றிப்பக்கம், உப்பு சுரப்பி (Salt gland) அமைந்துள்ளது.  எல்லாவற்றுக்கும் இது உண்டென்றாலும், உப்பு சேர்ந்த உணவை அடிக்கடி உண்ணும் பறவைகளுக்கு மட்டுமே, இது வேலை செய்யும்.    

உப்புநீரையும், உப்பு அதிகமுள்ள உணவையும் அடிக்கடி உட்கொள்ளும் பறவைக்கு, அதிகளவில் உப்பை வெளியேற்ற இச்சுரப்பி பெரியதாக இருக்கும். இது அடர்த்தி அதிகமான உப்பை (concentrated salt) வெளியேற்ற மிகக் குறைந்த நீரையே எடுத்துக்கொள்ளும்.  அதே சமயம் சிறுநீரகத்துக்கு ஒரு பங்கு உப்பை வெளியேற்ற, மூன்று மடங்கு தண்ணீர் தேவைப்படும்.

நம் தோட்டத்துப்பறவைகளுக்கு அதிகளவு உப்பை வெளியேற்றும் சக்தி கிடையாது என்பதால் உப்புப் போட்ட உணவைக் கண்டிப்பாகக் கொடுக்கவே கூடாது.  உப்பு போட்ட மோர் மற்றும் குழம்பு சாதம், உப்பு போட்டுப் பொரித்த கடலை, சிப்ஸ் வகையறாக்கள் கூடவே கூடாது.   சுத்தமான குடிதண்ணீர் அவசியம் வைக்க வேண்டும்.

(மேலதிக விபரங்களுக்கு -  http://www.natureforever.org/birds-and-salt.html)

(நான்கு பெண்கள் தளத்தில் 17/06/2015 அன்று வெளியான என் கட்டுரை)


(படம்:- நன்றி இணையம்)