நல்வரவு

வணக்கம் !

Thursday, 26 December 2013

சிட்டுக்குருவிக்குக் கூடு கட்டுவோம்’

துறுதுறுக்கும் கண்கள், குட்டி அலகு, 'கீச், கீச்' கீதத்துடன் 'விர், விர்' என அங்குமிங்கும் தாவிப் பறந்து, சுறுசுறுப்புக்கு இலக்கணம் சொல்லும் சின்னஞ்சிறு பறவை சிட்டுக்குருவி. 
ஆண்குருவியின் கண், கழுத்து, தொண்டைப் பகுதிகளில் கறுப்புத் திட்டுக்கள் இருப்பதால், எளிதில் அடையாளம் காண முடியும். ஆண், பெண் இரண்டுக்குமே சாம்பலும் கறுப்பும் கலந்த சிறகுகள் இருந்தாலும், ஆணுக்குக் கருமை கொஞ்சம் கூடுதலாயிருக்கும். ஆண்குருவிதான் அழகு! (மனித இனத்தைத் தவிர விலங்கு, பறவையினங்களில் ஆணினம்தான் அழகு!).
நம் வீடுகளைச் சுற்றியே, நம் இளம் வயது நண்பர்களாக எந்நேரமும் சுற்றித் திரிந்த இச்சிட்டுக்குருவிக்கு நம் மலரும் நினைவுகளில் சிறப்பான ஒரு தனியிடம் உண்டு. சிட்டுக்குருவி கூடு கட்டினால் குடும்பத்துக்கு நல்லது, கூட்டைக் கலைப்பது பாவம் போன்ற நம்பிக்கைகள் நம் முன்னோரிடத்தில் இருந்தன. அக்காலத்தில் முற்றத்தில் காய வைத்திருக்கும் நெல்லைக் கொத்தித் தின்ன இக்குருவிகள் கூட்டங் கூட்டமாக வரும்.து
ஆனால், இப்போதெல்லாம் இக்குருவியைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. நம்மூரில் மட்டுமன்றி, உலக முழுதுமே இந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதன் அழிவிற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுபவை:-
1.அக்காலத்தில் கூரை, ஓட்டு வீடுகளில் பரண், மச்சு, மாடம், சந்து, பொந்து, இடுக்கு என இவை கூடு கட்டுவதற்கு ஏராளமான மறைவிடங்கள் இருந்தன. வீட்டின் பின்புறம் இருந்த செடிகள், புதர்கள் நிறைந்த தோட்டம் போன்றவையும் இவற்றின் இனப்பெருக்கத்துக்குத் துணை செய்தன. ஆனால் இக்காலக் கான்கிரீட் வீடுகளில் கூடு கட்ட மறைவிடம் ஏதுமில்லை. மேலும், அடுக்கக வீடுகள் பெருகி வரும் இந்நாளில் தோட்டத்திற்கு ஏது இடம்?

2. கைப்பேசிக் கோபுரத்திலிருந்து வரும் மின்காந்த அதிர்வலைகளின் கதிர்வீச்சும் இந்த இனத்தை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறதாம்.

3. இக்காலத்தில், இயற்கை வேளாண்மையைக் கைவிட்டு வேதிப்பொருட்களடங்கிய உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்துவதால் இத்தானியங்களைத் தின்னும் இக்குருவிகள் அவற்றின் வீரியம் தாங்காமல் இறந்து போகின்றன. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள், வயல்வெளிகளில் இருக்கும் புழு பூச்சிகளை முற்றிலுமாக அழித்து விடுவதால் இளங்குஞ்சுகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதில்லை.
 

