நல்வரவு

வணக்கம் !

Wednesday, 25 March 2015

இன்று சிட்டுக்குருவி! நாளை நம் சந்ததிகள்!

ஆண்குருவி

(20/03/2015 சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு நான்கு பெண்கள் தளத்தில் வெளியான கட்டுரை)

சிட்டுக்குருவி தினம் கொண்டாடுவதால் ஏதேனும் பலன் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது.  20/03/2010 அன்று முதன்முதலாக இது கொண்டாடப்பட்ட பின்னரே, இக்குருவி அழிவின் விளிம்பிலிருந்த உண்மை வெளியாகி, நாடுமுழுதும் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டது.  .
  
அதுவரை இளம்வயது தோழர்களாய் கூட்டங்கூட்டமாக  நம்மோடு கூடவே வளர்ந்த இக்குருவிகள், நம்மூரில் மட்டும் தான் இல்லை என்று நினைத்திருந்த பலருக்கு, இவை எங்குமே இல்லை, எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியைத் தந்தது.     
 
பெண்குருவி

இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுவன:-
1.   சிட்டுக்குருவி மனிதரை அண்டியே வாழுமினம்.  அக்காலத்தில் இவை கூடு கட்ட, நம் ஓட்டு வீடுகளில் சந்து, பொந்து, மாடம், பரண், பனஞ்சாத்து, சுவரில் தொங்கிய புகைப்படங்கள் போன்ற மறைவிடங்கள் பல இருந்தன. 
மேலும் தோட்டத்திலிருந்த புதர்ச்செடிகளும், குறுமரங்களும் காகம், கழுகு போன்ற பெரிய பறவைகளிடமிருந்து சரியாகப் பறக்கத் தெரியாத இளங்குஞ்சுகளுக்கு (FLEDGLING)அடைக்கலம் கொடுத்தன.    

இன்று கான்கிரீட் வீடுகளில், இவை கூடு கட்ட மறைவிடம் ஏதுமில்லை.  காணுமிடமெல்லாம் பெருகி வரும் அடுக்கக வீடுகளில், தோட்டத்துக்கு ஏது இடம்?

2.    இயற்கை வேளாண்மையைக் கைவிட்டு நாம் வயல்களில் அளவுக்கதிகமான இரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாகப் புழுக்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன.  . 

எனவே உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மிக்க புழுக்களை மட்டுமே இரையாகக் கொள்ளும் இளங்குஞ்சுகளுக்குக் கடுமையான உணவுப் பற்றாக்குறை.  மேலும் இத்தானியங்களைத் தின்னும் குருவிகள், இரசாயன வீரியம் தாங்காமல் இறந்துவிடுகின்றன.

3.   அரிசி, நெல் போன்ற வறண்ட தானியங்களை உண்ணும்  இவற்றுக்குத் தண்ணீர் அதிகம் வேண்டும்.  ஆனால் வெயில் காலங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை.      

4.   செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், இது ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்கப் படவில்லை.

காலத்துக்கேற்ப ஓட்டு வீட்டை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றிக் கொண்ட நாம்,  நம்மை அண்டியே அதுவரைக் குடித்தனம் நடத்தி வந்த இந்தச் சின்னஞ்சிறு உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அம்போ என்று நட்டாற்றில் விட்டது நியாயமா?.    

சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்தால் பாவம்; அது கூடு கட்டுவது குடும்பத்துக்கு நல்லது,’ என்று நம் முன்னோரிடமிருந்த நம்பிக்கையால் தடையேதுமில்லாமல், அக்காலத்தில் இதன் இனப்பெருக்கம் நடைபெற்றது.   .
மேலும் கிராமத்தில் வீட்டுக்கூரையின் முன்பக்கம் இவை கொத்தித் தின்னப் வயலில் புதிதாக அறுத்த நெல்மணி கொத்துக்களைச் செருகி வைப்பார்களாம்.  இயற்கையை நேசித்தல் அவர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது.  ஆனால் நாமோ இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம்!  அதன் விளைவைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 

மனிதரிடம் அடைக்கலம் புகுவதால், இதற்கு அடைக்கலக்குருவி என்ற பெயரும் உண்டு.  ஆனால் இன்று இக்குருவிக்கு அடைக்கலம் கொடுப்பார் யாருமில்லை.

‘சிட்டுக்குருவியால் நமக்கென்ன பயன்? ஏன் அதைக் காப்பாற்ற வேண்டும்?’ என்று கேட்கும் அறிவாளிகளும்(!) இன்று நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். 

இவர்களுக்கு நான் சொல்லும் பதில் இது தான்:-
இயற்கையில் தாவரம், புழு, பறவை, விலங்கு, மனிதன் என அனைத்தும் உணவுக்காகத் தொடர் சங்கிலி போலப் பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று சார்ந்து வாழுமாறு படைக்கப்பட்டுள்ளன.
 
