நல்வரவு

வணக்கம் !

Friday, 20 April 2012

பெண் பார்க்கும் படலம் - சிறுகதை

இரண்டு வருடங்களாகத் தேடியும், அவன் மனதிற்குப் பிடித்த மாதிரி பெண் அமையாததில் வெறுப்புற்றிருந்தான் குமார். அதற்கு முக்கிய காரணகர்த்தா, அவன் அப்பாவின் நம்பிக்கைக்குரிய குடும்ப சோதிடர்.

'ஜாதகப் பொருத்தமில்லை' என்று காரணம் சொல்லியே பெரும்பாலான பெண் ஜாதகங்களைத் தள்ளுபடி செய்வதில் குறியாக இருந்தார் அவர்.

ஒரு காலத்தில் நல்ல வருமானம் ஈட்டித் தந்த அவரது தொழில், தற்காலத்தில் பெருகி வரும் காதல் திருமணங்களால் சுத்தமாகப் படுத்துவிட்டது. மேலும் கணிணியில் 'சாப்ட்வேர்' போட்டு ஜாதகம் கணிக்கும்(!) இக்காலத்தில், தம்மிடம் வரும் ஒன்றிரண்டு நபர்களின் திருமணம் விரைவில் முடிந்து விடக்கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாயிருந்தார்.

"7க்குடைய புதன் ராகுவுடன் சம்பந்தப்பட்டு, 2ம் இடத்தில் இருப்பதால் களத்திர தோஷம் உள்ளது. 4ல் செவ்வாய் அமர்ந்து தோஷம் அடைந்துள்ளது" என்று ஏதேதோ சொல்லி குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார்.

"மாமா, இந்தச் செவ்வாய், புதன் எல்லாம் அவங்களுக்குப் புடிச்ச இடத்துல சஞ்சரிச்சிட்டுப் போகட்டும். அவங்களைத் தொந்தரவு பண்ணாதீங்க. எனக்குக் கொஞ்சம் கருணை காட்டுங்க" என்று அவ்வப்போது அப்பாவிற்குத் தெரியாமல் தனியே சந்தித்து குமார் அளித்த 'சன்மான'த்தினால், போனால் போகிறது என்று பெரிய மனது பண்ணி, ஜாதகங்கள் ஒன்றிரண்டு பொருந்துவதாக எடுத்துக் கொடுப்பார்.

அறிவுமதி என்ற பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தபோது, தனது கற்பனை கதாநாயகி கிடைத்துவிட்டாள் என்று அகமகிழ்ந்தான் குமார். பெயருக் கேற்றாற்போல் அறிவும் அழகும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற வளாகவே அவள் இருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.

பெண் பார்க்கப் போன இடத்தில், காரில் துவங்கி கைக்கடிகாரம் வரை, அவன் அம்மா கேட்ட வரதட்சிணைப் பட்டியலைக் கேட்டு மலைத்துப் போன அப்பெண், " கார் கேட்டீங்க சரி. உங்க மகனுக்குச் சொந்தமா ஒரு கைக்கடிகாரம் வாங்கிக்கக் கூடவா துப்பில்லை?" என்று கேட்டு விட்டாள். முகத்தில் காறித் துப்பாத குறைதான்!.

'நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டு விட்டாளே!', என்று புலம்பியவன், "அம்மா, இனிமே வரதட்சிணை அது இதுன்னு கேட்டு நீங்க வாயே திறக்கக்கூடாது" என்று உத்தரவு போட்டுவிட்டான். இப்போதெல்லாம் அம்மா, பெண் வீட்டில் சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறப்பதோடு சரி.

அதற்குப் பிறகு வந்த ஏழெட்டு வரன்களும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மாலதி என்ற பெண்ணைப் பார்த்தபோது ஓரளவுக்குத் திருப்தியேற்பட்டது. இந்த வரன் முடிந்து விடும் என்ற நம்பிக்கையேற்பட்ட நிலையில், அவன் அப்பா சும்மாயில்லாமல், "உங்கப் பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா?" என்று வழக்கமாகத் தாம் கேட்கும் கேள்வியைக் கேட்டுவிட்டார்.

அதைக் கேட்டதும், அவள் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

"எங்கப் பொண்ணை வைச்சுக் கூத்துப் பட்டறையா நடத்தப் போறீங்க? அவளுக்கு எது முக்கியமாத் தெரியணுமோ, அதை நான் கத்துக் கொடுத்திட்டேன்" என்றார், அவன் அம்மாவைப் பார்த்து முறைத்தபடி.

