நல்வரவு

வணக்கம் !

Thursday, 2 February 2012

'சுற்றுலா அனுபவங்கள்'


சுற்றுலா செல்வதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சென்ற பயணங்களில் மறக்க முடியாதது என்றால், அது மும்பைப் பயணம்தான்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து முடித்த பிறகு, 1998 ஆம் ஆண்டில் மும்பைச் செல்லத் தீர்மானித்தோம். ஆனால் ஹிந்தி தெரியாது என்பதால் அங்கு பயணம் மேற்கொள்ளப் பயமாயிருந்தது.

யாராவது தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் ஏற்பாடு செய்து கொடுத்தால் தேவலாம் என்று தோன்றியது. என் சக ஊழியர், "நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க, என் தங்கை பல வருஷமா அங்க இருக்கா. அவகிட்ட சொல்லிட்டா, அவளே எல்லாத்தையும் பார்த்துப்பா," என்றார்.

"எங்களுக்கு நல்ல லாட்ஜ் புக் பண்ணிக் கொடுத்தாப் போதும்; வேற எதுவும் அவங்க பண்ண வேணாம். அட்வான்ஸ் எவ்வளவுன்னு கேட்டுச்
சொன்னீங்கன்னா, நான் டி.டி எடுத்து அனுப்பிடறேன்," என்றேன் நன்றிப் பெருக்கோடு.

"அவகிட்ட கேட்டேன். ஏற்பாடு பண்ணிட்டு வாங்கிக்கிறதா சொல்லியிருக்கா. அதனால நீங்க அங்கப் போனப்புறம் நேரிலேயே கொடுத்துடலாம்," என்றவர், "அவ வூட்டைக் கண்டுபிடிக்க நீங்கச் சிரமப்பட வேண்டாம்; அவளே ஸ்டேஷன் வந்து உங்களை அழைச்சிட்டுப் போவா," என்றும் சொல்லித் தம் தங்கையின் புகைப்படத்தைக் காட்டினார்..

நாங்கள் பயணம் செய்யும் ‘கோச்' எண்ணை அவரிடம் கொடுத்து விட்டதாகச் சொன்ன அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, என் குடும்பமும் தங்கை குடும்பமும் சேர்ந்து மும்பை நோக்கிப் பயணமானோம்.

என் அலுவலக நண்பர் சொன்னபடி அவர் தங்கை சாந்தி முன்கூட்டியே மும்பையின் புகழ் பெற்ற சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து எங்களுக்காக காத்திருந்தார். இந்தக் காலத்தில் இப்படிக்கூட இருப்பார்களா? என்று ஆச்சரியம். ஏற்கெனவே புகைப்படத்தைப் பார்த்திருந்ததால், சுலபமாக அவரை அடையாளம் கண்டுபிடித்து விட்டேன். அப்போது அலைபேசி புழக்கத்தில் இல்லாத காலம்.

பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு, எங்களை அழைத்துப் போக வந்தமைக்காக நன்றி தெரிவித்தோம். "என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் நீங்க தங்கப் போகும் இடமிருக்கு; அதனால முதலில் டாக்சி பிடித்து என் வூட்டுக்குப் போகலாம்," என்றார் சாந்தி மாமி.

அவரது கணவருக்குப் பாபா அணுமின் நிலையத்தில் வேலை என்பதால் அந்த மின்நிலையத்துக்கான குடியிருப்பில் அவரது வீடு இருந்தது. பாதுகாப்பான பகுதியாயிருந்தபடியால் உள்ளே போகும் ஒவ்வொரு காரும், வாயிலில் எண்ணைப் பதிவு செய்து விட்டுத்தான் நுழைய முடியும்.

ஆகா! நல்ல பாதுகாப்பான பகுதியில் நம் தங்குமிடம் இருக்கிறது, இவருக்கு நம் நன்றிக்கடனை எப்படிச் செலுத்தப் போகிறோம்,' என்று எண்ணியபடியே காரில் பயணித்தோம். அவர் வீட்டையடைந்த போது இன்னோர் ஆச்சரியம் காத்திருந்தது. எங்களுக்காக சமையல் செய்து வைத்திருந்தார் மாமி. இரண்டு நாட்கள் பயணத்தில் சரியாகச் சாப்பிடாமல் இருந்த நாங்கள், அவருக்கு நன்றி சொல்லிவிட்டுச் சாப்பிட்டோம்.

சாப்பாடு முடிந்த பிறகு எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். அவரது வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்தது அது. அது லாட்ஜ் அல்ல. பாபா அணுமின் குடியிருப்பில் காலியாக இருந்த ஒரு வீடு.

