நல்வரவு

வணக்கம் !

Thursday, 23 April 2015

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி



தமிழ் இலக்கிய உலகில் ஜே.கே என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் (1934 –2015) 08/04/2015 அன்று சென்னையில் காலமானார். 

இவர் மறைவுக்குத் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும், ‘எழுத்துலகச் சிற்பி,’  ‘சிறுகதை இலக்கியத்தின் முடிசூடா மன்னன்,’  ‘தமிழ் இலக்கிய ஒளிச்சுடர்,’  ‘படிக்காத மேதை,’  ‘முற்போக்குச் சிந்தனைவாதி,’  ‘தமிழ் இலக்கிய பிதாமகன்,’ என்றெல்லாம் புகழாரம் சூட்டிக் கண்ணீரஞ்சலி செலுத்தியுள்ளனர். 

கடலூரில் வேளாண்குடும்பத்தில் பிறந்து ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், இலக்கியத்துக்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட பரிசு பெற்றதோடு, சாகித்ய அகாடமி, பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.   
  
1950 களில் சரஸ்வதி, தாமரை, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் எழுதத் தொடங்கினார்.  அக்னிப் பிரவேசம், யுகசந்தி, உண்மை சுடும் போன்ற சிறுகதைகள், இவரைப் புதுமைப்பித்தனின் வாரிசாக அடையாளம் காட்டின.  சாகித்ய அகாடெமி விருது பெற்றுத் தந்த, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்,’ நாவல் தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்தது. 

‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்,’ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்,’ ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,’ ‘யாருக்காக அழுதான்,’ ‘உன்னைப் போல் ஒருவன்,’ போன்றவை, காலத்தை வென்று நிற்கும் இலக்கியப் படைப்புக்கள்.  எழுத்துலகில் மட்டுமின்றி, திரையுலகம், அரசியல் எனப் பல தளங்களிலும் தம் முத்திரையைப் பதித்தவர் ஜெயகாந்தன்.


வணிக இதழ்களில் கூட இலக்கியத் தரமான கதைகளை எழுத முடியும் என்பதை மெய்ப்பித்தவர்.  விகடனில் ‘அக்னி பிரவேசம்,’ சிறுகதை வெளி வந்த போது, அதற்கு வாசகர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இக்கதையில் கல்லூரியில் படிக்கும் பெண்,  தன் பெண்மையைப் பறிகொடுத்து வந்து நின்று அழும் நேரத்தில் தாய் அவள் தலையில் தண்ணீரைக் கொட்டிச் சொல்லும் வசனம் இது:-

“நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு.”

இக்கதையின் எதிர்வினை பற்றி ஜெயகாந்தன் கூறுவதைக் கேளுங்கள்:-  “என் கதையின் முடிவை மாற்றியும், அந்தக் கதாபாத்திரத்தைக் கொன்றும் அதே தலைப்பில் கதை எழுதித் தமிழ்நாட்டின் பெரும் பத்திரிக்கைகளில் அவற்றுக்கு ஊக்கம் தந்து, நடந்த அத்துமீறல்களைச் சகித்துக் கொண்டிருந்தேன்.  எழுதுகிற பணிக்குப் பொறுமை மிக மிக இன்றியமையாதது.  நான் ஒரு நாவலே எழுதுவதற்கு அந்த அத்துமீறல்களும், எனது அக்னிபிரவேசமும் காரணமாதலால், அவர்களுக்கும் கூட நான் நன்றி பாராட்டுகிறேன்.”

அக்னி பிரவேசத்தின் கதையின் முடிவை மாற்றிச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்,’ நாவலை அவர் எழுதினார்.  இக்கதையில் அதே போலப் பெண்மையைப் பறிகொடுத்து விட்டு வந்து பெண் நிற்கும் போது, சத்தம் போட்டு ஊரைக்கூட்டி எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாக்கிவிடும் தாயால்  அப்பெண்ணின் வாழ்வு எவ்வளவு சீரழிந்து போகிறது என்பதை அருமையாக விளக்கியிருப்பார். 