வாயைத் திறந்து அவரை ஏதோ கேட்க நினைத்தாள் அம்மா. ஆனால் 'அசோகா' என்ற பெயரில், கோதுமை மாவில் அவர்கள் செய்து வைத்திருந்த இனிப்பு, பிசினி போல் மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள, வாயைத் திறக்க முடியாமல் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.

மனைவியின் அவஸ்தையைப் புரிந்து கொண்ட அவன் தந்தை, அவளுக்கு உதவும் விதத்தில், அவள் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டார்.

"என்னது? சமையல் சொல்லிக் கொடுத்திருக்கீங்களா?"

"சமையலா? அதை விட இந்தக் காலத்துப் பொண்ணுங்க, தங்களைக் காப்பாத்திக்க கராத்தே கத்துக்கிறது ரொம்ப அவசியம். அதனால எம் பொண்ணுக்கு கராத்தே கத்துக் கொடுத்திட்டேன். என்ன நான் சொல்றது?"

"சரிதான், சரிதான்" என்று தலையாட்டினாள் அம்மா.

" கராத்தேல, எம் பொண்ணு பிளாக் பெல்ட் வாங்கியிருக்கா" என்றார் பெருமிதத்துடன்.

அவ்வளவுதான். "போய்த் தகவல் அனுப்புகிறோம்" என்று சொல்லி வந்துவிட்டார்கள் . இப்போது அப்பெண் இருந்த திசையில் குமார் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, கண்மணி என்ற பெண்ணின் புகைப்படம் அவனுக்குப் பிடித்திருந்தது. பெண் நல்ல கலராகவும் முகக்களையாயும் இருப்பது போல் தோன்றியது. பெண் பார்க்கப் போனபோது, மின்னல் வேகத்தில் வெளியே வந்து போன அவளைச் சரியாகப் பார்க்கவிடாமல், அவனது வேலை, சம்பளம் முதலிய விவரங்களைக் கேட்டுத் தொண தொணத்துக் கொண்டிருந்தான் அவளின் சகோதரன்.

அவள் தந்தையிடம் அனுமதி பெற்று, தனியே அவளைச் சந்தித்த போது அவனுக்குப் பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது. அவன் எதிர்பார்த்தது போல் அல்லாமல், நிறம் ரொம்பக் கம்மியாயும், புகைப்படத்தில் இருந்ததை விட அதிக குண்டாகவும் இருந்தாள்.

“ஃபோகஸ் லைட் வைச்சு போட்டோ எடுத்து அனுப்பிட்டாரா உங்கப்பா? போட்டோவிலே ரொம்பக் கலராயிருந்தது மாதிரி தெரிஞ்சுச்சு" என்றான் கிண்டலாக.

"ஐஸ்வர்யாராய் மாதிரி பொண்ணு தேடறீங்க போலேயிருக்கு. அதுக்கு நீங்க அபிஷேக் பச்சனாயிருக்கணும். மண்டையில நாலே நாலு முடியோட, ஓமக்குச்சி மாதிரி இருந்துக்கிட்டு, ஐஸ்வர்யா ரேஞ்சுக்குப் பொண்ணு தேடறது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?" என்றாள் அவள் படு நக்கலாக.

இதைக் கேட்ட நம் கதாநாயகனின் முகம் எப்படியிருந்தது என்பதை 
வாசிப்பவரின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். 

(நிலாச்சாரலில் 06/07/2009 ல் எழுதியது)

10 comments:

  1. பெண்பார்க்கும் படலம் என்று
    நடக்கும் சில சம்பவங்களை
    சகிக்க முடியாது...
    நாயகி சரியாத்தான் கேள்வி கேட்டிருக்காங்க..

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி மகேந்திரன் சார்!

      Delete
  2. சிறுகதை அருமை எழுத்து நடை

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. அருமை எனப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி.

      Delete
  3. எல்லாம் சரி, அப்புறம் நம்ம கதாநாயகன் கல்யாணம் பண்ணினாரா, இல்லையா? பெரிய சஸ்பென்சில் உட்டுட்டாங்களே?

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கதையைப் படித்தமைக்கும் என் முதல் நன்றி. தனக்கு வருபவள் ரம்பையாக, ஊர்வசியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பின்றி தனக்கு ஏற்றாற் போல் கொஞ்சம் காம்பரமைஸ் பண்ணிக் கொண்டால் நம் கதாநாயகனுக்கு நிச்சயம் பெண் கிடைப்பாள்.

