நல்வரவு

வணக்கம் !

Wednesday, 30 September 2015

இயற்கை சமன்நிலையை அறிவிக்கும் பறவைகள்

சிறுவயதில் நம் வீட்டைச் சுற்றிக் கூட்டங்கூட்டமாக கண்டுகளித்த சிட்டுக்குருவி, மைனா எனப்படும் நாகணவாய்ப்புள், தவிட்டுக்குருவி, எல்லாம் எங்கே போயின? 

இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணங்கள் யாவை? பறவைகளைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?  பறவைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன சம்பந்தம்? 
சிட்டுக்குருவியினம் அழிவின் விளிம்பில் இருக்கின்றது; எனவே அதனைக் காப்பாற்றி மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்ட சிட்டுக்குருவி தினம், இது பற்றிய  விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தியது.
இளவயதில் நம் தோழர்களாக நம்முடன் கூடவே வளர்ந்த இனமல்லவா இது? இவற்றை வழி வழியாகக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தான், ‘சிட்டுக்குருவி கூடு கட்டினால் குடும்பத்துக்கு நல்லது; கூட்டைக் கலைப்பது பாவம்,’ என்று நம் முன்னோர் கூறிச்  சென்றனர்.
இதன் அழிவுக்கு செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு தான் முக்கிய காரணம் என்று முன்னர் சொல்லப்பட்டது.  ஆனால் இதற்குப் போதுமான ஆதாரமில்லை என்று இப்போது அறிவிக்கப் பட்டுள்ளது. 
மற்ற பறவைகள் போல் இவை மரங்களிலோ, புதர்ச்செடிகளிலோ கூடு கட்டும் வழக்கமுடையன அன்று.  இவை முழுக்க முழுக்க மனிதரை அண்டி வாழ்வன.  மனிதனை அடைக்கலம் நாடுவதால், இதற்கு  அடைக்கலக்குருவி என்ற பெயருமுண்டு. 
நம் வீடுகளுக்குள்ளோ, கிணறுகளுக்குள்ளோ இருக்கும் சந்து பொந்து, பரண், மாடம் ஆகியவற்றில் வாழும் பழக்கமுடைய இவை  நம் வீடுகள் கான்கிரிட் காடுகளாகவும், அடுக்கக வீடுகளாகவும் மாறியதால்,  கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய இடமில்லாமல் அருகிவிட்டன.
எனவே இவ்வினம் பெருமளவு அழிந்ததற்கு, நம் வீடுகட்டும் முறையில் நிகழ்ந்த மாற்றமே, மிக முக்கிய காரணம் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.  என் வீட்டின் முன்புறத்தில் இப்போது நான் தொங்கவிட்டிருக்கும் சர்ப் எக்ஸ்செல் அட்டைபெட்டிகளில் இவை உற்சாகமாக குடித்தனம் நடத்தி இனப்பெருக்கம் செய்கின்றன.  இரண்டு ஆண்டுகளுக்கு முன், எங்கள் தெருவில் இரண்டு குருவிகள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது பனிரெண்டுக்கு மேல் வீட்டைச் சுற்றி வந்து, தினமும் அதிகாலையில் ‘கீச், கீச்’  பள்ளியெழுச்சி பாடி, என்னைத்  துயிலெழுப்புகின்றன.    

மரங்களில் கூடுகட்டும் பழக்கமுடைய, மற்ற பறவைகளின் எண்ணிக்கை குறைய, மரங்களும், புதர்ச்செடிகளும் இல்லாதது முக்கிய காரணம். 
கூடுகட்ட மரங்களில்லா இக்காலச் சூழ்நிலையில், எதிர்வீட்டு மொட்டை மாடியில் வைக்கப்பட்டுள்ள கொம்புகள் உடைந்த திருஷ்டி பொம்மையினுள், கருந்தலை மைனா ஓராண்டாக வசிக்கின்றது.   