4. கிராமங்களில், இக்குருவிகள் கொத்தித் தின்பதற்காக வீட்டு வாசற்கூரையில் புதிதாக அறுத்த நெல்மணிகளைப் பச்சை வைக்கோலுடன் செருகி வைப்பார்களாம். மேலும், அக்காலத்தில் வீடுகளில் தானியங்களைப் புடைத்துச் சுத்தப்படுத்துவது வழக்கம். தவிட்டோடு சிதறும் தானியங்கள், பறவைகளுக்கு உணவாகப் பயன்பட்டன. இப்போது சுத்தம் செய்யப்பட்ட மளிகைச் சாமான்கள் பாலித்தீன் பைகளில் கிடைப்பதால் தானியங்கள் சிந்துவதற்கு வாய்ப்பில்லை. விளைவு? குருவிகளுக்கு உணவுப் பஞ்சம்!

5. இவை அரிசி, நெல்மணிகள் போன்ற வறண்ட உணவை உண்பதால் அடிக்கடித் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். நீர்நிலைகள் வறண்டு கிடக்கும் வெயில் காலத்தில் சுத்தமான தண்ணீர் கிடைக்காததாலும் மடிய நேரிடுகின்றது.

இது போன்ற விவரங்களை மக்களுக்கு விளக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி இக்குருவியினத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனும் உயரிய எண்ணத்தில் 2010ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோராண்டும் மார்ச் 20ஆம் தேதி, உலக முழுதும் 'சிட்டுக்குருவி தினம்' கொண்டாடு கின்றார்கள். இதற்காக வலைப்பூ ஒன்றையும் தொடங்கியுள்ளார்கள். பார்க்க:
 
http://www.worldsparrowday.org/
தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று, சிட்டுக்குருவியை தில்லியின் மாநிலப் பறவையாக அறிவித்து அதனைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

'அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவி' என்றவுடன் இந்த இனத்தைக் காப்பாற்ற நானும் ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக என்னுள் வேர்விட்டது.
ஏற்கெனவே சுற்றுப்புறச்சூழலில் ஆர்வங் கொண்ட எதிர் வீட்டுப் பையனின் அயராத முயற்சியால் எங்கிருந்தோ வந்து எங்கள் தெருவில் குடியேறிய சிட்டுக்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து நான்கானது.
 
அவற்றை எங்கள் வீட்டுப்பக்கம் வரவழைக்க நானும் எவ்வளவோ போராடினேன். சிறுவனின் யோசனைப்படி தினமும் அரிசி வைத்து, ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் வைத்தேன். சிட்டுக்குருவி தினமும் குளிக்குமென்பதால் மண்சட்டியில் நீரூற்றி வைத்தேன். நான் வைத்த அரிசியும் நீரும் காக்கைக்கு உணவாயினவே தவிர, சிட்டு என் வீட்டுப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம்!
ஒருநாள், வாசலில் இருந்த மின்விசிறியின் மேல் இரண்டு செங்குதக் கொண்டைக்குருவிகள் (Red-vented Bulbul) வந்து கூடு கட்ட இடம் பார்ப்பதும் போவதுமாக இருந்தன.
எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! 'இதுவாவது வந்ததே' என மனதைத் தேற்றிக் கொண்டு, மின்விசிறியின் மேலிருக்கும் சிறு இடம், கூடு கட்டப் போதாதே என்று கவலைப்பட்டு, அப்பறவைகள் வெளியில் சென்றிருக்கும் சமயமாகப் பார்த்து, ஓர் அட்டைப் பெட்டியில் ஓட்டை போட்டு அதை இறக்கையில் தொங்க விட்டேன்.
 முக்காலியில் ஏறி, அதை நான் மாட்டிக் கொண்டிருக்கும்போதுதானா அவை திரும்ப வேண்டும்? இந்த இடம் தமக்குச் சரிப்பட்டு வராது எனப் பயந்து ஓடிவிட்டன! அதற்குப் பிறகு எங்கள் வீட்டுப்பக்கம் அவை தலைகாட்டவே யில்லை. 
ஆசையாய்க் கூடு கட்டத் தொடங்கிய பறவைகளைப் பயமுறுத்தித் துரத்தி விட்டோமே என்று வருத்தமாயிருந்தது. அந்த அட்டைப்பெட்டி கழற்றப்படாமல் மேலேயே தொங்கிக் கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம்! சில நாட்களில், இரண்டு சிட்டுக்குருவிகள் அதில் வந்து அமர்ந்து கூடு கட்டத் தொடங்கின! 

