நல்வரவு

வணக்கம் !

Monday, 3 August 2015

ஒரு பல்லின் கதை

(30/09/2009 அன்று இணைய இதழான நிலாச்சாரலில் எழுதியது)


சிறு வயதில் விளையாடும்போது வாசல்படியில் தடுக்கி விழுந்ததால், என் முன் பல்லின் கீழ்புறம் சிறிது உடைந்துவிட்டது. நல்லவேளையாக, கன்னா பின்னாவென்று உடையாமல் சிறு செதிலாக உடைந்திருப்பதால், முகத்திற்கு விகாரமாயில்லை என அம்மாவிற்குத் திருப்தி.

ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல, அப்பல்லின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாகக் கறுப்பாகிக் கொண்டே வந்ததறிந்து, அம்மாவுக்குக் கவலை. ஏற்கெனவே அரியலூர் ரயில் விபத்தில் அடிபட்டது மாதிரி, மூக்கில்லாமல் நாக்கில்லாமல் பிறந்திருக்கும் பெண்ணின் முன்பல்லுக்கும் கேடு வந்ததென்றால், எந்த அம்மாவால் கவலைப்படாமல் இருக்கமுடியும்?

"ஏங்க! இவளுக்கு முன் பல் வர வரக் கறுப்பாவுது. அதனால அந்த மாங்கொட்டைத் தலையன்கிட்ட ஒரு முறை அழைச்சிட்டுப் போயிட்டு வாங்களேன்".

எங்கள் ஊர் பல் டாக்டருக்கு அம்மா வைத்த பெயர்தான் மாங்கொட்டைத் தலையன். முன் மண்டை முழுக்க வழுக்கையாயும், பின் மண்டையின் ஓரம், கொஞ்சம் சிலுப்பி விடப்பட்ட முடியோடும் இருந்த அவரைப் பார்த்த போது அம்மா வைத்த பெயர் மிகவும் பொருத்தமாகவே இருப்பதாகப் பட்டது!

‘ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பார்களே, அது போல எங்களூருக்கு இவர்தாம் ஒரே பல் டாக்டர். பல்லில் எந்தக் கோளாறு என்றாலும் இவரிடமே போக வேண்டிய கட்டாயம்.

அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, அப்பா அவரிடம் என்னை அழைத்துப் போனார். அரை மணி நேரம் என் பல்லைப் பல கோணங்களில் ஆராய்ந்தவர், முடிவில் அந்தத் துயரந் தரும் அறிவிப்பினை வெளியிட்டார்.

"உங்கள் பல் செத்துவிட்டது; அதனால் தான் அது கறுப்பாகி வருகிறது," என்பதுதான் அந்த அறிவிப்பு.

என் பல்லின் சாவுச் செய்தி கேட்டு நான் அதிர்ந்து போய் நிற்க, "உடனே சிகிச்சை செய்யாவிட்டால், பக்கத்துப் பற்களும் விரைவில் ஒவ்வொன்றாக உயிரை விட்டு, இப்பல்லைப் போல் கறுப்பாகி விடும்," என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

இச்செய்தி கேட்டு அப்பாவும் கலக்கமடைய, "பயப்படத் தேவையில்லை. தொடர்ச்சியா ஒருமாசம் என்கிட்ட சிகிச்சை எடுத்துக்கிட்டா, ஒங்க பெண்ணோட மத்தப் பற்களைச் சாவிலிருந்து என்னால காப்பாத்திட முடியும்; இந்தக் கறுப்புப் பல் மேலேயும் வெள்ளையா ஒரு கேப் போட்டுட்டா, பார்க்கிறவங்களுக்கு வித்தியாசமாத் தெரியாது " என்று உறுதியளித்தார்.

அத்தருணத்தில், என் பற்களை இரட்சிக்க வந்த தேவ தூதனாக, என் கண்களுக்கு அவர் காட்சியளித்தார்.

அன்று முதல் தினமும் அப்பாவுடன் அவரிடம் போய்ப் பல்லைக் காட்டிவிட்டு (சிகிச்சைக்குத்தாங்க!) மொய் அழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

ஈறுகளில் அவர் செய்த அறுவை சிகிச்சை காரணமாக, முகம் வீங்கி, கண், மூக்கு எல்லாம் வெளியில் தெரியாமல் ஒரு வாரம் புதையுண்டு போயின. ஒரு வாரங் கழித்து வீக்கம் முழுவதுமாக குறைந்த பிறகு, என் கறுப்புப் பல் வெள்ளையாவதற்கான சிகிச்சை துவக்கப்பட்டது.

அன்று என் பல்லை உடைக்க(!) அவர் எடுத்து வந்த சுத்தியல் வடிவ ஆயுதத்தைப் பார்த்துப் பயந்து விட்டேன்.

