நல்வரவு

வணக்கம் !

Thursday, 18 June 2015

பசுமைப் புரட்சியின் வன்முறை - நூல் அறிமுகம்

பசுமைப் புரட்சியின் வன்முறை
ஆசிரியர் வந்தனா சிவா
முதற்பதிப்பு டிசம்பர் 2009
இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2013
வம்சி/பூவுலகு வெளியீடு
விலை ரூ 140/-

டெல்லியில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், உலகமயமாக்கலுக்கு எதிரான எழுத்தாளருமான முனைவர் வந்தனா சிவா எழுதிய The Violence of the Green Revolution (1992)  என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது. 
நூலாசிரியரைப் பற்றி வேம்புக்கான காப்புரிமையைப் பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து மீட்ட போராளி என்று மட்டும் பின்னட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்;  அவரைப் பற்றி வேறு எந்த விபரமும் இல்லை.  மொழி பெயர்ப்பாளர் யார் என்றும் தெரியவில்லை.



வந்தனா சிவாவைப் பற்றித் தெரியாதவர்களுக்காக, சிறு அறிமுகம்:-   
கனடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் குவாண்டம் கோட்பாட்டில் முனைவர் பட்டம் பெற்ற இவரின் கவனத்தை,1984ல் ஏற்பட்ட பஞ்சாப் கலவரமும், போபால் விஷ வாயுக்கசிவு விபத்தும், வேளாண்மை பக்கம் திருப்பின.

தற்போது இயற்கையைப் பாதுகாக்கவும், இயற்கை வளங்களின் மீதான நம் மக்களின் உரிமையைக் காக்கவும் போராடிவரும் இவர், இரண்டாம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்டு அறிமுகம் செய்யப்படும் பி.டி. கத்தரிக்காயைத் தீவிரமாக எதிர்க்கிறார்.  முன்பிருந்த இரசாயன பூச்சிக்கொல்லி, உரத்தொழிற்சாலைக்குப் பதிலாக செடியே இப்போது விஷக்கொல்லி ஆலையாகிவிட்டது என்பது இவர் எதிர்ப்புக்குச் சொல்லும்  காரணம்.

நவதான்யா,’ என்ற அமைப்பை நடத்தும் இவர், நம் நாட்டு வேளாண் உணவு உற்பத்தியிலும், பதப்படுத்துவதிலும் பெண்களின் பங்கு கணிசமானது என்கிறார்.

தொழிற்சாலையில் பதப்படுத்தும் வேலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது’; ஆனால் பாரம்பரிய முறையில் வீட்டில் ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்துப் பதப்படுத்துவதில்  செலவிடப்படும் பெண்களின் உழைப்பு வேலையாகவே கருதப்படுவதில்லை என்பது இவர் ஆதங்கம். 

இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.  இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:-- http://vandanashiva.org/

1960 களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு, அபரிமித வளத்திற்குப் பதிலாக,  மிஞ்சியதெல்லாம் நோயால் பீடிக்கப்பட்ட மண்ணும், பூச்சியால் தாக்கப்பட்ட பயிர்களும் பெருங்கடனாளியாகியுள்ள, திருப்தியற்ற விவசாயிகளுமே என்கிறார்  ஆசிரியர்.

இந்நூலிலிருந்து முக்கிய கருத்துக்கள் மட்டும், உங்கள் பார்வைக்கு:-

  •  1950 களில் நார்மன் போர்லாக் என்பவர் குட்டையான உயர் விளைச்சல் கோதுமை ரகத்தை உருவாக்கியபோது பசுமைப்புரட்சி என்ற புதிய மதம் பிறந்தது.  அற்புத விதைகள் மூலம் அதிக உற்பத்தி என்ற தாரக மந்திரத்தை அது பரப்பியது.

·         1970 ல் இவருக்கு அமைதி நோபெல் பரிசு வழங்கப்பட்டது.  இவர் கண்டுபிடித்த மாயவிதை,  அபரிமித உற்பத்தி மற்றும் அமைதிக்கான ஆதாரமாக நோக்கப்பட்டது  இந்தியாவில் பஞ்சாபில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் விடப்பட்டது.


