நல்வரவு

வணக்கம் !

Sunday 27 March 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 2 தொடர் பதிவு

வலையுலகப் பிதாமகன் என்றழைக்கப்படும் திரு. கோபு சாரின் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தவை:-


இணையத்தமிழ் வளர்ச்சியில், இவரின் பங்களிப்பு மிக அதிகம்.
தமிழில் விமர்சனக்கலை இன்னும் முழு வளர்ச்சியடையாத நிலையில்,  விமர்சனப்போட்டி என்ற ஒன்றை அறிவித்து, 2014 ஜனவரி துவங்கிப் பத்து மாதங்கள் செம்மையாக நடத்திப் பதிவர்களிடம் ஒளிந்திருந்த விமர்சனத் திறமையை வெளிக்கொணர்ந்து, விமர்சன சக்ரவர்த்திகளையும், வித்தகிகளையும் உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

மாத ஓய்வூதியம் இல்லாத நிலையிலும், சொந்தப் பணத்தைத் தாராளமாகச்  செலவழித்து, ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் கொடுத்ததுடன், போனஸ், ஹாட்டிரிக், ஆறுதல் என்ற பெயர்களில் பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் கொடுத்துப் பதிவர்களை எழுத ஊக்குவித்தவர்.   

இப்போட்டிக்கு நடுவராக இருந்தவர், தேர்ந்த படிப்பாளியும், படைப்பாளியுமான பூவனம் ஜீவி சார் அவர்கள்.  அண்மையில்  மறக்க முடியாத எழுத்துலகம் – ந.பிச்சமூர்த்தியிலியிருந்து எஸ்.ரா வரை என்று இவர் எழுதி, சென்னை சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள அருமையான நூல் பற்றிய என் பார்வையைத் தனிப்பதிவாக எழுதியிருக்கிறேன்.       

சிலர் விமர்சனம் என்ற பெயரில் கதையை அப்படியே வரிக்கு வரி ஒப்பிப்பார்கள்.  ஆனால் கதையின் ஒரு வரியைக் கூடச் சொல்லாமல் விமர்சனம் செய்து அசத்தியவர், தீதும் நன்றும் பிறர் தர வாரா திரு ரமணி சார் அவர்கள். 

சூடிதார் வாங்கப் போறேன் என்ற கோபு சார் கதைக்கு, இவர் எழுதிய விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது.  

இளம் வயதிலேயே புகழ்பெற்ற வானம்பாடிக் கவிஞர்கள் சிலரோடு புதுக்கவிதையின் பிதாமகனான ந.பிச்சைமூர்த்தி அவர்களிடம் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்ற கவிஞர் இவர் என்பது ஒன்றே போதும், இவர் சிறப்பை நாம் அறிந்து கொள்ள. 

இவர் கவிதைகளினூடே வெளிப்படும் மனித நேயம், சமூக அவலங்களைக் காணும் போது, பாரதியைப் போல் நெஞ்சு பொறுக்காமல் வெளிப்படும் கோபம், பெண் முன்னேற்றம் குறித்த முற்போக்கு சிந்தனை ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தவை:--

பெண்கள் தினம் என்பது மலர்க்கொத்து பரிசளித்து, வாழ்த்துச் சொல்லும் கொண்டாட்ட நாளில்லை; அதன் உண்மையான நோக்கம் வேறு என்பதை எவ்வளவு அழுத்தந்திருத்தமாகப் பொட்டில் அடித்தாற் போல் சொல்கிறார் பாருங்கள்!

"பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?
இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்ப்
 படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்…………"(நம்மைக் கூர்ப்படுத்திக்கொள்ளும் நாள்)

என்னைக் கவர்ந்த வேறு சில படைப்புகள்:-

ஜெயகாந்தனிடம் “இப்போது ஏன் எழுதுவதில்லை?” என யாரோ கேட்க, “அது என்ன தோசையா, சுட்டுச் சுட்டு அடுக்குவதற்கு? என்றாராம்.  இக்கவிதையை வாசித்த போது, எனக்கு அவர் சொன்னது, நினைவுக்கு வந்தது.

"குட்டிக்கும் பசுவுக்கும்
வேறுபாடறியும்
ஐந்தறிவுக் காளைகள்
உலவுகிற பூமியில்
....
குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறு பாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே....
இளம் கன்றே
  நீ உலகறிவாய்"..... 

கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட அண்ணன் முத்துநிலவன் அவர்களின் இன்னொரு பரிணாமம், பதிவர் விழாவின் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பாளர்! 
2015 அக்டோபரில் புதுக்கோட்டையில் பதிவர்களை ஒருங்கிணைத்து உலகமே வியக்கும் வண்ணம், சிறப்பாகப் பதிவர் விழா நடத்திய இவரின் வலைப்பூ வளரும் கவிதை என்பது, நான் சொல்லாமலே, உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான்.
விழாவை முன்னின்று நடத்தியதோடு நில்லாமல், இணையத்தமிழை வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவரை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கலை, இலக்கியம் சினிமா என எல்லாவகைமைக்கும் விருது தரும் விகடன், வளர்ந்து வரும் வலைப்பக்க இலக்கியத்தை மறந்தது நியாயமா என விகடன் நிர்வாகத்துக்கு வலைப்பதிவர் சார்பாக கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.  
“அடுத்த ஆண்டாவது விகடன் விருதுப்பட்டியலில் நல்ல இலக்கியம் வளர்க்கும் சமூக விமர்சனங்களை முன் வைக்கும், தமிழ்ச்சமூகம் முன்னேற தளராது பணியாற்றும் தமிழ் வலைப்பக்க எழுத்தாளர்க்கும் தனியாக விருது வழங்கிட வேண்டுமாய் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.”
விகடன் இவர் கோரிக்கையைப் பரிசீலிக்குமானால், அடுத்த ஆண்டிலிருந்து, வலைப்பூவில் சிறப்பாக எழுதுவோர்க்கும் விருது கிடைக்க வாய்ப்புண்டு. 
தொடரும் தொடர் பதிவர்கள் என்ற தொடர் பதிவை, இவர் துவங்கிச் சிலரை எழுத அழைத்ததும், நல்ல பதிவுகள் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே.
இன்றைய தமிழில் பெண்கவிகள்  என்ற தலைப்பில் தமிழகத்துச் சங்க கால ஒளவை முதல் ஈழத்துச் சம கால அவ்வை வரையிலான பெண்கவிகளின் கவிதைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

இவரின் நீண்ட நாள் கனவான கவிதையின் கதை என்ற நூலை அடுத்த ஆணடு வெளியிடவிருக்கிறார்.  இதன் ஆக்கத்துக்காகவே தனியாகக் கவிதையின் கதை என்ற வலைப்பூவைத் துவங்கியிருக்கிறார்.

கவிதை என்பது யாது? என்ற முன்னுரையே, வெளியாகப் போகும் நூலின் ஆழத்திற்கும், அகலத்துக்கும் கட்டியங்கூறுவதாய் அமைந்து நம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது. 

இப்போது வலைப்பதிவில் தரமாக எழுதும் எழுத்தாளர்களை நேர்காணல் செய்து தர வரிசைப் பட்டியலில் அவர்கள் முன்னணியில் இருக்கும் காரணங்களைக் கேட்டறிந்து வெளியிடுவதன் மூலம், வலைப்பூவில் புதிதாக எழுதவரும் எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.
இதில் முதலாவதாக கூட்டாஞ்சோறு செந்தில் அவர்களின் சிறப்பான நேர்காணல் வெளியாகியிருக்கிறது. இவர் ஊடகத்துறையில் பணியாற்றும் பதிவர். 
இருட்டு நல்லது என்ற இவரின் கட்டுரை, புதுக்கோட்டை பதிவர் விழாவின் போது நடத்தப்பட்ட உலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டியில் சுற்றுச்சூழல் பிரிவில் முதற்பரிசு பெற்றது.
இயற்கையைப் பாழ்படுத்தியன் விளைவாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், நவீன தொழில்நுட்பம் ஆகியவை பற்றி, இவர் எழுதும் கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
எடுத்துக்காட்டுக்குச் சில:-
அடுத்து என்னை மிகவும் கவர்ந்த பதிவர் கீதா மதிவாணன்.  கவிதை, கதை, கட்டுரை, மொழியாக்கம், தமிழிலக்கியம் என பல்சுவை விருந்து படைக்கும் கீதமஞ்சரி எனும் வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். 
எழுத்து மட்டுமின்றி ஓவியம், புகைப்படம் போன்ற கலைகளிலும் ஈடுபாடு உண்டு.  ஆஸ்திரேலியா எழுத்தாளர் ஹென்றி லாசன் கதைகளை 'என்றாவது ஒரு நாள்' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.
பன்முகத்திறமை கொண்ட இவர் என் நெருங்கிய உறவினர் என்பதில் எனக்குப் பெருமை! 
என்னைக் கவர்ந்த பதிவுகளில் சில:-
நெருப்பெனத் தோன்றும் முருக்கம்பூ என்ற தலைப்பில் முருக்கம்பூவை பற்றிய பதிவு, சுவையான இலக்கிய மேற்கோள்களுடன். 