பறவைகள் அழிகின்றன என்றால், இச்சங்கிலி ஏதோ ஓர் இடத்தில் அறுபட்டிருக்கிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொண்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.  இல்லையேல் மொத்த சங்கிலியும் அறுபட்டு வீழ்ந்து விடும்.

“இயற்கைச் சுற்றுச்சூழலின் சமன்நிலையை அறிவிப்பவை பறவைகள் தாம்; அவற்றுக்குக் கேடு எனில், நாமும் கூடிய விரைவில் சிக்கலுக்கு ஆளாகப் போகிறோம் என்று அர்த்தம்,” என்கிறார் பறவை ஆராய்ச்சியாளர் ரோஜர் டோரி பீட்டர்சன்.(Roger Tory Peterson)  .  

சிட்டுக்குருவியைக் காப்பதால் எனக்கென்ன நேரடி நன்மை என்று ஒவ்வொன்றுக்கும் லாப நஷ்டம் கணக்குப் போட்டுப் பார்த்து உதவி செய்யுமளவுக்கு மனங்கள் குறுகிப்போன இந்நாளில், முன்னெப்போதும் இல்லாத அளவு, வாஸ்து சாஸ்திரம் மிகப் பிரபலமாயிருக்கிறது.

கீரைக்காரியிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு மணி நேரம், பேரம் பேசும் நம் மக்கள், வாஸ்துவுக்காக சீனா மூங்கிலை நூற்றைம்பது ரூபாய்(!) கொடுத்து வாங்கி வரவேற்பறையில் வைத்து அனுதினமும் அக்கறையாகக் கவனிக்கிறார்கள்.  இந்த மூங்கிலால் இவர்களுக்குப்  பலன் கிடைக்கிறதோ இல்லையோ, சீனாக்காரனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கிறது.  அவனுக்குத் தான் நம் வாஸ்துவினால் கொண்டாட்டம்!

சிட்டுக்குருவி உங்கள் வீட்டில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்தால், ஒரே மாதத்தில் உழைக்காமல் கோடீசுவரன் ஆகி விடலாம்,’ என்று பிரபல வாஸ்து ஜோசியர் யாராவது சொன்னால் போதும்; அதற்குப் பிறகு நாம் சிட்டுக்குருவி தினம் அனுசரித்து, இப்படிப் புலம்பிக்கொண்டிருக்க  வேண்டிய அவசியமில்லை. வாஸ்து ஜோசியர் யாராவது மனம் வைக்க வேண்டும்!

www.citizensparrow.in/ என்ற தளம் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிட்டுக்குருவியைப் பார்த்த இடங்களைப் பற்றிய தகவல்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.  (நானும் கலந்து கொண்டு, எனக்குத் தெரிந்த தகவல்களை அளித்தேன்.)


8780 இடங்களிலிருந்து 5924 பேர் கலந்து கொண்டு அளித்த 11146 தகவல்களின் அடிப்படையில் இத்தளம், சிட்டுக்குருவி எங்கெங்கு இருக்கிறது, எங்கு இல்லை என்ற பட்டியலைத் தயாரித்து  வெளியிட்டிருக்கிறது. மேற்கூறிய தளத்துக்குச் சென்றால் முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம். 


இப்போதும் கூட இத்தளத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு, உங்களூரில் சிட்டுக்குருவியைப் பார்த்த தகவல்களை அளித்து, இது பற்றிய கணக்கெடுப்புக்கு உங்களால் உதவ முடியும்:-   இணைப்பு:- http://www.citizensparrow.in


இந்தச் சிட்டுக்குருவி தினத்தை வீட்டில், பள்ளியில் அலுவலகத்தில் எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்றறிய, இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.-  www.worldsparrowday.org


சிட்டுக்குருவி கூடுகள், உணவளிப்பான் (Bird Feeder) போன்றவற்றை வாங்க:-  www.save.natureforever.org
(Bird Feeder க்கு தமிழ்ச்சொல் தெரியவில்லை; என் ஆக்கம்  உணவளிப்பான்! யாருக்கேனும் சரியான சொல் தெரிந்தால் சொல்லுங்கள்)

முடிந்து போனதைப் பற்றி இனிப் பேசிப் பயனில்லை.சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க, இனி நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறீர்களா?

இதை……இதைத் தான்…… நான் எதிர்பார்த்தேன்.

உங்கள் இதயத்தின் ஓரத்தில் இச்சிறு உயிர் பிழைக்க உதவி செய்ய வேண்டும் என்ற துளி ஈரமிருந்தால் போதும்; நிச்சயமாக இதற்கு உங்களால் உதவ முடியும்.

எப்படி என்று அடுத்த பதிவில் விளக்குவேன்.

அடுத்த பதிவுக்குச் செல்ல...
 