எங்குப் பார்த்தாலும் விளைநிலங்கள், மனைகளாக மாற்றம் பெற்றதும், வேளாண்மையில் அளவுக்கதிகமாக வேதியியல் உரங்கள் மற்றும்  செயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதும், வேறு சில காரணங்கள். 
பூச்சிக்கொல்லிகள் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லாமல், விளைநிலத்துக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் சேர்த்தே கொன்றுவிட்டன.  எனவே குஞ்சுகள் வளர்வதற்குத் தேவையான புரோட்டின் நிறைந்த புழுக்கள் பறவைகளுக்குக் கிடைக்கவில்லை.  அப்படியே கிடைத்தாலும், அவை நஞ்சு நிறைந்தவையாயிருந்தன.

அமெரிக்காவில் 1920 ல் எல்ம் மரங்களைப் பாதித்த பூஞ்சக்காளான் நோய்க்கு (DDT) எறும்பு மருந்தை, வண்டி வண்டியாகத் தெளித்தார்கள்.   
இதனால் பறவைகள் குறிப்பாக ராபின் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.  1954 க்கு பின் எண்ணிக்கை வெகுவாகக்  குறைந்து இவற்றைக் காண்பதே அரிதாகி விட்டது.  இதன் பிறகு தான் எறும்பு மருந்தை உலகமுழுதும் தடை செய்தார்கள். 
தம் பாடல் மூலம் வசந்தத்தைக் கட்டியங்கூறி வரவேற்கும் ராபின் பறவைகள் இல்லாமல், அதற்குப் பிறகு அமெரிக்காவில் வசந்தத்தில் மயான அமைதி நிலவியது. 
இதைப் பற்றி ரெய்ச்சல் கார்சன் (RACHEL CARSON) எழுதிய மெளன வசந்தம்(SILENT SPRING) என்ற நூலை, பேராசிரியர் ச.வின்சென்ட். தமிழ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  ‘எதிர்’  வெளியீடு.  பூச்சிக்கொல்லிகளின் விளைவுகளை உலகம் அறியச் செய்த மிக முக்கியமான புத்தகம் இது.   

கூட்டிலிருந்து வெளிவரும் சரியாகப் பறக்கத் தெரியாத சிறுகுஞ்சுகள் (Fledgling) காகம், பருந்து போன்ற பெரிய பறவைகளிடமிருந்து தப்பிக்கப் புதர்ச்செடிகள் வேண்டும்.  ஒரு நாள் கூட்டிலிருந்து வெளிவந்த மைனாக்குஞ்சு ஒன்றைக் காகம் விடாமல் துரத்தியது.  நானும் செய்வதறியாது கைபிசைந்து நிற்க, அது தத்தித் தாவி பக்கத்தில் அடர்த்தியாயிருந்த அரளிச்செடிக்குள் போய்ப் புகுந்து கொண்டது.  அதனுள்ளே காகத்தால் புகமுடியாததால், குஞ்சு தப்பித்தது.

எனவே வீட்டைச் சுற்றிக் கொஞ்சம் இடமிருந்தாலும், அழகுக்காக எதற்குமுதவாத, பறவைகளோ, வண்ணத்துப்பூச்சிகளோ அண்டாத புல்லை (LAWN) வளர்க்காமல், அரளி, நந்தியாவட்டை, இட்லிப்பூ போன்ற புதர்ச்செடிகளை வளருங்கள். இவை சரியாகப் பறக்கத் தெரியாத குஞ்சுகளுக்கு (Fledgling) அடைக்கலம் கொடுக்கும்!  

வீட்டுக்கு முன்புறம் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டு வளருங்கள்.  இவை நம் மண்ணின் மரங்களாக இருக்க வேண்டும்.    

வீட்டுத் தோட்டங்களில் செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி களையும் பயன்படுத்தவே கூடாது.  இயற்கை பூச்சி விரட்டிகளான வேப்பம்பிண்ணாக்கு, இஞ்சி & பச்சை மிளகாய்ச் சாறு போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.