ஒண்ட வந்த பிடாரிகள் என்ற தலைப்பில் உலகின் பல பாகங்களிலிருந்து ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களால் சொந்த மண்ணின் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி விவரிக்கும் அருமையான தொடர்.

இது போன்று ஆஸ்திரேலியாவைத் தவிர உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசய உயிரினங்கள் பற்றிய தொடரும் சுவாரசியம் மிகுந்தது.

எழுத எழுத என் கட்டுக்கடங்காமல் நீளும் கட்டுரையை, அடுத்த பதிவுடன் எப்படியாவது முடிக்கத் திட்டமிருக்கிறேன்!
நன்றியுடன்
ஞா.கலையரசி
(படம் – நன்றி இணையம்)

Sunday 20 March 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 1 - தொடர் பதிவு




வளரும் கவிதை அண்ணன் முத்துநிலவன் அவர்கள், தொடரும் தொடர் பதிவர்கள்  என்ற தொடரைத் துவங்கிச் சிலரைத் தொடருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதில் நானும் ஒருத்தி.  என்னை அழைத்ததற்கு, அண்ணனுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணையத் தமிழை வளர்ப்பதையும், இளைய தலைமுறைக்கு, அதைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, அண்ணன் துவங்கியுள்ள இப்பதிவைக் கண்டிப்பாகச் சிறப்பான முறையில் தொடர வேண்டும் என விரும்பினேன்.  ஏதோ என்னாலான சிறு உதவி.

எனவே ஏனோ தானோ என, ஏற்கெனவே பிறர் தளங்களில் வாசித்திருந்த ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும், அறிமுகம் செய்ய விரும்பவில்லை.  எனக்குத் தெரிந்த, நன்கு எழுதக்கூடிய பதிவர்களின் தவறவிட்ட பதிவுகளைத் தேடியெடுத்து வாசித்த பிறகே, இதனை எழுத முற்படுகின்றேன்.

எனக்குப் பிடித்த எல்லாமும், எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல; ஆனால் நான் அறிமுகம் செய்யும் பதிவுகள் எல்லாமே, ஓரளவுக்குத் தரம் வாய்ந்தவை; தரமான எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் எழுதியவை என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

நேரப்பற்றாக்குறை காரணமாக இளையவர்களின் வலைப்பூக்கள் எதற்குமே நான் சென்றதில்லை;   நேரங்கிடைக்கும் போது, இத்தொடர்பதிவில் பிறரால் அறிமுகமாகும், எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களின் பதிவுகளை கண்டிப்பாக வாசிப்பேன்.

பிரபலங்களின் வரிசையில் நான் அடிக்கடி உலவுவது,  எஸ்.ரா எனப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலைப்பக்கம் என்றாலும், ஏற்கெனவே அண்ணன் முத்துநிலவன் அவரை அறிமுகப்படுத்திவிட்டதால், நான் தவிர்த்துவிட்டேன்.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டணம் என்ற ஊரில் பிறந்த தோப்பில் முகமது மீரான் என்பவரின் வலைத்தளம்,வேர்களின் பேச்சு.

இவரின் புகழ் பெற்ற புதினம், கடலோரக் கிராமத்தின் கதை.  1997 ஆம் ஆண்டு ‘சாய்வு நாற்காலி,’ என்ற புதினத்துக்காக, இவருக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

‘ஒரு வட்டார மக்களைப் பற்றி எழுதப்பட்ட இவை, உலகின் எல்லா வட்டார மக்களுக்கும் உரியவை,’ என்று இவர் வலைத்தள முகப்பில் சொல்லியிருப்பது மிகவும் உண்மை. 

எல்லா இடங்களிலும் மனிதர்கள் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்; என்ன தான் இனம், மொழி, கலாச்சாரம் மாறினாலும், இவர்களின் அடிப்படை குணங்கள் மாறுவதில்லை என்பதை இவர் கதைகளை வாசிக்கும் போது, உணர்வு பூர்வமாக நாம் அறிந்து கொள்ளலாம். 

