நல்வரவு
வணக்கம் !
Tuesday, 26 June 2012
Saturday, 16 June 2012
புதைக்கப்படும் உண்மைகள் - சிறுகதை
அருண் பத்திரிக்கையில் எழுதிய அந்தச்செய்தி, சட்டசபை யிலிருந்து நாடாளுமன்றம் வரை ஒரு கலக்குக்
கலக்கியது.
இரண்டு வருடங்களாகப் 'புலன் விசாரணை' என்ற அந்தப் பத்திரிக்கையில் நிருபராகப் பணிபுரிந்தும்,
பெயர் சொல்லிக் கொள்ளும் படியாக ஒரு செய்தியும், அவனுக்குக் கிடைக்க வில்லை
அந்தச் சமயத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று ஒரு காலத்தில்(!) போற்றப்பட்ட
தஞ்சாவூர் மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு விரைந்தான்
அருண். அதைப் பற்றிச் சம்பந்தப்பட்டவர்கள் முதலில் சொல்லத்
தயங்கினாலும், பின் வேறு வழியின்றி உண்மையை ஒத்துக்
கொண்டனர்.
தேர்தல் நெருங்கும் நேரமாகையால், வெறும் வாயை மென்று கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு அவல்
கிடைத்து விட்டது. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள்
அந்தச் செய்தியை நிமிடத்திற்கொருமுறை கொட்டை எழுத்துக்களில் போட்டு, உலகளவில் பிரபலமான பொருளாதார
நிபுணர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்களது கருத்துக்களைக் கேட்டும், உள்ளூர் அளவில் வாக்குவாதம்
நடத்தியும் தமக்குப் பெரிய
அளவில் விளம்பரம் தேடிக் கொண்டன.
'வறுமையின் காரணமாக தன் குழந்தைகளைக் காப்பாற்ற வழியின்றிக் குடியானவன் ஒருவன் தன்
குழந்தை ஒன்றைப் பணத்துக்கு விற்றுவிட்டான்,' என்பதே அந்தச் செய்தி. பட்டினிச்சாவு எப்படி ஒரு நாட்டிற்கு அவமானமோ அதைப்
போலவே குழந்தையை விற்கும் இந்த நிகழ்வும், நாட்டிற்கு உலகளவில் பெருத்த அவமானத்தைத் தேடிக் கொடுத்து
விட்டது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
"காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் அரசு உரிய கவனத்தைச் செலுத்தவில்லை; நடுவர் குழுமம் பரிந்துரைத்ததண்ணீரின் அளவைக் கூட கர்நாடகத்திடமிருந்து பெறுவதில் அரசு அக்கறை காட்டவில்லை;
வழக்கம் போல் வானமும் பொய்த்து விட்டது; 'வான் பொய்ப்பினும், தான் பொய்யா மலைத்தனைய கடல் காவிரி' என்பதெல்லாம் இலக்கியத்தில் படித்த சங்கதியாகிவிட்டது.
அரும்பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லுக்கும் உரிய விலையை அரசு நிர்ணயம் செய்யத்
தவறிவிட்டது; தாராளமயமாக்கலின் விளைவுகள் கண்முன்னே தெரியத் துவங்கிவிட்டன; பன்னாட்டு வியாபாரம் காரணமாக
உள்ளூர் குடிசைத் தொழில்கள் நசிந்து விட்டன. வேளாண் மக்களின் பிரச்சினைகளை அரசு புறக்கணித்ததன்
விளைவு தான் இது; கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர அரசு
தவறிவிட்டது.
இத்தகைய காரணங்களால் தம் குழந்தைகளை விற்றுச் சாப்பிடும் நிலைக்குக் குடியான மக்கள்
தள்ளப்பட்டு விட்டனர். எனவே இதற்கான பொறுப்பை
ஏற்று தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும். தமிழக அரசின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும்
மத்திய அரசும் பதவி விலக வேண்டும்," என்று சொல்லி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்..
இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி உடனே தீர்க்கும் படியும், இல்லாவிடில் மத்திய அரசுக்குத்
தேர்தல் சமயத்தில் தர்ம சங்கடமான நிலைமை ஏற்படும் எனவும் பிரதம மந்திரி முதன் மந்திரிக்குத்
தம் அலைபேசி மூலம் தெரிவித்தார்
ஏற்கெனவே ஒரு முறை ஒரிசாவில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்ததையும், அதைச் சமயோசிதமாக காலரா போன்ற
புது வகை தொற்று நோய்(!) ஒன்றினால் இறந்ததாக அந்த மாநில அரசு செய்தியை மாற்றி வெளியிட்டு
நாட்டின் மானத்தைக் காப்பாற்றியதையும், தம் பேச்சினிடையே நினைவுகூர்ந்து அம் மாநில முதல்வருக்குப்
புகழாரம் சூட்டினார் பிரதமர்.
"ஒரிசா மாநில முதல்வருக்கு நானும் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல; இந்தப் பிரச்சினையில் உங்களுக்குத் தலைகுனிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு," என்று தம் பங்குக்கு உறுதி
கூறினார் தமிழக முதன்மந்திரி.
"இதுபற்றி நேரில் விசாரித்து உண்மையைச் சட்டசபையில் வெளியிடும் வரை எதிர்க்கட்சிகள்
அமைதி காக்க வேண்டும்," என்ற முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
மந்திரிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர் கொண்ட
குழுவொன்றைத் தாம் அமைத்திருப்பதாகவும், அந்தக் குழுவை அக்கிராமத்துக்கு நேரில் சென்று உண்மையை
விசாரித்து வருமாறு பணித்திருப்பதாயும் அவர் சொன்னதை ஏற்றுப் போராட்டத்தைத் தற்காலிகமாக
நிறுத்தி வைப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
அச்செய்தியைப் பற்றி விசாரிக்க முதல்வர் அனுப்பிய குழுவில், அதனை வெளியிட்ட பத்திரிக்கையின்
சார்பில் அருணும் இருந்தான்.
அன்று காலை வரிசை வரிசையாக கார்கள் அணிவகுத்து அக்குக்கிராமத்தை நோக்கிப் படையெடுத்தன.
புழுதியைக் கிளப்பிக் கொண்டும், ஆம்புலன்ஸ் சைரன் அடித்துக்கொண்டும் வந்த வாகனங்களைப் பார்த்து
அக்கிராம மக்கள் பயந்து விட்டனர். தேர்தல்
சமயத்தில் மட்டுமே வாக்கு கேட்க வரும் கார்கள், இப்போது வருவதன் காரணம் புரியாது மக்கள்
குழம்பினர்.
நாலாப்பக்கமும் சாக்கடைகள், அதில் புரண்டு விளையாடும் பன்றிகள், பக்கத்தில் குப்பைமேடு, குடலைப் புரட்டியெடுக்கும்
நாற்றம், குண்டுங்
குழியுமான மண் சாலைகள்.. ஒரு கட்டத்துக்கு மேல் கார் போக சாலை வசதியின்றி, எல்லோரும்
இறங்கி நடக்க வேண்டியதாயிற்று.
சாக்கடை நீர் தூய வெண்ணிற வேட்டியில் பட்டுவிடுமோ எனப் பயந்தவர்கள், அதனை மடித்து
மேலே தூக்கிக் கட்டிக்கொண்டு, சாக்கடையைத் தாண்டித் தாண்டி குதித்தவாறு பயணம் மேற்கொண்டனர்.
பார்ப்பவர்களுக்கு நீளம் தாண்டுதல் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார் களோ என நினைக்கத்
தக்கவாறு இருந்தது அந்தக் காட்சி.
ஏற்கெனவே குழந்தை விற்கப்பட்ட சம்பவம் குறித்து, அக்கிராம மக்கள் அறிந்திருந்தமையால்,
அக்குடிசையைக் கண்டுபிடிப்பதில் மந்திரி குழுவினர்க்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை.
"அவங்க எல்லோரும் ஒங்க வூட்டைத் தேடித்தான் வராங்கக்கா" என்று பக்கத்துத் தெரு
மாரியம்மா அவசரமாக ஓடி வந்து சொன்னதிலிருந்து அஞ்சலைக்குப் படபடப்பு அதிகரித்தது. ஏற்கெனவே
நோயால் அவதிப் பட்டுக்கொண்டிருந்த அவள் கணவன் முனியாண்டிக்கோ, பயம் காரணமாக மூச்சு விடுவதில்
சிரமம் ஏற்பட்டது.
ஒருவழியாக படாத கஷ்டங்கள் பட்டுக் குடிசையை அடைந்த மந்திரி குழுவினர் வந்ததும் வராததுமாக அஞ்சலையைக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்:-
"நீ தான் அந்தக் குழந்தையைப் பெத்தவளா?
