உயர்நீதிமன்றம் அவனுக்கு அளித்திருந்த மரணதண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது.
சாவைப்பற்றி அவன் கவலைப்படவில்லை; தூக்குத் தண்டனை தனக்குக் கிடைக்கும் என்று தெரிந்தே இந்தக் கொலைகளை அவன் செய்திருந்தான்.
அவனது கவலையெல்லாம் சாவதற்கு முன் ஒரு தடவையாவது அவன் அம்மாவை நேரில் பார்த்து
விட வேண்டும் என்பதே. சிறையில் இருந்த இந்த நான்கு ஆண்டுகளில் அம்மா ஒரு தடவை கூட நேரில்
வந்து அவனைச் சந்திக்கவில்லை.
தண்டனை நிறைவேற்றப்பட இன்னும் ஒரு வாரமே மீதமிருந்த நிலையில் அம்மாவிடமிருந்து
அவனுக்குக் கடிதம் வந்தது. நடுங்கும் கைகளினால் கடிதத்தை வாங்கிய அவன், அவசர அவசரமாகப் பிரித்துப் படிக்கத்
துவங்கினான்.
"அன்புள்ள ராஜா,
இப்படி ஆசையாய் உன்னைக் கூப்பிட்டு எவ்வளவு காலமாகிவிட்டது? நேரில் வந்து ஒரு முறையாவது உன்னைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசைதான். ஆனால் அதற்கான மன தைரியம் என்னிடமில்லை. உன்னைப் பார்த்தால் என்னால் அழத்தான் முடியும்.
ஒரு வார்த்தை கூட பேச வராது.
மேலும் பயணம் பண்ணக்கூடிய உடல்நிலையும் எனக்கில்லை. மனம் சோர்ந்தவுடன் உடலும் சோர்ந்து என்னை வீட்டின்
ஒரு மூலையில் முடக்கிவிட்டது. உன்னிடம் பகிர்ந்து
கொள்ளக் கூடிய செய்திகள் சில உள்ளன,
அதற்காகத் தான்
வழிகின்ற கண்ணீரைத் துடைத்து விட்டபடியே இதனை எழுதுகின்றேன்.
ஏற்கெனவே உன்னிடம் சொல்லியிருப்பதாக ஞாபகம். இருந்தாலும் இப்போது மீண்டும் சொல்கிறேன்.
.
எங்களுக்குத் திருமணமானவுடன் நானும் உன் அப்பாவும் சேர்ந்து சென்ற முதல் கோயில்
எது தெரியுமா? வேளாங்கண்ணி மாதாக் கோவில் தான்.
நீ என் வயிற்றில் இருந்த போது அளவுக்கதிகமான
வாந்தி காரணமாக இரத்த சோகையால் பீடிக்கப்பட்டு மிகவும் மெலிந்து சோர்வுற்றிருந்தேன்.
குழந்தையை நல்லபடியாக நான் பெற்றெடுக்க வேண்டுமே என்ற கவலையில் உன் பாட்டி தினமும்
நாகூர் ஆண்டவர் கோவிலுக்குச் சென்று பாத்தியா ஓதி விட்டு அங்கிருக்கும் புறாக்களுக்குக் கம்பு
இறைத்து விட்டு வருவார்.
நீங்கள் என்ன சாதி என்று நான் யாரிடமாவது கேட்டு விட்டால் போதும்;. உன் அப்பாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும்;. அநாகரிக மான கேள்வி என்று என்னைக்
கடிந்து கொள்வார்.
இப்படி எம்மதமும் சம்மதம் என்று எல்லா மதத்தினரோடும் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகிய குடும்பத்தில் பிறந்துவளர்ந்த உனக்கு எங்கே யிருந்து வந்தது இந்த மத வெறி?
குழந்தையாய் இருந்த போது உன்னை உலகம் புகழும் டாக்டராக, ஓர் இஞ்சினியராக இன்னும் என்னென்ன
பதவிகளிலெல்லாமோ அமர்த்திப் பார்த்து நானும் உன் அப்பாவும் எப்படியெல்லாம் கற்பனை செய்து
மகிழ்ந்திருப்போம்?
எங்களுடைய ஆசைகளை, கனவுகளை ஒரு நொடியில் தகர்த்துவிட்டாயே! எங்களுடைய ஆசைகளை நீநிறைவேற்றாமல் போயிருந்தால் கூடப் பரவாயில்லை. இப்படி ஒரு களங்கத்தை நம் வம்சத்துக்கு
ஏற்படுத்துவாய் எனநான் கனவிலும் நினைக்கவில்லையே.