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் என்ற கதையில் வரும் நிகழ்வு போலவே, எனக்கும் நடந்ததால் என்னால் அக்கதையை மிகவும் ரசிக்க முடிந்தது.  நீங்களும் படித்துப் பாருங்களேன்!    


என் மனதை மிகவும் பாதித்த இவருடைய இன்னொரு சிறுகதை தங்க வயல்‘. வாசித்து முடித்து ஒரு சில மணித்துளிகள், கதையின் பாதிப்பிலிருந்து, என்னால் மீள முடியவில்லை:-

அடுத்து என்னைக் கவர்ந்தது, நம் காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான நாஞ்சில் நாடன் அவர்களின் வலைத்தளம்.
எழுத்தாளன் என்பவன் யார்?
எழுதுகின்ற நாம் அனைவரும் எழுத்தாளர்கள் என்றால், நாம் தவற விடக்கூடாத பதிவு என நான் நினைப்பது அவர் எழுதிய
‘எழுத்தாளன் என்பவன்,’ என்ற கட்டுரை.  அதிலிருந்து சிறுபகுதி:-
“ஐந்தாண்டுகளுக்கு முன்பு, மேற்சட்டை இன்றி, வெகுளிப் பார்வையுடன் பிஸ்கெட் தின்று கொண்டிருந்தான் ஒரு சிறுவன். விடுதலைப் புலிகளின் தலைவன், தமிழின மாவீரன் பிரபாகரனின் மகன். அது முதல் காட்சி எனில், நெஞ்சில் குண்டடிபட்டு, கருஞ்சிவப்பு ரத்தம் படர்ந்து கொலையுண்டு கிடந்தது, அடுத்த காட்சி. அறம் பேசிய நமது அரசும், இத்தகு பாதகங்களுக்குக் கூட்டாகவும், சாட்சியாகவும் நின்றது.
மராத்திய, வங்காள, கன்னட, மலையாள தேசத்தினருக்கு இது நடந்திருந்தால், அவர்களின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும்? இங்கேன் சில காகங்கள்கூடக் கரையவில்லை? எழுத்தாளனைப் பொருட்படுத்தாத சமூகம் இது. ஒரு மொழியை, மொழி பேசும் சமூகத்தின் பண்பாட்டை, வரலாற்றை, கலையை, மரபுகளை அடுத்த நூற்றாண்டுக்கு எனத் தொடர்ந்து கடத்துபவன் எழுத்தாளன்.
அவன் குரல் நசுக்கப்படுமானால், அலட்சியப்படுத்தப்படுமானால், இளக்காரம் செய்யப்படுமானால், அது அந்தச் சமூகத்தின் இழிவு. அறிவுஜீவிகள் என்று கொண்டாடப்படுவோரே இதனை அறிந்திருக்கவில்லை என்பது எத்தனை அவலம்?”
அடுத்து  நான் தவறாமல் தொடரும் வலைப்பூ சொ.ஞானசம்பந்தன் அவர்களின் இலக்கியச்சாரல். இவர் என் தந்தை என்பதும் ஒரு காரணம்.
சிறுவயதில் இரவுச் சாப்பாட்டின் போது, தங்கை, தம்பிகளுடன் வட்டமாக அமர்ந்து கொண்டு, அப்பா சொல்லும் கதைகளை, அவர்தம் பழைய  நினைவுகளை, பாரீஸ் நகர அனுபவங்களை, பார்த்த உலகத் திரைப்படங்களை, படித்த பிரெஞ்சு இலக்கியங்களைத் திறந்த வாய் மூடாமல், சாப்பிட்ட கைகாயும் வரை கேட்பது எங்கள் வழக்கம்.
“கை காய்ஞ்சு போயிட்டுது; ஏந்திரிச்சி கையைக் கழுவிட்டாவது பேசுங்களேன்,” என்று அம்மா இடைஇடையே குரல் கொடுப்பார்.  நாங்கள் சட்டை செய்தால் தானே? பேச்சில் அத்தனை சுவாரசியம்! 
மு.வ, நா.பா, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என நூலகத்திலிருந்து அவர் தேர்ந்தெடுத்து வந்து கொடுத்தவற்றை வாசித்ததன் மூலம், ரசனையை ஓரளவு மேம்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது.
இப்போது அது போல் கலந்துரையாட முடியவில்லை என்ற குறையை, அவர் எழுதுபவற்றை வாசிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கிறேன். 
பிரெஞ்சு மொழிவழிக் கல்வி அவர் பெற்றதினால், பிரெஞ்சுக் கதைகள் சிலவற்றை அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  மொழியாக்கம் செய்ய இரு மொழிகளிலும் தேர்ந்த புலமை இருக்க வேண்டும் என்று சொல்வார்.  பிரெஞ்சு வழிக்கல்வி பெற்றவர் என்றாலும், பின்னாளில் சொந்த முயற்சியால், தமிழிலும் வித்வான் பட்டம் பெற்றதினால், அவருடைய ஆக்கங்களை வாசிக்கும் போது, மொழி பெயர்ப்பு என்ற எண்ணம் நமக்கு ஏற்படாது.
அவர் மொழி பெயர்த்த பிரெஞ்சு கதைகளில் இரண்டினை, உங்களுக்குச் சிபாரிசு செய்கிறென்.  வாசித்துப் பாருங்கள்.
முதலாவது அல்போன்ஸ் தொதே (Alphonse Daudet) எழுதிய அந்த வகுப்பு.  எனக்கு மிகவும் பிடித்த கதை இது.
இரண்டாவது பிரெஞ்சு சிறுகதை மன்னர் கீத மொப்பசான் (Guy de Mauppasant) எழுதிய அவன்.   

