நல்வரவு

வணக்கம் !

Thursday, 12 February 2015

என் பார்வையில் - என்றாவது ஒரு நாள் - ஆஸ்திரேலிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்ஹென்றி லாசன் (HENRY LAWSON - 1867- 1922) எழுதிய ஆஸ்திரேலிய காடுறை மாந்தர் கதைகளின் மொழியாக்கம் கீதா மதிவாணன்.
இவரது வலைப்பூ:-  கீதமஞ்சரி
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம். கைபேசி:- 9994541010
முதற்பதிப்பு:- டிசம்பர் 2014
விலை:- ரூ 150/-

கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றி லாசனின் பரிதாபமான வாழ்க்கை குறித்தும், அவர்தம் எழுத்து குறித்தும் புத்தக முன்னுரை விவரிக்கிறது.    அவரது படைப்புகள் பல ஆஸ்திரேலிய பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன; அவர் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல்தலையும், காகிதபணமும் அந்நாட்டு அரசால் வெளியிடப்பட்டுள்ளன; உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்து கெளரவிக்கப்பட்டது போன்ற விபரங்கள் மூலம், இவர்  ஆஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க படைப்பாளி என்பதை அறிந்து கொள்கிறோம்.

இவரது கதைகளுக்குள் புகுமுன், அவை விவரிக்கும் மக்களின் வாழ்க்கை பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியம்.

இங்கிலாந்து சிறைகளில் போதுமான இடமில்லாத காரணத்தால் கைதிகளை நாடுகடத்த திட்டமிட்ட அந்நாட்டு அரசு, தேர்ந்தெடுத்த தீவுக்கண்டம் தான் ஆஸ்திரேலியா. 

இங்கிலாந்திலிருந்து 1788 ல் முதல் கப்பல் 1500 தண்டனைக் கைதிகளுடன் சிட்னி துறைமுகம் வந்து சேர்ந்தது.  அதன் பின் தொடர்ச்சியாக கைதிகள் இங்கு அனுப்பப் பட்டனர்.

தண்டனைக் காலம் முடிந்த பின்னர் இக்கைதிகள், காடுகளில்  குடியேறினர், வயிற்றுப்பாட்டுக்கு ஆட்டு ரோமம் கத்தரித்தல், மந்தையோட்டுதல் ஆடுமாடு மேய்த்தல், குதிரைகளைப் பழக்குதல்  போன்ற வேலைகளில் ஈடுபட்டனர். 

இக்கைதிகளும், அடிமட்டத் தொழிலாளர்களும், சுரங்கங்களில் தங்கம் தேடி வந்த குடியேறிகளும் தாம், ஹென்றி லாசனின் கதை மாந்தர்கள். 

இவர் வாழ்ந்த சூழலும் இதுவே என்பதாலும், அம்மண்ணின் வாழ்வியல் பிரச்சினைகளின் ஆழத்தைத் தொட்டு, அவற்றுடன் தம் சொந்த அனுபவத்தையும் தோய்த்துக் கொடுப்பதாலும், நம்மை மறந்து அக்கால ஆஸ்திரேலியாவிற்குப் பயணிக்கத் துவங்குகிறோம்!  கீதா மதிவாணனின் மொழிநடை நம் பயணத்தை எளிதாகவும், சுவை மிக்கதாகவும் ஆக்குகிறது.

மொழியாக்கம் என்று தெரியாதவாறு தேர்ந்த நடையில் அருமையான கதை தொகுப்பையளித்துத் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கும் கீதா மதிவாணனுக்குப் பாராட்டும் நன்றியும்! 

எங்கும் புதர் சூழ்ந்த குறுங்காடு, அச்சமூட்டும் தனிமையில் வாழும் மனிதர்கள், எலும்புக்கூடுகளாய்ப் பசுக்கள், வயிறு ஒட்டிய கன்றுகள், ‘குதிரை என்றால் கேட்பவர் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு விலங்கு,’ கோவான்னா, போஸம் போன்ற புதிய உயிரினங்கள், எப்போதுமே புழுதி படிந்த அழுக்கு உடை, தங்கம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் பெரும்பாலும் தங்கச் சுரங்கங்களைப் பற்றியே உரையாடும் அடிமட்டச் சுரங்கத் தொழிலாளர்கள், என நமக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத, புதுமையான களத்தை அறிமுகம் செய்கிறார் கீதா மதிவாணன், அருமையான இம்மொழியாக்கத்தின் மூலம். 

இத்தொகுதியில் மொத்தம் 22 சிறுகதைகள் உள்ளன. 
இவற்றுள் என்னை மிகவும் பாதித்தவை மூன்று:-

முதலாவது:- மந்தையோட்டியின் மனைவி

கணவன் மந்தையோட்டியாக போக வேண்டிய சூழ்நிலை ஏற்படவே, மனைவி, காட்டில் ஆண்துணையின்றி தனிமையில் வாழ்கிறாள். 

