நல்வரவு

வணக்கம் !

Friday, 24 March 2017

என் பார்வையில் - 'பாட்டன் காட்டைத் தேடி,' கவிதைத்தொகுப்பு

அமெரிக்க வாழ் கவிஞர் கிரேஸ் பிரதிபாவின், இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. அண்மையில் புஸ்தகா டிஜிட்டல் மீடியா மின்னூலாக வெளியிட்டுள்ளது. இவருடைய முதல் நூல்:- துளிர்விடும் விதைகள்.

இவரின் வலைப்பூ, தேன்மதுரத் தமிழ்  சங்கத் தமிழிலக்கியத்தை, ஆங்கில மொழியாக்கம் செய்யும் அரும்பணியிலும், ஈடுபட்டிருக்கிறார்.

புதுக்கோட்டை கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள், இந்நூலுக்கு எழுதிய சிறப்பான முன்னுரையை வாசிக்க இணைப்பு:-கிரேஸ் பிரதிபா நூலுக்கான எனது முன்னுரை

என்னைப் பெரிதும் கவர்ந்த, நான் மிகவும் ரசித்த, சில கவிதை வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே, இப்பதிவின் நோக்கம்.

இயற்கையின் மீது காதல், இயற்கைச் சூழலைப் பாதுகாத்தலின் அவசியம்,  சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றோடு, மனிதநேயம், பெண் குழந்தை கருக்கலைப்பு, குழந்தைத் தொழிலாளர், சாதிப்பாகுபாடு, பண்டமாற்றுப் பொருளாகும் வாக்குரிமை போன்ற, முக்கியமான சமூகப் பிரச்சினைகளும், இவர் கவிதைகளில் பாடுபொருளாகியிருப்பது சிறப்பு!      
கடல் கடந்து வாழ்ந்தாலும், தாய்மொழி மீதும், தாய்நாட்டின் மீதும் இவர் கொண்டிருக்கும் பற்றும், பாசமும் போற்றுதற்குரியது.  தமிழரின் கண்மூடித்தனமான, ஆங்கில மோகத்தைக் கிண்டல் செய்யும் கவிதை ‘தமிழ்ப்புத்தாண்டு?’:-  

தமிழ்ப் புத்தாண்டாம்
திக்கெட்டும் கேட்கிறது
ஹாப்பி நியூ இயர்!”

கேள்விக்குறியாகியிருக்கும், உழவரின் வாழ்வாதாரம் குறித்த, இவர் கவலையைப் பதிவு செய்கிறது ‘ழிபிறக்குமா?’ என்ற கவிதை:-
உழவும் அறுப்புமின்றி, அர்த்தமற்ற பொங்கல்
புதுப்பானை, மஞ்சள், அயல்நாட் டரிசி
வழிபிறக்குமா எம்உழவர்க்குத் தையே,

உலகம் தோன்றிய நாள்முதலாய், நிலவைப் போலவே, மழையும் கவிதைக்கு ஊற்றுக்கண்ணாய் விளங்குவதை., இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும், ஆறு விதைகள் உறுதிப்படுத்துகின்றன.  இயற்கையழகில் எனக்கும் மிகுந்த ஈடுபாடு உண்டு என்பதால், மழைக் கவிதைகளைப் பெரிதும் ரசித்தேன்.

சுட்டெரிக்கும் இக்கடுங்கோடையில், உடலையும், மனதையும் ஒரு சேரக் குளிர்விக்கும், ஜில்லென்ற சாரலில், நீங்களும் கொஞ்சம் நனைய, ‘மழை என்ற கவிதையிலிருந்து கொஞ்சம்:-
“………………………………………..
சிறகு விரித்திடவே, வானம் துலக்கினாய்
சிலிர்ப்பித்தாய் உயிர்க்கவே
திறந்த முகிலினின்று, கொட்டும் அழகில்
திகட்டாமல் மயக்கினாய்
பறந்த நினைவுகளில், பாடல் கருவெனப்
பட்டென்று வந்திறங்கினாய்….”

மழையைப் பேயோடு ஒப்பிடுவதைக் கண்டிக்கும் கவிதை:-
"மண்செழிக்கப் பெய்யும் மழையை
மனச்சான்று இன்றிப் பழிக்கிறாய்
பேயெனப் பெய்யும் மழை என்று
பேயெனப் பேராசை நீ கொண்டு!  (பேயெனப் பெய்யும் மழை)

மனிதனின் பேராசையால், நீர்நிலைகளையும், வடிகால்களையும் தூர்த்துப் பட்டா போட்டு விற்று விட்டு, வெள்ளம், வெள்ளம் எனப் புலம்புவது மடத்தனம் அல்லவாசாக்கடைகளில் பிளாஸ்டிக் பைகளையும், குப்பைகளையும் கொட்டி, நீர் வடிய வழியின்றித் தேக்குவது யார் குற்றம்

