நல்வரவு

வணக்கம் !

Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Saturday, 10 July 2021

கீழடி வைகை நாகரிகம் – உலக நாகரிக வரிசை-1


கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் விளைவாக வெளிச்சத்துக்கு வந்த தமிழரின் தொன்மை வாய்ந்த வைகை நாகரிகத்தின் சிறப்புகளைக் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள நூல். 

மேலும் வாசிக்க...

Saturday, 25 January 2020

ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - நூல் அறிமுகம்



கவிஞர் ஜான்ஸி ராணி
வாசகசாலை பதிப்பகம்
விலை ரூ 80/-
உளவியல் ஆலோசனையில் முதுநிலை பட்டம் பெற்ற, கவிஞர் ஜான்ஸி ராணியின், முதல் கவிதைத்தொகுப்பு இது.

Sunday, 29 December 2019

ரோலக்ஸ் வாட்ச் நாவல் - வாசிப்பனுபவம்




ரோலக்ஸ் வாட்ச் நாவல் -  வாசிப்பனுபவம்
ஆசிரியர் - திரு சரவணன் சந்திரன்

2016 ஆம் ஆண்டு உயிர்மை வெளியிட்டுள்ள ’ரோலக்ஸ் வாட்ச்’ திரு சரவணன் சந்திரன் என்கிற சரவணக்குமார் எழுதிய இரண்டாவது நாவல்.  இவரது முதல் நாவல், ’ஐந்து முதலைகளின் கதை,’ பரவலான வாசக கவனத்தைப் பெற்றது.

நூல் அறிமுகம் - ’மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்’ -


நூல் அறிமுகம் - ’மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்’ -
(பழந்தமிழர் வாழ்வியல் பதிவுகள்)
ஆசிரியர்:-திரு.ந.முருகேசபாண்டியன்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்
சென்னை – 044-26251968

செவ்வியல் இலக்கியம் குறித்து, அறிய விழைவோர்க்குப் பயனுள்ள புத்தகமிது.  மரபு ரீதியிலான விமர்சனத்துக்கு மாற்றாக, பின் நவீனத்துவ விமர்சன அணுகுமுறையில் அமைந்த 13 கட்டுரைகள், இதில் இடம்பெற்றிருக்கின்றன.

Friday, 29 December 2017

என் பார்வையில் - "மனம் சுடும் தோட்டாக்கள்," – கவிதைத் தொகுப்பு



கவிஞர் மு.கீதா (தேவதா தமிழ்)
காகிதம் பதிப்பகம்
(மாற்றுத்திறன் நண்பர்கள் நடத்துவது)
+91 8903279618
விலை ரூ100/-.

2015 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பதிவர் விழா, மிகச்சிறப்பாக நடந்தேற, முக்கிய பங்காற்றியவர்களுள், இந்நூலாசிரியர்  மு.கீதாவும் ஒருவர்.   மனிதநேயமிக்க அரசுப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் இவர், சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது தெருவில் இறங்கிப் போராடும், களப்போராளியும் கூட.  வாரா வாரம் புதுகையில் வீதி இலக்கியச் சந்திப்பு நடத்துவதிலும், சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகிறார்.

Monday, 3 April 2017

என் பார்வையில் - 'சின்னவள் சிரிக்கிறாள்,' - கவிதைத் தொகுப்பு

ஆசிரியர்:- திரு மீரா செல்வகுமார்

காகிதம் பதிப்பகம், நெய்வேலி.
கைபேசி:-  8903279618

பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி, கருக்கொலையோ சிசுக்கொலையோ செய்யும் தமிழ்ச் சமூகத்தில், ‘அந்திவானின் செவ்வொளிக் கீற்று,’ என்றும், சிறு சிரிப்பில், உயிர் ஒளித்து வைக்கும் தேவதையென்றும், நூல்முழுக்க மகளின் புகழ் பாடும், இது போன்றதொரு  கவிதைத் தொகுப்பு, ஏற்கெனவே தமிழில் வெளியாகியிருக்கிறதா எனத் தெரியவில்லை. ஏனெனில், நான் படித்த கவிதை நூல்கள் மிகச்சிலவே.

தந்தைக்கு மகள் மீதான அபரிமித பாசம், பல கவிதைகளில் உணர்ச்சிப் பிரவாகமாக, அடிமனதின் ஆழத்திலிருந்து, ஊற்றெடுத்துப் பொங்கிப் பாய்கின்றது.

Friday, 24 March 2017

என் பார்வையில் - 'பாட்டன் காட்டைத் தேடி,' கவிதைத்தொகுப்பு

அமெரிக்க வாழ் கவிஞர் கிரேஸ் பிரதிபாவின், இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. அண்மையில் புஸ்தகா டிஜிட்டல் மீடியா மின்னூலாக வெளியிட்டுள்ளது. இவருடைய முதல் நூல்:- துளிர்விடும் விதைகள்.

இவரின் வலைப்பூ, தேன்மதுரத் தமிழ்  சங்கத் தமிழிலக்கியத்தை, ஆங்கில மொழியாக்கம் செய்யும் அரும்பணியிலும், ஈடுபட்டிருக்கிறார்.