அவ்வப்போது வழிப்போக்கர் மூலம் தன் பெண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அசாத்திய துணிவாலும், நாயின் துணையாலும் முறியடிக்கிறாள்.  வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களையும் மனத்திண்மையுடன் எதிர்கொள்கிறாள்.        

ஒரு நாள் இரவு, அவள் வீட்டு விறகுக் குவியலுக்குள் பாம்பொன்று  புகுந்து விடுகிறது.  அடுக்களை மேசைமீது குழந்தைகளைத் தூங்க வைத்து, அருகில் அமர்ந்தபடி எந்நேரத்திலும் வெளிப்படும் பாம்புக்காக விடிய விடிய கண் அயராது விழிப்புடன் காத்திருக்கும் சமயத்தில், அவள் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகள்,  மனவோட்டமாக வெளிப்படுகின்றன. 

ஒரு வழியாக மறு நாள் காலை, தன் நாயின் துணையுடன் பாம்பைப் போராடிக் கொன்று, தீயில் எறியும் சமயம், அவள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்தோடுகிறது. 
பாம்பிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டோம் என்ற தாய்மையின் ஆனந்தக் கண்ணீரா அது?  கணவன் துணையின்றி இது போல் இன்னும் எத்தகைய போராட்டங்களைத் தனியாளாகத் தான் சந்திக்க வேண்டுமோ என்ற சுய பச்சாதாபம் கண்ணீரை வரவழைத்ததா?  என்று என்னால் யூகிக்க முடியவில்லையென்றாலும்,

அவள் அழுகையைப் பார்த்து மூத்த மகன் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள், என் கண்களிலும் நீரை வரவழைத்தது உண்மை.   

இரண்டாவது:-ஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம்

மழைநாள் ஒன்றில் நேரம் தெரியாமல், காலை ஆறு மணிக்கு வேலைக்குப் போக வேண்டிய பதினொன்று வயதே ஆன சிறுவன், நாலு மணிக்கெல்லாம் கிளம்பிப் போய், அலுவலகப் படிக்கட்டில் படுத்துறங்கிய செய்தி கல் மனதையும் கரையச் செய்யும்.  முதலாளி மனமிரங்கி அவனுக்கு ஒரு கடிகாரத்தை இலவசமாகக் கொடுத்து, அதற்கு விளம்பரமும் தேடிக் கொள்கிறார்.  .   

உடல்நிலை மிகவும் சரியில்லாத போதும், அலாரம் வைத்து எழ நினைக்கும் மகனைத் தாய் மறுநாள் வேலைக்குப் போகக்கூடாது எனக் கண்டிக்கிறாள்.

வேலைக்குப் போகாவிட்டால், வேறு யாரையாவது வேலைக்கு வைத்து விடுவார்கள்; நம்மால் பட்டினி கிடக்க முடியாது அம்மா’ அதனால் போயே தீருவேன் என்று மகன் சொல்லுமிடத்தில், அப்பிஞ்சின் பசிக்கொடுமை நம்மை வாட்டுகிறது.  .      

மறுநாள் அகால நேரத்தில் அலாரம் அலறுகிறது.  ஆனால் தூக்கத்தில் சட்டென்று விழிக்கக் கூடிய ஆர்வி எழவில்லை.  சத்தம் கேட்டு அவன் ஏன் எழவில்லை? என்ற தாயின் பதற்றம், நம்மையும் தொற்றிக் கொள்கிறது. 

ஆர்வீ!”
தாய் அழைத்தாள்.
அவள் குரல் பயத்தால் நடுக்கமுற்று விநோதமாய் ஒலித்தது.” 

கதை முடிந்த பின்னரும், சில நிமிடங்கள் ஒன்றுஞ் செய்யத் தோன்றாமல், வெறுமையுணர்வைத் தோற்றுவித்த கதை.

மூன்றாவது:- என்றாவது ஒரு நாள்

எல்லைப்பகுதியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்துக் கிளம்பும் சமயம் அழுது கொண்டே கைகளை இறுக்கமாகப் பிடித்து வழியனுப்பிய காதலியின் நினைவுகளை நண்பனிடம் பகிர்ந்து கொள்கிறான் மிச்செல். 

“என்றாவது ஒரு நாள் நீ போய் அவளைத் திருமணம் செய்து கொள்வாயல்லவா?” என்ற நண்பனின் கேள்விக்கு, மிச்செல் சொல்லும்  பதில் மனதை நெகிழச் செய்கிறது.  அவற்றை வார்த்தை பிசகாமல் அப்படியே இங்குக் கொடுத்திருக்கிறேன்:-

“என்றாவது ஒரு நாள், அந்த நாள் என்று?ஒரு நாள் உணவுக்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.வயதாகும் வரை. நம்மைப் பற்றிய சிரத்தை குறையும் வரை, இந்த ஓட்டம் தொடரும். இன்னும் வயதாகும். இன்னும் சிரத்தை குறையும். இன்னும் அழுக்கடை வோம். இப்படியே இந்த மண்ணுக்கும், புழுதிக்கும், வெக்கைக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பழகிப்போவோம்.

இலக்கைத் தொலைத்து நம்பிக்கையைக் கைவிட்டு ஒரு மாடு மாதிரி கால்நடை வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொள்கிறோம். ஒரு மனிதனின் இதயமிருக்கும் இடத்தில் ஒரு எருதின் ஆன்மா இருக்கும் வரை வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டிருக்கும் நமக்கென்று கவலைப்பட யார் இருக்கிறார்கள்?”

“கொடிது கொடிது வறுமை கொடிது
இளமையில் வறுமை, அதை விடக் கொடிது,” என்ற உண்மையைப் பறைசாற்றும் இக்கதை மனதை மிகவும் தைத்தது. 

இத்தொகுதியில் திகிலூட்டும் கதைகள் இரண்டுள்ளன.        
முதலாவது:- சீனத்தவனின் ஆவி:-

கொலைகார ஓடை, செத்தவனின் சந்து எனப்படும் மலையிடைவெளி,  ஆளரவமற்ற சமவெளி. தனிமையும் திகிலுமூட்டும் சீனாக்காரனின் கல்லறை, பட்டை உரிக்கப்பட்டு வெண்மை நிறத்தில் நிர்வாணமாக நின்று நிலவொளியில் பூதாகரமாக காட்சியளிக்கும் யூகலிப்டஸ் காடுகள், நடக்க நடக்க யாரோ விட்டு விட்டுத் தொடர்வது போன்ற ஓசை, சீனனின் ஆவி துரத்தும் என்ற வதந்தி என காட்டு வழியே பயணிக்கும் ஒருவனின் பய உணர்வை வெளிப்படுத்தும் இக்கதையைத் திகிலூட்டக்கூடிய தோதான  சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி நம்மை நன்றாகவே பயமுறுத்துகிறார் கீதா!. 

திகில் கதைக்கு இன்னொரு உதாரணம்:- பிரம்மி என்றொரு நண்பன்

காட்டில் இறந்து கிடந்த தன் நண்பனின் உடலை அடையாளம் கண்டுபிடித்து வீட்டுக்கு எடுத்து வருகிறார் கிழவர் ஒருவர்.

இனி கீதாவின் எழுத்தை வாசித்து நீங்களும் பயந்து நடுங்க கொஞ்சம்……

உடலைத் திருப்பி நேராக்கி புகைப்போக்கியில் சாய்த்து அதன் காலிலேயே நிற்கச் செய்து விட்டு, அன்றிரவு அவரது நண்பரை எங்குக் கிடத்தலாம் என்று யோசனை செய்தார்.
நேராக நிற்கவைத்த சடலத்தின் முன்பாதியை மறைத்திருந்த மரப்பட்டை நழுவி கீழிறங்கிவிட்டதை, அவர் கவனிக்கவில்லை.
உன்னை இன்றிரவு இந்தப் புகைப்போக்கிக் குழாயினுள் வைக்கலாம் என நினைக்கிறேன் பிரம்மி…..
திரும்பியவர் கத்தினார்.  மறைப்பற்ற முகத்தின் கூரிய பார்வையைச் சந்திக்க அப்போது அவர் தயாராயிருக்கவில்லை.  அவர் நரம்புகளில் அதிர்வு பரவியது.  மீண்டும் சுயநிலைக்கு வந்து பேசக் கொஞ்ச நேரம் அவகாசம் தேவைப்பட்டது……
ஃபைவ் பாப் (நாய்) ஊளையிட்டது.  தனிமையில் வசிக்கும் அவர் காட்டின் விபரீதத்தையும், விநோதத்தையும் எதிர் கொள்ளப் பழகியிருந்தபோதும்,  அந்த முதிய ஆட்டிடையரின் இதயம் பயத்தால் சில்லிட்டுப் போனது.”

இத்தொகுதியில் கிண்டல், கேலி நகைச்சுவை ஆகியவற்றுக்கும் பஞ்சமில்லை. 
எ:கா:-   புதர்க்காடுறை பூனைகள் 
ஜேக் என்றொரு பூனை  இரவு முழுதும் வேலை செய்து ஏராள முயல்களைக் கொன்று வீட்டுக்கு இழுத்து வந்து முதலாளிக்குக் கொடுக்கும். 
எந்த இரவிலாவது கூடுதலாக வேலை செய்து விட்டோம் என்று அதற்குத் தோன்றினால், அடுத்த நாளிரவு தானே விடுப்பெடுத்துக் கொண்டு மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் காதலியைக் காணச் சென்றுவிடுமாம்.

