நல்வரவு

வணக்கம் !

Wednesday, 30 September 2015

இயற்கை சமன்நிலையை அறிவிக்கும் பறவைகள்

சிறுவயதில் நம் வீட்டைச் சுற்றிக் கூட்டங்கூட்டமாக கண்டுகளித்த சிட்டுக்குருவி, மைனா எனப்படும் நாகணவாய்ப்புள், தவிட்டுக்குருவி, எல்லாம் எங்கே போயின? 

இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணங்கள் யாவை? பறவைகளைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?  பறவைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன சம்பந்தம்? 
சிட்டுக்குருவியினம் அழிவின் விளிம்பில் இருக்கின்றது; எனவே அதனைக் காப்பாற்றி மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்ட சிட்டுக்குருவி தினம், இது பற்றிய  விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தியது.
இளவயதில் நம் தோழர்களாக நம்முடன் கூடவே வளர்ந்த இனமல்லவா இது? இவற்றை வழி வழியாகக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தான், ‘சிட்டுக்குருவி கூடு கட்டினால் குடும்பத்துக்கு நல்லது; கூட்டைக் கலைப்பது பாவம்,’ என்று நம் முன்னோர் கூறிச்  சென்றனர்.
இதன் அழிவுக்கு செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு தான் முக்கிய காரணம் என்று முன்னர் சொல்லப்பட்டது.  ஆனால் இதற்குப் போதுமான ஆதாரமில்லை என்று இப்போது அறிவிக்கப் பட்டுள்ளது. 
மற்ற பறவைகள் போல் இவை மரங்களிலோ, புதர்ச்செடிகளிலோ கூடு கட்டும் வழக்கமுடையன அன்று.  இவை முழுக்க முழுக்க மனிதரை அண்டி வாழ்வன.  மனிதனை அடைக்கலம் நாடுவதால், இதற்கு  அடைக்கலக்குருவி என்ற பெயருமுண்டு. 
நம் வீடுகளுக்குள்ளோ, கிணறுகளுக்குள்ளோ இருக்கும் சந்து பொந்து, பரண், மாடம் ஆகியவற்றில் வாழும் பழக்கமுடைய இவை  நம் வீடுகள் கான்கிரிட் காடுகளாகவும், அடுக்கக வீடுகளாகவும் மாறியதால்,  கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய இடமில்லாமல் அருகிவிட்டன.
எனவே இவ்வினம் பெருமளவு அழிந்ததற்கு, நம் வீடுகட்டும் முறையில் நிகழ்ந்த மாற்றமே, மிக முக்கிய காரணம் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.  என் வீட்டின் முன்புறத்தில் இப்போது நான் தொங்கவிட்டிருக்கும் சர்ப் எக்ஸ்செல் அட்டைபெட்டிகளில் இவை உற்சாகமாக குடித்தனம் நடத்தி இனப்பெருக்கம் செய்கின்றன.  இரண்டு ஆண்டுகளுக்கு முன், எங்கள் தெருவில் இரண்டு குருவிகள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது பனிரெண்டுக்கு மேல் வீட்டைச் சுற்றி வந்து, தினமும் அதிகாலையில் ‘கீச், கீச்’  பள்ளியெழுச்சி பாடி, என்னைத்  துயிலெழுப்புகின்றன.    

மரங்களில் கூடுகட்டும் பழக்கமுடைய, மற்ற பறவைகளின் எண்ணிக்கை குறைய, மரங்களும், புதர்ச்செடிகளும் இல்லாதது முக்கிய காரணம். 
கூடுகட்ட மரங்களில்லா இக்காலச் சூழ்நிலையில், எதிர்வீட்டு மொட்டை மாடியில் வைக்கப்பட்டுள்ள கொம்புகள் உடைந்த திருஷ்டி பொம்மையினுள், கருந்தலை மைனா ஓராண்டாக வசிக்கின்றது.   