தெருத் தெருவாகச் சுற்றியலைந்து கூடு கட்டத் தோதான இடத்தை முதலில் கண்டுபிடிக்கும் ஆண்குருவி, அந்த இடத்துக்குச் சொந்தம் கொண்டாடுமாம். அந்த இடத்தை வேறு எந்த ஆணும் அண்டாமல் பார்த்துக் கொண்டு, அந்தப் பக்கமாக வரும் பெண் குருவிகளைக் கவர அதிகச் சத்தத்துடனும் இடைவிடாமலும் 'கீச் கீச்' என்று ஒலியெழுப்புமாம்.
 

'என்னிடம் கூடு கட்ட அருமையான இடம் இருக்கிறது. என்னைக் கட்டிக் கொள்வாயா?' என்று பெண்ணிடம் கேட்குமோ!
 

அதன் வார்த்தைகளில் மயங்கி, எந்தப் பெண் குருவி ஜோடி சேருகிறதோ அதுவே வாழ்நாள் முழுக்க இல்லத்தரசி. ஜோடி சேர்ந்த ஆணும் பெண்ணும் வாழ்நாள் முழுக்க, ஒன்றுக்கொன்று பாசத்தோடும் இணைபிரியாமலும் இல்லறம் நடத்துமாம். சிட்டுக்குருவியினத்தில் பலதார மணம் இல்லை என்பது எவ்வளவு வியப்பான செய்தி!
 

அதற்குப் பிறகு, இரண்டும் கூடு கட்டும் இடத்துக்கருகிலேயே குடும்பம் நடத்திப் பின் தம்பதி சமேதராய்ச் சிறு சிறு குச்சிகளையும் இலை தழைகளையும் குட்டிக் குட்டி அலகுகளில் ஓயாமல் எடுத்து வந்து கூடு கட்டும் அழகே அழகு!
 

உட்பக்கம் மிருதுவான புற்களையும், பறவைகளின் சிறகுகளையும் வைத்தும் வெளிப்பக்கம் வைக்கோல், தேங்காய் நார், சிறு சிறு குச்சிகள் ஆகியவற்றைக் கொண்டும் கூடு கட்டுகின்றன. (நான் வெளியில் வைத்திருந்த பூந்துடைப்பம் ஒரு வாரத்தில் காலி!)

இரண்டு வாரம் பெண்குருவி அடைக்காத்துக் குஞ்சு பொரித்த பின், ஏறக்குறைய இரு வாரம் தாயும் தந்தையும் மாறி மாறி வெளியில் போய் வந்து குஞ்சுகளுக்கு உணவூட்டுகின்றன. குஞ்சுகளின் குரல் சலங்கைக் கொலுசின் ஒலியை ஒத்திருக்கிறது.
இதுவரை மூன்று ஜோடிகள் என் அட்டைப் பெட்டிகளில் இல்லறம் நடத்தி இனப்பெருக்கம் செய்து விட்டன!  காலையில் சிட்டுக்குருவிகளின் சுப்ரபாதம் கேட்டுத்தான் எங்களது திருப்பள்ளியெழுச்சி நடக்கிறது.
 சிட்டுக்குருவிகளின் கீச் கீச் கீதத்துடன் உங்களது காலைப்பொழுதும் விடிய வேண்டுமா? 

நீங்கள் செய்ய வேண்டியவை:-
1. அட்டைப் பெட்டியில் கொஞ்சம் வைக்கோல் போட்டு வையுங்கள். வைக்கோல் இல்லையென்றாலும் வெறும் பெட்டியை மாட்டி வைத்தால் போதும். மற்றவற்றை அதுவே சேகரம் செய்து கொள்ளும்.
 

2. பெட்டியில் போடும் துளையின் அளவு 32 மி.மீ இருக்கலாம். ஓட்டை மிகவும் பெரியதாய் இருந்தால் காகம் போன்ற பெரிய பறவைகள், அலகை விட்டுக் குஞ்சுகளைத் தின்றுவிடக் கூடும். குஞ்சுகள் வெளியில் வந்து விழும் ஆபத்துமுண்டு.

