நல்வரவு

வணக்கம் !

Sunday, 19 February 2012

’எச்சரிக்கை மணி’கடந்த வாரம் சென்னை பள்ளியொன்றில் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறைக்குள் தம் மாணவன் ஒருவனால் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது.

தினமணி நாளிதழில் மாணவன் ஆசிரியையைக் குத்தி விட்டுக் கழிவறைக்குள் போய்ப் புகுந்து கொண்டான் எனவும், மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து அவனைப் பிடித்தார்கள் என்றும் செய்தி வெளியாகியிருந்தது.  ஜூனியர் விகடனிலோ, அவன் குத்தி விட்டு எங்கும் தப்பித்து ஓடாமல், பெஞ்சிலேயே தலை கவிந்தபடி அமர்ந்திருந்தான் என்றிருந்தது.

பத்தாம் வகுப்புக்குப் பாடம் எடுக்கச் சென்ற ஆசிரியையைத் தொடர்ந்து சென்று மாணவன் குத்தினான் என்றும்,  கொலையுண்டவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மாணவர்கள், கையில் கத்தியுடன் நின்ற சகமாணவனைப் பார்த்துப் பள்ளி முதல்வருக்குத் தகவல் தெரிவித்தார்கள் என்றும் தினமலர் தெரிவிக்கிறது.

தமிழகத்தில், அதுவும் தலைநகர் சென்னையில் நடந்த ஒரு சம்பவம், ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஒவ்வொரு விதமாய்!   ஏன் இப்படி? எது சரியான தகவல்?

அமெரிக்கப் பள்ளிகளில் மாணவர்கள் தம் ஆசிரியரை, சக மாணவர் களைத் துப்பாக்கியால் சகட்டு மேனிக்குச் சுட்டுக் கொன்ற சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.  ஆனால் மாதா, பிதா, குரு தெய்வம், என்று ஆசிரியரைத் தெய்வத்துக்குச் சமானமாய்க் கருதும் தமிழகத்தில், இப்படியொரு கொலைவெறிச் சம்பவம் எனும்போது மனம் பதைக்கிறது. 

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பது ப்ற்றியும், பள்ளி வருகை நாட்கள் குறைந்தது பற்றியும் ஆசிரியை புகார் செய்ததால், ஆத்திர மடைந்த மாணவன் இக்கொலையைச் செய்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

தந்தையிடம் தன்னைப் பற்றிப் புகார் செய்த ஆசிரியை மீது கோபம் வரலாம்; வருத்தம் வரலாம். ஆனால் கொலை செய்யும் அளவுக்கு வெறி வருகிறது என்றால்? நினைக்கவே பயமாயிருக்கிறது.  நம் மாணவச் சமுதாயம் எங்கே போகிறது?  அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்தத் தவறி விட்டோமா நாம்? 

15 வய்தே நிரம்பிய இம்மாணவன், திட்டமிட்டுக் கத்தியை மறைத்து எடுத்து வந்திருந்தாலும், அதை முதன் முதலில் கையாளும் போது அவன் கைகளில்  நடுக்கமோ, ஆசிரியையைப் பார்த்துப் பதற்றமோ ஏற்படுமல்லவா?.  ஆனால் இவனோ தேர்ச்சிப் பெற்ற கொலைகாரன் போல, அவரது கழுத்து, வயிறு எனப் பலமுறை ஆக்ரோஷ்மாய்க் குத்தி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே, இறக்கும்படி பண்ணியிருக்கிறான்.

அக்னி பாத், என்ற இந்திப் படத்தைப் பார்த்துக் கொலை பண்ணத் தெரிந்து கொண்டதாகக் கூறியிருக்கிறான் அவன். நம் திரைப்படங்களும், மீடியாக்களும் சமுதாய நலன் கருதி, கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதன் அவசியத்தை இப்போதாவது உணர வேண்டும். 

இக்காலத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் அரிவாளால் எதிரிகளைக் கண்டந்துண்டமாக வெட்டித் துவம்சம் செய்பவனாகத் தான் கதாநாயகன் சித்திரிக்கப்படுகிறான்.  அது தான் ஹீரோயிசமாகக் கருதப்படுகிறது.  கிளைமாக்சில் எதிரியின் குரல்வளையை அறுத்து, அவன் இரத்தத்தைக் குடிப்பது போன்று தத்ரூபமாக காட்டப்படும் காட்சி, பிரமாதம் என விமர்சனத்தில் பாராட்டப்படுகிறது. 

பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என வீர வசனத்துடன் கூடிய இரத்தந் தோய்ந்த காட்சிகளைப் பார்த்துப் பார்த்து நம் பிஞ்சுகளுக்கு இயற்கையாக இருக்கக் கூடிய மென்மையான உணர்வு மரத்துப் போய், வக்கிர உணர்வு மிகுந்து விட்டது. அதனால் தான் இக்காலத்தில் குழந்தைகளுக்குக் கொலை என்பது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத, மிகவும் சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது.

கல்வி, மருத்துவம் உட்பட எல்லாமே வணிகமயமாகி விட்ட இன்றைய சூழலில், பொருளீட்டுவது மட்டுமே கல்வியின் குறிக்கோளாகக் கருதப்படுகிறது.  இதன் காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர்களை நாட்முழுக்க படிப்பு, தேர்வு என டிரில் வாங்கி மதிப்பெண் வாங்க வைப்பதை மட்டுமே தம் இலக்காகக் கொண்டு அதிக லாபம் ஈட்டுகின்றன.. இப்பள்ளிகளில் தம் பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர் தவமாய் தவமிருக்கிறார்கள்.   

மனித நேயம், குழுவாக இணைந்து செயல்படுதல், நேர்மை, நாணயம், வாக்குத் தவறாமை, நேர் வழியில் பணம் சம்பாதித்தல் உள்ளிட்ட நற்பண்புகள் பலவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு பள்ளிகளுக்கு உள்ளது.   

இது போன்ற நன்னெறிகளையும் நற்பண்புகளையும் போதிக்கக் கூடிய பாடங்களை நம் கல்வித் திட்டத்தில் சேர்த்து இவற்றைச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மனதில் பதியும்படி போதித்து நாட்டுப்பற்று மிக்க சிறந்த குடிமக்களை உருவாக்குவது கல்வியின் முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டும்.  அதிக மதிப்பெண் வாங்க வைப்பது மட்டுமே கல்வியின் குறிக்கோள் என்றால், அதற்கு ’டியூஷன் சென்டர்’ போதும், கல்விக்கூடங்கள் தேவையில்லை!

அளவுக்கதிகமாக செல்லங் கொடுத்துப் பிள்ளைகளைச் சீரழிக்காமல், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து, பாசம் காட்ட வேண்டிய நேரத்தில் பாசம் காட்டி, ஒழுக்க சீலராக வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோரைச் சார்ந்தது.
சிறு வயது முதலே அவர்களது நண்பர்களைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.  உன் நண்பனைக் காட்டு; உன்னைப் பற்றிச் சொல்கிறேன், என்று சொல்வார்கள் அல்லவா? சிகரெட், மது, போதை போன்ற கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்ளக் காரணமாக இருப்பது தீய நட்பு தான்.  சேர்க்கை சரியாக இருந்தால், பிள்ளைகள் தடம் மாறிப் போகும் அபாயம் மிகவும் குறைவு.

தம் ஆசைகளைக் குழந்தைகள் தலையில் திணிக்காமல், ஆசைப்படும் துறையில் அவர்களைப் படிக்க அனுமதித்தால் அந்தத் துறையில் அவர்கள் பிரகாசிக்க வாய்ப்புண்டு.  குழந்தைகள் கேட்கும் பொருட்கள் அனைத்தையும் உடனுக்குடன் வாங்கித் தராமல், பணத்தின் அருமையை, குடும்பச் சூழ்நிலையை,  அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. 

சிறு இழப்புக்களை, ஏமாற்றத்தைத் தாங்கும் சக்தி இளம்வயதிலேயே அவர்களுக்குத் தேவை. இல்லையேல் பின்னாளில் எந்தவொரு சிறு ஏமாற்றத்தையும் தாங்க, மனதில் வலுவின்றி தற்கொலையையோ, போதைப் பொருளையோ அவர்கள் நாடக் கூடும். .    
       
தொலைக்காட்சி, இணையம், அலைபேசி என மாணவனுக்கிருக்கும் கவனச்சிதறலின் காரணமாக ஆசிரியப்பணி முன்னெப்போதையும் விட, இப்போது மிகவும் சிக்கலாகி யிருக்கிறது. உமா மகேஸ்வரி மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு தம் பணியைச் செய்து வந்ததாக, பள்ளி நிர்வாகத்தினரும் பெற்றோரும் பேட்டியில் கூறியிருக்கின்றனர். 

சரிவரப் பள்ளிக்கு வராத, படிப்பில் அக்கறையில்லாத மாணவன், எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன? என்று இருந்து விடாமல், அவனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், அவரது உயிரைக் குடித்து விட்டது தான், சோகத்திலும் பெரிய சோகம்!

வகுப்பறையில் மாணவனால் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில், இதுவே முதலாவதாக இருக்கக்கூடும். 

இந்த நிகழ்வு நம் கல்விமுறைக்கும், பெருகி வரும் மாணவச் சமுதாயத்தின் ஒழுக்கச் சீர்கேட்டுக்கும், பிள்ளைகளின் ஒழுக்கத்தை விட மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோருக்கும், ஊடகத் தர்மத்தைக் காற்றில் பறக்கவிடும் மீடியாக்களின் அத்துமீறலுக்கும், நம் பண்பாட்டை மறந்து, மேற்குக் கலாச்சாரத்தை ஈயடிச்சான் காப்பி யடிக்கும் ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் எதிராக அடிக்கப் பட்டிருக்கும் ஓர் எச்சரிக்கை மணி!  

Friday, 17 February 2012

பாடம் - கவிதை


பின்னங்கால் நிலத்தில் பதியாமல்
முன்னங்காலை மட்டும் ஊன்றி
தட்டுத் தடுமாறி குழந்தை
நடை பயின்ற வேளை,
கால் தடுக்கி கீழே விழுந்து
அழுத போது
தவறேதும் செய்யாத
தரையை அடித்துச்
சமாதானம் செய்தாள் அன்னை.

Wednesday, 15 February 2012

கொலுசு - சிறுகதை

முதன்முதலில் வேலையில் சேர்ந்த போது எனக்குப் பிடித்த கொலுசு வாங்கிப் பரிசளித்தார் அம்மா.

அலுவலகத்தில் உமா எனக்கு நெருங்கியத் தோழியானாள், தன் குடும்பப் பிரச்சினைகளை ஒளிவு மறைவின்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு.

அவளுடைய அப்பா ஓர் உதவாக்கரை.  மூன்று குழந்தைகளுடன் அவளது அம்மாவை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டார்.  இவள் தான் மூத்தவள்.  தங்களைப் படிக்க வைக்க, வளர்த்து ஆளாக்கத் தன் அம்மா பட்ட
கஷ்டங்களை அவள் விவரிக்கும் போது வேதனையாயிருக்கும்.

தன் குடும்ப நிலைமையுணர்ந்து கஷ்டப்பட்டுப் படித்து இப்போது கிளார்க் வேலைக்குப் பயிற்சியாளராகச் செர்ந்திருக்கிறாள் உமா.

"இனிமே எங்க வீட்டுக்கு விடிவு காலம் தான்.  இப்பக் கிடைக்கிற உதவித் தொகை ரொம்பக்கம்மி தான் என்றாலும் ஒரு வருஷம் முடிஞ்சி வேலையில சேர்றப்ப, நல்ல சம்பளம் கிடைக்கும்.  அதற்கப்புறம் அம்மாவைக் கஷ்டப்பட விடமாட்டேன்.  ராணி மாதிரி வச்சுக்குவேன்."  சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கும்.

'இவளல்லவோ பெண்!' மனதிற்குள் மெச்சிவேன்.

ஒரு நாள் அம்மா வாங்கிக் கொடுத்த கொலுசை நான் அணிந்து சென்ற போது,
"கொலுசு ரொம்ப அழகாயிருக்கு.  அழகான ஒன் கால்கள்ல இருக்கிறதினால, அதுக்கு ரொம்பவே மெருகு கூடியிருக்கு" என்றாள் உமா.

"போதும், போதும் புகழ்ந்தது.  கொலுசை யார் போட்டாலும் நல்லாத் தான் இருக்கும்.  ஏன் நீ வேணா போட்டுப் பாரேன்" என்று கழற்றக் குனிந்தேன்.

"அய்யய்யோ, வேண்டாம், வேண்டாம்," என் கைகளைப் பிடித்துத் தடுத்தாலும் போட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருப்பதை முகக்குறிப்பு வெளிப்படுத்தியது.  அவளும் பெண் தானே!

கொலுசு வாங்கி அணிய முடியாத நிலையில் அவளிருக்கும் போது, நான் போட்டுக் கொண்டு போயிருக்கக் கூடாது என்று எனக்குள் குற்றவுணர்ச்சி.

"இன்னிக்கு மட்டும் போட்டுக்கோ.  சாயங்காலம் வீட்டுக்குப் போறப்ப வாங்கிக்கிறேன்"

மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு அணிந்து கொண்டாலும், அதனால் அவளுக்கேற்பட்ட மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது.  ஜல் ஜல் என்ற சப்தத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவள் குறுக்கும்நெடுக்கு மாகத் தேவையின்றி நடப்பதாக எனக்குத் தோன்றியது.

அலுவலகம் முடிந்து மாலை இருவரும் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வரும் போது, திடீரென்று உமா கத்தினாள்.

"அய்யய்யோ! ஒரு கொலுசைக் காணோம்"

பகீரென்றது எனக்கு.  அவளது ஒரு கால் வெறுமையாயிருந்தது.  வந்த வழியே திரும்பிப் போய்த் தேடிப்பார்த்தோம்.  கொலுசு கிடைக்கவேவில்லை. 

குற்றவுணர்ச்சி தாங்காமல் வழியெல்லாம் அழுது கொண்டே வந்தாள் உமா. 

"அழாதே உமா.  கொலுசு காணாமப் போறது சகஜம் தான்.  உன்னை வற்புறுத்திப் போட்டுக்கச் சொன்னது நான் தான்.  இதுல உன் தப்பு எதுவுமில்லை".

மேலுக்கு அவளிடம் சமாதானம் சொன்னாலும் அம்மாவிடம் வாங்கப் போகும் வசவை எண்ணி மனம் சஞ்சலப்பட்டது.

ஒரு கொலுசை வாங்கி கைப்பைக்குள் வைத்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.  வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மா கேட்ட முதல் கேள்வி:

"காலையில போட்டுட்டுப் போன கொலுசு என்னாச்சு? சத்தத்தையே காணோம்?"

கொலுசைத் தொலைத்து விட்டதாகச் சொன்னேன்.  அம்மாவுக்கோ ஆத்திரமான ஆத்திரம்.

"எத்தனை கடை ஏறி இறங்கிப் பார்த்துப் பார்த்து வாங்கினேன்.  சரியான தெம்மாடி.  கால்ல இருந்து ஒரு கொலுசு கழண்டு விழறது கூடவா, ஒரு பொண்ணுக்குத் தெரியாது?  ஒரு பைசாவுக்குக் கூட உருப்பட மாட்டே.  காசோட அருமை தெரிஞ்சிருந்தா, அவ்ளோ அலட்சியமா இருந்திருப்பியா?"

அம்மா அன்று முழுக்கத் திட்டிக் கொண்டே இருந்தார்.

உண்மையைச் சொன்னால், அவளிடமிருந்து அதற்குரிய பணத்தை அம்மா வாங்கி வரச் சொல்லிவிடுவாரோ  என்ற பயத்தில், கடைசி வரை உமா தான் கொலுசைத் தொலைத்தாள் என்று நான் சொல்லவேயில்லை.   


(தினமணிக் கதிரில் ஒரு பக்கக் கதையாக எழுதியது)


 
     

Saturday, 11 February 2012

ஒரு பல்லின் கதை - சிறுகதை

சிறு வயதில் விளையாடும்போது வாசல்படியில் தடுக்கி விழுந்ததால், என் முன் பல்லின் கீழ்புறம் சிறிது உடைந்துவிட்டது. நல்லவேளையாக, கன்னாபின்னாவென்று உடையாமல் சிறு செதிலாக உடைந்திருப்பதால், முகத்திற்கு விகாரமாயில்லை என அம்மாவிற்குத் திருப்தி.

ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, அந்தப் பல்லின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாகக் கறுப்பாகிக் கொண்டே வந்ததறிந்து அம்மாவுக்குக் கவலை. ஏற்கெனவே அரியலூர் ரயில் விபத்தில் அடிபட்டது மாதிரி, மூக்கில்லாமல் நாக்கில்லாமல் பிறந்திருக்கும் பெண்ணின் முன்பல்லுக்கும் கேடு வந்ததென்றால், எந்த அம்மாவால் கவலைப்படாமல் இருக்கமுடியும்?

"ஏங்க! இவளுக்கு முன் பல் வர வரக் கறுப்பாவுது. அதனால அந்த மாங்கொட்டைத் தலையன்கிட்ட ஒரு முறை அழைச்சிட்டுப் போயிட்டு வாங்களேன்".

எங்கள் ஊர் பல் டாக்டருக்கு அம்மா வைத்த பெயர்தான் மாங்கொட்டைத் தலையன். முன் மண்டை முழுக்க வழுக்கையாயும், பின் மண்டையின் ஓரம், கொஞ்சம் சிலுப்பி விடப்பட்ட முடியோடும் இருந்த அவரைப் பார்த்த போது அம்மா வைத்த பெயர் மிகவும் பொருத்தமாகவே இருப்பதாகப் பட்டது!

‘ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பார்களே, அது போல எங்களூருக்கு இவர்தாம் ஒரே பல் டாக்டர். பல்லில் எந்தக் கோளாறு என்றாலும் இவரிடமே போக வேண்டிய கட்டாயம்.

அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, அப்பா அவரிடம் என்னை அழைத்துப் போனார். அரை மணி நேரம் என் பல்லைப் பல கோணங்களில் ஆராய்ந்தவர், முடிவில் அந்தத் துயரந் தரும் அறிவிப்பினை வெளியிட்டார்.

"உங்கள் பல் செத்துவிட்டது; அதனால் தான் அது கறுப்பாகி வருகிறது," என்பதுதான் அந்த அறிவிப்பு.

என் பல்லின் சாவுச் செய்தி கேட்டு நான் அதிர்ந்து போய் நிற்க, "உடனே சிகிச்சை செய்யாவிட்டால், பக்கத்துப் பற்களும் விரைவில் ஒவ்வொன்றாக உயிரை விட்டு, இப்பல்லைப் போல் கறுப்பாகி விடும்," என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

இச்செய்தி கேட்டு அப்பாவும் கலக்கமடைய, "பயப்படத் தேவையில்லை. தொடர்ச்சியா ஒருமாசம் என்கிட்ட சிகிச்சை எடுத்துக்கிட்டா, ஒங்க பெண்ணோட மத்தப் பற்களைச் சாவிலிருந்து என்னால காப்பாத்திட முடியும்; இந்தக் கறுப்புப் பல் மேலேயும் வெள்ளையா ஒரு கேப் போட்டுட்டா, பார்க்கிறவங்களுக்கு வித்தியாசமாத் தெரியாது " என்று உறுதியளித்தார்.

அத்தருணத்தில், எனது பற்களை இரட்சிக்க வந்த தேவ தூதனாக, என் கண்களுக்கு அவர் காட்சியளித்தார்.

அன்று முதல் தினமும் அப்பாவுடன் அவரிடம் போய்ப் பல்லைக் காட்டிவிட்டு (சிகிச்சைக்குத்தாங்க!) மொய் அழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

ஈறுகளில் அவர் செய்த அறுவை சிகிச்சை காரணமாக, முகம் வீங்கி, கண், மூக்கு எல்லாம் வெளியில் தெரியாமல் ஒரு வாரம் புதையுண்டு போயின. ஒரு வாரங் கழித்து வீக்கம் முழுவதுமாக குறைந்த பிறகு, என் கறுப்புப் பல் வெள்ளையாவதற்கான சிகிச்சை துவக்கப்பட்டது.

அன்று என் பல்லை உடைக்க(!) அவர் எடுத்து வந்த சுத்தியல் வடிவ ஆயுதத்தைப் பார்த்துப் பயந்து விட்டேன்.

"பயப்படாதீங்க! உங்க ஒரிஜினல் பல்லை முழுசும் எடுத்துட்டு, வேற பல்லை வைச்சா அவ்வளவு உறுதியாயிருக்காது. அதனால அதைப் பாதியா ஒடச்சிட்டு, அது மேல ஒரு கேப் போட்டுடுவேன். அது உங்க ஒரிஜினல் பல் மாதிரியே ஸ்டிராங்காயிருக்கும்".

பல்லில் சுத்தியலை வைத்துத் தட்ட, விண் விண்ணென்று வலி உயிர் போனது.

"வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்தா பேசுற, பல்லை உடைச்சிடுவேன்," என்று அம்மா அடிக்கடி திட்டுவது ஞாபகத்துக்கு வந்தது!

பழங்காலத்தில் பல்லை உடைப்பது ஒரு தண்டனையாக இருந்திருக்குமோ?

ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் டாக்டரின் கையைப் பிடித்துத் தள்ளிவிட்டேன்.

"அது உயிரில்லாத பல்தானே? வலிக்காதே!" என்றார் டாக்டர் ஐயத்துடன்.

பக்கத்திலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பல்லைப் பார்த்தேன்.
கறுப்புப் பல்லின் பக்கத்துப் பல்லில் லேசாக கீறல் விழுந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

இவ்வளவு நேரம் உடைக்க வேண்டிய பல்லை விட்டுவிட்டுப் பக்கத்துப் பல்லை உடைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையறிந்து கோபமாக முறைத்தேன்.

"சாரி, கை தவறிப் பக்கத்துப் பல்லுல பட்டுடுச்சு போலேயிருக்கு" என்று நெளிந்தார் டாக்டர்.

ஒரு வழியாகப் பல்லைப் பாதியாகக் குறைத்தவர், பல் செட் ஒன்றை என் பல்லில் பொறுத்தி அளவெடுத்தார்.

"இன்னும் ஒரு வாரத்தில் கேப் ரெடியாயிடும். வந்து பொருத்திக்கலாம்"

எனக்கோ அளவிட முடியா மகிழ்ச்சி. இனிமேல் என் முக அழகை(?) இந்தக் கறுப்புப் பல் கெடுக்காது.

ஒரு வாரங் கழித்துப் பல்லைப் பொருத்தியவர், கண்ணாடியை என்னிடம் கொடுத்து, "இது எப்படி இருக்கு?" என்றார் ரஜினி ஸ்டைலில்.

கண்ணாடியில் பார்த்த போது, என் கறுப்புப் பல், இளஞ் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

"என்ன டாக்டர்? பல் வெள்ளையாயில்லாம, சிவப்பு கலர்ல இருக்கு?" என்றேன் ஏமாற்றம் கலந்த கோபத்துடன்.

"அதுவா? பல் ரொம்பவும் வெள்ளையாயிருந்தா பாக்கிறவங்களுக்கு 'ஆர்டிபிஷியல்'னு உடனே தெரிஞ்சிடும். 'நேச்சுரலா' தெரியணும்னா, கலர் இப்படித்தான் இருக்கணும்" என்று பல்லின் நிறத்துக்குப் புது விளக்கம் கொடுத்தார் டாக்டர். அந்த விளக்கத்தைக் கேட்டவுடன், அவரது வழுக்கை மண்டையில் ஒரே போடாகப் போடலாமா என ஆத்திரம் வந்தது.

இப்போது என்னைப் பார்ப்பவர்கள், "உங்கப் பல்லுல இரத்தம் வருது" என்று சொல்கிறார்கள்.

எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை, பொய்ப் பல், அதைப் பொருத்தக் கட்டணம் என்று ஆயிரக்கணக்கில் தண்டச் செலவு செய்து நொந்து போயிருந்த என்னை நினைத்து, என் கறுப்புப் பல் இரத்தக் கண்ணீர் சிந்துகிறதோ?

(நிலாச்சாரலில் எழுதியது)

Thursday, 9 February 2012

’பள்ளிகொண்டபுரம்’ - நாவல்
கேரளாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இப்போது திருவனந்தபுரத்தில் வசித்து வரும் திரு நீல.பத்பநாபன் அவர்கள் எழுதிய பள்ளிகொண்டபுரம், நாவலை வாசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. 

தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள், தேரோடும் வீதி, இலையுதிர்காலம் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி யிருக்கும் இவர், சாகித்ய விருது மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர்..

Monday, 6 February 2012பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் எனக்குக் கீதமஞ்சரி அளித்திருக்கும் இவ்விருதினை ஊக்கப்பரிசு என்ற வகையில் மனமுவந்து நன்றியுடன்  ஏற்றுக் கொள்கிறேன்.  இவ்விருதினைக் கீதாவுக்கு அளித்த ஸரவாணி அவர்களுக்கும் என் நன்றி.
 என்னுடன் சேர்ந்து இவ்விருதினைப்பெறும் அனைவருக்கும் என் வாழ்த்து.  

Thursday, 2 February 2012

'சுற்றுலா அனுபவங்கள்'


சுற்றுலா செல்வதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சென்ற பயணங்களில் மறக்க முடியாதது என்றால், அது மும்பைப் பயணம்தான்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து முடித்த பிறகு, 1998 ஆம் ஆண்டில் மும்பைச் செல்லத் தீர்மானித்தோம். ஆனால் ஹிந்தி தெரியாது என்பதால் அங்கு பயணம் மேற்கொள்ளப் பயமாயிருந்தது.

யாராவது தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் ஏற்பாடு செய்து கொடுத்தால் தேவலாம் என்று தோன்றியது. என் சக ஊழியர், "நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க, என் தங்கை பல வருஷமா அங்க இருக்கா. அவகிட்ட சொல்லிட்டா, அவளே எல்லாத்தையும் பார்த்துப்பா," என்றார்.

"எங்களுக்கு நல்ல லாட்ஜ் புக் பண்ணிக் கொடுத்தாப் போதும்; வேற எதுவும் அவங்க பண்ண வேணாம். அட்வான்ஸ் எவ்வளவுன்னு கேட்டுச்
சொன்னீங்கன்னா, நான் டி.டி எடுத்து அனுப்பிடறேன்," என்றேன் நன்றிப் பெருக்கோடு.

"அவகிட்ட கேட்டேன். ஏற்பாடு பண்ணிட்டு வாங்கிக்கிறதா சொல்லியிருக்கா. அதனால நீங்க அங்கப் போனப்புறம் நேரிலேயே கொடுத்துடலாம்," என்றவர், "அவ வூட்டைக் கண்டுபிடிக்க நீங்கச் சிரமப்பட வேண்டாம்; அவளே ஸ்டேஷன் வந்து உங்களை அழைச்சிட்டுப் போவா," என்றும் சொல்லித் தம் தங்கையின் புகைப்படத்தைக் காட்டினார்..

நாங்கள் பயணம் செய்யும் ‘கோச்' எண்ணை அவரிடம் கொடுத்து விட்டதாகச் சொன்ன அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, என் குடும்பமும் தங்கை குடும்பமும் சேர்ந்து மும்பை நோக்கிப் பயணமானோம்.

என் அலுவலக நண்பர் சொன்னபடி அவர் தங்கை சாந்தி முன்கூட்டியே மும்பையின் புகழ் பெற்ற சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து எங்களுக்காக காத்திருந்தார். இந்தக் காலத்தில் இப்படிக்கூட இருப்பார்களா? என்று ஆச்சரியம். ஏற்கெனவே புகைப்படத்தைப் பார்த்திருந்ததால், சுலபமாக அவரை அடையாளம் கண்டுபிடித்து விட்டேன். அப்போது அலைபேசி புழக்கத்தில் இல்லாத காலம்.

பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு, எங்களை அழைத்துப் போக வந்தமைக்காக நன்றி தெரிவித்தோம். "என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் நீங்க தங்கப் போகும் இடமிருக்கு; அதனால முதலில் டாக்சி பிடித்து என் வூட்டுக்குப் போகலாம்," என்றார் சாந்தி மாமி.

அவரது கணவருக்குப் பாபா அணுமின் நிலையத்தில் வேலை என்பதால் அந்த மின்நிலையத்துக்கான குடியிருப்பில் அவரது வீடு இருந்தது. பாதுகாப்பான பகுதியாயிருந்தபடியால் உள்ளே போகும் ஒவ்வொரு காரும், வாயிலில் எண்ணைப் பதிவு செய்து விட்டுத்தான் நுழைய முடியும்.

ஆகா! நல்ல பாதுகாப்பான பகுதியில் நம் தங்குமிடம் இருக்கிறது, இவருக்கு நம் நன்றிக்கடனை எப்படிச் செலுத்தப் போகிறோம்,' என்று எண்ணியபடியே காரில் பயணித்தோம். அவர் வீட்டையடைந்த போது இன்னோர் ஆச்சரியம் காத்திருந்தது. எங்களுக்காக சமையல் செய்து வைத்திருந்தார் மாமி. இரண்டு நாட்கள் பயணத்தில் சரியாகச் சாப்பிடாமல் இருந்த நாங்கள், அவருக்கு நன்றி சொல்லிவிட்டுச் சாப்பிட்டோம்.

சாப்பாடு முடிந்த பிறகு எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். அவரது வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்தது அது. அது லாட்ஜ் அல்ல. பாபா அணுமின் குடியிருப்பில் காலியாக இருந்த ஒரு வீடு.

"இது போல ஒரு வீடு, நீங்க எங்க தேடினாலும் கிடைக்காது. உங்களுக்கு லாட்ஜ் புக் பண்ணத்தான் அண்ணா சொன்னார். இது மாதிரி வசதியா வீடு இருக்கும் போது, நீங்க எதுக்கு வெளியில போய்த் தங்கணும்?" என்றார் சாந்தி.

'எங்களுக்கு உதவுவதற்காகவே இவர் ஜென்மம் எடுத் திருக்கிறாரோ? இவருக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடனை நான் எப்படி அடைக்கப் போகிறேன்?' என்று சிந்தித்தபடியே, "இதற்கு எவ்வளவு வாடகை தர வேண்டும்?" என்றேன்.

"ஒரு நாளைக்கு ரூமுக்கு இரண்டாயிரம் வரை இருக்கலாம்னு நீங்க சொன்னதா அண்ணன் சொன்னார். இதுக்கு ஒரு நாள் ஐநூறுதான் ஆகும்; பாதுகாப்பாவும் இருக்கும்" என்று அவர் சொன்ன போது, அலுவலக நண்பர் உதவியுடன் மும்பையில் நல்ல பாதுகாப்பான இடத்தில் நினைத்ததை விட நாலில் ஒரு பங்கு குறைவான வாடகையில் தங்குமிடம் ஏற்பாடு பண்ணி யிருக்கும் என் சாமர்த்தியத்தை நானே மெச்சிக் கொண்டேன்.

இரண்டு நாட்கள் பயணம் என்பதால் அன்று முழுதும் ஓய்வெடுத்துக் கொண்டு, மறுநாள் ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்பது திட்டம். அன்றிரவு நன்றாய் உறங்கிவிட்டு மறுநாள் காலை குளித்துக் கிளம்பி மாமி வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றால், அங்குக் காலை உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

"அச்சச்சோ, அதெல்லாம் வேண்டாம்; நாங்கள் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறோம்" என்று எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும் விடவில்லை.

