நல்வரவு

வணக்கம் !

Monday, 28 May 2012

’முல்லைக் கொடியும் நானும்’


அணைக்கப்பட்டு விட்டன விளக்குகள்...
டுத்தவுடன் குறட்டை விடும் மனைவியைப்
படு ஏக்கத்தோடு பார்க்கிறேன்.
நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்,
விடியுமட்டும் கொட்ட கொட்ட
விழித்துக் கொண்டு புலம்புவதற்கு?

பகலில் நல்ல பிள்ளையாகத்
தூங்கும் என் மனக்குரங்கு
இரவு வந்தவுடன் கும்மாளத்துடன்
துவங்கிவிடுகிறது தன் சேட்டையை!.

துன்பம் வந்த வேளையில்
சொல்லிக் கொள்ளாமல்
ஓடி விட்ட உறவுகள்.....
கண்ணோடு கண் மூட வழியின்றிப்
என்னைப் பாடாய்ப் படுத்தும் நோய்..
இனி நான் உயிர் வாழ்வதால்
யாருக்கு என்ன லாபம்?.
உயிரோடு இருக்கக் கூடாது இனி நான்....
உடனே முடித்துக் கொள்ள வேண்டும்
என் வாழ்வை!

இவ்வெண்ணம் என்னுள்
கருக்கொண்ட அடுத்த கணம்
சுழலும் மின்விசிறியை
வெறித்து நோக்குகிறேன்
மல்லாக்கப் படுத்தபடி.
எழுந்து உடனே வாஎன ன்னை
அழைப்பது போல் ஒரு பிரமை!

மெல்ல எழுந்து, சத்தமின்றித்
திறந்திருக்கும் சாளரங்களை
மூட முயல்கையில்,
கண்ணில் பட்டது
அந்த முல்லைக் கொடி!

அட! 
சில மாதங்களாய்
தண்ணீரே இல்லாமல்
கருகிக் கிடந்த வேரிலிருந்து
பச்சைப் பசேலென்று
புத்தம் புது துளிர்!

ஜன்னலுக்குள் தலையை நீட்டி
மின்விசிறியின் காற்றில்
அலைபாய்ந்த அக்கொடி,
பாரி போல் எனக்கு நீ
தேரெல்லாம் தர வேண்டாம்;
சுற்றிப் படர சிறுகுச்சி கூடவா
கொடுக்கக் கூடாது?” என்று கேட்கிறது!

அக்கணம்....
நான் புதிதாய்ப் பிறந்தது போல்
ஓர் உணர்வு!

அழிந்து போனதாக நமக்குத் தோன்றுபவை
முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை......
பூண்டோடு வேரறுத்து விட்டதாகத்
தலையிலடித்துச் சத்தியம் செய்தாலும்
சாம்பலிலிருந்து உயிர் பெற்றெழுந்து
சரித்திரம் படைப்பான், நம் காவிய நாயகன்!

நம் துன்பங்களனைத்தும் ஒருநாள் நீங்கும்.
கடும் பனிக்காலம் கடந்த பின்
வசந்த காலம் வந்தே தீரும்,
அதுவே இயற்கையின் நியதி!
அதுவரை நானும் காத்திருப்பேன்
நம்பிக்கையோடு,
வான் மழைக்குக் காத்திருந்து
தன்னை உயிர்ப்பித்துக் கொண்ட
இந்த முல்லைக் கொடியைப் போல!


நட்ட நடு இரவில்
நடுங்கும் குளிரில்
முல்லைக் கொடிக்குக்
கொழுக்கொம்பு நடும் என்னை
விழி மலர்த்தி அதிசயமாகப்
பார்க்கிறாள் என் மனைவி!

Monday, 21 May 2012

அம்மாவின் ஆசை

எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. நான் கார் வாங்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை.  அம்மாவின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி விட்டேன் இந்த ஒன்றைத் தவிர.

கார்  வாங்கினால் யானையைக் கட்டித் தீனி போடுகிற மாதிரி என்று கார் வாங்கிய நண்பன் ஒருவன் சொன்னதிலிருந்து கார் வாங்கப் பயம்.  மேலும் என்னொருவன் சம்பளத்தில் பையன்களைப்  படிக்க வைக்க வேண்டும்.  நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் எகிறிப் பாயும் விலைவாசியில் குடும்பச் செலவுகளைக் கவனிக்க வேண்டும். அம்மாவின் மருத்துவச்செலவு, வீட்டுக் கடனுக்கு வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை எனச் செலவுப் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல, என்னால் கார் வாங்குவதைப் பற்றிக்
கற்பனை கூடச் செய்யமுடியவில்லை. 

ஒரு வழியாகப் பையன்கள் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குச் சேரும் தருவாயில் தான் அம்மாவின் இந்த ஆசையைப் பற்றி நான் யோசிக்கத் துவங்கினேன்.  எல்லோரும் சேர்ந்து வெளியில் சென்று
வர கார் இருந்தால் தான் நல்லது எனக் குடும்பத்தினர் அனைவரும் நச்சரிக்கத் துவங்க சரியென்று தலையாட்டி வைத்தேன்.

மேலும் என் கம்பெனியிலும் பெட்ரோல் செலவுக்கு மாதா மாதம் தனியே 'அலவன்ஸ்' தருவதாகச் சொல்லவே மகிழ்ச்சியாகச் சம்மதம் தெரிவித்தேன்.  அடுத்து என்ன கார் வாங்குவது என ஒரு பட்டிமன்றமே நடந்தது வீட்டில். ஆளாளுக்கு ஒரு காரைச் சிபாரிசு செய்தனர்.