நீயெல்லாம் ஒரு
அம்மாவா? குழந்தைக்குச் சாப்பாடு போட முடியாத
நீ, ஏன் குழந்தை பெத்துக்கிட்டே? பெறதுக்கு முன்னால அந்த அறிவு இருந்திருக்கணும். ஏன் உன் புருஷன் குத்துக்கல்லாட்டம் தானே இருக்கான்? அவன் போய் உழைச்சுச் சம்பாதிக்கிறதுக்கென்ன?
எதுக்கு வித்தே? குழந்தையை வித்தாவது அப்படி உயிர் வாழணுமா என்ன? அப்படியென்ன உயிர் மேல ஒனக்கு ஆசை?"
இந்தக் கேள்விகளில் இருந்த நக்கல் புரிந்து சிலர் ஏளனமாகச் சிரித்தனர்.
"கும்பிடறேனுங்க சாமி, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க
சாமி. நான் மட்டும் அன்னிக்குக் குழந்தையை
விக்காம இருந்திருந்தா, என் புருஷன் இன்னிக்கு உயிரோடயே இருந்திருக்க மாட்டாரு. கொளுத்து வேலை பாத்துக்கிட்டிருந்த அவரு ஒரு நாளு
நெஞ்சு வலி அதிகமாகி மயக்கம் போட்டுக் கீழே வுழுந்துட்டாருங்க. அரசாங்க ஆஸ்பத்திரியில
மாசக்கணக்கா வைச்சுப் பாத்தேனுங்க. அங்க அவருக்கு ஒரு வைத்தியமும் பண்ணலேங்க..
டாக்டரய்யாவைக் கேட்டேன். ”ஏற்கெனவே இவருக்கு முன்னாடி வந்தவங்க, நூத்துக்கணக்கான பேர் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் முடிஞ்ச
பொறகு தான் இவருக்கு ஆப்ரேஷன் பண்ணுவோம். சீக்கிரம் பண்ணனும்னா, தனியார் ஆஸ்பத்திரிக்குப்
போ,'ன்னு சொல்லி
சத்தம் போட்டாருங்க பெரிய டாக்டர்.
மாசக்கணக்கா இவரு வேலைக்குப் போகாததால வருமானம் சுத்தமா நின்னு போச்சு. நான் தான் நடவு வேலைக்குப் போய்க்கிட்டிருந்தேன். தண்ணியில்லாததால நிலத்தையெல்லாம் வித்துட்டுக் கிராமத்து
ஜனங்க டவுனுக்குப் பொழைப்புத் தேடி போக ஆரம்பிச்சிட்டாங்க. அதனால எனக்கு நடவு வேலையும்
தொடர்ந்து கிடைக்கலேங்கய்யா.
தனியார் ஆஸ்பத்திரின்னா, ஆயிரக்கணக்கா செலவாகுமே பணத்துக்கு என்னா பண்றதுன்னு யோசிச்சேன். என்னோட ஒன்னு விட்ட அண்ணன் வேலு கொஞ்சம் வசதியாயிருந்தாரு. அவருக்கிட்ட கடன் வாங்கித் தான் இவருக்கு வைத்தியம்
பண்ணினேனுங்க. அவருக்கிட்ட வாங்கின கடனை நாம எப்படி அடைக்கப் போறோம்னு கவலைப்பட்டுக்
கிட்டிருந்தப்பத் தான், ஒருநாளு அண்ணன் அந்த ரோசனையைச் சொன்னாரு.
"உனக்கு ஏற்கெனவே ரெண்டு பசங்க இருக்கானுங்க.
மூணாவதா பொட்டைப்புள்ளையை வேற பெத்து வைச்சிருக்கே. அதை வளர்த்து ஆளாக்கிப்
பவுன் போட்டு வரதட்சிணை கொடுத்து எப்படிக் கல்யாணம் பன்ணுவே? பசங்களுக்கு வயிறாறக் கஞ்சி ஊத்தவே உனக்கு வருமானம் இல்லே. மச்சானுக்கும் உடம்பு சொகமில்லே. பேசாம அந்தக் குழந்தையை என்கிட்ட
கொடுத்திடு. எனக்கும் கொழந்தையில்லே. என்
பொண்ணாட்டம் அருமை பெருமையா அதை வளர்ப்பேன்.
அதுக்குப் பதிலா நீ கொடுக்க வேண்டிய பணத்தை நான் தள்ளுபடி செஞ்சுடறேன்"
னு சொன்னாரு அவரு.
நானும் எங்க வூட்டுக்காரரும் ரோசிச்சுப் பாத்தப்ப, இது சரியான ரோசனையாப் பட்டுது, அந்தக் குழந்தை என்கிட்ட இருக்கிறதை விட அவருக்கிட்ட இருந்தா
நல்லா வளரும்னு தோணிச் சிங்கய்யா. நானும் கடன்லேந்து
வெளியே வந்துடுவேன். அதுக்காகத் தான் அவருக்கிட்ட
என் கொழந்தையைக் கொடுத்தேனுங்க. தப்பாயிருந்தா இந்தச் சிறுக்கியை மன்னிச்சிடுங்கய்யா. எனக்கு வேற வழி தெரியலீங்க" சொல்லிக் கொண்டே அங்கு நின்றிருந்தவர்கள் முன்பாக
நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து கதறினாள் அஞ்சலை.
"என்ன தான் கஷ்டம் இருந்தாலும், அதுக்காகப் பெத்த குழந்தையை வித்தது பெரிய தப்பு. நீ பண்ணுனகாரியத்தால எங்க அரசாங்கத்துக்கு எவ்ளோ கெட்ட பேர் தெரியுமா? சரி சரி. நடந்தது நடந்துட்டுது.
குழந்தையைத் திரும்பக் கொண்டாந்து கொடுக்கச் சொல்றேன். மறுபடி யார்கிட்டயாவது வித்தேன்னு தெரிஞ்சுதுன்னா, ஒன் புருஷனைப் புடிச்சு வெளியிலே வர முடியாதபடி உள்ளாற போடச்
சொல்லிடுவேன்," என்று மிரட்டினார் மந்திரி.
அவர் சொன்னதைக் கேட்ட அஞ்சலைக்குப் பயத்தில் மயக்கமே வந்துவிட்டது.
"அந்த ஆள் யாருன்னு விசாரிச்சு குழந்தையை வாங்கினதுக்குத் தண்டனையா 15 நாள் புடிச்சி உள்ளாற வை. அந்தக் குழந்தையைத் திருப்பி இந்தம்மாக்கிட்ட கொடுக்கிறதுக்கு
உடனே ஏற்பாடு பண்ணு,"
பக்கத்தில் நின்ற இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு மந்திரி கிளம்ப,
பரிவாரங்களும் அவரைப்
பின் தொடர்ந்தன.
மறுநாள்...
"அய்யா! நான் தப்பு ஏதும் பண்ணலைய்யா. என்னை விட்டுடுங்கய்யா. அந்தக் கொழந்தையை என் பெத்த குழந்தையா நினைச்சி
வளர்க்கிறேங்க. அது மேல என் உசிரையே வைச்சிருக்கேனுங்க. அதை என்கிட்டே யிருந்து பிரிச்சிடாதீங்கய்யா" அந்தச் சிறைக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு கதறிக்கொண்டிருந்தான்
வேலு.
அஞ்சலை கொடுத்த விளக்கம் அருணைத் தவிர வேறு யாரையும் பாதித்ததாகத் தெரியவில்லை.
வளர்க்க வழியின்றித் தான் அந்தத்தாய் குழந்தையை விற்கும் நிலைக்குப் போயிருக்கிறாள். இப்போது திரும்பவும் குழந்தையை அவளிடமே கொடுத்து
அவளை மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? அக்குடும்பத்துக்கு அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டாமா
என்பன போன்ற எண்ணங்கள் அவனை அலைக்கழித்தன.
இந்தச் செய்தியை அவசரப்பட்டு வெளியிட்டு அக்குடும்பத்துக்குத் துன்பத்தை மேலும்
அதிகரித்து விட்டோம் என்ற குற்றவுணர்வு அவனைத் தூங்க விடாமல் செய்தது.
அடுத்த வாரம், குழந்தை விற்கப்படவில்லையென்றும், வேலு என்பவன் பெற்றோரிடமிருந்து திருட்டுத் தனமாகக் கடத்திப்
போய் விட்டான் என்றும் அரசு நேரிடையாக களத்தில் இறங்கிக் குழந்தையை அவனிடமிருந்து மீட்டுப்
பெற்றோரிடமே திரும்பவும் ஒப்படைத்துப் பிரச்சினையைத் தீர்த்து விட்டது என்றும் சட்டசபையில்
பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தம் அறிக்கையை வாசித்தார் முதன் மந்திரி.
இச்செய்தி அருணுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. முதல்வரின் அறிக்கையை மறுத்து அஞ்சலை சொன்ன உண்மைக்
கதையை வெளியிட வேண்டும் என்றான் பத்திரிக்கை ஆசிரியரிடம்.