(முதல் படம் நன்றி இணையம்)

Friday, 13 March 2015

“என்னைத் தூக்கிவிடுங்கள் அம்மா!” - குழந்தையின் அபயக்குரல்(நான்கு பெண்கள் தளத்தில் 09/03/2015 வெளியான என் கட்டுரை)

01/03/2015 முதல் 08/03/2015 வரை புதுவையில் ஷில்பதரு (Shilpataru) கலைஞர்கள் குழு ஏற்பாடு செய்திருந்த கலைக் கண்காட்சியைக் காணும்  வாய்ப்பு எனக்குக் கிட்டியது.   

இந்நிகழ்ச்சிக்கு இவர்கள் தேர்ந்தெடுத்த கரு, ‘மறுசுழற்சி கலை’ என்பதாகும்.

நாம் குப்பை என்று தூக்கி வீசும் பொருட்கள், இவர்களின் படைப்புத் திறன் மூலம் கவின்மிகு கலைபடைப்புகளாக உருமாற்றம் பெற்றிருந்தன.

வாசலில் எச்.சண்முகம் என்பவர் அடுத்த அடி (Next step) என்ற தலைப்பில் உருவாக்கி வைத்திருந்த மிகப்பெரிய கலை வடிவம், அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 

குப்பை மேலாண்மையில் (waste management) இனியும் நாம் கவனம் செலுத்தாவிட்டால், எதிர்கால பூமி எப்படியிருக்கும், நம் வருங்காலச் சந்ததிகளின் நிலை என்ன, சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை சிறிதுமின்றி எப்படிப்பட்ட பரிதாபமான சூழ்நிலையில் நம் குழந்தைகளை விட்டுச் செல்கிறோம் என்று காண்போரைச் சிந்திக்க வைத்தது அப்படைப்பு.   

நாம் தினமும் தொட்டியில் கொட்டும் மக்காத குப்பைகள், கழிவுப் பொருட்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நெகிழி (Plastic) பொருட்கள், மறுசுழற்சி செய்யப்படாத பொருட்கள் எல்லாமுமாக சேர்ந்து பூமியைக் குப்பை காடாக மாற்றி விட, நம் குழந்தை அதற்குள் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும் காட்சி, மனதை மிகவும் பாதித்தது.

கண்ணெதிரே சில அடி தூரத்தில் ஏணி இருந்தும், அதில் ஏற முடியாமல்,  குப்பை புதைகுழிக்குள் கால்களிரண்டும் அகப்பட்டுக் கொண்டு ‘என்னைக் காப்பாற்றுங்கள்,’ ‘என்னைத் தூக்கிவிடுங்கள்,’ என்று குழந்தை அபயக்குரல் எழுப்புவது போன்ற தத்ரூபமான காட்சி, படைப்பாளரின் சமூக சிந்தனையைப் பறைசாற்றியதுடன், காண்போருக்குச் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டுவதாக அமைந்திருந்தது. 

தங்களுக்கும் அன்னை பூமியின் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டிய பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை  இக்கலைப் படைப்புகளின் மூலம் அருமையாக வெளிப்படுத்தியிருந்தனர் இக்கைவினைஞர்கள்.  

உடைக்கும், நாகரிகத்துக்கும் மட்டும் மேல் நாடுகளை காப்பியடிக்கும் நம்மவர்கள், நல்லவிஷயமான குப்பை மேலாண்மையை அவர்களிட மிருந்து கற்றுகொண்டால் என்ன?  இன்னும் சுற்றுச்சூழல் பற்றிய போதுமான விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.

காய்கறிக் கழிவு, புல், பூண்டு போன்றவற்றிற்குப் பச்சைத் தொட்டி, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளைப் போட நீலத் தொட்டி,  மக்காத குப்பை, மறுசுழற்சி செய்யமுடியாத குப்பைகளுக்குக் கறுப்புத் தொட்டி என்று கலர்வாரியாக ஒவ்வொரு வீட்டிலுமே கழிவுகளைப் பிரித்துப் போட்டு விடுகிறார்கள். 

விற்கும் ஒவ்வொரு பொருளிலும் குத்தப்படும் முத்திரையைக்கொண்டு இது மறுசுழற்சி பொருளா இல்லையா என்பதை அறிந்து கொள்கின்றனர்.  செய்யக்கூடிய பொருள் என்றால் எத்தனை முறை ஏற்கெனவே மறுசுழற்சிக்கு உட்பட்டிருக்கிறது; இன்னும் எத்தனை முறை  செய்யமுடியும் என்பதை அதிலுள்ள எண்ணைப் பார்த்துத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் வகை பிரித்து தொட்டியில் போட, குப்பை மேலாண்மை எளிதாகிறது.

இக்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்துமே, தென்னை நார், தேங்காய் மட்டை, குரும்பைகள், பனை ஓலை, ஒயர், விபத்தின் போது சிதறி விழும் கண்ணாடித்துண்டுகள், சவுக்கு காய்கள், நெகிழி குவளைகள் போன்றவைகளை வைத்தே செய்யப்பட்டிருந்தன. 