Friday, 10 March 2017

என் பார்வையில் – ‘எங்கெங்கும்.. எப்போதும்…என்னோடு,’ (சிறுகதைத் தொகுப்பு)



ஆசிரியர்:- திரு. வை. கோபாலகிருஷ்ணன்.
மணிமேகலைப் பிரசுரம்.

திரு கோபு சாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான இந்நூலில், 15 கதைகள் உள்ளன.  ஏற்கெனவே அவருடைய இரு நூல்கள் பற்றி, எழுதியிருக்கிறேன். 

அவற்றுக்கான இணைப்புகள்:-

‘எங்கெங்கும்..எப்போதும்…என்னோடு,’ என்ற கதையில் உடல் எடையைக் குறைக்க, டாக்டரின் அறிவுரைப்படி நடைபயணம் மேற்கொள்பவரின் செய்கைகள், நகைச்சுவை இழையோட, நேர்முக வர்ணனையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

Saturday, 25 February 2017

என் பார்வையில் - வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் (சிறுகதைத் தொகுப்பு)



ஆசிரியர்:- திரு. வை.கோபாலகிருஷ்ணன்
வெளியீடு:- திருவரசு புத்தக நிலையம்

திரு வை.கோபு சாரின் இரண்டாவது தொகுப்பான இதில், 14 சிறுகதைகள் உள்ளன.

Thursday, 23 February 2017

என் பார்வையில்- தாயுமானவள் (சிறுகதைத் தொகுப்பு)


ஆசிரியர் – திரு வை.கோபாலகிருஷ்ணன்
வானதி பதிப்பகம் – சென்னை
விலை ரூ 45/-

கோபு சார் என்றழைக்கப்படும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வலையுலகில் மிகவும் பிரபலமானவர்.  பத்து மாதங்கள், வெற்றிகரமாக சிறுகதை விமர்சனப் போட்டி நடத்திப் பரிசு என்ற பெயரில், ஓய்வூதியப் பணத்தை வாரியிறைத்துப் பதிவர்களின், விமர்சனத் திறமையை வெளிக் கொணர்ந்து, பட்டை தீட்டியவர். 

Thursday, 16 February 2017

என் பார்வையில் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே'



ஆசிரியர்:- கவிஞர் நா.முத்துநிலவன்
வெளியீடு:- அகரம், தஞ்சாவூர்.

பல்வேறு காலங்களில் தினமணி, ஜனசக்தி முதலிய நாளிதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே, இந்நூல்.

மாணவர்களின் பாட்டு, ஓவியம், பேச்சு, எழுத்து, குழுவாகச் செயல்படுவது முதலிய பன்முகத் திறமைகளுக்கு மதிப்பளிக்காது, மதிப்பெண் ஒன்றை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு, அவர்களின் திறமையை மதிப்பீடு செய்யும், இக்காலக் கல்வியின் அவல நிலையையும், மாணவர்களின் மீது வன்முறையைப் பிரயோகித்து, அதிக மதிப்பெண் எடுக்க வைக்கத் தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனத்தையும், கடந்த ஆண்டு, வெளியான ‘அப்பா’ திரைப்படம், வெளிச்சம் போட்டுக்காட்டி அதிர்வலையை ஏற்படுத்தியது. 

Friday, 7 October 2016

என் பார்வையில் - துயரங்களின் பின்வாசல் - கவிதை நூல்


ஆசிரியர்;- உமா மோகன்
வெளியீடு:- வெர்சோ பேஜஸ், புதுச்சேரி. செல் - 9894660669
விலை:-ரூ 80/-
பிற கவிதை நூல்கள்:- டார்வின் படிக்காத குருவி
                                          ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்
                       
புதுவை அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் உமாமோகன், என் தோழியும், குடும்ப நண்பருமாவார்.

இந்நூலை இவர் பரிசளித்து, நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டன.  இப்போது தான், இதை வாசிக்கும் வாய்ப்புக்  கிட்டியது.  சூட்டோடு சூடாக நான் ரசித்தவற்றை உங்களிடம் பகிர விரும்பியே இப்பதிவு.

Saturday, 12 March 2016

ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை – நூல் அறிமுகம்

ஆசிரியர்:- ஜீவி
வெளியீடு:- சந்தியா பதிப்பகம், சென்னை-83
தொலைபேசி:-044-24896979
பக்கம்:- 264  விலை – ரூ 225/-

பூவனம் ஜீவி அவர்கள் எழுதி வெளியாகியிருக்கும் மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்,  'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை,' என்ற புத்தகத்தை அண்மையில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

திரு ஜீவி அவர்களைப் பதிவுலகம் நன்கறியும்.  இதுவரை நான்கு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.  

திரு வை.கோபு சார், பத்து மாதம் பதிவுலகில் வெகு விமரிசையாக நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டியில் நடுவராக இருந்து கடமையுணர்வோடும், பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.