"இது போல ஒரு வீடு, நீங்க எங்க தேடினாலும் கிடைக்காது. உங்களுக்கு லாட்ஜ் புக் பண்ணத்தான் அண்ணா சொன்னார். இது மாதிரி வசதியா வீடு இருக்கும் போது, நீங்க எதுக்கு வெளியில போய்த் தங்கணும்?" என்றார் சாந்தி.

'எங்களுக்கு உதவுவதற்காகவே இவர் ஜென்மம் எடுத் திருக்கிறாரோ? இவருக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடனை நான் எப்படி அடைக்கப் போகிறேன்?' என்று சிந்தித்தபடியே, "இதற்கு எவ்வளவு வாடகை தர வேண்டும்?" என்றேன்.

"ஒரு நாளைக்கு ரூமுக்கு இரண்டாயிரம் வரை இருக்கலாம்னு நீங்க சொன்னதா அண்ணன் சொன்னார். இதுக்கு ஒரு நாள் ஐநூறுதான் ஆகும்; பாதுகாப்பாவும் இருக்கும்" என்று அவர் சொன்ன போது, அலுவலக நண்பர் உதவியுடன் மும்பையில் நல்ல பாதுகாப்பான இடத்தில் நினைத்ததை விட நாலில் ஒரு பங்கு குறைவான வாடகையில் தங்குமிடம் ஏற்பாடு பண்ணி யிருக்கும் என் சாமர்த்தியத்தை நானே மெச்சிக் கொண்டேன்.

இரண்டு நாட்கள் பயணம் என்பதால் அன்று முழுதும் ஓய்வெடுத்துக் கொண்டு, மறுநாள் ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்பது திட்டம். அன்றிரவு நன்றாய் உறங்கிவிட்டு மறுநாள் காலை குளித்துக் கிளம்பி மாமி வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றால், அங்குக் காலை உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

"அச்சச்சோ, அதெல்லாம் வேண்டாம்; நாங்கள் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறோம்" என்று எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும் விடவில்லை.

வேறு வழியின்றி டிபன் செய்ய உதவி செய்து விட்டு, சாப்பிட்டுக் கிளம்பினோம். அத்தனை பேருக்கும் சப்பாத்தி, சப்ஜி, கூடவே தயிர் சாதம் செய்து சாப்பிட்டு முடிக்கவே, காலை பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

சாப்பாடு முடிந்து டாட்டா, பை பை சொல்லி விட்டுக் கிளம்பினால், "நாங்களும் உங்களோட வர்றோம்" என்றார் சாந்தி.

"அப்படியா, யார் யார் வருகிறீர்கள்?" என்றேன்.

"நாங்க எல்லாருமேதான். இந்த அம்பி எனக்குத் தூரத்துச் சொந்தம். ஊர் சுத்திப் பார்க்க போன வாரம் வந்தான். நீங்க வந்த பிறகு சேர்ந்து பார்க்காலாமுன்னு அவனைத் தங்க வைச்சிருக்கேன்," என்றார் அவர்.

சாந்தி, அவரது கணவர், மகள்கள் இருவர், அவர்களோடு இஞ்சித் தின்ற குரங்கு போல இருந்த அந்த அம்பியும்! 'அடடா! நம் பிரைவசி கெட்டுப் போய் விடுமே,' என்று உள்ளுக்குள் இலேசான அதிருப்தி தோன்றினாலும், அவருக்கு நாங்கள் பட்டிருக்கும் நன்றிக்கடனை அடைக்க இது ஒரு நல்ல வழி என்று மனதைத் தேற்றிக் கொண்டு, "ரொம்ப சந்தோஷம், வாங்க, வாங்க" என்று இன்முகம் காட்டி அழைத்துக் கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினோம்.

முதலில் கேட்வே ஆப் இந்தியாவுக்குச் சென்றோம். அதன் பக்கத்தில்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான அழகான தாஜ் ஹோட்டல் உள்ளது. கேட் வே ஆப் இந்தியாவிலிருந்து எலிபெண்டா குகைக்குப் படகில் செல்ல வேண்டும். படகுப் பயணத்துக்கு அனைவருக்கும் டிக்கெட் வாங்கி அக்குகைக்குப் பயணமானோம். அதற்கடுத்த நாட்களில் மும்பையின் புகழ் பெற்ற கடற்கரைகள், மகாலெட்சுமி கோயில் எனப் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்தோம்.

வாரம் முழுக்க அவர்களும் எங்களுடன் சேர்ந்து சுற்றியதால் தினமும் மதிய, இரவு வேளைச் சாப்பாடு செலவு முழுக்க எங்கள் தலையில் விடிந்தது. காலையில் மட்டும் அவர் வீட்டில் சாப்பாடு. தினமும் தயிர் சாதம்தான் காலை உணவு. தயிர்சாதத்தைக் கூழ் போல் கிண்டி தட்டில் போட்டு அதன் நடுவே ஊறுகாய் வைத்துக் கொண்டு, சர்.. சர்.. என்று எல்லோரும் உறிஞ்சி உறிஞ்சிச் சாப்பிட்டனர்.

எங்களுக்கோ தொட்டுக்கொள்ளக் காய் எதுவுமில்லாமல், சாப்பாடு இறங்க மறுத்தது. அப்படியே ஒரு சில நாட்களில் காய் இருந்தாலும், எல்லோருக்கும் ஒரு ஸ்பூன் மட்டுமே பரிமாறும் அளவுக்கு மிகக் குறைவாக இருந்தது. வீட்டில் காய் எதுவும் தின்னாத என் பையன், ‘கோஸ் பொரியலைக் கூட(!) இன்னுங் கொஞ்சம் வைங்கம்மா," என்று கெஞ்சிக் கேட்டுச் சாப்பிட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கஞ்சியிலிருந்து தப்பி வெளியில் போய் டிபன் ஏதும் சாப்பிடலாம் என்றால் பக்கத்தில் ஹோட்டல் ஒன்று கூட இல்லை. அது பாதுகாப்பான குடியிருப்பு என்பதால் ஹோட்டல் வைக்க அனுமதியில்லை போலும்.

மூன்று குடும்பம் என்பதால் போக வர மூன்று அல்லது நான்கு ஆட்டோ பிடிக்க வேண்டி வந்தது. மதியம், இரவு வேளை சாப்பாடு, மாலை வேளையில் காப்பி மற்றும் கொறிப்பதற்குத் தின்பண்டங்கள் எனச் செலவுப்பட்டியல் நீண்டு கொண்டே போக, வயிறு உப்பியிருந்த எங்களது 'பர்ஸ்' கழிசல்நோய் கண்ட கோழிக்குஞ்சு போல, வெகு வேகமாக இளைத்துக் கொண்டே வந்தது!

ஹோட்டலுக்குள் போய் அமர்ந்தவுடன், அந்த அம்பி, ஓசியில் சாப்பிடுவது பற்றித் துளியும் வெட்கமோ சங்கோஜமோயின்றி அவனிஷ்டத்துக்கு ஆர்டர் பண்ணுவதைப் பார்க்கும் போது கோபங்கோபமாய் வரும். வேறு வழியின்றிச் சாந்தி குடும்பத்துக்கு மட்டுமின்றி, அந்தத் தீனிப்பண்டாரம் தின்று தீர்க்கும் அனைத்திற்கும் மொய் அழுதுவிட்டு வர வேண்டிய தாயிற்று.

ஓசியில் தின்று கொழுத்தது மட்டுமின்றி, ஏற்கெனவே எங்களிடம் கொடுத்து வைத்திருப்பவன் போல, அவன் செய்த அலட்டலையும் தாங்க முடிய வில்லை. ஆட்டோ பிடிக்கச் சிறிது தூரம் நடப்பதற்குள், "ஏன் இன்னும் ஆட்டோ பிடிக்கலை? இப்பிடியே இன்னும் எவ்வளவு தூரம் நடக்கிறது," என்று மாமியிடம் அலுத்துக் கொள்பவனை ஓங்கி ஓர் அறை விட்டால் தேவலாம் போலிருக்கும். என்ன செய்வது? வகையாக வந்து மாட்டிக் கொண்டோமே!

'நீங்க வெளியில போய் தங்கியிருந்தீங்கன்னா, ஒரு நாளைக்கு இவ்வளவு ஆகும், அவ்வளவு ஆகும்,' என்று வாய்க்கு வாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார் மாமி.. ஆனால் கணக்குப் பார்த்தபோது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் கொடுத்துத் தங்கியிருந்தால் கூட இவ்வளவு செலவு ஆகியிருக்காது என்று தோன்றியது. அத்தோடு சுற்றுலா வந்ததற்கான மகிழ்ச்சி சிறிதுமின்றி, எப்போது மும்பையை விட்டுக் கிளம்புவோம் என்றிருந்தது.

இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், சுற்றுலா செல்லும்போது, அங்கு தங்குவதற்கு யாருடைய உதவியையும் நாடாதீர்கள். தங்கும் செலவு மிச்சம் என்று நாம் கணக்குப் போட்டால், மிச்சமாவதை விட அதிகத் தொகையை நம்மிடமிருந்து வசூலிப்பதற்கு, அவர்கள் வேறு திட்டம் வைத்திருப்பார்கள். உறவினர் வீட்டில் போய்த் தங்கினால் செலவு மிச்சம் ஆகலாம். ஆனால் நாம் அவசரமாக கிளம்ப வேண்டிய சமயங்களில், அவர்களது அன்புத்தொல்லை குறுக்கிட்டு நம் பயணத்திட்டத்தைப் பாழாக்கிவிடும்.

இக்காலத்தில் இணையத்தில் நாம் சுற்றுலா செல்லப்போகும் ஊரின் ஹோட்டல்கள் குறித்த குறிப்புக்கள் ஏராளமாக உள்ளன. அங்கு ஏற்கெனவே தங்கியவர்கள், அந்த 'லாட்ஜ்' பற்றிய நிறை குறைகளை விலாவாரியாக எழுதி 'ரேட்டிங்' கொடுக்கிறார்கள். அதனைப் படித்துப் பார்த்து விட்டுத் தங்கு மிடத்தைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது. தங்கும் செலவு கொஞ்சம் அதிகமானாலும், குடும்பத்தினரின் மகிழ்ச்சி கெடாமல், சுற்றுலா போவதன் நோக்கம் நிறைவேறும்..

மும்பைச் சுற்றுலா மோசமான பயணமாக அமைந்தாலும் அதனால் ஒரு நன்மையும் விளைந்தது. குழந்தைகளுக்குச் சோறூட்டும் போது அந்தக் காலத்தில் ஒற்றைக்கண்ணன் வருகிறான் என்று பயமுறுத்திச் சோறூட்டு வார்கள். அது போல என் பிள்ளைகளைப் பயமுறுத்திக் காய்கறி சாப்பிட வைக்க இந்த மாமியின் பெயர் எனக்குப் பெரிதும் பயன்பட்டது. "ஒழுங்காக் காய்கறி தின்னலேன்னா, சாந்தி மாமி வீட்டுக்கு ஒரு வாரம் அனுப்பிடுவேன்," என்று சொன்னால் போதும்; தட்டில் இருக்கும் காய், அடுத்த நிமிடம் காலியாகி விடும்!

(நிலாச்சாரலில் எழுதியது)

10 comments:

 1. சுகமாயிருக்கவேண்டிய பயணம் இப்படி சோகந்தரும் அளவுக்குச் சென்றது மிகவும் வருத்தமான விஷயம். அந்தச் சோகத்தையும் நகைச்சுவையுடன் சொல்லி, அனுபவப்பாடத்தையும் கற்றுக்கொடுத்தத் தங்களுக்கு என் நன்றியும் பாராட்டும். பயணம் செய்யுமுன் ஒவ்வொருவரும் இது போன்ற சிபாரிசுகளில் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியதன் அவசியத்தை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் கீதா. இதைப் பகிர்வதன் முக்கிய நோக்கம் வாசிப்பவர்களை எச்சரிக்கை செய்வது தான். பாராட்டுக்கு மிக்க நன்றி.

   Delete
 2. என்னுடைய இந்தப்பதிவுக்கு வருகை தரும்படி தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

  http://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post.html

  ReplyDelete
 3. நல்ல பாடம்.சில பேர் எப்படி இப்படி இருக்காங்கன்னே தெரியல.இதை அவங்க படிட்சாக்கூட திருந்துவாங்களா என்னனுன்னு தெரியல.

  கீதா அவர்களின் மூலம் உங்கள் தளம் வந்தேன்,நேரமிருக்கும்போது வருகிறேன்.

  ReplyDelete
 4. தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி. கண்டிப்பாக நேரமிருக்கும் போது வருகை தாருங்கள்.

  ReplyDelete
 5. வணக்கம்.
  சிலருடைய பதிவுகள் அனைத்தையும் படிக்க வேண்டும் என்ற பட்டியல் என்னிடம் இருக்கிறது. அதில் உங்களின் பதிவுகளும் அடக்கம்.

  பட்டியலில் உள்ள ஒருசிலரின் அனைத்துப் பதிவுகளுக்கும் கருத்திட்டிருக்கிறேன்.

  விரைவில் தங்களின் தளத்திற்கும் வர நேரம் வாய்க்க வேண்டும்.