நம் குடும்பத்திற்கு ஏற்பட்ட பழியைத் துடைக்க வழியின்றி மனதுக்குள் மருகி மருகியே
உன் அப்பாவுக்கு மாரடைப்பு வந்துவிட்டது. இப்படிச் செய்து விட்டானே,
இப்படித் தீராப் பழியை
ஏற்படுத்திவிட்டானே என்று தான் அவரது உயிர் உடலை விட்டுப் பிரியும் வரை ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தார். என்னைத் தனியாகத் தவிக்க விட்டு அவர் கண்ணை மூடிவிட்டார். ம்... அவர் புண்ணியம்
செய்தவர்!
நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பும் போதெல்லாம் நீ சொன்ன சப்பைக் கட்டுகளை உண்மை
என்று நம்பி ஏமாந்திருந்த என் தலையில் ஒரே யடியாகக் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டாயே! ஏதோ இயக்கத்தில் சேர்ந்து, நம் மதத்தைக்காப்பாற்றுகிறேன் பேர்வழி என்ற சொல்லிக் கொண்டு மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை அழிக்கும்
சதி வேலையில் நீ ஈடுபட்டிருந்த விஷயம் எனக்குக் கொஞ்சம் கூடத் தெரியாமல் போயிற்றே!
கொஞ்சம் விழிப்புடனிருந்து உன்னை நல்வழிப்படுத்தியிருந்தால், இன்று உனக்கு இந்தக் கதி நேர்ந்திருக்காதே
என்று தான் என் உள்மனம் என்னை வாட்டி எடுக்கிறது.
என் வயிற்றில் பிறந்த பிள்ளை ஒரு நாளும் தப்புத் தண்டா செய்ய மாட்டான் என்று
தப்புக் கணக்குப் போட்டு விட்டேனே பாவி!
நல்லத் தூக்கம் என்னை விட்டு நீங்கிப் பல ஆண்டுகள் கடந்து விட்டன. வெளியில் தலைகாட்ட முடியவில்லை. யாரையாவது பார்த்தாலே,
அவர்கள் என் முதுக்குக்குப்
பின்னால், 'கொலைகாரனைப் பெற்றெடுத்தவள் இவள் தான் எனத் தூற்றுவார்களோ என அச்சம்.
'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்,' எனப் படித்திருக்கிறாய் அல்லவா? சான்றோனாக்கி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவில்லை யாயினும் இப்படி ஓர் அபவாதத்தை எனக்கு
நீ ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
மணமேடைக்கு அனுப்ப வேண்டிய வயதில் மகனைத் தூக்கு மேடைக்கு அனுப்ப எந்தத் தாய்க்குத்
தான் மனம்துணியும்? என்னுடைய இந்த அவல நிலை வேறு எந்தத்
தாய்க்கும் வந்திடக் கூடாது என்று தான் அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்.
உனக்குக் கருணை காட்டச் சொல்லி நீ கொலை செய்த அந்தப் பெரியவரின் மனைவியை நேரில்
சந்தித்து காலில் விழுந்து கெஞ்சினேன்.
அவர் எவ்வளவு உயர்வானவர் தெரியுமா?
வேறு யாராவது
இருந்திருந்தால், என்னைக் கேவலமாகப் பேசிக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். ஏனெனில் வாழ வேண்டிய வயதில் என் மகனால் தம் கணவரையும்குழந்தையையும் அநியாயமாய் உயிரோடு நெருப்புக்குப் பலி கொடுத்தவராயிற்றே.
ஆனால் அவரோ என் கோரிக்கையைப் பொறுமையாகக் கேட்டு என் கோரிக்கைக்கு இணங்கி ஜனாதிபதிக்கு
மனு ஒன்றை அனுப்பினார். அதில் அவர் என்ன எழுதினார் தெரியுமா?
"என் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு நான் அனுபவிக்கிற வேதனைகள், சித்ரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல;அவை இன்னொரு தாய்க்கு நேரக்கூடாது. ஒரு
தாயின் வேதனை இன்னொரு தாய்க்குத் தான் புரியும்.
அதைவார்த்தையில் விவரிக்க இயலாது. குற்றவாளியைத்
தூக்கில் போடுவதால் என் கணவரோ, குழந்தையோ திரும்பி வரப் போவதில்லை. குற்றவாளியை ஏற்கெனவே நான் மன்னித்து விட்டேன். வயதான காலத்தில் நிராதரவாக நிற்கும் ஓரு தாயைக் கருத்தில் கொண்டு குற்றவாளியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள்
தண்டனையாகக் குறைக்கவேண்டுகிறேன்"
இன்னா செய்தாரையும் மன்னிக்கும் அவரது பெருந்தன்மையைப் பார்த்தாயா?