மறக்க முடியாத தமிழ் எழுத்துலகில், மணிக்கொடி காலத்தில் கோலோச்சியவர்கள் முதல், இன்றைய எஸ்.ரா வரை 37 எழுத்தாளுமைகளைப் பற்றியும், தமிழிலக்கியத்துக்கு அவர்தம் கொடை பற்றியும் பேசும் நூல் இது.

இப்பட்டியலில் கல்கி, நீல பத்மநாபன், கி.ரா., பிரபஞ்சன் போன்றோர் விடுபட்டது ஏமாற்றமளிக்கிறது என்றாலும், எழுத்தாளர்களின் எண்ணிக்கையை 37 ஆகக் குறைத்ததன் காரணம், நூலின் பக்க எண்ணிக்கை நெருக்கடியே என ஆசிரியர், தம் முன்னுரையில் குறிப்பிடுவது, ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிருக்கிறது.    

இதுநாள்வரை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி, இது போன்றதொரு  தொகுப்பு நூல் வெளியாகியிருப்பதாகத் தெரியவில்லை.  என் ஐயம் உண்மையாக இருக்குமானால், இவ்வரிசையில் முதல் நூல் என்ற பெருமையை இது பெறுகிறது.

வேருக்கு நீர் ஊற்றிச் செழிக்கச் செய்தவர்கள் பிறந்த மண், அவர்தம் இயற்பெயர், வாழ்க்கைச்சூழல், இலக்கியத்துக்கு அவராற்றிய அரும்பணி ஆகியவை குறித்து, நம் இளைய தலைமுறையினர் அறியும்வண்ணம் ஆவணப்படுத்துவது, நம் தலையாய கடமையல்லவா?  இப்பணியை இந்நூல் திறம்படவே செய்கிறது.  முக்கியமாகத் தமிழிலக்கிய வரலாறு எழுத, இது பெரிதும் துணைபுரியும். 

    வாசித்து முடித்ததும், என் மனதில் பட்டவை:-

தமிழில் நிறைய வாசித்திருக்கிறோம் என்று இறுமாந்திருந்த எனக்கு, இன்னும் நான் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்ற உண்மை முகத்தில் அறைகிறது.

ஆசிரியரின் பரந்து பட்ட வாசிப்பும், இந்நூலை எழுத எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தைகளும், என்னைப் பிரமிக்க வைத்தன. இளவயதில் வாசித்த பலவற்றை, மீள் வாசிப்பும் செய்திருப்பதால், பாத்திரங்களின் பெயர்களை ஒன்றுவிடாமல் பட்டியலிடமுடிகிறது.

மேம்பட்ட வாசிப்புத் திறனின் பயனாய், எழுத்தாளரின் மிகச்சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து, நமக்கு அறிமுகம் செய்வதோடு, முக்கியமான பகுதிகளை ஆங்காங்கே கொடுத்து, நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று, தாம் ரசித்து மகிழ்ந்தவற்றை, நமக்கு அடையாளம் காட்டவும் ஆசிரியர் தவறவில்லை. ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!’

இலக்கிய கர்த்தாக்களின் ஆக்கங்களைப் பேசும் நூல் என்பதால் ஆசிரியரும், இலக்கியத்தரமான நடையைக் கையாண்டிருக்கிறார்.  தொடர்ந்த வாசிப்பு காரணமாக பெற்ற மேம்பட்ட ரசனையோடு, எழுத்தாளராயுமிருப்பதால், இது சாத்தியமாயிருக்கிறது.  என்னைப் பெரிதும் கவர்ந்த விஷயம் இது.

எழுத்தாளர் ஒவ்வொருவரின் அறிமுகமும், ஒவ்வொரு விதம்;  ஒன்று போல் இன்னொன்றில்லை என்பதால், அடுத்தடுத்து வாசிக்கும்போது நமக்குச் சலிப்பு ஏற்படவில்லை.  சொல்லப்போனால், இவர் அறிமுகம் செய்யும் விதம், மிக சுவாரசியமாயிருக்கிறது. 

எடுத்துக்காட்டுக்கு நான் ரசித்தவற்றில் சில:-

(வாழ்க்கையின் தரிசனத்தில் நுட்பமாக நெஞ்சில் மின்னலென மின்னிவிட்டுப் போகும் உணர்வைப் பறிகொடுத்துவிடாமல் பொத்திக் காப்பாற்றி, அவற்றிற்குச் சிறுகதை சட்டையிட்டு உலாவவிட்டிருக்கிறார்.) கு.ப. ரா – பக் 18

(ஆலாபனை, மேல்கீழ் சஞ்சாரம் என்று விஸ்தாரமாக பாடத்தொடங்கிய பாடகர், சரணத்துக்கு வரும் போது அவசர அவசரமாக முடித்துக்கொண்டது மாதிரியான உணர்வு.  ஆனால் அவர் தரும் அந்த முடிவும், பளீரென்று மின்னல் வெட்டாய் நிகழ்ந்து, இதற்கு மேல் விவரிக்க என்ன இருக்கிறது என்கிற உணர்வையும் தோற்றுவிக்கும்) புதுமைபித்தன் பக் 30 

(தரிசித்த தரிசன தத்ரூபத்தின் விகசிப்பு, அப்படியே அதே வழிசலுடன்…சிந்தாமல், சிதறாமல், சிந்தா நதியாய்… அதே துள்ளலுடன், அதே துவளலுடன், அதே நெகிழ்தல், குழைதலுடன், அதே பரவசத்துடன், அதே சூட்டோடு பரிமாறியிருக்கிறார்.  தன் நெஞ்சிலிருந்து பிறர் நெஞ்சுக்குக் கூடு விட்டுக் கூடு பாயச் செய்திருக்கிறார்) லா.ச.ரா (பக் 55).