எங்குப் பார்த்தாலும் விளைநிலங்கள், மனைகளாக மாற்றம் பெற்றதும், வேளாண்மையில் அளவுக்கதிகமாக வேதியியல் உரங்கள் மற்றும்  செயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதும், வேறு சில காரணங்கள். 
பூச்சிக்கொல்லிகள் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லாமல், விளைநிலத்துக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் சேர்த்தே கொன்றுவிட்டன.  எனவே குஞ்சுகள் வளர்வதற்குத் தேவையான புரோட்டின் நிறைந்த புழுக்கள் பறவைகளுக்குக் கிடைக்கவில்லை.  அப்படியே கிடைத்தாலும், அவை நஞ்சு நிறைந்தவையாயிருந்தன.

அமெரிக்காவில் 1920 ல் எல்ம் மரங்களைப் பாதித்த பூஞ்சக்காளான் நோய்க்கு (DDT) எறும்பு மருந்தை, வண்டி வண்டியாகத் தெளித்தார்கள்.   
இதனால் பறவைகள் குறிப்பாக ராபின் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.  1954 க்கு பின் எண்ணிக்கை வெகுவாகக்  குறைந்து இவற்றைக் காண்பதே அரிதாகி விட்டது.  இதன் பிறகு தான் எறும்பு மருந்தை உலகமுழுதும் தடை செய்தார்கள். 
தம் பாடல் மூலம் வசந்தத்தைக் கட்டியங்கூறி வரவேற்கும் ராபின் பறவைகள் இல்லாமல், அதற்குப் பிறகு அமெரிக்காவில் வசந்தத்தில் மயான அமைதி நிலவியது. 
இதைப் பற்றி ரெய்ச்சல் கார்சன் (RACHEL CARSON) எழுதிய மெளன வசந்தம்(SILENT SPRING) என்ற நூலை, பேராசிரியர் ச.வின்சென்ட். தமிழ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  ‘எதிர்’  வெளியீடு.  பூச்சிக்கொல்லிகளின் விளைவுகளை உலகம் அறியச் செய்த மிக முக்கியமான புத்தகம் இது.   

கூட்டிலிருந்து வெளிவரும் சரியாகப் பறக்கத் தெரியாத சிறுகுஞ்சுகள் (Fledgling) காகம், பருந்து போன்ற பெரிய பறவைகளிடமிருந்து தப்பிக்கப் புதர்ச்செடிகள் வேண்டும்.  ஒரு நாள் கூட்டிலிருந்து வெளிவந்த மைனாக்குஞ்சு ஒன்றைக் காகம் விடாமல் துரத்தியது.  நானும் செய்வதறியாது கைபிசைந்து நிற்க, அது தத்தித் தாவி பக்கத்தில் அடர்த்தியாயிருந்த அரளிச்செடிக்குள் போய்ப் புகுந்து கொண்டது.  அதனுள்ளே காகத்தால் புகமுடியாததால், குஞ்சு தப்பித்தது.

எனவே வீட்டைச் சுற்றிக் கொஞ்சம் இடமிருந்தாலும், அழகுக்காக எதற்குமுதவாத, பறவைகளோ, வண்ணத்துப்பூச்சிகளோ அண்டாத புல்லை (LAWN) வளர்க்காமல், அரளி, நந்தியாவட்டை, இட்லிப்பூ போன்ற புதர்ச்செடிகளை வளருங்கள். இவை சரியாகப் பறக்கத் தெரியாத குஞ்சுகளுக்கு (Fledgling) அடைக்கலம் கொடுக்கும்!  

வீட்டுக்கு முன்புறம் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டு வளருங்கள்.  இவை நம் மண்ணின் மரங்களாக இருக்க வேண்டும்.    

வீட்டுத் தோட்டங்களில் செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி களையும் பயன்படுத்தவே கூடாது.  இயற்கை பூச்சி விரட்டிகளான வேப்பம்பிண்ணாக்கு, இஞ்சி & பச்சை மிளகாய்ச் சாறு போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.

குளிப்பதற்கொன்றும், குடிப்பதற்கொன்றுமாக தினமும் இரு மண் தொட்டிகளில் தண்ணீர் வைத்தால், தினமும் குளிக்கும் பழக்கமுள்ள சிட்டுக்குருவி, கொண்டைக்குருவிக்கு (Bul Bul) மிகவும் நல்லது.  நீர் தூய்மையாயிருக்கத் தினமும் மாற்ற வேண்டியது அவசியம்.

