நல்வரவு

வணக்கம் !

Tuesday, 26 May 2015

“பொன்னென மலர்ந்த கொன்றை”



ஏப்ரல், மே மாதங்களில் இலைகளை முழுவதுமாக உதிர்த்து விட்டு மரமுழுக்க பொன்மஞ்சள் மலர்களால் நிறைந்து, சரம் சரமாகத் தொங்கிக் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படைக்கும் கொன்றை, நம் மண்ணின் மரங்களுள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. 

இதன் தாவரப்பெயர் Cassia fistula.  Fabaceae குடும்பத்தைச் சேர்ந்தது.  இதன் வேறு பெயர்கள்:- ஆக்கொத்து, ஆர்கோதம், இதகுழி, கடுக்கை, கவுசி, கொண்டை, கொன்னை, சமிப்பாகம், சரக்கொன்றை, தாமம், நீள்சடையோன்.


தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் என்பதால், வெப்பத்தையும், வறட்சியையும் தாக்குப் பிடித்து வளரக்கூடியது.  அச்சிருபாக்கம், திருக்கோவிலூர்,, திருத்துறையூர் உள்ளிட்ட 20 சிவன்  கோவில்களில் தலமரமாக இருக்கும் சிறப்புப் பெற்றது.  தற்காலத்தில் தெருவோரங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

கேரள மாநிலத்தின் மலர் என்பதோடு, அதன் புத்தாண்டு தினமான விஷு பண்டிகையின் பூஜைக்குரிய மலராகவும் இது விளங்குகிறது.  அங்கு இதன் பெயர் கனிக்கொன்னா அல்லது விஷு கொன்னா..  தாய்லாந்து நாட்டு மலரும் இதுவே.
 
இதன் காய்கள் பச்சையாக உருளை வடிவத்தில் இருக்கும்.  முற்றிப் பழமாகும் போது கருமைகலந்த காப்பிக்கொட்டை நிறமாகிவிடுகிறது.  முற்றிய கனியின் ஓட்டை உடைத்து, விதையை எடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை இதனுள்ளே வரிசையாகப் பிசுபிசுப்புடன் கூடிய சதைப்பற்றால் ஆன தடுப்புச்சுவர் அரண் போல் அமைந்திருக்க, ஒவ்வொரு அறையினுள்ளும், ஒரு விதை பாதுகாப்பாக ஒட்டிக்கொண்டு உள்ளது.    


முற்றிய பிறகு வெடிக்கக் கூடிய கனியாகவும் இது தோன்றவில்லை!   இவ்வளவு கடினமான ஓட்டிலிருந்து விதைகள் எப்படி வெளியே வருகின்றன? என்று எனக்கு வியப்பு.  இனப்பெருக்கத்துக்கு இயற்கை இதற்கென்று ஒரு வழி வைத்திருக்காமலா இருக்கும் என்று இணையத்தில் தேடியபோது, கிடைத்த விடை சுவாரசியமானது  

சங்கக்காலத்தில் காடும் காடு சேர்ந்த பகுதியுமான முல்லை நிலத்துக்குரிய மரமாகத் தான், இதனை வகைப்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்.

காடுகளில் வளரும் இம்மரத்தின் கனிகளை, இதன் பிசுபிசுப்பு நிறைந்த தித்திப்பான சதைப்பகுதிக்காக நரி, குரங்கு போன்ற விலங்குகள் விரும்பித் தின்னுமாம்.  இது மிகச் சிறந்த  மலமிளக்கி!  என்னே இயற்கையின் விந்தை!  எனவே சதைப்பகுதியுடன் உள்ளே போகும் விதைகள், இவற்றின் கழிவு வழியாக வெளியேறி பல்வேறு இடங்களுக்குப் பரவுமாம்.     

விதைகள் விரைவில் முளைவிட, நான்கு மணி நேரம் வெதுவெதுப்பான நீரிலும், பின்னர் 24 மணி நேரம் குளிர்ந்த நீரிலும் ஊறவைத்துப் பின் விதைக்க வேண்டுமாம்.
 