நாம் வேண்டாம் என்று எரியும் பொருட்களிலிருந்து, இப்படியும் செய்ய முடியுமா என வியப்படைய வைத்தது ஒவ்வொரு படைப்பும்.  குப்பைகள் கலைப்பொருட்களாக மாறுவதன் மூலம், நம் குழந்தைகளின் படைப்புத்திறனும் தூண்டப்படுகிறது; குப்பையின் அளவும் குறைகிறது

நான் பார்த்து வியந்த கலைப் பொருட்களை, நீங்களும் பார்த்து மகிழ:-


Tuesday, 10 March 2015

"இனிக் கண்ணாடிக் கூரையில்லை; நீல வான் மட்டுமே"(நான்கு பெண்கள் தளத்தில் 08/03/2015 அன்று அகில உலக மகளிர் தினத்துக்காக எழுதியது).

கண்ணாடிக்கூரை (GLASS CEILING) என்றால் என்ன? 

மிகப் பெரிய வணிக நிறுவனங்களிலும், பன்னாட்டுக் கம்பெனிகளிலும் மிக உயர்ந்த நிர்வாகப் பதவிகளுக்கான ஏணியில், பெண்கள் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும்,  சாதனையாளர்களாக இருந்தாலும் பாதிக்கு  மேல் ஆண்களுக்கிணையாக  ஏற முடியாமல், தடுக்கும் சுவரைத் தான், கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்து கிறார்கள்.
இதனைத் தடுப்புச்சுவர் அல்லது முட்டுக்கட்டை என்றும் பொருள் கொள்ளலாம்.

1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம், மிஸ் (MS) இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்றும்
1979 ல் நடந்த ஹூலெட் பாக்கார்டு (HEWLETT PACKARD) கம்பெனியில் நடந்த பெண்களின் எழுத்துரிமை குறித்த மாநாட்டில் இந்தத் தடுப்புச் சுவர் பற்றி முதன்முதலாகப் பேசப்பட்டது;  கண்ணாடிக்கூரை என்ற சொல்லை உருவாக்கியவர் லாரன்சும் (LAWRENCE) ஹூலெட் (HEWLETT) மேலாளர் மரியான் ஷ்ரெபர் (MARIANNE SCHREIBER)ஆகியோர் என்றும்.

இச்சொல்லாக்கத்தை முதலில் உருவாக்கியவர் யார் என்பது பற்றி இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் உலவுகின்றன என்பதால், இது பற்றிய விரிவான ஆய்வில் நாம் இறங்க வேண்டாம். 

1984 ல் ‘வேலை செய்யும் பெண்கள்,’ இதழ் (Working women magazine)  என்ற இதழின் முன்னாள் ஆசிரியரான கே பிர்யான்ட் (Gay Bryant)என்பவர், ‘குடும்ப வட்டம்,’ (Family circle) என்ற பத்திரிக்கையில் இவ்வாறு எழுதினார்:-

“உயர் நிர்வாகப் பொறுப்புகளுக்குப் பெண்கள் ஒரு கட்டம் வரை தான் போகமுடிகிறது; அதை நான் கண்ணாடிக்கூரை என்பேன்.  நடுத்தர பொறுப்பு வகிக்கும் இவர்களால், அதற்கு மேல் போக வழியின்றி நின்றுவிடுகிறார்கள்.  அதன் பிறகு சிலர் தங்கள் சொந்த வியாபாரத்தைப் பார்க்கப் போய்விடுகிறார்கள்; மற்றவர்கள் தம் குடும்பத்தைக் கவனிக்கத் தலைப்படுகிறார்கள்.” 

அலுவலகங்களில், நிறுவனங்களில் துவக்கத்தில் ஆண்களுக்கிணையாகப் போட்டி போட்டு மளமளவென்று இடைநிலை வரை அலுவலக ஏணியில் ஏறி வரும் பெண்கள், அதற்கு மேல் ஏற முடியாமல் பாதியிலேயே நின்றுவிடுவதேன்?

இவர்களுக்கு நம்பர் ஒன் ஆவதற்குரிய தகுதியில்லை;  அதற்கேற்ற பன்முகத் திறமையில்லாதவர்கள்; மிக உயர்ந்த பதவியிலிருக்கும் போது நெருக்கடியான காலக்கட்டத்தில் யோசித்து, உடனுக்குடன் முடிவெடுக்கும் திறன் குறைந்தவர்கள்;  பெண் புத்தி பின் புத்தி; மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்பதால், முடிவெடுப்பதில் தவறிழைக்க வாய்ப்புண்டு.  எதிரிகளின் போட்டிகளை முறியடித்துக் கம்பெனியை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் வழியறியாதவர்கள்……

இப்படியெல்லாம் யோசித்துத் தான், பல தலைமுறைகளாக ஆண்களை மட்டுமே உயர்பதவிகளில் அமர்த்திய  நிர்வாகம், பெண்ணை தலைமை பதவியில் நியமிக்கத் தயங்குகிறது.  எனவே ஒரு கட்டத்துக்கு மேலே ஏறுவதற்கான வாய்ப்பு, பெண் என்பதால் மட்டுமே மறுக்கப்படுகிறது.    