சிறு தானியங்கள் பறவைகளின் முக்கிய உணவு.  எனவே கம்பு கேழ்வரகு அரிசி நொய் போன்றவற்றை உணவளிப்பானில் (Bird Feeder) கொட்டித் தொங்க விடுங்கள்.  நேச்சர் பார் எவர் சொசைட்டி இதனை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்கின்றது.  http://www.natureforever.org/ .        பிறந்த நாளின் போது இவற்றை வாங்கிப் பரிசளித்துக் குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்.   இணையத்திலும் குப்பையில் தூக்கிப் போடும் காலி பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து, நாமே செய்யக்கூடிய செய்முறை விளக்கங்கள் பல இருக்கின்றன.  அவற்றுள் ஒன்று:-  https://www.youtube.com/watch?v=kE9jKmQJED0

ஊசிப்போன உணவை ஒரு போதும் பறவைகளுக்குத் தரக்கூடாது.  உப்பு போட்ட உணவு வகைகள், பெரிதும் தீங்கு செய்வன. இவற்றுக்கு அதிக ஒலி ஆகாதென்பதால், கூடுகளுக்கு அருகில் எப்போதுமே பட்டாசு வெடிக்கக் கூடாது..  இவ்வெடி மருந்து, காற்றை மாசுபடுத்துவதோடல்லாமல் விலங்கு, பறவைகளின் இனப்பெருக்க முறைகளையும் பாதிக்கின்றது.    

பட்டம் விடும் விழா நாட்களில், சீனாவின் மாஞ்சாவைப் பயன்படுத்துவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.  இது பல பறவைகளின் கழுத்தை அறுப்பதுடன், மனிதர்களின் உயிர்க்கும் உலை வைக்கின்றன. 

உயரமான கட்டிடங்களில், விளையாட்டரங்குகளில் பொருத்தப்படும் ஒளிபுகும் (Tranparent) கண்ணாடிகள் ஆண்டுதோறும் வலசை போகும் லட்சக்கணக்கான பறவைகளின் உயிருக்கு எமனாக விளங்குகின்றன.  உயரத்தில் பறக்கும் பறவைகள், கண்ணாடி இருப்பதே தெரியாமல், வேகமாக மோதி கீழே விழுந்து இறக்கின்றன.   கண்ணாடியில் பிரதிபலிக்கும் வானம், மேகம் அவற்றைக் குழப்புகின்றன.  எனவே கண்ணாடி இருப்பது பறவைகளுக்குத் தெரியும் விதத்தில், படங்கள் ஒட்டி வைக்க வேண்டும். பூ அல்லது கோடு வரைந்த கண்ணாடியைப் (Bird Friendly Glass) பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.  .    

“பறவைகள் தாம் இயற்கைச் சுற்றுச்சூழலின் சமன்நிலையை அறிவிப்பவை; எனவே அவற்றுக்குக் கேடு வருகிறதென்றால், நாமும் மிக விரைவில் சிக்கலுக்கு ஆளாகப் போகிறோம் என்று பொருள்.
இயற்கையில் புழு, பூச்சி, தாவரம் பறவை, விலங்கு மனிதன் என எல்லாமே உணவுக்காக ஒன்றோடொன்று தொடர்சங்கிலி போல பின்னிப் பிணைந்து  ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.  இவற்றுள் பறவையினம் அழிகின்றது என்றால், ஏதோ ஓர் இடத்தில் உணவுச்சங்கிலி அறுபடுகிறது என்றவுண்மையை உணர்ந்து கொண்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் இல்லையேல் மொத்த சங்கிலியும் அறுபட்டு வீழ்ந்துவிடும் ஆபத்திருக்கின்றது,” என்கின்றனர் பறவை ஆய்வாளர்கள்.    .

இது பூச்சிகள் உலகம்.  பூச்சிகளை உணவாகக் கொண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது பறவைகள் தாம்.  இவை இல்லாவிடினோ நம் கதி அம்பேல் தான்.  அதனால் தான் "மனிதர்கள் இல்லாமல் பறவைகளால் உயிர் வாழமுடியும்; ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது," என்றார் பறவையியலின் தந்தை சலீம் அலி.