இந்நாவல் திரைப்படமாகவும் வெளிவந்தது.  கங்கா பாத்திரத்தில் நடிகை லட்சுமி அற்புதமாக நடித்திருப்பார்.  இந்நாவலின் தொடர்ச்சியாகக் ‘கங்கை எங்கே போகிறாள்?’ என்ற தொடர்கதையை எழுதினார். 

எழுதியவற்றுள் தமக்கு மிகவும் பிடித்ததாக ஜெயகாந்தன் சுட்டியது ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’.  இக்கதை நாயகன் ஹென்றி  ஊர், மொழி, இனம் கடந்த ’யாதும் ஊரே, யாவரும் கேளிர்,’ என்ற உயரிய் மனப்பான்மை கொண்ட உலகப் பொது மனிதனாக  உருவாக்கப்பட்டிருக்கிறான்.   ’என் உள்ளம் தான் ஹென்றி,’ என்று இவர் ஒரு நேர்காணலில் கூறினாராம். 

இரண்டாம் உலகப்போரின் போது சபாபதிப்பிள்ளை, மைக்கேல் அவரது மனைவி மூவரும் ரங்கூனிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடி வரும் வழியில், ரயில் நிலையத்தில் அநாதைக் குழந்தையாகக் கண்டெடுக்கப் படுகிறான் ஹென்றி. 

தன் வளர்ப்புத் தந்தையின் மறைவுக்குப் பின் பெங்களூரிலிருந்து அவரது கிராமமான கிருஷ்ணராஜபுரத்துக்கு  வருகிறான். இவ்வூரின் வாழ்க்கை சூழலே நாவலின் பின்னணியாக அமைந்துள்ளது.
 

அவ்வூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் தேவராஜன் என்பவனுடன் நட்பு ஏற்படுகிறது. தன் கிராமத்துப் பழக்க வழக்கங்களில் அதிருப்தியும் வெட்கமும் கொள்கிறவனாகவும், அச்சூழலில் அந்நியப்பட்டும் வாழ்கிறான் இவன்.

ஆனால் எங்கோ பிறந்து பெங்களூரில் வளர்ந்த ஹென்றி, தன் வளர்ப்புத் தந்தையின் கிராமத்துக்கு வந்து, அந்த வாழ்க்கையை அதன் இயல்புகளோடு ஏற்றுக்கொண்டு கிராமச் சூழலோடு ஒன்றிப் போகிறான்.  அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

ஜெயகாந்தன் என்பது ஒற்றைச் சொல்லில் ஒரு சரித்திரம்; இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம் என்கிறார் கவிஞர் வைரமுத்து. . 

இவர் எழுத்துக்களை வாசிப்பதே, நாம் இவருக்குச் செய்யும் மரியாதை.   தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றென்றும் இவருக்குச் சிறப்பான இடம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. .

(‘நான்கு பெண்கள்' தளத்தில் 13/04/2015 அன்று வெளியானது)

(படம் நன்றி இணையம்)                                      

22 comments:

  1. ஜெயகாந்தனுக்கு நல்ல புகழஞ்சலி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துப்பகிர்வுக்கும், முதல் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  2. இறந்த மனிதன் பற்றிய உயிருள்ள பதிவு.

    இதைப் படித்து முடித்ததும் என் மனதில் தோன்றிய வரிகள் இவைதான்.

    இவரது அக்கிரஹாரத்துப் பூனை என்கிற சிறுகதைத் தொகுப்பு முதன் முதலில் வாசிக்கக் கிடைத்தது. ஏழாம் வகுப்பில்.
    வாசித்து ஒன்றும் புரியாமல் தூக்கிப்போட்டது..
    ஈராண்டுகள் கழித்து வாசிக்க ஒன்றும் கிடைக்காத அகோரப்பசியில் மீண்டும் அதே புத்தகம்.
    இம்முறை வாழ்க்கையை மனிதர்களை, எழுத்தின் வசீகரத்தை இரண்டாண்டுகள் அறியாமற் கிடந்தாயேயடா என என்னை நொந்து கொண்ட அனுபவத்தைத் தந்தன அவை.

    எனக்குத் தெரிந்து வாசிப்பின் வாசனை நிறைந்திருக்கும் எல்லாமனதில் இவரது எழுத்துகள் தனித்துவமாய் அடையாளப்படுத்தப் பட்டுக்கிடக்கும் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்று வரை.

