தற்காலத்
தமிழின் போக்கு சிறப்பாய் இருக்கிறது என்றோ, திருப்திகரமாக இருக்கிறது என்றோ
யாரேனும் சொன்னால், அது சிற்றோடையில்,
திமிங்கலத்தை மறைப்பதற்குச் சமம்.
இன்றைய
தமிழின் நிலை, தாய்மொழிப் பற்றாளர்களுக்கு மிகவும் கவலை யளிப்பதாகவே உள்ளது.
பாரதியார்
இன்று இருந்திருந்தால்,
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்”
என்பதற்குப்
பதில்
“தேமதுரத் தமிழோசை தமிழகத்திலாவது
பரவும்
வகை செய்தல் வேண்டும்,”
என்று
நெக்குருகிப் பாடியிருப்பார்.
இன்றைய தமிழகத்தில், எங்கும், எதிலும் ஆட்சி
செய்வது ஆங்கிலமே.
தற்காலத்
தமிழின் போக்கை நாம் தெளிவாய்ப் புரிந்து கொள்ளப் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ்
என இரண்டாகப் பிரித்துக் கொள்வோம்.
பேச்சுத்
தமிழில், மக்கள் அன்றாடம் புழங்கும் மொழியும், வானொலி தொலைக் காட்சி, திரைப்படம்
போன்ற ஊடகங்கள் பயன்படுத்தும் மொழியும் அடக்கம்..
எழுத்துத்
தமிழில் நாள், வார மாத இதழ்கள், இணையம்
போன்ற ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழி, கவிதை, கட்டுரை, சிறுகதை நாவல் என தமிழ்
எழுத்தாளர்களால் கையாளப்படும் மொழி என இருவகைப்படுத்தலாம்.
பேச்சுத்தமிழ்:-
இன்று பேச்சுத்தமிழில்
ஏராளமான ஆங்கிலச் சொற்கள், வேற்றுமொழி என்று தெரியாத அளவுக்கு இரண்டறக் கலந்து
விட்டன. படித்தவர்கள் மட்டுமின்றிப் பாமரர்கள்
கூட ஆங்கிலச் சொற்கள் பலவற்றைத் தினந்தினம் தம் உரையாடலில்
பயன்படுத்துகிறார்கள்.
பிற
மொழிச் சொற்களைக் கலப்பின்றி ஒரு நிமிடம் தமிழில் பேச வேண்டும் என்று
தொலைக்காட்சியில் போட்டி வைக்கிறார்கள்.
அதில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலோர், அரைநிமிடம் கூட ஆங்கிலம்
தவிர்த்துப் பேச இயலாமல் போட்டியிலிருந்து வெளியேறுகிறார்கள் என்றால், பேச்சு
வழக்கில் அம்மொழி எவ்வளவு தூரம் ஊடுருவியிருக்கிறது என்பது தெளிவாகிறதன்றோ?
பேச்சு
மொழியில் இவ்வளவு தூரம் ஆங்கிலம் கலக்க, நம் மக்களின் ஆங்கில மோகமே முக்கிய
காரணமாக இருக்கிறது. அம்மா என்று குழந்தை
அழைப்பதை விட மம்மி (பிணம்!) என்று தம்மை அழைப்பதைத் தானே, நம் தாய்மார்கள்
விரும்புகின்றனர்? குழந்தைகளுக்கு அழகு
தமிழில் கவின், கயல் போன்ற பெயர்களைச் சூட்டாமல், ஆஷிக், அக்ஷ்யா என வாயில்
நுழையாத வடமொழிப் பெயர்களைப் பெருமைக்குச் சூட்டிவிட்டுத் தினந்தினம் அப்பெயர்களைக்
கடித்து மென்று துப்புபவர்கள் ஏராளம்!