நாட்டு மருத்துவத்தில் தமிழர்கள் பயன்படுத்திய முக்கிய தாவரங்களில் இதுவும் ஒன்று.  ஆயுர் வேதத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பட்டை, பூ ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாயம் தோல், மற்றும் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டப் பயன்பட்டன. 


கொன்றை பற்றிய சங்கப் பாடல்கள் ஏராளமாக இருப்பினும், விரிவஞ்சி இங்கு இரண்டு மட்டும்:-

1.    பொன்னென மலர்ந்த கொன்றை மணிஎனத்
தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே!    (ஐங்குறுநூறு 420)
“முல்லை நிலமே! பொன் போல் மலர்ந்த கொன்றை, , நீல மணிபோல் பூத்த காயம்பூ, மலர்ந்த தோன்றிமலர்  ஆகியவற்றோடு சேர்ந்து நல்ல அழகு எய்தினாய்!.”

2.   புதுப்பூங் கொன்றைக் 
கானம், கார்எனக் கூறினும்
யானோ தேறேன்,அவர் பொய்வழங் கலரே”
(குறுந்தொகை : 21)
“கார் காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை.  திடீரென்று மழை பெய்ததால், கார் காலம் வந்து விட்டதாக  எண்ணி ஏமாந்து கொன்றை  பூத்துவிட்டது; ஆனால் நான் நம்ப மாட்டேன்   இது கார்காலம் இல்லை. அவர் பொய் சொல்ல மாட்டார் என்று தோழியிடம் தலைவி சொல்கிறாளாம்.”   

முதிர்ந்த கொன்றை மரத்தைக் கொண்டே, அக்காலத்தில் உலக்கை செய்தனர் என்கிறார், காட்டுயிர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்.

வீட்டின் முன்புறத்தை (Front elevation) ஆயிரக்கணக்கில் செலவழித்து அழகு படுத்த நினைப்பவர்கள், செலவின்றி ஒரே ஒரு கொன்றை மரத்தைத் தெருவோரத்தில் நட்டால் போதும்;

தங்கக் காசுகளைச் சரம் சரமாகக் கோர்த்துத் தொங்கவிட்டது போல் ஜொலிக்கும் பொன் மஞ்சள் மலர்கள், உங்கள் வாசலுக்குத் தனி அழகைக் கொடுக்கும்!

(கொன்றை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நன்றி:- தமிழரும் தாவரமும் – முனைவர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி & விக்கிபீடியா)

(நான்கு பெண்கள் இணைய இதழில் 11/05/2015 அன்று வெளியானது)

38 comments:

  1. வணக்கம் சகோ.

    இந்நூல் பற்றிச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

    பாரதிதாசன் பல்கலைக்கழக பதிப்புத் துறை வாயிலாக வெளிவந்த மிக அருமையான நூல்.

    பேராசிரியர் கே.வி.கே. தமிழ்த்துறையினர் அல்லர்.

    அவர் தாவரவியல் துறையைச் சேர்ந்தவர்.

    இன்றைய தமிழில் செய்யப்படும் தரமான முனைவர்ப்பட்ட ஆய்வேடுகள் நூறிருப்பின் இவரது இவ்வொரு நூல் முன் தோற்கும் அவை.

    முடிந்தால் வாசியுங்கள்.

    சீந்துவாரற்றுக் கிடக்கிறது பதிப்புத் துறையில்.

    கொன்றை பற்றிய கூடுதல் செய்திகளைத் தங்கள் பதிவின் வாயிலாக அறிந்து கொண்டேன்.

    த ம 1

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், முதல் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. த.ம வாக்குக்கு மீண்டும் நன்றி. தமிழரும் தாவரமும் வாங்கிவிட்டேன். இப்போது அதைத் தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதைப்பற்றித் தனியே ஒரு பதிவு எழுத வேண்டும். அவ்வளவு சிறப்பான நூல் அது. ஏற்கெனவே இந்நூலின் சிறப்புக்கள் பற்றி எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சிலாகித்து எழுதியிருந்ததைப் படித்த போது இதனைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. சீந்துவாரற்றுக் கிடக்கிறது என்பதைப் படித்த போது வேதனையாகத் தான் இருந்தது. இது போன்ற நல்ல தரமான ஆய்வு நூலின் அருமையை நம்மவர்கள் என்று அறிந்து கொள்வார்களோ தெரியவில்லை. மீண்டும் நன்றி.