      Delete
  4. Replies
    1. தாங்கள் முதலில் ஒன்றைத் திருந்து கொள்ள வேண்டும் ! நாட்டில் தற்போது பெண்களே இல்லை. எங்கெங்கு காணினும் ஆண்கள் ! ஆண்கள் ! ஆண்கள் ! பெண்களுக்குப் படு கிராக்கி ! நான், கிட்டத்தட்ட எண்ணூற்றி எழுபத்தி எட்டு பெண்கள் பார்த்து விட்டேன். அனைவரும் ஒருமனதாக அரை நொடி கூட யோசிக்காமல் என்னை நிராகரித்தார்கள். கரிக்கிறார்கள் ! கரிப்பார்கள் ! காரணம்.....சம்பளம் ...தோற்றம் .....போலித்தனம் .....இவையாவும் என்னிடம் அதீதமாக இல்லை ! நான் கின்னசில் அப்ளை செய்யலாம் என்று கூட இருக்கிறேன்......" உலகிலேயே அதிகப் பெண்கள் பார்த்து அவர்களால் நிராகரிக்கப் பட்ட ஆடவன் ! " என்பது என் சாதனைக்கான அடைமொழியாகலாம்.

      மேட்ரிமோனியில், மூன்று மாதங்களுக்கு மூவாயிரத்தி ஐநூறு பேக்கேஜ் தேர்ந்தெடுத்து, அதில் பெண்ணின் சுயவிவரக் குறிப்பு பார்த்து, அலைபேசி எண் பார்த்து ஆவலோடு அழைத்தால் எதிர்முனை, உலகமகாத் தெனாவெட்டோடு " ஹெல்ல்ல்லோ " என்கிறது. நாம் பயபக்தியோடு, " மேட்ரிமோனிலே உங்க பெண் புரபைல் பார்த்தோம்........அதான் மேற்கொண்டு பேசலாம்னு ......" என்றால், " பையன் சம்பளம் எவ்வளவு ? " என்று அதிரடியாக வருகிறது கேள்வி ! " மாசம் இருபதாயிரங்க " என்றால், " இருபதா .......ஏய் விஜயா ....இருபதாம் .......வேண்டாமா ......நாப்பதா ......சரி ........ஏங்க ஐம்பதுன்னா மேற்கொண்டு பேசலாம்.... அதோட பையன் சாப்ட்வேர் ல இருக்கணும். பாரின்ல இருந்த இன்னும் தேவலை ! நல்ல பர்சனாலிட்டியா, பாக்க லுக்கா இருக்கறது ரொம்ப முக்கியம்...... என்ன வைச்சுடவா " தடேல் என்று பதிலைக் கூட எதிர்பாராமல் மறுமுனை தொடர்பற்றுப் போகிறது.

      திருமணக் கலாச்சாரம் மாறுகிறது. பெண்ணைப் பெற்றவன் யோகி ! ஆணாகப் பிறந்தவன் பாவி ! அதிலும் இந்தக் காலப் பெண்கள் இருக்கிறார்களே ! கடவுளுக்கே அடுக்காது. அனைத்து பெண்களுக்கும் பாய் பிரண்ட்கள் ! காதலர்கள் பட்டியல் தனி ! கருப்பாக, களையே இல்லாமல் ஈர்க்குச்சி போல இருக்கும் பெண் கூட ஹெட் போன் மாட்டிக்கொண்டு எவனிடமோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டு போகிறாள். ஆனாலும் பெண்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். பாய் பிரண்டு வேறு ! காதலன் வேறு ! கணவன் வேறு ! மூன்றும் ஒரே ஒருவனாக இருந்தால் அது அவர்களுக்கு சுத்த போர் !

      செட்டியார் ஜாதியில், வாணிய செட்டியார் உட்பிரிவில், பட்டுளைய மகரிஷி கோத்திரம் அல்லாத இப்படி அனைத்தும் ஒத்துப் போகிற ஒரு பெண்ணைத் தான் கட்டி வைப்பது என பெற்றோர்கள் வரட்டுப் பிடிவாதம் பிடித்தால் என் போன்றவர்கள் கடைசிவரை பிரமச்சாரியாகவே பிறவியை முடிக்க வேண்டியது தான்.