"பயன்தரவே பொழிந்தேன்
பேயெனப் பேர் பெற்றேன்
பட்டா போட்டது யார்,
என்னிடத்தை?”  (பேயெனப் பெய்யும் மழை)

அதனால் தான் வடிகால். குப்பை மேலாண்மை இவற்றில் நாம் கவனம் செலுத்தவேண்டுமேயன்றி, மழையைப் பழித்தல் பிழை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் கவிஞர்:

"மழையைப் பழித்தல் பிழை
மழைநீர் வடிகால்
குப்பை மேலாண்மை
தேவை தெரிநிலை,"  (தெரிநிலை)

ஒரு நாள் பள்ளிக்குச் சிறுத்தை வந்த உண்மை நிகழ்வை வைத்துப் பாட்டன் காட்டைத் தேடி என்ற கவிதை புனைந்திருக்கிறார். இதுவே இந்நூலின் தலைப்பு!

சிறுத்தை பள்ளிக்கு வந்ததற்கான காரணங்கள், என்னவாக இருக்கும் எனக் கேள்விக்கணைகள் அடுக்கடுக்காகத் தொடுக்கும் இவர், வாழ்விடம் பறிக்கப்பட்டதன் காரணமாகத் தன் பாட்டன் வாழ்ந்த காட்டைத் தேடி வந்ததோ .என ஐயுறுவது, ரசிக்க வைக்கிறது.

வாக்குரிமையைப் பயன்படுத்துவதன் அவசியம் பற்றி, இவர் கவிதைகள் அதிகம் பேசுகின்றன

பிரியாணிக்கு மாற்றில்லை
உரிமை
பெரிதினும் பெரிது  (பெரிதினும் பெரிது

தொழில்நுட்பமும், பொருளாதாரமும் வளர்ந்த இந்நாளில், உறவுகள் தனிமைப்பட்டுத் தனித்தனி தீவுகளாகிவிட்ட சோகத்தைப் பதிவு செய்கின்ற வரிகள்-

"தலைக்கு ஒரு அறை
தனித்தனி செல்பேசி
பொருளாதார வளர்ச்சியா
ஒட்டுறவின் வீழ்ச்சியா?"  (வளர்ச்சி)

நாடு விடுதலை பெற்று, அரை நூற்றாண்டுக்கு மேலாகியும், இன்னும் பல குழந்தைத் தொழிலாளர்க்குக் கல்வி, எட்டாக்கனியாகவே இருக்கின்றது என்ற அவலத்தைச் சொல்லும் இக்கவிதை, மனதைத் தொட்டது.

"கருங்கல் சுமந்தால், கவள உணவு
கரும்பலகைப் பாடம், கனவே எமக்கு
கழிவு பொறுக்கிக் கடக்கும் பொழுதில்
ஒலிக்கும் மணியோசை, உள்ளம் உருக்கிடும்,  
.........................................."(உணரா மனிதம்)
முத்தாய்ப்பாக என்னைப் பெரிதும் ஈர்த்த, 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்', 'அன்பே சிவம்,' போன்ற உயர்ந்த கருத்துக்களை வலியுறுத்தும், ஒரு கவிதையைச் சொல்லி முடிக்கின்றேன். 

"மொழி வரம்பின்றி
உளமொன்றச் செய்யும்
எல்லைக்கோடு தாண்டியும்
நல்லெண்ணம் பரப்பும்
முகத்தில் விரியும் மென்கோடு
அன்பின் யுனிகோடு,"   (புன்னகை)

தங்கை கிரேஸ் பிரதிபாவுக்குப் பாராட்டு!  இன்னும் பல நூல்கள் வெளியிட  வாழ்த்துகிறேன்!

39 comments:

 1. பொதுவாகக் கவிதை என்றாலே காத தூரம் ஓடுபவன் நான் என்றாலும் (இதற்கு முக்கியக் காரணம் கவிஞர் என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டு, பலரும் இன்று கவிதை என்ற பெயரில் ஏதேதோ கிறுக்கி வருவதாக எனக்கோர் எண்ணம் இருப்பதால் மட்டுமே) தங்களின் இந்தக் கவிதை நூல் விமர்சனத்தினால் கவிதைகள் மேல் எனக்கும் காதலே பிறந்துவிட்டது எனச் சொன்னால் அது மிகையாகாது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வாக இருக்கிறது ஐயா, உங்கள் கருத்தினைக் கண்டு. கலையரசி அக்காவின் அருமையான விமர்சனமே காரணம். நன்றி.