·         இந்தியாவிற்குள் பசுமைப்புரட்சியின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் 1964 ல் வேளாண்மை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும், 1965ல் இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவன இயக்குநர் எம்.எஸ்.சுவாமிநாதனும் ஆவர்.

·         20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நஷ்டம் தாங்க முடியாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 1960 களில் பட்டினியை விரட்டுகிறேன் என்ற பெயரில், நம் அரசு நடைமுறைப்படுத்திய பசுமைப் புரட்சி தான் இதற்குக் காரணம்.


·         இரண்டாம் உலகப்போரில் போருக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள்  உற்பத்தி செய்த பாஸ்பேட், நைட்ரேட், பொட்டாஷ் போன்ற வேதிப்பொருட்கள் பெருமளவு எஞ்சின; அவற்றை விற்றுத் தீர்ப்பதற்காகவே நவீன வேளாண்முறையைக் கொண்ட பசுமைப்புரட்சி உருவாக்கப்பட்டது.

·         மூன்றாம் உலக நாட்டு விவசாயிகளுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும் தங்கள் நாட்டு வேளாண்மையில் மேம்பாடு செய்வதற்கான திறனில்லை என்று ராக்பெல்லர் நிறுவன அறிஞர்கள் கருதினர்.  அதிக உற்பத்திக்கான விடை, அமெரிக்க பாணி வேளாண்மை அமைப்பில் இருப்பதாக அவர்கள் எண்ணினர்..

·         பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டுத் தலைமுறை தலைமுறையாக உள்ளூரில் பயிர் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தாவர வகைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் புதிய ரகங்களை உருவாக்கினர்.  புதிய ரகங்களுக்கு அதிகளவில் செயற்கை வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மற்றும் நீர் தேவைப்பட்டது.  வேளாண் செலவு பன்மடங்கு அதிகரித்தது.

·         உயரமான பாரம்பரிய இனங்கள் வயலில் இடப்படும் உரச்சத்துக்களைத் தாவரத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டன.  ஆனால் குட்டை ரகங்கள் அவற்றைத் தானிய மணிகளாக மாற்றும் திறன் படைத்திருந்தன. முதலாவதில் கால்நடைக்குத் தேவையான வைக்கோல் கிடைத்தது.  ஆனால் புதிய முறையில் வைக்கோல் பற்றாக்குறை ஏற்பட்டது.


·         செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து இல்லாவிட்டால் புதிய ரகங்கள், உள்ளூர் ரகங்களை விடக் குறைவான விளைச்சலையே தரும்.  விளைச்சலால் கிடைக்கும் லாபம், இடுபொருட்களின் செலவை விட மிகக் குறைவாகவே உள்ளது என்கிறார் டாக்டர் பால்மர். 

·         பசுமைப்புரட்சிக்குப் பிறகு வேதி உரங்களின் உபயோகம் 30 மடங்கு அதிகரித்தது.  பஞ்சாபில் கொடுக்கப்பட்ட வேளாண் கடன்களில் 64% உரங்கள் வாங்கச் செலவிடப்பட்டன.


·         பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக ஆய்வுகள் வேதி உரங்கள் தழையுரத்துக்கு ஈடாகாது என்று நிரூபித்துள்ளன.  கால்நடைப்பண்ணை உரங்களும் வேதியுரங்களை விடச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

·         பசுமைப்புரட்சிக்குப் பின்னர் கோதுமை, சோளம், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் ஆகியன கலந்த மாற்றுப்பயிர் முறை ஒழிக்கப்பட்டு, கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றின் ஓரினப்பயிர் முறை பரவலாக்கப்பட்டது.


