நல்வரவு
வணக்கம் !
Sunday, 21 October 2012
Tuesday, 2 October 2012
உறவுகள்
உங்களது சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன என்று டாக்டர் கூறிய போது அதை ஜீரணிக்க
முடியாமல் பேயறைந்தது மாதிரி அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான் சேகர்.
”என்ன டாக்டர்
சொல்றீங்க? அவங்களுக்கு வயத்துல தான்
வலி. ரெண்டு நாளா வாந்தி. மூச்சு விட ரொம்பச் சிரமப்படுறாங்க. முகமும் காலும் ரொம்ப வீங்கியிருக்கு. அதுக்காகத்
தான் ஒங்கக்கிட்ட காட்ட வந்தோம். நீங்க வேற
என்னமோ சொல்லிப் பயமுறுத்திறீங்க?”
டாக்டர் சொன்னதை நம்ப முடியாமல் அவன் மனைவி சித்ரா கேட்டாள்.
”எல்லாம் அதோட
அறிகுறிதாம்மா. நுரையீரல்ல நிறைய தண்ணி
சேர்ந்திருக்கு. ஒடனடியா ஆஸ்பத்திரியிலே
சேர்த்துடுங்க. டயாலிசிஸ் செய்யணும். கையில ’பிஸ்டுலா’ன்னு ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ண வேண்டியிருக்கு. ஆனா அது மூலமா டயாலிசிஸ் செய்றதுக்கு ஒரு மாசம்
ஆகும். அதுவரைக்கும் தற்காலிகமா கழுத்து
பக்கத்துல ஒரு ’கதீட்டர்’ போட்டுப் பண்ணனும்.”
”அதுக்கெல்லாம் நெறைய பணம்
தேவைப்படுமே. நாங்க சாதாரண வயித்து
வலின்னு நெனைச்சுக் கிட்டுத்தான் வந்தோம்.
அதனால் வீட்டுக்குப் போய் பணம் ஏற்பாடு பண்ணிக்கிட்டு நாளைக்கு வரலாமா
டாக்டர்?”
”நாள் வளர்த்தினீங்கன்னா
ரொம்ப சீரியஸ் ஆயிடும்மா. எவ்ளோ சீக்கிரம் வர்றீங்களோ, அவ்வளவுக்கு நல்லது.”
”சரிங்க டாக்டர். நாளைக்குக் கண்டிப்பா வந்துடுறோம்.”
ஒரு நிமிடம் பாத்ரூம் போய் வருகிறேன் என்று அவனிடம் கைப்பையைக் கொடுத்து
விட்டு உள்ளுக்குள் சென்று கொஞ்ச நேரம் அழுது தீர்த்து விட்டு முகத்தைக்
கழுவிக்கொண்டு வெளியில் வந்தாள் சித்ரா.
எதிர்காலமே சூன்யமாகி விட்டது போலிருந்தது அவனுக்கு.
’இன்னமும் நான் முடிக்க
வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கின்றனவே? அய்யோ
நான் என்ன செய்வேன்? திடீரென்று ஒருவனிடம் உன்னுடைய ஆயுட்காலம் இவ்வளவு நாள்
அல்லது இத்தனை மணி நேரம் என்று சொன்னால் அவனுக்கெப்படி இருக்கும்? எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நாளுக்குள்
முடிக்க வேண்டிய பணிகள் அனைத்தையும் என்னால் முடித்து விட்டுப் போக முடியுமா? எல்லாவற்றையும்
சித்ரா தலையில் சுமத்தி விட்டுப் போனால், பாவம் அவள் என்ன செய்வாள்?’
சிவந்திருந்த தன் முகத்தையும், கண்களையும் அவன் பார்க்க முடியாதபடிக்கு
முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, ”வாங்க
வீட்டுக்குப் போகலாம்,” என்று சித்ரா அழைத்த
போது அவனது எண்ண ஓட்டம் தடைப்பட்டது.
”அவ்வளவு தான் என்
வாழ்க்கை! எல்லாம் முடிந்து போய் விட்டது சித்ரா,” என்று அவன் சொன்ன போது குரல் உடைந்து கண்ணீர் கொட்டியது. சிறு குழந்தை போல் குலுங்கிக் குலுங்கி அழுதான்
சேகர்.