"அம்பாசிடர் கார் தான் தேவலை; அப்போ தான் நாமெல்லாரும் தாராளமா உட்கார்ந்து போக முடியும்," என்ற மனைவியின் யோசனை சரியென்றே பட்டது எனக்கு.  ஆனால் சின்னவன் ஒத்துக் கொள்ளவில்லை. 

"அந்தக் காரை வாங்குவதாயிருந்தால் நீங்க காரே வாங்க வேணாம்," என்றான் கோபத்துடன்."போர்டு கார் சூப்பராயிருக்கும். எல்லாமே ஆட்டோமாடிக்.  அதைத் தான் வாங்கணும்," என்றான் அவன்.

"வெளிநாட்டுக் கார் வேணாம்பா.  நம்ம நாட்டுக் கம்பெனி கார் மாடல்களாப் பார்த்து அதுல ஒன்னு வாங்கலாம்பா," என்ற பெரியவனின் யோசனை ஏற்கப்பட்டு, அதன்படியே ஒரு காரும் வாங்கியாகிவிட்டது.

அம்மாவைக் காரில் அழைத்துக் கொண்டு பக்கத்தில் எங்காவது சென்று வர வேண்டும்; சொந்தக்காரில்   பயணம் செய்யும் போது அம்மாவுக்கு ஏற்படும் மகிழ்ச்சியைக் கண்டு ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் கேட்டேன்:-

"அம்மா! முதன் முதலா இன்னிக்குச் சாயந்திரம் நம்மூர் பிள்ளையார் கோவிலுக்குப் போயிட்டு அப்படியே திருநள்ளாறு கோவிலுக்குக் காரில போய்ட்டு வரலாம். வரீங்களாம்மா?"

"வேணாம்பா.  நான் வரலை.  நீங்கள்லாம் போய்ட்டு வாங்க.  அடுத்த வாரம் உங்க அத்தையோட பேத்தி கல்யாணம் திருச்சியில நடக்குதில்லே.  அதுக்கு நாமெல்லாரும் சேர்ந்து காரில போய்ட்டு வருவோம்".

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.  காரையிலிருந்து திருச்சிக்குக் குறைந்தது நான்கு மணி நேரப் பயணம். மேலும் தற்சமயம் புதிதாகச் சாலை போடும் பணி வேறு நடைபெற்று வருவதால் தஞ்சையிலிருந்து திருச்சி வரை தூக்கித் தூக்கிப் போட்டுப் பயணம் செய்வதற்குள் நல்ல உடல்நிலையில் இருப்பவர்க்கே இடுப்பு கழன்று விடும்.  அம்மாவின் உடம்பு இந்தப் பயணத்தைத் தாங்குவது கடினம் என்று தோன்றியது.

"அதல்லாம் வேணாம்மா. அவ்ளோ தூரம் போறது ஆபத்து.  உங்க உடம்புக்கு ஒத்துக்காது. அதுவுமில்லாம போன வருஷம் தான் அத்தையோட பேரன் கல்யாணத்துக்கு நான் போயிட்டு வந்திருக்கேன். இந்தத் தடவை
நானும் போறதா இல்லே.  மொய் பணத்துக்கு ஒரு D.D. எடுத்து தபாலில அனுப்பிடலாம்னு இருக்கேன்"  என்றேன் தீர்மானமாக.

ஆனால் அம்மா விடுவதாய் இல்லை.

"இல்லப்பா. நான் போயே ஆகணும்.  சொந்தக்காரங்க எல்லாரையும் பார்த்து எவ்ளோ வருஷமாச்சி. அவங்க எல்லாரையும் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு.  இந்த ஒரு தடவை மட்டும் மாட்டேன்னு சொல்லாம என்னை அழைச்சிட்டுப் போப்பா.  எனக்கு ஒன்னும் ஆகாது.  கவலைப்படாதே.  என்  பேரனுங்க கல்யாணத்தைப் பார்த்துட்டுத் தான் நான் சாவேன்"

என் கைகளைப் பிடித்துக் கெஞ்சிய அம்மாவைப் பார்க்க எனக்கு வியப்பாயிருந்தது.  அவரது கோரிக்கைக்கு இணங்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போனது.

ஊருக்குக் கிளம்பும் நாளன்று சின்னக் குழந்தையின் உற்சாகத்துடன் எல்லாருக்கும் முன்னதாக எழுந்து வெந்நீர் போட்டுத் தலைக்குக் குளித்து விட்டுப் பட்டுப்புடவை உடுத்தி ஞாபகமாய் தம் இரட்டை வடச் சங்கிலியை எடுத்துப் போட்டுக் கொண்டு காரில் வந்தமர்ந்த அம்மாவைப் பார்த்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

நேற்று வரை நான் பார்த்த நோயாளி அம்மாவா இவர்?  தலைமுடியைக் கூட சீவமுடியாமல்  முக்கிக் கொண்டும் முனகிக் கொண்டும் படுத்துக் கிடந்தவர், உறவுகளைப் பார்க்கப் போகிற மகிழ்ச்சியில்  நான் சின்னப்பிள்ளையில் பார்த்த பழைய அம்மாவாக உருமாறி விட்டாரா என்ன?

மனைவியை முன் சீட்டில் அமரச் சொல்லிவிட்டு பின் சீட்டில் அம்மாவை என் மடியில் படுக்கச் சொல்லிப் பயணம் செய்து ஊர் வந்து சேர்ந்தோம்.

பல வருடங்களாகப் பார்க்காமலிருந்த தம் உறவுகளைப் பார்த்த போது அம்மாவுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடிற்று. அம்மாவைப் பார்த்தச் சொந்தக்காரர்களும் அவர் மேல் அன்பு மழையைப் பொழிந்தனர்.