"இதைக் கண்டுக்காதே. அப்படியே இருந்துட்டுப்
போகட்டும், இதோட அந்தக் கொழந்தை விஷயத்தை மறந்திடு" என்றார் அவர் கண்டிப்புடன்.
தன்னுடன் பயணம் செய்த எதிர்க்கட்சி உறுப்பினரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.
"என்னய்யா? கடைசியில இப்படிச் சொல்லிட்டாங்க, ஆசிரியரை எதிர்த்துக்கிட்டு என்னால உண்மையை வெளியிட முடியலே. உங்களுக்குத் தான் உண்மை தெரியும்ல. நீங்க மறுப்பு அறிக்கை வெளியிடறதுக்கென்ன?"
என்னப்பா? புரியாத ஆளாயிருக்கியே. நம்மளோட எல்லா
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தான் வந்தாங்க.
எல்லாரும் சட்டசபையில அறிக்கை வாசிக்கிறப்ப அமைதியா இருக்கிறத வைச்சே உன்னால்
விஷயத்தைப் புரிஞ்சுக்க முடியலேன்னா, நீயெல்லாம் பத்திரிக்கை ஆபீசில இருந்து எப்படித்தான் குப்பை கொட்டப் போறியோ," என்று நக்கலடித்தார் அவர்.
அவனால் இச்செய்தியை ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. மேலும் வேறு எங்காவது வேலை தேடிக்கொள்ளுமாறு மறுநாளே
பத்திரிக்கை ஆசிரியர் அவனிடம் சொல்ல, வேலையை விட்டு அவனது சொந்த ஊருக்கு வந்து, மனதுக்குப் பிடித்த ஆசிரியர் பணியை மேற்கொண்டு ஓராண்டிற்கு
மேலாகிவிட்டது.
அஞ்சலையின் குடும்பம் தற்போது எத்தகைய நிலையில் இருக்கிறது. அந்தக் குழந்தை எப்படியிருக்கிறதுஎன்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட, அக்குழந்தைக்கு ஏதாவது உதவி
செய்யும் நோக்கத்தோடு அக்கிராமத்தை நோக்கித் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டான்
அருண்.
ஒன்றரை ஆண்டுகளில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது அக்கிராமம். எனவே யாரிடமும் விசாரிக்காமல் எளிதாக அக்குடிசையைக்
கண்டுபிடித்துவிட்டான்.
"அம்மா! அம்மா!"
ஐந்து நிமிடங்கள் கூப்பிட்டும் உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. வாசல் படல் ஒருக்களித்துச் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. குடிசையின் மேலிருந்த கீற்று, பல ஆண்டுகளுக்கு முன் வேயப்பட்டிருக்க வேண்டும் என்பது,
வெயிலிலும் மழையிலும்
அவை மடித்துப் போய் ஆங்காங்கே உளுத்துக் கொட்டியிருப்பதிலிருந்து அனுமானிக்க முடிந்தது.
ஒருக்களித்திருந்த படல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தான். மூலையில் ஓர் உருவம் முடங்கிக் கிடப்பது தெரிந்தது. அது யார் அஞ்சலையா? அல்லது அவளது கணவனா?
மீண்டும் உரத்துக் கூப்பிட்டான். உருவம்
கொஞ்சம் அசைந்து கொடுத்தது.
"ஆரு? கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல்
இருந்தது அந்தக் குரல்.
"நான் தான்."
"நாந்தான்னா ஆரு"
இருமிக் கொண்டே மெல்ல எழுந்து வந்தது அவ்வுருவம். அஞ்சலை தான்.
கண்கள் குழி விழுந்து எலும்புக் கூடாயிருந்தாள்.
‘என்னை அடையாளம் தெரியலீங்களா?
உங்கக் கொழந்தை விஷயமா,
ஒங்க வீட்டுக்கு வந்து
விசாரிச்சி... ‘
அருண் முடிக்கவில்லை.
"வாங்கய்யா. இப்ப எதுக்கு வந்தீங்க?
மறுபடியும் ஏதாவது எழுதி
என்னை உள்ளாறப் புடிச்சிப் போடவா? குழந்தையை வித்தேன்னு தெரிஞ்சவுடனே, கார் மேலே கார் போட்டுக்கிட்டு வந்து
ஆளாளுக்கு என்னையும் என் வூட்டுக்காரரையும் மிரட்டினீங்க.
அந்தக் கொழந்தையையும் சேர்த்து வைச்சிக்கிட்டுச் சோறு, தண்ணியில்லாம பரிதவிச்சேனே,
அப்ப எங்க போனீங்க
எல்லாரும்? யாருக்கு நாங்க என்னா கெடுதல் செஞ்சோம்? ஏழையாப் பொறந்தது எங்கக் குத்தமா? ஏன் எங்களை வாழவும் வுடாம, சாகவும் வுடாம இந்தப் பாடு
படுத்தறீங்க?"
கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக அவன் நெஞ்சில் விழுந்தன. இந்தக் குடும்பத்தின் இன்றைய நிலைமைக்குத் தெரிந்தோ
தெரியாமலோ தானும் ஒரு காரணம் என்ற எண்ணம் அவனை வதைத்தது.
"அம்மா, நான் இப்ப ஒரு பத்திரிக்கைக்காரனா வரலை.
ஒங்க நிலைமையப் பத்தி எழுதினப்போ, அதனால ஒங்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும்னு
நினைச்சித் தான் எழுதினேன். இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, ஒங்கக் கொழந்தையைப் பத்தி
எழுதியிருக்கவே மாட்டேன்.
சரி. அதை விடுங்க. ஒங்க வூட்டுக்காரர்
எங்க? அந்தக் கொழந்தை எப்படி இருக்குது? அத வளர்க்கிறதுக்கு நான்
ஏதாவது உதவி செய்யலாம்கிற நல்ல எண்ணத்தோடத் தான் இப்ப வந்திருக்கேன். என்னை நம்புங்க"
கனிவான வார்த்தைகள் அவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், தொண்டையைக் கனைத்துக் கொண்டு
பேசத் துவங்கினாள்:-
"என் வூட்டுக்காரர் வேலைக்குப் போயிருக்காரு.
அளவுக்கு மீறி உழைச்சதிலே எனக்குக் காசநோய் வந்திடுச்சி. இருமல் கொட்டிக்
கொலைக்குது. அதனால யார் வூட்டுக்கும் போயி
பத்துப் பாத்திரம் கூட என்னாலத் தேய்க்க முடியலே. பசங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா
படிப்பு வரலை. 'மாடு மேய்க்கிற பயலுங்க, ஏன் இங்க வந்து எங்க உயிரை
வாங்குறீங்க,'ன்னு வாத்தியார் ஒரு நாள் பிரம்பால நல்லா அடிச்சிட்டாராம். மறுநாள் இஸ்கூலுக்குப்
போகவே மாட்டோம்னு புடிவாதம் புடிச்சானுங்க ரெண்டு பயல்களும். அங்கப் போனா மத்தியானம் சோறு கிடைக்குமேன்னு நான் தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைச்சேன்.
அன்னிக்குப் போனவனுங்க தான். எங்க போனானுங்கன்னே
தெரியலே. பக்கத்து ஊரில ஒரு சினிமாக் கொட்டாயில
பெரியவனைப் பார்த்ததா ஒருத்தர் சொன்னாரு. என்னால அங்கப் போய்த் தேடிப் பார்க்கக் கூட
முடியலே. சரி. எங்கயாவது போயி நல்லா இருந்தாச்
சரின்னு மனசைத் தேத்திக்கிட்டேன்"
"சரி. அந்தக் கொழந்தை? அது எப்படி இருக்கு இப்போ?"
"அதுவா? வேலு அண்ணன்கிட்டேயிர்ந்து அதைப் புடிவாதமாப்
பிரிச்சு என்கிட்ட கொண்டு வந்து போலீசுகாரங்க கொடுத்தாங்க. அங்கேயிருந்திருந்தா என் புள்ளை நல்லாயிருந்திருக்கும். கொழு கொழுன்னு வந்த புள்ளைக்குக் கால் வயித்துக்குக்
கூட என்னால கஞ்சி ஊத்த முடியலே. கொழந்தை எலும்பு
தோலுமா
ஆயி, கண்ணுல
உயிரைத் தேக்கி வைச்சிக்கிட்டு நடமாடிக்கிட்டிருந்தது. அதுக்கப்புறம்....
அருணுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
”அதுக்கப்புறம்...?
அவசரமாகக் கேட்டான்.
"என்கிட்ட வந்த அஞ்சாம் மாசமே மஞ்சக்காமாலை வந்து அது செத்துப்போச்சு. யாரைக் குத்தம் சொல்லி என்னா பண்றது? விதி
முடிஞ்சிடுச்சி. அதுக்கு ஆயுசு அம்புட்டுதான்
தம்பி," என்றாள் அஞ்சலை விரக்தியுடன்,
எங்கோ தொலைதூரத்தை
வெறித்தபடி.
"உண்மையாலுமே மஞ்சக்காமாலை வந்து தான் செத்துச்சா? இல்ல......."
"ஏதேது. நீங்க கேட்கறதாப் பார்த்தா மறுபடியும் துப்பறிஞ்சு பத்திரிக்கையிலே எழுதப்
போறீங்களோன்னு பயமாயிருக்கு".
"சே! சே! என்னை நம்பினாச் சொல்லுங்கம்மா.
இல்லாட்டி வேணாம்".
"ஒங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன தம்பி? ஒங்களை நான் நம்பறேன். திங்கறதுக்குச் சோறு, தண்ணியில்லாம கொழந்தை துரும்பா இளைச்சுக்கிட்டே வந்து ஒரு நாள் செத்துப்போச்சி. இறந்த சேதி கேள்விப்பட்டவுடனே ரெண்டு போலிசுக்காரங்க
வந்தாங்க. என் மவளை வாழ விடாம, இப்படி அநியாயமாச் சாகடிச்சிட்டீங்களேன்னு
என் மாரிலேயேயும் தலையிலேயும் அடிச்சிக்கிட்டு அழுதேன்.
என்னைத் தனியா அழைச்சிட்டுப் போயி ஒம்மக பசி பட்டினியால இறந்ததுன்னு யாருக்கிட்டேயும்
மூச்சுவிடக் கூடாது. யாராவது கேட்டா,
மஞ்சக்காமாலை வந்து செத்துப் போச்சுன்னு சொல்லணும்னு
என்னை மிரட்டிட்டுப் போனாங்க. அதனால எல்லார்க்கிட்டேயும் இப்பிடித்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். தயவு செஞ்சு யார்க்கிட்டேயும்
இதப்பத்திச் சொல்லிடாதீங்க. ஒங்களுக்குப் புண்ணியமாப் போவும்."
கடுமையான இருமலுக்கிடையே மிரட்சியுடன் சுற்றுமுற்றும் ஒரு பார்வை பார்த்து
விட்டு, அவனுக்கு மட்டும் கேட்கும்
குரலில் சொன்னாள் அஞ்சலை:-
”என் கொழந்தையைக் குழியில போடும் போதே,
அது எப்பிடிச் செத்துச்சிங்கிற உண்மையையும் சேர்த்துப் போட்டுப் புதைச்சிட்டேன்
தம்பி”.
Tuesday, 5 June 2012
செயல் வீரன் - ஒரு நிமிடக் கதை
இன்னும் ஐம்பது ஆண்டுகளில் உலகளவில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்று எந்த நேரத்தில் படித்தேனோ தெரியவில்லை. அந்தக்கணம் முதல் நீரைச் சேமிக்க வேண்டும், துளிக்கூட விரயம் செய்யக் கூடாது என்ற எண்ணம் என்னுள் ஆழமாகப் பதிந்து விட்டது.
அளவுக்கதிகமாய்த் தண்ணீரைப் புழங்கும் மனைவியிடம் சிக்கனத்தின் அவசியத்தை வற்புறுத்தினேன்.
"ஏ அப்பா! அம்பது வருஷத்துக்கப்புறம் தானே? அதுக்குள்ளே நாமெல்லாம் போய்ச் சேர்ந்துடுவோம். இப்ப எதுக்கு அனாவசியமா அதப்பத்திக் கவலைப் படறீங்க? பேசாமப் போயி ஆக வேண்டிய வேலையைப் பாருங்க"
அவளது பதிலில் அலட்சியம் தெரிந்தது.
குளிக்கிறேன் என்ற பெயரில் மணிக்கணக்காக 'ஷவரில்' நின்று கொண்டு அட்டகாசம் செய்யும் எட்டாம் வகுப்பு படிக்கும் பையனைக் கடிந்து கொண்டேன்.
"நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கப்பா. நாம அனுப்பின சந்திராயன், நிலாவில தண்ணியிருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காம். நாங்கள்லாம் நிலாவில போய்க் குடியேறிடுவோம்" என்றான் பையன், என் கோபத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல்.
ஒரு வாளித்தண்ணீரில் கையை விட்டுக் கழுவிய மகளை,"குவளையில மொண்டு கழுவினா என்ன? ஒரு வாளித் தண்ணியையும் வீணாக்கிட்டியே" என்று சொல்லி லேசாக ஒரு தட்டுத் தட்டினேன். அவ்வளவு தான். அது தான் சாக்கு என்று பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அழுது கொண்டு அடம் பிடித்தாள் அவள்.
"உதவி செய்ய வாணாம்; உபத்திரவமாவது பண்ணாம இருக்கலாம்ல?" என்ற முணுமுணுப்புடன் என்னைப் பார்த்து முறைத்துவிட்டு பெண்ணைச் சமாதானம் செய்து பள்ளிக்கனுப்பும் வேலையில் ஈடுபட்டாள் மனைவி.
வீட்டில் தான் இப்படியென்றால் அலுவலகத்திலோ கேட்கவே வேண்டாம். கழிப்பறை பைப்பைச் சரியாக மூடாமல் வருவதால் தண்ணீர் வீணாக வழிந்து கொண்டிருப்பதைப் பற்றி சக ஊழியரிடம் பேசத் துவங்கினால் போதும்.
"அய்யய்யோ! இன்னிக்கு நான் மாட்டிக்கிட்டேனா? ஒனக்குப் புண்ணியமாப் போகும். என்னை விட்டுடுப்பா" என்று என்னைப் பார்த்து பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். அவசரத் தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாகச் சொல்லி நழுவுவர் சிலர்.
"சரியான தண்ணி கிறுக்கு!" என்று என் முதுகுக்குப் பின்னால் அவர்கள் பேசிச் சிரிப்பதையறிந்த போது மனது வலித்தது.
என்ன மனிதர்கள் இவர்கள்? வாழ்வாதாரமாகிய நீரை நம் சந்ததிக்குச் சேமிக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறா? ஏன் ஒருவர் கூட என் கருத்துக்குச் செவிமடுக்க மறுக்கிறார்கள்? யாருடைய உதவியும் இன்றி என்னால் மட்டும் நீரை எப்படிச் சேமிக்க முடியும்?
இதே சிந்தனையால் பல நாட்கள் தூக்கம் வராமல் அவதிப்பட்டேன், கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் வரை.
அது ஓர் அழகிய கிராமம். அக்கிராமம் முழுக்க வெண்மை நிறத்தில் சிறு சிறு பூக்களைக் கொண்ட செடிகள் ஏராளமாக வளர்ந்து கிடந்தன. நான் போகும் வழியில் முதியவர் ஒருவர் அச்செடிகளை மண்வெட்டி மூலம் வேரோடு பிடுங்குவதும், பின் அவற்றைச் சேகரித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பதுமாகயிருந்தார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அவரை அணுகி அவர் செய்கையைப் பற்றி வினவினேன்.
"தாத்தா! நானும் ரொம்ப நேரமாக் கவனிச்சிக்கிட்டிருக்கேன். கொளுத்துற வெயிலில கால்ல செருப்பு கூடப் போடாம என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? புல் பூண்டு புடுங்க இதுவா நேரம்?"
"இதுவா? . இது சாதாரண புல் பூண்டில்லை தம்பி. பார்த்தீனியம்னு பேர் கொண்ட விஷச் செடி. வெளியூர்லேயிருந்து யார் மூலமாவோ இது இங்க வந்து கிராம முழுக்கப் பரவ ஆரம்பிச்சிட்டுது. ஒரு காத்து அடிச்சாப் போதும். இந்தப் பூவில இருக்கிற இழையெல்லாம் பறந்து போயி எல்லா இடத்திலேயும் விழுந்து மொளைக்க ஆரம்பிச்சிடும். இது மனுஷாளு மேல பட்டா தோல் வியாதி, அலர்ஜியெல்லாம் வருமாம். ஆடு மாடுங்க இதைத் தின்னா மலட்டுத் தன்மை வந்திடுமாம். இதை வெட்டிக் குழி தோண்டி புதைச்சா மொளைக்க ஆரம்பிச்சிடும்னு தான் மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிக்கிட்டிருக்கேன்."
"சரி தாத்தா! இந்தக் கிராமம் பூரா இந்தச் செடி பரவிக் கிடக்குது. இதைப் பத்தி இங்குள்ள ஜனங்க எல்லாருக்கும் தெரியும் தானே? மத்தவங்க யாருக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன்? யாருமே உதவிக்கு வராம, இந்தத் தள்ளாத வயசில உங்களால மட்டும் எத்தனை செடியைப் புடுங்கிட முடியும்?"