ஆனால் நெருக்கடியான காலக்கட்டத்தில், உடனுக்குடன் முடிவெடுத்து குடும்பத்தைத் திறம்பட நடத்துபவர்கள் பெண்கள் என்பதால், இவர்களுக்கு நிர்வாகத் திறமை இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது என்பது தான் உண்மை.  பலசமயங்களில் அஷ்டாவதனியாகச் செயல்படும் பெண்ணுக்கு ஒரு கம்பெனியை நிர்வகிப்பதா கடினம்?

உடல் வலிமை குறைந்தவள் பெண் என்பது உண்மை தான்; ஆனால் மனவலிமையில் ஆண்களை மிஞ்சுபவள்.

நிதி மேலாண்மைக்கும் இவள் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெறத் தேவையில்லை.  எல்லாக்குடும்பத்திலேயும் இவள் தானே நிதியமைச்சர்! 

பட்ஜெட்டில் துண்டு விழாமல் வரவுக்குள் செலவைக் கட்டுப்படுத்தித் திட்டமிட்டுச் சேமித்து முதலீடு பண்ணி வருமானத்தைப் பெருக்கிச் சாதனை பண்ணுபவள் பெண் தானே?

அதனால் தான் பட்டுக்கோட்டையார் பாடினார்:-
சேர்த்த பணத்தைச் சிக்கனமாச்
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில
கொடுத்துப் போடு
சின்னக்கண்ணு
அவங்க ஆறு நூறு ஆக்குவாங்க
செல்லக்கண்ணு”

அண்மை காலத்தில் நிர்வாகம், (IAS) இஞ்சீனியரிங், வங்கித் துறைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இவர்கள் இந்தத் தடுப்புச் சுவரை இடித்துத் தள்ளி, ஏணியில் மேலேறி சாதனை படைக்கத் துவங்கியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பாரம்பரிய மிக்க பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா.  இவர் தலைமையில் வங்கி பெருமையுடன் பீடு நடை போடுகிறது. 

நைனா லால் கித்வை, (ஹெச்.எஸ்.பி.சி),  சந்தா கோச்சார் (.சி..சி.),  ஷிகா ஷர்மா (ஆக்சிஸ் வங்கி), விஜயலஷ்மி ஐயர் (பாங்க் ஆப் இந்தியா) அர்ச்சனா பார்கவ் (யுனைடெட் பாங்க்) என வங்கிகளில் மிகப் பெரிய பொறுப்பு வகித்த, வகிக்கும், பெண்களின் பட்டியல் நீள்கிறது

கம்பெனியில் உயர்மட்டத்தில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அதன் நிதி மேலாண்மை செயல் திறன் மிக்கதாக இருக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றனவாம்.  மேலும்

2007ல் நியூயார்க்கில் நடந்த ஒரு ஆய்வு, ஃபார்ச்சூன் (FORTUNE) 500 நிறுவனங்களில், நிர்வாகக்குழுக்களில் பெண்கள் 25 சதவிகிதத்திற்கு மேல் இருந்த அமைப்புகளின் செயல்பாடு, பல கோணங்களிலும் இதர நிறுவனங்களை விட மேம்பட்டு இருந்ததாகக் கூறுகிறது. 

இதற்கெல்லாம் ஆராய்ச்சியே தேவையில்லை.  வீட்டில் மனைவியாக அம்மாவாக குடும்பத்தலைவியாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களை அனாயாசமாகக் கையாளும் பெண்ணுக்கு இயற்கையிலேயே நெருக்கடிகளைத் தீர்க்கக்கூடிய அறிவும், தலைமையேற்று நடத்தக்கூடிய திறனும், பலருடன் இனிமையாக எளிதில் பழகக் கூடிய சுபாவமும் இயல்பாகவே அமைந்துள்ளன. 

சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை, அவளுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தி கம்பெனியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் பழக்கப்பட்ட  பெண்களுக்கு நிறுவனங்களின் சந்தையைப் பற்றிய புரிதலும் இருக்கும் என்பதால் அவர்களுடைய பங்களிப்பு நிச்சயம் நிறுவனத்துக்குப் பயனுள்ளதாகவே முடியும். 

தற்போது நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய வர்த்தக நிறுவனங்களிலும் பெண்கள் தலைமை பதவியை எட்டி வருவதால் இக்கண்ணாடிக் கூரையில் விரிசல் விழத்துவங்கியுள்ளது. 

அர்ப்பணிப்பு குணம் நிறைந்த சாதனை பெண்டிரின் கடும் உழைப்பினாலும் முயற்சியாலும் முழுவதுமாக இது தகர்ந்து விழும் நாள் வெகு தூரத்தில்லை. 
“கண்ணாடிக்கூரையில் விரிசல் விழுந்து விட்டது.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய கம்பெனிகளின் மேல்மட்ட பதவிகளைப் பெண்கள் வகிக்கப் போகிறார்கள்; .இனிமேல் கண்ணாடிக்கூரை இல்லை; நீல வானம் மட்டுமே,” என்கிறார் பிரியா செட்டி ராஜகோபால், (Vice President & Client Partner, Stanton Chase International).

(படம்:- நன்றி இணையம்)

Thursday, 5 March 2015

பறவை கூர்நோக்கல் – 3 கொண்டைக்குருவி


'கொண்டு கரிச்சானி'ன் குரல் இனிமை என்ற சென்ற பதிவில் சொன்னேன் அல்லவா? அதை நீங்களும் கேட்டு இன்புற இங்கே கொடுத்துள்ளேன். அலைபேசியில் ஒலிப்பதிவு செய்தது தான். இடையிடையே வேறு சத்தங்கள் இருப்பதால், அவ்வளவு தெளிவாக இல்லை.  ஆனாலும் குருவியின் குரலை ஓரளவுக்கு உங்களால் இனங்காண முடியும் . கேட்டு விட்டு உங்கள் எண்ணத்தைப் பகிருங்கள்.


(இதனைத்  திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவைப் பார்த்துக் கீதமஞ்சரி கீதா மதிவாணன் இணைத்துக் கொடுத்தார்.  இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.  

மூன்றாவதாக நான் அறிமுகப்படுத்துவது கொண்டைக்குருவி (RED VENTED BUL BUL) (Pycnonotus cafer)

இதையும் பெயர் தெரியாமல் புல் புல் என்றே சொல்லிவந்தேன்.  பறவைகள் கையேட்டின் மூலம் இந்தப் பெயர் தெரிந்து கொண்டேன்.  இதற்குச் சின்னான் என்ற பெயரும் உண்டாம்.

தலை கறுப்பாகவும், வாலுக்கடியில் சிவப்பாகவும் இருக்கும்.  உடலும் இறகுகளும் பழுப்பு நிறமாகவும், செதில் செதிலாகவும் தோற்றமளிக்கும்.  வாலுக்கடியில் இருக்கும் சிவப்பு தான், இதன் முக்கிய அடையாளம்.
பழங்கள், தேன், பூச்சிகள் முதலியவற்றை உணவாகக் கொள்ளும்.  . ,
சிறுசிறுகுச்சிகளையும், சிலசமயம் உலோகக் கம்பிகளையும் கொண்டு கிண்ண வடிவில் கூடு கட்டும்.   

ஆண், பெண் இரண்டுமே குஞ்சுக்கு உணவூட்டும்.  தெற்காசிய பறவையான இதை நியூசிலாந்து, ஹவாய், பிஜி, யுனையெட் அரேபிய எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினர்.

மூர்க்க குணம் கொண்டது.  வெளியூரிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் பறவைகளுள், உள்ளூர் இனங்களை ஒரேயடியாக அமுக்கி விட்டு வெகுவேகமாகப் படையெடுத்துப் பரவக்கூடிய, இனமாக இப்பறவை இனங்காணப்பட்டுள்ளது.  (worst alien invasive species)

சென்ற ஆண்டு, ஒரு நாள் எங்கள் வீட்டு வாசல் கதவுக்கும், கிரில் கேட்டுக்கும் நடுவில் தொங்கவிட்டிருந்த மின்விசிறியின் மண்டையின் மேல் கூடு கட்ட இடம் பார்த்தது, இக்குருவி. 

மின் விசிறியின் மேற்பகுதி வெட்ட வெளியாக இருப்பதால், கூடு கட்டினால் குஞ்சு தவறிக் கீழே விழுந்து விடுமே எனப் பயந்து நான் அட்டைபெட்டியின் நடுவில் ஓட்டை போட்டு, அதனை மின்விசிறியின் இறக்கையில் தொங்கவிட்டேன். 

நான் முக்காலியில் ஏறி அதைத் தொங்க விடுவதைக் கண்ட இது, அதன் கூட்டை எடுக்க முயல்கிறேன் என்று எண்ணிப் பயந்து ஓடிவிட்டது. அதற்குப் பிறகு எங்கள் வீட்டுப்பக்கமே காணோம்.

அதன் பின் காலியாகத் தொங்கிய அக்கூட்டில், சில நாட்கள் கழித்து முதன்முறையாகச் சிட்டுக்குருவி வந்து குடித்தனம் நடத்தியது தனிக்கதை.

போன மாதம் வீட்டின் குளிர் சாதனக்கருவியின் வெளிப்பக்க பெட்டியின் பக்கவாட்டில் இருக்கும் மிகச் சிறிய இடத்தில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்தது.  இதன் குரல் கேட்கச் சகிக்கவில்லை.