A CHILD IN THE DARK AND FOREIGN FATHER என்ற கதைக்குக் கீதா வைத்த தலைப்பு:- ஒற்றை சக்கர வண்டி

குடும்பம் எனும் வண்டியோட இரண்டு சக்கரம் வேண்டும்; ‘அந்த  இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?”  என்ற உண்மையை விளக்கும் அருமையான கதைக்கு இப்பெயர் நன்றாகவே பொருந்துகிறது.  

குடும்பப் பொறுப்பின்றி ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் செய்யும் மனைவியைச் சமாளித்து, வேலைக்கும் போய்க்கொண்டு உடல்நலமில்லாத மகனையும் பரிவுடன் கவனித்து ஒற்றை சக்கரமாக ஓயாமல் சுழலும் தந்தையின் கதையிது..
தலைப்பை அப்படியே மூலத்திலிருந்து பெயர்க்காமல் கதைக்கு ஏற்றாற்போல் பெயரிட்டிருக்கும் கீதாவைப் பாராட்டுகிறேன்!
அவன் ஏன் அப்படிச் செய்தான்?  என்ற கதையில்
எவ்வளவு விலை கொடுத்தாலும் இழக்க விரும்பாத தன் குதிரையை ஜாப் ஏன் சுட்டுக்கொன்றான்? என்பது நல்ல சஸ்பென்ஸ்.  இதில் வரும் வைத்தியர் டெட் டிங்கோ மர்ம மனிதராகவே காட்சி தருகிறார்.  கதையின் முடிவில் அவர் ஜாபிடம் சொல்லிச் செல்லும் விஷயம் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. 

மலாக்கி என்னைக் கவர்ந்த  இன்னொரு கதை:-

தன் உணவு மற்றும் இருப்பிடத்துக்காக வாரம் ஒரு பவுண்டு மட்டுமே செலவழித்துச் சிக்கனமாக இருக்கும் மலாக்கியைக் கிண்டலும் கேலியும் செய்து வெறுப்பேற்றுகிறார்கள் நண்பர்கள்.  என்னிடம் வம்பு வளர்க்காதீங்க என்று மட்டுமே சொல்லி விலகிப் போகும் மலாக்கியை  அவர்கள் ஒரு கோமாளியாகவே எண்ணி அவன் துன்பத்தில் இன்பம் காண்கிறார்கள். 
அவன் தூங்கும் போது அவன் கால்சட்டையின் இருகுழாய்களையும் தைத்து விடுவது, புகைபிடிக்கும் குழாயில் வெடிமருந்து நிரப்புவது இறுதியாக அவன் மண்டையோட்டைக் கோருவது போன்ற விளையாட்டுக்கள் மூலம் வேதனைப்படுத்துகிறார்கள்.  ஆனால் இறுதியில் மலாக்கியின் தியாகம் காரணமாக அவனுக்கு ஏற்படும் முடிவு நம்மை கலங்கச் செய்கிறது. 
அவனுக்கு வேதனை ஏற்படுத்தியவர்கள், ஒவ்வொருவரும் குற்றவுணர்வுடன் அவரவர் பங்கை அழிக்க விரும்பும் போது காலங்கடந்துவிடுகிறது……   

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் இக்கதைகளைப் பற்றி….

.விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன். 

மொத்தத்தில் களமும் கருவும் தமிழுக்குப் புதிது.  மொழியாக்கம் என்பது தெரியாத அருமையான சிறுகதை தொகுதி.

கீதா மதிவாணனுக்குப் பாராட்டுக்கள்!  மேலும் மேலும் இது போன்ற தரமான மொழியாக்கம் மூலம் தமிழை வளப்படுத்த வாழ்த்துகிறேன்!    
           

45 comments:

 1. நல்ல விமர்சனம்... சகோதரிக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. முதல் பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்!

   Delete
  2. மிகவும் நன்றி தனபாலன்.

   Delete
 2. நல்ல ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்து, அதிலும் சில கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி. நூலாசிரியருக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜம்புலிங்கம் சார்!

   Delete
  2. மிகுந்த நன்றி ஐயா.

   Delete
 3. //மொழியாக்கம் என்று தெரியாதவாறு தேர்ந்த நடையில் அருமையான கதை தொகுப்பையளித்துத் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கும் கீதா மதிவாணனுக்குப் பாராட்டும் நன்றியும்! //

  தங்களுடன் சேர்ந்து நானும் மீண்டும் ஒருமுறை இங்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் கீதா சார்பில் நன்றி சார்! கருத்துரை வழங்கி ஊக்குவித்தமைக்கு நன்றி சார்!

   Delete
  2. உங்களுடைய ஊக்கமிகு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி கோபு சார்.

   Delete
 4. //என் பார்வையில் - என்றாவது ஒரு நாள் - ஆஸ்திரேலிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்//

  தங்களை மிகவும் பாதித்த மூன்று கதைகளைப்பற்றிய தங்களின் விமர்சனம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. தங்களுக்கு என் பாராட்டுக்களும் நன்றிகளும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் சார்!