(வலைப்பதிவர் திருவிழா 2015 – புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப்போட்டிக்காக எழுதப்பட்டது.)   (பிரிவு - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி) இக்கட்டுரை என் சொந்தப்படைப்பென்றும், இதற்கு முன் வெளியானதல்ல என்றும் போட்டி முடிவு வெளியாகும் வரை வெறெங்கும் பிரசுரத்துக்கு அனுப்பமாட்டேன் என்றும் சான்றளிக்கிறேன்.


(படங்கள் - நன்றி இணையம்) 


Saturday, 19 September 2015

நீர்நிலைகளை நஞ்சாக்கும் செயற்கை வண்ணச் சிலைகள்!இயற்கையைத் தெய்வமாக வழிபட்டு, அதனோடியைந்த வாழ்வு வாழ்ந்த நம் முன்னோரின் பாதையிலிருந்து விலகி, நாளுக்கு நாள் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கு, நாம் வெகு விமரிசையாகக் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியே ஒரு சாட்சி. 

இவ்விழா வந்தாலே கண்ணைப் பறிக்கும் பலவிதமான வண்ணங்களில் பிரும்மாண்டமான விநாயகர் சிலைகளைச் சாலையோரங்களில் திடீர்ப்பந்தல் போட்டு அமர்த்தி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன்,  காதுகளைச் செவிடாக்கும் ஒலிப்பான்கள் மூலம் பாடல்கள் ஒலிபரப்பிச் சில நாட்கள் பரவசத்துடன் வழிபடுவதும்   பின்னர் பக்தர்கள் புடைசூழ ஆரவாரத்துடன் ஊர்வலமாகச் சென்று  நீர்நிலைகளில் கரைப்பதும், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் அதிகமாகிவிட்டது. 


பிள்ளையார் தமிழ்க்கடவுள் இல்லை; வாதாபியிலிருந்து கொண்டு வரப்பட்டவர் (வாதாபி கணபதிம்) என்ற வாதத்திற்குள், நாம் போக வேண்டாம்.  போராட்டங்கள் நிறைந்த நடைமுறை வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு விடாதபடி, அவ்வப்போது உற்சாகத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியை உண்டாக்க, இது போன்ற விழாக்கள் தேவை தான். 

ஆனால் ஏற்கெனவே மோசமாக மாசுபட்டு, நம் வளரும் தலைமுறையின் வளமான வாழ்வுக்கு  அச்சுறுத்தலாக விளங்கும் சுற்றுச்சூழல் இம்மாதிரியான விழாக்கள் மூலம், மென்மேலும் சீர்கெட, நாம் அனுமதிக்கலாமா?   சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாப்பாக நம் முன்னோர் ஒப்படைத்த இப்புவியை, நம் குழந்தைகளிடம் அதே நிலையில் ஒப்படைப்பது நம் கடமையல்லவா?     

சுற்றுச்சூழலைப் பற்றி நாம் விழிப்புணர்வு பெறுவது  எப்போது?   நாகரிகம் என்ற பெயரில் மொழி, உடை போன்ற விஷயங்களில் கண்ணை மூடிக்கொண்டு மேல்நாடுகளைக் காப்பியடிக்கும் நாம், இந்த அவசியமான விஷயத்தில் மட்டும், அவர்களை விட மிகவும் பின் தங்கியிருப்பது ஏன்?  எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்!  ஆபத்து வந்த பின் புலம்புவதை விட, வருமுன் காப்பது விவேகமல்லவா?

பசுமைப்புரட்சி என்ற பெயரில் எண்டோசல்பான் உள்ளிட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை வண்டி வண்டியாகக் கொட்டி நிலத்தை முழுவதுமாக பாழ்படுத்திய பிறகு, இயற்கை வேளாண்மை பற்றி இன்று வாய் கிழியப் பேசுகிறோம்;  காற்று மாசுபட்டதால் ஏற்கெனவே ஓசோனில் ஓட்டை விழுந்து, புவியின் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்கிறது.  சூடு அதிகரிப்பதால், வருங்காலத்தில் உறைபனியென்பதே இருக்காது.  வற்றாத ஜீவநதிகள் கூட வறண்டுவிடும்; இன்னும் ஐம்பதாண்டுகளில் உலகமுழுக்கக் குடிதண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் என அறிவியல் அறிஞர்கள் பயமுறுத்துகிறார்கள். 

இந்நிலையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச நீர்நிலைகளையும், விழாக்கள் என்ற பெயரில் பாழ்படுத்துவது அறிவுடைமை ஆகுமா?  சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதற்கு,  இதைவிடப் பொருத்தமான  எடுத்துக்காட்டு உண்டா?

என் சிறுவயதில் இவ்விழாவன்று, அம்மா பசுஞ்சாணத்தை எடுத்துவந்து உருண்டையாகப் பிடித்து, அதன் தலையில் அருகம்புல் செருகி, மஞ்சள், பூ, குங்குமம் வைத்து பிள்ளையாராக வழிபட்டது நினைவிலிருக்கிறது.  விழாவுக்குப் பின்னர் இப்படிப் பிடித்து வைக்கப்பட்ட செலவில்லாப் பிள்ளையார், நல்ல பிள்ளையாகச் சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல், தோட்டத்துக்கு உரமாகிவிடுவார்!

அக்காலத்திலும் சாணப் பிள்ளையாருக்குப் பதிலாக பிள்ளையார் பொம்மைகளை வாங்கி வந்து கும்பிடும் பழக்கமிருந்தது.  ஆனால் அச்சிலைகளனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எவ்விதக் கேடும் விளைவிக்காத களிமண்ணால் செய்யப்பட்டவை; வேதிவண்ணங்கள் பூசப்படாதவை;  இவற்றை ஆற்றிலோ, குளத்திலோ கரைக்கும் போது நீர் மாசுபடாது என்பதோடு.  நீர்வாழ் உயிரினங்களுக்கும் எவ்வித ஆபத்துமில்லை.  ஆனால் இப்போதோ?

சிலை தயாரிப்பில் மக்காத குப்பைகளான பாரிஸ் சாந்து (pop) அக்ரிலிக் மற்றும் எண்ணெய் வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தி நீர்நிலைகளில் கரைப்பதால் ஐநூறு டன்னுக்கு மேலான மாசு கலந்து, நச்சுத்தன்மை அதிகரிப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வர்ணம் பூசப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஒரு சாமி பொம்மை எட்டிலிருந்து பத்து கிராம் காரீயத்தை நீரில் கலக்கிறது என்கிறார் செயின்ட் ஜான் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவர்.  அப்படியானால் ஒவ்வோர்  ஊரிலும்,  நீரில்  கரைக்கப்படும்  ஆயிரக்கணக்கான சிலைகளால் காரீயத்தின் அளவு எவ்வளவு கூடுமென்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்! 

சுடப்படாத களிமண், கிழங்கு மாவு, மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் ஆகிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே  நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்; ரசாயன வண்ணப் பூச்சுடன் கூடிய  சிலைகளைக் கரைக்கக் கூடாது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இவ்வாண்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆனால் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல வண்ணச் சிலைகளைப் பார்க்கும் போது, இந்த எச்சரிக்கையை சிலை தயாரிப்பாளர்களோ, பொதுமக்களோ சட்டை செய்ததாக தெரியவில்லை.  

இவ்விதியை மீறுபவர்களுக்குச் சட்டங்கள் மூலம் கடுமையான தண்டனை அளித்தால் மட்டுமே, இப்பிரச்சினைக்கு உடனடியாகத்  தீர்வு காணமுடியும்.  ஆனால் மக்கள் நலனில் உண்மையான அக்கறையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத இந்நாளைய அரசியல் தலைவர்களுக்கு, இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. 

மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டால், அடுத்த தடவை பதவிக்கு வரமுடியாமல் போய்விடுமே என்ற கவலை மட்டுமே இவர்களுக்கு! எனவே மக்கள் நல்வாழ்வில் அக்கறை சிறிதுமின்றி வாக்கு வங்கியில் மட்டுமே கவனமுள்ள எந்த அரசுமே, இவ்விஷயத்தில் தீவிரமான நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகமே. 
குறைந்த பட்சம் பள்ளிகளில் இதுபற்றிய கட்டுரைகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.  தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வழியாக விளம்பரங்கள் செய்து பொது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க அரசு முயல வேண்டும்.       

