ஆசிரியர்: கீதா மதிவாணன்
கோதை பதிப்பகம், திருச்சி. செல் 91-9080870936. விலை ரூ200/-
திருச்சியில்
பிறந்து, ஆஸ்திரேலியாவின்
சிட்னியில் வசிக்கும் கீதா மதிவாணன் அவர்களின், முதல் சிறுகதைத்
தொகுப்பு இது. ஆஸ்திரேலிய
எழுத்தாளர் ஹென்றி லாசனின் சிறுகதைகளை, ‘என்றாவது ஒரு நாள்,’
என்ற தலைப்பில், ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்
செய்து வெளியிட்டுள்ளார்.
இத்தொகுப்பில் 28 சிறுகதைகள் உள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட இக்கதைகள், ஏற்கெனவே பெங்களூர் புஸ்தகாவில் மின்னூலாக வெளிவந்திருந்தாலும், அச்சில் இப்போது தான், தொகுப்பாக வெளியாகியுள்ளது.
இக்கதைகளில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான
பாத்திரங்கள், அக்கம்பக்கத்திலும்,
நம்மூரிலும் அடிக்கடி நாம் சந்திக்கும் மாந்தர்களே. இது அவருடைய முதல் தொகுப்பு என்பதால்,
சிறு வயது முதல் தாம் கண்டு, கேட்டு வளர்ந்த மாந்தர்களின்
வாழ்க்கையைக் கதைகளாகப் படைத்துள்ளார்.
இத்தொகுப்பில்
என் மனதைத் தொட்ட கதை, ‘அம்மாச்சியும் மகிழம்பூக்களும்’.
இதுவே இத்தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.
சிறுவயதில் கோடை விடுமுறையில், அம்மாச்சியின் வீட்டுக்குத் தவறாமல் விஜயம் செய்யும் பேத்தி, அவர் மறைந்து பத்தாண்டுகள் கழித்து, அவருடன் கழித்த மகிழ்ச்சியான மலரும் நினைவுகளைச் சுமந்தபடி, அவர் வாழ்ந்த ஊருக்குச் செல்கின்றாள். ஆனால் சாமியறையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு படத்தைத் தவிர, அம்மாச்சி வாழ்ந்ததற்கான சுவடுகளே அங்கில்லை. அம்மாச்சி வீடு, மாமா வீடாகி விட்டதோடு, ஊரும் மிகவும் மாறிவிட்டிருக்கின்றது. சிறுவயதில் பாட்டி, தாத்தாவின் அன்பு கிடைக்கப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள் இக்கதையை வாசிக்கும்போது அவர்களுடைய இளம்பருவத்துக்குச் சென்று, நெகிழ்வது உறுதி.
அடுத்து
என் மனதை மிகவும் பாதித்த கதை,
‘சிவப்பி’. காமவெறியர்கள் நிறைந்த இச்சமூகத்தில்,
தனியாக ஒரு பெண் இருந்தாலே, ஆபத்து அதிகம். அதுவும் மனநிலை பாதிக்கப்பட்ட அநாதை
ஒருத்தி, அழகாகவும்,,சிவப்பாகவும் வேறு
இருந்துவிட்டால், அவளின் நிலை பற்றிக் கேட்கவேண்டுமா?
தன் குழந்தையைக் குளம் கொன்றதாக நினைத்து, அவள்
காட்டும் ஆத்திரமும், உக்கிரமும் மனநிலை சரியில்லாத அந்த நிலையிலும்
கூட, அவளுடைய தாய்மைப் பண்பின் மேன்மையினைக் காட்டுகின்றது.
“கற்பிழந்ததால் சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால்,
கற்பிழந்தாளா என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது, ஊர். அவள் கர்ப்பத்துக்குக்
காரண கர்த்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர, எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குத் தான் ஒவ்வொருவரும் வரவேண்டியிருந்தது”.
(பக் 52)
அடுத்து
என் மனதைக் கவர்ந்த கதை, “பத்திரப்படுத்தப்படும் சிறகுகள்”
பெற்றோர் வீட்டில் சிறகுகளோடு தேவதைகளாக வலம் வரும் பெண் குழந்தைகள்,
திருமணம் என்ற பெயரில், சிறகுகள் வெட்டப்பட்டு,
ஊனமாகி நடைபிணங்களாக உலா வரும் சோகத்தைச் சொல்லும் கதை.
“ஆம். நானும்
ஒரு தேவதையாகவே அவதரித்திருந்தேன்.
உன் அப்பாவை மிகவும் மகிழ்ச்சியோடு, மணம்
செய்து கொண்டேன். மணந்த
நாளிலிருந்து, அவர் வேண்டிய எண்ணிலா வரங்களை அளித்து,
அளித்து நான் சோர்ந்து விட்டேன். நிறைவேற்ற இயலாத வரங்களைக் கேட்டு
அவர் நிர்பந்தித்த போது, நான் மறுத்த காரணத்தால், இனி இதனால் பயனில்லை என்று ஒரு நாள் நான் கதறக் கதற, என் சிறகுகளைப் பிய்த்தெரிந்துவிட்டார்” (பக்
13)
அநாதையாக
வந்து, குடும்பத்
தலைவருக்கு நம்பிக்கைக்குரிய வலது கையாக மாறிவிட்ட ஒருவன், அவ்வீட்டுப்
பெண் மீது ஆசை வைத்தான் என்றால், அவனுக்கு என்ன கதி ஏற்படும்
என்பதை யதார்த்தமாகச் சொல்லும் கதை, ‘ஓடு உதிர்த்த புளியம்பழங்கள்.”
செல்லப்பிராணிகளை
வளர்த்துப் பறிகொடுக்கும் சோகம் எவ்வளவு கொடியது என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும்
கதை, ‘அப்பு’
‘அலமேலுவின் ஆசை’ – வயதான காலத்தில், அம்மா மகனிடம் எதிர்பார்ப்பது ஆறுதலான வார்த்தைகளைத் தவிர வேறில்லை என்பதை
உள்ளத்தை உருக்குமாறு சொல்லும் நெகிழ்ச்சியான கதை.
முதிர்கன்னியின்
அவலத்தைச் சொல்லும் கதை, ‘முற்றல் வெண்டைக்காய்கள்” வரனே அமையாத வயது முதிர்ந்த பெண்ணுக்குத் தானாக வரும் வரனையும், சாதி பார்த்துத் தட்டிக் கழிக்கும் அப்பாக்கள் எல்லாக் காலத்திலும் இருக்கத்
தான் செய்கிறார்கள்! இப்போது பெண் கிடைக்காமல், ஆண்கள் பிரம்மச்சாரிகளாக
அலையும் காலம்!
குரு காணிக்கை, மீனுக்குட்டி இரண்டும்,
அமானுஷ்யம் கலந்த கதைகள். நேர்த்திக்கடன் கதையும்
சிறப்பு. எல்லாவற்றையும்
சொல்லிவிட்டால் வாசிக்கும் சுவை குறைந்துவிடும் என்பதால் இத்துடன் நிறுத்துகின்றேன்.
கிராமியச்
சூழலில், அம்மண்ணுக்குரிய
மணத்தோடும், பழமொழிகளோடு கூடிய சொல்லாடல்களோடும், சுவையான நடையில் சொல்லப்பட்ட கதைகள் வாசிப்பின்பம் ஊட்டுபவையாக அமைந்துள்ளன.
ஆசிரியர்
கீதாவுக்குப் பாராட்டுகளும்,
வாழ்த்துகளும்!
வாழ்த்துகள் அம்மா...
ReplyDeleteநன்றி...
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறுகதைகளை ஏற்கனவே வாசித்திருந்தாலும் இத்தொகுப்பை மீள்வாசிப்பு செய்து, ரசித்த வரிகளை மேற்கோள் காட்டி, ஊக்கம் தரும் விமர்சனம் அளித்திருப்பதற்கு மனம் நிறைந்த நன்றி அக்கா. தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க அன்பும் நன்றியும்.
ReplyDeleteபாராட்டுகள் கீதா!
ReplyDelete