இக்கதையில் மொப்பசானின் மனநோய் பாதிப்பை, நாம் நன்கு உணர முடியும்.  ஒரு நாள் நடுஇரவில் படித்துவிட்டு, என் நிழலையே பார்த்துப் பயந்த அனுபவம் எனக்குண்டு!    
அடுத்து இயல்பாகவே எனக்குள்ள தமிழிலக்கிய, இலக்கண ஆர்வத்துக்குத் தீனி போடும் தளம் ஊமைக்கனவுகள்‘.

இவருடைய பதிவுகளின் சிறப்புகள் ஒன்றா இரண்டா, எடுத்துச் சொல்ல?  மரபுக்கவிதையில் வெளுத்து வாங்குபவர்! யாப்பு சூட்சுமத்தை எளிய கணக்கு மூலம் கற்றுக்கொடுத்தவர்.  கலித்தொகையைத் தொடராக எழுதப் போகிறேன் என்று சொல்லி, உற்சாகமாக முதல் பதிவை எழுதியவர், ஏனோ அதற்குப் பிறகு தொடரவில்லை.     

"வலையுலகமே காத்திருக்கிறது அய்யா," என்று அண்ணன் முத்துநிலவன் அவர்கள் கூறியிருப்பதை, நானும் வழிமொழிந்து மெளனத்தை உடனடியாகக் கலைக்குமாறு சகோதரர் ஜோசப் விஜூ அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவருடைய பதிவுகள் அனைத்தும் தேனாமிர்தம்.  எடுத்துக்காட்டுக்கு நான் கொடுத்திருக்கும் ஒன்றிரண்டை மட்டும் படித்துப் பாருங்களேன்.  பின் இவருடைய பதிவு, எதையும் தவற விட மாட்டீர்கள்!


'சாமான்யனின் கிறுக்கல்கள்' என்ற வலைப்பூவில் எழுதும் இவரின் பதிவுகள் சுவையானவை; ஆணித்தரமாக கருத்துக்களை முன் வைப்பவை; பல புதிய செய்திகளை அறிந்து கொள்ள துணை செய்பவை.  இவர் எங்களூரைச் சேர்ந்தவர் என்பதில் எனக்குப் பெருமை!   

ஆனால் இவரிடம் ஒரேயொரு குறை!  தொடர்ச்சியாக எழுத மாட்டார்.  ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்குமிடையில் நீ…ண்…ட இடைவெளியிருக்கும்!
இவரின் க்ளிஷே பற்றிய பதிவைப் படித்துப் பாருங்களேன்!   

காலம் திருடிய கடுதாசிகள் என்ற பதிவு, கடிதம் பற்றிய அக்கால சுகமான நினைவலைகளை மீட்டெடுத்து மனதை வருடிய பதிவு.