எங்கள் காரின் ஆன்டெனா மேல் தம்பதி சமேதரராகக் காட்சி தரும் கொண்டைக் குருவி,  கைபேசியில் எடுத்த படம்:-(முதல் படம் - நன்றி இணையம்)                                                                                                                                                                                                                                                                    நன்றி: - பறவைகள் அறிமுகக்கையேடு (ப.ஜெகநாதன் & ஆசை)                                மற்றும் இணையம்.                                                                                                                                                                                                                                                                                               (தொடர்வேன்)                           

Sunday, 1 March 2015

பறவை கூர்நோக்கல் (BIRD WATCHING) - 2 - 'கொண்டு கரிச்சான்'இத்தொடருக்கு என் வேண்டுகோளை ஏற்று, கரிச்சான் (BLACK DRONGO) குருவியைப் பற்றி நண்பர்கள் விரிவாக எழுதிய பின்னூட்டம், என்னைப் போலவே பலருக்கும், பறவைகளின் மீது இருக்கும் நேசத்தை வெளிப்படுத்தியது. 

உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, விரிவான கருத்துக்களை எல்லோரும் அறியத் தந்து, என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி.

துரை செல்வராஜ்  (தஞ்சையம்பதிஅவர்கள் இக்குருவிக்குத் திருவாரூருக்கு அருகில் வலிவலம் என்ற ஊரில் கோவில் இருக்கிறது என்ற அரிய தகவலைச் சொன்னார்.  இக்கோவில், தேவாரப் பாடல், கரிச்சான் கழுகை விரட்டிய நினைவலைகள் ஆகியவை பற்றி, அவர் தளத்தில் தனியே ஒரு பதிவு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் கரிச்சானைப் பற்றி அவரிடம் அவ்வளவு அரிய விபரங்கள் இருக்கின்றன.  நம் சந்ததிக்காக அவற்றைப் பதிந்து வைப்பது மிக அவசியம்.    

பலர் அளித்த தகவல்கள் மூலம் இக்குருவிக்கு வலியன், கரிச்சான், கரிக்குருவி, இரட்டை வால் குருவி, கருவாட்டு வாலி என்ற பெயர்கள் இருப்பதை அறிந்தோம்.

இவற்றில் கருவாட்டு வாலி மட்டும் சரியா என்று எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.  கருவாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

ஸ்ரீராம் (எங்கள் பிளாக்)கொடுத்த இணைப்பில் இருந்த சலீம் அலி புத்தகத்தைப் படித்த போது, இதற்குக் கருவெட்டு வாலி என்ற பெயரும் இருப்பதாக அறிந்தேன்.  ஸ்ரீராமுக்கும் ஆர்.விக்கும் என் நன்றி.

வால் நடுவே இரண்டாகப் பிளந்து, வெட்டுப்பட்டது போல் இருப்பதால், கருவெட்டு வாலி என்பது பொருத்தமாக இருக்கிறது.  எனவே கருவெட்டு வாலி தான் காலப்போக்கில் மருவி, கருவாட்டுவாலி ஆகியிருக்க வேண்டும்.

BIRD WATCHING என்பதற்கு ஜோசப் விஜு (ஊமைக்கனவுகள்) அவர்கள் சொன்ன கூர்நோக்கல் என்ற சொல், கவனித்தல் என்பதை விடப் பொருத்தமாய்த் தோன்றியதால், தலைப்பை மாற்றிவிட்டேன்.   

மிமிக்ரி என்பதற்கும் அநுகரணம் என்ற சொல் பத்து- பதினொன்றாம் நூற்றாண்டிலேயே  யாப்பருங்கல விருத்தி என்ற தமிழ் நூலில்  பயன்படுத்தப்பட்டிருப்பதையறிந்தேன்.   இது தெரியாமல் நாமெல்லாரும் மிமிக்ரி என்று தமிங்கிலீஷில் தானே, இது நாள் வரை எழுதி வந்தோம். இந்த அரியத் தகவலைத் தந்த விஜு சாருக்கு என் மனமார்ந்த நன்றி. 

இரண்டாவதாக நான் சொல்லப் போவது கொண்டு கரிச்சான் (ORIENTAL MAGPIE- ROBIN. (Copsychus saularis)

இது எங்கள் தெருவில் கடந்த ஓராண்டாக வசிக்கிறது.  இதன் தமிழ்ப் பெயர் தெரியாததால், ராபின் என்றே இதுநாள் வரை சொல்லி வந்தேன்.  பறவைகள் – அறிமுகக் கையேட்டின் (ப.ஜெகநாதன்) மூலம் சரியான பெயரைத் தெரிந்து கொண்டேன்.


ராபின் என்ற பெயர் இருந்தாலும், இக்குருவி அமெரிக்க ராபின் (American robin) (Turdus migratorius)குடும்பத்தையோ,  ஐரோப்பிய ராபின்  (European robin) (Erithacus rubecula) குடும்பத்தையோ  சேர்ந்ததல்ல. 

