’அப்பா என்றால்
அறிவு’
’தந்தை சொல் மிக்க
மந்திரமில்லை,’
’அவையத்து
முந்தியிருக்கச்
செய்பவன் தந்தை,’யென
அனைவரும் ஏற்கெனவேயறிந்த
அப்பாவின் அருமை பெருமைகளை
அடுக்குவதல்ல என் விருப்பம்..
தந்தை என்கிற தகைசால் உறவு
எனக்குள் உண்டாக்கிய பிம்பங்களை
என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை
எடுத்துரைப்பதே என் நோக்கம்..
இனி என் தந்தையைப் பற்றி:-
ஞானத்தின்பால் நீங்கள் கொண்ட
அளவிலா வேட்கையினை ஊகித்துத்தான்
ஞானப்பால் குடித்தவரின் பெயரைச்
சூட்டினாரோ உம் பெற்றோர்?
அன்று உங்கள் விரல் பிடித்தெழுதி
அரிச்சுவடி கற்றுக் கொண்டேன்.
இன்று உங்கள் வாழ்வைப் படித்தறிந்து
உலகம் கற்றுக் கொள்கிறேன்.
கீழே விழுந்து அடிபட்டவனைப் பார்த்து
விழுந்து விழுந்து நான் சிரித்த போது
’துன்பத்தில்
இருப்பவனைப் பார்த்துச் சிரிப்பது
மனித நேயமன்று,’ எனக் கற்றுக் கொடுத்தீர்!
பணமென்றால் பிணமும் வாய் திறக்குமாம்
அப்பணத்தைத் துச்சமென மதித்து
மாற்றாந்தாய் மகனாக மறுத்து
அயல்நாட்டுக் குடியுரிமையைத்
தூக்கியெறிந்த செயல் அறிந்து உமது
தாய்நாட்டுப் பற்றைப் புரிந்து கொண்டேன்..
நோயாளியாகி படுத்த படுக்கையான
துணைவிக்குச் செவிலித் தாயாக
நீவிர் புரிந்த சேவகம் கண்டு
வாழ்க்கைத் துணைக்காற்ற வேண்டிய
பொறுப்புக்கள் உணர்ந்தேன்.
அன்று இறகுப் பேனாவில்
மை தோய்த்து எழுதிய விரல்கள்
இன்று கணிணி விசைப்பலகையில்
தமிழ்த் தட்டச்சு செய்கின்றன!
’கற்பதற்கு வயது
ஒரு தடையில்லை,’யென்கிற
உண்மையை அல்லவா அவையெனக்கு
உணர்த்தி நிற்கின்றன?
புத்தாண்டு துவக்கத்தில்
பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும்
ஒவ்வொரு முறையும்
இது கடைசி வாழ்த்தாக
இருந்து விடக்கூடாதேயென
மனதின் ஒரு மூலையில்
பதைபதைப்பு இருக்கத் தான் செய்கிறது!
அன்பு ஆசானே! அருமை தந்தையே!
அன்னைக்குப் பிறகு தாயுமானவரே!
’பணம் மட்டுமே
வாழ்க்கையில்லை,’யென்ற
உண்மையை வாழ்ந்து காட்டியவர் நீங்கள்!
அடுத்தபிறவி என்ற ஒன்று எனக்கிருந்தால்
உம் செல்ல மகளாகவே
மீண்டும் பிறக்க விரும்புகின்றேன்!
ரசித்தேன். அருமையான தந்தையர் தின நினைவுகள். வாழ்த்துக்களுடன் வாக்கும்..!
ReplyDeleteத ம 1
உங்கள் முதல் பின்னூட்டத்துக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி செந்தில்! த.ம வாக்குக்கு மீண்டும் என் நன்றி!
Delete//அன்று உங்கள் விரல் பிடித்தெழுதி அரிச்சுவடி கற்றுக் கொண்டேன். இன்று உங்கள் வாழ்வைப் படித்தறிந்து உலகம் கற்றுக் கொள்கிறேன்.//
ReplyDeleteஉணர்வு பூர்வமான மிக அழகிய ஆக்கம்.
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்.
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி கோபு சார்!
Deleteசிறப்பான வரிகள்... தந்தையர் தின வாழ்த்துகள்...
ReplyDeleteசிறப்பான வரிகள் என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தனபாலன் சார்!
Deleteஅன்புச் சகோ,
ReplyDeleteநல்லதொரு தந்தையின் நிழலுறைதல் எல்லார்க்கும் வாய்க்காப் பேறு.
இது உணர்ந்தவனின் சொல்.
உங்கள் கவிதையில் தெரிகிறது உங்கள் தந்தையின் சாயல்.
அவர் நீடு வாழ வாழ்த்துகிறேன்.
நேரமிருப்பின் என் தந்தை பற்றியோரு பதிவு.
கவியீர்ப்பு மையம்
காண வேண்டுகிறேன்.
நன்றி.