"பயப்படாதீங்க! உங்க ஒரிஜினல் பல்லை முழுசும் எடுத்துட்டு, வேற பல்லை வைச்சா அவ்வளவு உறுதியாயிருக்காது. அதனால அதைப் பாதியா ஒடச்சிட்டு, அது மேல ஒரு கேப் போட்டுடுவேன். அது உங்க ஒரிஜினல் பல் மாதிரியே ஸ்டிராங்காயிருக்கும்".

பல்லில் சுத்தியலை வைத்துத் தட்ட, விண் விண்ணென்று வலி உயிர் போனது.

"வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்தா பேசுற, பல்லை உடைச்சிடுவேன்," என்று அம்மா அடிக்கடி திட்டுவது ஞாபகத்துக்கு வந்தது!

பழங்காலத்தில் பல்லை உடைப்பது ஒரு தண்டனையாக இருந்திருக்குமோ?

ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் டாக்டரின் கையைப் பிடித்துத் தள்ளிவிட்டேன்.

"அது உயிரில்லாத பல்தானே? வலிக்காதே!" என்றார் டாக்டர் ஐயத்துடன்.

பக்கத்திலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பல்லைப் பார்த்தேன். 
கறுப்புப் பல்லின் பக்கத்துப் பல்லில் லேசாக கீறல் விழுந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

இவ்வளவு நேரம் உடைக்க வேண்டிய பல்லை விட்டுவிட்டுப் பக்கத்துப் பல்லை உடைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையறிந்து கோபமாக முறைத்தேன்.

"சாரி, கை தவறிப் பக்கத்துப் பல்லுல பட்டுடுச்சு போலேயிருக்கு" என்று நெளிந்தார் டாக்டர்.

ஒரு வழியாகப் பல்லைப் பாதியாகக் குறைத்தவர், பல் செட் ஒன்றை என் பல்லில் பொறுத்தி அளவெடுத்தார்.

"இன்னும் ஒரு வாரத்தில் கேப் ரெடியாயிடும். வந்து பொருத்திக்கலாம்"

எனக்கோ அளவிட முடியா மகிழ்ச்சி. இனிமேல் என் முக அழகை(?) இந்தக் கறுப்புப் பல் கெடுக்காது.

ஒரு வாரங் கழித்துப் பல்லைப் பொருத்தியவர், கண்ணாடியை என்னிடம் கொடுத்து, "இது எப்படி இருக்கு?" என்றார் ரஜினி ஸ்டைலில்.

கண்ணாடியில் பார்த்த போது, என் கறுப்புப் பல், இளஞ் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

"என்ன டாக்டர்? பல் வெள்ளையாயில்லாம, சிவப்பு கலர்ல இருக்கு?" என்றேன் ஏமாற்றம் கலந்த கோபத்துடன்.

"அதுவா? பல் ரொம்பவும் வெள்ளையாயிருந்தா பாக்கிறவங்களுக்கு 'ஆர்டிபிஷியல்'னு உடனே தெரிஞ்சிடும். 'நேச்சுரலா' தெரியணும்னா, கலர் இப்படித்தான் இருக்கணும்" என்று பல்லின் நிறத்துக்குப் புது விளக்கம் கொடுத்தார் டாக்டர். அந்த விளக்கத்தைக் கேட்டவுடன், அவரது வழுக்கை மண்டையில் ஒரே போடாகப் போடலாமா என ஆத்திரம் வந்தது.

இப்போது என்னைப் பார்ப்பவர்கள், "உங்கப் பல்லுல இரத்தம் வருது" என்று சொல்கிறார்கள்.

எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை, பொய்ப் பல், அதைப் பொருத்தக் கட்டணம் என்று ஆயிரக்கணக்கில் தண்டச் செலவு செய்து நொந்து போயிருந்த என்னை நினைத்து, என் கறுப்புப் பல் இரத்தக் கண்ணீர் சிந்துகிறதோ?

(படம் – நன்றி இணையம்)


22 comments:

  1. பல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கவேண்டியது அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. அனுபவமொன்றைக் கற்பனை கலந்து நகைச்சுவையாக எழுதிப் பார்த்ததன் விளைவே இப்பதிவு. உங்கள் முதல் கருத்துரைக்கு மிகவும் நன்றி முனைவர் ஐயா!

      Delete
  2. அலுப்பு பார்க்காமல் வேறு நல்ல டாக்டர்களை அணுகியிருக்கலாம்!..

    ReplyDelete
    Replies
    1. அக்காலத்தில் ஊரில் வேறு பல் டாக்டரே இல்லை. சோக நிகழ்வை நகைச்சுவையாக எழுத முடிகிறதா என்று முயன்றேன். ஆனால் என் பதிவில் நகைச்சுவையை விட சோகமே அதிகமாயிருக்கிறது என்று பின்னூட்டங்கள் மூலம் அறிகிறேன். உங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி துரை சார்!