"வாங்க அத்தாச்சி!  எப்படி இருந்த நீங்க இப்படி துரும்பா இளைச்சிப் போயிட்டீங்க? ஒங்களுக்கு ஒடம்பு சொகமில்லேன்னு கேள்விப்பட்டு மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிடுச்சி! வந்து பார்க்கணும்னு தான் ஆசை. 
இந்தப் பாவிக்குத் தான்  வர முடியல.  இது யாரு?  ஒங்க மவனா?  சின்னப்
பையனா இருந்தப்பப் பார்த்தது.  அவங்கப்பாவை அப்படியே உரிச்சி வைச்சிருக்கே!  அவங்கப்பாவைத் தான் சீக்கிரமா ஆண்டவன் கொண்டு போயிட்டான்.  அவர் ஆயுசையும் சேர்த்து ஆண்டவன் இவருக்கு
நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்."

திருமணத்துக்கு வந்திருந்த யார் யாரிடமோ அம்மா என்னை அழைத்துப் போய் அறிமுகம் செய்தார்.

"தம்பி! இவர் யாரு தெரியுமா? ஒங்கச் சித்தப்பாவோட, தங்கச்சியோட, நாத்தனாரோட கொழுந்தனார் .பையன்."  

எனக்குத் தலை சுற்றியது.  நல்லவேளையாக அம்மா அத்துடன் நிறுத்திக் கொண்டார். 'அப்படியானால் உனக்கு அவர் என்ன முறை வேண்டும்?' என்று கேள்வி கேட்டிருந்தால் என் கதி அம்பேல் ஆகியிருக்கும்.  அவர் சொன்ன உறவு முறை புரிந்தது போல் வேக வேகமாகத் தலையாட்டி வைத்தேன். அந்த உறவுக்காரரும் என் நிலையிலேயே இருந்தார் என்பது அவர் திரு திரு என்று விழிப்பதிலேயே கண்டு கொள்ள முடிந்தது.

"இவன் என் பையன்.  பெரிய கம்பெனியில மேனேஜரா இருக்கான்.  லட்சம் லட்சமா சம்பாதிக்கிறான். இப்ப ஏழு லட்சம் போட்டு எனக்காகவே கார் வாங்கியிருக்கான்.  வாசல்ல படகு மாதிரி தெருவை அடைச்சிக்கிட்டு நிக்குதே, அது இவனோட கார் தான்"

பேசிய அத்தனை உறவுகளிடமும் அம்மா என்னைக் கூப்பிட்டு அறிமுகம் செய்து வைத்தார். பேச்சினூடே என் காரையும் பற்றிச் சொல்ல மறக்கவில்லை.  எனக்குத் தர்ம சங்கடமாயிருந்தது.

சத்தம் போட்டு இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த அம்மாவை அணுகி,
"ரொம்பக் கத்திப் பேசாதீங்க. நெஞ்சு வலி வந்துடுச்சின்னா அப்புறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க," என்று எச்சரித்துப் பார்த்தேன்.  ஆனால் அம்மா என் வார்த்தையைச் சட்டையே செய்யவில்லை.

"அம்மா, கல்யாணம் முடிஞ்ச கையோட சாப்பிட்டுட்டுக் கிளம்பிடலாம்.  அப்பதான் பொழுதோட ஊர் போய்ச் சேர முடியும்.  நாளைக்குக் கண்டிப்பா நான் கம்பெனி போயாகணும்.  முக்கியமான வேலையிருக்கு"

"சரிப்பா. உடனே கிளம்பிடலாம்"

நாங்கள் கிளம்பிய போது மாமாவும் அத்தையும் வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பி வைத்தார்கள்.

"ரொம்பச் சந்தோஷம் அண்ணி.  உங்களுக்கு உடம்பு முடியாம இருக்கிற தினாலே நீங்க எங்க வரப் போறீங்கன்னு தான் நாங்க நினைச்சோம்.  நீங்களும் வந்து மணமக்களை வாழ்த்துனதிலே எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம்" என்றாள் அத்தை.

அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அத்தையின் கவனம் முழுவதும் என் காரின் மீதே படிந்திருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.  வைத்த கண் வாங்காமல் காரையே பார்த்துக் கொண்டிருந்தாள் அத்தை.

"நீங்க ஆசைப்பட்டபடி ஒங்கச் சொந்தக்காரங்க எல்லாரையும் பார்த்ததுல சந்தோஷம் தானே ஒங்களுக்கு?"

மாலை ஏழு மணியளவில் வீடு வந்து சேர்ந்த பிறகு அம்மாவிடம் கேட்டேன்.

"சொந்தக்காரங்களைப் பார்த்ததுல எனக்கு மகிழ்ச்சி தான் தம்பி. ஆனா அதை விட பெரிய சந்தோஷம்,  உங்கத்தைக்கு முன்னாடி நானும் ஒரு நாள் காரில போய் இறங்கணும்னு நான் செஞ்சிருந்த வைராக்கியமும் நிறைவேறிடுச்சி. எங்க நான் சாகறதுக்குள்ளே நீ கார் வாங்க மாட்டியோ, என் சபதத்தை நிறைவேத்தாம நான் போய்ச் சேர்ந்துடுவேனோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்". 

"சபதமா? என்னது அது?  எங்கிட்ட நீங்க சொல்லவேயில்லியே?"