      சரி ..கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் ! .... என் பெயர் தேவராஜன் ! வயது இருபத்தி ஒன்பது முடிந்து முப்பது நடக்கிறது. ஜாதி வாணிய செட்டியார், பட்டுளைய மகரிஷி கோத்திரம், உத்திரட்டாதி நட்சத்திரம் நாலாம் பாதம் , சென்னையில் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தில் குவாலிட்டி கண்ட்ரோலராக இருக்கிறேன், பிரம்மச்சரிய அரை இல்லை அறை வாழ்க்கை, மாதம் இருபத்தி இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய் கிராஸ் ! நெட் சாலரி பதினெட்டாயிரத்து முன்னூறு ரூபாய் ! தயவுசெய்து தங்கள் சுற்றுவட்டத்தில் பெண் இருந்தால் சொல்லிவையுங்கள் ! ... இப்படிக் கேட்டதற்கு மன்னிக்கவும் ! எனக்கு வேறு வழியே தெரியவில்லை ! கண்ணைக் கட்டி, கால், கை அனைத்தையும் கட்டி, அமேசான் புதர்க்காட்டில் விட்டது போல இருக்கிறது ! தயவு செய்து சொல்லிவையுங்கள் ! ஒரு சகோதரியாக நினைத்துத் தான் கேட்கிறேன் ! தங்களுக்குப் புண்ணியமாகப் போகும் !

      அதுமுடியாவிட்டாலும் பரவாயில்லை. அவனவன் தலையெழுத்து எப்படியோ ? குறைந்தபட்சம் எனது இந்த பிரம்மச்சரியப் புலம்பலை இன்னொரு கதை அல்லது நாவல் எழுத கருவாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ! பாவப்பட்ட பிரம்மச்சாரிகளின் உலகத்தில் நாளை தங்களுக்கு ஒரு சிலை வைக்கப்படும் !!! நன்றி !

      Delete
    2. நீங்கள் சொல்வதிலும் உண்மையிருக்கிறது குரு!

      ஒரு காலத்தில் பெண்ணுக்கு வரதட்சிணை என்ற பெயரில் பெண்ணின் பெற்றோரை வறுத்தெடுத்தார்கள். பெண் என்றாலே செலவு என்று பயந்து பெரும்பாலோர் பெண் குழந்தையைக் கருவிலேயே கொன்று விட்டார்கள். தென் தமிழகத்தில் இன்று கூட பெண் சிசுக் கொலை நடப்பதாகச் சொல்கிறார்கள். விளைவு?
      ஆண் பெண் விகிதாச்சாரம் 10:7 என்றாகிவிட்டதாம். எனவே பெண்ணுக்கு ஏகப்பட்ட கிராக்கி. இதனால் தான் பெண்ணின் பெற்றோர் இப்போது அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
      காதல் கல்யாணம் இக்காலத்தில் சகஜமாகி விட்டது. இந்தக் காலக்கட்டத்திலும் நீங்கள் செட்டியார் ஜாதியில், வாணிய செட்டியார் உட்பிரிவில், பட்டுளைய மகரிஷி கோத்திரம் அல்லாத இப்படி அனைத்தும் ஒத்துப் போகிற ஒரு பெண்ணைத் தேடினால் அமைவது கஷ்டமே.
      காலத்துக்குத் தகுந்தாற்போல் ஜாதியை விட்டு வெளியே வாருங்கள். அல்லது உங்கள் ஜாதியின் உட்பிரிவுகளையாவது விட்டுத் தள்ளுங்கள்.

      நம் மண்ணின் நிறம் கறுப்பு என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். எனவே பெண் சிவப்பாய், வெள்ளையாய் இருக்க வேண்டும் என எல்லோருமே எதிர்பார்க்கும் பட்சத்தில் அமைவது கஷ்டம் தான்.
      ஜாதகத்தாலும் பலருடைய திருமணங்கள் தள்ளிப் போகின்றன.

      விரைவிலேயே உங்கள் மனதுக்கேற்ற பெண் அமைய வாழ்த்துகிறேன். மனதைத் தளர விடாமல் இன்னும் தேடுங்கள். நிச்சயம் கிடைப்பாள்.
      உங்கள் மனதிலுள்ளதை வெளிப்படையாகத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
    3. ஆயிரம் நன்றிகள் சகோதரி !

      இப்படி ஒரு ஆறுதல் மொழிகளுக்காகத் தான் காத்திருந்தேன் ! முற்றிலும் எதிர்மறை உணர்ச்சி ததும்பும் என் பின்னூட்டத்திற்கு, முழுக்க முழுக்க ஆக்கப் பூர்வமாய் பதில் அளித்துள்ளீர்கள் ! காலத்திற்குத் தகுந்தாற்போல ஜாதி நம் சமூகத்தை விட்டு இன்னும் மறையவில்லை. சில இடங்களில் அது புரையோடிப் போய் இருக்கிறது !