குளிப்பதற்கொன்றும், குடிப்பதற்கொன்றுமாக தினமும் இரு மண் தொட்டிகளில் தண்ணீர் வைத்தால், தினமும் குளிக்கும் பழக்கமுள்ள சிட்டுக்குருவி, கொண்டைக்குருவிக்கு (Bul Bul) மிகவும் நல்லது.  நீர் தூய்மையாயிருக்கத் தினமும் மாற்ற வேண்டியது அவசியம்.

சிறு தானியங்கள் பறவைகளின் முக்கிய உணவு.  எனவே கம்பு கேழ்வரகு அரிசி நொய் போன்றவற்றை உணவளிப்பானில் (Bird Feeder) கொட்டித் தொங்க விடுங்கள்.  நேச்சர் பார் எவர் சொசைட்டி இதனை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்கின்றது.  http://www.natureforever.org/ .        பிறந்த நாளின் போது இவற்றை வாங்கிப் பரிசளித்துக் குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்.   இணையத்திலும் குப்பையில் தூக்கிப் போடும் காலி பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து, நாமே செய்யக்கூடிய செய்முறை விளக்கங்கள் பல இருக்கின்றன.  அவற்றுள் ஒன்று:-  https://www.youtube.com/watch?v=kE9jKmQJED0

ஊசிப்போன உணவை ஒரு போதும் பறவைகளுக்குத் தரக்கூடாது.  உப்பு போட்ட உணவு வகைகள், பெரிதும் தீங்கு செய்வன. இவற்றுக்கு அதிக ஒலி ஆகாதென்பதால், கூடுகளுக்கு அருகில் எப்போதுமே பட்டாசு வெடிக்கக் கூடாது..  இவ்வெடி மருந்து, காற்றை மாசுபடுத்துவதோடல்லாமல் விலங்கு, பறவைகளின் இனப்பெருக்க முறைகளையும் பாதிக்கின்றது.    

பட்டம் விடும் விழா நாட்களில், சீனாவின் மாஞ்சாவைப் பயன்படுத்துவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.  இது பல பறவைகளின் கழுத்தை அறுப்பதுடன், மனிதர்களின் உயிர்க்கும் உலை வைக்கின்றன. 

உயரமான கட்டிடங்களில், விளையாட்டரங்குகளில் பொருத்தப்படும் ஒளிபுகும் (Tranparent) கண்ணாடிகள் ஆண்டுதோறும் வலசை போகும் லட்சக்கணக்கான பறவைகளின் உயிருக்கு எமனாக விளங்குகின்றன.  உயரத்தில் பறக்கும் பறவைகள், கண்ணாடி இருப்பதே தெரியாமல், வேகமாக மோதி கீழே விழுந்து இறக்கின்றன.   கண்ணாடியில் பிரதிபலிக்கும் வானம், மேகம் அவற்றைக் குழப்புகின்றன.  எனவே கண்ணாடி இருப்பது பறவைகளுக்குத் தெரியும் விதத்தில், படங்கள் ஒட்டி வைக்க வேண்டும். பூ அல்லது கோடு வரைந்த கண்ணாடியைப் (Bird Friendly Glass) பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.  .    

“பறவைகள் தாம் இயற்கைச் சுற்றுச்சூழலின் சமன்நிலையை அறிவிப்பவை; எனவே அவற்றுக்குக் கேடு வருகிறதென்றால், நாமும் மிக விரைவில் சிக்கலுக்கு ஆளாகப் போகிறோம் என்று பொருள்.
இயற்கையில் புழு, பூச்சி, தாவரம் பறவை, விலங்கு மனிதன் என எல்லாமே உணவுக்காக ஒன்றோடொன்று தொடர்சங்கிலி போல பின்னிப் பிணைந்து  ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.  இவற்றுள் பறவையினம் அழிகின்றது என்றால், ஏதோ ஓர் இடத்தில் உணவுச்சங்கிலி அறுபடுகிறது என்றவுண்மையை உணர்ந்து கொண்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் இல்லையேல் மொத்த சங்கிலியும் அறுபட்டு வீழ்ந்துவிடும் ஆபத்திருக்கின்றது,” என்கின்றனர் பறவை ஆய்வாளர்கள்.    .