”ஷ்! எல்லாரும்
பார்க்கிறாங்க. மனசைத் தளர விடாதீங்க. இந்தச் சமயத்துல தைரியம் தான் ரொம்ப
முக்கியம். வருஷக்கணக்கா டயாலிசிஸ்
செஞ்சிட்டு எத்தனை பேரு நல்லா இருக்காங்க தெரியுமா? மேலும் அறுவை சிகிச்சை பண்ணி வேற
சிறுநீரகத்தைப் பொருத்திக்கிட்டா பிரச்சினையேயில்லன்னு டாக்டரும் சொன்னாரில்லே?”.
”சித்ரா! நான் யாருக்கு என்ன கெடுதல் பண்ணினேன்? மனசாலக் கூட யாருக்கும் எந்தத் தீங்கும்
நினைச்சதில்லே. ஏன் எனக்கு மட்டும்
இப்படி?”
”ஒங்களுக்கு மட்டும்
இல்லீங்க. கள்ளங் கபடு இல்லாத இந்தச்
சின்னக் கொழந்தைங்களைப் பாருங்க. இந்தப் பிஞ்சு வயசில பெரிய பெரிய வியாதியெல்லாம்
வந்து எவ்ளோ கஷ்டப் படுதுங்க?. இதுங்க
என்ன பாவம் பண்ணிச்சிங்க? மனுஷன் நல்லவனா கெட்டவனான்னு மனசைப் பார்த்து வியாதி வர்றதில்லேங்க.”
”எனக்கு எந்த வைத்தியமும்
பண்ண வேணாம் சித்ரா. டயாலிசிஸ் பண்ணினா, சேர்த்து
வைச்சிருக்கிற மொத்த பணமும் காலியாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடும்னு நான்
கேள்விப்பட்டிருக்கேன்.
பசங்களைப் படிக்க வைக்க, குடும்பத்தை நடத்த நிறையப் பணம் தேவைப்படும். எப்படியும் நான் பொழைக்கப் போறதில்லே. அதனால எனக்கு வைத்தியச் செலவு எதுவும் பண்ணாம நிம்மதியா என்னைச் சாக விட்டுடு.”
”இங்கப் பாருங்க. எத்தினியோ வியாதிக்கு மருந்தே இன்னும்
கண்டுப்பிடிக்கலே. ஒங்களுக்கு வந்திருக்கிற
வியாதிக்குச் செலவு பண்ணினாலும், வைத்தியம் இருக்கேன்னு நெனைச்சுச் சந்தோஷப்படுங்க. அவசியமானதுக்குக் கூடச் செலவழிக்காம பணத்தைச்
சேர்த்து வைச்சிக்கிட்டு நாம என்ன பண்ணப் போறோம்?
கண்டதையும் நினைச்சு மனசைப் போட்டு அலட்டிக்காம தைரியமா இருங்க. மத்ததை எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.”
’பெண்கள் வீக்கர் செக்ஸுன்னு
யார் சொன்னது? இந்த மாதிரி நெருக்கடியான
சமயங்கள்ல அவங்களுக்கிருக்கிற தைரியமும் துணிச்சலும் எந்த ஆணுக்காவது இருக்குமாங்கிறது
ச்ந்தேகம் தான். பெரிய பலசாலியா
இருக்கிறவன் கூட சாவு நெருங்குதுன்னு தெரிஞ்சவுடனே, ஆடிப்போயி எவ்வளவு பெரிய கோழையாயிடுறான்?’
”என்ன யோசனை? கவலைப்படாதீங்க. ஒங்களுக்கு ஒன்னும் ஆகாது. ரொம்ப நாளைக்கு
டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியமில்லே ஒங்கக்கா, தம்பி யெல்லாரும் ஒங்க மேல உயிரா
இருக்காங்க. ஒங்களுக்கு ஒன்னுன்னா அவங்க தாங்க மாட்டாங்க. நீங்க வேணா பாருங்களேன், ஒங்களுக்குக் கிட்னி கொடுக்க அவங்க எல்லாரும் நான் நீன்னு கியூ
வரிசையில வந்து நிக்கப் போறாங்க. ஆப்ரேஷன்
பண்ணிட்டா அதுக்கப்புறம் டயாலிசிஸ் பிரச்சினை தீர்ந்துடும்...”.