      Delete
  3. சிறுவயது அனுபவம்தானே இது? இப்போது சரி செய்தாகி விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்ரீராம்! பின்னர் வேறு டாக்டரிடம் சரி செய்தாகிவிட்டது. இப்போது வருத்தம் ஏதுமில்லை. சோக அனுபவத்தை நகைச்சுவையாக எழுத வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு எழுதினேன். ஆனால் சோகமே மிஞ்சியிருக்கிறது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்!

      Delete
  4. கதையாகவே இருக்கட்டும்...!

    ReplyDelete
    Replies
    1. இது நிச்சயமாய் கதை இல்லை தனபாலன் சார்! ஆனால் உண்மை நிகழ்வோடு கற்பனையும் கலந்திருக்கிறது. ஆனால் இப்போது சோகம் ஏதுமில்லை. கருத்துரைக்கு மிகவும் நன்றி!

      Delete
  5. அட கடவுளே சிவப்பு கலரில போட்டிட்டு ரஜனி ஸ்டைலில வேற பார்க்கிறாரா ம்..ம் அவங்க பீசை பறித்து விடுவார்கள் அவங்க வேலை அதோடு முடிந்தது. ம்..ம் ஒண்டுக்கு இரண்டு டாக் டர்களிடம் காட்டவேண்டும் தான். நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வேறு டாக்டரிடம் காட்டிச் சரி செய்தாகிவிட்டது இனியா! விவரிப்பு சிரிப்பை வரவழைக்கவேண்டும் என்பதற்காகவே இதை முயன்றேன். கருத்துரைக்கு மிகவும் நன்றி இனியா!

      Delete
  6. சோக நிகழ்ச்சியை இவ்வளவு நகைச்சுவையோடு விவரிக்க எல்லாராலும் முடியாது .பாராட்டுகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. அப்பா! ஒருவழியாய் நகைச்சுவை என்று நீங்கள் எழுதியதைப் படித்து உண்மையிலேயே மகிழ்ந்தேன். நகைச்சுவையாக எழுத வேண்டும் என்ற என் முயற்சி ஓரளவுக்காவது வெற்றி பெற்றிருக்கிறது என்று உங்கள் பின்னூட்டத்தைப் படித்துத் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி!

      Delete
  7. இதுவரை நான் பார்த்த உங்களின் இதுவரையான நடையில் இருந்து வித்தியாசமான நடை!

    உண்மையான நிகழ்வா கற்பனையா என்று முடிவு செய்ய முடியாமல் தொடர்ந்தேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! வணக்கம். இதில் சொந்தக் கதையுடன் கொஞ்சம் கற்பனையும் கலந்து இருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன் எழுதியதால் நடை நிச்சயம் வித்தியாசமாய்த் தான் இருக்கும். எழுதத் துவங்கிய புதிதில் நகைச்சுவை கலந்து எழுத வேண்டும் என்று முயன்றதன் விளைவு இது. கருத்துரைக்கு மிகவும் நன்றி!

      Delete
  8. ஒரு சோக அனுபவத்தை நகைச்சுவையாய் எழுத முயன்றிருப்பதில் தங்களுக்கு வெற்றி என்றே சொல்வேன். பல் மருத்துவரின் தலைக்கு மாங்கொட்டையை ஒப்பிட்டு அம்மா அவருக்குப் பெயரிட்டது, பல்லின் சாவுச்செய்தி கேட்டு அதிர்ந்தது, பல்லை உடைக்கும்போது அம்மா திட்டியது நினைவுக்கு வந்தது, பல் இரத்தக்கண்ணீர் வடிப்பது என்று பல இடங்களிலும் வாசிக்கும்போதே முறுவல் எழுந்தது. பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததை விளக்கமாக எழுதியிருப்பதையறிந்து மகிழ்ந்தேன் 1 நகைச்சுவை ஓரளவுக்கு இருக்கிறது என்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. மிக்க நன்றி கீதா!

      Delete
  9. இது போன்ற மருத்ததுவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    தங்கள் அனுபவத்தை சிறப்பாக சிரிப்பாக தந்திருக்கிங்க கலை.
    நல்ல எழுத்து நடை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சசிகலா! நல்ல எழுத்து நடை என்ற பாராட்டுக்கு மீண்டும் நன்றி!

      Delete

  10. ஐயா வணக்கம்!

    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ஐயாவுக்கு வணக்கம். என் வலைப்பூவைச் சிறப்பான கவிதைவரிகளால் அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி.

      Delete
  11. சோக நிகழ்வை விதியாசமான கோணத்தில் அலசியவிதம் சிறப்பாக இருந்திச்சு.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பா இருந்திச்சு என்ற உங்கள் பாராட்டு கண்டு மனங்குளிர்ந்தேன். மிகவும் நன்றி தனிமரம்!

      Delete