·         சர்வதேச வல்லுநர்களும், இந்திய ஆதரவாளர்களும் தொழில்நுட்பம் நிலத்துக்கு மாற்று என்றும், வேதியியல் உரங்கள் தழைச்சத்திற்கு மாற்று என்றும் தவறாக நம்பியதால், பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட நம் மண்வளம், பசுமைப்புரட்சிக்குப்பின்  கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாசமாகிவிட்டது.


இடையிடையே கருத்துத் தெளிவின்றிக் குழப்பம் ஏற்படுத்தும் நீண்ட வாக்கியங்கள்,   மொழிபெயர்ப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதைப் பறைசாற்றுகிறது.  பலவிடங்களில் கூறியது கூறல் சலிப்பை ஏற்படுத்துகிறது.    

இரண்டாம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை நம் தலையில் திணிக்க அரசு முயலும் இந்நாளில்,  முதல் பசுமைப்புரட்சியின் விளைவால் நம் மண்ணுக்கு ஏற்பட்ட மோசமான விளைவுகளையும், சூழலியல் பாதிப்புக்களையும் விலாவாரியாக விளக்கி, மக்களிடையே விழிப்புணர்வூட்ட இந்நூல் உதவும் என்பதால் மொழிபெயர்ப்பில் குறைகள் இருந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அட்டையில் இடம் பெற்றிருக்கும் தற்கொலை செய்து கொண்ட விவசாயி மனைவியின் சோகம் ததும்பும் முகம் மனதைக் கனக்கச் செய்கிறது.                                                       (01/06/2015  அன்று  நான்கு பெண்கள் தளத்தில் வெளியான கட்டுரை)
(வந்தனா சிவா படம் – நன்றி இணையம்)

22 comments:

  1. >>> 1960 களில் பட்டினியை விரட்டுகிறேன் என்ற பெயரில், நம் அரசு நடைமுறைப்படுத்திய பசுமைப் புரட்சி தான் இதற்குக் காரணம்.<<<

    பட்டினியை விரட்டினார்களோ இல்லையோ - மரபு சார்ந்தவைகள் எத்தனை எத்தனையோ அடித்து விரட்டப்பட்டன..

    விளைவு - மக்கள் நிரந்தர நோயாளியாகிப் போனார்கள்!..

    ReplyDelete
    Replies
    1. முதல் பின்னூட்டத்துக்கும், மிகச்சரியான கருத்துக்கும் மிகவும் நன்றி துரை சார்!

      Delete
  2. செய்யப்பட்ட சோதனைகள் எத்தனை வீண்... இயற்கை என்றும் வெல்லும்...

    நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்! இயற்கை என்றும் வெல்லும். கருத்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்!

      Delete
  3. குறை நிறைகளுடன் கூடிய நூல் விமர்சனம் அருமை. இதனால் பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அருமை எனப்பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!

      Delete
  4. //(01/06/2015 அன்று நான்கு பெண்கள் தளத்தில் வெளியான கட்டுரை)//

    பாராட்டுகள், வாழ்த்துகள். :)

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி சார்!

      Delete
  5. நல்லதொரு நூலைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    அண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
    http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html

    ReplyDelete
    Replies
    1. விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்! விரைவில் காண வருவேன். கருத்துக்கு மிக்க நன்றி!

      Delete
  6. பசுமைப் புரட்சி பற்றிய புதிய விடயங்கள் அறிந்தேன். நன்றாக அலசி ஆராய்ந்து தந்த நூல் விமர்சனம் அருமை! நான்கு தளத்தில் வெளிவந்த இக் கட்டுரைக்கு பாராடுக்கள்.
    தங்களுக்கு என் நன்றியும் மேலும் தொடர வாழ்த்துக்களும் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க இனியா! உங்கள் வருகையும் இனிமையான கருத்தும் மகிழ்வளிக்கின்றன. பாராட்டுக்கு மிக்க நன்றி இனியா!

      Delete
  7. அறியாத தகவல்கள் அறிந்தேன். நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகி!

      Delete
  8. சகோ வணக்கம்.

    உங்கள் பதிவிற்குத் தாமதமாக வந்துவிட்டேன்.