  பொதுவாக, இப்படிப்பட்ட அனுபவங்கள் பலர்க்கும் ஏற்பட்டிருக்கும். சுற்றுலா என்றில்லை.

  நம்முடன் பணியாற்றபவரிடத்து, அண்டை வீட்டாரிடத்து என...,

  பெரும்பாலானோர் பற்கடிப்புடன் நாகரிகம் கருதி சகித்துக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள்.

  நெருக்கமானவர்களிடம் அதனைச் சிலர் சொல்வதுண்டு. நானோ அதுவும் இல்லை.

  உங்கள் பதிவினைப் படித்த பொழுது, தான் செய்ய இயலாச் சாதனைகளைத் திரையில் கதாநாயகன் செய்யக் கண்டு, கை தட்டும் ரசிகனின் மனோபாவத்தை அடைந்தேன் ஒரு கணம்.

  எழுத்தின் கலப்படமற்ற உண்மையால் இப்பதிவு நெஞ்சு தொட்டது.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ! பதிவுகள் அனைத்தையும் படித்துக்கருத்திட வேண்டும் என்ற பட்டியலில் என் தளமும் இருக்கின்றது என்பதையறிந்த போது, ஆகா என்ன தவம் செய்தேன் என்று பாடத்தோன்றியது. மிகவும் நன்றி சகோ!
   ஆனால் உங்கள் பதிவுகள் மூலம் பலருக்கும், தமிழுணர்வைத் தட்டியெழுப்பிக் கொண்டிருப்பவர் நீங்கள்! எனவே உங்கள் பொன்னான நேரம், என் பதிவுகளுக்குச் செலவாவதை விட தமிழுக்கே அதிகம் பயன்படவேண்டும்!
   என் புதிய பதிவுகளுக்கு, நீங்கள் வந்து கருத்து சொன்னாலே மகிழ்வேன்; அதுவே எனக்குப் போதும்!
   மும்பை பயணத்தைப் பற்றி விலாவாரியாக நான் எழுதியதன் நோக்கம் பலருக்கும் எச்சரிக்கை செய்வதே. மும்பை சாந்தி போல் பலர் இருக்கக் கூடும். ஒரு வேளை என் பதிவை அவர்கள் படிக்க நேர்ந்தால், திருடனுக்குத் தேள் கொட்டியது போலிருக்கும்.
   இது போல் நடந்து கொள்பவர்கள் பற்றி, நெருக்கமானவர்களிடம் அவசியம் பகிர்ந்துகொள்ள வேண்டும். இவர்களுக்குப் பாடம் புகட்ட அவர்கள் சிலசமயம் நல்ல ஐடியா கொடுக்கக் கூடும். இணையத்தில் எழுதினால் இன்னும் பலரைச் சென்றடையும். நம் மன அழுத்தமும் குறையும்.
   உங்களைப் போல யாரிடமும் சொல்லாமல், பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டால், அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போய்விடும். தம்மைச் சாமர்த்தியசாலியாகவும், நம்மை ஏமாளியாகவும் நினைத்துக்கொண்டு, தொடர்ந்து இது போன்ற காரியங்களில் ஈடுபடுவர்.
   எனவே நம்மை மேலும் மேலும் அவர்கள் ஏமாற்ற அனுமதிக்கக் கூடாது.
   கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி சகோ!

   Delete
 6. அடடா, சுற்றுலா இன்பத்தையேக் கெடுத்துவிட்டார்களே! இதைப் போன்ற அனுபவங்கள் , அதாவது மற்றவர் செலவிற்கும் நாம் அழுவது, எனக்கும் உண்டு.
  //அவசரமாக கிளம்ப வேண்டிய சமயங்களில், அவர்களது அன்புத்தொல்லை குறுக்கிட்டு நம் பயணத்திட்டத்தைப் பாழாக்கிவிடும். // உண்மை, இதனால் பல நாம் பார்க்க விரும்பும் இடங்களைப் பார்க்க முடியாமல் போகும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிரேஸ்! இப்பதிவுக்கும் வந்து படித்துக்கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி! உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு என்றறிந்தேன். கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி கிரேஸ்!

   Delete
 7. இன்ப சுற்றுலா சென்ற அனுபவங்களை படிப்பதில் எனக்கு கொள்ளைப்பிரியம் ... ஆனால் முதல்முறையாக துன்ப சுற்றுலா சென்ற அனுபவமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்பதை உங்கள் பயண கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன்...நன்றி!!!
  https://www.scientificjudgment.com/

  ReplyDelete