   Delete
  2. வாங்க கோபு சார்! வணக்கம். என் விமர்சனத்தினால், கவிதைகள் மீது உங்களுக்குக் காதலே பிறந்துவிட்டது எனக்கேட்க மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. கவிதை என்ற பெயரில் சிலர் ஏதேதோ கிறுக்குகிறார்கள் என்ற உங்கள் கருத்திலும் உண்மை இல்லாமல் இல்லை. உரைநடையை மடக்கி மடக்கி எழுதி அதைக் கவிதை என்பாரும் உளர். ஆனால் கிரேஸ் பிரதிபா கவிதை எழுதுவ்தில் வல்லவர். இவரின் தமிழ்ப்பற்றும், சமுதாய நோக்கும் பாராட்டப்பட வேண்டியது. உங்கள் முதல் பின்னூட்டத்துக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!

   Delete
 2. தங்களின் இந்தப்பதிவின் மூலம் நானும் மிகவும் இரசித்தவை:

  //“தமிழ்ப் புத்தாண்டாம் .. திக்கெட்டும் கேட்கிறது .. ஹாப்பி நியூ இயர்!”//

  //பேயெனப் பெய்யும் மழை என்று பேயெனப் பேராசை நீ கொண்டு! //

  //"மழையைப் பழித்தல் பிழை .. மழைநீர் வடிகால், குப்பை மேலாண்மை
  தேவை தெரிநிலை,"//

  வளர்ச்சி, உணரா மனிதம் ஆகியவையும் நன்றாகவே எழுதப்பட்டிருப்பினும் கடைசி முத்தாய்ப்பான ....

  //"மொழி வரம்பின்றி உளமொன்றச் செய்யும்
  எல்லைக்கோடு தாண்டியும் நல்லெண்ணம் பரப்பும்
  முகத்தில் விரியும் மென்கோடு அன்பின் யுனிகோடு,"//

  என்பதை நானும் ’புன்னகை’யுடன் படித்து முடித்தேன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மீள்வருகைக்கு நன்றி. தாங்கள் மிகவும் ரசித்த வரிகளை எடுத்துக் காட்டிப் பாராட்டியமைக்கு, மிகவும் நன்றி கோபு சார்! நூலாசிரியருக்கு இதை விட மகிழ்ச்சி தருவது வெறொன்றுமில்லை. மீண்டும் நன்றி!

   Delete
 3. கரும்புபோல மிகச்சிறப்பாக எழுதியுள்ள நூலாசிரியர் அவர்களுக்கும், அதனை எங்கள் எல்லோருக்கும் சுலபமாகப் பருகும் வண்ணம், இங்கு கரும்பு ஜூஸாகப் பிழிந்து கொடுத்து, வரிக்கு வரி சிலாகித்துள்ள தங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள் + நன்றிகள், மேடம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்!

   Delete
 4. சிறந்த பாவலரின்
  அருமையான நூலறிமுகம்

  ReplyDelete
  Replies
  1. அருமையான நூலறிமுகம் என்ற பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா!

   Delete
 5. சகோதரி மிகச் சிறப்பாக கவிதை எழுதுவார்...
  அவரின் கவிதை நூலுக்கு மிகச் சிறப்பான விமர்சனம்...
  வாழ்த்துக்கள் சகோதரிகள் இருவருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சிறப்பான விமர்சனம் என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி குமார்!

   Delete
 6. மனம் நிறைந்த நன்றி அக்கா. மின்னூல் வந்தால் சொல்கிறேன் என்று உங்களிடம் சொல்லியது நினைவில் இருந்தாலும் சொல்ல முடியாமல், பதிவிட வேண்டும் என்று விரும்பினாலும் முடியாத சூழ்நிலை தற்பொழுது. நீங்களே கண்டுபிடித்து வாசித்து என் நூலைப் பற்றி அழகாக எழுதி பாராட்டியும்விட்டீர்கள். நெகிழ்ந்து போயிருக்கிறேன் அக்கா, உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மகிழ்வுடனும் அன்புடனும் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. இப்பதிவினைப் பற்றி எனக்குத் தகவல் தெரிவித்த முத்துநிலவன் அண்ணாவிற்கு சிறப்பான நன்றிகள்.

   Delete
  2. ஆன்லைனில் இது கிடைக்குமா என்று கேட்டேன் அல்லவா? புஸ்தகாவில் இந்நூல் வெளிவந்தவுடன் வாங்கிவிட்டேன் கிரேஸ்! படிக்கத் தான் தாமதமாகிவிட்டது. இன்னும் நிறைய கவிதைகளைச் சொல்ல விரும்பினேன். மிக நீண்டதாய் ஆகிவிடும் என்பதாலும், எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், வாசிப்பவருக்குச் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதாலும் சுருக்கிவிட்டேன். தொடர்ந்து நல்ல கவிதை நூல்கள் வெளியிட வேண்டும் என வாழ்த்துகிறேன் கிரேஸ்! சங்கத்தமிழ் ஆங்கில மொழியாக்கமும் தளர்வின்றித் தொடர்ந்திட வாழ்த்துகிறேன். பாராட்டுகள் கிரேஸ்!