    பொறுத்தாற்றுங்கள்.

    இந்த நூலையோ இதன் மொழிபெயர்ப்பையோ நான் படிக்கவில்லை.
    நீங்கள் அந்நூலில் இருந்து எடுத்துக் காட்டுவதனோடு தொடர்புடைய நான் அறிந்த செய்திகளைத் தருகிறேன்.

    “““““இரண்டாம் உலகப்போரில் போருக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்த பாஸ்பேட், நைட்ரேட், பொட்டாஷ் போன்ற வேதிப்பொருட்கள் பெருமளவு எஞ்சின; அவற்றை விற்றுத் தீர்ப்பதற்காகவே நவீன வேளாண்முறையைக் கொண்ட பசுமைப்புரட்சி உருவாக்கப்பட்டது.“““““

    உண்மைதான் வெடி மருந்துகளை உற்பத்தி செய்த இந்நிறுவனங்கள் மூடப்படாமல் இருக்க அவை இவ்வேதிப் பொருட்களை வேறெதற்குப் பயன்படுத்தலாம் என்று ஆராய விஞ்ஞானக் குழுக்களை அமைத்தது. அவற்றின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இவை பயிர்களுக்கு உரமாகப் பயன்படுச் சந்தைப்படுத்தப்பட்டது என்பதில் இருந்துதான் இரசாயன உரங்களின் வரலாறு தொடங்குகிறது.

    “““““ உயரமான பாரம்பரிய இனங்கள் வயலில் இடப்படும் உரச்சத்துக்களைத் தாவரத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டன. ஆனால் குட்டை ரகங்கள் அவற்றைத் தானிய மணிகளாக மாற்றும் திறன் படைத்திருந்தன. முதலாவதில் கால்நடைக்குத் தேவையான வைக்கோல் கிடைத்தது.“““““

    ஆரம்பத்தில் மரபுமுறைகளில் இருந்து இரசாயன முறைக்கு நம் நிலங்கள் மாற்றப்பட்டபோது அவை நல்ல பலன்களைத் தருவதாகத் தோன்றியது. ஆனால் அவை வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை. மரபார்ந்த நம் பயிர்களின் உயிர்க்கூறுகளால் ரசாயன உரங்கள் எதிர்பார்த்த பலனைத் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை.

    முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என்று பயந்த இரசாயன உர நிறுவனங்கள், பயிர்களுக்கேற்ற உரம் என்பதை மாற்றி, உரங்களுக்கேற்ற பயிர் என்று சொல்ல ஆரம்பித்தன. செருப்பின் அளவிற்கு ஏற்ப காலை வெட்டுக என்பதுபோல அவை கொண்டுவந்தனதாம் இந்த ஒட்டுரக, குட்டை ரகமெல்லாம்.

    நம்மிடம் இருந்த பாரம்பரிய, வறட்சியையும் பூச்சியையும் தாங்கி வளரக்கூடிய பல உணவுப்பயிர்களின் விதைகளை மெல்ல மெல்ல நாம் இழந்து போனோம்.
    வைக்கோலை இழத்தல் என்பது ஒருவகையில் நம் மாடுகளை இழத்தல் என்பதும்தான். அதாவது உழவோடு தொடர்புடைய, உழவனுக்கு எப்போதும் ஆதாயமே தரக்கூடிய உயிர்க்கருவி ஒன்றின் இழப்பு அது.

    மாடு போனால் என்ன. இதோ டிராக்டர் என்றனர் புரட்சியாளர்கள்.

    மாடு, நாம் வேண்டாம் என்பதை எடுததுக் கொண்டு நமக்கு வேண்டியதைத் தருகிறது. உழவும் பாலும் உரமும் என்று அது தரும் பலன்கள் ஏராளம்.

