நல்வரவு

வணக்கம் !

Tuesday, 14 January 2014

கோலங்கள்

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து!

வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடும் பழக்கம் தமிழகத்தில் எந்தக் காலத்தில் துவங்கிற்றோ தெரியாது.  இதைப்பற்றி தமிழிலக்கியத்தில் குறிப்பு ஏதும் உள்ளதா என்பதைத் தமிழறிஞர் யாரேனும் தெரிவித்தால் மகிழ்வுடன் நன்றி சொல்வேன். 

அடுக்கு மாடி குடியிருப்பு வந்த பின்னர், கோலம் போடும் பழக்கம் அறவே நின்று விட்டது என்று புலம்புவோர் உண்டு.  வாசல் கிடைத்தால் கோலம் போடுவதற்கு மகளிர் இன்னும் தயாராகத் தான் இருக்கிறார்கள் என்பதை மேலே நான் வெளியிட்டிருக்கும் கோலப் புகைப்படங்களே சாட்சி. 

மார்கழி மாதம் துவங்கிப் பொங்கல் வரை எங்கள் தெருவில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு கோலம் வரைந்து தெருவை அழகுபடுத்துவது கண்கொள்ளாக்காட்சி.  இதில் வேலைக்குப் போகும் பெண்களும் அடக்கம் (அமோக விற்பனை என்பதால் வண்ணப்பொடி விற்பவனின் வண்டி தினமும் எங்கள் தெருவில் ஆஜர்)
  
காலையில் நேரமில்லை என்பதால் முதல் நாளிரவே ஆற அமர கோலம் வரைந்து பல வண்ணப்பொடிகள் தூவி அலங்காரம் செய்து விட்டுத் தூங்கச் செல்வது வழக்கமாகி விட்டது.  இரவு முழுதும் வண்ணப்பொடிகள் பனியில் நனைந்து ஒரே சீராக பெயிண்ட் அடித்தாற் போல் கோலம் முழுவதும் பரவி அழகுற காட்சியளிக்கின்றன. 

காலத்திற்கேற்ப கோலமும் தன் கோலத்தை மாற்றி வருகின்றது.  என் அம்மாக்காலத்தில் பெரும்பாலும் ஜாங்கிரி பிழிவது போல் சிக்குக் கோலம் போடுவதுதான் வழக்கத்திலிருந்தது.  இருபது, இருபத்திரெண்டு எனப் புள்ளிகள் வைத்து தெருவை அடைத்துப் போடப்படும் கோலங்கள், மங்கையரின் திறமையைப் பறைசாற்றும்.  இக்கோலத்தைப் போடுவதற்கு நல்ல பயிற்சியும் திறமையும் தேவை.    

ஒரு புள்ளியைத் தவறுதலாக விட்டுவிட்டாலோ, இரண்டாவது புள்ளியில் வளைய வேண்டிய கோடு, மூன்றாவது புள்ளிக்கு மாறிவிட்டாலோ, அவ்வளவு தான். சிக்குக் கோலம் பாதியில் சிக்கிக் கொண்டு தவிக்கும்!  புள்ளி வைப்பதிலும் கவனம் தேவை.  முதல் வரிசையிலிருந்து முடிவு வரை, ஒரே சீராக நெருக்கமாக வைத்துக் கட்டு செட்டாகப் போடப்படும் கோலங்களை வைத்தே ஒருவரின் கோலத் திறமையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.  (இப்போது வெகுசிலரே சிக்குக் கோலம் போடுகின்றனர்.  பெரும்பாலோர் சுலபமாகப் போடும் கோலத்தைத் தேர்ந்தெடுத்துச் சுற்றிலும் நகாசு வேலை செய்து பெரிதாக ஆக்கிவிடுகின்றனர்.)

 அக்காலத்துப் பெண்பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே இரண்டு, நான்கு புள்ளி எனத் துவங்கிப் படிப்படியாக பெரிய அளவில் கோலம் போடப் பழகினார்கள். பழங்காலத்தில் கோலம் போடுதல், பெண்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டியதொன்று.

சில காலம் கழித்துப் புள்ளிகள் வைத்து பூக்கோலம் போடத் துவங்கினார்கள்.  சிக்குக் கோலம் போல இது அவ்வளவு கடினமானதல்ல.  புள்ளி தவறாகிவிட்டாலோ, விடுபட்டுப் போய்விட்டாலோ சிரமம் ஒன்றுமில்லை.  புள்ளியில்லாமலே அதிகப்படியான கோடுகளை வரைந்து தவறைச் சரிசெய்து விடலாம்.  வரையும் திறமை உள்ளவர்கள், கற்பனைத்திறன்  உள்ளவர்கள் புள்ளியில்லாமலே அழகான பூக்கோலம் போட்டு விட முடியும்.

பழங்காலத்தில் அரிசி மாவினால் கோலம் போட்டார்கள்.  (பறவைகளுக்கும் எறும்புகளுக்கும் அது உணவானது) அரிசியின் விலை ஏற ஏற கல்மாவு புழக்கத்துக்கு வந்தது.
சிக்குக் கோலத்தை விடப் பூக்கோலம் போடுவது எளிதாயிருந்ததால் மங்கையரிடையே இது வரவேற்பைப் பெற்றது.  நாளடைவில் வெண்மை நிறத்தில் இருந்த பூக்கோலத்தில் வண்ணப்பொடிகள் தூவி அழகுபடுத்துவது நடைமுறைக்கு வந்தது.  துவக்கத்தில் வண்ணப்பொடியில் கோலமாவைக் கலந்து தூவினார்கள்.  பின் தவிடு, மணல் என வெவ்வேறு பொருட்கள் கலக்கப்பட்டன.  செங்கல் தூளைக் காவி வண்ணத்துக்கும், பயன்படுத்திய காபிபொடியை பிரவுன் வண்ணத்துக்கும் பயன்படுத்தினர். தற்காலத்தில் பல்வேறு வண்ணங்களில் சாயப்பொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.  இப்பொடிகளைத் தூவி வரையப்பட்ட கோலங்கள் நம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. 

இப்போது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் டைல்ஸ், மார்பிள்ஸ் இருப்பதால் அரிசியைத் தண்ணீர் ஊற்றி அரைத்து நீர்க்கோலம் போடும் பழக்கம் நகரங்களில் முற்றிலுமாக மறைந்து விட்டது.  (சிலர் மைதாவைக் கரைத்தும் போடுவர்) மண், சிமெண்ட், கல் தரைகளில் இந்த நீர்க்கோலம் போட்டு, அது காய்ந்தவுடன் பார்த்தால் வெள்ளை வெளேர் என்று பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்! 
வட இந்திய ரங்கோலி வகை கோலங்களும் இப்போது பிரபலமாயுள்ளன. 
(புகைப்படக்கலையில் எனக்கு அவ்வளவு தேர்ச்சியில்லை.  கைபேசி காமிராவினால் என்னால் முடிந்தளவு கோலங்களைப் படமெடுத்து உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.)
பி.கு.  தமிழரது திருநாளுக்கான வாழ்த்தைக் கூட நம் மக்கள், பொங்கல் கோலங்களில் ஆங்கிலத்தில் எழுதியிருப்பது தான் மனதுக்கு நெருடலான விஷயம்.  பொங்கல் கோலத்தில் கூட தமிழ் ஒளிரக் காணோம்!கோலங்களின் அணிவகுப்பு தொடரும்…..

11 comments:

 1. மிகவும் அழகிய கோலங்கள்... உங்களின் ஆதங்கம் புரிகிறது... அவரவர் உணர வேண்டும்...

  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்! தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.!

  ReplyDelete
 3. இனிய பொங்கல் நல்வாழ்த்து!

  ReplyDelete
 4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து!

  ReplyDelete

 5. வணக்கம்!

  அற்புதக் கோலம் அகத்தினை ஆட்கொண்டு
  பொற்புடன் மின்னும் பொலிந்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி கவிஞரவர்களே!. அழகு கவிதையால் பின்னூட்டமிட்டு பாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றி.

   Delete
 6. திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் இன்று 07.05.2014 வலைச்சரத்தில் இந்தத்தங்களின் பதிவினை பாராட்டி அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள்.

  அதன் மூலம் இங்கு வருகை தந்துள்ளேன்.

  அழகழகாக கோலமிட்டு வரவேற்பு அளித்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  வலைச்சர இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2014/05/blog-post_7.html

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர இணைப்பைக் கொடுத்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி கோபு சார்!

   Delete
 7. Nice
  https://picasaweb.google.com/100573106317211639353/HOiJhC

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மணியன் சார்!

   Delete
 8. சாக்பீஸில் கோலம் போடலாமா

  ReplyDelete