"அப்ப நீ சின்னப்புள்ளை. ரெண்டு வயசிருக்கும். நேத்தி நடந்தது மாதிரி இன்னும் என் நினைவில அப்படியே பதிஞ்சிருக்கு.  திருச்சியில ஒரு கல்யாணத்துக்கு ஒன்னையும் அழைச்சிக்கிட்டு நானும்  ஒங்கப்பாவும்
போயிருந்தோம்.  ஒங்கத்தை வாக்கப்பட்டது நல்ல வசதியான குடும்பம். அந்தக்காலத்துல நம்ப சொந்தக்காரங்களிலேயே அவங்கக்கிட்ட தான் காரு இருந்துச்சி.  அத்தை வீட்டுக்குப் பக்கத்துல தான் கல்யாண மண்டபங்கிறதால, மத்தியானமே அவங்க வீட்டுக்குப் போயிட்டோம். 

சாயங்காலம் மண்டபத்துக்குக் கிளம்பறப்ப, "தங்கச்சி, நம்ப காரை ரெண்டு டிரிப் அடிக்கச் சொல்றேன். நாம எல்லாரும் காரிலேயே மண்டபத்துக்குப் போயிடலாம்,"னு ஒங்க மாமா தான் சொன்னாரு. அவரு ரொம்ப நல்லவரு.  சரின்னுட்டு நான் காரில ஏறப் போன சமயம், காரில உட்காந்திருந்த அத்தை,

"உங்களுக்கெல்லாம் காரில இடமில்லை, நீங்க பஸ்சில வாங்க,"ன்னு முகத்திலடிச்சது மாதிரி சொல்லிட்டுப் படாருன்னு கதவைச் சாத்திட்டா.  எனக்கு ரொம்ப அவமானமாப் போயிட்டுது.  அழுகையும் ஆத்திரமும் தாங்க முடியல.. 

"சரி.  சரி.  அழாதே.  சின்ன வயசிலேர்ந்தே அவளுக்கு வாய்த்துடுக்கு அதிகம்.  அதோட இப்ப பணத்திமிரும் சேர்ந்துடுச்சி.  பொறுமையா இரு. நமக்கும் ஒரு காலம் வராமலாப் போயிடும்?"னு அப்பா தான் என்னைச் சமாதானம் செஞ்சாரு.

அவளுக்கு முன்னாடி அவ மூக்கில விரல் வைக்கிற மாதிரி நானும் ஒரு நாள், பெரிய காரில போய் இறங்கணும்னு அன்னிக்கு முடிவெடுத்தேன்.  இத்தினி வருஷமா என் மனசில இருந்த வைராக்கியம் இன்னிக்கு உன்னால நிறைவேறிடுச்சி.  இனிமே நான் நிம்மதியாச் சாவேன்."

அம்மா சொன்னதைக் கேட்டதும் எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது.
"இதுக்காகத் தான் நீங்க கார் வாங்க விரும்புறீங்கன்னு  என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா,  கடனை உடனை வாங்கியாவது ஒங்கச் சபதத்தை உடனே நிறைவேத்தியிருப்பேனேம்மா"  

"நீ அப்படி செய்வேன்னு எனக்குத் தெரியும்பா.  ஆனா என் வைராக்கியத்தை நிறைவேத்தணுங்கிறதுக்காக கடன் வாங்கி வரவுக்கு மேல செலவு செஞ்சு நீ கடன்ல மூழ்கிப் போறதை நான் விரும்பல. அததுக்கு ஒரு நேரம் வரணும்ல.  இப்பத்தான் என் ஆசை நிறைவேறிடுச்சே.  அது போதும் எனக்கு. உங்கத்தை வைச்ச கண் வாங்காம நம்ம காரைப் பார்த்துக்கிட்டே இருந்தாளே, அதைக் கவனிச்சியா? இப்ப நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்".    

"ம்.ம். கவனிச்சேன். சரிம்மா!  நெஞ்சு வலி அதிகமா இருந்தா மறைக்காம சொல்லிடுங்க. டாக்டர்கிட்ட ஒரு தடவை போயிட்டு வந்திடலாம்." வழக்கமாக போடும் மாத்திரைகளை அம்மாவிடம் கொடுத்து விட்டுக் கேட்டேன்.

"டாக்டர் கிட்டப் போனாலும் அவரு புதுசாவா மாத்திரை எழுதப் போறாரு? இதையே தான் எழுதிக் கொடுப்பாரு.வேணாம் தம்பி. என்னைப் பத்திக் கவலைப்படுறத உட்டுட்டு போய்ப்படுத்து நிம்மதியாத் தூங்கு. காலையில எழுந்திருச்சி  ஆபிசுக்குப் போகணும்."

"சரிம்மா"

பயணம் செய்ததால் ஏற்பட்ட களைப்பு இருந்தாலும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்.  என்னென்னவோ நினைவலைகள்!

அம்மாவின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.  இதற்குத் தான் அம்மா அவ்வளவு பிடிவாதமாக ஊருக்குக் கிளம்பி வந்திருக்கிறார். மனதிலிருந்த வலிமை பயணம் செய்ய தேவையான சக்தியை அவரது உடலுக்கு அளித்தது போலும். இத்தனை வருடங்கள் கழிந்த
பின்னரும் அந்தச் சம்பவம் ஏற்படுத்திய வடு, நீறு பூத்த நெருப்பாய் அம்மாவின் நெஞ்சுக்குள் கனன்று கொண்டிருந்திருக்கிறது.

இதைப்பற்றி அம்மா முன்னமே எனக்குத் தெரிவித்திருக்கலாம்.  ஒரு வேளை தம் குமுறலை வெளியே கொட்டிப் புலம்பி விட்டால் மனதுக்கு ஆறுதல் கிடைத்து தாம் கொண்ட வைராக்கியத்தை நிறைவேற்ற வாய்ப்பில்லாமல் போய் விடும் என அம்மா நினைத்தாரோ?

இந்த யோசனைகளில் ஆழ்ந்திருந்த நான் எப்போது தூங்கினேனோ தெரிய வில்லை.