3. காம்பளான் பெட்டி,
சர்ப் எக்ஸ்செல் பெட்டிகளை நான் பயன்படுத்துகிறேன். (அதிக சோப் வாசனையடிக்கும் பெட்டியைக் குருவி நிராகரிக்கிறது.) உடனே குருவி வரும் என எதிர்பார்க்கக் கூடாது! சில நாட்களாகலாம், மாதங்களும் ஆகலாம்.

4. பயன்படுத்திய பூந்துடைப்பங்களைத் தூக்கியெறியாமல் அவற்றின் கண்ணில் படுமாறு மூலையில் போட்டு வைத்தால் அதிலிருந்து மிருதுவான நார்களை உருவிக் கொள்ளும்.
 

5. குஞ்சு பொரித்திருக்கும்போது ரவை போல உடைத்த நொய்யைப் போட்டு வைக்கலாம். கல் மாவுக்குப் பதிலாக அரிசி மாவைக் கோலத்துக்குப் பயன்படுத்துங்கள்.
 

6. கூட்டுக்கு அருகிலோ, கீழேயோ நின்று சத்தம் போடக் கூடாது! (இந்தாண்டு தீபாவளிக்கு, குருவிக்குஞ்சைக் காரணம் காட்டி எங்கள் வீட்டுக்கெதிரே யாரையும் பட்டாசு வெடிக்க விடாததில், சிறுவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானேன்!)
 

7. ஒரு கிண்ணத்தில் சுத்தமான தண்ணீர் வைக்க வேண்டும்; தினமும் மாற்றுவது அவசியம்!

8. சுழலும் மின்விசிறியில் குருவி அடிபட்டு விடும் ஆபத்து அதிகம். (நான் இந்த மின்விசிறியைப் பயன்படுத்துவதில்லை; மறந்தும் கூட யாரும் அதனை
ஆன் செய்து விடக்கூடாது என்பதற்காகப் பலகையில் பெரிய டேப் ஒட்டி சுவிட்சை மறைத்துவிட்டேன்.) எனவே, குருவிக்கு ஆபத்தில்லா வெளி வராந்தாக்களில், மொட்டை மாடிக்கு மேலேயிருக்கும் கம்பிகளில், அடர்த்தியான புதர்ச்செடிகளில் பெட்டிகளைத் தொங்கவிடலாம். இரண்டு மூன்று இடங்களில் தொங்கவிட்டிருந்தால் அதற்குத் தோதான பெட்டியைக் குருவி தேர்வு செய்து கொள்ளும்.

9. தோட்டத்தில் இடமிருந்தால் மல்லிகை, முல்லை, நந்தியாவட்டை, இட்லிப்பூ போல அடர்த்தியான செடி கொடிகளை வளருங்கள்.

முறையான கணக்கெடுப்பு ஏதும் செய்யாமல் சிட்டுக்குருவி அழியும் நிலையில் உள்ளது என்று சொல்வது பொய்யான தகவல் என மறுப்போரும் உளர்.
http://www.citizensparrow.in/  என்ற வலைத்தளம், இச்செய்தி உண்மைதானா என்பதையறிய, சிட்டுக்குருவி பற்றிய சில கேள்விகளைத் தயார் செய்து 15/06/2012 - க்குள் பதிலளிக்கச் சொன்னது. (நானும் இவ்வலைத்தளத்துக்குச் சென்று பதிலளித்தேன்.) அதன்படி 8418 இடங்களிலிருந்து 5651 பேர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், தாம் கண்டுபிடித்த உண்மைகளைத் தொகுத்து அறிக்கையொன்றை விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது இத்தளம். அது வெளிவந்தால் உண்மை நிலவரம் தெரிய வரும். 