   Delete
 5. மேற்படி புத்தகத்தின் பின் அட்டையையும் திருமதி. கீதா அவர்களின் புகைப்படத்துடன் தாங்கள் இந்தப்பதிவினில் காட்டியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது மகிழ்ச்சி கண்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி. ஸ்பெஷல் பாராட்டுக்கு நன்றி சார்!

   Delete
 6. //விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன். //

  இந்த ‘விரிவஞ்சி’ என்ற வார்த்தையை தங்கள் மூலம் மீண்டும் மீண்டும் படிக்கும்போது, எனக்கு மிகவும் பிடித்தமான ‘மாங்கா இஞ்சி’ ஊறுகாய் நினைவுக்கு வந்து விடுகிறது. :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ! விரிவஞ்சி மாங்காய் இஞ்சியை நினைவு படுத்துகிறதா? எனக்கும் மாங்காய் இஞ்சி பிடிக்கும். அந்தச் சொல் என்னையுமறியாமல் திரும்பத் திரும்ப வந்து விடுகிறது.

   Delete
  2. :) விரிவு + அஞ்சி = விரிவஞ்சி .....

   இந்த வார்த்தை [சொல்லாடல்] மிகவும் நன்றாகத்தான் ரஸிக்கும்படியாக உள்ளது.

   //அந்தச் சொல் என்னையுமறியாமல் திரும்பத் திரும்ப வந்து விடுகிறது.//

   அதனால் பரவாயில்லை. திரும்பத் திரும்ப வந்தால் வரட்டும். ஏற்கனவே ஓரிரு முறை சிறுகதை விமர்சனப் போட்டிக்கான தங்களின் விமர்சனங்களில் பார்த்த ஞாபகம் எனக்கு உள்ளது.

   //எனக்கும் மாங்காய் இஞ்சி பிடிக்கும்.//

   மிகவும் சந்தோஷம். அதை FRESH ஆக பிஞ்சாக, காய்ந்து போகாததாகப் பார்த்து வாங்கி வந்து, தோல் சீவி, பொடிப்பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து, கொஞ்சம் எலுமிச்சை சாரும் பிழிந்து, கடுகு தாளித்து, தயிர்/மோர் சாதத்திற்குத் தொட்டுக்கொண்டால் தேவாமிர்தமாக இருக்குமே ! :)

   Delete
 7. //“கொடிது கொடிது வறுமை கொடிது, இளமையில் வறுமை, அதை விடக் கொடிது,” என்ற உண்மையைப் பறைசாற்றும் இக்கதை மனதை மிகவும் தைத்தது. //

  இள்மையில் வறுமையால் வாடியவர்களில் நானும் ஒருவன் என்பதால் இந்தக் கதையினைப் படிக்காமலேயே, தங்களின் விமர்சனம் மூலம் நன்கு உணர முடிகிறது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இளமையில் வறுமையை அனுபவித்தவர் தாங்கள் என்றறியும் போது வருத்தம் மேலிடுகிறது. ஆனால் அவ்வறுமையைக் கண்டு துவண்டு விடாமல் திறமையை வளர்த்துக் கொண்டு, மத்திய அரசின் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த விதம் தங்களின் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியுடன் கூடிய அயராத உழைப்பையும் பறைசாற்றுகிறது. பாராட்டுக்கள் கோபு சார்!

   Delete
 8. //A CHILD IN THE DARK AND FOREIGN FATHER என்ற கதைக்குக் கீதா வைத்த தலைப்பு:- ஒற்றை சக்கர வண்டி

  குடும்பம் எனும் வண்டியோட இரண்டு சக்கரம் வேண்டும்; ‘அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?” என்ற உண்மையை விளக்கும் அருமையான கதைக்கு இப்பெயர் நன்றாகவே பொருந்துகிறது. //

  நம் ’விமர்சனவித்தகி’ அவர்கள் வைத்துள்ள தலைப்பல்லவா ! அது பொருத்தமாகவே தான் இருக்கும். தங்களின் இந்தப் பாராட்டு அந்தத் தலைப்புக்கே ஓர் கிரீடம் வைத்தது போல உள்ளது. மிக்க மகிழ்ச்சி.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. பதிவுகளுக்குத் தலைப்பைத் தேர்வு செய்வதில் விமர்சன வித்தகி கீதா போல நீங்களும் கை தேர்ந்தவர் தாம்! இப்போது தாங்கள் எழுதும் பதிவின் தலைப்பான 'சந்தித்த வேளையிலே...' என்பதை நான் மிகவும் ரசித்தேன்.

   Delete
  2. ஒற்றை சக்கர வண்டி என்னும் தலைப்புக்கான விளக்கத்தை கீழே அளித்துள்ளேன். சிலாகித்த தங்கள் இருவருக்கும் என் அன்பான நன்றி.