      Delete
  2. //தங்கக் காசுகளைச் சரம் சரமாகக் கோர்த்துத் தொங்கவிட்டது போல் ஜொலிக்கும் பொன் மஞ்சள் மலர்கள், உங்கள் வாசலுக்குத் தனி அழகைக் கொடுக்கும்!//

    தங்களின் இந்த ஒப்பீடு மிகவும் அருமை + உண்மை.

    1981 முதல் 2000 வரை சுமார் 20 வருடங்கள் BHEL TOWNSHIP QUARTERS நாங்கள் குடியிருந்தபோது எங்கள் வீட்டு வாசலில் தெரு ஓரமாக இந்த மரம் மிகப்பெரியதாக இருந்தது. இப்போதும் அந்த மரம் அதே இடத்தில் அப்படியேதான் உள்ளது. நாங்கள்தான் குடிமாறி திருச்சி மாநகர அடுக்குமாடி வீட்டுக்கு வந்து விட்டோம்.

    இவை சீசனில் மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தாக பூத்துக்குலுங்கும் அழகே அழகு. இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்த மலர்கள்.

    காற்று அடிக்கும்போது இவை கீழே உதிர்ந்து தெருவெல்லாம் மஞ்சள் கம்பளம் விரித்ததுபோல பூக்கள் வாரி இறைந்து கிடப்பதும் உண்டு. தினமும் தெருக்கூட்டி சுத்தம் செய்பவர்களுக்கு சற்றே சிரமமாக இருக்கும்.

    இதை நாங்கள் சொரைக்கொன்னைப் பூக்கள் என்றே அழைப்பது உண்டு.

    படத்துடன் கூடிய அழகான பகிர்வு என் பழைய நினைவலைகளைக் கிளறிவிட்டது. :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோபு சார்! நான் முதன் முதலில் இந்த அழகு மரத்தைத் தரிசித்தது திருச்சியில் தான். நீங்கள் சொன்ன BHEL பகுதியிலும் துப்பாக்கித் தொழிற்சாலை பகுதியிலும் தெரு ஓரங்களில் வரிசையாக நட்டிருந்தார்கள். திருவரம்பூர் முழுதும் மே மாதம் மஞ்சள் காடாக காட்சியளித்தது. மஞ்சள் கம்பளம் என்று நீங்கள் விவரித்தது அருமை. மஞ்சள் மரத்துடனான உங்கள் நினைவலைகளை என் பதிவு கிளறிவிட்டது அறிந்து எனக்கு மகிழ்ச்சியே. மிகவும் நன்றி சார்!

      Delete
  3. (நான்கு பெண்கள் இணைய இதழில் 11/05/2015 அன்று வெளியானது)

    மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி தெரிவிக்க மிக்க கடமைப்பட்டிருக்கிறேன் சார்!

      Delete
  4. “பொன்னென மலர்ந்த கொன்றை” = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kalayarassy G

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்! உங்கள் பக்கத்தில் பகிர்வது அறிந்து மிகவும் மகிழ்ச்சி சார்! நன்றியுடன் ஞா. கலையரசி.

      Delete
  5. நல்ல விவரங்கள், சுவாரஸ்யமான விவரங்கள்.

    கொன்றை என்று தஞ்சைப் பகுதிகளில் சொல்லப்படும் ஒரு மரத்தின் மொட்டை நாங்கள் பிரித்துச் சாப்பிடுவோம். மஞ்சள் ஆரஞ்ச் வண்ணங்களில் இதழ்கள் மடிந்து இருக்கும். அதுதானா இது என்று தெரியவில்லை.