தமிழர்
திருநாளான பொங்கல் நாளன்று வாசலை அலங்கரிக்கும் கோலங்களில் கூட, நம் பெண்கள்
‘பொங்கல் வாழ்த்து!’ என எழுதுவதை விடுத்து, ‘ஹாப்பி பொங்கல்,’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதைக்
கண்டு மனம் மிக வேதனைப்படுகிறது.
ஆங்கிலம்
படித்தோருக்கு மென்பொருள் துறைகளில் வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்ல அம்மொழி
தெரிந்திருக்க வேண்டும் போன்ற காரணங்களைச் சொல்லி, பிள்ளைகளுக்குத் தாய்மொழிக்
கல்வி மறுக்கப்பட்டு, ஆங்கிலவழிக்கல்வியே பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திணிக்கப்படுகிறது.
பள்ளிகளில்
மதிப்பெண் அதிகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டாம் மொழியாகக் கூடத் தமிழைப்
படிக்க விரும்பாமல், ஹிந்தி,
சம்ஸ்கிருதம், பிரெஞ்சு எடுத்துப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி
வருகிறது. ஆங்கிலம் படிக்க வேண்டாம் என
நான் கூறவில்லை. தாய்மொழியோடு மற்ற
மொழிகளிலும் புலமை பெறுவது மிகவும் நல்லது தான்.
ஆனால் ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகளைத் தலையில் தூக்கி வைத்துக்
கொண்டாடிவிட்டு, நம் மொழியைக் கேவலமாகக் கருதித் தரையில் போட்டு மிதிப்பதைத் தான்
தவறு என்கிறேன்.
என்
பிள்ளைக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்பதை ஒரு சாதனையாகச் சொல்லும் பெற்றோரைக் கண்டால்
எனக்கு அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.
தாய்மொழியைப் படிக்கத் தெரியவில்லை
என்பதற்காக வெட்கப்படாமல், வேதனைப்படாமல், பெருமையாகக் கூறும் இனம், உலகத்திலேயே
தமிழினம் மட்டுமே.
கடைத்தெருவில்
பெயர்ப் பலகைகளிலாவது தமிழ் இருக்கிறதா எனப் பார்த்தால்
அங்கும்
ஆங்கிலமே கோலோச்சுகிறது:-
பத்மா
ஹாஸ்பிடல், உமா நர்சிங் ஹோம், கிரவுன் மெடிக்கல்ஸ், லஷ்மி ஸ்டோர், பாலாஜி காஸ்ட்
பிரைஸ் ஷாப், கணபதி புரொவிஷன் ஸ்டோர், எனப் பட்டியல் நீளுகிறது.
வானொலி,
தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலாவது, பேச்சு வடிவம் சிறப்பாக இருக்கிறதா என்றால்
அதுவும் இல்லை.
பிரபலங்களின்
பேட்டியாகட்டும், கலந்துரையாடலாகட்டும், பங்கு பெறுபவர்களில் பெரும்பாலோர், லண்டனிலிருந்து
நேரே குதித்து வந்தவர்கள் போல், தமிழில் பேசத்
திக்கித் திணறி, இடையிடையே ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி தம் ஆங்கிலப்
புலமையைப் பறைசாற்றிக் கொள்வது தான் வழக்கமாக இருக்கிறது. செய்தி வாசிப்பாளர்களைப் பற்றிச் சொல்லவே
வேண்டியதில்லை. கடித்துக் குதறி இவர்கள் வாசிக்கும்
தமிழ், நாராசமாக ஒலித்து நம் செவிகளைப் புண்ணாக்கி இரத்தம் சிந்த வைக்கிறது!