   Delete
 9. //இத்தொகுதியில் திகிலூட்டும் கதைகள் இரண்டுள்ளன. //

  ஆஹா, திகிலும் உள்ளனவா ! இப்போதே எனக்குக் கொஞ்சம் பயமாகவே உள்ளது. :)

  அன்றைய ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரின் கதைகளை மற்றொரு இன்றைய மிகச் சிறந்த எழுத்தாளர் தமிழாக்கம் செய்து நூலாக வெளியிட்டதை, அந்த நூல் கண்டு சிடுக்காகாமல் பிரித்து அலசிப்பிழிந்து எளிமையாகவும் அருமையாகவும் ஜூஸ் ஆக்கி பருகத் தந்துள்ள தங்களின் இந்தப்பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள். நன்றிகள்.

  நன்றியுடன் கோபு

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்கிற மாதிரி கதைக்களங்கள் தமிழுக்குப் புதுசு தான். ஆனால் இன்றைய நவீன தமிழ் எழுத்தாளர்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒப்புக்கொண்டால், இன்றைய பின்-நவீனத்துவ கதை பண்ணும் 'கலை' (வேலை) என்னாவது?..

   ஒன்றிப்போன உங்கள் விமரிசனமும் நன்றாக இருந்தது. அது சரி, முதல் கதை--மந்தையோட்டியின் மனைவி-- அவ்வளவு தானா?.. தன்னைப் போலவான தீயில் மாட்டிக் கொண்ட ஒரு பரிதாப ஜீவன் என்கிற எண்ணத்தில் அவள் பாம்பைத் தீயிலிருந்துக் காப்பாற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதைக்கும் ஜீவனுடனான ஒரு திருப்பம் கிடைத்திருக்கும்.

   Delete
  2. தங்களது முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜீ.வி சார்! நீங்கள் சொல்வது போல பாம்பைக் காப்பாற்றியிருந்தால் கதைக்குத் திருப்பம் கிடைத்திருக்கும். ஆனால் தண்டனை முடிந்த கைதிகள் நாட்டில் வாழ இடமின்றி ஆஸ்திரேலியக் காடுகளில் குடியேறிய போது, இக்கதையில் வரும் பாம்பைப் போல, ஆயிரக்கணக்கான காட்டுயிர்களைத் துவம்சம் செய்து காட்டை அழித்திருப்பார்கள். எழுத்தாளர் ஹென்றி லாசன் அவர்களுள் ஒருவர் என்பதால், உயிர்களைப் பாதுகாப்பது குறித்த எழுத்தை அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. மேலும் அவர் வாழ்ந்த காலம் சுற்றுச்சூழல், இயற்கையைப் பேணுதல் குறித்த விழிப்புணர்வு அறவே இல்லாத காலமும் கூட. மிண்டும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சார்!

   Delete
  3. வணக்கம் ஜீவி சார். தங்களுடைய சந்தேகத்துக்கான விளக்கத்தை கலையரசி அக்காவே தந்துவிட்டார்கள். எனினும் நூலாசிரியராய் என் தரப்பு விளக்கத்தையும் தருவதுதான் தார்மீகம்.

   இந்தக் கதைக்கான சூழல் காடு. சுற்றுவட்டாரத்தில் இருபது கி.மீ. தூரத்துக்கு ஆளரவமற்ற புதர்களாலும் மரங்களாலும் சூழப்பட்ட காடு. ஒரு பெண் தன் சின்னஞ்சிறிய குழந்தைகள் நான்குடன் அங்கு தனித்து இருக்கிறாள். வயதான நாயொன்றுதான் துணை. வெளியூருக்கு ஆடுமாடுகளை ஓட்டிச்சென்ற கணவன் போய் பல மாதங்கள் ஆகிறது. அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

   இந்த சூழலில் வீட்டுக்குள் விஷப்பாம்பு புகுந்துவிட்டது. அப்போது அவளுக்கு பாம்பிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவது எப்படி என்றுதான் சிந்தனை ஓடுமே தவிர, பாம்பை எப்படிக் காப்பாற்றுவது என்று தோன்றாது அல்லவா? அது போல் பல இடர்களைக் கடந்துவந்துள்ளதாக கதை நெடுகவும் காட்டப்படுகிறது. அதுபோல் இன்று இந்த இடரைக் கடப்பாளா மாட்டாளா என்பதுதான் வாசகர் முன் வைக்கப்படும் கேள்வி. இப்போதைக்கு முடிவு சுபம் என்றாலும் நாளை இதே போல் வேறொரு பிரச்சனை வரலாம். அவளுடைய துணிவைக் காட்டுவதே மூலக்கதாசிரியரின் நோக்கம் என்று தோன்றுகிறது.

   கதையை வாசிக்க நேர்ந்தால் தங்களால் அதைப் புரிந்துகொள்ளவும் இயலும் என்று நினைக்கிறேன். தங்களுடைய ஐயம் தெளிவிக்க எனக்கொரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி சார்.