    டிராக்டர் நம் நிலத்தை இன்னும் கடினப்படுத்தியது. நிலத்தின் மேல் மட்டத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரிந்த தெரியாத உயிர்களை நசுக்கிச் சிதைத்தது.
    அது எருவிடுவதில்லை. பால் கொடுப்பதில்லை. இனப்பெருக்கம் செய்வதில்லை.
    தன்னைத் தாங்கிய மாட்டினை விற்று, டிராக்டரின் சுமையைத் தாங்க வேண்டியவனான் விவசாயி.

    “““““““செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து இல்லாவிட்டால் புதிய ரகங்கள், உள்ளூர் ரகங்களை விடக் குறைவான விளைச்சலையே தரும். விளைச்சலால் கிடைக்கும் லாபம், இடுபொருட்களின் செலவை விட மிகக் குறைவாகவே உள்ளது என்கிறார் டாக்டர் பால்மர்.““““““““““

    புதிய ரகங்கள் ரசாயன உரங்களை எப்போதும் வேண்டி நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டவை. அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. விற்பனையாளர்களுக்கோ அதுவும் இலாபம். அவர்கள் உரத்தோடு பூச்சிமருந்துகளையும் ஒருசேர விற்கும் கடைகளுக்கு விநியோகிஸ்தர் வேண்டும் என விளம்பரம் செய்தார்கள்.

    இங்கும் தொடக்கத்தில் பூச்சிகள் அழிந்தன எனினும், அவற்றின் மரபியல் கூறுகள், உயிர்கொல்லும் மருந்துகளை ஏற்கப் பழக ஆரம்பித்தன. உற்பத்தியாளர்கள் இன்னும் வீரியம் மிக்க மருந்தை உருவாக்கி அளித்தார்கள்.

    ........................................................................................................தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உணவென்ற பெயரில், நஞ்சு, கத்தரியாக, வெண்டையாக, தக்காளியாக, கீரையாகக் காய்க்க ஆரம்பித்தது.

      காய்கறிகளை அதிகம் சேருங்கள் என்கிற மருத்துவப் பரிந்துரை அவற்றில் இருக்கும் நச்சுகளின் அளவை மதிப்பிட்டால் தலைதெறிக்க ஓடும்.

      “““““““பசுமைப்புரட்சிக்குப் பின்னர் கோதுமை, சோளம், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் ஆகியன கலந்த மாற்றுப்பயிர் முறை ஒழிக்கப்பட்டு, கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றின் ஓரினப்பயிர் முறை பரவலாக்கப்பட்டது.“““““““

      அந்தக் காலத்தில் வாழைவிவசாயி, கரும்பு விவசாயி, தென்னை விவசாயி என்றெல்லாம் இல்லை. அவன் தோட்டத்தில் பருவத்திற்கேற்றபடி வெண்டை இருக்கும். கீரை இருக்கும், வாழை இருக்கும். நெல் இருக்கும். அதனால் மண் வளம் காக்கப்பட்டது.

      மரபுவழி அவன் இயற்கையை காக்கப் பழகிய, இந்த மாற்றுப்பயிர் முறையைத்தான் எள்ளி நகைத்தது விஞ்ஞானம்.

      பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் பாரம்பரிய முறையில் பெற்ற அறிவை, தொழில் நுட்பத்தை, பாமரர்களின் பயனில்லாத் தத்துவங்கள் என்று இழந்தொதுக்கிற்று.
      விவசாயத்தில் மட்டுமல்ல, மருத்துவத்தில், நெசவில், இன்ன பிற கலைகளில் எல்லாம் நாம் இழந்தது எத்தனை எத்தனையோ…?

      படித்தவர்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும் என்று நம் பாமர விவசாயிகள் அன்று அதனைத் தலையசைத்து ஏற்றார்கள்.

      இன்று விஞ்ஞானம் சொல்கிறது, இயற்கை விவசாயத்திற்குப் போ! அது நல்லதென்று.
      நச்சு இடுபொருட்களால் நம் நிலத்தை மலடாக்கியாயிற்று.

      தொடர்ச்சி இன்மையால் வாழையடி வாழையாக, நம்முன்னோரிடமிருந்து பெற்று வந்த உழவின் இயற்கை நுட்பங்களை அறிந்துகொள்ள முடியாமல் போயிற்று.

      உழவு மாடுகளை அதற்குப் பழக்காது கசாப்புக் கடைகளுக்கு என வளர்க்கும் முறையால் இயற்கை தொழுவுரம் இல்லாதாகும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

      நெல்லின் வகையில் மட்டும் ,200க்கும் அதிகமான பாரம்பரிய நெல்வகைகளை மீட்டுருவாக்க முடியாதபடி அழித்தொழித்தாயிற்று.

      பூச்சிகள், இயற்கை பூச்சிவிரட்டிகளுக்கு கட்டுப்படா வீரியத்தை அடைந்திருக்கின்றன.
      இயற்கைச் சங்கிலியை முற்றிலும் சிதைத்துவிட்டு இப்போது பழமைக்குச் செல்ல அறிவியல் அறிவுறுத்துகிறது.

      டிராக்டர்களின் வட்டக்கலப்பைகள் துண்டாடிய தனது கால்களைக் கைகளில் ஏந்தியபடி, வழிகாட்டிகள் தன்னை ஊருக்கு அழைத்துச் சென்றுவிடும் என்று வழக்கம்போலவே படித்தவர்களை நம்பி ஏமாந்து நீள்கிறது பாமர விவசாயியின் காத்திருத்தல்.

      தங்களின் நூலறிமுகமும், நூலைப்படித்த உணர்வை ஏற்படுத்திவிட்டது .

      நன்றி.

      Delete
    2. பதிவாசிரியரே நான் இங்கு கொஞ்சம் பேசிக்கொள்கிறேன், இனுமதியுங்கள், ஆசானே வணக்கம், நானும் விவசாய குடும்பத்தில் வாழ்பவள் என்பதால், இங்கு இதனை, ,,
      நச்சு இடுபொருட்களால் நம் நிலத்தை மலடாக்கியாயிற்று.
      எத்துனைப் பெரிய உண்மை இது, தழை உரம், எரு இவைகள் இன்று கிராமங்களில் இல்லை, மானிய விலை என்று பூச்சிக்கொல்லி மருந்து, இரசாயன உரங்கள் இவைகள் தான், உளுந்து, பயிர் இவைகள் ஊடபயிறாக போட்ட காலம் மாறிவிட்டது, மிஷின் கொண்டு அறுவடை செய்வதால் அதற்கும் வழி இல்லை.
      அன்றில் இருந்து இன்றுவரை விவசாயம் குறிவைத்தே வஞ்சிக்கப்பட்டு வருகிறது, இதில் நாட்டின் முன்னேற்றம் கிராமங்களில் என்று, இவர்களின் உரைகளை வேறு மாணவர்களிடம் பெருமையாக சொல்லிக்கொண்டு,
      அட்டையில் இடம் பெற்றிருக்கும் தற்கொலை செய்து கொண்ட விவசாயி மனைவியின் சோகம் ததும்பும் முகம் மனதைக் கனக்கச் செய்கிறது. இது ஆயிரமாயிரம் உண்டம்மா,,,,,
      நன்றிம்மா, நன்றி அய்யா,

      Delete
    3. அன்புடையீர் .. தங்களது கருத்துரை கண்டு கனக்கின்றது மனம்..

      25 ஆண்டுகள் விளைநிலங்களுடன் வாழ்ந்த வாழ்க்கை கண்முன் வருகின்றது..

      அப்போதெல்லாம் தெரிந்திருக்கவில்லை.. அடிமடியில் நெருப்பை வைத்துக் கொள்கின்றோம் என்று!..

      வைக்கோல் பறி போனதுடன் உழவனின் வாழ்வும் பறி போனது..

      தன்னைச் சுமந்த மாட்டை விட்டான்.. நம்பித் தொட்ட டிராக்டரால் கெட்டான்...

      வளையம் கட்டி அடித்தன - வாழ்வு தர வந்த அரசுகள்!..