"என்னங்க ஏந்திரிச்சி வந்து மாமியைப் பாருங்களேன்.  பாலை வைச்சிக்கிட்டு ரொம்ப நேரமாக் கூப்பிடறேன். கண்ணையே தொறக்க மாட்டேங்கிறாங்க,"

அதிகாலையில் மனைவி வந்து எழுப்பவே, வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடினேன்.  அம்மா அசைவற்று இருந்தார்.  பக்கத்துத் தெருவிலிருந்த டாக்டரைக் கொண்டு வந்து காட்டினேன்.  தூக்கத்திலேயே அம்மாவின் உயிர் பிரிந்து விட்டதாகச் சொன்னார் அவர்.

என் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரை ஒரு கையால் துடைத்தபடியே அம்மாவைப் பார்த்தேன்.

'நான் நினைத்ததைச் சாதித்து விட்டேன்' என்ற வெற்றிப் புன்னகையுடன் தூங்குவது போலவே இருந்தது முகம்.


எத்தனையோ முறை செத்துச் செத்து உயிர் பிழைத்தவர் தாம் அம்மா. இவ்வளவு நாட்கள் தம் வைராக்கியத்தை நிறைவேற்றத்தான் அம்மா தம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடியிருக்கிறார் என்று இப்போது எனக்குப் புரிந்தது.

அம்மாவை அவ்வளவு தூரம் அழைத்துப் போயிருக்கக் கூடாது; தலை குளிக்க அனுமதித்திருக்கக் கூடாது;  உறவுக்காரர்களிடம் ஓய்வின்றிப் பேச விட்டிருக்கக்  கூடாது, இதெல்லாம் தாம் அம்மாவின் சாவுக்குக் காரணம் என்பன போன்ற எண்ணங்களால் குற்றவுணர்வு தோன்றி என்னைப் பெரிதும் அலைக்கழித்தாலும் அவரது ஆசையை நிறைவேற்றி வைத்தோம் என்ற எண்ணம் மனதுக்குச் சிறு ஆறுதலைத் தந்தது.


(தமிழ் மன்றச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு வென்ற கதை-ஜூன் 2010)    
    

   

Saturday, 12 May 2012

தண்டனை – சிறுகதைஉயர்நீதிமன்றம் அவனுக்கு அளித்திருந்த மரணதண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது.

சாவைப்பற்றி அவன் கவலைப்படவில்லை; தூக்குத் தண்டனை தனக்குக் கிடைக்கும் என்று தெரிந்தே  இந்தக் கொலைகளை அவன் செய்திருந்தான்.

அவனது கவலையெல்லாம் சாவதற்கு முன் ஒரு தடவையாவது அவன் அம்மாவை நேரில் பார்த்து விட வேண்டும் என்பதே. சிறையில் இருந்த இந்த நான்கு ஆண்டுகளில் அம்மா ஒரு தடவை கூட நேரில் வந்து அவனைச் சந்திக்கவில்லை.

தண்டனை நிறைவேற்றப்பட இன்னும் ஒரு வாரமே மீதமிருந்த நிலையில் அம்மாவிடமிருந்து அவனுக்குக் கடிதம் வந்தது. நடுங்கும் கைகளினால் கடிதத்தை வாங்கிய அவன், அவசர அவசரமாகப் பிரித்துப் படிக்கத் துவங்கினான்.

"அன்புள்ள ராஜா,

இப்படி ஆசையாய் உன்னைக் கூப்பிட்டு எவ்வளவு காலமாகிவிட்டதுநேரில் வந்து ஒரு முறையாவது உன்னைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசைதான்.  ஆனால் அதற்கான மன தைரியம் என்னிடமில்லை.  உன்னைப் பார்த்தால் என்னால் அழத்தான் முடியும்.  ஒரு வார்த்தை கூட பேச வராது.

மேலும் பயணம் பண்ணக்கூடிய உடல்நிலையும் எனக்கில்லை.  மனம் சோர்ந்தவுடன் உடலும் சோர்ந்து என்னை வீட்டின் ஒரு மூலையில் முடக்கிவிட்டது.  உன்னிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய செய்திகள் சில உள்ளனஅதற்காகத் தான் வழிகின்ற கண்ணீரைத் துடைத்து விட்டபடியே இதனை எழுதுகின்றேன்.  

ஏற்கெனவே உன்னிடம் சொல்லியிருப்பதாக ஞாபகம். இருந்தாலும் இப்போது மீண்டும் சொல்கிறேன்.
.
எங்களுக்குத் திருமணமானவுடன் நானும் உன் அப்பாவும் சேர்ந்து சென்ற முதல் கோயில் எது தெரியுமா? வேளாங்கண்ணி மாதாக் கோவில் தான்.

நீ என் வயிற்றில் இருந்த போது  அளவுக்கதிகமான வாந்தி காரணமாக இரத்த சோகையால் பீடிக்கப்பட்டு மிகவும் மெலிந்து சோர்வுற்றிருந்தேன்.

குழந்தையை நல்லபடியாக நான் பெற்றெடுக்க வேண்டுமே என்ற கவலையில் உன் பாட்டி தினமும் நாகூர் ஆண்டவர் கோவிலுக்குச் சென்று பாத்தியா ஓதி விட்டு அங்கிருக்கும் புறாக்களுக்குக் கம்பு இறைத்து விட்டு வருவார்.

நீங்கள் என்ன சாதி என்று நான் யாரிடமாவது கேட்டு விட்டால் போதும்;. உன் அப்பாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும்;. அநாகரிக மான கேள்வி என்று என்னைக் கடிந்து கொள்வார்.