சில ஆண்டுகளுக்கு முன் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பெங்களூரில் நடத்திய ஆய்வில், சிலைகளைக் கரைத்த பின் காரீயம், (Lead) இரும்பு தாமிரம் ஆகியவை நீரில் கலந்திருந்ததை  உறுதிசெய்தது.  காகிதக்கூழுடன் கச்சா எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படுவதாலும், மிகவும் ஆபத்தான வேதிப்பொருட்கள் நீரில் கலந்திருந்தது தெரியவந்தது.    

கடலில் கலக்கும் இம்மாதிரியான வேதிப் பொருட்களின் நச்சுத்தன்மை காரணமாக ஏராளமான மீன்கள் செத்து மடிகின்றன.  உயிர்பிழைக்கும் கடல்வாழ் உயிரினங்களை,   உண்ணும் மனிதனின் உடல் உறுப்புகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. 

மாகி நூடுல்ஸில் மட்டுமே காரீய நச்சு (Lead) இருக்கிறது என்று எண்ணுவது பேதைமை.  நாள்தோறும் பயன்படுத்தும் குடிநீரிலும், நாம் உண்ணும் நீர்வாழ் உயிரினங்களின் உடலிலும் கலக்கும் காரீய நச்சின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  .    

மனித உடலின் உள்ளே  செல்லும்  காரீயத்தின்  (Lead) சிறு பகுதி மட்டுமே கழிவு வழியாக வெளி யேறும்; பெரும் பகுதி கல்லீரல், மூளை, சிறுநீரகம், எலும்பு போன்ற உறுப்புக்களுக்குப் பரவி படிவதால்  கோமா, வலிப்பு நோய் உண்டாகி இறுதியில் மரணம் ஏற்படும். 
கருவுற்ற தாய்மார்களின் உடலில் சேரும் காரீயம், தொப்புள் கொடி வழியாக குழந்தைக்குச் சென்று வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறந்துவிடும் அபாயமுண்டு.    

எட்டு ஆண்டுகளாக மக்களுக்கு இந்தச் சிலை விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நீர்நிலைகளின் தூய்மையைக் காப்பாற்றப் போராடி வரும் ஈகோ எக்சிஸ்ட் http://e-coexist.com/ என்ற அமைப்பு, களிமண், மஞ்சள் தூள், முல்தானிமெட்டி போன்ற இயற்கையான பொருட்களாலான சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறது.  விழா முடிந்த பின்னர் ஒரு வாளி தண்ணீரில் சிலையைக் கரைத்துத் தோட்டத்துச் செடிகளுக்கு ஊற்றச் சொல்லி வலியுறுத்துகின்றது  விழாவுமாயிற்று; தோட்டத்துக்கு உரமுமாயிற்று!   http://www.ecoganeshidol.com/ 

எனவே அடுத்த ஆண்டிலிருந்தாவது, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில், விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் என நாமனைவரும் சபதமேற்போம்!  நம் பிள்ளைகளுக்கும், அண்டை அயலார்க்கும் இதுபற்றி எடுத்துச் சொல்லி, நீர்நிலைகளின் மாசினைத் தடுக்க நம்மாலான முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோம்!. 

நம் வருங்காலச் சந்ததிகளின் நல்வாழ்வுக்காக, இதைச் செய்வது மிகவும் அவசியம்; அவசரமும் கூட.

(வலைப்பதிவர் திருவிழா 2015 – புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப்போட்டிக்காக எழுதப்பட்டது.)   (பிரிவு - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி) இக்கட்டுரை என் சொந்தப்படைப்பென்றும், இதற்கு முன் வெளியானதல்ல என்றும் போட்டி முடிவு வெளியாகும் வரை வெறெங்கும் பிரசுரத்துக்கு அனுப்பமாட்டேன் என்றும் சான்றளிக்கிறேன்.

(படங்கள் நன்றி - இணையம்)Sunday, 13 September 2015

புதுக்கோட்டையில் பரிசு மழை!

  
வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை
தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம்
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
தமிழ்க்களஞ்சியம்இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி-கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி.அழகொளிரும் தலைப்போடு.


