நல்வரவு

வணக்கம் !

Monday, 20 April 2020

நெஞ்சு பொறுக்குதில்லையே!நரம்பியல் நிபுணர் டாக்டர் சைமன் அவர்களின் இறப்பு, ஈடு செய்ய முடியாப் பேரிழப்பு!

கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.  இந்தப் பேரிடர் காலத்தில், அவர்களின் இறப்புச் செய்தி தரும் வேதனையைக் காட்டிலும், அப்படி இறந்த மருத்துவர்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் காட்டுமிராண்டித் தனம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.

ஏற்கெனவே இரண்டு மருத்துவர்கள் இறந்த போது நடந்தது போல், டாக்டர் சைமன் உடல் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒரு கூட்டம் சேதப்படுத்தி, ஓட்டுநரைத் தாக்கியிருக்கிறது. 

குடும்பங்களைப் பிரிந்து, தம் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக நோய்வாய்ப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு, நாம் காட்டும் நன்றிக்கடன் இது தானா? போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லையென்றாலும், தொடர்ந்து சேவை செய்து தம் உயிரை இழக்கும் மருத்துவர்கள், நம் கடவுள்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்லவா?

பிரதம மந்திரி சொன்னவுடன், வீட்டில் இருந்து அவர்கள் சேவையைக் கை தட்டி உற்சாகப்படுத்தியதோடு, நம் நன்றியுணர்ச்சி தீர்ந்துவிட்டதா?  போரில் இறக்கும் வீர்ர்களுக்கு மரியாதை செய்வது போல், இவர்கள் உடல்களுக்குக் குண்டுகள் முழங்க, அரசு மரியாதை செய்ய வேண்டாமா?  அரசு மரியாதை கூடச் செய்ய வேண்டாம்; குறைந்த பட்சம் அவர்கள் உடல்களை உரிய மரியாதையோடு அடக்கம் செய்யவாவது, அவர்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டாமா?

வேடிக்கை பார்ப்பதற்காக அரசும், காவல்துறையும்?  இப்படித் தடுப்பவர்கள் மீது உடனடியாகக் குண்டர் சட்டம் பாய வேண்டாமா?   
போரில் கைப்பற்றப்பட்ட எதிரி நாட்டு வீர்ர்களின் உடல்களைக் கூட தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பது காலங்காலமாகக் காப்பாற்றப்படும் அடிப்படை மனித மாண்பு!  அப்படிச் செய்யாவிட்டால் அது போர்க்குற்றமாகக் கருதப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி தானே?  அப்படியிருக்க நம் மக்களுக்காக, தம் உயிரைக் கொடுக்கும் மருத்துவர்களுக்கு எப்படிப்பட்ட நன்றிக்கடன் நாம் செலுத்த வேண்டும்? 

“அடிப்படை மனித மாண்பைக் கூட இழந்துவிட்ட இந்த நன்றிகெட்ட மக்களுக்கு நாங்கள் எங்கள் உயிரைப் பணயம் வைக்க மாட்டோம்;  நாங்கள் யாரும் வேலைக்கு வர மாட்டோம்,” என அவர்கள் போராட ஆரம்பித்தால் நம் நிலைமை என்னவாகும்?

‘புகழ் பெற்ற மருத்துவர் சைமன் அவர்களுக்கே, இந்த நிலைமையென்றால், நாளைக்கு என் கதி என்ன?’ என இப்போது பணியிலிருக்கும் மருத்துவர்கள் யோசிக்க ஆரம்பித்தால், நிலைமை படுமோசமாகும் என்பதை அரசும் காவல்துறையும் உணர்ந்து உரிய நடவடிக்கை உடனே எடுக்கவேண்டும்.

இங்கிலாந்தில் மருத்துவர்களின் வீடுகளுக்கு முன்னால், யார் யாரோ முகம் தெரியாதவர்கள், வந்து பழக்கூடைகளையும், சாப்பாட்டுப் பொருட்களையும் வைத்துச் செல்கிறார்களாம்.  “நீங்கள் குடும்பத்தை மறந்து நாட்டுக்காக உழைக்கிறீர்கள்; உங்கள் குடும்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,” என்று தங்கள் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்களாம்.

இங்கோ அவர்கள் உடலை உரிய மரியாதையோடு அடக்கம் செய்யக் கூடக் கலவரம் செய்கிறார்கள்!   

நெஞ்சு பொறுக்குதில்லையே! .   

Saturday, 25 January 2020

ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - நூல் அறிமுகம்கவிஞர் ஜான்ஸி ராணி
வாசகசாலை பதிப்பகம்
விலை ரூ 80/-
உளவியல் ஆலோசனையில் முதுநிலை பட்டம் பெற்ற, கவிஞர் ஜான்ஸி ராணியின், முதல் கவிதைத்தொகுப்பு இது.

Monday, 6 January 2020

சஞ்சாரம் நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன் - வாசிப்பனுபவம்சஞ்சாரம் நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம் விலை ரூ 340/-

பக்கிரி, ரத்தினம் என்ற இரு நாதஸ்வரக் கலைஞர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப முடியாச் சூழ்நிலையில், ஊர் ஊராகப் பயணம் செய்ய, அவர்களின் நினைவுகள் வழியே, கதை விரிகிறது.

‘அன்புள்ள ஏவாளுக்கு,’ நாவல் – (ஆலிஸ் வாக்கர்) வாசிப்பனுபவம்
அன்புள்ள ஏவாளுக்கு,’  நாவல் – (ஆலிஸ் வாக்கர்
தமிழில்ஷஹிதா
எதிர் வெளியீடுரூ350/-

அமெரிக்க நாவலாசிரியை ஆலிஸ் வாக்கர் எழுதியதும், புலிட்சர் பரிசை வென்றதுமான, ‘The Colour Purple,’ என்ற நாவலை, ‘அன்புள்ள ஏவாளுக்கு,’ எனும் தலைப்பில், தமிழில் அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார் ஷகிதா.

Sunday, 29 December 2019

கடித இலக்கியத்தில் கி.ரா.வின் பங்களிப்பு - கட்டுரைதமிழின் மூத்த படைப்பாளியான கி.ராஜநாராயணன் அவர்கள், தமிழிலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.  சிறுகதை மற்றும்  நாவலாசிரியர், கட்டுரையாளர், நாட்டுப்புறக்கதை மற்றும் கரிசல் வட்டார வழக்கு அகராதியின் தொகுப்பாளர், பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர் என்ற பன்முகங்கொண்ட கி.ரா, கடித இலக்கியத்திலும், தம் முத்திரையைப் பதித்துள்ளார்.