   Delete
  3. வணக்கம் அக்கா. நலமா? நூல் வந்தவுடன் வாங்கிப் படித்து உங்கள் தளத்தில் பதிவிட்ட உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி அக்கா.
   கை வலியினால் தொடர்ந்து எழுதமுடியாமல், வாசிப்பைமட்டும் தொடர்ந்து கொண்டிருந்தேன். இப்பொழுது மீண்டும் முன்போல் எழுத்தைத் தொடரவேண்டும் என்று விரும்புகிறேன். இறைவன் அருளால் கையும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பதிவின் இணைப்பை என் தளத்தில் பதிவிடுகிறேன் அக்கா. மீண்டும் உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் அக்கா.
   அன்புடன்,
   கிரேஸ்

   Delete
 7. சிறுவரிகளாக சகோதரியின் தளத்தில் அவர் கவிதைகளை ரசித்திருக்கிறேன். எடுத்துக் கொடுத்திருக்கும் கவி வரிகளும் ரசிக்க வைக்கின்றன. பகிர்ந்த உங்களுக்கு நன்றியுடன் கவிதாயினிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ஸ்ரீராம்!

   Delete
 8. தேன்மதுரத் தமிழ் அவர்களின் கவிதை நூலுக்கு சிறப்பான அறிமுகம்..

  தேனும் தமிழும் சேர்ந்தால் தித்திப்பிற்கு பஞ்சமா!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தேனும் தமிழும் சேர்ந்தால் தித்திப்பிற்கு பஞ்சமா என்று உங்கள் பாணியில் மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள். சிறப்பான அறிமுகம் என்ற பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி துரை சார்!

   Delete
 9. நல்லதொரு அறிமுகம். நன்றி.

  தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட்ஜி! தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

   Delete
 10. அருமையான விமர்சனம். மென்மேலும் படைப்புகளைப் படைக்க வாழ்த்துகள், நூலாசிரியருக்கு. பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி முனைவர் ஐயா!

   Delete
 11. //வாழ்விடம் பறிக்கப்பட்டதன் காரணமாகத் தன் பாட்டன் வாழ்ந்த காட்டைத் தேடி வந்ததோ என ஐயுறுவது, ரசிக்க வைக்கிறது.//

  யோசித்துப்பார்த்தால், நூலின் தலைப்புத் தேர்வும், அதற்கான காரணங்களும் வியக்கவும் ரசிக்கவும் வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. யோசித்து ரசித்து மீண்டும் கருத்திட்டதைக் கண்டு மகிழ்வும் நெகழ்ச்சியும் கலந்த நன்றி ஐயா. அன்பிற்கு சிரம்தாழ்ந்த வணக்கம்.

   Delete
  2. மீள்வருகைக்கும், கருத்துக்கும் மிக்வும் நன்றி கோபு சார்!

   Delete
 12. தோழி கிரேஸின் கவிதை வரிகள் எப்போதுமே நமை ஈர்ப்பவை. சமூகம் குறித்த சிந்தனையோ.. இயற்கையின்பால் கொண்ட காதலோ.. ஒட்டுமொத்த மானிட குலத்தின் அலட்சியத்தின் மீதான சாடலோ.. தேடலோ.. ஏதோவொன்று நம்மை அவரது கவிதைக்குள் ஈர்த்து கட்டிப்போட்டுவிடும். இங்கே அவரது நூலிலிருந்து உங்களைப் பெரிதும் கவர்ந்த கவிதைகளைச் சுருங்கச்சுட்டி சுவைக்கத் தந்தமைக்கு மிகவும் நன்றி அக்கா.. தோழிக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. தலைப்பொன்றே போதும் அவரது கவிதைவரிகளின் வீச்சுணர..

  ReplyDelete
  Replies
  1. ஆழ்ந்த அன்பான கருத்திற்கு மனமார்ந்த நன்றி கீதமஞ்சரி.

   Delete
 13. நல்ல பதிவு. இதுபோலவே முடிந்தபோதெல்லாம் மற்ற மின்னூல்களையும்- அவை இலவசமோ-விலையுள்ளதோ - எதுவானாலும் சரி-நீங்கள் அறிமுகப்படுத்தவேண்டும். மின்னூல்கள் வேகமாகப் பரவுவதற்கு எளிய வழி இதுதான். நாம் அனைவரும் முயல்வோமே!

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா!

   Delete
  2. மிக்க நன்றி ஐயா.
   ஆமாம், நீங்கள் சொல்வது போல நாம் அனைவரும் மின்னூட்கள் பரவுவதற்கு முயல்வோம்.

   Delete