"மத்தவங்க செய்றாங்க, செய்யலை. அதப்பத்தி எனக்குக் கவலையில்லை தம்பி. வெறும் பார்வையாளனா இருக்க நான் விரும்பலை. செயல் வீரனா இருக்கணும்னு ஆசைப்படறேன். என் ஆயுசு முடியறதுக்குள்ளே என்னால முடிஞ்ச மட்டும் இந்த விஷச் செடிகளை ஒழிச்சி இந்த மண்ணைக் காப்பாத்துவேன் தம்பி" உற்சாகம் ததும்ப பதிலிறுத்தார் கிழவர்.
அம்முதியவரின் பதில் எனக்குப் புது தெம்பையும் உற்சாகத்தையும் அளித்தது. அன்று முதல் வெறும் பார்வையாளனாய் இல்லாமல் என்னால் முடிந்த வரை நீரைச் சேமிக்கும் செயல்களில் இறங்கத் தீர்மானித்து விட்டேன்.
உபதேசம்? - போயே போச்சு!
அளவுக்கதிகமாய்த் தண்ணீரைப் புழங்கும் மனைவியிடம் சிக்கனத்தின் அவசியத்தை வற்புறுத்தினேன்.
"ஏ அப்பா! அம்பது வருஷத்துக்கப்புறம் தானே? அதுக்குள்ளே நாமெல்லாம் போய்ச் சேர்ந்துடுவோம். இப்ப எதுக்கு அனாவசியமா அதப்பத்திக் கவலைப் படறீங்க? பேசாமப் போயி ஆக வேண்டிய வேலையைப் பாருங்க"
அவளது பதிலில் அலட்சியம் தெரிந்தது.
குளிக்கிறேன் என்ற பெயரில் மணிக்கணக்காக 'ஷவரில்' நின்று கொண்டு அட்டகாசம் செய்யும் எட்டாம் வகுப்பு படிக்கும் பையனைக் கடிந்து கொண்டேன்.
"நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கப்பா. நாம அனுப்பின சந்திராயன், நிலாவில தண்ணியிருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காம். நாங்கள்லாம் நிலாவில போய்க் குடியேறிடுவோம்" என்றான் பையன், என் கோபத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல்.
ஒரு வாளித்தண்ணீரில் கையை விட்டுக் கழுவிய மகளை,"குவளையில மொண்டு கழுவினா என்ன? ஒரு வாளித் தண்ணியையும் வீணாக்கிட்டியே" என்று சொல்லி லேசாக ஒரு தட்டுத் தட்டினேன். அவ்வளவு தான். அது தான் சாக்கு என்று பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அழுது கொண்டு அடம் பிடித்தாள் அவள்.
"உதவி செய்ய வாணாம்; உபத்திரவமாவது பண்ணாம இருக்கலாம்ல?" என்ற முணுமுணுப்புடன் என்னைப் பார்த்து முறைத்துவிட்டு பெண்ணைச் சமாதானம் செய்து பள்ளிக்கனுப்பும் வேலையில் ஈடுபட்டாள் மனைவி.
வீட்டில் தான் இப்படியென்றால் அலுவலகத்திலோ கேட்கவே வேண்டாம். கழிப்பறை பைப்பைச் சரியாக மூடாமல் வருவதால் தண்ணீர் வீணாக வழிந்து கொண்டிருப்பதைப் பற்றி சக ஊழியரிடம் பேசத் துவங்கினால் போதும்.
"அய்யய்யோ! இன்னிக்கு நான் மாட்டிக்கிட்டேனா? ஒனக்குப் புண்ணியமாப் போகும். என்னை விட்டுடுப்பா" என்று என்னைப் பார்த்து பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். அவசரத் தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாகச் சொல்லி நழுவுவர் சிலர்.
"சரியான தண்ணி கிறுக்கு!" என்று என் முதுகுக்குப் பின்னால் அவர்கள் பேசிச் சிரிப்பதையறிந்த போது மனது வலித்தது.
என்ன மனிதர்கள் இவர்கள்? வாழ்வாதாரமாகிய நீரை நம் சந்ததிக்குச் சேமிக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறா? ஏன் ஒருவர் கூட என் கருத்துக்குச் செவிமடுக்க மறுக்கிறார்கள்? யாருடைய உதவியும் இன்றி என்னால் மட்டும் நீரை எப்படிச் சேமிக்க முடியும்?
இதே சிந்தனையால் பல நாட்கள் தூக்கம் வராமல் அவதிப்பட்டேன், கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் வரை.
அது ஓர் அழகிய கிராமம். அக்கிராமம் முழுக்க வெண்மை நிறத்தில் சிறு சிறு பூக்களைக் கொண்ட செடிகள் ஏராளமாக வளர்ந்து கிடந்தன. நான் போகும் வழியில் முதியவர் ஒருவர் அச்செடிகளை மண்வெட்டி மூலம் வேரோடு பிடுங்குவதும், பின் அவற்றைச் சேகரித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பதுமாகயிருந்தார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அவரை அணுகி அவர் செய்கையைப் பற்றி வினவினேன்.
"தாத்தா! நானும் ரொம்ப நேரமாக் கவனிச்சிக்கிட்டிருக்கேன். கொளுத்துற வெயிலில கால்ல செருப்பு கூடப் போடாம என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? புல் பூண்டு புடுங்க இதுவா நேரம்?"
"இதுவா? . இது சாதாரண புல் பூண்டில்லை தம்பி. பார்த்தீனியம்னு பேர் கொண்ட விஷச் செடி. வெளியூர்லேயிருந்து யார் மூலமாவோ இது இங்க வந்து கிராம முழுக்கப் பரவ ஆரம்பிச்சிட்டுது. ஒரு காத்து அடிச்சாப் போதும். இந்தப் பூவில இருக்கிற இழையெல்லாம் பறந்து போயி எல்லா இடத்திலேயும் விழுந்து மொளைக்க ஆரம்பிச்சிடும். இது மனுஷாளு மேல பட்டா தோல் வியாதி, அலர்ஜியெல்லாம் வருமாம். ஆடு மாடுங்க இதைத் தின்னா மலட்டுத் தன்மை வந்திடுமாம். இதை வெட்டிக் குழி தோண்டி புதைச்சா மொளைக்க ஆரம்பிச்சிடும்னு தான் மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிக்கிட்டிருக்கேன்."
"சரி தாத்தா! இந்தக் கிராமம் பூரா இந்தச் செடி பரவிக் கிடக்குது. இதைப் பத்தி இங்குள்ள ஜனங்க எல்லாருக்கும் தெரியும் தானே? மத்தவங்க யாருக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன்? யாருமே உதவிக்கு வராம, இந்தத் தள்ளாத வயசில உங்களால மட்டும் எத்தனை செடியைப் புடுங்கிட முடியும்?"
"மத்தவங்க செய்றாங்க, செய்யலை. அதப்பத்தி எனக்குக் கவலையில்லை தம்பி. வெறும் பார்வையாளனா இருக்க நான் விரும்பலை. செயல் வீரனா இருக்கணும்னு ஆசைப்படறேன். என் ஆயுசு முடியறதுக்குள்ளே என்னால முடிஞ்ச மட்டும் இந்த விஷச் செடிகளை ஒழிச்சி இந்த மண்ணைக் காப்பாத்துவேன் தம்பி" உற்சாகம் ததும்ப பதிலிறுத்தார் கிழவர்.
அம்முதியவரின் பதில் எனக்குப் புது தெம்பையும் உற்சாகத்தையும் அளித்தது. அன்று முதல் வெறும் பார்வையாளனாய் இல்லாமல் என்னால் முடிந்த வரை நீரைச் சேமிக்கும் செயல்களில் இறங்கத் தீர்மானித்து விட்டேன்.
உபதேசம்? - போயே போச்சு!
Monday, 28 May 2012
’முல்லைக் கொடியும் நானும்’
அணைக்கப்பட்டு விட்டன விளக்குகள்...
படுத்தவுடன் குறட்டை விடும் மனைவியைப்
படு ஏக்கத்தோடு பார்க்கிறேன்.
நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்,
விடியுமட்டும் கொட்ட கொட்ட
விழித்துக் கொண்டு புலம்புவதற்கு?
பகலில் நல்ல பிள்ளையாகத்
தூங்கும் என் மனக்குரங்கு
இரவு வந்தவுடன் கும்மாளத்துடன்
துவங்கிவிடுகிறது தன் சேட்டையை!.
துன்பம் வந்த வேளையில்
சொல்லிக் கொள்ளாமல்
ஓடி விட்ட உறவுகள்.....
கண்ணோடு கண் மூட வழியின்றிப்
என்னைப் பாடாய்ப் படுத்தும் நோய்..
இனி நான் உயிர் வாழ்வதால்
யாருக்கு என்ன லாபம்?.
உயிரோடு இருக்கக் கூடாது இனி நான்....
உடனே முடித்துக் கொள்ள வேண்டும்
என் வாழ்வை!