'புதுப்பாதை வகுத்த புதுமை பித்தன்', 'நினைவு நதியில் வண்ணதாசன்', 'கொஞ்சு தமிழ் நாஞ்சில் நாடன்,' 'எண்ண ஓவியன் வண்ணநிலவன்,' 'எழுத்துப்பயணி எஸ்.ரா.' என அழகிய கவிதையாய்த் தலைப்புகள்!.

புதிதாக நான் தெரிந்து கொண்ட செய்திகள் ஏராளம்; அவற்றுள்

இளவயதிலேயே கணவனை இழந்த சகோதரிக்கு, அந்நாளிலேயே மறுமணம் செய்து வைத்த புரட்சியாளர் கு.ப.ரா.  சகோதரியும் புகழ் பெற்ற எழுத்தாளர்;

புரட்சிக்கவிஞரின் புகழ் பெற்ற, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்,’ என்ற கவிதையை, முதன்முதலில் அச்சுக்கோர்த்தவர் எழுத்தாளர் விந்தன்,

எனக்குத் தெரியப்படுத்தாமல், என் கதையில் எந்தப் பகுதியையும் நீக்கக்கூடாது என்று ஜெயகாந்தன் போட்ட நிபந்தனைக்கு,  ஒப்புக்கொண்ட விகடன்!

வண்ணதாசனின் இன்னொரு பெயர் கல்யாண்ஜி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளினூடேயான ஒரு கழுகு பார்வையே, இதன் பக்கங்களாகி இருப்பதாக ஆசிரியர் முன்னுரையில் கூறியிருப்பது மிகச் சரி. 

நமக்குத் தெரியாத, நாம் தவற விட்ட நல்ல பல ஆக்கங்களை,  அறிமுகம் செய்து, அவற்றை எப்படியாவது ஒரு முறை வாசித்துவிட வேண்டும் என்ற உணர்வை, நமக்கு ஏற்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். 

தமிழில் இது போன்ற தரமான நூல்கள், அடுத்தடுத்து வெளிவர நாம் வரவேற்பு நல்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

வாசிப்பு சுகானுபவத்தை வாரி வழங்கிய ஆசிரியருக்கு நன்றி!

நன்றியுடன்,

ஞா. கலையரசி

Friday, 21 August 2015

நூல் அறிமுகம் - பல்லுயிரியம்


ஆசிரியர் :- ச.முகமது அலி
வெளியீடு:-  வாசல்,
40D/3, முதல் தெரு , வசந்த நகர், மதுரை – 625003.
முதற்பதிப்பு:- மே 2010 இரண்டாவது பதிப்பு:- ஏப்ரல் 2013
விலை ரூ.140/-.

இயற்கையின் மீது அளவிலா நேசமும், அக்கறையும் கொண்ட திரு ச.முகமது அலி அவர்கள், காட்டுயிர் துறையில் தமிழகத்தின்  முதன்மையான எழுத்தாளரும், முக்கிய ஆளுமையும் ஆவார்.  22 ஆண்டுகளாகத் தமிழில் வெளிவரும், ஒரே மாத இதழான ‘காட்டுயிர்’ இதழின் ஆசிரியரும் கூட. 
 
மொத்தம் 504 கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்பு நூல் இது. காட்டுயிர் துறையில் கள ஆய்வு, 30 ஆண்டுகளாகத் தொடர்ந்த தேடல்,  நேரடி அனுபவம், பகுத்தறிவு  ஆகியவற்றின் உதவி கொண்டு ஆசிரியர் அளித்திருக்கும் விடைகள்,  நம் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாக அகற்றி, இயற்கையைச் சரியான கோணத்தில், நம்பகத்தன்மையுடன் புரிந்து கொள்ள உதவுகின்றன.  

இவரின் பிற நூல்கள்:-
1.   நெருப்புக்குழியில் குருவி
2.   பாம்பு என்றால்
3.   பறவையியல் அறிஞர் சலீம் அலி
4.   யானைகள்:- அழியும் பேருயிர்
5.   இயற்கை:செய்திகள், சிந்தனைகள்
6.   வட்டமிடும் கழுகு


கேள்வி:-  பல்லுயிரியம் (BIO DIVERSITY) என்றால் என்ன?
பதில்:_ இன்றுவரை பூமியில் கண்டறியப்பட்டு, பெயரிடப்பட்ட சுமார் 8 லட்சம் உயிரினங்களும், பயிரினங்களும் நம்முடன் வாழும் வளர்ப்பு மற்றும் செல்லப்பிராணிகளோடு, மனிதரும் சேர்ந்த பெரும் உயிர்ச் சூழலமைப்பே பல்லுயிரியம் ஆகும்.
இது போல் வினா விடை பாணியில் அமைந்துள்ள இந்நூலில், வாசகர்களும், நேயர்களும் பல சமயங்களில் கேட்ட கேள்விகளுக்கு மெல்லிய நகைச்சுவை இழையோட, பொட்டில் அடித்தாற் போல் இவர் கூறியிருக்கும் பதில்கள், ரசிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கின்றன.  இயற்கையைப் பாதுகாக்க ஒருவர் விரும்புகிறார் என்றால், அவர் செய்ய வேண்டிய முதல் வேலை, எல்லாவகையான மூடநம்பிக்கையையும் விட்டொழிக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.    