மேலும் என்னைக் கவர்ந்த பதிவுகள் பற்றி அடுத்த பதிவில்….
தொடரும்..
நன்றியுடன்
கலையரசி.ஞா.                               (படம் நன்றி இணையம்)

Saturday 12 March 2016

ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை – நூல் அறிமுகம்

ஆசிரியர்:- ஜீவி
வெளியீடு:- சந்தியா பதிப்பகம், சென்னை-83
தொலைபேசி:-044-24896979
பக்கம்:- 264  விலை – ரூ 225/-

பூவனம் ஜீவி அவர்கள் எழுதி வெளியாகியிருக்கும் மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்,  'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை,' என்ற புத்தகத்தை அண்மையில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

திரு ஜீவி அவர்களைப் பதிவுலகம் நன்கறியும்.  இதுவரை நான்கு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.  

திரு வை.கோபு சார், பத்து மாதம் பதிவுலகில் வெகு விமரிசையாக நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டியில் நடுவராக இருந்து கடமையுணர்வோடும், பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.

மறக்க முடியாத தமிழ் எழுத்துலகில், மணிக்கொடி காலத்தில் கோலோச்சியவர்கள் முதல், இன்றைய எஸ்.ரா வரை 37 எழுத்தாளுமைகளைப் பற்றியும், தமிழிலக்கியத்துக்கு அவர்தம் கொடை பற்றியும் பேசும் நூல் இது.

இப்பட்டியலில் கல்கி, நீல பத்மநாபன், கி.ரா., பிரபஞ்சன் போன்றோர் விடுபட்டது ஏமாற்றமளிக்கிறது என்றாலும், எழுத்தாளர்களின் எண்ணிக்கையை 37 ஆகக் குறைத்ததன் காரணம், நூலின் பக்க எண்ணிக்கை நெருக்கடியே என ஆசிரியர், தம் முன்னுரையில் குறிப்பிடுவது, ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிருக்கிறது.    

இதுநாள்வரை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி, இது போன்றதொரு  தொகுப்பு நூல் வெளியாகியிருப்பதாகத் தெரியவில்லை.  என் ஐயம் உண்மையாக இருக்குமானால், இவ்வரிசையில் முதல் நூல் என்ற பெருமையை இது பெறுகிறது.

வேருக்கு நீர் ஊற்றிச் செழிக்கச் செய்தவர்கள் பிறந்த மண், அவர்தம் இயற்பெயர், வாழ்க்கைச்சூழல், இலக்கியத்துக்கு அவராற்றிய அரும்பணி ஆகியவை குறித்து, நம் இளைய தலைமுறையினர் அறியும்வண்ணம் ஆவணப்படுத்துவது, நம் தலையாய கடமையல்லவா?  இப்பணியை இந்நூல் திறம்படவே செய்கிறது.  முக்கியமாகத் தமிழிலக்கிய வரலாறு எழுத, இது பெரிதும் துணைபுரியும். 

    வாசித்து முடித்ததும், என் மனதில் பட்டவை:-

தமிழில் நிறைய வாசித்திருக்கிறோம் என்று இறுமாந்திருந்த எனக்கு, இன்னும் நான் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்ற உண்மை முகத்தில் அறைகிறது.

ஆசிரியரின் பரந்து பட்ட வாசிப்பும், இந்நூலை எழுத எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தைகளும், என்னைப் பிரமிக்க வைத்தன. இளவயதில் வாசித்த பலவற்றை, மீள் வாசிப்பும் செய்திருப்பதால், பாத்திரங்களின் பெயர்களை ஒன்றுவிடாமல் பட்டியலிடமுடிகிறது.

மேம்பட்ட வாசிப்புத் திறனின் பயனாய், எழுத்தாளரின் மிகச்சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து, நமக்கு அறிமுகம் செய்வதோடு, முக்கியமான பகுதிகளை ஆங்காங்கே கொடுத்து, நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று, தாம் ரசித்து மகிழ்ந்தவற்றை, நமக்கு அடையாளம் காட்டவும் ஆசிரியர் தவறவில்லை. ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!’

இலக்கிய கர்த்தாக்களின் ஆக்கங்களைப் பேசும் நூல் என்பதால் ஆசிரியரும், இலக்கியத்தரமான நடையைக் கையாண்டிருக்கிறார்.  தொடர்ந்த வாசிப்பு காரணமாக பெற்ற மேம்பட்ட ரசனையோடு, எழுத்தாளராயுமிருப்பதால், இது சாத்தியமாயிருக்கிறது.  என்னைப் பெரிதும் கவர்ந்த விஷயம் இது.