      உழவனின் ஆசனத்தில் தீ வைத்த நிலையில் -
      ஊரெல்லாம் கேளிக்கை யோகாசன நிலையில்!..

      இனியாவது வையகம் திருந்தி வளமுடன் வாழட்டும்!..

      Delete
    4. @ ஊமைக்கனவுகள். வாருங்கள் சகோ! நான் இந்நூலை வாசித்துக் கொடுத்த தகவல்களை விட அதிகமான தகவல்களைப் பரந்துபட்ட ஆழமான அகலமான வாசிப்பின் மூலம் தாங்கள் கொடுத்துள்ளீர்கள்.
      “டிராக்டர்களின் வட்டக்கலப்பைகள் துண்டாடிய தனது கால்களைக் கைகளில் ஏந்தியபடி, வழிகாட்டிகள் தன்னை ஊருக்கு அழைத்துச் சென்றுவிடும் என்று வழக்கம்போலவே படித்தவர்களை நம்பி ஏமாந்து நீள்கிறது பாமர விவசாயியின் காத்திருத்தல்.”
      என்ற தங்களின் கருத்து மனதை என்னவோ செய்கிறது. வேளாண்மையில் மட்டுமின்றி பிற துறைகளிலும் நாம் இழந்தது எத்தனையோ என்று தாங்கள் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை.
      காய்கறிகளின் நச்சு பற்றித் தாங்கள் சொல்லியிருப்பதும் உண்மையே. இன்று கூட இதுபற்றித் தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழகத்திலிருந்து வரும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகமாக இருப்பதாகக் கேரள அரசு தமிழகத்திடம் தெரிவித்துள்ளதாம்.
      உணர்வு பூர்வமான பின்னூட்டத்துக்கு மிக மிக நன்றி சகோ!

      Delete
  9. வாங்க மகி! உங்கள் மீள்வருகைக்கு என் நன்றி. தாங்கள் சொல்லியிருப்பது போல நம் மண்ணை செயற்கை இடுபொருட்களால நஞ்சாக்கிவிட்டனர். வேளாண் குடும்பத்தைச் சேர்ந்தவர் தாங்கள் என்பதால் இதன் விளைவுகளை நீங்கள் நேரடியாக அனுபவித்து இருந்திருப்பீர்கள். உங்கள் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தங்கள் ஆதங்கத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மகி!

    ReplyDelete
  10. "வைக்கோல் பறி போனதுடன் உழவனின் வாழ்வும் பறி போனது..

    தன்னைச் சுமந்த மாட்டை விட்டான்.. நம்பித் தொட்ட டிராக்டரால் கெட்டான்...

    வளையம் கட்டி அடித்தன - வாழ்வு தர வந்த அரசுகள்!..

    உழவனின் ஆசனத்தில் தீ வைத்த நிலையில் -
    ஊரெல்லாம் கேளிக்கை யோகாசன நிலையில்!.." வாருங்கள் துரை சார்! உங்கள் மீள்வருகைக்கு என் நன்றி. உங்கள் வேதனையையும் வருத்தத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்! நீங்கள் சொல்வது போல பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்று இனியாவது வளமுடன் வாழ்வோம்!

    ReplyDelete
  11. viju அவர்கள் தந்த விபரமான இத்தனை விடயங்களையும் கேட்டு நெஞ்சு படபடக்கிறது. வேதனையில் வெம்புகிறது உள்ளம். ஏற்கனவே இதை அறிந்திருந்தாலும், இவ்வளவு விபரமாக நாம் சிந்திக்கவும் இல்லை அறிந்திருக்கவும் இல்லை. விஞ்ஞான வளர்ச்சியில் நாம் வளர்ந்து கொண்டு போகிறோம் என்று தான் எண்ணி பெருமை கொள்கிறோம் ஆனால் உண்மையில் நாம் பாதாளத்தை நோக்கித் போய்க் கொண்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை நன்றிம்மா கலை இவற்றை எடுத்து வந்ததற்கு. viju அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் !

    ReplyDelete