இது பூச்சிகள் உலகம்.  பூச்சிகளை உணவாகக் கொண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது பறவைகள் தாம்.  இவை இல்லாவிடினோ நம் கதி அம்பேல் தான்.  அதனால் தான் "மனிதர்கள் இல்லாமல் பறவைகளால் உயிர் வாழமுடியும்; ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது," என்றார் பறவையியலின் தந்தை சலீம் அலி.


(வலைப்பதிவர் திருவிழா 2015 – புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப்போட்டிக்காக எழுதப்பட்டது.)   (பிரிவு - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி) இக்கட்டுரை என் சொந்தப்படைப்பென்றும், இதற்கு முன் வெளியானதல்ல என்றும் போட்டி முடிவு வெளியாகும் வரை வெறெங்கும் பிரசுரத்துக்கு அனுப்பமாட்டேன் என்றும் சான்றளிக்கிறேன்.


(படங்கள் - நன்றி இணையம்) 


21 comments:

 1. மிக அருமையான கட்டுரை... வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. மிக அருமை எனப்பாராட்டியமைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி குமார்! முதல் பின்னூட்டத்துக்கு மீண்டும் நன்றி!

   Delete
 2. இயற்கையும் சுற்றுப் புறச் சூழல் சார்ந்த விழிப்புணர்வு தரும்
  கட்டுரை மிகச் சிறப்பு!

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. மிகச் சிறப்பு எனப்பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி இளமதி!

   Delete
 3. சுவாரஸ்யமான, விழிப்புணர்வுக் கட்டுரை. வெற்றி பெற வாழ்த்துகள்.
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் சுவாரஸ்யமான கட்டுரை எனப்பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்!

   Delete
 4. நல்லதொரு கட்டுரை.. அரிய தகவல்கள்..
  வெற்றிக்கு நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துடன் கூடிய கருத்துரைக்கு மிகவும் நன்றி துரை சார்!

   Delete
 5. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
  Replies
  1. உடனே தளத்தில் இணைத்தமைக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

   Delete
 6. ஆழ்ந்த தொகுப்பு ,,,,,,
  அருமை, வெற்றிபெற வாழ்த்துக்கள்,,

  ReplyDelete
  Replies
  1. அருமை எனப்பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மகி!

   Delete
 7. வணக்கம்! தங்கள் தளத்திற்கு புதியவன்! பறவைகள் பற்றி அருமையான விழிப்புணர்வு கட்டூரை! வாழ்த்துக்கள் நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க கரூர்பூபகீதன்! உங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! அருமை எனப்பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!

   Delete
 8. நல்லதொரு விடயத்தை கையிலெடுத்து தொகுத்த விதம் அருமை சகோ போட்டியில் வெற்றி எமது மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கில்லர்ஜி சார்!

   Delete
 9. தமிழ் மணம் நான்கு

  ReplyDelete
  Replies
  1. த ம வாக்குக்கு மீண்டும் என் நன்றி!

   Delete
 10. பறவைகள் குறித்த உங்களுடைய அக்கறையையும் அவற்றுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளையும் அறிவேன். சிட்டுக்குருவிகளுக்கு கூடு அமைத்து அவ்வினம் தழைக்க உங்களாலான முயற்சிகளை நேரில் கண்டு வியந்திருக்கிறேன். இக்கட்டுரையில் பறவைகள் வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். பாராட்டுகள் அக்கா. வெற்றி பெற என் இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கீதா!

   Delete
 11. இந்த வகைமைக்கான போட்டியில் நீங்கள் , சகோ. கீதமஞ்சரி போன்றவர்கள் முதலிடம் பெறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

  உங்களின் பதிவும் அதனை மெய்ப்படுத்துகிறது.

  வாழ்த்துகள்.

  நன்றி.

  ReplyDelete