ஆனால் நான் எதிர்பார்த்தபடி அவர் அனுப்பிய கடிதத்துக்கு நேற்று வரை ஜனாதிபதியிடமிருந்து
எந்தப் பதிலும் வரவில்லை. உன்னைத் தூக்கில் போட இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், எனக்கிருந்த
கொஞ்ச நஞ்சம் நம்பிக்கையும் போய்விட்டது.
இப்போது வாழ வேண்டும் என்ற ஆசை துளியும் எனக்கில்லை. இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும் போது நான் இவ்வுலகை விட்டுப் போயிருப்பேன். ஏன் தெரியுமா? உன் மகனைத் தூக்கில் போட்டு விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்க நான் உயிரோடு இருக்கக் கூடாது.
என் மனதிலோ உடலிலோ அந்தச் செய்தியைத் தாங்கும் சக்தி இல்லை. என்னதான் நீ ஒரு கொலைகாரனாயிருந்தாலும் நான் உன்னைப் பெற்ற தாய் அல்லவா?
என் ஈமச் சடங்குகளை நீ பரோலில் வந்து செய்ய வேண்டாம். ஏனெனில் எனக்கு எந்த ஈமச்சடங்கும் செய்ய வேண்டாம்
என்றும் என் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்து விடுங்கள் என்றும் ஏற்கெனவே
கடிதம் எழுதிக் கையொப்பமிட்டு உன் மாமாவிடம் கொடுத்து விட்டேன்.
இப்படிக்கு,
துர்பாக்கியவதியான உன் அம்மா.”
கடிதத்தைப் படித்தவுடன் 'அய்யோ அம்மா' என்ற தலையில் அடித்துக் கொண்டு சத்தம் போட்டு அழுதான். அவனது அலறல் மூடப்பட்டிருந்த அந்தத் தனியறையின் சுவர்களில் பட்டுப் பயங்கரமாக எதிரொலித்தது.
கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தான்.
இதில் எழுதியிருப்பது போல் அம்மா தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ? கடிதத்தில் இருந்த தேதியைப் பார்த்தான். ஒரு வாரத்திற்கு முன் எழுதப்பட்ட கடிதம் அது. கண்டிப்பாக
இந்நேரம் அம்மா சொன்னபடி செய்திருப்பார்கள் என்று அவனுக்குத் தோன்றியது.
தன் மீது அம்மா எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்று நினைத்த போது அவன் கண்களிலிருந்து
கண்ணீர்மடை திறந்த வெள்ளமாகக் கொட்டியது. அந்தக் கணமே அவனைத் தூக்கில் போட்டுவிட மாட்டார்களா என்று மனது
ஏங்கியது. இன்னும் ஒரு வாரத்தைத் தள்ள வேண்டுமே! அம்மாவிடமிருந்து
கடிதம் வராமலே இருந்திருக்கலாம் என நினைத்தான்.
அன்றிரவு எவ்வளவு முயன்றும் தூக்கம் வர மறுத்தது. கண்களை மூடினால் அம்மாவின் அந்தக் கடிதம் நினைவுக்கு வந்து அவனைப் பாடாய்ப்படுத்தியது.
எங்கும் ஒரே இருட்டு. வெளிச்சம் எங்காவது
தென்படுகிறதா என்று அவன் கண்கள் இருட்டைத் துழாவுகின்றன. தூரத்தில் ஒரு புள்ளியாக சிறு நெருப்பு தெரியவே அந்தப்புள்ளியை நோக்கித் தட்டுத் தடுமாறி நகர்கிறான். அவன்அருகில் வந்தவுடன் புள்ளியாக இருந்த அந்த நெருப்பு பெரிய தீ ஜ்வாலையாக மாறி அவனை
அமுக்கப் பார்க்கிறது.
அவன் அதிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓடப்பார்க்கிறான். திடீரென்று நெருப்பு நாலாப்பக்கமும் அவனைச் சூழ்ந்துகொண்டு 'எங்கே தப்பித்து ஓடு பார்க்கலாம்' என்று சிரிக்கிறது. அந்தத் தீ நாக்குகளிடையே அவன் கொலை
செய்தவரின் முகம் தெரிகிறது.
திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். வியர்வையால் உடம்பு முழுக்க நனைந்திருந்தது. பொழுது எப்போது விடியும் என்றிருந்தது. காலை உணவு இடைவேளையின் போது சிறை அதிகாரி
சொன்ன செய்தி அவனைத் திடுக்கிட வைத்தது.
"செத்தவரோட மனைவியே உனக்குச் சார்பா மனு அனுப்பியிருக்கிற தினாலே உனது தூக்குத் தண்டனையை
நிறுத்தி வைக்கச் சொல்லி டெல்லியிலேர்ந்து உத்தரவு வந்திருக்குது; அநேகமா உன் தூக்குத் தண்டனையை
ஆயுள்தண்டனையாக் குறைப்பாங்கன்னு நினைக்கிறேன்.
