நல்வரவு

வணக்கம் !

Thursday, 5 April 2012

நம்பிக்கை


நீ என்ன சொன்னாலும் சரி இனிமே நான் அந்த வேலைக்குப் போகமாட்டேன், என்றான் முரளி.

கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல இதோட எத்தினி வேலைக்கு மாறிட்டீங்க?  ஒரு இடத்துலயாவது தொடர்ச்சியா ஆறு மாசம் இருந்திருக்கீங்களா? 

நான் என்ன பண்றது?  இந்த மேனேஜர் சரியான முசுடு.  எதுக்கெடுத்தாலும் என்மேல எரிஞ்சு எரிஞ்சு விழறான்.  எல்லார்க்கும் முன்னால என்னக் கன்னாபின்னான்னு திட்டறான். எனக்குத் தன்மானம் தான் பெரிசு.  நீயுமாச்சு ஒன் வேலையுமாச்சின்னு ராஜினாமாக் கடிதத்தை அவன் மூஞ்சுல விட்டெறிஞ்சுட்டு வந்துட்டேன். 

இப்படி முணுக்குன்னா ராஜினாமாக் கடிதத்தை விட்டெரிஞ்சிட்டு வந்தா அதனால யாருக்கு நஷ்டம்நாம சரியா வேலைச் செய்யலேன்னா மேனேஜரா இருக்குறவங்க, கொஞ்சம் சத்தம் போடத் தான் செய்வாங்கநாம தான் நம்ம முன் கோபத்தை கொஞ்சம் அடக்கிட்டு, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகணும்.    நாளைக்கே ஒங்க இடத்துல வேற யாராவது வேலையில சேர்ந்துடப் போறாங்க.  நாம தான் சாப்பாட்டுக்கு வழியில்லாமத் திண்டாடப் போறோம்அது ஏன் ஒங்களுக்குப் புரிய மாட்டேங்குது?” 

தோ பாரு.  தொண தொணன்னு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காத.  என்கிட்ட இருக்கிற திறமைக்கு ஒருத்தன் கிட்டப் போயி கையைக் கட்டி வாயைப் பொத்தி வேலை பார்க்கிறது எனக்குப் புடிக்கலே. அது என்னோட மெண்டாலிட்டிக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சுப் போச்சு.  அதனால நானே சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

அது சரி.  இது எப்ப எடுத்த முடிவு?  கம்பெனின்னா மொதல் வேணாமா?  அவ்ளோ பணத்துக்கு நாம எங்கப் போறது?

அதைப் பத்தி நீயொன்னும் கவலைப்பட வேணாம்.  நானும் என்னோட நண்பனும் சேர்ந்து தான் ஆரம்பிக்கப் போறோம். பண விஷயத்தை அவன் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான்.  மத்ததையெல்லாம் நான் பார்த்துக்குவேன்.

உருப்படியா எதையாவது செஞ்சாச் சரி.

ஒரு மாதம் கழிந்திருக்கும்.

அம்மா கற்பகம், என்னமோ மளிகை சாமான் இல்லேன்னு சொன்னியே.  என்ன வேணும்னு எழுதிக் கொடு.  போய் வாங்கிட்டு வரேன்.

ஏற்கெனவே எழுதி வைச்சிருக்கேன் மாமா.  தோ தர்றேன்..

என்னங்க, சும்மாத் தானே இருக்கீங்க.  நீங்களும் மாமா கூட போயிட்டு வாங்களேன். தனியாளாத் தூக்கிட்டு நடக்க, ரொம்பச் சிரமப்படுவாரு.

இருங்கப்பா, நானும் வரேன்.

என்னப்பா முரளி, கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லி ஒரு மாசம் ஓடிப் போயிடுச்சி.  உருப்படியா இன்னும் ஒன்னும் பண்ணக் காணோம்.  ஒங்கப் பையனுக்கு நீங்களாவது புத்திமதி சொல்லி, ஏதாவது வேலைக்கு அனுப்பக் கூடாதான்னு, தினந் தினம் மருமகப் பொண்ணு புலம்பறதைப் பார்த்தா ரொம்பக் கஷ்டமாயிருக்கு.  சம்பாதிக்கிற வயசுல நாள் முழுக்க ஒரு ஆம்பிளை, இப்டி வீட்டுல வெட்டியா ஒட்கார்ந்திருந்தா யாருக்கும் மனசு சங்கடமாத் தானே இருக்கும்?