இப்படி எம்மதமும் சம்மதம் என்று எல்லா மதத்தினரோடும் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகிய  குடும்பத்தில் பிறந்துவளர்ந்த உனக்கு எங்கே யிருந்து வந்தது இந்த மத வெறி?

குழந்தையாய் இருந்த போது உன்னை உலகம் புகழும் டாக்டராக, ஓர் இஞ்சினியராக இன்னும் என்னென்ன பதவிகளிலெல்லாமோ அமர்த்திப் பார்த்து நானும் உன் அப்பாவும் எப்படியெல்லாம் கற்பனை செய்து மகிழ்ந்திருப்போம்?

எங்களுடைய ஆசைகளை, கனவுகளை ஒரு நொடியில் தகர்த்துவிட்டாயே! எங்களுடைய ஆசைகளை நீநிறைவேற்றாமல் போயிருந்தால் கூடப் பரவாயில்லை. இப்படி ஒரு களங்கத்தை நம் வம்சத்துக்கு ஏற்படுத்துவாய் எனநான் கனவிலும் நினைக்கவில்லையே.

நம் குடும்பத்திற்கு ஏற்பட்ட பழியைத் துடைக்க வழியின்றி மனதுக்குள் மருகி மருகியே உன் அப்பாவுக்கு மாரடைப்பு வந்துவிட்டது.   இப்படிச் செய்து விட்டானே, இப்படித் தீராப் பழியை ஏற்படுத்திவிட்டானே என்று தான் அவரது உயிர் உடலை விட்டுப் பிரியும் வரை ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.  என்னைத் தனியாகத் தவிக்க விட்டு அவர் கண்ணை மூடிவிட்டார்.  ம்... அவர் புண்ணியம் செய்தவர்!

நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பும் போதெல்லாம் நீ சொன்ன சப்பைக் கட்டுகளை உண்மை என்று நம்பி ஏமாந்திருந்த என் தலையில் ஒரே யடியாகக் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டாயே!  ஏதோ இயக்கத்தில் சேர்ந்து, நம் மதத்தைக்காப்பாற்றுகிறேன் பேர்வழி என்ற சொல்லிக் கொண்டு மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை அழிக்கும் சதி வேலையில் நீ ஈடுபட்டிருந்த விஷயம் எனக்குக் கொஞ்சம் கூடத் தெரியாமல் போயிற்றே!
 
கொஞ்சம் விழிப்புடனிருந்து உன்னை நல்வழிப்படுத்தியிருந்தால், இன்று உனக்கு இந்தக் கதி நேர்ந்திருக்காதே என்று தான் என் உள்மனம் என்னை வாட்டி எடுக்கிறது.  என் வயிற்றில் பிறந்த பிள்ளை ஒரு நாளும் தப்புத் தண்டா செய்ய மாட்டான் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டேனே பாவி!

நல்லத் தூக்கம் என்னை விட்டு நீங்கிப் பல ஆண்டுகள் கடந்து விட்டன.  வெளியில் தலைகாட்ட முடியவில்லை. யாரையாவது பார்த்தாலே, அவர்கள் என் முதுக்குக்குப் பின்னால், 'கொலைகாரனைப் பெற்றெடுத்தவள் இவள் தான் எனத் தூற்றுவார்களோ என அச்சம். 

'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்,'  எனப் படித்திருக்கிறாய் அல்லவா? சான்றோனாக்கி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவில்லை யாயினும் இப்படி ஓர் அபவாதத்தை எனக்கு நீ ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

மணமேடைக்கு அனுப்ப வேண்டிய வயதில் மகனைத் தூக்கு மேடைக்கு அனுப்ப எந்தத் தாய்க்குத் தான் மனம்துணியும்?   என்னுடைய இந்த அவல நிலை வேறு எந்தத் தாய்க்கும் வந்திடக் கூடாது என்று தான் அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்.

உனக்குக் கருணை காட்டச் சொல்லி நீ கொலை செய்த அந்தப் பெரியவரின் மனைவியை நேரில் சந்தித்து காலில் விழுந்து கெஞ்சினேன்.

அவர் எவ்வளவு உயர்வானவர் தெரியுமாவேறு யாராவது இருந்திருந்தால், என்னைக் கேவலமாகப் பேசிக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள்.  ஏனெனில் வாழ வேண்டிய வயதில் என் மகனால் தம் கணவரையும்குழந்தையையும் அநியாயமாய் உயிரோடு நெருப்புக்குப் பலி கொடுத்தவராயிற்றே. 

ஆனால் அவரோ என் கோரிக்கையைப் பொறுமையாகக் கேட்டு என் கோரிக்கைக்கு இணங்கி ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பினார். அதில் அவர் என்ன எழுதினார் தெரியுமா?

"என் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு நான் அனுபவிக்கிற வேதனைகள், சித்ரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல;அவை இன்னொரு தாய்க்கு நேரக்கூடாது.  ஒரு தாயின் வேதனை இன்னொரு தாய்க்குத் தான் புரியும்.  அதைவார்த்தையில் விவரிக்க இயலாது.  குற்றவாளியைத் தூக்கில் போடுவதால் என் கணவரோ, குழந்தையோ திரும்பி வரப் போவதில்லை. குற்றவாளியை ஏற்கெனவே நான் மன்னித்து விட்டேன்.  வயதான காலத்தில் நிராதரவாக நிற்கும் ஓரு தாயைக் கருத்தில் கொண்டு குற்றவாளியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டுகிறேன்"    

இன்னா செய்தாரையும் மன்னிக்கும் அவரது பெருந்தன்மையைப் பார்த்தாயா

ஆனால் நான் எதிர்பார்த்தபடி அவர் அனுப்பிய கடிதத்துக்கு நேற்று வரை ஜனாதிபதியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. உன்னைத் தூக்கில் போட இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், எனக்கிருந்த கொஞ்ச நஞ்சம் நம்பிக்கையும் போய்விட்டது.  