   Delete
 10. வணக்கம்
  விமர்சனம் நன்று படிக்க தூண்டுகிறது... பகிர்வுக்கு நன்றி த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கும் த.ம. வாக்குக்கும் மிக்க நன்றி ரூபன்!

   Delete
 11. என்றாவது ஒரு நாள் புத்தகத்தை வாசித்து அதிலிருக்கும் சாரத்தை முழுமையாக உள்வாங்கிய அழகிய விமர்சனத்துக்கு மிக மிக நன்றி அக்கா. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் நெகிழ்வாக உள்ளது. ஒவ்வொரு கதையையும் நீங்கள் சிலாகித்த விதத்தைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு கதைகள் உங்களை ஈர்த்திருக்கின்றன என்பது புரிகிறது. ஒரு நல்ல படைப்பாளியின் ஆக்கங்களை தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்கும் முயற்சியில் வெற்றி கிட்டியிருப்பதாகவே கருதுகிறேன். மனம் நிறைந்த நன்றி அக்கா.

  ReplyDelete
 12. ஒற்றை சக்கர வண்டி என்ற தலைப்பை சிலாகித்துள்ள தங்களுக்கும் கோபு சாருக்கும் என் அன்பான நன்றி. உண்மையைச் சொல்லவேண்டுமெனில் அந்தத் தலைப்பு நான் தேர்ந்தெடுத்த தலைப்பு அன்று. மஞ்சரி இதழில் இந்தக் கதை வெளியானபோது மஞ்சரி ஆசிரியர் கொடுத்த தலைப்பு அது. முற்றிலும் பொருத்தமாய் இருக்கவே அந்தத் தலைப்பையே இந்தத் தொகுப்பிலும் பயன்படுத்திக் கொண்டேன். மொத்தப் பாராட்டும் மஞ்சரி இதழின் ஆசிரியர் அவர்களுக்கே. அனைவரின் சார்பிலும் என் நன்றியை அவர்க்கு உரித்தாக்குகின்றேன்.

  ReplyDelete
 13. பல‌ தரமான சிறுகதைகளை தன் அழகு தமிழ் நடையில் கீதமஞ்சரி மொழிபெயர்த்து ஒரு அருமையான தொகுப்பாய்த் தந்திருக்கிறார் என்பது உங்களின் அசத்தலான விமர்சனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது! முதலாவது சிறுகதையும் இரண்டாவதும் மனதை மிகவும் பாதிக்கிறது!

  கீதமஞ்சரிக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!
  உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ! வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி!

   Delete
 14. அருமையான விமர்சனம்...
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அருமையான விமர்சனம் என்ற தங்கள் பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி குமார்!

   Delete
 15. நூலில் இடம்பெற்றுள்ள கதைகளின் முன்னோட்டம் அருமை. பொதுவாக மொழிபெயர்ப்பு நூல்கள் என்றாலே போரடித்துவிடும். பொதுவுடைமை நூல்களை மட்டுமே பள்ளிக்காலத்தில் (சோவித் ரஷ்யாவின்) படித்திருக்கிறேன். ஹென்றி லாவ்ஸன் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஆஸ்திரேலியாவின் இன்னொரு முகத்தை கீதா மதிவாணன் காட்டியிருக்கிறார். அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்தான். ஏனென்றால் அந்தக்காலகட்டத்தில்தான் தமிழர்களும் இப்படி கூலி வேலைகள் செய்ய தென்னாப்பிரிக்கா, இலங்கை, அந்தமான், மலேஷியா பிஜி போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் பட்ட துயரங்களை பதிவு செய்த நூல்கள் ஏதாவது இருக்கிறதா தெரியவில்லை. இந்த எழுத்தாளரின் கதைகளும் கதை மாந்தர்களும் அந்த வலிகளையும் வேதனைகளையும் பதிவு செய்திருப்பதை பாராட்டித்தான் ஆகவேண்டும். புத்தகத்தை வாங்க வேண்டும். த.ம.+

  ReplyDelete
 16. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கவிப்பிரியன்! அக்கால மொழிபெயர்ப்பு நூல்களை நானும் வாசித்திருக்கிறேன். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு செய்து புரியாத மொழியில் நம்மை இம்சிப்பார்கள். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாமல் மூல நூல்களின் ஆசிரியர்கள் மேல் மோசமான அபிப்பிராயம் ஏற்படுத்துவார்கள். மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சிக்கலான கலை. இரண்டு மொழியிலும் புலமை இருக்க வேண்டும். மூல நூலின் கருத்துக்களை உள்வாங்கி, அதன் ஜீவன் அழியாமல் நம் மொழியில் மாற்றித் தரவேண்டும் இதுவும் ஓர் ஆக்கமே.
  இப்புத்தகத்தை வாசிக்கும் போது வேற்றுமொழிக் கதைகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாவண்ணம் கீதா மதிவாணன் திறம்படவே மொழியாக்கம் செய்திருக்கிறார்.
  தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கவிப்பிரியன்!