எனக்கு வர்ற சொற்ப பென்ஷன் பணத்துல, எவ்வளவு நாளைக்குத் தான் குடும்பத்தை நடத்த முடியும்?  முடிவா என்ன தான் செய்யறதா உத்தேசம்?  பணம் கொடுக்கறதாச் சொன்ன ஒன் நண்பன், கடைசி நிமிஷத்துல தர மாட்டேன்னு சொல்லிக் கையை விரிச்சிட்டானா?

அதல்லாம் இல்லப்பா.  என்னோட திறமையிலேயும் உழைப்பிலேயும் என்னை விட அவனுக்கு நம்பிக்கை அதிகமா இருக்குப்பா.

அப்புறம் என்ன? ஆரம்பிச்சிட வேண்டியது தானே?

என்னோட கவலையெல்லாம் மார்க்கெட்டிங் பத்தித் தான்.   முன்ன மாதிரி இப்ப இல்லப்பா.  நான் இறங்க நினைக்கிற துறையில, போட்டி இப்ப ரொம்ப அதிகமாயிடுச்சி.  பெரிய பெரிய வெளிநாட்டுக் கம்பெனி யெல்லாம், இந்தியாவுக்குள்ள வந்து விற்பனையை ஆரம்பிச்சிட்டாங்க.  அந்தப் பெரிய முதலைகளோட போட்டிப் போட்டு இந்தச் சின்ன மீன் குஞ்சால ஜெயிக்க முடியுமான்னு, ரொம்பப் பயமாயிருக்குப்பா.  அதனால தான் ஆரம்பிக்கிறதா, வேண்டாமான்னு ஒரே குழப்பத்துல இருக்கேன்.

ஒரு நிமிஷம்,  இந்தப் பையைப் புடி.  போயி கொய்யாப் பழம் வாங்கிட்டு வந்துடறேன்.

அடுத்த நிமிடம் அவன் தந்தை, ஷோரூம் வாசலுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.

முரளி அந்தக் கிழவியைப் பார்த்தான்.  மெழுகுவர்த்தியொன்றை ஏற்றி வைத்துக் கொண்டு, பத்துப் பனிரெண்டு பழங்களை மூன்று நான்கு கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு கூறு பத்து ரூபா,என்று கூவிக் கொண்டு அமர்ந்திருந்தாள். 

வாப்பா. நல்லாயிருக்கிறீயா?  எங்க ஒன்னைக் காணோமேன்னு ரெண்டு நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன்.  ஒனக்குன்னு நல்ல பழமாப் பொறுக்கித் தனியா எடுத்து வைச்சிருக்கேன்.  இந்தா எடுத்துட்டுப் போ

பேரம் எதுவும் பேசாமல், தன் கைப்பையிலிருந்து கிழவி சொன்ன காசை எடுத்து நீட்டிப் பழம் வாங்கி வந்த தந்தையைக் கோபமாக முறைத்தான் முரளி.

இதைப் போயி ஏன் வாங்கினீங்க? ரொம்பச் சின்ன சின்னதா இருக்குது.  காசு கொஞ்சம் அதிகம்னாலும், பக்கத்து ஷோ ரூம்ல பெரிசு பெரிசாப் பாலீதின் பையிலப் போட்டுப் பிரஷ்ஷா வைச்சிருக்கான்.  அதை வாங்கியிருக்கலாம்ல?

ஒரு பெரிய ஷாப்பிங் மால் பக்கத்துல, இந்த ராத்திரி நேரத்துல முணுக் முணுக்குன்னு ஒரு மெழுகுவர்த்தியை ஏத்தி வைச்சிக்கிட்டு, நாட்டுக் கொய்யாப் பழத்தைத் தன்னால விக்க முடியுங்கிற, அசைக்க முடியாத நம்பிக்கையோட கூவிக் கூவி வித்துக்கிட்டுயிருக்கிற,  இந்தக் கிழவிக் கிட்ட நாம கத்துக்க வேண்டிய பாடம் நிறைய இருக்குப்பா

தண்ணி தெளிச்சி பாலீதின் பையில போட்டு வைச்சு யானை விலை, குதிரை விலை சொன்னாலும், மறு பேச்சு பேசாம வாங்கிட்டுப் போற நாம, இந்தக் கிழவிக்கிட்ட ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்க்குப் பேரம் பேசிக்கிட்டு நிப்போம்.  இந்தச் சின்ன நாட்டுக் கொய்யாவில இருக்குற ருசி, அவங்கிட்ட இருக்கிற பெரிய பழத்துல கிடைக்குமா சொல்லு?.