போட்டிகளின் விதிகள் பற்றியறிய:- வலைப்பதிவர் சந்திப்பு 2015


போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Friday, 11 September 2015

புதுக்கோட்டையில் கோலாகலத் திருவிழா!புதுக்கோட்டையில் 11/10/2015 பதிவர் விழா என்ற அறிவிப்பை அண்ணன்  நா.முத்துநிலவன் அவர்கள் வெளியிட்ட போது, பதிவர் பலர் நேரில் சந்திக்கும் சாதாரண நிகழ்வென்று தான் முதலில்  நினைத்தேன். 

ஆனால் விழாவைப் பற்றித் தொடர்ச்சியாக வந்த அறிவிப்புகளின் மூலம் இது சாதாரண சந்திப்பல்ல என்பது புரிந்தது.  விழாவின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் நான் சொல்வது உண்மையெனப் புரியும்:-
 1)    கவிதை ஓவியக் கண்காட்சி
(2)    பதிவர்களின் அறிமுகம்
(3)    தமிழிசைப் பாடல்கள்
(4)    நூல்வெளியீடுகள்
(5)    குறும்பட வெளியீடுகள்
(6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8)    பதிவர்களுக்கான போட்டிகள் – பரிசுகள்
(9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரை
(10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சிவிற்பனை       

புதுகை சகோதர சகோதரிகள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் போல் இணைந்து கவிஞர் தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து செயல்படும் விதமே விழா பிரும்மாண்டமாக இருக்கப் போகிறது என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது.

திட்டமிடலை இவர்களிடத்தில் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
விழாவுக்கான செயல்திட்டக் கூட்டம் போட்டு இவர்கள் அமைத்துள்ள குழுக்களின் பட்டியல் கீழே:-
1)    நிதி விளம்பரக் குழு
(2)    கவிதை-கண்காட்சிக் குழு
(3)    உணவுக் குழு
(4)    வலைப்பதிவர் கையேட்டுக் குழு
(5)    பங்கேற்போர் பட்டியல் தயாரிப்புக்குழு
(6)    விழா அன்று வருவோர் பதிவுக்குழு
(7)    நூல்-குறும்பட வெளியீட்டுக் குழு
(8)    மேடை நிர்வாகக் குழு
(9)    தங்குமிடம் வாகன உதவிக் குழு
(10)நேரலை ஒளிபரப்புக் குழு
(11)அழைப்பிதழ் தயாரித்து அனுப்பும் குழு
(12)நினைவுப்பரிசுக் குழு

வலையுலகில் தமிழில் எழுதும் பதிவர்களின் விபரங்களை ஒன்று திரட்டித் ‘தமிழ் வலைப்பதிவர் கையேடு 2015’ தயாரித்து உலகமுழுக்க பலரும் அறிய வேண்டும் என்ற உயரிய நோக்கில், அனைவருக்கும் வழங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். 

எனவே நீங்கள் வலைப்பதிவராக இருந்து, இவ்விழாவில் பங்கு பெற விரும்பினால், கீழே கொடுத்திருக்கும் இரு இணைப்புகளில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று வருகை படிவத்தை உடனே நிரப்பி அனுப்ப வேண்டும். 

நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லாதவர்கள் கூடத் தங்கள் வலைப்பூ விபரங்களை  கையேட்டிற்காக பதிவு செய்யலாம்.  உங்கள் வலைப்பூவின் பெயர், சாதனைகள், வெளியிட்டிருக்கும் நூல்கள், குறும்படங்கள், சிறப்பான பதிவுகள் உள்ளிட்ட விபரங்களைக் கொடுக்கலாம்.       
அதற்கான இணைப்புகள்:-  http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html#more

இவ்விழாவைப் பற்றி மேலும் விபரங்கள் அறிய:- வலைப்பதிவர் சந்திப்பு 2015

தங்குமிடம், சாப்பாடு, வாகன ஏற்பாடு என விழாவுக்கு எக்கச்சக்கமாக செலவாகும்.  எனவே நம்மால் முடிந்த நன்கொடைகளை அளித்து,  விழா சிறப்பாக நடைபெற உதவுவோம்!  

வலைப்பதிவர் திருவிழா-2015 நிகழ்விற்கென,
தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
அந்தக் கணக்கு விவரம் வருமாறு -
----------------------------------------------------------------------
NAME - MUTHU BASKARAN  N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
(படங்கள் - நன்றி இணையம்)