வேறு வழியின்றி டிபன் செய்ய உதவி செய்து விட்டு, சாப்பிட்டுக் கிளம்பினோம். அத்தனை பேருக்கும் சப்பாத்தி, சப்ஜி, கூடவே தயிர் சாதம் செய்து சாப்பிட்டு முடிக்கவே, காலை பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

சாப்பாடு முடிந்து டாட்டா, பை பை சொல்லி விட்டுக் கிளம்பினால், "நாங்களும் உங்களோட வர்றோம்" என்றார் சாந்தி.

"அப்படியா, யார் யார் வருகிறீர்கள்?" என்றேன்.

"நாங்க எல்லாருமேதான். இந்த அம்பி எனக்குத் தூரத்துச் சொந்தம். ஊர் சுத்திப் பார்க்க போன வாரம் வந்தான். நீங்க வந்த பிறகு சேர்ந்து பார்க்காலாமுன்னு அவனைத் தங்க வைச்சிருக்கேன்," என்றார் அவர்.

சாந்தி, அவரது கணவர், மகள்கள் இருவர், அவர்களோடு இஞ்சித் தின்ற குரங்கு போல இருந்த அந்த அம்பியும்! 'அடடா! நம் பிரைவசி கெட்டுப் போய் விடுமே,' என்று உள்ளுக்குள் இலேசான அதிருப்தி தோன்றினாலும், அவருக்கு நாங்கள் பட்டிருக்கும் நன்றிக்கடனை அடைக்க இது ஒரு நல்ல வழி என்று மனதைத் தேற்றிக் கொண்டு, "ரொம்ப சந்தோஷம், வாங்க, வாங்க" என்று இன்முகம் காட்டி அழைத்துக் கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினோம்.

முதலில் கேட்வே ஆப் இந்தியாவுக்குச் சென்றோம். அதன் பக்கத்தில்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான அழகான தாஜ் ஹோட்டல் உள்ளது. கேட் வே ஆப் இந்தியாவிலிருந்து எலிபெண்டா குகைக்குப் படகில் செல்ல வேண்டும். படகுப் பயணத்துக்கு அனைவருக்கும் டிக்கெட் வாங்கி அக்குகைக்குப் பயணமானோம். அதற்கடுத்த நாட்களில் மும்பையின் புகழ் பெற்ற கடற்கரைகள், மகாலெட்சுமி கோயில் எனப் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்தோம்.

வாரம் முழுக்க அவர்களும் எங்களுடன் சேர்ந்து சுற்றியதால் தினமும் மதிய, இரவு வேளைச் சாப்பாடு செலவு முழுக்க எங்கள் தலையில் விடிந்தது. காலையில் மட்டும் அவர் வீட்டில் சாப்பாடு. தினமும் தயிர் சாதம்தான் காலை உணவு. தயிர்சாதத்தைக் கூழ் போல் கிண்டி தட்டில் போட்டு அதன் நடுவே ஊறுகாய் வைத்துக் கொண்டு, சர்.. சர்.. என்று எல்லோரும் உறிஞ்சி உறிஞ்சிச் சாப்பிட்டனர்.

எங்களுக்கோ தொட்டுக்கொள்ளக் காய் எதுவுமில்லாமல், சாப்பாடு இறங்க மறுத்தது. அப்படியே ஒரு சில நாட்களில் காய் இருந்தாலும், எல்லோருக்கும் ஒரு ஸ்பூன் மட்டுமே பரிமாறும் அளவுக்கு மிகக் குறைவாக இருந்தது. வீட்டில் காய் எதுவும் தின்னாத என் பையன், ‘கோஸ் பொரியலைக் கூட(!) இன்னுங் கொஞ்சம் வைங்கம்மா," என்று கெஞ்சிக் கேட்டுச் சாப்பிட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கஞ்சியிலிருந்து தப்பி வெளியில் போய் டிபன் ஏதும் சாப்பிடலாம் என்றால் பக்கத்தில் ஹோட்டல் ஒன்று கூட இல்லை. அது பாதுகாப்பான குடியிருப்பு என்பதால் ஹோட்டல் வைக்க அனுமதியில்லை போலும்.

மூன்று குடும்பம் என்பதால் போக வர மூன்று அல்லது நான்கு ஆட்டோ பிடிக்க வேண்டி வந்தது. மதியம், இரவு வேளை சாப்பாடு, மாலை வேளையில் காப்பி மற்றும் கொறிப்பதற்குத் தின்பண்டங்கள் எனச் செலவுப்பட்டியல் நீண்டு கொண்டே போக, வயிறு உப்பியிருந்த எங்களது 'பர்ஸ்' கழிசல்நோய் கண்ட கோழிக்குஞ்சு போல, வெகு வேகமாக இளைத்துக் கொண்டே வந்தது!

ஹோட்டலுக்குள் போய் அமர்ந்தவுடன், அந்த அம்பி, ஓசியில் சாப்பிடுவது பற்றித் துளியும் வெட்கமோ சங்கோஜமோயின்றி அவனிஷ்டத்துக்கு ஆர்டர் பண்ணுவதைப் பார்க்கும் போது கோபங்கோபமாய் வரும். வேறு வழியின்றிச் சாந்தி குடும்பத்துக்கு மட்டுமின்றி, அந்தத் தீனிப்பண்டாரம் தின்று தீர்க்கும் அனைத்திற்கும் மொய் அழுதுவிட்டு வர வேண்டிய தாயிற்று.

ஓசியில் தின்று கொழுத்தது மட்டுமின்றி, ஏற்கெனவே எங்களிடம் கொடுத்து வைத்திருப்பவன் போல, அவன் செய்த அலட்டலையும் தாங்க முடிய வில்லை. ஆட்டோ பிடிக்கச் சிறிது தூரம் நடப்பதற்குள், "ஏன் இன்னும் ஆட்டோ பிடிக்கலை? இப்பிடியே இன்னும் எவ்வளவு தூரம் நடக்கிறது," என்று மாமியிடம் அலுத்துக் கொள்பவனை ஓங்கி ஓர் அறை விட்டால் தேவலாம் போலிருக்கும். என்ன செய்வது? வகையாக வந்து மாட்டிக் கொண்டோமே!

'நீங்க வெளியில போய் தங்கியிருந்தீங்கன்னா, ஒரு நாளைக்கு இவ்வளவு ஆகும், அவ்வளவு ஆகும்,' என்று வாய்க்கு வாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார் மாமி.. ஆனால் கணக்குப் பார்த்தபோது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் கொடுத்துத் தங்கியிருந்தால் கூட இவ்வளவு செலவு ஆகியிருக்காது என்று தோன்றியது. அத்தோடு சுற்றுலா வந்ததற்கான மகிழ்ச்சி சிறிதுமின்றி, எப்போது மும்பையை விட்டுக் கிளம்புவோம் என்றிருந்தது.

இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், சுற்றுலா செல்லும்போது, அங்கு தங்குவதற்கு யாருடைய உதவியையும் நாடாதீர்கள். தங்கும் செலவு மிச்சம் என்று நாம் கணக்குப் போட்டால், மிச்சமாவதை விட அதிகத் தொகையை நம்மிடமிருந்து வசூலிப்பதற்கு, அவர்கள் வேறு திட்டம் வைத்திருப்பார்கள். உறவினர் வீட்டில் போய்த் தங்கினால் செலவு மிச்சம் ஆகலாம். ஆனால் நாம் அவசரமாக கிளம்ப வேண்டிய சமயங்களில், அவர்களது அன்புத்தொல்லை குறுக்கிட்டு நம் பயணத்திட்டத்தைப் பாழாக்கிவிடும்.

இக்காலத்தில் இணையத்தில் நாம் சுற்றுலா செல்லப்போகும் ஊரின் ஹோட்டல்கள் குறித்த குறிப்புக்கள் ஏராளமாக உள்ளன. அங்கு ஏற்கெனவே தங்கியவர்கள், அந்த 'லாட்ஜ்' பற்றிய நிறை குறைகளை விலாவாரியாக எழுதி 'ரேட்டிங்' கொடுக்கிறார்கள். அதனைப் படித்துப் பார்த்து விட்டுத் தங்கு மிடத்தைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது. தங்கும் செலவு கொஞ்சம் அதிகமானாலும், குடும்பத்தினரின் மகிழ்ச்சி கெடாமல், சுற்றுலா போவதன் நோக்கம் நிறைவேறும்..

மும்பைச் சுற்றுலா மோசமான பயணமாக அமைந்தாலும் அதனால் ஒரு நன்மையும் விளைந்தது. குழந்தைகளுக்குச் சோறூட்டும் போது அந்தக் காலத்தில் ஒற்றைக்கண்ணன் வருகிறான் என்று பயமுறுத்திச் சோறூட்டு வார்கள். அது போல என் பிள்ளைகளைப் பயமுறுத்திக் காய்கறி சாப்பிட வைக்க இந்த மாமியின் பெயர் எனக்குப் பெரிதும் பயன்பட்டது. "ஒழுங்காக் காய்கறி தின்னலேன்னா, சாந்தி மாமி வீட்டுக்கு ஒரு வாரம் அனுப்பிடுவேன்," என்று சொன்னால் போதும்; தட்டில் இருக்கும் காய், அடுத்த நிமிடம் காலியாகி விடும்!

(நிலாச்சாரலில் எழுதியது)

Wednesday, 1 February 2012

பிராய்ச்சித்தம் - சிறுவர் கதை

பாபு எட்டாம் வகுப்பு மாணவன். அன்று காலை வழக்கத்தை விட அதிக நேரம் தூங்கி விட்டதால், அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டி ருந்தான்.

அறை அலமாரியிலிருந்த சட்டையை அவன் எடுத்தபோது மேலேயிருந்து "கீச் கீச்" என்று சத்தம் கேட்டது. "அது என்னவாகயிருக்கும்..?' என்று யோசித்த போது, அடுப்பங்கரையிலிருந்து அவன் அம்மாவின் குரல் கேட்டது.

"டேய்... பாபு! இரும்பு அலமாரியை மெதுவாத் தெறந்து மூடு. மேலே சிட்டுக் குருவி கூடு கட்டி குஞ்சு பொரிச்சிருக்கு. கீழே விழுந்துடப் போவுது..." என்றார்.

"ஐ... அப்படியா, நான் மேலே ஏறி குருவிக் குஞ்சைப் பார்க்கப் போறேம்மா."

"அதெல்லாம் செய்யக் கூடாது பாபு. ஏற்கெனவே நேரமாயிட்டுது. சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புற வழியைப் பாரு" என்றார் அம்மா கண்டிப்புடன்.

வகுப்பில் உயிரியல் பாடம் நடந்து கொண்டு இருந்தது. ஆனால், பாபுவின் கவனம் முழுக்க அந்தக் குருவிக் குஞ்சு மேலேயே இருந்தது.

பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், "ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி என்ன தினம்னு யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டார்.

யாருக்கும் அதற்கான பதில் தெரியாததால் எல்லோரும் அமைதியாக இருந்தனர். வகுப்பு துவங்கியது முதலே பாபுவின் கவனம் பாடத்தில் இல்லாததைக் கவனித்திருந்த ஆசிரியர், "பாபு, எழுந்திரு. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு பார்ப்போம்" என்றார் கடுமையான குரலில்.

திடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என்று முணுமுணுத்தது.

ஆசிரியர் கேள்விக்குத் துளிக்கூட சம்பந்தமே இல்லாமல் அவன் இப்படிச் சொன்னதும், மாணவர்கள் அனைவரும் "ஹா... ஹா..." என்று சத்தம் போட்டுச் சிரித்தனர். அப்போதுதான் தன் தவறை உணர்ந்து வெட்கத்தில் தலைகவிழ்ந்தான் பாபு.

ஆனால் அவன் சிறிதும் எதிர்பாராதவிதமாய் ஆசிரியரோ, "ஏன் எல்லோரும் சிரிக்கிறீங்க? அவன் சரியான பதிலைத்தான் சொல்லியிருக்கான்" என்றார். எல்லோருக்கும் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

"அழிஞ்சிக்கிட்டே வரும் சிட்டுக்குருவி இனத்தைக் காப்பாத்த உலகம் முழுவதும் மார்ச் 20-ம் தேதி சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுது. ஆங்கிலத்தில் இதை House sparrow day ன்னு சொல்றாங்க. சரியான பதிலைச் சொன்ன பாபுவை நான் பாராட்டறேன். எல்லோரும் கை தட்டி இவனை உற்சாகப்படுத்துங்க" என்றார் ஆசிரியர்.

ஏதோ உளறப் போய் அது சரியான பதில் என்று ஆசிரியர் கூறவே, ’திருதிரு'ன்னு விழித்தான் பாபு.

"நாங்கள்லாம் சின்னப் புள்ளைங்களா இருந்தப்ப எங்க வீட்டு முற்றத்துல நெல்லைக் கொட்டி காய வைப்பாங்க. இந்தச் சிட்டுக் குருவிங்க கூட்டம் கூட்டமா வந்து நெல்லைப் பொறுக்கித் தின்னும். ஆனா, இப்ப எங்கேயும் இதுங்களைப் பார்க்க முடியலை. சுத்தமா அழிஞ்சி போச்சு. நம்மூர்ல மட்டுமில்ல, உலகம் பூராவுமே இது அழிஞ்சிக்கிட்டு வருதாம்.

மனுஷன் காடுகளை அழிச்சிட்டதினாலே, இந்த மாதிரி பறவைங்க இனப்பெருக்கம் செய்ய முடியாம எண்ணிக்கையிலே குறைஞ்சுக்கிட்டே வருது. அதனால பசங்களா, நீங்க ஒவ்வொருத்தரும் உங்களால முடிஞ்ச அளவில உங்கக் கொல்லையில, தெருவில, பள்ளிக்கூட வளாகத்தில மரங்களை நட்டு வளர்க்கணும். அப்பத்தான் இந்தப் பறவை இனத்தை நம்மால் காப்பாத்த முடியும்" என்று குட்டிப் பிரசங்கமே பண்ணி முடித்தார் ஆசிரியர்.

வீட்டு மணி எப்போது அடிக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தான் பாபு. வீட்டுக்கு வந்த போது, அவன் அம்மா வெளியே சென்றிருந்தார். அம்மா வந்து விட்டால் குருவிக் குஞ்சைப் பார்க்க அனுமதிக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். எனவே, அம்மா வருவதற்குள் ஏறிப் பார்த்து விட வேண்டும் என்று ஆசையில் ஒரு முக்காலியைப் போட்டு அதில் ஏறினான்.

அப்போது குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக் கொண்டிருந்த தாய்ப் பறவை, பாபுவைக் கண்டதும் மிரண்டு போய் "கீச்கீச்" என்று கத்திக் கொண்டே ஜன்னல் கம்பியில் போய் உட்கார்ந்தது.

முக்காலியில் ஏறியும் அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை என்பதால், குருவிக் கூட்டை அவன் பக்கம் நோக்கி இழுத்தான். அப்போது அதிலிருந்த ஒரு குஞ்சு தத்தித் தத்திப் பறந்து அலமாரியின் ஓரத்துக்கு வந்ததால், மேலேயிருந்து "பொத்'தென்று தரையில் விழுந்து ஒரு சில நிமிடங்கள் துடிதுடித்துப் பின் இறந்து போய்விட்டது.

"என்னடா... பண்றே?" என்று பாபுவின் அம்மா அடித்துப் பிடித்துக் கொண்டு அங்கு ஓடி வருவதற்கும், குருவிக் குஞ்சு கீழே விழுந்து இறப்பதற்கும் சரியாக இருந்தது.

"அடப்பாவி! காலையிலதான் சொன்னேன். அந்தத் தாய்க் குருவி எப்படி கத்துது பாரு. அநியாயமா ஒரு குஞ்சைக் சாகடிச்சிட்டியே" என்று திட்டினார் அம்மா.

குஞ்சு கீழே விழுந்து துடிதுடித்து இறந்த காட்சி, பாபுவை நிலைகுலையச் செய்தது. இரவு நீண்ட நேரம் வரையில் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. அந்தத் தாய்க் குருவியின் கதறல் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அன்று கனவில் அந்தப் பறவை வந்தது.

"நான் உனக்கு என்ன தீங்கு செஞ்சேன்? ஏன் என் குழந்தையைச் சாகடிச்சே?" என்று கேட்டது.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து வெளியில் சென்ற பாபு, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் செடிகளையும், மரக்கன்றுகளையும் வாங்கி வந்து வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் நட்டான்.

"அம்மா... என் பிறந்த நாளுக்கு உடை வாங்க வேண்டாம். அதுக்குப் பதிலா காசை எங்கிட்ட கொடுங்க. அந்தப் பணத்துல ரெடிமேடா விக்குற குருவிக் கூடுகளை வாங்கிட்டு வீட்டுப் 'போர்டிகோ'வில் தொங்கவிடப் போறேன். தினம் தினம் எனக்கு வைக்கிற சாப்பாட்டு அரிசியிலேர்ந்து ஒரு பிடி எங்ககிட்ட கொடுங்க. அதை மாடியில ஒரு ஓரமா தூவி வைக்கப் போறேன்.
குருவிகளுக்கு அது உணவாப் பயன்படும்" என்று சொன்னவன், சொன்னபடியே தினமும் செய்து வரலானான்.

இரண்டு மூன்று வருடங்களில் அவன் வைத்த செடிகள் நன்றாக வளர்ந்து தோட்டமே பசுஞ்சோலை போலக் காட்சியளித்தது. மலர்களில் இருந்த தேனை உண்ண வண்ணத்துப் பூச்சிகள் கண்ணைப் பறிக்கும் பல வண்ணங்களில் தோட்டத்தை வலம் வரத் துவங்கின.

மரங்களில் பல்வேறு வகையான பறவைகள் குடிபுகுந்து இனிமையான கானம் இசைத்தன.சில ஆண்டுகள் கழித்து பாபுவின் கனவில் மறுபடியும் அந்தத் தாய் குருவி தோன்றியது. அதன் கண்களில் வழிந்தோடும் கண்ணீர்!

"நான் செய்த தப்புக்குத்தான் பிராயச்சித்தம் பண்ணிட்டேனே! இன்னும் நீ என்னை மன்னிக்கலையா?" என்றான் பாபு சோகமாக.

"இல்லண்ணா! இது ஆனந்தக் கண்ணீர். உங்களை மாதிரி எல்லோரும் எங்களுக்கு உதவி செஞ்சா, நாங்களும் எங்கக் குடும்பத்தோட நிம்மதியா வாழ்வோம். உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன்" என்று மகிழ்ச்சியாகச் சொல்லி விட்டுப் பறந்து சென்றது சிட்டுக் குருவி.

அதைக் கேட்டதும் பாபுவின் மனது மகிழ்ச்சியில் திளைத்தது.

(10/04/2010 தினமணியின் சிறுவர்மணியில் எழுதியது)