அடுத்துத்
திரைப்படபாடல்கள் பக்கம் நம் பார்வையைத் திருப்பினால், அங்கும் நமக்குக் காத்திருப்பது
ஏமாற்றமே:-
“பார்த்தேன் சிரித்தேன்
பக்கம்
வரத் துடித்தேன்
அந்த மலைத்தேன்
இவரென மலைத்தேன்”
“அத்திக்காய்,
அத்திக்காய்
ஆலங்காய்
வெண்ணிலவே
இத்திக்காய்
காயாதே
என்னுயிரும்
நீயல்லவோ”
போன்ற
இலக்கிய நயமிக்கத் திரைப்படப்பாடல்களைக்
கேட்டு ரசித்த தமிழர்கள் இப்போது கேட்டுப் புல்லரிப்பது:-
“வொய்
திஸ் கொல வெறி, கொல வெறிடி
டிஸ்டன்ஸில
மூணு மூணு
மூணு
கலரு வொயிட்
வொயிட்
பக்கிரவுண்டு நைட்
நைட்
கலரு பிளாக்
வொயிட்
ஸ்கின் கேர்ளு, கேர்ளு
கேர்ளு
ஹார்ட் பிளாக்
ஐஸ்
மீட்டு மீட்டு
மை ஃபியூச்சர் டார்க்”
இது
போன்ற உலகத்தரம் வாய்ந்த தமிழ்ப்பாடல்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால், தமிழ்த்
திரைப்படப் பாடல்களின் எதிர்காலம் மட்டுமல்ல, தமிழின் எதிர்காலமும் இருட்டாகவே
இருக்கும்..
தமிழ்த்
திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க, வரிச்சலுகை அளிக்கப்படுகிறது என்றால், எங்குப்
போய் நாம் முட்டிக் கொள்வது?
எழுத்துத் தமிழ்:-
மக்களிடம்
அதிகச் செல்வாக்கு பெற்ற எழுத்து ஊடகங்களிலோ, தமிழ் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.
விகடன்
போன்ற ஒரு பாரம்பரியமிக்க வார இதழில் இடம்பெற்றிருக்கும் திரைப்பட விமர்சனத்தில்
நம் தமிழ், எவ்வளவு அழகாய்க் கொஞ்சி விளையாடுகிறது பாருங்கள்!:-
“உதய்-சந்தானம் காமெடி, காதலி சேஸிங்,
டீஸிங், வெளிநாட்டுப்பாடல்கள், குடும்ப செண்ட்டிமெண்டுகள், என, ‘ஒரு கல் ஒரு
கண்ணாடி,’யின் ஜெராக்ஸாகவே கதிர்வேலனைக் காதலிக்க வைத்திருக்கிறார்
இயக்குநர். காதல், காமெடி, செண்டிமெண்டு
மசாலா பேக்கேஜில் மிக்ஸிங் சறுக்கியதில் இது கதிர்வேலனுக்கு மட்டுமே காதல்!”
குமுதம் வார இதழில், நடிகையின் பேட்டி:-
“டெக்னாலஜி
ரொம்ப வளர்ந்து போச்சு. நாம டெக்னாலஜியை
ஒழுங்கா யூஸ் பண்ணிக்கணும். கதையோட ‘சோல்’
நமக்கு இம்ப்ரஸ் ஆகணும். ‘டமால், டுமீல்,’
கதையை என்கிட்ட சொன்னப்ப, ரொம்ப
எனர்ஜிடிக்கா இருந்தது. உடனே எஸ்
சொன்னேன். தட்ஸ் ஆல்”
நண்பர்களே! இன்றைய தமிழின் சீர் கெட்ட நிலைமைக்கு
எடுத்துக்காட்டுகள் போதுமா? இன்னுங் கொஞ்சம் வேண்டுமா?
இதே
குமுதம் இதழில் வெளியாகியிருக்கும் இரண்டு நகைச்சுவை துணுக்குகள்:-
1. “நர்ஸூக்கு
லவ் லெட்டர் கொடுக்கறப்போ, மிஸ்டேக் பண்ணிட்டேன்”
என்னாச்சு?
ஐ
லவ் யூ சிஸ்டர்னு எழுதிட்டேன்பா”
2. “நைட்ல
பைக்ல லைட் போடாம வர்றியே, திமிரா?