உனக்கு ஆயுசு கெட்டிப்பா" என்றார்
அவர் சிரித்துக் கொண்டே.
சிறை அதிகாரிகளில் இவர் மனித நேயம் மிக்கவர். கைதிகள் அனைவரிடமும் அன்பாகப் பழகுகிறவர்.
அவருக்குப் பதில் எதுவும் சொல்லாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான் ராஜா. அம்மா தூக்கில் தொங்குகிற காட்சி அவன் கண்களை விட்டு அகல மறுத்தது.
பூட்டப்பட்ட வீட்டிற்குள் கொழுந்து விட்டு எரியும் தீயின் வெம்மை தாங்காது வாசலுக்கும்
கொல்லைக்குமாய் ஓடிய அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கதறல்,
காதில் இடைவிடாமல்
எதிரொலித்தது.
அந்த அம்மையார் தனக்காக மனு அனுப்பி தூக்குத்
தண்டனையைக் குறைத்ததற்குப் பதிலாகத் தன்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டிருக்கலாம் என்று தோன்றியது. மரண தண்டனையை விட மிகக்
கொடுமையான தண்டனையை அந்தம்மையார் தனக்களித்து விட்டதாக நினைத்தான்.
ஐயோ அம்மா! உங்கள் தலையில் நான் நெருப்பை அள்ளிக்கொட்டிய பிறகும் என் வாழ்வை நீட்டித்து
விட்டு நீங்கள் போய்ச் சேர்ந்து விட்டீர்களே என மனதுக்குள் குமுறினான். அவனுக்கென்று இருந்த அம்மாவும்
போனபின் அவன் இனி யாருக்காக வாழவேண்டும்?
"அய்யா! உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.
தயவு செஞ்சு என்னோட தண்டனையைக் குறைக்காதீங்க. எங்கம்மா போயிட்டாங்க. என்னால இனிமே இந்த உலகத்துல
ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது. தயவு செஞ்சு
சீக்கிரமா என்னைத் தூக்கில போட்டு, நிம்மதியில்லாம தவிக்கிற என் மனசுக்கு அமைதியைத்
தாங்க," என்று அந்த அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கதறிக்கொண்டே இருந்தான் அவன்.
(ஜனவரி 2012 ’உயிரோசை’யில் எழுதியது)
மதவெறியும் உணர்ச்சிகரமான எந்த செயலும் உளைச்சலைத்தான் தரும் என்பதைச்சொல்லிச் செல்லும் அருமையான கதை .வாழ்த்துக்க்ள் .
ReplyDeleteவாழ்த்துக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்!
Deleteஉணர்ச்சிகரமான கதை. முதலில் அவனுக்கு தப்பாகத் தெரியாத விசயம் அவன் கொலை செய்யப்பட்டவரின் மனைவியே அவனுக்காக மனு அனுப்பியதால் அவன் தான் செய்யும் தவறை உணருவது அருமை. தாயின் பாசத்தினை உயிர் போகும் வேளையில்தான் உணருகிறான். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதே உண்மை.
ReplyDeleteஅருமையான கருத்துரை எழுதி ஊக்கப்படுத்தியதற்கு மிகவும் நன்றி விச்சு சார்!
Deleteதன் மகன் உயிர்ப்பலி கொண்ட கொடியவன் என்று அறிந்தும் தாய்மையுணர்வால் தன்னைத் தானே தண்டித்துக்கொள்ளும் தாய்மை ஒருபுறம், தன் குழந்தையைக் காவு கொண்ட கயவனாய் இருந்தாலும், உயிரின் மதிப்பறிந்து, தூக்கு தண்டனையைக் குறைக்க மனு எழுதிய தாய்மை ஒரு புறம் என தாய்மையின் இருபக்கங்களையும் காட்டி மனம் நெகிழ்த்திவிட்டீர்கள். இனி அவன் திருந்திவிடுவான். அன்னையர்தினத்துக்கேற்ற அருமையான கதை. பாராட்டுகள் அக்கா.
ReplyDeleteவிரிவான விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கீதா!
Deleteதாய்மை மனம் எத்தகைய கல்லுக்குள்ளும் கசிவு கொண்டுவரும் ஆனால் அது காலத்தே நடந்திருக்கக் கூடாதா?
ReplyDeleteஎன்ன செய்ய...
நல்ல பதிவு கலையரசி
பாராட்டுக்கு மிக்க நன்றி உமா!
Deleteஅருமையான படைப்புங்க கலையரசி.
ReplyDeleteஅருமை என்ற பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி அருணா!
Delete