    குல்மொஹர் என்பது வேறு இது வேறா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! இந்தக் கொன்றை மரம் (CASSIA FISTULA)தங்க மஞ்சள் நிறத்தில் பூக்கும். ஆரஞ்சு அல்ல. மேலே காட்டியுள்ளது போலச் சரம் சரமாகத் தொங்கும். நம் மண்ணைத் தாயகமாகக் கொண்ட மரம். சங்கக்காலத்திலிருந்து தமிழர் வாழ்வோடு சம்பந்தப்பட்ட மரம். சிவன் கோவில் தல மரம். ஆனால் குல் மொஹர் மடகாஸ்கரிலிருந்து வந்தது. இதன் தாவரவியல் பெயர் DELONIX REGIA. மரமுழுக்க சிவப்பு ஆரஞ்சு வண்ணப்பூக்களுடன் பெங்களூரு முழுக்கப் பரவலாகக் காணப்படுவது இந்த குல்மொஹர் தான். மே பிளவர் என்றும் இதனைச் சொல்வார்கள். இதன் தமிழ்ப்பெயர் தெரியவில்லை. இவை இரண்டுமில்லாது மஞ்சள் நிறத்தில் பூக்கும் பெருங்கொன்றை என்று ஒரு மரமும் உள்ளது. தற்காலத்தில் சென்னை புறநகர் & ஈ.சி.ஆர் சாலை ஓரத்தில் வரிசையாக நட்டிருக்கிறார்கள். மரமுழுக்க மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் சரமாகத் தொங்காமல் பூ மேல் நோக்கி இருக்கும். இதன் தாவரப்பெயர் peltophorum pterocarpum. நீங்கள் மொட்டு சாப்பிட்டது எந்த மரமென்று எனக்குத் தெரியவில்லை. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீராம்!

      Delete
  6. அறிந்திராத தகவல்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  7. மிக அழகான படங்களோடு சுவாரசியமான கட்டுரை கலை. ரசித்துப்படித்தேன். இயற்கை நம்மைக் கவர்ந்த ஒன்றுதானே. அதுவும் கொன்றைப்பூ என்றைக்கும் எனக்கு வியப்பளிப்பதாகவே இருந்திருக்கிறது. :)

    கோபால் சார் சொன்னபடி ரோடு பூராவும் மஞ்சள் வெல்வெட் பரப்பியது போல கொட்டிக்கிடக்கும் அழகே அழகு.

    ஸ்ரீராம் சொல்வது மஞ்சளும் வெண்மையும் கூடிய கொன்றை என நினைக்கிறேன்.

    நான்கு பெண்கள் இணைய இதழில் வெளியானமைக்கு வாழ்த்துகள் பா :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க தேன்! உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது! ரசித்துப்படித்தமைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தேன்!

      Delete
  8. திருமழபாடி திருத்தலத்தில் - மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!.. என்று போற்றுகின்றார் சுந்தரமூர்த்தி நாயனார்..

    தேவாரம் முழுதும் கொன்றை பேசப்பட்டிருக்கின்றது.

    அப்போதெல்லாம் - ஆற்றங்கரைகளில் தழைத்திருக்கும் கொன்றை!..
    இனிய பதிவு.. மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. சுந்தரமூர்த்தி நாயனார் பாடலை அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி துரை சார்! தேவாரத்தில் பலவிடங்களில் கொன்றை சொல்லப்பட்டிருப்பதும் சிறப்பு தான். கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  9. புதுப்பூங் கொன்றைக்
    கானம், கார்எனக் கூறினும்
    யானோ தேறேன்,அவர் பொய்வழங் கலரே”
    இந்தப்பாடல் தான் நான் தமிழ்படிக்க காரணம்.
    ஆம் தாங்கள் சொன்னது போல் சரம்சரமாய் தங்கக்காசுகளைக் கோர்த்து வைத்த மாலை இம் மரம்.
    அழகிய பதிவு. நன்றிம்மா.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தமிழ் படிக்கக் காரணம் இந்தப் பாடல் என்றறிந்து மகிழ்ச்சி! வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மகி!

      Delete
  10. சங்கப்பாடல்கள் சாட்சியாக கொன்றையின் சிறப்புகளைக் குறிப்பிட்டுள்ளமை சிறப்பு. கேரளத்தின் மாநில மலர் இது என்பது புதிய தகவல்.

    பல்லா தந்த கல்லாக் கோவலர்
    கொன்றையந் தீங்குழல் மன்றுதோறு இயம்ப
    என்னும் நற்றிணைப் பாடல் வழியே கொன்றைக்காயில் ஆடுமாடு மேய்க்கும் சிறுவர்கள் குழல் செய்து வாசித்த செய்தி அறியமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலும் கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என மூவகைக் குழல்களைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தங்கள் பதிவு வழியே கொன்றை மரத்தால் உலக்கை செய்த தகவல் அறிந்தேன். கடினமான மேலோடு கொண்ட கொன்றைக்காய்களிலிருந்து விதைகள் அடுத்த சந்ததியை வளர்க்கத் தயாராகும் விதமறிந்து வியப்பு. பயனுள்ள பதிவுக்கு நன்றியும் பாராட்டும் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. நற்றிணை, சிலம்பு இரண்டிலும் கொன்றையைப் பற்றி இடம் பெற்றிருக்கும் செய்திகளை அறியச் செய்தமைக்கு நன்றி கீதா! கொன்றைக்காயில் குழல் செய்து ஊதுவர் என்ற செய்தியறிந்திருந்தேன். அந்த நற்றிணை பாடலை எடுத்துக்காட்டியதற்கு நன்றி! மூவகை குழல் பற்றிய செய்தியும் புதியது தான். புதிய செய்திகளுடன் கூடிய கருத்துப்பகிர்வுக்கு நன்றி கீதா! முல்லைக்குழல், ஆம்பர் குழல் பற்றி மேலதிக செய்திகள் தெரிந்தால் சொல்லவும்.

      Delete
    2. பெரும்பாலும் நீர்த்தாவரங்களின் தண்டுகள் உள்ளீடற்று இருக்கும். ஆம்பல் கொடியின் தண்டில் குழல் செய்து ஊதுவது ஆம்பற்குழலாம். முல்லைக்குழல் பற்றி சரியான தகவல் எங்கும் கிடைக்கவில்லை. கிடைத்தால் தெரிவிக்கிறேன் அக்கா.

      Delete
    3. புல்லாகிய மூங்கிலினால் செய்யப்படும் குழல் புல்லாங்குழல் என்பது நாமறிந்ததே.

      Delete
    4. ஆம்பல் குழல் பற்றியும் புல்லாங்குழல் பற்றியும் சொன்னதற்கு நன்றி கீதா!

      Delete
  11. மலர்களில் ஒரு முக்கியமான இடத்தை இலக்கியங்களில் பெற்றுள்ள கொன்றையைப் பற்றிய தங்களின் பகிர்வின் மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். புகைப்படங்கள் பதிவிற்கு மெருகூட்டுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுடன் கூடிய கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா!

      Delete
  12. கொன்றை பற்ரிய பல தகவல்களுடன் இலக்கிய மேற்கோள்களும்,அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், அருமை எனப் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி ஐயா!

      Delete
  13. தங்களின் வலைதளத்தில் இணைந்து முதல் கருத்தை இப்போதுதான் பதிவிடுகிறேன். இனி அனைத்து பதிவுகளிலும் தொடருவேன்.