“இல்ல
சார். டெய்லி இரண்டு மணி நேரம், பைக்ல பவர் கட் சார்”
இணையத்தில்
முகநூலில், டிவிட்டரில் நம் இளைய தலைமுறையினர் எழுதும் தமிழ் பற்றிச் சொல்லவே
வேண்டியதில்லை:-
“ஐஸ்கிரீம் பார்லர்ல ஃப்ரெண்ட்ஸோட
போறவங்கள்ள… எனக்கு வெனிலா போதும்னு சொல்றவன் தான், அநேகமா பில் கொடுப்பான்”
இலாபத்தை
மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வணிக நாளிதழ், வார இதழ்களைத் தவிர சிறு
பத்திரிக்கைகளில் தமிழ் ஓரளவு தரமாக இருக்கின்றது.
முன்னெப்போதையும்
விட இப்போது தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை கூடுதலாயிருக்கிறது. இவர்கள் சொல்ல விரும்பியதை, பகிர நினைப்பதை
மேடையேற்ற, இணையம் இன்று களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. எழுதுவோரில் பெரும்பாலோர் கூடுமானவரை பிறமொழிக்
கலப்பின்றித் தரமாக எழுதுவதை வாசிக்கையில், சிறிது ஆறுதலாயிருக்கிறது.
எனவே பேச்சுத்தமிழை
விட எழுத்துத் தமிழின் நிலைமை நன்றாகவே இருக்கிறது. இணையத்தில் தமிழ்
இந்தளவுக்குச் சிறப்பாக இருப்பதற்கு, உலகமெங்கும் பரவியிருக்கும் ஈழத்தமிழர்களின்
முயற்சியும் தமிழ்ப்பற்றும் முக்கிய காரணங்கள் என்றால் அது மிகையில்லை.
தமிழின் எதிர்கால நிலை:-
ஒரு மொழி எவ்வளவு தான் இலக்கியச்செல்வம்
பெற்றிருந்தாலும், பொது மக்களின் பேச்சுமொழியாக இருக்கும் வரை தான் அதற்கு உயிர்
இருக்கும். ஒரு காலத்தில் ஐரோப்பா முழுதும் ஆட்சி செலுத்திய இலத்தீன், இன்று
என்னவாயிற்று? அது போல் சாமான்ய மக்களின்
பேச்சு மொழியாக இல்லாமல் மெத்த படித்த மேல்தட்டு மக்களின் மொழியாக இருந்த சம்ஸ்கிருதமும்
வழக்கொழிந்து போயிற்று.
எனவே எழுத்தை
விட, பொது மக்கள் தினந்தினம் பயன்படுத்தும்
பேச்சு மொழிக்கு நாம் அதிக முக்கியத்துவம்
கொடுக்கவேண்டும். ஏனென்றால் பேச்சுவடிவமே ஒரு மொழியின் உயிர் மூச்சு.
பேச்சுத்தமிழின் இன்றைய நிலை தொடர்ந்து
நீடிக்குமானால், தமிழின் எதிர்காலம் கேள்விக்குரியதே.
‘மெல்ல தமிழ் இனிச் சாகும்,’ என்ற
பாரதியின் பயம் ஒரு வேளை உண்மையாகிவிடுமோ என நாம் அச்சம் கொள்ள வேண்டிய
காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இரண்டாயிரம்
ஆண்டு தொன்மை வாய்ந்த செவ்வியல் மொழி என்று
பழம் பெருமை பேசிப் பேசியே காலத்தைக் கடத்தி விட்டோம். இனியும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் செயலில்
இறங்க வேண்டிய தருணமிது.
தமிழின்
எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க முக்கியமாக நாம் என்ன செய்ய வேண்டும்?
·
குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்.
·
ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், இரண்டு தமிழர்கள் சந்திக்கும் போது
தமிழிலேயே பேச வேண்டும். தமிழில் பேசினால்
கேவலம் என்ற நினைப்பை விட்டொழிக்க வேண்டும்.
·
பள்ளியிறுதி வகுப்பு வரையிலுமாவது குழந்தைகளுக்குத் தமிழ்
கட்டாயமாகப் போதிக்க வேண்டும்.
·
கூடுமானவரை பேச்சில், எழுத்தில் ஆங்கிலச் சொற்களைக் களைந்து
தமிழ்ச் சொற்களைக் கையாள வேண்டும்.
·
ஏற்கெனவே தமிழில் இருக்கும் சொற்களுக்குப் பதிலாக, மொழியாக்கம்
செய்யப்பட்ட சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
எ,கா.:-
அருவிக்குப் பதில் நீர்வீழ்ச்சி (WATERFALL என்பதின் தமிழாக்கம்)
·
தமிழில் திறனாய்வு இல்லை.
ஆக்கப்பூர்வ விமர்சனங்கள் நம் படைப்புக்களைக் கூர் தீட்டிக்கொள்ள
உதவும், எனவே நடுநிலையோடு விமர்சனம்
செய்பவர்களிடம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குச் சென்று அவர்கள் மீது சேற்றை
வாரி வீசக்கூடாது.
·
நூல் வாசிக்கும் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கு வலியுறுத்த
வேண்டும். பிறந்த நாள் போன்ற விசேட
நாட்களில் புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்க வேண்டும்.
·
தரமான தமிழ்ப்புத்தகங்களை வாங்கித் தமிழ்ப் பதிப்பாளர்களையும்,
எழுத்தாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
·
பிரெஞ்சு மொழி இன்று அடைந்துள்ள உன்னத நிலைக்குக் காரணமான பிரெஞ்சுக்கழகம்
போல் அரசியல் தலையீடு இல்லாத தமிழ்க்கழகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
·
தமிழ்த் தெரிந்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க
வேண்டும். (விரிவஞ்சி இத்துடன்
நிறுத்துகிறேன்.)
கா கா
என்று கரையும் பறவையைக் காக்கா என்றோம்.
அதன் இயல்பை மாற்றிக் கூ கூ எனக் கூவ வைத்து விட்டால், அது குயில்
ஆகிவிடுமா?
நகல்
என்றுமே அசல் ஆக முடியாது. இது தான்
இயற்கை நமக்குச் சொல்லும் பாடம். கூ கூ
என்று கூவும் காக்கை, காக்காவாகவும் இல்லாமல், குயிலாகவும் மாறமுடியாமல், முடிவில் இரண்டுங்கெட்டான்
ஆகிவிடும்.
அது
போலத் தமிழ் தான் நம் அடையாளம். தமிழ் பேசுவதால் தான் நாம் தமிழர். இதனைத் துறந்து ஆங்கிலேயருக்கு நிகராக அவரது தாய்மொழியைப்
பேசுவதால், நாம் எந்நாளும் ஆங்கிலேயர் ஆகமுடியாது. நமக்கு முகவரியைக் கொடுத்த, இரண்டாயிரம் ஆண்டு தொன்மை
வாய்ந்த வரலாற்றைக் கொடுத்த தமிழை மறந்தோம் என்றால், நம் சொந்த அடையாளத்தை இழந்து இரண்டுங்
கெட்டான் காக்கையைப் போல நாடோடிகளாகத் திரிய வேண்டிய நிலை ஏற்படும்.
நம்
மொழியை உருக்குலைக்காது, அதன் சிறப்பியல்புகளைச் சீரழிக்காமல் பாதுகாத்து, நம்
குழந்தைகளின் கைகளில் ஒப்படைக்க வேண்டியது நம் கடமை. இல்லையேல் நம் வருங்காலச் சந்ததியினர் நம்மை
ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.
(பொங்கல்
தினத்தை முன்னிட்டு ரூபனின் எழுத்துப்படைப்புகள் தளத்தில் நடத்தப்படும் மாபெரும் கட்டுரைப்போட்டியில்
பங்கேற்பதற்கான கட்டுரை)
(கடைசி நாளில்) கலந்து கொண்டமைக்கு நன்றி... பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி தனபாலன்! 20 ஆம் தேதி கீதமஞ்சரியில் சினிமா பற்றிய கட்டுரையைப் படித்த பின் தான் இது போல் கட்டுரைப்போட்டி ஒன்று இருப்பது பற்றித் தெரியவந்தது. கடைசித்தேதி முடிய இன்னும் ஒரு நாளே பாக்கியிருக்கிறது என்பது தெரியவர அவசர அவசரமாக எழுதி கடைசி நிமிடத்தில் வெளியிட்டு விட்டேன். பதிவிட்ட அடுத்த நிமிடம் உங்களது பதில் பார்த்து அசந்து போய்விட்டேன். என் கட்டுரையையும் போட்டியில் சேர்ப்பித்தமைக்கு மிக்க நன்றி. பரிசு கிடைக்கிறதோ இல்லையோ இந்தத் தலைப்பில் என் ஆதங்கங்களை எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாய் நினைத்திருந்தேன். அந்த எண்ணம் நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி.
Deleteஎன் பதிவு உங்களையும் எழுதத் தூண்டியதில் மிக்க மகிழ்ச்சி அக்கா. இந்த போட்டி கடந்த பொங்கல் தினத்தோடு முடிவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த்து. அப்போது என்னால் கலந்துகொள்ள இயலவில்லை என்பதால் விட்டுவிட்டேன். சென்றவாரம் தற்செயலாகப் பார்த்தபோதுதான் போட்டியின் இறுதிநாள் நீட்டிக்கப்பட்டிருக்கும் விவரம் தெரிந்தது. உடனே எழுதி அனுப்பிவிட்டேன். அதனால்தான் நிறைய எழுத நினைத்திருந்தும் சிலவற்றைத் தவறவிட்டுவிட்டேன். இன்றைய தமிழின் போக்கு பற்றியும் எழுத ஆரம்பித்து நேரமின்மையால் அரைகுறையாக நிறுத்திவிட்டேன்.
ReplyDeleteதங்களுடைய இக்கட்டுரை பார்த்து மிகவும் ஆறுதல். தமிழின்பால் பற்றுள்ள ஒவ்வொருவரின் கருத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நேர்த்தியாக தகவல்களைத் தொகுத்து தகுந்த உதாரணங்களுடன் எழுதியுள்ளீர்கள். தமிழின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கத் தாங்கள் முன்வைத்துள்ள ஆலோசனைகள் ஒவ்வொன்றும் கோடி பெறும். இறுதி நாளில் கலந்துகொண்டாலும் உறுதியான கருத்துக்களை முன்வைத்து தமிழின் எதிர்காலம் சிறப்புற வகைசெய்யும் எண்ணங்களை எழுத்தால் வடித்த திறனைப் பாராட்டுவதோடு போட்டியில் வெற்றி பெறவும் இனிதே வாழ்த்துகிறேன்.
தமிழ் தான் நம் அடையாளம். தமிழ் பேசுவதால் தான் நாம் தமிழர். இதனைத் துறந்து ஆங்கிலேயருக்கு நிகராக அவரது தாய்மொழியைப் பேசுவதால், நாம் எந்நாளும் ஆங்கிலேயர் ஆகமுடியாது.
ReplyDeleteசிறப்பான் ஆக்கம் ..பாராட்டுக்கள்..!
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம்!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
அற்புதக் கோலம் அகத்தினை ஆட்கொண்டு
பொற்புடன் மின்னும் பொலிந்து
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
சகோதரி, தங்களை ஓர் தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
ReplyDeleteவிபரங்கள் இதோ:
இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?
நன்றி.
தொடர்பதிவுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி. விரைவில் பதில் எழுதுவேன்.
DeleteThoughtful blog, thanks for sharing.
ReplyDelete