      எனக்குத் தெரிந்து, ஜாதி உட்பிரிவு மாறி தன் மகளுக்குக் காதல் திருமணம் செய்து வைத்த ஒரு பெற்றோரை அவர்களின் சுற்றத்தார் இன்னமும் ஒதுக்கித்தான் வைத்திருக்கின்றனர். சிலர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்குக் கூட அவர்களை அழைப்பதில்லை ! ஜாதி இன்னமும் பார்க்கப்படுகிறது ! அதிலும் பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது, பெற்றோர் நெற்றி சுருக்கி, புருவம் உயர்த்தி ஜாதி பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர். ஜாதி தான் அவர்களுக்கு ' ஸ்டேடஸ் அளவுகோல் ' ! ஒரு ஐம்பது வயது காலகட்டங்களில் பெற்றோர்கள் உழைத்தது போதும் என்று ஓய்வெடுக்க ஆரம்பிக்கிறார்கள். சொந்த பந்த விசேஷ நிகழ்ச்சிகளுக்குப் போவது தான் அவர்களின் பிரதான வேலையாக இருக்கிறது. பொழுது போக்கு, வடிகால் என்றும் வைத்துக் கொள்ளலாம். அங்கு யாராவது, " என் மகன் இப்பத்தான் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கான், உடனே ஒரு எம்.என்.சி ல கேம்பஸ் ல செலக்ட் ஆகிட்டான் ! மாசம் தர்ட்டி பைவ் சேலரி " என்று சிலாகித்துக் கொண்டால், அதைக் கேட்கும் சக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றியும் அவ்வாறு பெருமை பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் ! " ஈரோட்டுக்குப் பக்கத்துல ஒரு வரன் வந்தது. பொண்ணு புரபசராம் ! நல்ல அடக்கமான குடும்பத்துப் பொண்ணாம் ! குடும்பமும் நல்ல மாதிரித்தான் ! பையனுக்குப் பேசி முடிச்சுடலாம் " என்று பதிலுக்குத் தாங்களும் தங்கள் பிள்ளைகளை முன்னிட்டுப் பெருமை பேசவேண்டும் என்று துடிக்கிறார்கள் ! அவர்களைச் சொல்லி ஒன்றும் குற்றம் இல்லை !

      ஐம்பது வயது கடந்த ஒரு சராசரிப் பெற்றோர்களுக்கு அதற்கு மேல் வாழ்வில் என்ன பெரிய பிடிப்பு வந்து விடப் போகிறது ! தங்கள் பிள்ளைகளின் பொருட்டு, சமூக நியதிகளுக்கு உட்பட்டு ஒரு பிடிப்பை ஏற்படுத்திக் கொள்வது தான் அவர்களுக்கு வாழ்வதற்கான உந்துதலாக இருக்கிறது ! இதில் பிள்ளைகள் காதல் கீதல் என்று கொண்டு வந்தால், திடீரென்று பிடிப்பே இல்லாமல் தாங்கள் அந்தரத்தில் தனித்து விடப்பட்டது போல உணர்கிறார்கள் ! ஜாதியை முன்னிட்டு அந்தக் காதலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு தடை விதிப்பது எழுதப்படாத ஒரு சமூக நியதியாக மாறுகிறது. அந்த நியதியை மீறுபவர்கள் மறைமுகமாக ஒதுக்கப்படுகிறார்கள் ! இந்நிலை மாற இன்னும் சில பத்தாண்டுகள் கழிய வேண்டும் !

      காதலைப் பற்றிச் சொன்னீர்கள் ! இந்தக் காலப் பெண்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஜான் ஆப்ரஹாம், ஹ்ரிதிக் ரோஷன், விஜய் மல்லையா, மகேஷ் பாபு, விராட் கொஹ்லி போன்றோர்களைத் தான், ' முந்தானை முடிச்சு ' பாக்யராஜ் களை அவர்கள் தப்பித் தவறி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !

      ஆனாலும், அனுபவங்கள் கொடுத்த எதிர்மறை உணர்வுகளின் இருட்டில் வாழும் என் உலகத்தில் தங்களின் ஆறுதல் ஒரு சிறிய அகல்விளக்கு போல ஒளி கொண்டு வந்திருக்கிறது ! அந்த விளக்கின் ஒளியில் எனக்கான பாதை சற்றுப் புலப்படுவது போல இருக்கிறது ! வாழ்க்கைப் பயணத்தில் மேலும் தொடர்ந்து நடக்க ஒரு தெம்பு வருகிறது ! மீண்டும் மீண்டும் மீண்டும் நன்றிகள் சகோதரி !

      Delete