எத்தனை பெரிய வெளிநாட்டுக் கடைகள் வந்தா என்ன? புதுசு புதுசா வியாபார உத்தியைப் பயன்படுத்தினா என்ன? மக்களோட  மனசறிஞ்சி வியாபாரம் பண்ணி, தனக்குன்னு வாடிக்கையாளர் சிலரைச் சேர்த்து வைச்சிருக்கிற, இந்தக் கிழவிக்கு முன்னால, அதெல்லாம் ஒன்னும் எடுபடாது.

இந்த வயசிலேயும் புள்ளைங்களை நம்பாம, உழைச்சிச் சாப்பிடணும்னு நினைக்கிறாளே, அதை நான் மதிக்கிறேன் முரளி. அதனால என்னிக்குமே நான் இந்தக் கிழவிக்கிட்ட தான் கொய்யாப்பழம் வாங்குவேன்.

முரளிக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

17 comments:

  1. நம்பிக்கை என்ற ஊஞ்சலில் தான்
    வாழ்க்கை என்பது ஆடிக்கொண்டு இருக்கிறது.
    இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டே தான் இருக்கும்.
    நல்ல கதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அருணா!

      Delete
  2. முரளிக்கு மட்டுமா
    படிப்பவர்களுக்கும் நல்ல படிப்பினை தரும்
    அருமையான கதை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்!

      Delete
  3. எல்லோருக்குமே ஏதோ புரிவது போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி மேடம்!

      Delete
  4. வணக்கம் சகோதரி,
    இன்னும் தெருவோரங்களில் எத்தனையோ வயதானவர்கள்
    தங்களின் வாழ்வின் நிலைப்பாட்டிற்காய்
    சிறுதொழில் செய்து பிழைக்கிறார்கள்..
    யாசிக்காது.. உழைத்து உண்ணவேண்டும் என்ற
    அவர்கள் மன உறுதி
    எண்ணற்றோருக்கு படிப்பினைதான்..
    நம்மால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு
    உதவி செய்யவேண்டும்.... அவர்கள் விற்கும் பொருட்களை வாங்கி...

    அருமையான கதை சொல்லி அழகான விஷயத்தை
    விளக்கி இருக்கிறீர்கள் சகோதரி..
    நன்றிகள் பல..

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மகேந்திரன் சார்!

      Delete
  5. வளர்ந்த மகனுக்கு அறிவுரை என்று நேரடியாகச் சொல்லாமல், ஒரு பழம் விற்கும் முதியவளின் மூலம் தன்னம்பிக்கையையும், உழைப்பின் அருமையையும் புகட்டிய தந்தையின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. நல்லதொரு கதைக்குப் பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!

      Delete
  6. அலைபாயும் மனங்களால் எத்தனையோ குடும்பம்
    அலைபாய்ந்து கொண்டிருக்க ,நிலைமாறா உழைப்பால்
    பாடம் நடத்தும் முதியவளுக்கு வெளிச்சம் பாயச்சியதற்காகவே
    பாராட்டுக்கள் கலையரசி

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு கருத்துடன் கூடிய பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி உமா!

      Delete
  7. // இந்தக் கிழவிக்கு முன்னால, அதெல்லாம் ஒன்னும் எடுபடாது. // இன்றும் என் வீட்டிற்கு மாம்பழம் கொண்டு வரும் பாட்டி இருகிறார்கள். அருமையான கதை. படித்ததும் பிடித்தது.

    ReplyDelete
  8. அருமையான கதை என்ற பாராட்டிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் சீனு சார்!

    ReplyDelete
  9. கலையரசி,

    பெரும்பாலும் வசனங்களிலேயே கதை சொல்லும் தங்கள் உத்தி மிகவும் யதார்த்தமாக மனதைத் தொடுகிறது. நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இந்தக் கதையைச் சொல்லலாம். சிறு வியாபாரி முதல் பெரிய வர்த்தக முதலைகள் வரை அனைவருக்குமான பாடம் இதில் இருக்கிறது தோழி ! அருமை !

    ReplyDelete
  10. அருமை எனப் பாராட்டியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன் குருச்சந்திரன்!

    ReplyDelete