”என்னோட அக்கா, தம்பியைப்
பத்தி மட்டும் சொல்றே. ஏன் நீ கொடுக்க
மாட்டியா? உயிரு மேல ஒனக்கு அவ்வளவு பயம்.
அப்டித்தானே?,” கேட்டு விட்டு விரக்தியாகச் சிரித்தான். அவளைச்
சீண்டிவிட்டுக் கோபப்பட வைப்பதில் ஆரம்ப காலத்திலிருந்தே அவனுக்கு விருப்பம் அதிகம்.
”டாக்டரு என்ன
சொல்றாருன்னா, அப்பா அம்மா, இல்லேன்னா கூடப்பொறந்தவங்க கொடுத்தா நல்லாப்
பொருந்துமாம். ஒங்க ஒடம்பு அதை
நிராகரிக்கிற வாய்ப்பு ரொம்பக் கம்மியாம்.
மாமா, மாமிக்கு வயசாயிட்டுது.
அறுபது வயசுக்கப்புறம் எடுக்க மாட்டாங்களாம். ஒருத்தருக்கு ஒரு சிறுநீரகம் தாராளமாப் போதும்.
. என்னோட தோழி ஒருத்தி ஒரேயொரு சிறுநீரகத்தோட பத்துப் பதினைஞ்சு வருஷமா நல்ல
ஆரோக்கியத்தோட இருக்கா.”
சித்ரா பேசப் பேச கொஞ்சங் கொஞ்சமாக அவனுக்குள்
நம்பிக்கைத் துளிர் விட்டது. யார் கொடுக்க
முன் வந்தாலும் வராவிட்டாலும் தம்பி கண்டிப்பாகக் கொடுப்பான் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது.
வீட்டுக்கு வந்து தேவையான பணம் ஏற்பாடு செய்து கொண்டு உறவுகளிடம் விபரம்
சொல்லி மருத்துவமனையில் சேர்ந்து ஒரு வாரமாகி விட்டது.
விபரம் கேள்விப்படடு மருத்துவமனைக்குப் படையெடுத்தவண்ண மிருந்தனர்
உறவுகள். அண்ணனுக்கு நான் தான் கொடுப்பேன் என்று அடம்
பிடித்தான் தம்பி முருகன். அவனுடையது
ஒத்துப் போகவில்லை என்றால், தான் தரத் தயாராயிருப்பதாய்ச் சொன்னாள் அக்கா பார்வதி.
”அத்தான் ஏதாவது சொல்லப்
போறாரோன்னு பயமாயிருக்குக்கா. அவர் கிட்டே
கேட்டுக்கிட்டியா? ஒன் பசங்கக் கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடு.”
”அவருக்கிட்டே கேட்காமலா?
அவரும் சரின்னு சொல்லிட்டாருடா தம்பி.
புள்ளை பொண்ணு எல்லாத்துக்கும் கல்யாணம் பண்ணி என் கடமையை
முடிச்சிட்டேன். அதுங்கக்கிட்டே என்னா
கேட்குறது? இனிமே எனக்கொன்னும்
பிரச்சினையில்லே.”
முதலில் முருகனுக்குப் பல பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டு அவனுடையது
பொருந்த வில்லை என்று டாக்டர் சொன்னபோது எல்லோருக்கும் முக்கியமாக சேகருக்குப் பெருத்த
ஏமாற்றமாயிருந்தது..
”அண்ணா! நீ எனக்கு எவ்வளவோ
செஞ்சிருக்கே. என்னோட நன்றிக்கடனை
இப்படியாவது நிறைவேத்தலாம்னு நினைச்சேன்.
என்னோட கண்டிப்பா பொருந்தும்னு ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன். இப்ப்டியாயிட்டுதே,” என்று வாய் ஓயாமல் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தான்
முருகன்..
”அதுக்கென்னப்பா
செய்றது? பொருந்துறதும் பொருந்தாததும்
நம்ம கையில இல்லியே! ஒன் உயிரைப் பத்திக்
கவலைப்படாம உடனே கொடுக்கிறேன்னு சொன்னியே
அதுவே போதும்,” என்று சேகரும் தம்பியை அவ்வப்போது
தேற்றிக் கொண்டிருந்தான்.
அதற்கடுத்து பார்வதிக்குச் சோதனை செய்து அவளுடையது நன்றாகப் பொருந்துவதாக
டாக்டர் சொல்லியபோது சேகருக்கு நிம்மதி ஏற்பட்டது.