இவ்வெண்ணம் என்னுள்
கருக்கொண்ட அடுத்த கணம்
சுழலும் மின்விசிறியை
வெறித்து நோக்குகிறேன்
மல்லாக்கப் படுத்தபடி.
’எழுந்து உடனே வா’ என என்னை
அழைப்பது போல் ஒரு பிரமை!
மெல்ல எழுந்து, சத்தமின்றித்
திறந்திருக்கும் சாளரங்களை
மூட முயல்கையில்,
கண்ணில் பட்டது
அந்த முல்லைக் கொடி!
அட!
சில மாதங்களாய்
தண்ணீரே இல்லாமல்
கருகிக் கிடந்த வேரிலிருந்து
பச்சைப் பசேலென்று
புத்தம் புது துளிர்!
ஜன்னலுக்குள் தலையை நீட்டி
மின்விசிறியின் காற்றில்
அலைபாய்ந்த அக்கொடி,
”பாரி போல் எனக்கு நீ
தேரெல்லாம் தர வேண்டாம்;
சுற்றிப் படர சிறுகுச்சி கூடவா
கொடுக்கக் கூடாது?” என்று கேட்கிறது!
அக்கணம்....
நான் புதிதாய்ப் பிறந்தது போல்
ஓர் உணர்வு!
அழிந்து போனதாக நமக்குத் தோன்றுபவை
முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை......
பூண்டோடு வேரறுத்து விட்டதாகத்
தலையிலடித்துச் சத்தியம் செய்தாலும்
சாம்பலிலிருந்து உயிர் பெற்றெழுந்து
சரித்திரம் படைப்பான், நம் காவிய நாயகன்!
நம் துன்பங்களனைத்தும் ஒருநாள் நீங்கும்.
கடும் பனிக்காலம் கடந்த பின்
வசந்த காலம் வந்தே தீரும்,
அதுவே இயற்கையின் நியதி!
அதுவரை நானும் காத்திருப்பேன்
நம்பிக்கையோடு,
வான் மழைக்குக் காத்திருந்து
தன்னை உயிர்ப்பித்துக் கொண்ட
இந்த முல்லைக் கொடியைப் போல!
நட்ட நடு இரவில்
நடுங்கும் குளிரில்
முல்லைக் கொடிக்குக்
கொழுக்கொம்பு நடும் என்னை
விழி மலர்த்தி அதிசயமாகப்
பார்க்கிறாள் என் மனைவி!
படு ஏக்கத்தோடு பார்க்கிறேன்.
நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்,
விடியுமட்டும் கொட்ட கொட்ட
விழித்துக் கொண்டு புலம்புவதற்கு?
பகலில் நல்ல பிள்ளையாகத்
தூங்கும் என் மனக்குரங்கு
இரவு வந்தவுடன் கும்மாளத்துடன்
துவங்கிவிடுகிறது தன் சேட்டையை!.
துன்பம் வந்த வேளையில்
சொல்லிக் கொள்ளாமல்
ஓடி விட்ட உறவுகள்.....
கண்ணோடு கண் மூட வழியின்றிப்
என்னைப் பாடாய்ப் படுத்தும் நோய்..
இனி நான் உயிர் வாழ்வதால்
யாருக்கு என்ன லாபம்?.
உயிரோடு இருக்கக் கூடாது இனி நான்....
உடனே முடித்துக் கொள்ள வேண்டும்
என் வாழ்வை!
இவ்வெண்ணம் என்னுள்
கருக்கொண்ட அடுத்த கணம்
சுழலும் மின்விசிறியை
வெறித்து நோக்குகிறேன்
மல்லாக்கப் படுத்தபடி.
’எழுந்து உடனே வா’ என என்னை
அழைப்பது போல் ஒரு பிரமை!
மெல்ல எழுந்து, சத்தமின்றித்
திறந்திருக்கும் சாளரங்களை
மூட முயல்கையில்,
கண்ணில் பட்டது
அந்த முல்லைக் கொடி!
அட!
சில மாதங்களாய்
தண்ணீரே இல்லாமல்
கருகிக் கிடந்த வேரிலிருந்து
பச்சைப் பசேலென்று
புத்தம் புது துளிர்!
ஜன்னலுக்குள் தலையை நீட்டி
மின்விசிறியின் காற்றில்
அலைபாய்ந்த அக்கொடி,
”பாரி போல் எனக்கு நீ
தேரெல்லாம் தர வேண்டாம்;
சுற்றிப் படர சிறுகுச்சி கூடவா
கொடுக்கக் கூடாது?” என்று கேட்கிறது!
அக்கணம்....
நான் புதிதாய்ப் பிறந்தது போல்
ஓர் உணர்வு!
அழிந்து போனதாக நமக்குத் தோன்றுபவை
முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை......
பூண்டோடு வேரறுத்து விட்டதாகத்
தலையிலடித்துச் சத்தியம் செய்தாலும்
சாம்பலிலிருந்து உயிர் பெற்றெழுந்து
சரித்திரம் படைப்பான், நம் காவிய நாயகன்!
நம் துன்பங்களனைத்தும் ஒருநாள் நீங்கும்.
கடும் பனிக்காலம் கடந்த பின்
வசந்த காலம் வந்தே தீரும்,
அதுவே இயற்கையின் நியதி!
அதுவரை நானும் காத்திருப்பேன்
நம்பிக்கையோடு,
வான் மழைக்குக் காத்திருந்து
தன்னை உயிர்ப்பித்துக் கொண்ட
இந்த முல்லைக் கொடியைப் போல!
நட்ட நடு இரவில்
நடுங்கும் குளிரில்
முல்லைக் கொடிக்குக்
கொழுக்கொம்பு நடும் என்னை
விழி மலர்த்தி அதிசயமாகப்
பார்க்கிறாள் என் மனைவி!
Monday, 21 May 2012
அம்மாவின் ஆசை
எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. நான் கார் வாங்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அம்மாவின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி விட்டேன் இந்த ஒன்றைத் தவிர.
கார் வாங்கினால் யானையைக் கட்டித் தீனி போடுகிற மாதிரி என்று கார் வாங்கிய நண்பன் ஒருவன் சொன்னதிலிருந்து கார் வாங்கப் பயம். மேலும் என்னொருவன் சம்பளத்தில் பையன்களைப் படிக்க வைக்க வேண்டும். நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் எகிறிப் பாயும் விலைவாசியில் குடும்பச் செலவுகளைக் கவனிக்க வேண்டும். அம்மாவின் மருத்துவச்செலவு, வீட்டுக் கடனுக்கு வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை எனச் செலவுப் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல, என்னால் கார் வாங்குவதைப் பற்றிக்
கற்பனை கூடச் செய்யமுடியவில்லை.
ஒரு வழியாகப் பையன்கள் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குச் சேரும் தருவாயில் தான் அம்மாவின் இந்த ஆசையைப் பற்றி நான் யோசிக்கத் துவங்கினேன். எல்லோரும் சேர்ந்து வெளியில் சென்று
வர கார் இருந்தால் தான் நல்லது எனக் குடும்பத்தினர் அனைவரும் நச்சரிக்கத் துவங்க சரியென்று தலையாட்டி வைத்தேன்.
மேலும் என் கம்பெனியிலும் பெட்ரோல் செலவுக்கு மாதா மாதம் தனியே 'அலவன்ஸ்' தருவதாகச் சொல்லவே மகிழ்ச்சியாகச் சம்மதம் தெரிவித்தேன். அடுத்து என்ன கார் வாங்குவது என ஒரு பட்டிமன்றமே நடந்தது வீட்டில். ஆளாளுக்கு ஒரு காரைச் சிபாரிசு செய்தனர்.
"அம்பாசிடர் கார் தான் தேவலை; அப்போ தான் நாமெல்லாரும் தாராளமா உட்கார்ந்து போக முடியும்," என்ற மனைவியின் யோசனை சரியென்றே பட்டது எனக்கு. ஆனால் சின்னவன் ஒத்துக் கொள்ளவில்லை.
"அந்தக் காரை வாங்குவதாயிருந்தால் நீங்க காரே வாங்க வேணாம்," என்றான் கோபத்துடன்."போர்டு கார் சூப்பராயிருக்கும். எல்லாமே ஆட்டோமாடிக். அதைத் தான் வாங்கணும்," என்றான் அவன்.
"வெளிநாட்டுக் கார் வேணாம்பா. நம்ம நாட்டுக் கம்பெனி கார் மாடல்களாப் பார்த்து அதுல ஒன்னு வாங்கலாம்பா," என்ற பெரியவனின் யோசனை ஏற்கப்பட்டு, அதன்படியே ஒரு காரும் வாங்கியாகிவிட்டது.