இது இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் வாழும் பறவை. 
அமெரிக்க ராபின் என்றவுடன் ‘மெளன வசந்தம்என்ற நூல் நினைவுக்கு வருகிறது.  அது பற்றி ஒரு சிறு தகவல்:-

அமெரிக்காவில் 1920 ல் எல்ம் மரங்களைப் பாதித்த பூஞ்சக்காளான் நோய்க்கு (DDT) எறும்பு மருந்தை, வண்டி வண்டியாகத் தெளித்தார்கள்.   
இதனால் பறவைகள் குறிப்பாக ராபின் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.  1954 க்கு பின் எண்ணிக்கை வெகுவாகக்  குறைந்து இவற்றைக் காண்பதே அரிதாகி விட்டது.  இதன் பிறகு தான் எறும்பு மருந்தை உலகமுழுதும் தடை செய்தார்கள். 

தம் பாடல் மூலம் வசந்தத்தைக் கட்டியங்கூறி வரவேற்கும் ராபின் பறவைகள் இல்லாமல், அதற்குப் பிறகு அமெரிக்காவில் வசந்தத்தில் மயான அமைதி நிலவியது.    

கோரைப்புல் ஏரியில் வாடிவிட்டது
பறவைகள் பண்ணிசைப்பதில்லை” (கீட்ஸ்)

இதைப் பற்றி ரெய்ச்சல் கார்சன் (RACHEL CARSON) எழுதிய மெளன வசந்தம் (SILENT SPRING) என்ற நூலை, பேராசிரியர் ச.வின்சென்ட். தமிழ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  ‘எதிர்’  வெளியீடு.  பூச்சிக்கொல்லிகளின் விளைவுகளை உலகம் அறியச் செய்த மிக முக்கியமான புத்தகம் இது. 


'கொண்டு கரிச்சான்,' மைனாவை விடச் சற்றுச் சிறியது; இதன் தனித்தன்மை குரல் வளம் தான்.  அதிகாலை நேரத்தில் சீழ்க்கை ஒலி போலத் தொடர்ந்து, இது பாடும் பாடலைக் கேட்கலாம்; கேட்கலாம்; கேட்டுக்கொண்டே இருக்கலாம்.  அவ்வளவு இனிமை!

சில பறவைகள் ஏன் பாடுகின்றன?  இயல்பாக அவை எழுப்பும் ஒலிக்கும் பாட்டுக்கும் என்ன வேறுபாடு?     

இனப்பெருக்கக் காலத்தில் சில பறவைகள் இணையைத் தேடுமுன் ஒரு சிறிய இடத்தைத் தமது இடமாகத் தேர்ந்தெடுத்து, ‘இது என் பகுதி இங்கு யாரும் வரக்கூடாது,’ என்பதைத் தனித்துவமிக்க ஒலியால், பாடலால் அறிவிக்கின்றனவாம். 

ஆண் பறவைகள் மட்டுமே பாடும் (குயில் மாதிரி). அப்படி ஓர் ஆண் பறவை பாடினால், அவ்விடம் அதற்கு 'முன் பதிவு'  செய்யப்பட்டதாக அர்த்தமாம்.  அது ஓர் ஒலி வேலி; (எவ்வளவு அழகான சொல்!) பெட்டையைக் கவர்வதற்கும் இது ஒரு உத்தி என்கிறார், கானுயிர் ஆர்வலரான சு. தியடோர் பாஸ்கரன் ‘தாமரை பூத்த தடாகம்,’ என்ற நூலில்.  (உயிர்மை பதிப்பகம்)

இக்குருவி அமர்ந்திருக்கும் பெரும்பாலான நேரங்களில் வாலைத் தூக்கியே வைத்திருக்கிறது;  தரையில் இருக்கும் பூச்சிகளை இரையாகக் கொள்கிறது.

இக்குருவிக்குச் சலீம் அலியின் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்  குண்டு கரிச்சான் என்ற பெயர் பொருத்தமாக இல்லையென்பதால் கையடக்க ஏட்டில் கொடுத்த பெயரையே கொடுத்திருக்கிறேன்.

இதற்கு வேறு பெயர்கள் உங்கள் பகுதிகளில் வழங்கினால், அவசியம் அனைவரும் அறியத் தாருங்கள். 

துணை நூற்பட்டியல்:-  1.  பறவைகள்-அறிமுகக் கையேடு
ப.ஜெகநாதன் & ஆசை – க்ரியா பதிப்பகம்
2.  பறவை உலகம் – சலீம் அலி – தமிழாக்கம் – பேராசிரியர் எம்.வி.ராசேந்திரன்
3.  தாமரை பூத்த தடாகம் – சு.தியடோர் பாஸ்கரன் -  உயிர்மை வெளியீடு.
4.  மெளன வசந்தம் – ரெய்ச்சல் கார்சன் – தமிழில் பேராசிரியர் ச.வின்சென்ட் – எதிர் வெளியீடு.

தொடர்வேன்,

நன்றியுடன்,
ஞா.கலையரசி. 
(படம் இணையத்திலிருந்து எடுத்தது)