ஒரு மாதங்கழித்து அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. அத்தினத்திற்கு இரு நாட்களுக்கு முன் வந்து
மருத்துவமனையில் சேருமாறு சொன்னார் டாக்டர்.
அறுவைசிகிச்சைக்குத் தேவையான பணம் ஏற்பாடு பண்ணிக்கொண்டு மருத்துவமனையில்
வந்து அட்மிட் ஆயினர் சேகரும் சித்ராவும்.
அவனது அக்காவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால் அவள் வரவேவில்லை.
தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, ”முதல்ல
கொடுக்கிறேன்னு சொன்னா; ஆனா இப்ப அவளுக்கு
விருப்பமில்லை,” என்று சொல்லித்
தொடர்பைத் துண்டித்துக் கொண்டார் அவளது கணவர்.
சேகருக்கு மிகவும் ஏமாற்றமாகிவிட்டது.
டாக்டரிடம் விபரத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் சேகர்.
இதற்காக வருந்த வேண்டாம் என்றும் குறித்த நேரத்தில் அறுவை நடக்கும் என்றும்
டாக்டர் சொன்ன போது வியப்படைந்தான் சேகர்.
”எப்படி டாக்டர்? சிறுநீரகம் யார் கொடுக்கிறாங்க?”
”ஒங்க மனைவி தான்
சேகர். இதே மாதிரி ஏதாவது நடந்துச்சுன்னா
ஒங்க ஆப்ரேஷன் தடைபடக் கூடாதுன்னு தன்னோட சிறுநீரகத்தையும் சோதிச்சுப் பார்க்கச்
சொல்லி முன்னாடியே எங்கிட்ட கேட்டுக்கிட்டாங்க.
ஒங்களுக்குத் தெரியாம எல்லாச் சோதனையும் செஞ்சு பார்த்ததிலே அவங்களோட
நல்லாப் பொருந்துது. நீங்களும் அவங்களும்
ஒரே ரத்த குரூப்பா இருக்கிறதினாலே ரொம்ப நல்லதாப் போச்சு.
புருஷனோட உயிருக்கு ஆபத்துன்னா, கிட்னி தானமாக் கொடுக்க முன் வர்ற முதல் ஆளு
மனைவி தான் சேகர். ஆனா மனைவிக்குக் கொடுக்கிறேன்னு முன்வர்ற கணவரோட எண்ணிக்கை
ரொம்ப ரொம்ப சொற்பம். அம்மா, மனைவி இந்த
ரெண்டு பேரைத் தவிர உலகத்துல வேற எந்த உறவும் தன்னோட உயிரைப் பணயம் வைக்க லேசில
ஒத்துக்கமாட்டாங்க.”
”நீங்க சொல்றதை நான் ஏத்துக்க
மாட்டேன் டாக்டர். எனக்குச் சிறுநீரகம்
தேவைன்னு சொன்னவுடனே நான் கொடுக்கிறேன்னு முதல்
ஆளா வந்தவன் என் தம்பி தான். ஆனா அவனோடது
எனக்கு ஒத்துக்காம போனது என்னோட துரதிர்ஷ்டம்.”
”ஹா ஹா ஹா..”
”ஏன் டாக்டர் சிரிக்கிறீங்க?
நான் என்ன ஜோக்கா சொன்னேன்?”
”ஒங்கத் தம்பி நல்ல நடிகர். சினிமாவுல நடிச்சார்னா ஆஸ்கார் அவார்டு கண்டிப்பா
அவருக்குத்தான்.”
”என்ன டாக்டர்
சொல்றீங்க? நடிப்பா? எனக்கொன்னும்
புரியலியே?”
”அவரோடது ஒங்களுக்கு ரொம்பவே
நல்லாப் பொருந்திச்சி சேகர்.. வெளியில நன்றிக்கடன்,
அது இதுன்னு உணர்ச்சி பூர்வமா வசனம் பேசிட்டு,
யாருக்கும் தெரியாம என் ரூமுக்கு வந்து ”தயவு
செஞ்சு என் கிட்னி அண்ணனுக்குப் பொருந்தலேன்னு சொல்லிடுங்க டாக்டர்,”ன்னு கேட்டு, என் கால்ல விழாத குறையா கெஞ்சினது
எனக்குத் தானே தெரியும்.”
Subscribe to:
Posts (Atom)