இச்செய்தி மெய்யோ, பொய்யோ, நம்மிடம் அடைக்கலம் (அடைக்கலக்குருவி என்றும் இதற்கொரு பெயர் உண்டாம்) புகும் இச்சிறு உயிரினத்தைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. இன்றேல் நம் பிள்ளைகள், மார்ச் 20ஐச்
சிட்டுக்குருவி நினைவு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். 

பறவையியல் நிபுணர் டாக்டர் சலீம் அலி கூறியதை இங்கு நினைவு கூர்தல் பொருத்தமாயிருக்கும்:-
"நாம் இல்லாத உலகத்தில் பறவைகளும் விலங்குகளும் உயிர் வாழும். ஆனால், பறவைகளும் விலங்குகளும் இல்லாத உலகத்தில் நம்மால் ஒருபோதும் வாழ இயலாது!"

      (10/12/2012 ல் நிலாச்சாரலில் வெளிவந்த கட்டுரை). 

Sunday, 15 December 2013

மண்டேலாவுக்கு வீர வணக்கம்!


மண்டேலாவுக்கு வீர வணக்கம்!

05/12/2013 ல் காலமான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல், அவரது சொந்த ஊரான குனுவில் இன்று அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.  ஏறக்குறைய நான்காயிரத்து ஐநூறு பேர்,  இவரது ஈமச்சடங்கில் கலந்து கொண்டு வீரவணக்கத்துடன் பிரியா விடை கொடுத்த காட்சி, நெகிழ்ச்சி தருவதாக இருந்தது.

1918 ஆம் ஆண்டு கிழக்கு தென்னாப்பிரிக்காவில் சிறிய கிராமமொன்றில்  திம்பு இனத்தில் பிறந்த இவரது இயற்பெயர், ரோலிலாலா தலிபுங்கா மண்டேலா.  மடிபா என்பது செல்லப்பெயர்.  அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் கிறித்துவ பெயர் சூட்டும், அப்போதைய வழக்கப்படி பள்ளியாசிரியர், இவருக்கு நெல்சன் என்று பெயர் சூட்டினார்.

வெள்ளையரின் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் இருபத்தி ஏழு ஆண்டுகள் தனிமைச் சிறையில் இவர் வாட நேர்ந்தது.  அன்னை, மகன் ஆகியோரின் ஈமச்சடங்குகளில் பங்கேற்க கூட, இவருக்கு அனுமதி அளிக்கப் படவில்லை.  நிபந்தனையோடு இருமுறை அவரை விடுதலை செய்ய தென்னாப்பிரிக்க அரசு முன்வந்த போது, அதனை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார் மண்டேலா.  
(கொலை, கொள்ளையில் ஈடுபட்டு, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு,  சிறைத்தண்டனை வழங்கப்பட்டவுடன், நெஞ்சு வலி என்று மார்பைப் பிடித்துக் கொண்டு மருத்துவமனையில் தஞ்சம் புகும்,  நம்மூர் அரசியல் தலைவர்களின் 'ஞானம்' இவரிடம் இல்லை).  

இவரது இடைவிடாத போராட்டத்தின் விளைவாக தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையராகயிருந்த வெள்ளையரின் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்டு கறுப்பர்களின் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.  முதல் கறுப்பினத் தலைவராக 1994 ஆம் ஆண்டு பதவியேற்ற இவர், நினைத்திருந்தால், சாகும் வரை பதவியில் நீடித்திருக்க முடியும்.  ஆனால் இவரோ பதவி ஆசை துளியுமின்றி,  இரண்டாம் முறை போட்டியிட மறுத்து விட்டார்.

(தள்ளாத வயதில் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர வேண்டி வந்தாலும் பதவி ஆசையைத் துறக்காத நம் அரசியல்வாதிகள், இவரது வாழ்க்கை சரித்திரத்தைப் படித்த பிறகாவது திருந்துவார்களாக!)
மேலும் நம் நாட்டைப் போல் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தினரை (அவர்களை விட்டால், வேறு யாருக்கும் நாட்டை ஆள தகுதியில்லை என்பது போல்) அரசியலுக்குள் புகுத்திப் பதவியில் அமர்த்தும், மோசமான வாரிசு அரசியலையும் இவர் ஏற்படுத்தவில்லை.