காட்டுகள்:-
1.   கேள்வி:- புலியின் மாமிசத்தைச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்கிறார்களே?
பதில்:- புலியின் மாமிசம் மட்டுமல்ல, எதனுடையை மாமிசமும் ஆண்மையைப் பெருக்காது.  கொலஸ்ட்ராலைத் தான் பெருக்கும்.  உலகிலேயே மக்கள் தொகையில் விஞ்சி நிற்கும், இந்தியாவுக்கு இன்னுமெதற்கு ஆண்மை?
2.   கேள்வி:- மயில் ஒருவரது கண்ணைக் கொத்திவிட்டால், மயில் ரத்தத்தை எடுத்துத் தேய்ந்தால் சரியாகிவிடுமாமே!
பதில்:- ஆபத்தான பொய்.  உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.  மருத்துவ மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். 
3.   பாம்புக்கடிக்கு மருந்துண்டா?  நாட்டு வைத்தியத்தில் குணமாகுமா?
ஊசி மருந்து நிச்சயமுண்டு.  ஆனால் நாட்டு வைத்திய முறைகள் ‘பேரின்பலோகப் பயணத்திற்கே’ சீட்டு வழங்கும்…………...”.

பாமர மக்களைப் போலவே, ‘மெத்தப்’ படித்த இலக்கியவாதிகளும் இயற்கையைப் பற்றிய சரியான புரிதலின்றி, மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் என்கிற போது, அத்தகைய கேள்விகளுக்குச் சற்று காட்டமாகவே பதிலிறுக்கிறார் ஆசிரியர்.  
காட்டு:-
“சிங்கத்தின் முகத்தை ஈக்கள் மொய்க்காது என வைரமுத்து ஒரு கவிதையில் குறிப்பிடுகிறாரே, உண்மையா?”
“சிங்கத்தின் முகமாகட்டும், புலியின் பொச்சாகட்டும், ஈக்கள், கொசுக்கள் மொய்த்துப் பிடுங்குவது சர்வ சாதாரணம்.  நமது ஆக்கங்கெட்ட கவிஞர்களை நினைத்தால், எரிச்சல் தான் ஏற்படுகின்றது.  முதலில் இவர்கள் நமது 1000 ஆண்டுகட்கு முந்தைய தமிழ் இலக்கியத்தைக் கூர்ந்து கவனித்து, எதார்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.”

இக்காலத்தில் இயற்கையைப் பாதுகாத்தல், இயற்கையோடியைந்து வாழ்தல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவை குறித்து எல்லோரும் வாய்கிழியப் பேசினாலும், இயற்கைவளம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அறிந்தவர்கள், நூற்றுக்கு இரண்டு பேர் மட்டுமே என்கிறார் ஆசிரியர்,
இதற்கு இவர் கூறும் காரணங்கள்:-
1.   ரசனையற்ற மூட நம்பிக்கை நிறைந்த மக்கள்
2.   இயற்கை பற்றிய புரிதல் சிறிதுமின்றி, சுயமேதாவிலாசத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும், ‘மெத்த’ படித்த இலக்கியவாதிகள்
3.   எந்தத் தொலைநோக்கு திட்டமும் இல்லாத அரசுகள்.
“நம் நாட்டின் பெரிய அளவிலான இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதி மலைச்சாரலிலிருந்து மழை நீரால் ஆற்றில் வரும் வளமான வண்டல் மண்!; அடுத்தது மணல்! வருங்காலம் கொடுமையானது!” என்று இவர் சொல்லியிருப்பதைப் படிக்கும் போது, அதிர்ச்சியாக இருக்கின்றது.
ஒரு நாட்டின் மண்வளம் அழிகிறதென்றால், அந்நாடே அழிகிறதென்று பொருள் என்கிறார், பிரான்கிலின் ரூஸ்வெல்ட்.   
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

மரம் வெட்டிய குற்றச்சாட்டுக்காக 1985-86 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 25114 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.  இதில் 397 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர், என்ற இன்னொரு தகவல், அதிர்ச்சியை அதிகப்படுத்தி வேதனையளிப்பதாக உள்ளது. 

இந்நூலில் அதிசய உயிரினங்கள் பற்றிய பல வினோதமான, சுவையான தகவல்களுக்கும் பஞ்சமில்லை
காட்டுகள்:-
1.   பீவர் (Beaver) எனும் பெருச்சாளி முதல்தரமான அணைக்கட்டி. மண்வெட்டி போன்ற வெட்டுப்பற்களால் மரங்களை வெட்டி காட்டாறு ஓடை குறுக்கே நட்டு நீரைத் தேக்குகின்றது. இதன் ஓரத்தில் தரையில் வளைதோண்டி கூடமைக்கும்.  நீண்ட பொந்துகளில் பல அறைகள் இருப்பதால் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது மேலும் நீர்நிலைகள் பனியால் மூடப்படும் போதும், உள்ளே இதமாக இருக்கும். 
2.   பார்பாய்ஸ் (Porpoise) என்பது பெருங்கடல்வாழ் சிறு திமிங்கலம். ஏதாவது ஒன்றுக்குக் காயம்பட்டு நீந்த முடியவில்லையெனில் வேறு இரு தோழர்கள் இரு துடுப்புத் தாங்கலாக தூக்கிவந்து கடல்மட்டத்தின் மேலே காற்றைச் சுவாசிக்கச் செய்து உயிர் பிழைக்க வைக்கின்றன.  சிலசமயம் யானை & எறும்பு தங்களுக்குள் உதவி செய்து கொள்கின்றன.

ரீங்காரச் சிட்டு பற்றியும் (கேள்வி எண் 147, 326, 436) சீட்டா & சிவிங்கிப் புலி பற்றியும்   (274, 482) கூறியது கூறலைத் தவிர்த்திருக்க வேண்டும்.

“டிஸ்கவரி சேனலை ரசிப்பவர்களை, நம் கண்ணெதிரே உள்ள இயற்கையையும், நம்மைச் சுற்றியுள்ள காட்டுயிர்களையும் நேசிக்க அழைக்கும் புத்தகமிது; இயற்கையியலாளர் முகமது அலி அவர்களின்  உணர்வு பூர்வமான அக்கறையிலிருந்து உருவான நூல்,” என்று இதன் முன்னுரையில் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மையே.

(08/07/2015 நான்கு பெண்கள் தளத்தில் வெளியான என் கட்டுரை)  

Monday, 6 July 2015

நூல் அறிமுகம்:- வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு


நூல் அறிமுகம்:- வண்ணத்துப்பூச்சிகள்
அறிமுகக் கையேடு
ஆசிரியர்:- டாக்டர் ஆர்.பானுமதி
க்ரியா வெளியீடு
முதற் பதிப்பு – ஜனவரி 2015 
விலை ரூ.295.

வண்ணத்துப்பூச்சியைப் பற்றித் தமிழில் வெளியாகும் முதல் கையேடு என்ற சிறப்பைப் பெறும் நூலிது.

ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கண்டவுடன்,, அதன் இனம், குடும்பம், பண்பு, ஆங்கிலப்பெயர் ஆகியவற்றை அறிந்து கொள்ள, இந்நூல் பெரிதும் உதவுகிறது.  களத்திற்கு எடுத்துச் செல்ல வசதியாக, இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில் 90 இனங்களைப் பற்றிய விபரங்கள், நிழற்பட வல்லுநர்கள் எடுத்த 230 தெளிவான அழகான படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. 

பக்கத்திற்கொன்றாக வண்ணத்துப்பூச்சியின் படம் வெளியிட்டு அதைப் பற்றிய குறிப்புகள், புழுக்களுக்கு உணவாகும் தாவரங்கள் போன்ற விபரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.  என்றென்றும் குறிப்புப் பெட்டகமாகத் (reference book) நம்முடனே இருக்க வேண்டிய நூல் இது. 

இது நாள் வரையிலும், இப்பூச்சியினத்தின் அனைத்து வகைகளையும் வண்ணத்துப்பூச்சி என்ற ஒற்றை சொல்லிலேயே அழைத்து வந்திருக்கிறோம்.  ஒவ்வொன்றையும் சரியான முறையில் அடையாளங் காண தனித்தனிப் பெயர் இல்லை என்பது பெரிய குறை. 

இக்குறையைப் போக்கும் வண்ணம், பூச்சியின் இறக்கை நிறம், அதன் புழுக்களுக்கு உணவாகும் தாவரம், போன்றவற்றின் அடிப்படையில், கள ஆய்வாளர்களின் உதவி கொண்டு, ஒவ்வொன்றுக்கும் அழகிய தமிழில்  பெயர் சூட்டுவிழா நடத்தியிருக்கிறார் ஆசிரியர்!

வண்ணத்துப்பூச்சியைப் போலவே பெயர்களும் அழகாக இருக்கின்றன!
காட்டுக்குச் சில:-

நாமத்தாவி
வெளிர்சிவப்பு வெள்ளையன்
செஞ்சிறகன்
சாம்பல் வசீகரன்
பொன்னழகி
கத்திவால் அழகி
பறவைகளைக் கூர்ந்து கவனிப்பது போலவே, வண்ணத்துப்பூச்சிகளையும் கவனிப்பது பயனுள்ள பொழுது போக்கு.  இந்நூலில் நான் அறிந்து கொண்ட சுவாரசியமான சில தகவல்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்:-


  •   வண்ணத்துப்பூச்சி லிபிடோப்டெரா (Lepidoptera) என்ற வரிசையைச்     சேர்ந்த பூச்சியினம்;  இவ்வரிசையைச் சேர்ந்த இன்னொன்று அந்திப்பூச்சி (Moth).
  •  பருவகால மாற்றங்கள் காரணமாக, சில இனங்களின் இறக்கையில் உள்ள குறிகளில் மாற்றம் ஏற்படும்.
  • குளிர் இரத்த இனத்தைச் (cold blooded) சேர்ந்தது என்பதால், வெயிலில் குளிர் காயும்.
  • சுற்றுப்புற தட்ப வெப்ப நிலைக்கேற்ப, பறவைகள் போல் வலசை (migration) போகும்.
  • ஆயுட்காலம்: சிறிய பூச்சி:- ஒரு வாரம்.  பெரியது:-எட்டு மாதங்கள். 
  • ஆண்பூச்சிக்கு இனப்பெருக்கக் காலத்துக்குத் தேவையான உப்பு, புரதம்,  தாது பொருட்கள் ஆகியவற்றுக்காக பறவைகளின் எச்சம், விலங்குகளின் சிறுநீர், சாணம் ஆகியவற்றிலிருந்து நீர் உறிஞ்சும்.
  • உலகில் சுமார் 18000 இனங்கள் இருக்கின்றன.  இந்தியாவில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 1800 இனங்கள் உள்ளன.

மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவி செய்யும் வண்ணத்துப்பூச்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள், இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் விளைவால் அழிந்துவிட்டன;  பல அழியுந்தருவாயில் உள்ளன..

மண்புழு போல விவசாயியின் நண்பனான இப்பூச்சியினத்தைப் பாதுகாக்க இந்நூல் சொல்லும் சில வழிமுறைகள்:-

  • வண்ணத்துப்பூச்சியைப் பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவரிடையே
  விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • புழுக்களுக்கு  உணவாகும் தாவரங்களைத் தோட்டம், வயல்வெளிகள், பூங்காக்களில் பயிரிடுதல்.
  • இவற்றுக்கான பூங்காக்கள் அமைத்தல்
  • இதன் வாழ்க்கை சுழற்சியை (life cycle) கள ஆய்வாக, மாணவர்க்கு அறிமுகப்படுத்துதல்.


பள்ளிப் போட்டிகளில் மாணவர்க்குப் பரிசளிக்க உகந்த நூல் இது.  குழந்தைகளின் பிறந்த நாளின் போது, பொம்மைக்குப் பதிலாக இதனைப் பரிசளித்து, இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்.

(நான்கு பெண்கள் தளத்தில் 17/06/2015 வெளியானது)

Wednesday, 13 May 2015

வானில் பறக்கும் புள்ளெலாம் - நூல் அறிமுகம்



ஆசிரியர் சு.தியடோர் பாஸ்கரன்
முதற்பதிப்பு:- டிசம்பர் 2011
இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2014
உயிர்மை வெளியீடு.

காட்டுயிர் துறையில் முக்கிய பங்களைப்பைச் செய்து வரும் திரு.சு.தியடோர் பாஸ்கரன் உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன்   ஆகிய இதழ்களில் எழுதிய சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,’ (2006), ‘தாமரை பூத்த தடாகம்,’ (2008), ஆகியவை சுற்றுச்சூழல் குறித்து, இவர் ஏற்கெனவே எழுதிய நூல்கள். 

இதில் இயற்கை சமன்நிலையைக் காக்க காடுகள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.  சுற்றுச்சூழல் சட்டங்கள், சூழலியல் கல்வி ஆகிய தலைப்புகளில் அமைந்துள்ள கட்டுரைகள், இவை பற்றிக் கூடுதலாக நாம் அறிந்து கொள்ள உதவுகின்றன.  . 

எளிமையான நடையில், இடையிடையே இவர் சொல்லிப் போகும் பல சுவாரசியமான தகவல்கள், வாசிப்பின் சுவையைக் கூட்டுகின்றன. 

நான் புதிதாகத் தெரிந்து கொண்ட பல்வேறு செய்திகளுள், சிலவற்றை மட்டும் இங்கே பகிர்கிறேன்:-

·         சுற்றுச்சூழல் சமன்நிலையிலிருக்க,  மொத்த பரப்பளவில் 33% காடு இருக்கவேண்டும்; ஆனால் தமிழ்நாட்டு நிலப்பரப்பில் 17.5% தான் காடு.

·         குஜராத்தின் நீண்ட வளைந்த கொம்புகளையுடைய காங்ரேஜ் இனம் தான் சிந்து சமவெளி சித்திர முத்திரையிலுள்ள காளை என அடையாளம் காணப்பட்டுள்ளது.  அவ்வளவு தொன்மையான மரபினங்களைக் கொண்டவை இந்திய இனங்கள்!

·         உயரம் குறைவான மணிப்புரி குதிரைகள் தாம் முதன்முதலில் போலோ விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டன.  வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூரில் ‘புலூ’ என்றறியப்பட்ட பாரம்பரிய விளையாட்டு தான் ‘போலோ’வாக மேலை நாடுகளுக்குப் பரவியது.
 
·         நிக்கோபாரில் மெகபோட் (Megapode) என்னும் அரியவகை தரைப்பறவை,  நிலத்தில் முட்டையிட்டு உலர்ந்த இலைகளால் ஒரு மேடு போல் மூடிவிடும்.  அடை காக்காமல் இலைக்குவிப்பை குறைத்தும், அதிகப்படுத்தியும் இன்குபேட்டர் போல இயக்கி வெப்பநிலையைச் சீராக்கி குஞ்சுகளைப் பொரிக்க வைக்கும்.  இதனை உயிரியலாளர் தெர்மோமீட்டர் பறவை (Thermometer bird) என்றழைக்கின்றனர்.

·         புதிய உயிரினங்கள் தோன்றுவது தீவுகளில் தான்.  சார்லஸ் டார்வின் பயணித்த கப்பல் தென்னமெரிக்காவுக்கு அருகில் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கலப்பாகாஸ் தீவுகளை அடைந்த போது, வேறெங்கும் காணமுடியாத பறவைகளும், கடல் ஓணான்களும், ராட்சத நிலத்தாமைகளும் இருப்பதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்.  அங்கிருந்த குருவிகளின் அலகுகளைக் கவனித்த போது தான் பரிணாமக்கோட்பாட்டின் தடயம் அவருக்குக் கிடைத்தது.  இதன் அடிப்படையில் பிராணிகள் உருவாகும் விதம் பற்றியும் மனிதனின் பரிணாமவழி தோற்றுவாய் பற்றியும் ORIGIN OF SPECIES நூலை எழுதி, அறிவுலகை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டார்   மத நம்பிக்கைகளின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது.

·         பள்ளியின் மதிய உணவு காண்டிராக்ட்காரர்கள், பல்லி விழுந்து உணவு கெட்டு விட்டதென்று திருப்பிப் பதில் சொல்ல முடியாத பல்லி மேல் பழி சுமத்துகிறார்கள்.  பல்லிக்குச் சிறிது கூட நஞ்சு கிடையாது.  பெரிய பல்லியான உடும்புக்கறியை, இன்றும் இருளர்கள் உண்கிறார்கள்.

·         நீரையும் பாலையும் பிரிக்கும் அன்னம், மழை நீரை உண்டு வாழும் சாதகப்புள் இவையிரண்டும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட தொன்மவழி விவரங்களே.  பட்டைத் தலை வாத்து (BARRED HEADED GOOSE) தான் அன்னம் என்றழைக்கப்பட்டது என்பது என் யூகம்.  .   இது உயிரியல் ரீதியாக ஸ்வான் (SWAN) இனத்தைச் சேர்ந்தது.

·         தற்காலத்தில் பறவைகளின் கால்களில் வளையத்தைப் பொருத்துவதற்குப் பதிலாக சிறு ‘சிப்’ (Chip) ஒன்றை உடலில் பொருத்தி விண்கோள் வழியாக வலசை போகும் பாதையையும் வேகத்தையும் கணக்கிடுகிறார்கள்.  வலசை போகும் பாதையை ‘வான்வழி’(Skyway) என்கிறார்கள்.  இந்த விண்பாதை கடலோரமாகவே அமைந்திருக்கும்.  சமுத்திரத்தைக் கடப்பதைப் பறவைகள் முடிந்தவரை தவிர்க்கின்றன.

·         ஒரு முறை பேருள்ளான் என்ற புறா அளவிலான பறவை, வட அமெரிக்காவின் அலாஸ்காவிலிருந்து உலகின் அடுத்த கோடி நியுசிலாந்துக்கு வலசை சென்றது பதிவாகியிருக்கிறது.  17460 கி.மீ தூரத்தை இது 9 நாட்களில் கடந்துள்ளது.  மூன்றே இடங்களில் இரையுண்ணத் தரையிறங்கியது.  நான்காவது கட்டத்தில் 11000 கி.மீ தூரத்தை இரவு பகலாக ஒரே மூச்சில் பறந்து, நியூசிலாந்து மிராண்டா என்ற இடத்தில் பெரிய கூட்டமாகத் தரையிறங்கியது. 


இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பெரும்பாலான வற்றில் தேதியில்லாதது பெருங்குறை.  எடுத்துக்காட்டாக ‘அண்மையில்’ என்ற குறிப்பிருப்பதால், மேலே குறிப்பிட்ட பேருள்ளான் பறவை, இப்படி ஒரே மூச்சில் வலசை போனது எப்போது என்ற விபரத்தை, நம்மால் அறிய முடியவில்லை. 
எனவே பல்வேறு தேதிகளில் எழுதப்படும் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கும் போது, ஒவ்வொன்றிலும் அது எழுதப்பட்ட தேதியைத் தவறாமல் குறிக்க வேண்டும்.   


சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரைகள் என்பதால், இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி, எல்லோருமே வாசிக்க வேண்டிய நூல் என்பது என் கருத்து.


(நான்கு பெண்கள் இணைய இதழில் 27/04/2015 வெளியானது)