எழுத்தாளர் ஒவ்வொருவரின் அறிமுகமும், ஒவ்வொரு விதம்;  ஒன்று போல் இன்னொன்றில்லை என்பதால், அடுத்தடுத்து வாசிக்கும்போது நமக்குச் சலிப்பு ஏற்படவில்லை.  சொல்லப்போனால், இவர் அறிமுகம் செய்யும் விதம், மிக சுவாரசியமாயிருக்கிறது. 

எடுத்துக்காட்டுக்கு நான் ரசித்தவற்றில் சில:-

(வாழ்க்கையின் தரிசனத்தில் நுட்பமாக நெஞ்சில் மின்னலென மின்னிவிட்டுப் போகும் உணர்வைப் பறிகொடுத்துவிடாமல் பொத்திக் காப்பாற்றி, அவற்றிற்குச் சிறுகதை சட்டையிட்டு உலாவவிட்டிருக்கிறார்.) கு.ப. ரா – பக் 18

(ஆலாபனை, மேல்கீழ் சஞ்சாரம் என்று விஸ்தாரமாக பாடத்தொடங்கிய பாடகர், சரணத்துக்கு வரும் போது அவசர அவசரமாக முடித்துக்கொண்டது மாதிரியான உணர்வு.  ஆனால் அவர் தரும் அந்த முடிவும், பளீரென்று மின்னல் வெட்டாய் நிகழ்ந்து, இதற்கு மேல் விவரிக்க என்ன இருக்கிறது என்கிற உணர்வையும் தோற்றுவிக்கும்) புதுமைபித்தன் பக் 30 

(தரிசித்த தரிசன தத்ரூபத்தின் விகசிப்பு, அப்படியே அதே வழிசலுடன்…சிந்தாமல், சிதறாமல், சிந்தா நதியாய்… அதே துள்ளலுடன், அதே துவளலுடன், அதே நெகிழ்தல், குழைதலுடன், அதே பரவசத்துடன், அதே சூட்டோடு பரிமாறியிருக்கிறார்.  தன் நெஞ்சிலிருந்து பிறர் நெஞ்சுக்குக் கூடு விட்டுக் கூடு பாயச் செய்திருக்கிறார்) லா.ச.ரா (பக் 55).

'புதுப்பாதை வகுத்த புதுமை பித்தன்', 'நினைவு நதியில் வண்ணதாசன்', 'கொஞ்சு தமிழ் நாஞ்சில் நாடன்,' 'எண்ண ஓவியன் வண்ணநிலவன்,' 'எழுத்துப்பயணி எஸ்.ரா.' என அழகிய கவிதையாய்த் தலைப்புகள்!.

புதிதாக நான் தெரிந்து கொண்ட செய்திகள் ஏராளம்; அவற்றுள்

இளவயதிலேயே கணவனை இழந்த சகோதரிக்கு, அந்நாளிலேயே மறுமணம் செய்து வைத்த புரட்சியாளர் கு.ப.ரா.  சகோதரியும் புகழ் பெற்ற எழுத்தாளர்;

புரட்சிக்கவிஞரின் புகழ் பெற்ற, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்,’ என்ற கவிதையை, முதன்முதலில் அச்சுக்கோர்த்தவர் எழுத்தாளர் விந்தன்,

எனக்குத் தெரியப்படுத்தாமல், என் கதையில் எந்தப் பகுதியையும் நீக்கக்கூடாது என்று ஜெயகாந்தன் போட்ட நிபந்தனைக்கு,  ஒப்புக்கொண்ட விகடன்!

வண்ணதாசனின் இன்னொரு பெயர் கல்யாண்ஜி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளினூடேயான ஒரு கழுகு பார்வையே, இதன் பக்கங்களாகி இருப்பதாக ஆசிரியர் முன்னுரையில் கூறியிருப்பது மிகச் சரி. 

நமக்குத் தெரியாத, நாம் தவற விட்ட நல்ல பல ஆக்கங்களை,  அறிமுகம் செய்து, அவற்றை எப்படியாவது ஒரு முறை வாசித்துவிட வேண்டும் என்ற உணர்வை, நமக்கு ஏற்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். 

தமிழில் இது போன்ற தரமான நூல்கள், அடுத்தடுத்து வெளிவர நாம் வரவேற்பு நல்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

வாசிப்பு சுகானுபவத்தை வாரி வழங்கிய ஆசிரியருக்கு நன்றி!

நன்றியுடன்,

ஞா. கலையரசி