1990 ல் இவர் விடுதலை செய்யப்பட்ட போது நான் அடைந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.  வின்னியும் இவரும் பிரிந்த போது, மறைந்த என் தாயார் மனம் வருந்திய காட்சியும் நினைவுக்கு வருகிறது

நாடு,மொழி, இனங் கடந்து இன்று உலக மக்கள் அனைவரையும் மண்டேலாவின் மரணம் பாதித்திருக்கிறது என்றால், அர்ப்பணிப்புடன் கூடிய இவரது தன்னலமற்ற தியாகமே காரணமாகும்.  கடந்த வாரம் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு மண்டேலாவுக்குப் புகழாரம் சூட்டினர்.

நம்மூரில் இரங்கற்கூட்டமென்றால் அனைவராலும் தவறாமல் உச்சரிக்கப்படும் சொற்கள் ‘ஈடு செய்ய முடியா இழப்பு,’.  இவை உண்மையான பொருளில் வழங்கப்படாமல் வெறும் சம்பிரதாயத்துக்காகவே சொல்லப்படும் வார்த்தைகள்.   உண்மையில் இக்காலக் கட்டத்தில் மண்டேலாவின் மரணம் தான் ஈடு செய்ய முடியா இழப்பு.  இவர் வாழ்ந்த நாளில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயம் .

இவரது முக்கியமான கருத்துக்கள் சிலவற்றை என்னால் முடிந்த அளவு  மொழியாக்கம் செய்திருக்கிறேன்.  இவருக்கு வீர வணக்கம் செலுத்தும் இந்நாளில் இவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம் என்பது என் கருத்து:-


1.       ஒன்றைச் செய்து முடிக்கும் வரை, அது எப்போதுமே செய்ய முடியாததாகவே தோன்றும்.

2.      சுதந்திரமாக இருப்பதென்பது தனது தளைகளை மட்டும் விடுவித்துக் கொண்டு இருப்பதல்ல;  மற்றவரின் சுதந்திரத்தையும் மதித்து அதனை அதிகரிக்கும் வகையில் வாழ்வதே சுதந்திரம் ஆகும்.

3.      பிறக்கும் போது யாருமே அடுத்தவரின் நிறம், பின்னணி, அல்லது மதம் இவற்றைப் பார்த்து அவரை வெறுப்பதில்லை. வெறுப்பதற்கு மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.  வெறுப்பதைக் கற்க முடியுமென்றால்,  அன்பு செலுத்தவும் அவர்களுக்குக் கற்பிக்க முடியும். ஏனென்றால் வெறுப்பை விட மனித மனத்திலிருந்து இயற்கையாக தோன்றும் உணர்வு அன்புதான்.

4.   ஓர் உயர்ந்த சிகரத்தின் மீது ஏறிய பின்னர், அது போல் ஏறுவதற்கு இன்னும் பல சிகரங்கள் இருப்பது தெரிய வரும்.

5.   ஒரு முறை கூட கீழே விழாமல் வாழ்வது வாழ்வின் உன்னதமல்ல ஒவ்வொரு முறை  விழும் போதும், எழுவதிலேயே வாழ்வின் பெருமை அடங்கியிருக்கிறது.

6.   உன் பகைவனோடு அமைதி ஏற்படுத்துக் கொள்ள விரும்பினால் அவனோடு சேர்ந்து வேலைசெய்ய வேண்டும்; அவன் உன் துணைவனாகிவிடுவான்.

7.   பயமின்றியிருப்பது தைரியம் அல்ல பயத்தை வெற்றிக் கொள்வதே தைரியம் என்று கற்றுக் கொண்டேன்.  தைரியமான மனிதன் என்பவன் பயத்தை வெற்றி கொண்டவனே ஆவான்.

8.   உலகத்தை மாற்றுவதற்கு, மிக அதிக வலுவுள்ள ஆயுதம் கல்வியே.