பற்றியொரு பதிவு எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
Deleteநன்றி
உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ! உங்கள் கவிதையைப் படித்தேன். மனதை நெகிழ வைத்த கவிதை! படித்து முடித்துச் சில நிமிடங்கள் துக்கம் தொண்டையை அடைக்க எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தேன். தந்தை இறுதி நாட்களின் சோக நினைவலைகள்! நீங்கள் கவிஞராயும் இருப்பதால் வேதனையை அப்படியே கவிதையில் கொட்டிவிட்டீர்கள். இணைப்பு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி சகோ!
Deleteதந்தையர் தின நினைவுகளில் நெஞ்சம் நெகிழ்கின்றது..
ReplyDeleteவருகைக்கும் கவிதையைப் படித்து நெகிழ்ந்தமைக்கும் நன்றி துரை சார்!
Deleteதந்தையர் தினத்தில் உங்கள் தந்தைக்காக அருமையானதொரு கவிதையை சமர்ப்பணம் செய்து விட்டீர்கள்!!
ReplyDeleteவாங்க மனோ! நலமா? உங்கள் வருகைக்கும் கவிதையைப் படித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி மனோ!
Deleteதந்தையர் தின கவிதை மனதை கவர்கிறது சகோ...!
ReplyDeleteவாருங்கள் காயத்ரி! வருகைக்கும் மனதைக் கவருகிறது என்று பாராட்டியமைக்கும் நன்றி காயத்ரி!
Deleteநெகிழ்ச்சியான வரிகள்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! நலமா? உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி!
Deleteநல்ல புகழாரம். ரசித்தேன்.
ReplyDeleteரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteஅன்பு ஆசானே! அருமை தந்தையே!
ReplyDeleteஅன்னைக்குப் பிறகு தாயுமானவரே!
அருமையான வரிகள், முதல் ஆசான் அவரே என்பது,,,,,,,,,,,,,,,
அடுத்தபிறவி என்ற ஒன்று எனக்கிருந்தால்
உம் செல்ல மகளாகவே
மீண்டும் பிறக்க விரும்புகின்றேன்!
பாசத்தின் அளவிட முடியா வார்த்தைகள், மனம் நிறை வாழ்த்துக்கள். நன்றி.
வாங்க மகி! உங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி மகி!
Delete
ReplyDeleteஅன்பு ஆசானே! அருமை தந்தையே!
அன்னைக்குப் பிறகு தாயுமானவரே!
’பணம் மட்டுமே வாழ்க்கையில்லை,’யென்ற
உண்மையை வாழ்ந்து காட்டியவர் நீங்கள்!
அடுத்தபிறவி என்ற ஒன்று எனக்கிருந்தால்
உம் செல்ல மகளாகவே
மீண்டும் பிறக்க விரும்புகின்றேன்!
அன்பின் வரிகள் நெகிழ்வை உண்டாக்கியது.
வாங்க சசி! உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துக்கு மிகவும் நன்றி சசி!
Deleteஅழமான சொற்களை அடுக்கடுக்காய் கொண்டு உணர்வுகளை அழகாக வடித்துள்ளீர்கள் மனதை நெகிழ வைத்தது பாசப் பிணைப்பு. மீண்டும் பிறக்க விரும்புகிறேன் எனும் போது தொண்டை அடைத் து விட்டது. மிக்க நன்றி தோழி பதீவுக்கு ! தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவாங்க இனியா! உங்கள் பாராட்டு கண்டு மனங்குளிர்ந்தேன். உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி!
Deleteஒவ்வொரு குழந்தைக்கும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தகப்பன்தான் கதாநாயகன் என்று படித்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். அழகுத் தமிழ்ச் சொற்களில் உணர்வுகள் ததும்பி நிற்க நீங்கள் தந்தைக்கு எழுதிய மடல் மனதைத் தொட்டது. நன்று. (கோபு சாரின் வலை மூலமாய் உங்களை அறிந்தேன். அன்னாருக்கு என் மகிழ்வான நன்றி.)
ReplyDeleteவாங்க கணேஷ்! உங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! கவிதையில் எனக்குத் தேர்ச்சி கிடையாது. தந்தை என்றவுடன் என் மனதில் தோன்றியவற்றை எழுதினேன். நீங்கள் சொன்னது போல் பெண் குழந்தைகளுக்குத் தந்தை தான் ஆசான், கதாநாயகன், வழிகாட்டி எல்லாம். உங்கள் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் தளத்தில கவிதை எழுதுவது எப்படி என்ற பதிவை வாசித்தேன். என்னமாய்க் கலாய்ச்சி இருக்கிறீர்கள்! அருமையான தரமான நகைச்சுவை! பதிவையும் பின்னூட்டங்களையும் படித்து ரசித்துச் சிரித்தேன். வை.கோபு சார் உங்களை அறிமுகம் செய்த போது தான் உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அவருக்கும் என் நன்றி!
Deleteநெகிழவைக்கும் நேசமே இங்கு அழகுக் கவிதையாய்... அடுத்த பிறவியிலும் அவர்களுக்கு செல்ல மகளாய் நீங்கள் பிறக்க வாழ்த்துகள் அக்கா. அப்படியே அவர்களது அன்பு மருமகளாய் நானும் தொடர்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கீதா! மருமகளாகத் தொடரும் உன் ஆசையும் நிறைவேற வாழ்த்துகிறேன்!
Delete