![]() |
முல்லையையொத்த மலர் |
தமிழகமெங்கும்
பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiaceae.
இதன் தாயகம் தெற்காசியாவென்பதால்,
நம்நாட்டு வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி, கவனிப்பு தேவையின்றித் தானாகவே செழித்து
வளரும் மரம்.
![]() |
நுணா மரம் |
முற்றிய இதன் தண்டுப்பகுதி
மஞ்சளாக இருப்பதால், இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு. மஞ்சள் நீராட்டி என்றும் அழைப்பார்களாம்.
உறுதியான அதேசமயம் மிகவும் லேசான மரமென்பதால்
ஏர், வில்வண்டி, பாரவண்டி போன்றவற்றில் மாடுகளைப் பூட்டும் நுகத்தடி செய்ய இம்மரம்
பயன்பட்டிருக்கிறது என்பது இதன் சிறப்பு. வண்டியிழுக்கும் மாடுகளின் கழுத்து பாரத்தைக் குறைக்க நம் முன்னோர் தேர்ந்தெடுத்த
மரமிது! காவி வேட்டிக்கு இதன் முற்றிய மரப்பட்டைகளைக் கொதிக்க வைத்து, அதில் வெள்ளைத் துணியை முக்கி எடுப்பார்களாம்.
இதன் மலர்கள் தோற்றத்தில்
வெண்மையாக அப்படியே முல்லையை ஒத்திருந்தாலும், இதழ்கள் அதனை விடத் தடிப்பாக உள்ளன. நறுமணமும் உண்டு. முடிச்சு முடிச்சாகத் தோன்றும், இதன் காய்களைக்
கொண்டு இம்மரத்தை எளிதில் அடையாளங் காணலாம்.
முற்றிய பிறகு பழம் கறுப்பாக மாறும்.
விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
சங்க இலக்கியத்தில் நுணவம் என்ற பெயரில் இது குறிக்கப்படுகின்றது.
எ,கா:-
“அவரோ வாரார் தான்
வந்தன்றே
சுரும்புகளித்
தாலும் இருஞ்சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே,”
(ஐங்குறுநூறு
342 ஓதலாந்தையார்);
(கரிய அடிப்பகுதியையும்,
பெரிய கிளைகளையும் உடைய நுணா மரம் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றது; அம்மலர்களிலுள்ள தேனைக்
குடித்து விட்டு வண்டினங்கள் மகிழ்வுடன் பாடும் இளவேனில் வந்துவிட்டது; ஆனால் அவர்
இன்னும் வரவில்லை என்று வருந்திக் கூறுகிறாள் தலைவி)
![]() |
இலையும் காயும் |
முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தமிழரும் தாவரமும்.’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ள ‘சங்கக்காலத் தாவரங்கள்,’ பட்டியலில் இதன்
பெயர் இருப்பதிலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
மேலாக நம் மண்ணில் நிலை பெற்றிருக்கும் மரமிது என்றறியலாம்.
இத்தகைய சிறப்பு
வாய்ந்த தொன்மையான மரங்களின் சிறப்புக்களைத் தெரிந்து கொள்வதுடன், வளரும் தலைமுறைக்கு
இவற்றை அடையாளம் காட்டுவதும் நம் கடமை!
நல்ல பாடலும், தாவரமும்.
ReplyDeleteஇதைத்தான் இப்படி விற்கிறார்கள்: http://www.botanical-online.com/english/noni_juice.htm
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி. நுணா வகையைச் சேர்ந்த வெண்நுணாவைத் தென்கிழக்காசிய நாடுகளில் நோனி என்றழைக்கிறார்கள். இதிலிருந்து தான் சாறு எடுத்து நோனி ஜூஸ் என்று விற்கிறார்கள். பார்க்க வெண்நுணா விக்கிப்பீடியா இணைப்பு:- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE
DeleteA lot of these trees were present in our land when I was child. Not many these trees are present now! Sad!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி. நீங்கள் சொல்லியிருப்பது போல் இம்மரங்கள் இப்போது மிகவும் அருகிப் போய்விட்டது பெரிய சோகம் தான். நாம் குழந்தையாயிருந்த போது ரசித்த பல விஷயங்கள் இத்தலைமுறைக்கு இல்லையென்று ஆகிவிட்டன. இயற்கையை விட்டு வெகுதூரம் நாம் விலகி வந்து விட்டோம்!
Deleteநல்ல பாடல்....
ReplyDeleteமஞ்சள்நெத்தி மரத்தின் பழம் தின்று இருக்கிறேன்...
எங்கள் ஊரில் நிறைய இருக்கும்...
நுணாவின் பழத்தைத் தின்னலாம் என்று உங்கள் பதிலிலிருந்து தெரிந்து கொண்டேன். மஞ்சணத்தி என்பது மருவி உங்கள் ஊர்ப்பக்கத்தில் மஞ்சள் நெத்தியாகிவிட்டது போலும். கருத்துக்கு மிகவும் நன்றி குமார்!
Deleteவணக்கம் சகோ தகவல் களஞ்சியம் நன்று
ReplyDeleteதமிழ் மணம் 3
வாங்க கில்லர்ஜி சார்! உங்கள் கருத்துக்கும் த ம வாக்குக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
Deleteநுனா மரம் என்ற பெயரை படித்தவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். சிறு வயதில் பார்த்தது, அதன் காய்களை தென்னங்குச்சியில் செருகி வீசினால் வெகு தூரம் போகும். நுனா மரத்தின் விவரங்களுக்கு நன்றி.
ReplyDeleteசிறுவயதில் பார்த்து விளையாடிய மரத்தைப் பற்றிப் படித்தவுடன் அக்காலத்துக்குச் சென்று மீண்டு அனுபவம் ஏற்படவது உண்மை தான். உங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி சம்பத் கல்யாண்!
Deleteசுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! பதிவு சுவாரசியமாக இருப்பதறிந்து மகிழ்ச்சி. கருத்துக்கு மிகவும் நன்றி!
Deleteஅட அழகான மலர்......ம்ம்.ம்ம். ஆனால் நம்மூரில் நித்தியகல்யாணி என்று ஒரு மலர் கண்டிருக்கிறேன்.
ReplyDeleteபார்த்தால் அது போல் உள்ளது. இதுவும் அது தானா இது வேறா தெரியலையே .நன்றி வாழ்த்துக்கள் ...!
வாங்க இனியா! இது நித்ய கல்யாணி இல்லை! அது செடி. இது மரம். வாழ்த்துக்கு மிகவும் நன்றி இனியா!
Deleteமஞ்சணத்தி பற்றி முக்கியமான செய்திகளை அறிந்தேன். நன்றி.
ReplyDeleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி சார்! பதிவு பயனுள்ளதாய் இருப்பதறிந்து மகிழ்ச்சி!
Deleteநுணாவின் பழம் சற்றே இனிப்பும் புளிப்பும் கலந்த மாதிரி இருக்கும்.. மரத்திலும் மஞ்சள் வாசம் மணக்கும்..
ReplyDeleteமைனா, கிளி - மற்றொரு குருவி மஞ்சளாகவே இருக்கும் - அதற்கும் மஞ்சனத்தி என்று செல்லப்பெயர் - இன்னும் சில பறவைகள் - நுணாவின் பழத்துக்கு அடிமைகள்..
கூடுதல் செய்திகள் கண்டு மகிழ்ச்சி..
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..
வாங்க துரை சார்! நான் பழத்தைச் சாப்பிட்டுப்பார்த்ததில்லை. பறவைகளுக்கும் இது பிடித்த பழம் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். நுணா மரம் பற்றிய மேலதிக தகவல்களைத் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. சுதந்திர திருநாள் வாழ்த்துக்கு மீண்டும் நன்றி சார்!
Deleteசங்க இலக்கியத்தில் வரும் நுணா மரம் பற்றி சிறப்பாகவே சொல்லி இருக்கிறீர்கள். ( சிறு பாணாற்றுப் படையிலும் இது பற்றிய குறிப்பு உண்டு) முன்பெல்லாம் கிராமங்களில் வீட்டு கொல்லைப்புற தோட்டங்களில் நுணாமரம் இருக்கும். எங்கள் தாத்தா வீட்டிலும் ஒரு மரம் இருந்தது.
ReplyDeleteவாங்க சார்! சிறுபாணாற்றுப்படையில் வரும் குறிப்பு பற்றித் தெரிந்து கொள்ள ஆவல். நீங்கள் சொல்வது போல் கிராமங்களில் எல்லோருடைய தோட்டங்களிலும் பார்க்கலாம். இப்போது பார்ப்பது அரிதாகிவிட்டது. கருத்துப்பகிர்விக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteநுணா மரத்தைப் பார்த்திருக்கிறேன். மஞ்சணத்தி என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நுணாதான் மஞ்சணத்தி என்று இப்போதுதுதான் அறிகிறேன். நுணா மரத்தின் சிறப்பியல்பால் நுகத்தடி செய்ய பயன்படுகிறது என்ற விவரம் அறிந்து வியந்தேன். நுகத்தடி பாரத்தால் மாடுகளுக்கு சிரமம் ஏற்படாமலிருக்க என்னவொரு அரிய கண்டுபிடிப்பு. இயற்கை சாயம் தயாரிக்கவும் பயன்பட்டது என்பதும் புதிய செய்தி. அறிந்த மரமாயிருந்தும் அதன் சிறப்புகளை அறியாமலிருந்திருக்கிறேன். இன்று தங்கள் பதிவால் அறியமுடிந்தது. மிகவும் நன்றி அக்கா.
ReplyDeleteஆம் கீதா! அண்மையில் தான் நானும் நுணாவும் மஞ்சணத்தியும் ஒன்று எனத் தெரிந்து கொண்டேன். நமக்கு நன்கு பழக்கமான மரங்களின் சிறப்புக்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் ஏராளம். கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா!