    வேகமாகச் சென்று கடலில் கலக்கத் துடித்த நதியின் பிராவகத்தை ஒற்றைச் சிமிட்டலில் மடைமாற்றி விட்டவருள் இவர் பிரதானமானவர்.

    அதனால் தான் இன்னுமும் இங்கெல்லாம் சுற்றிக்கிடக்கிறேன்.

    ஜெயகாந்தன் பற்றி வலைத்தளம் வந்த பதிவுகளுள் குறிப்பிடத் தகுந்த பதிவு உங்களுடையது.

    குறித்துக் கொள்கிறேன்.

    நன்றி சகோ.

    த ம 2

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துப்பகிர்வுக்கும், த ம வாக்குக்கும் மிகவும் நன்றி சகோ! குறிப்பிடத்தகுந்த பதிவு என்ற பாராட்டுக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  3. வணக்கம்
    எழுத்தாளர்ஜெயக்காந்தன் பற்றி மிக அருமையான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன். த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம் என்ற கருத்துரை ஊக்கமளிப்பதாக உள்ளது ரூபன்! வாக்குக்கும் என் நன்றி!

      Delete
  4. //(‘நான்கு பெண்கள்' தளத்தில் 13/04/2015 அன்று வெளியானது)//

    பாராட்டுகள். வாழ்த்துகள். தங்களின் கட்டுரையும் அருமையாகவே எழுதப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி கோபு சார்!

      Delete
  5. இவரைப் பற்றிச் சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். 75 லேயே எழுதுவதை நிறுத்தி விட்டபோதிலும் இந்த அளவு மக்கள் மனதில் இடம் பெற்றவர்.

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி ஸ்ரீராம்!

      Delete
  6. இவரைப் பற்றிச் சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். 75 லேயே எழுதுவதை நிறுத்தி விட்டபோதிலும் இந்த அளவு மக்கள் மனதில் இடம் பெற்றவர்.

    ReplyDelete
  7. Replies
    1. ருமையான கட்டுரை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  8. ஜெயகாந்தன் படைப்புகள் குறித்து நல்ல அலசல். ‘நான்கு பெண்கள்’ தளத்தில் வெளிவந்த உங்கள் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா! த ம வாக்குக்கு மீண்டும் நன்றி!

      Delete
  9. ஜெயகாந்தன்!..
    - என்றென்றும் நினைவில் இருப்பார்..

    ReplyDelete
    Replies
    1. கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி துரை சார்! கரிச்சானின் அடுத்த பதிவு எங்கே?

      Delete
  10. முற்போக்கு எழுத்துகளாலும் மனிதநேயக் கருத்துகளாலும் நம்மைக் கவர்ந்த மாபெரும் எழுத்தாளுமையின் மறைவு மிகவும் வேதனை தருகிறது. ஜெயகாந்தன் அவர்களுடைய பல கதைகளின் தாக்கம் வாசித்து முடித்தபின்னும் நெடுநாள் நெஞ்சத்தில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும்.

    \\அவர் எழுத்துக்களை வாசிப்பதே, நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.\\ மிகவும் உண்மை. எழுத்தால் என்றும் வாழும் ஜெயகாந்தன் அவர்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அருமையான கட்டுரைக்கு பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கீதா! அவருடைய எழுத்தின் வீச்சு அப்படிப்பட்டது. பாராட்டுக்கு நன்றி கீதா!

      Delete
    2. யாருக்காக அழுதான் ? , அக்னிப்பிரவேசம் ஆகியவற்றை அவை இதழ்களில் வெளியானபோதே சூட்டொடு சூடாய் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று .
      அக்னிப்பிரவேசம் கல்கியில் வந்தது . சிறந்த அஞ்சலி .

      Delete
    3. அக்னிபிரவேசம் கல்கியில் வந்தது என்று தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அவர் கதைகளை உடனுக்குடன் வாசித்த போது தங்களுக்கு ஏற்பட்ட வாசிப்பனுபவத்தையும், எதிர்வினைகள் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி!

      Delete
  11. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete