ஆசிரியர் சு.தியடோர்
பாஸ்கரன்
முதற்பதிப்பு:-
டிசம்பர் 2011
இரண்டாம் பதிப்பு:-
டிசம்பர் 2014
உயிர்மை வெளியீடு.
காட்டுயிர் துறையில்
முக்கிய பங்களைப்பைச் செய்து வரும் திரு.சு.தியடோர் பாஸ்கரன் உயிர்மை, காலச்சுவடு,
பசுமை விகடன் ஆகிய இதழ்களில் எழுதிய சூழலியல்
கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
‘இன்னும் பிறக்காத
தலைமுறைக்காக,’ (2006), ‘தாமரை பூத்த தடாகம்,’ (2008), ஆகியவை சுற்றுச்சூழல் குறித்து,
இவர் ஏற்கெனவே எழுதிய நூல்கள்.
இதில் இயற்கை சமன்நிலையைக்
காக்க காடுகள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை
ஆசிரியர் வலியுறுத்துகிறார். சுற்றுச்சூழல்
சட்டங்கள், சூழலியல் கல்வி ஆகிய தலைப்புகளில் அமைந்துள்ள கட்டுரைகள், இவை பற்றிக் கூடுதலாக
நாம் அறிந்து கொள்ள உதவுகின்றன. .
எளிமையான நடையில்,
இடையிடையே இவர் சொல்லிப் போகும் பல சுவாரசியமான தகவல்கள், வாசிப்பின் சுவையைக் கூட்டுகின்றன.
நான் புதிதாகத்
தெரிந்து கொண்ட பல்வேறு செய்திகளுள், சிலவற்றை மட்டும் இங்கே பகிர்கிறேன்:-
·
சுற்றுச்சூழல்
சமன்நிலையிலிருக்க, மொத்த பரப்பளவில் 33% காடு
இருக்கவேண்டும்; ஆனால் தமிழ்நாட்டு நிலப்பரப்பில் 17.5% தான் காடு.
·
குஜராத்தின்
நீண்ட வளைந்த கொம்புகளையுடைய காங்ரேஜ் இனம் தான் சிந்து சமவெளி சித்திர முத்திரையிலுள்ள
காளை என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவ்வளவு
தொன்மையான மரபினங்களைக் கொண்டவை இந்திய இனங்கள்!
·
உயரம்
குறைவான மணிப்புரி குதிரைகள் தாம் முதன்முதலில் போலோ விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டன. வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூரில் ‘புலூ’ என்றறியப்பட்ட
பாரம்பரிய விளையாட்டு தான் ‘போலோ’வாக மேலை நாடுகளுக்குப் பரவியது.
·
நிக்கோபாரில்
மெகபோட் (Megapode) என்னும் அரியவகை தரைப்பறவை,
நிலத்தில் முட்டையிட்டு உலர்ந்த இலைகளால் ஒரு மேடு போல் மூடிவிடும். அடை காக்காமல் இலைக்குவிப்பை குறைத்தும், அதிகப்படுத்தியும்
இன்குபேட்டர் போல இயக்கி வெப்பநிலையைச் சீராக்கி குஞ்சுகளைப் பொரிக்க வைக்கும். இதனை உயிரியலாளர் தெர்மோமீட்டர் பறவை
(Thermometer bird) என்றழைக்கின்றனர்.
·
புதிய
உயிரினங்கள் தோன்றுவது தீவுகளில் தான். சார்லஸ்
டார்வின் பயணித்த கப்பல் தென்னமெரிக்காவுக்கு அருகில் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கலப்பாகாஸ்
தீவுகளை அடைந்த போது, வேறெங்கும் காணமுடியாத பறவைகளும், கடல் ஓணான்களும், ராட்சத நிலத்தாமைகளும்
இருப்பதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்.
அங்கிருந்த குருவிகளின் அலகுகளைக் கவனித்த போது தான் பரிணாமக்கோட்பாட்டின் தடயம்
அவருக்குக் கிடைத்தது. இதன் அடிப்படையில் பிராணிகள்
உருவாகும் விதம் பற்றியும் மனிதனின் பரிணாமவழி தோற்றுவாய் பற்றியும் ORIGIN OF
SPECIES நூலை எழுதி, அறிவுலகை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டார் மத நம்பிக்கைகளின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது.
·
பள்ளியின்
மதிய உணவு காண்டிராக்ட்காரர்கள், பல்லி விழுந்து உணவு கெட்டு விட்டதென்று திருப்பிப்
பதில் சொல்ல முடியாத பல்லி மேல் பழி சுமத்துகிறார்கள். பல்லிக்குச் சிறிது கூட நஞ்சு கிடையாது. பெரிய பல்லியான உடும்புக்கறியை, இன்றும் இருளர்கள்
உண்கிறார்கள்.
·
நீரையும்
பாலையும் பிரிக்கும் அன்னம், மழை நீரை உண்டு வாழும் சாதகப்புள் இவையிரண்டும் அறிவியலுக்கு
அப்பாற்பட்ட தொன்மவழி விவரங்களே. பட்டைத் தலை
வாத்து (BARRED HEADED GOOSE) தான் அன்னம் என்றழைக்கப்பட்டது என்பது என் யூகம். . இது
உயிரியல் ரீதியாக ஸ்வான் (SWAN) இனத்தைச் சேர்ந்தது.
·
தற்காலத்தில்
பறவைகளின் கால்களில் வளையத்தைப் பொருத்துவதற்குப் பதிலாக சிறு ‘சிப்’ (Chip) ஒன்றை
உடலில் பொருத்தி விண்கோள் வழியாக வலசை போகும் பாதையையும் வேகத்தையும் கணக்கிடுகிறார்கள். வலசை போகும் பாதையை ‘வான்வழி’(Skyway) என்கிறார்கள். இந்த விண்பாதை கடலோரமாகவே அமைந்திருக்கும். சமுத்திரத்தைக் கடப்பதைப் பறவைகள் முடிந்தவரை தவிர்க்கின்றன.
·
ஒரு
முறை பேருள்ளான் என்ற புறா அளவிலான பறவை, வட அமெரிக்காவின் அலாஸ்காவிலிருந்து உலகின்
அடுத்த கோடி நியுசிலாந்துக்கு வலசை சென்றது பதிவாகியிருக்கிறது. 17460 கி.மீ தூரத்தை இது 9 நாட்களில் கடந்துள்ளது. மூன்றே இடங்களில் இரையுண்ணத் தரையிறங்கியது. நான்காவது கட்டத்தில் 11000 கி.மீ தூரத்தை இரவு
பகலாக ஒரே மூச்சில் பறந்து, நியூசிலாந்து மிராண்டா என்ற இடத்தில் பெரிய கூட்டமாகத்
தரையிறங்கியது.
இத்தொகுப்பில்
இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பெரும்பாலான வற்றில் தேதியில்லாதது பெருங்குறை. எடுத்துக்காட்டாக ‘அண்மையில்’ என்ற குறிப்பிருப்பதால்,
மேலே குறிப்பிட்ட பேருள்ளான் பறவை, இப்படி ஒரே மூச்சில் வலசை போனது எப்போது என்ற விபரத்தை,
நம்மால் அறிய முடியவில்லை.
எனவே
பல்வேறு தேதிகளில் எழுதப்படும் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கும் போது, ஒவ்வொன்றிலும்
அது எழுதப்பட்ட தேதியைத் தவறாமல் குறிக்க வேண்டும்.
சுற்றுச்சூழலைப்
பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரைகள் என்பதால்,
இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி, எல்லோருமே வாசிக்க வேண்டிய நூல் என்பது என் கருத்து.
(நான்கு பெண்கள் இணைய இதழில் 27/04/2015 வெளியானது)
பறவை ஆர்வலராகிய தாங்களே வியந்தபோன ஆச்சர்யமான பல்வேறு தகவல்களுடன் தாங்கள் எழுதியுள்ள இந்த நூல் விமர்சனப் பகிர்வு மிக அருமையாக உள்ளது.
ReplyDelete>>>>>
அருமை எனப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!
Delete//எனவே பல்வேறு தேதிகளில் எழுதப்படும் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கும் போது, ஒவ்வொன்றிலும் அது எழுதப்பட்ட தேதியைத் தவறாமல் குறிக்க வேண்டும்.//
ReplyDeleteஆமாம், இது மிகவும் அவசியமாகும். நமக்கும் இனிமேல் பிறக்கப்போகும் புது தலைமுறையினருக்கும், வரலாற்றின் காலக்கட்டங்கள் என்பது பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயனளிக்கக்கூடும்.
>>>>>
கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி சார்!
Deleteநூல் ஆசிரியர் திரு. சு.தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கும், அவர் எழுதியுள்ளவற்றை நன்கு அலசி ஆராய்ந்து சுருக்கமாக ஜூஸாகப் பிழிந்து எங்களுக்கு எளிமையாக அருந்தத்தந்துள்ள தங்களுக்கும் என் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDelete>>>>>
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்!
Delete//சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரைகள் என்பதால், இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி, எல்லோருமே வாசிக்க வேண்டிய நூல் என்பது என் கருத்து.//
ReplyDeleteமிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
//(நான்கு பெண்கள் இணைய இதழில் 27/04/2015 வெளியானது)//
மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மனம் நிறைந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் சார்!
Deleteபறவை ஆர்வலர்களுக்கு சந்தோஷமான தகவல் குறிப்புகளைத் தந்தமைக்கு நன்றி..
ReplyDeleteதங்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் அடங்கியுள்ளது அறிந்து மிகவும் மகிழ்ச்சி துரை சார்!
Deleteவணக்கம் சகோ...
ReplyDeleteஆசிரியரின் கட்டுரைகள் பலவற்றையும் நூல் சிலவும் படித்திருக்கிறேன்.
இத் தொகுப்புப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை உங்கள் பதிவு ஏற்படுத்துகிறது.
இந்த பறவைகள் வலசை போதல் பற்றிப் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் பாடம் உள்ளது. இன்னும் இந்தக் காலில் வளையம் மாட்டுதலைத்(Ringing) தான் கற்பிக்கிறேன்.இவ்வினா முக்கியமானதும் கூட.
அதற்கடுத்து இன்னொரு கட்டத்தை நோக்கிப் பறவை ஆய்வர் நகர்ந்துவிட்ட போதும், பழையதையே மாற்றாமல்தான் புத்தகங்கள் இவ்வாண்டும் வெளிவரும்..
இவ்வாண்டு மாணவர்க்குச் சொல்ல வேண்டிய விடயங்களில் இந்நூலையும் இச்செய்தியையும் உங்கள் பெயரோடு குறித்துக் கொள்கிறேன்.
புதிய விடயங்களைக் கற்றல் ஒரு மகிழ்வான தருணம் எனில் இப்பதிவினூடாக அத்தருணம் எனக்கு வாய்த்தது என்பேன்.
நன்றி.
இந்நூல் 2011 ல் வெளிவந்துள்ளது. நான்காண்டுகள் ஆகியும் பாடத்தில் மாற்றம் செய்யப்படாதது பெரிய குறை தான். தங்களைப் போல் வாசிப்புப்பழக்கம் இருக்கும் ஆசிரியர்கள் அமைந்தால் மாணவர்களுக்குப் புதிய தகவல் கிடைக்கும். இல்லையேல் பழைய செய்திகளையே அவர்கள் நெட்டுரு பண்ணி மதிப்பெண் வாங்கிக் கொண்டிருப்பார்கள்.
Deleteகருத்துக்கு மிக்க நன்றி சகோ
சுவாரஸ்யமான விவரங்கள். பல்லிக்கு என்று நஞ்சு கிடையாது என்பது புதிய தகவல். அது தெரிந்ததும் அருவெருப்பில்தான் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் வரும் போலும்.
ReplyDeleteஆம் ஸ்ரீராம்! பல்லிக்கு நஞ்சு கிடையாது என நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன். பயத்தாலும் அருவருப்பாலும் மயக்கமாவார்களே யொழிய இறப்பு ஏற்படாது.
Deleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
நல்லதோர் நூல் அறிமுகப் பகிர்வுகு நன்றி.
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா!
Deleteசிறு சிறு தகவல்களே வியப்பைத் தருகிறது... அருமையான நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...
ReplyDeleteபாராட்டுக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி தனபாலன் சார்!
Deleteஒரு நல்ல நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி .
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி!
Deleteஅருமையான நூலை அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteஎனது பதிவு திருநெல்வேலி அல்வா ! கருத்து சொல்ல வாருங்கள்.
வாழ்த்துக்கு மிகவும் நன்றி மேடம்! விரைவில் கருத்து சொல்ல வருகிறேன்!
Deleteஎவ்வளவு புதிய தகவல்கள். தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காட்டின் சதவீதம் இவ்வளவு குறைவு என்பது இப்பதிவின் மூலம்தான் அறியமுடிகிறது. இருக்கும் விளைநிலங்களையும் வீடுகளாக்கிக்கொண்டிருக்கும் நிலையில் பல்லுயிர் ஓம்புதல் பற்றிய விழிப்புணர்வைப் பெருக்கவேண்டியது மிக மிக அவசியம். அருமையானதொரு நூலறிமுகத்துக்கு மிகவும் நன்றி அக்கா.
ReplyDeleteஆம் கீதா. கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா!.
Deleteவானில் பறக்கும் புள்ளெலாம் - நூல் அறிமுகம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி: ஊஞ்சல்.
ReplyDeleteஇந்நூல் அறிமுகத்தை உங்கள் பக்கத்தில் பகிர்வதற்கு மனமார்ந்த நன்றி ஐயா!
Delete