Deleteமஞ்சணத்தி மரத்தப்பாரு மதினி போற போக்கப் பாரு ....இந்தப் பாட்டு .....
ReplyDeleteஉங்கள் வருகைக்கு என் முதல் நன்றி. மஞ்சணத்தி பற்றிய நாட்டுப்புறப் பாடலை அறிந்து மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் நன்றி!
Deleteஇதை இலங்கையில் மஞ்சவண்ணா எனக் கூறுவார்கள். ஆயுள் வேத வைத்தியர்கள் இதன் இலை,பட்டையை பயன்படுத்துவர்.
ReplyDeleteஒரு கோவிலுக்கு தேர் செய்ய தமிழகம் இருந்து வந்த ஆச்சாரி, தேருக்குரிய சிற்பங்களை, இந்த மரத்தில் செதுக்குவது வழமை என்றார். செதுக்க இலகுவான வைரம் குறைந்த மரம் என விளக்கினார். உங்கள் நுகத்தடி விடயம் அதை உறுதி செய்கிறது. அரிய தகவல்கள், அருகிவரும் மரம்.
வாங்க யோகன்! நுணா பற்றிய சிறப்புச் செய்திகளைத் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. மஞ்சள் வண்ண மரம் என்பதைச் சுருக்கி மஞ்சவண்ணா என்ற காரணப்பெயர் இலங்கையில் வழங்குவதை அறிந்தேன். தகவல்களுக்கு மிகவும் நன்றி யோகன்!
Deleteஅருமையான பாடலுடன் சிறந்த விளக்கமும் தந்தீர்கள்!
ReplyDeleteஇதற்குமுன் இப்படித் தாவரத்தை நான் அறிந்ததில்லை!
நல்ல பகிர்வு! நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!
த ம 7
வாங்க இளமதி! கிராமங்களில் இது நிறைய இருக்கும். வாழ்த்துக்கும் த ம வாக்குக்கும் மிகவும் நன்றி!
Deleteநுனா மரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற செய்தி வியக்க வைக்கிறது! நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளுக்கு வர நினைத்தும் தள்ளிக் கொண்டே சென்றது! இன்று உங்கள் வலைப்பக்கத்தில் இணைந்துவிட்டேன்! இனி தொடர்வேன்! நன்றி!
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் தளத்தில் இணைந்திருப்பதற்கும் மிகவும் நன்றி சுரேஷ் அவர்களே! தொடர்வதற்கும் மீண்டும் என் நன்றி!
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஅருமையாகச் சொல்லியுள்ளீர்கள், இலக்கியப்பாடலோடு,
நுனாப் பழம் நல்லா இருக்கும். உடலுக்கு நல்லதும் கூட, கெட்ட கொழுப்பு குறையும். எனக்கு அவ்வைக்கு சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என முருகன் கேட்டதற்கு இது தான் நினைவில் வரும். கீழே விழுந்து கிடக்கும் பழங்களை உதி துடைத்து சாப்பிடுவதை வைத்து,,,,,,,,,
நல்ல பகிர்வு, வாழ்த்துககள்.
வாங்க மகி! நுணா பழத்தைச் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? நான் சுவைத்ததில்லை. நல்ல பகிர்வு என்ற பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகி!
ReplyDeleteஅனைவரும் அவரவரது அனுபவத்தையும் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளீர்...நொணா மரம் என்பார்கள் எனதூரில். பூ மணக்கும் ஆனால் பழத்தை ருசிக்கமுடியாது துர்நாற்றம் வீசும்... பறவைகளில் கூட சிலவற்றே உண்ணும்...மற்ற தகவல்கள் உண்மை.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. பேச்சுவழக்கில் நுணா நொணா ஆகியிருக்கும். பழத்தைப் பற்றித் தாங்கள் இங்குச் சொல்லியிருப்பது மிகவும் சரி. நுணா பழத்தை கொண்டு வரச்சொல்லிப் பார்த்தேன். துர்நாற்றம் தான் வீசுகிறது. எந்தெந்த பறவைகள் உண்ணும் என்ற விபரம் தெரிந்தால் பகிருங்கள். நம் மண்ணின் மரங்கள் பற்றிய சரியான தகவல்களை நம் தலைமுறைக்காக ஆவணப்படுத்துவது நம் கடமை. தங்களுக்கு மீண்டும் என் நன்றி!
Deleteஇன்றுதான் தங்களின் இந்தப்பதிவினைப் பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது.
ReplyDeleteஇந்த மரத்தையும் பூக்களையும் ஆங்காங்கே நிறைய நான் பார்த்திருந்தும், இதன் பெயரோ, பயன்களோ, தொன்மையோ, சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செய்திகளோ ஏதும் அறியாமலேயே இருந்துள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள்.
வாங்க கோபு சார்! நுணா மரத்தைப் பற்றிய விபரங்களைத் தாங்கள் அறிந்து கொள்ள என் பதிவு பயன்பட்டிருக்கிறது என்றறிய மகிழ்ச்சி. கருத்துக்கு மிகவும் நன்றி சார்!
Delete