அம்மாவைக் காரில் அழைத்துக் கொண்டு பக்கத்தில் எங்காவது சென்று வர வேண்டும்; சொந்தக்காரில் பயணம் செய்யும் போது அம்மாவுக்கு ஏற்படும் மகிழ்ச்சியைக் கண்டு ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் கேட்டேன்:-
"அம்மா! முதன் முதலா இன்னிக்குச் சாயந்திரம் நம்மூர் பிள்ளையார் கோவிலுக்குப் போயிட்டு அப்படியே திருநள்ளாறு கோவிலுக்குக் காரில போய்ட்டு வரலாம். வரீங்களாம்மா?"
"வேணாம்பா. நான் வரலை. நீங்கள்லாம் போய்ட்டு வாங்க. அடுத்த வாரம் உங்க அத்தையோட பேத்தி கல்யாணம் திருச்சியில நடக்குதில்லே. அதுக்கு நாமெல்லாரும் சேர்ந்து காரில போய்ட்டு வருவோம்".
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. காரையிலிருந்து திருச்சிக்குக் குறைந்தது நான்கு மணி நேரப் பயணம். மேலும் தற்சமயம் புதிதாகச் சாலை போடும் பணி வேறு நடைபெற்று வருவதால் தஞ்சையிலிருந்து திருச்சி வரை தூக்கித் தூக்கிப் போட்டுப் பயணம் செய்வதற்குள் நல்ல உடல்நிலையில் இருப்பவர்க்கே இடுப்பு கழன்று விடும். அம்மாவின் உடம்பு இந்தப் பயணத்தைத் தாங்குவது கடினம் என்று தோன்றியது.
"அதல்லாம் வேணாம்மா. அவ்ளோ தூரம் போறது ஆபத்து. உங்க உடம்புக்கு ஒத்துக்காது. அதுவுமில்லாம போன வருஷம் தான் அத்தையோட பேரன் கல்யாணத்துக்கு நான் போயிட்டு வந்திருக்கேன். இந்தத் தடவை
நானும் போறதா இல்லே. மொய் பணத்துக்கு ஒரு D.D. எடுத்து தபாலில அனுப்பிடலாம்னு இருக்கேன்" என்றேன் தீர்மானமாக.
ஆனால் அம்மா விடுவதாய் இல்லை.
"இல்லப்பா. நான் போயே ஆகணும். சொந்தக்காரங்க எல்லாரையும் பார்த்து எவ்ளோ வருஷமாச்சி. அவங்க எல்லாரையும் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு. இந்த ஒரு தடவை மட்டும் மாட்டேன்னு சொல்லாம என்னை அழைச்சிட்டுப் போப்பா. எனக்கு ஒன்னும் ஆகாது. கவலைப்படாதே. என் பேரனுங்க கல்யாணத்தைப் பார்த்துட்டுத் தான் நான் சாவேன்"
என் கைகளைப் பிடித்துக் கெஞ்சிய அம்மாவைப் பார்க்க எனக்கு வியப்பாயிருந்தது. அவரது கோரிக்கைக்கு இணங்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போனது.
ஊருக்குக் கிளம்பும் நாளன்று சின்னக் குழந்தையின் உற்சாகத்துடன் எல்லாருக்கும் முன்னதாக எழுந்து வெந்நீர் போட்டுத் தலைக்குக் குளித்து விட்டுப் பட்டுப்புடவை உடுத்தி ஞாபகமாய் தம் இரட்டை வடச் சங்கிலியை எடுத்துப் போட்டுக் கொண்டு காரில் வந்தமர்ந்த அம்மாவைப் பார்த்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
நேற்று வரை நான் பார்த்த நோயாளி அம்மாவா இவர்? தலைமுடியைக் கூட சீவமுடியாமல் முக்கிக் கொண்டும் முனகிக் கொண்டும் படுத்துக் கிடந்தவர், உறவுகளைப் பார்க்கப் போகிற மகிழ்ச்சியில் நான் சின்னப்பிள்ளையில் பார்த்த பழைய அம்மாவாக உருமாறி விட்டாரா என்ன?
மனைவியை முன் சீட்டில் அமரச் சொல்லிவிட்டு பின் சீட்டில் அம்மாவை என் மடியில் படுக்கச் சொல்லிப் பயணம் செய்து ஊர் வந்து சேர்ந்தோம்.
பல வருடங்களாகப் பார்க்காமலிருந்த தம் உறவுகளைப் பார்த்த போது அம்மாவுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடிற்று. அம்மாவைப் பார்த்தச் சொந்தக்காரர்களும் அவர் மேல் அன்பு மழையைப் பொழிந்தனர்.
"வாங்க அத்தாச்சி! எப்படி இருந்த நீங்க இப்படி துரும்பா இளைச்சிப் போயிட்டீங்க? ஒங்களுக்கு ஒடம்பு சொகமில்லேன்னு கேள்விப்பட்டு மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிடுச்சி! வந்து பார்க்கணும்னு தான் ஆசை.
இந்தப் பாவிக்குத் தான் வர முடியல. இது யாரு? ஒங்க மவனா? சின்னப்
பையனா இருந்தப்பப் பார்த்தது. அவங்கப்பாவை அப்படியே உரிச்சி வைச்சிருக்கே! அவங்கப்பாவைத் தான் சீக்கிரமா ஆண்டவன் கொண்டு போயிட்டான். அவர் ஆயுசையும் சேர்த்து ஆண்டவன் இவருக்கு
நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்."
திருமணத்துக்கு வந்திருந்த யார் யாரிடமோ அம்மா என்னை அழைத்துப் போய் அறிமுகம் செய்தார்.
"தம்பி! இவர் யாரு தெரியுமா? ஒங்கச் சித்தப்பாவோட, தங்கச்சியோட, நாத்தனாரோட கொழுந்தனார் .பையன்."
எனக்குத் தலை சுற்றியது. நல்லவேளையாக அம்மா அத்துடன் நிறுத்திக் கொண்டார். 'அப்படியானால் உனக்கு அவர் என்ன முறை வேண்டும்?' என்று கேள்வி கேட்டிருந்தால் என் கதி அம்பேல் ஆகியிருக்கும். அவர் சொன்ன உறவு முறை புரிந்தது போல் வேக வேகமாகத் தலையாட்டி வைத்தேன். அந்த உறவுக்காரரும் என் நிலையிலேயே இருந்தார் என்பது அவர் திரு திரு என்று விழிப்பதிலேயே கண்டு கொள்ள முடிந்தது.
"இவன் என் பையன். பெரிய கம்பெனியில மேனேஜரா இருக்கான். லட்சம் லட்சமா சம்பாதிக்கிறான். இப்ப ஏழு லட்சம் போட்டு எனக்காகவே கார் வாங்கியிருக்கான். வாசல்ல படகு மாதிரி தெருவை அடைச்சிக்கிட்டு நிக்குதே, அது இவனோட கார் தான்"
பேசிய அத்தனை உறவுகளிடமும் அம்மா என்னைக் கூப்பிட்டு அறிமுகம் செய்து வைத்தார். பேச்சினூடே என் காரையும் பற்றிச் சொல்ல மறக்கவில்லை. எனக்குத் தர்ம சங்கடமாயிருந்தது.
சத்தம் போட்டு இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த அம்மாவை அணுகி,
"ரொம்பக் கத்திப் பேசாதீங்க. நெஞ்சு வலி வந்துடுச்சின்னா அப்புறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க," என்று எச்சரித்துப் பார்த்தேன். ஆனால் அம்மா என் வார்த்தையைச் சட்டையே செய்யவில்லை.
"அம்மா, கல்யாணம் முடிஞ்ச கையோட சாப்பிட்டுட்டுக் கிளம்பிடலாம். அப்பதான் பொழுதோட ஊர் போய்ச் சேர முடியும். நாளைக்குக் கண்டிப்பா நான் கம்பெனி போயாகணும். முக்கியமான வேலையிருக்கு"
"சரிப்பா. உடனே கிளம்பிடலாம்"
நாங்கள் கிளம்பிய போது மாமாவும் அத்தையும் வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பி வைத்தார்கள்.
"ரொம்பச் சந்தோஷம் அண்ணி. உங்களுக்கு உடம்பு முடியாம இருக்கிற தினாலே நீங்க எங்க வரப் போறீங்கன்னு தான் நாங்க நினைச்சோம். நீங்களும் வந்து மணமக்களை வாழ்த்துனதிலே எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம்" என்றாள் அத்தை.
அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அத்தையின் கவனம் முழுவதும் என் காரின் மீதே படிந்திருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை. வைத்த கண் வாங்காமல் காரையே பார்த்துக் கொண்டிருந்தாள் அத்தை.
"நீங்க ஆசைப்பட்டபடி ஒங்கச் சொந்தக்காரங்க எல்லாரையும் பார்த்ததுல சந்தோஷம் தானே ஒங்களுக்கு?"
மாலை ஏழு மணியளவில் வீடு வந்து சேர்ந்த பிறகு அம்மாவிடம் கேட்டேன்.