இப்போது வாழ வேண்டும் என்ற ஆசை துளியும் எனக்கில்லை.  இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும் போது நான் இவ்வுலகை விட்டுப் போயிருப்பேன்.  ஏன் தெரியுமாஉன் மகனைத் தூக்கில் போட்டு விட்டார்கள் என்ற செய்தியைக்  கேட்க நான் உயிரோடு இருக்கக் கூடாது.   என் மனதிலோ உடலிலோ அந்தச் செய்தியைத் தாங்கும் சக்தி இல்லை. என்னதான் நீ ஒரு கொலைகாரனாயிருந்தாலும் நான் உன்னைப் பெற்ற தாய் அல்லவா?

என் ஈமச் சடங்குகளை நீ பரோலில் வந்து செய்ய வேண்டாம்.  ஏனெனில் எனக்கு எந்த ஈமச்சடங்கும் செய்ய வேண்டாம் என்றும் என் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்து விடுங்கள் என்றும் ஏற்கெனவே கடிதம் எழுதிக் கையொப்பமிட்டு உன் மாமாவிடம் கொடுத்து விட்டேன்.

இப்படிக்கு,
துர்பாக்கியவதியான உன் அம்மா.

கடிதத்தைப் படித்தவுடன் 'அய்யோ அம்மா' என்ற தலையில் அடித்துக் கொண்டு சத்தம் போட்டு அழுதான்.  அவனது அலறல் மூடப்பட்டிருந்த அந்தத் தனியறையின் சுவர்களில் பட்டுப் பயங்கரமாக எதிரொலித்தது.  


கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தான்.  இதில் எழுதியிருப்பது போல் அம்மா தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோகடிதத்தில் இருந்த தேதியைப் பார்த்தான்.  ஒரு வாரத்திற்கு முன் எழுதப்பட்ட கடிதம் அது. கண்டிப்பாக இந்நேரம் அம்மா சொன்னபடி செய்திருப்பார்கள் என்று அவனுக்குத் தோன்றியது.

தன் மீது அம்மா எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்று நினைத்த போது அவன் கண்களிலிருந்து கண்ணீர்மடை திறந்த வெள்ளமாகக் கொட்டியது. அந்தக் கணமே அவனைத் தூக்கில் போட்டுவிட மாட்டார்களா என்று மனது ஏங்கியது.  இன்னும் ஒரு வாரத்தைத் தள்ள வேண்டுமே! அம்மாவிடமிருந்து கடிதம் வராமலே இருந்திருக்கலாம் என நினைத்தான்.

அன்றிரவு எவ்வளவு முயன்றும் தூக்கம் வர மறுத்தது.  கண்களை மூடினால் அம்மாவின் அந்தக் கடிதம் நினைவுக்கு வந்து அவனைப் பாடாய்ப்படுத்தியது. 

எங்கும் ஒரே இருட்டு.  வெளிச்சம் எங்காவது தென்படுகிறதா என்று அவன் கண்கள் இருட்டைத் துழாவுகின்றன. தூரத்தில் ஒரு புள்ளியாக சிறு நெருப்பு தெரியவே  அந்தப்புள்ளியை நோக்கித் தட்டுத் தடுமாறி நகர்கிறான்.  அவன்அருகில் வந்தவுடன் புள்ளியாக இருந்த அந்த நெருப்பு பெரிய தீ ஜ்வாலையாக மாறி அவனை அமுக்கப் பார்க்கிறது.
அவன் அதிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓடப்பார்க்கிறான்.  திடீரென்று நெருப்பு நாலாப்பக்கமும் அவனைச் சூழ்ந்துகொண்டு 'எங்கே தப்பித்து ஓடு பார்க்கலாம்' என்று சிரிக்கிறது. அந்தத் தீ நாக்குகளிடையே அவன் கொலை செய்தவரின் முகம் தெரிகிறது.

திடுக்கிட்டு  விழித்துக் கொண்டான்.  வியர்வையால் உடம்பு முழுக்க நனைந்திருந்தது.  பொழுது எப்போது விடியும் என்றிருந்தது.  காலை உணவு இடைவேளையின் போது சிறை அதிகாரி சொன்ன செய்தி அவனைத் திடுக்கிட வைத்தது.

"செத்தவரோட மனைவியே உனக்குச் சார்பா மனு அனுப்பியிருக்கிற தினாலே உனது தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கச் சொல்லி டெல்லியிலேர்ந்து உத்தரவு வந்திருக்குது; அநேகமா உன் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக் குறைப்பாங்கன்னு நினைக்கிறேன்.  உனக்கு ஆயுசு கெட்டிப்பா"  என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

சிறை அதிகாரிகளில் இவர் மனித நேயம் மிக்கவர். கைதிகள் அனைவரிடமும் அன்பாகப் பழகுகிறவர்.

அவருக்குப் பதில் எதுவும் சொல்லாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான் ராஜா.  அம்மா தூக்கில் தொங்குகிற காட்சி அவன் கண்களை விட்டு அகல மறுத்தது. 

பூட்டப்பட்ட வீட்டிற்குள் கொழுந்து விட்டு எரியும் தீயின் வெம்மை தாங்காது வாசலுக்கும் கொல்லைக்குமாய் ஓடிய அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கதறல்காதில் இடைவிடாமல் எதிரொலித்தது. 

அந்த அம்மையார் தனக்காக மனு அனுப்பி  தூக்குத் தண்டனையைக் குறைத்ததற்குப் பதிலாகத் தன்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டிருக்கலாம் என்று தோன்றியது. மரண தண்டனையை விட மிகக் கொடுமையான தண்டனையை அந்தம்மையார் தனக்களித்து விட்டதாக நினைத்தான்.

ஐயோ அம்மா! உங்கள் தலையில் நான் நெருப்பை அள்ளிக்கொட்டிய பிறகும் என் வாழ்வை நீட்டித்து விட்டு நீங்கள் போய்ச் சேர்ந்து விட்டீர்களே என மனதுக்குள் குமுறினான். அவனுக்கென்று இருந்த அம்மாவும் போனபின் அவன் இனி யாருக்காக வாழவேண்டும்?

"அய்யா!  உங்களுக்குப் புண்ணியமாப் போகும். தயவு செஞ்சு என்னோட தண்டனையைக் குறைக்காதீங்க. எங்கம்மா போயிட்டாங்க. என்னால இனிமே இந்த உலகத்துல ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது.   தயவு செஞ்சு சீக்கிரமா என்னைத் தூக்கில போட்டு, நிம்மதியில்லாம தவிக்கிற என் மனசுக்கு அமைதியைத் தாங்க," என்று அந்த அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கதறிக்கொண்டே இருந்தான் அவன்.
  


(ஜனவரி 2012 உயிரோசையில் எழுதியது)  

Saturday, 5 May 2012

உண்மை சுடும் - சிறுகதை

உமாவிற்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, வீட்டின் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.

மனைவிக்கு ‘மைல்ட் ஹார்ட் அட்டாக்’ என்று தெரிந்தபோது ஆடித்தான் போய் விட்டான்,  எதற்கும் கலங்காத கணபதி.

குக்கரில் வேக வைத்த சாதம் அவனுக்குப் பிடிக்காது.  கஞ்சி வடிக்கப்பட்ட சாதம் தான் வேண்டும்.  காலை நேர டென்ஷனில் சிலசமயம் கையில் கஞ்சி கொட்டிக் கொண்டு நின்ற மனைவியைப் பார்த்து ஒரு நாள் கூட அவன் பரிதாபப் பட்டதில்லை.

“சாதம் வடிக்கக் கூடத் தெரியல, என்ன வளர்த்திருக்காங்க ஒங்க வீட்டுல” என்பான் கேலியாக. 

என்றாவது பதம் தவறி சாதம் குழைந்து போனாலோ கோபம் தலைக்கேறி விடும்.  மாவு அரைத்து பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது அவனது கண்டிப்பான உத்தரவு.  தினந்தினம் புதிதாக அரைத்துத் தான் இட்லி ஊற்ற வேண்டும்.

குழந்தைகளைப் பாட்டு வகுப்புக்குக் கொண்டுவிடச்சொல்லி மனைவி கேட்ட போது, ‘வண்டி ஓட்டக் கத்துக்கோ’ என்று சொல்லி ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து விட்டு அந்த வேலையிலிருந்து கழன்று கொண்டான்.

“வேலைக்கும் போய்க்கிட்டு வீட்டையும் கவனிக்க முடியல.  கொஞ்சம் ஒத்தாசை பண்ணக்கூடாதா?” என்று அவள் புலம்பும் போதெல்லாம்,
“உன்னை யார் வேலைக்குப் போகச் சொன்னது?  வேணுமின்னா வேலையை விட்டுடு,” என்பான் விட்டேற்றியாக.

குழந்தைகள் நல்ல மதிப்பெண் வாங்கவில்லையென்றாலும் அவளுக்குத் தான் திட்டு விழும்.

“குழந்தைங்க படிக்கிறதைக் கூடக் கவனிக்காம அப்படியென்ன வீட்டுல வெட்டி முறிக்கிறே?” என்பான் கோபத்தோடு.

மனைவி படுத்த படுக்கையான பிறகு வேறு வழியின்றிச் சமையலைக் கற்றுக் கொள்ளத் துவங்கியவன், முதல் வேலையாக அரிசி குக்கர் வாங்கி வந்தான்.  க்டையில் விற்கும் மாவு வாங்கி வந்து இட்லி ஊற்றினான்.

குழந்தைகளுக்கு டியூஷன் ஏற்பாடு பண்ணியவன், பெண் குழந்தையின் முடியைக் குறைத்து ‘பாப்’ வெட்டி விட்டான்.  படிக்க நேரமில்லாததால், பத்திரிக்கைகளை நிறுத்த வேண்டியதாயிற்று.

முதன்முறையாக ரசம் செய்து பரிமாறிய போது,
 ”சே..  இது அம்மா வைக்கிற ரசம் மாதிரியில்ல...” என்று கோபத்தோடு தட்டை நகர்த்தி விட்டான் பையன்.

“எவ்ளோ கொழுப்பு இருந்தா தட்டைத் தள்ளி விடுவே?  ஒண்டியா கஷ்டப் பட்டு வேலை செஞ்சிக்கிட்டிருக்கேன்.  அவ்ளோ நாக்கு ருசி கேட்குதா?” என்றபடி பையன் கன்னத்தில், தன் விரல்கள் பதியும்படியாக அறை விட்டான் கணபதி.

“நீங்க மட்டும் எத்தினி நாள் சாப்பாடு சரியில்லேன்னு தட்டைத் தூக்கி அடிச்சிருக்கீங்க?  அம்மா பாவம்... ஒங்களால தான் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டாங்க”

மகன் தேம்பிக் கொண்டே சொன்ன வார்த்தைகளிலிருந்த உண்மை, அவனை நெருப்பாய்ச் சுட்டது.     
    

(20-07-2008 தினமணிக் கதிரில் ஒரு பக்கக் கதையாக எழுதியது)