    கொன்றை மரம் பற்றி அருமையான தகவல். பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி!
    தமிழ்மணம் 6

    ReplyDelete
    Replies
    1. வாங்க செந்தில்! தங்கள் வருகைக்கும், தளத்தில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து வருவதற்கு மீண்டும் என் நன்றி. கொன்றை மரம் பற்றிய பதிவு பயனுள்ளதாயிருந்தது என்றறிய மகிழ்ச்சி. ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் த.ம வாக்குக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

      Delete
  14. என் முதல் வருகை இது தளத்திலும் இணைந்து கொண்டேன். கொன்றைமலர் பற்றி தேவாரம் திருவாசகங்களிலும் தான் கேள்வியுற்றேன். இன்று தான் அதன் சிறப்புக்கள் பற்றி அறிந்தேன். இத்தனை சிறப்புக்கள் நிறைந்த இம் மரத்தை பார்த்தும் இருக்க மாட்டேன் என்றே எண்ணுகிறேன். மிக்க நன்றி ! பதிவுக்கு தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க இனியா! உங்கள் பெயரே இனிமையாய் இருக்கின்றது! இப்போது ஆங்காங்கே தெருவோரங்களில் அழகுக்காக இம்மரத்தை வளர்க்கிறார்கள். கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் இம்மரத்தை எளிதில் அடையாளம் காணலாம். மஞ்சள் பூக்கள் சரம் சரமாகத் தொங்கும். கருத்துக்கு மிக்க நன்றி இனியா! தொடர்வதற்கு மீண்டும் நன்றி!

      Delete
  15. , கொன்றை மரத்தை நான் முதன்முதல் மறைமலைநகரில் பார்த்தேன் . சிலப்பதிகாரத்தில் , ' கொன்றையம் தீங்குழல் ' என வருவதால் , பழங் காலத்தில் கொன்றைக் காயும் குழலாய்ப் பயன்பட்டது என்கிறார் A.L. சாமி தமது , சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் என்னும் நூலில் .. கொன்றை மரம் குறித்த பற்பல தகவல் தந்தமைக்குப் பாராட்டு .

    ReplyDelete
    Replies
    1. சிலப்பதிகாரத்தில் கொன்றையின் காயும் குழலாகப் பயன்பட்ட விபரமறிந்தேன். A. L சாமி எழுதிய புத்தகம் வாங்க வேண்டும் என நினைக்கிறேன். கிடைக்கவில்லை. தகவலுக்கும் பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

      Delete
  16. , கொன்றை மரத்தை நான் முதன்முதல் மறைமலைநகரில் பார்த்தேன் . சிலப்பதிகாரத்தில் , ' கொன்றையம் தீங்குழல் ' என வருவதால் , பழங் காலத்தில் கொன்றைக் காயும் குழலாய்ப் பயன்பட்டது என்கிறார் A.L. சாமி தமது , சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் என்னும் நூலில் .. கொன்றை மரம் குறித்த பற்பல தகவல் தந்தமைக்குப் பாராட்டு .

    ReplyDelete
  17. “பொன் பூச்சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்
    நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின் பிரபை
    வீசு புகழ் நல்லூரான் வில்லவரா யன்கனக
    வாசலிடைக் கொன்றை மரம்”-
    யாழ்ப்பாணம் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பாடல்.
    - கொன்றை பற்றி என் பதிவு-கனக வாசலிடைக் கொன்றை மரம்- https://www.blogger.com/blogger.g?blogID=32397987#editor/target=post;postID=9194438668759363390;onPublishedMenu=posts;onClosedMenu=posts;postNum=79;src=postname

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரி!

    ஐயா பாரதிதாசன் அவஎகளின் வலைச்சர அறிமுகமுடன்
    இங்கு வருகிறேன்!
    அற்புதமான அழகு மிக்க கொன்றை மலர் மரம் பற்றிய இனிய பதிவினால்
    நானும் ஊருக்குப் போய்விட்டேன்.
    அறியாத பல அரிய தகவல்கள் அறிந்தேன்.
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி இளமதி! உங்கள் கவிதைகளை விழிமலர்த்திப் பார்க்கின்றேன்! நீங்கள் என் பதிவைப் படித்துக் கருத்திட்டது நான் செய்த பெரும் பேறு!

      Delete
  19. என் வீட்டு தோட்டத்தில் ஈசான்ய மூலையில், வருடந்தோறும் பூத்து குலுங்குகிறது,. N. S. Natarajan

    ReplyDelete