  ReplyDelete
 17. அடடா! நல்ல அழகாய் சொல்லி விட்டீர்கள் கலை. நீங்கள் எழுதியதைப் பார்த்த பின்பு தான் ஒரு விடயம் தெரிந்தது.

  ஆபத்துக்களை உள்ளுணர்வால் உணரும் இயல்பு ஒன்று ஆங்காங்கே சொல்லப்பட்டுக் கொண்டு போகிறது கவனித்தீர்களா கலை? அந்தக் ’காட்டு வைத்தியர்’ அந்த மண்ணின் இயல்பில் ஊறிய, வளத்தில் விளைந்த ஒரு மேலைத்தேய பாத்திரம். உள்ளுணர்வால் ஆபத்துக்களை உய்த்துணரும் இயல்பு இன்றும் பழங்குடி மக்களிடம் இருக்கும் ஒரு சிறப்பான குணாம்சம். அந்த mix ஒரு விஷேஷம். இல்லையா கீதா?

  அழகிய விமர்சனம். பார்க்கப் பார்க்க புதிது புதிதாய் அழகுகள் மிளிர்கின்றன. பகிர்வுக்கு நன்றி கலை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேகலா, தங்கள் வரவு நல்வரவாகுக! நீங்கள் சொல்வது உண்மை தான். காட்டு வைத்தியர் ஆபத்துகளை உய்த்துணரும் உள்ளுணர்வு உள்ளவராகத் தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். விமர்சனத்தைப் பாராட்டி ஊக்குவித்தமைக்கு மிகவும் நன்றி மேகலா! .

   Delete
 18. மிகவும் அழகாக தெளிவாக புத்தக விமர்சனம் தந்து இருக்கிறீர்கள் அக்கா. மொழி பெயர்ப்பு கதைகள் அவ்வளவாக சுவாரஸ்யம் இல்லாமலும், நமக்கு தொடர்பு இல்லாமலும் இருக்கும். ஆனால் கீதாவின் தமிழாகம் அவ்வாறு இல்லாமல் நம்முடன் ஒன்றிப் போகிறது. அவரின் அற்புதமான தமிழாகம் தான் காரணம்.நல்ல விமர்சனம் தந்த உங்களுக்கும், நல்ல படைப்பை தந்த கீதாவுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி காயத்ரி! விமர்சனத்தைப் பாராட்டியமைக்கு மீண்டும் என் நன்றி காயத்ரி!

   Delete
 19. சிறப்பான விமர்சனம். பாராட்டுகள்.

  கீதா அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆதி! வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியையாக இருப்பதற்கே என் முழி பிதுங்கிவிட்டது. நீங்கள் அனாயாசமாக இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருந்து அசத்திய போது தான் உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இப்புத்தகம் நீங்களும் வாங்கியிருப்பது அறிந்தேன். நீங்களும் வாசித்த பிறகு உங்களது வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் நன்றி ஆதி!

   Delete
 20. மொழியாக்கம் என்று தெரியாதவாறு தேர்ந்த நடையில் அருமையான கதை தொகுப்பையளித்துத் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கும் கீதா மதிவாணனுக்குப் பாராட்டும் நன்றியும்! //

  நீங்கள் சொல்வது உண்மை. கீதமஞசரியின் ஆஸ்திரேலிய காடுறை கதைகளுக்கு நான் ரசிகை. இவர் மொழியாக்கம் செய்யாவிட்டால் நான் எங்கு படிக்க போகிறேன்.
  மிக அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். கீதமஞ்சரிக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் கோமதி மேடம்! கீதா மொழிபயர்க்கவில்லையென்றால் ஹென்றி லாசனின் படைப்புக்களை நாம் படித்திருப்போமா என்பது சந்தேகமே. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி!

   Delete
 21. நல்ல விமர்சனம். நான் என்னுடைய புத்தகக் கண்காட்சி விசிட் முடித்தபிறகு இந்தப் புத்தகம் வெளியானது என்று நினைவு. அவர் தளத்தில் சில படைப்புகள் படித்திருக்கிறேன் என்பதால் இந்தப் புத்தகம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கு என் முதல் நன்றி ஸ்ரீராம்! நூல் வாங்கிய பின் வாசித்து விட்டு கண்டிப்பாக உங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தளம் பற்றியும் அதன் உறுப்பினர்கள் பற்றியும் வை.கோபு சார் பதிவின் மூலம் அறிந்தேன். அதில் சில பாசிட்டிவ் செய்திகளையும் பதிவுகளையும் வாசித்தேன். அவை வெற்று அரட்டையாக இல்லாமல் தரமான பதிவுகளாக இருந்தன. உங்களைப் போன்ற சிறந்த பதிவர்களின் அறிமுகம் கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்களுக்கு மீண்டும் என் நன்றி!

   Delete