"சொந்தக்காரங்களைப் பார்த்ததுல எனக்கு மகிழ்ச்சி தான் தம்பி. ஆனா அதை விட பெரிய சந்தோஷம், உங்கத்தைக்கு முன்னாடி நானும் ஒரு நாள் காரில போய் இறங்கணும்னு நான் செஞ்சிருந்த வைராக்கியமும் நிறைவேறிடுச்சி. எங்க நான் சாகறதுக்குள்ளே நீ கார் வாங்க மாட்டியோ, என் சபதத்தை நிறைவேத்தாம நான் போய்ச் சேர்ந்துடுவேனோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்".
"சபதமா? என்னது அது? எங்கிட்ட நீங்க சொல்லவேயில்லியே?"
"அப்ப நீ சின்னப்புள்ளை. ரெண்டு வயசிருக்கும். நேத்தி நடந்தது மாதிரி இன்னும் என் நினைவில அப்படியே பதிஞ்சிருக்கு. திருச்சியில ஒரு கல்யாணத்துக்கு ஒன்னையும் அழைச்சிக்கிட்டு நானும் ஒங்கப்பாவும்
போயிருந்தோம். ஒங்கத்தை வாக்கப்பட்டது நல்ல வசதியான குடும்பம். அந்தக்காலத்துல நம்ப சொந்தக்காரங்களிலேயே அவங்கக்கிட்ட தான் காரு இருந்துச்சி. அத்தை வீட்டுக்குப் பக்கத்துல தான் கல்யாண மண்டபங்கிறதால, மத்தியானமே அவங்க வீட்டுக்குப் போயிட்டோம்.
சாயங்காலம் மண்டபத்துக்குக் கிளம்பறப்ப, "தங்கச்சி, நம்ப காரை ரெண்டு டிரிப் அடிக்கச் சொல்றேன். நாம எல்லாரும் காரிலேயே மண்டபத்துக்குப் போயிடலாம்,"னு ஒங்க மாமா தான் சொன்னாரு. அவரு ரொம்ப நல்லவரு. சரின்னுட்டு நான் காரில ஏறப் போன சமயம், காரில உட்காந்திருந்த அத்தை,
"உங்களுக்கெல்லாம் காரில இடமில்லை, நீங்க பஸ்சில வாங்க,"ன்னு முகத்திலடிச்சது மாதிரி சொல்லிட்டுப் படாருன்னு கதவைச் சாத்திட்டா. எனக்கு ரொம்ப அவமானமாப் போயிட்டுது. அழுகையும் ஆத்திரமும் தாங்க முடியல..
"சரி. சரி. அழாதே. சின்ன வயசிலேர்ந்தே அவளுக்கு வாய்த்துடுக்கு அதிகம். அதோட இப்ப பணத்திமிரும் சேர்ந்துடுச்சி. பொறுமையா இரு. நமக்கும் ஒரு காலம் வராமலாப் போயிடும்?"னு அப்பா தான் என்னைச் சமாதானம் செஞ்சாரு.
அவளுக்கு முன்னாடி அவ மூக்கில விரல் வைக்கிற மாதிரி நானும் ஒரு நாள், பெரிய காரில போய் இறங்கணும்னு அன்னிக்கு முடிவெடுத்தேன். இத்தினி வருஷமா என் மனசில இருந்த வைராக்கியம் இன்னிக்கு உன்னால நிறைவேறிடுச்சி. இனிமே நான் நிம்மதியாச் சாவேன்."
அம்மா சொன்னதைக் கேட்டதும் எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது.
"இதுக்காகத் தான் நீங்க கார் வாங்க விரும்புறீங்கன்னு என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா, கடனை உடனை வாங்கியாவது ஒங்கச் சபதத்தை உடனே நிறைவேத்தியிருப்பேனேம்மா"
"நீ அப்படி செய்வேன்னு எனக்குத் தெரியும்பா. ஆனா என் வைராக்கியத்தை நிறைவேத்தணுங்கிறதுக்காக கடன் வாங்கி வரவுக்கு மேல செலவு செஞ்சு நீ கடன்ல மூழ்கிப் போறதை நான் விரும்பல. அததுக்கு ஒரு நேரம் வரணும்ல. இப்பத்தான் என் ஆசை நிறைவேறிடுச்சே. அது போதும் எனக்கு. உங்கத்தை வைச்ச கண் வாங்காம நம்ம காரைப் பார்த்துக்கிட்டே இருந்தாளே, அதைக் கவனிச்சியா? இப்ப நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்".
"ம்.ம். கவனிச்சேன். சரிம்மா! நெஞ்சு வலி அதிகமா இருந்தா மறைக்காம சொல்லிடுங்க. டாக்டர்கிட்ட ஒரு தடவை போயிட்டு வந்திடலாம்." வழக்கமாக போடும் மாத்திரைகளை அம்மாவிடம் கொடுத்து விட்டுக் கேட்டேன்.
"டாக்டர் கிட்டப் போனாலும் அவரு புதுசாவா மாத்திரை எழுதப் போறாரு? இதையே தான் எழுதிக் கொடுப்பாரு.வேணாம் தம்பி. என்னைப் பத்திக் கவலைப்படுறத உட்டுட்டு போய்ப்படுத்து நிம்மதியாத் தூங்கு. காலையில எழுந்திருச்சி ஆபிசுக்குப் போகணும்."
"சரிம்மா"
பயணம் செய்ததால் ஏற்பட்ட களைப்பு இருந்தாலும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். என்னென்னவோ நினைவலைகள்!
அம்மாவின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இதற்குத் தான் அம்மா அவ்வளவு பிடிவாதமாக ஊருக்குக் கிளம்பி வந்திருக்கிறார். மனதிலிருந்த வலிமை பயணம் செய்ய தேவையான சக்தியை அவரது உடலுக்கு அளித்தது போலும். இத்தனை வருடங்கள் கழிந்த
பின்னரும் அந்தச் சம்பவம் ஏற்படுத்திய வடு, நீறு பூத்த நெருப்பாய் அம்மாவின் நெஞ்சுக்குள் கனன்று கொண்டிருந்திருக்கிறது.
இதைப்பற்றி அம்மா முன்னமே எனக்குத் தெரிவித்திருக்கலாம். ஒரு வேளை தம் குமுறலை வெளியே கொட்டிப் புலம்பி விட்டால் மனதுக்கு ஆறுதல் கிடைத்து தாம் கொண்ட வைராக்கியத்தை நிறைவேற்ற வாய்ப்பில்லாமல் போய் விடும் என அம்மா நினைத்தாரோ?
இந்த யோசனைகளில் ஆழ்ந்திருந்த நான் எப்போது தூங்கினேனோ தெரிய வில்லை.
"என்னங்க ஏந்திரிச்சி வந்து மாமியைப் பாருங்களேன். பாலை வைச்சிக்கிட்டு ரொம்ப நேரமாக் கூப்பிடறேன். கண்ணையே தொறக்க மாட்டேங்கிறாங்க,"
அதிகாலையில் மனைவி வந்து எழுப்பவே, வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடினேன். அம்மா அசைவற்று இருந்தார். பக்கத்துத் தெருவிலிருந்த டாக்டரைக் கொண்டு வந்து காட்டினேன். தூக்கத்திலேயே அம்மாவின் உயிர் பிரிந்து விட்டதாகச் சொன்னார் அவர்.
என் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரை ஒரு கையால் துடைத்தபடியே அம்மாவைப் பார்த்தேன்.
'நான் நினைத்ததைச் சாதித்து விட்டேன்' என்ற வெற்றிப் புன்னகையுடன் தூங்குவது போலவே இருந்தது முகம்.
எத்தனையோ முறை செத்துச் செத்து உயிர் பிழைத்தவர் தாம் அம்மா. இவ்வளவு நாட்கள் தம் வைராக்கியத்தை நிறைவேற்றத்தான் அம்மா தம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடியிருக்கிறார் என்று இப்போது எனக்குப் புரிந்தது.
அம்மாவை அவ்வளவு தூரம் அழைத்துப் போயிருக்கக் கூடாது; தலை குளிக்க அனுமதித்திருக்கக் கூடாது; உறவுக்காரர்களிடம் ஓய்வின்றிப் பேச விட்டிருக்கக் கூடாது, இதெல்லாம் தாம் அம்மாவின் சாவுக்குக் காரணம் என்பன போன்ற எண்ணங்களால் குற்றவுணர்வு தோன்றி என்னைப் பெரிதும் அலைக்கழித்தாலும் அவரது ஆசையை நிறைவேற்றி வைத்தோம் என்ற எண்ணம் மனதுக்குச் சிறு ஆறுதலைத் தந்தது.
(தமிழ் மன்றச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு வென்ற கதை-ஜூன் 2010)
Subscribe to:
Posts (Atom)