நல்வரவு

வணக்கம் !

Saturday 23 January 2016

என் வீட்டுத் தோட்டத்தில் - 2

என் வீட்டுத் தோட்டத்தில் எடுத்த படங்களின் தொகுப்பு....
இது என்ன பூ? கண்டுபிடியுங்க பார்க்கலாம்!
இது தாமரை இலைத் தண்ணீர் இல்ல!  சேப்பங்கிழங்கு இலைத்தண்ணீர்!
அப்பப்பா! குளிர் தாங்க முடியல! விரியலாமா, வேணாமா?
அப்பாடி! ஒரு வழியா விரிஞ்சுட்டேன்!
வாகனங்கள் விடுற நச்சுப்புகையை நான் தான் கிரகிக்கிறேங்கிற உண்மை தெரியுமா ஒங்களுக்கு?
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று!
சமைக்க வேணாம்! அப்பிடியே சாப்பிடலாம்!
                     
ஒட்டுறவு!
         
பூப்பூவாப் பறந்து போவும் பட்டாம்பூச்சி அக்கா! நீ பளபளன்னு போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா?
தும்பி தம்பியைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு?

கொஞ்ச நேரம் என்னை அமைதியா இருக்க விடறீங்களா?

Saturday 16 January 2016

'பயணங்கள் முடிவதில்லை' - தொடர் பதிவு!

பயணங்கள் முடிவதில்லை என்ற இத்தொடர் பதிவுக்கு என்னை ஒரு வாரத்துக்கு முன் கீதா அழைத்திருந்தார். 

எழுதுவேன் என்று என்மீது நம்பிக்கை வைத்து அழைத்த கீதாவுக்கு என் நன்றி!

ஏற்கெனவே நிஷா ஒரு முறை தொடர்பதிவுக்கு என்னை அழைத்தார்.  நானும் எழுதுவதாக ஒப்புக்கொண்டேன்.  ஆனால் வேலைப்பளு காரணமாக இன்று வரை எழுதமுடியவில்லை. கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையே என்ற குற்றவுணர்வு எனக்கு!  நிஷா என்னை மன்னிப்பாராக!

இம்முறையும் அப்படி ஆகக்கூடாது என்பதால் இப்பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்தித் தொடர்பதிவை எழுதத் தீர்மானித்துவிட்டேன். 

1.   பயணங்களில் ரயில் பயணம் எப்போதுமே அலாதி தான். உங்கள் முதல்    பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
   நினைவில்லை.

2.   மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
    எல்லாப் பயணங்களுமே மகிழ்ச்சி நிறைந்தவை தாம்.     
    பயணத்தின் குறிக்கோள் அது தானே?  ஆனால் ஒரே    
    ஒரு பயணம் மட்டுமே வழக்கத்துக்கு மாறாக அமைந்தது.    
    அதனால் அது தான் என்னைப் பொறுத்தவரை மறக்கமுடியாப்    
    பயணம்.  ஆனால் அது மகிழ்ச்சியான பயணமல்ல. 
    (அது பற்றிச் சுற்றுலா அனுபவங்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே  
    எழுதியிருக்கிறேன்.  விருப்பமும், நேரமுமிருந்தால் வாசிக்கவும்.             இணைப்பு:-சுற்றுலா அனுபவங்கள்.  

3.   எப்படிப் பயணிக்கப் பிடிக்கும்?
    என் ரசனையோடு ஒத்துப்போகிறவர்களோடு பயணிக்கப்    
    பிடிக்கும்.  அவர்கள் உறவுகளாகவுமிருக்கலாம்;    
    நண்பர்களாகவுமிருக்கலாம்.

4.   பயணத்தில் கேட்க விரும்பும் இசை?
     பி.சுசீலா & டி.எம். செளந்திரராஜன் பாடிய, பழைய தமிழ்த்   
     திரையிசைப்பாடல்கள்.

5.   விருப்பமான பயண நேரம்?
     அதிகாலை மற்றும் மாலைப் பொழுதுகள்.  என்ன தான் ஏசி   
     கார், பேருந்து என்றாலும் வெயில் சுட்டெரிக்கும் பகல்
     வேளையில் பயணம் செய்யவே பிடிக்காது.

6.   விருப்பமான பயணத்துணை?
     என் தங்கை.  இயல்பிலேயே நகைச்சுவை கலந்து கலகலப்பாகப் பேசும்   
    அவளுடன் பயணம் செய்தால் நேரம் போவதே தெரியாமல்   
    மணிக்கணக்காகப் பேசிக்கொண்டே இருக்கலாம்.  பயணக்  
    களைப்பு போன இடம் தெரியாது.

7.   பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?
     எதுவுமே படிக்க மாட்டேன்.  ஓடும் பேருந்தில் படிக்கக் கூடாது;   
     கண்ணுக்குக் கெடுதல் என்பது சிறுவயதில் அப்பா இட்ட   
     கண்டிப்பான உத்தரவு.   இளவயதிலேயே பார்வை குறைபாடு  
     காரணமாகக் கண்ணாடியும் அணிய வேண்டி வந்ததால்,   
     எதுவும் படிப்பதில்லை.

8.   விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
     ரைட், டிரைவ் எல்லாம் வேண்டாம். மலைப்பிரதேசங்களில்,  
     மிதமான குளிரில், இதமான வெயிலில் காலார நடந்து  
     இயற்கை எழிலை அணு அணுவாக ரசிப்பது மிகவும் பிடிக்கும்.    
     எத்தனை விதமான செடி,கொடிகள்!  இயற்கையின்
     படைப்பில் தான் எத்தனை விநோதங்கள்?  கண்ணைப்
     பறிக்கும் வண்ணங்களில் இதுவரை பார்த்திராத வடிவங்களில்
     எண்ணற்ற மலர்கள்!  விண்ணை முட்டி நிற்கும் மரங்கள்! 
     ஹார்ன் அலறலைக் கேட்டுக் கேட்டுச் செவிடாகிய  
    காதுகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் புட்களின் இனிய சங்கீதம்!   
    வெண்மலையாக நம்மீது மோதுவது போல் வந்து கணநேரத்தில் புகையாக        நம்மைத் தழுவிச்செல்லும் முகில்கள்! கதிரில் ஒளிரும்   
    வெள்ளியருவிகள்! சலசலத்து ஓடும் நீரோடைகள்!  காணக்கண்   
    கோடி வேண்டும்!

9.   பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
     குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாடல் எதுவுமில்லை.
 
10. கனவுப்பயணம் ஏதாவது?
     கனவுப்பயணம் என்று எதுவுமில்லை.  எங்குச் சென்றாலும்    
   மனிதன் உருவாக்கிய கான்கிரீட் காடுகளை விட, அவன் அழித்தது போக            எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச இயற்கையே, எப்போதும் என்னை   வெகுவாக     ஈர்க்கிறது.

    (படம் நன்றி இணையம்)